PDA

View Full Version : அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 15innamburan
17-09-2011, 09:17 AM
அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 15
அறிஞர் அண்ணா என்று யாவராலும் அறியப்படும் காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை அவர்களின் பிறந்த தினம்,ஸெப்டம்பர் 15, 1909. அவர் மறைந்த தினம், 1969. அவரை பற்றி தமிழுலகத்திற்கு நன்றாகவே தெரியும். எனவே, நான் வாழ்க்கைச்சரித்திரத்தை எழுதப்போவதில்லை; சர்ச்சைகள் எழுப்பப்போவதில்லை. ஒரு வரலாற்று ஆசிரியர் இவரை பற்றி ஒரு வடநாட்டு இதழில் எழுதிய சில விஷயங்களை கூறி, எனக்குத் தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். விடுதலைப்போரில் பங்கு கொள்ளவில்லையெனினும், அகில இந்திய அளவில் அரசியல் பிரமுகர் ஆனவர், பதவியினால் இயல்பு மாறாதவர், மக்களால் பெரிதும் போற்றப்பட்டவர் என்பதை சொல்லவேண்டும்.

சுருங்கச்சொல்லின் என்று பேராசிரியர் ஆர். வெங்கடாச்சலபதி கூறுவது:
அரசியலில் தலையெடுக்கும் முன் திரைப்பட வசனகர்த்தா, இவர்; 2. சென்னை மாநிலத்தை தமிழ் நாடு என்று பெயரிட்ட பெருமை இவரை சாரும்; 3. இவர் ஒரு இதழாசிரியர்~ தமிழில் ‘திராவிட நாடு:1942, ஆங்கிலத்தில்: ஹோம்லாண்ட் -1957 & ஹோம்ரூல் -1966; 4. புகையிலை பழக்கமுள்ள இவர் புற்று நோயால் இறந்தார். 5. இவருடைய இறுதி ஊர்வலத்தில் 15 லக்ஷம் மக்கள் கலந்து கொண்டனர். இது உலக ரிக்கார்ட்.
அவர் மேலும் கூறுவது: உயரம் கம்மி; வழுக்கை விழுகிறது; கறை படிந்தப் பற்கள்; க்ஷவரம் காணா முகம்; கர கர குரல். ~ இவர் தான் நவீன தமிழகத்தின் உயிர் நாடி. பெருமையுடன் கூறிக்கொள்ளும் முதுகலை பட்டம். அநாயசமாக, ஆங்கில சொற்பொழிவுகளை தமிழாக்கம் செய்வார். பெரியாருக்கு உற்ற தலைமை பொறி உள்ள ஊழியர். பால பாடம் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதை இயக்கம், லாகவமாக, 1944ல் ராஜ விசுவாசம் என்ற லகானை கழட்டி, திராவிட கழகம் தொடங்கி, பார்ப்பன எதிர்ப்பை உரம் போட்டு வளர்த்தார். மேற்கத்திய நாத்திகத் தத்துவங்களை கரைத்துக்குடித்து, தன்னுடைய சொல்லாக்கத்தாலும், அடுக்கு மொழியினாலும், தமிழனை கட்டிப்போட்டார், பார்ப்பனரல்லாதார் அருமை சாற்றி. தன்னுடைய அரசியல் திறனை, பெரியாரின் தீவிரகருத்துக்களை, மக்கள் விரும்பி - தாரக மந்திரங்களாக மாற்றுவதில், செலுத்தி, வெற்றி கண்டார். (ஒரு நுட்பம் காண்போம். நாடு, சாதி,சமயம்,மொழி, பெண்ணியம் ஆகிய சிக்கல்களை அவிழ்க்கமுடியாத முடிச்சுகள் போட்டு விடும் பெரியாருக்கு தேர்தலில் ஆர்வமில்லை. அவருடைய முற்போக்குக் கருத்துக்களை அரசியலில் புகுத்து, தேர்தலில் வெற்றி கண்டு, அரசு அமைத்த பெருமை அறிஞர் அண்ணாவை சாரும். விதியோ! இழந்த மதியோ! தமிழ்நாட்டுக்கு ஏன் இந்த கதியோ! இது யார் செய்த சதியோ! என்றெல்லாம் பிற்காலம் நடந்த அவலங்களுக்கு, அறிஞர் அண்ணாவை குற்றம் சாற்றுவது சரியல்ல.)
பெரியாரின் ‘சிலை உடைக்கும்’ புரட்சியை, அதுவும் திருமூலரை முன் கொணர்ந்து ‘ஒன்றே குலம். ஒருவனே தேவன்’ என்ற நாத்திக மணம் வீசும் ஆத்திகத்தை (ஆத்திக மணம் வீசும் நாத்திகத்தை) திராவிட இயக்கத்தின் மந்திரம் ஆக்கிய அரசியல் சாமர்த்தியமும், பிள்ளையாரையும் உடைக்கமாட்டேன், தேங்காயும் உடைக்கமாட்டேன் என்ற அணுகுமுறையும், இவருக்கு ஆதரவை தேடிக் கொடுத்தன. ஆகஸ்த் 15, 1947 விசன தினம் என்று பெரியார் சொன்னதை மறுத்தது, இவருக்கு நன்மை தான் ஈன்றது. அதே மாதிரி, ஹிந்தி எதிர்ப்பிலும் சரி, சைனாவுடன் போர் நிகழ்ந்த காலகட்டத்தில், இந்தியாவிலிருந்து பிரிய வேண்டும் என்ற புலிச்சவாரியிலிருந்து லாகவமாகக் இறங்கிக்கொண்டதும் என ராஜதந்திரத்தை கையாண்டார். [“அண்ணா என்ற இந்த பேச்சு திறனும்.வளமும் கொண்டிருந்த பேச்சாளர், இந்த பிராந்தியத்தில் (தென்னிந்தியா) மக்களால் அமோகமாக போற்றப்படுபவர். இது அவருடைய அரசியல் எதிரிகளுக்குத் தெரியவில்லை” ~ஸெலிக் ஹாரிஸன்] 1962 ல் காங்கிரஸ் இவரை தோற்கடித்து இருக்கலாம். 1967ல் ராஜாஜி, கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லீம் லீக் ஆகியோருடன் கூடி, பற்பல மாறுதல்களுக்கு பிறகும், 2011 வரை காங்கிரஸை டின் கட்டி இறக்கிய பெருமை இவரை சாரும். 1967க்கு முன் ராஜ்யசபை உறுப்பினராக இருந்த போது இவருக்கு வடநாட்டில் மதிப்பு கூடியது. இவரும் பல நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். 1967 இவரது திராவிட இயக்க வெற்றி இவருக்குக் கவலையும் அளித்தது, ‘பிஞ்சிலே பழுத்துவிட்டதா, இயக்கம்’ என்று. தமிழனின் நாட்டுப்பற்றை இந்திய தேசாபிமானத்திற்குள் நேர்த்தியாக பொருத்தியதற்கு, இந்தியா இவருக்கு கடமைபட்டுள்ளது என்கிறார், ஆர். வெங்கடசலபதி.

சில நிகழ்வுகள்:
இளம்பருவத்தில் இவரது ‘கம்பரசம்’ எங்களை ஈர்த்ததும், அண்ணா, டீ.கே.சீனிவாசன், மதியழகன், பாலதண்டாயுதபாணி போன்ற பேச்சாளர்களும் எங்களை கவர்ந்ததும் உண்மை. ஒரு சமயம். ஒரு சிறிய குழுவில் நான் இவரை எதற்க்காக ‘கம்பரசம்’ எழுதினார் என்று கேட்டேன். பார்ப்பனவீட்டுப்பையன் என்று முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. எல்லாரும் முறைத்தார்கள். இவரோ சும்மா எழுதினேன் என்று சிரித்தார். வன்மம் லவலேசமும் இல்லை.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு பிறகு ஒரு நண்பர் சொன்னது:
‘என்னை திடீரென்று செங்கல்பட்டுக்கு மாற்றி விட்டார்கள். பெண்ணுக்கு கல்வியாண்டின் நடுவில் வேறிடம். இடம் கிடைப்பதே கடினம். யாரோ சொன்னார்கள் என்று முதல்வர் அண்ணாவை பார்க்கச்சென்றேன். அக்காலம், காத்திருக்கவேண்டுமே தவிர, நந்தி தெய்வங்கள் குறுக்கே நிற்காது. சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார். யாருக்கோ ஃபோன் செய்து பள்ளியில் அவளுக்கு இடம் வாங்கிக்கொடுத்தார். என் வீபூதியை பார்த்து அலட்டிக்கொள்ளவில்லை.

மேலும் இருபது வருடங்கள் கழிந்தன. சாஸ்திரி நகரில் 5வது குறுக்குத்தெருவுக்கு எதிர் வீடு. அவரது மருமகள் விஜயா என்று ஞாபகம். மகன் பரிமளம் என்று நினைக்கிறேன். முதியோர் நல்வாழ்வு தன்னார்வப்பணி. எங்கள் குடும்பமும் இணைந்து, ஒரு சிறிய அளவு. அண்ணாவின் குடும்பம் என்ற ஹோதா, தோரணை, காசுக்குவியல் ஒன்றுமே சுத்தமாக இல்லை. ஒரு நடுத்தர குடும்பம். அவ்வளவு தான்.
இன்னம்பூரான்
15 09 2011
http://www.indianpost.com/viewstamp.php/Alpha/T/THIRU%20C.%20N.%20ANNADURAI%20(ANNA)
http://www.indianpost.com/viewstamp.php/Alpha/T/THIRU%20C.%20N.%20ANNADURAI%20(ANNA)

உசாத்துணை

http://indiatoday.intoday.in/story/Letter+and+spirit/1/6878.html?cp&cp

seguwera
17-09-2011, 02:10 PM
திராவிட கட்சிகளின் வரலாற்றில் அண்ணாவுக்கு என்றுமே தனி இடம்தான். சொத்துக்கள் சேர்க்காமல் சொந்தங்களுக்கு பதவி கொடுக்காமல் கட்சியை ஒரு பொது ஸ்தாபனாக வளர்த்தவர்.