PDA

View Full Version : ஒரு வா காபி

KAMAKSHE
15-09-2011, 09:16 AM
சிறு கதை

காத்தாலேருந்து லேசா இருந்த தலைவலி ஜாஸ்தியாயிடுச்சு இப்ப. 'அம்மா காபி' சூடா குடிச்சா தேவலை. குடிச்சா தலைவலி பட்னு விட்டுடுமா?

எனக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னால அடிக்கடி அம்மா காபி தருவாள். அதுவும் பரிட்ஷைக்கு படிக்கும் போது ராத்திரில 2 மணிக்கும் 3 மணிக்கும் டாண் டாண்னு அலாரம் வச்ச மாதிரி எழுந்து கலந்து தருவா. என்ன ஒண்ணு....அரை மணில தூக்கம் வந்துடும்... காபி அப்படி மயக்கும். அம்மா போட்டதாச்சே.

தூங்கி எழுந்துக்கறதே, காத்தால எழுந்து பல்தேச்சதும் அம்மா கலந்து குடுக்கப்போற அந்த காபிக்காகதானோன்னு தோணும்.

எப்ப அம்மாவீட்டுக்கு போனாலும் மொதல்ல காபி உபசாரம்தான்!

“ராதா....நிமிஷமா காபி கொஞ்சம் கலந்து தரேனே?”

“அம்மா........ப்ளீஸ் காபி வேணுமான்னு மட்டும் கேக்காதே! இன்னிக்கு ஏற்கனவே நிறைய குடிச்சாச்சுமா”

வீட்டுக்கு யார் வந்தாலும். அவங்களுக்கு காபி உபசாரம் நடக்கும். என் ஃப்ரெண்ட்ஸ், அப்பறம் உறவினர்கள், அப்பா ஆபீஸ் சகாக்கள்....இப்படி எல்லாரும்....சில சமயம் டிகாக்ஷன் இருக்காது. யாராவது திடீர்னு வந்துடுவாங்க. ஒரே நிமிஷந்தான்.. மணக்க மணக்க ஃபில்டர் காபி ரெடி பண்ணிடுவா.

எங்கப்பா, அம்மா போடற காபி நல்லாருக்குன்னா, அவர் ஒரு நாலு தடவை குடிக்கட்டும். இல்ல ஆபீஸ் ஆசாமிகளுக்கு மட்டும் கொடுக்கட்டும். அதோட நிறுத்தாம “கமலா...... ராமுவுக்கு கொஞ்சம் காபி போடேன். எல்லாம் ரெடி. இதோ டியூப் லைட்டும் மாட்டிட்டா வேலை முடிஞ்சது”. இப்படி வேற சொல்லணுமா? ராமு என் அண்ணன்னு நெனச்சுக்க வேணாம். எங்க வீட்டுல ட்யூப் லைட் மாட்ட வந்த எலெக்ட்ரீஷியன். அவனுக்கும் சுடச்சுட அம்மா கை காபி கொடுக்கணும்.

அன்னிக்கு இப்படிதான் “கமலா ஒரு வா காபி கலயேன். சிங்காரம் வந்துருக்கான் பாரு“ .

சூடா காபி கொடுத்தா அம்மா. பெரிய டம்ப்ளரில் தான். அதுவும் ஸ்டிராங் டிகாக்ஷன்.

சிங்காரம் காபி சாப்பிட்டாச்சு. “அம்மா நீங்க காபி கொடுத்தா அது தனி ருசிதாம்மா”. அம்மாவுக்கு அதுக்குன்னு இந்த புகழ்ச்சியெல்லாம் பிடிக்காதுன்னு நெனச்சுக்க வேண்டாம். அப்படி சந்தோஷப் பட்டுப்பா.

பெருமையை மனசுக்குள்ள அமுக்கிட்டு ரொம்ப அடக்கமா “அதுக்கென்ன சிங்காரம்! காபி போடறது ஒரு பிரமாதமும் இல்ல. எங்க வீட்டுல குழா ரிப்பேர், இல்ல அடைப்புன்னா, கூப்ட குரலுக்கு உன்ன மாதிரி வேற யாரு ஓடி வருவா? அதனால பேஷா வா! இல்ல சும்மாவே வா. எப்ப வந்தாலும் ஒரு வா காபி உனக்கு தருவேன்”

ஒரு வா காபி.....ப்ளம்பருக்கு இன்னிக்கு...நேத்திக்கு எலெக்ட்ரீஷியனுக்கு!

நாளைக்கு வாட்ச் மேனுக்கு... நாளன்னிக்கு போஸ்ட்மேனுக்கு... அப்பறம் பக்கத்து வீடு.. எதிர் வீடு இருக்கவே இருக்கே... அபார்ட்மெண்ட்டுன்னா நாலு பேரு வருவாங்க போவாங்கதானே. நான் சத்தியமா பேச்சுக்கு சொல்லல இதை. உண்மையாவே எங்க வீட்டுல இப்படிதான்!.

அன்னிக்கு புதுசா காபி பொடி, புது பால், லீவு நாள், ஞாயிற்றுக்கிழமை. யாருக்கு ‘முதல் காபி’ யோகம் அடிச்சது தெரியுமா? மாசமொருமுறை மட்டுமே டாய்லெட் க்ளீன் பண்ண வரும் வீரய்யனுக்கு..

ஒரு வா காபி ........

அப்பா கிட்ட சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு. “ அப்பா வேலைக்காரங்களை வெக்கற இடத்துல வெக்கணும். இப்படி உபசாரம் பண்ணினீங்கன்னா சரியா வராதுப்பா”..

“போகட்டும் பாவம்மா”ன்னு ஒரு பதில். அப்ப அம்மா மட்டும் பாவம் இல்லையா?

“ஏம்பா கூலிதான் குடுக்கறோமே?”

“அவங்கெல்லாம் நாம கூப்பிடறபோது ஓடிவந்து வேலை செஞ்சு தறாங்களே?”

“ஒரு வா காபி கலந்து கொடுக்கறதுல எனக்கென்னடி கஷ்டம்”? இது அம்மா கூட போடற ஜால்ரா.

இவங்களை திருத்த முடியாது. விட்டுட்டேன். குடிச்சுட்டு போகட்டும்.

ஒரு வா காபி!!

நான் கல்யாணாம் ஆகிப்போன பிறகு தான் எங்க வீட்டுல பண்ற அபத்தம் இன்னும் நல்லா புரிஞ்சது.

என் மாமியார் வீட்லெல்லாம், வீட்டு மனுஷங்களுக்கே கண்டிப்பா ஒரு நாளைக்கு ரெண்டு வேளை காபி தான். நெனச்சபடியெல்லாம் காபி போட முடியாது. மிஞ்சிப்போனா வேலைக்காரிக்கு ஒரு வேளை காபி ( தண்ணி டிகாக்ஷனில் ) . மத்த படி உறவினர் வந்தா உண்டு. அதுவும் சிலருக்கு முதல் டிகாக்ஷனில், சிலருக்கு இரண்டாவது.

இந்த ப்ளம்பர் வாட்ச்மேனெல்லாம் வெளில அவங்களேதான் டீ, காபிலாம் பாத்துக்கணும். வீட்டுக்குள்ள வேலை முடிஞ்சுதுன்னா உடனே வெளிய போயிடணும்...

அம்மாவீட்டு காபி கதை ஒரு நெடுங்கதை. கல்யாணம் ஆகி 18 வருஷம் ஆச்சு எனக்கு. எத்தனையோ தடவை அம்மாவ பாக்க போவேன், வருவேன். ஒரு மணியில 2 காபியாவது குடுக்காம விடமாட்டா.. ஆத்தி ஆத்தி சமையல் ரூமிலிருந்து நான் இருக்கற இடத்துக்கு கொண்டு வந்து தருவா. ”ஏம்மா இப்படி நடக்கறே”

“இது என்னடி நடை? திரும்பினா ஹால், மேல ஒரு அடி வச்சா இதோ ரூம்”

நமக்கெல்லாம் காபி குடிச்சாதான் தெம்புன்னா, அவளுக்கு காபி கலந்தாதான் தெம்பே!.

அப்படிதான் அன்னிக்கு திடீர்னு நெனச்சுகிட்டு அம்மாவைப் பாக்க போனேன். கொஞ்ச நேரம் பேசினேன். அப்பறம் அம்மாவும் நானும் கடைக்கு போயிட்டு வந்தோம்.

“சரி 10 நிமிஷம் படுத்துக்கறேன் . லேசா தலை வலிம்மா” படுத்தேன்

”காபி தரட்டுமா? இதப்பாரு...தலைவலின்னா ஒருவா காபி குடிச்சா பட்னு விட்டுடும் தலைவலி. என்ன டயட் கியட் ஏதாவது இருக்கியா? காபி குடிக்கறதையே நிறுத்திட்டயா என்ன? ( யாராவது அப்படி காபியை ஒரேதடியா நிறுத்திட்டா அவளால அந்த ஷாக்கை தாங்கவே முடியாதோ!? ) அதுக்குன்னு காபியே குடிக்காட்டாலும் தலைவலி வரும்”

“ரொம்ப காபி வேணாம்மா”

இந்த அம்மாக்கு காபி கம்பெனியோட என்ன ஒப்பந்தமோ தெரியல? ஒரு நாளைக்கு எத்தனை காபி கொடுத்தா எவ்வளவு கமிஷனோ? காபி வேணுமா? ஒரு வா காபி.... இப்படி கேக்கறது. வேண்டாம்னாலும் கொடுத்தே விடறது. அலுக்கவே அலுக்காதா? செலவைப் பத்தியும் கவலை இல்லையா?

குட்டித்தூக்கம் போட்டு கண் முழிச்சேன். மணந்தது காபி. அம்மா படுக்கையின் பக்கத்தில் நின்று கொண்டு காபியை ஆத்திக் கொண்டிருந்தாள்.

“இந்தா.. ஒரு வா குடி... தலை வலி இன்னும் இருக்கா? மூஞ்சி சரியே இல்ல பாரு”

காபியைக் குடித்தேன் .

“நேரமாச்சுமா. வரட்டுமா”

“இன்னொருவா தரட்டுமா? இந்தா சாப்டுப்போ?”

“ம்ஹூம்......” மண்டையை ஆட்டிவிட்டு கிளம்பினேன்.

தலைவலி விடவில்லை. ஆனால் அது என் நினைவில் இல்லை. அம்மாவின் காபியையே நினைத்துக் கொண்டு நடந்தேன். ‘ஒரு வா... அது என்ன? ஒரு வாயா? ஒரு தடவை கூட ஒரு வா காபி குடித்ததில்லை யாரும். அது ஒரு பேச்சுக்கு, உபசாரத்துக்கு சொல்வது. ‘கொஞ்சம்’, ‘ஒரு வா’ இப்படியெல்லாம் சொன்னா சட்னு குடிக்க சம்மதிச்சுடுவாங்க..

இது எல்லாமே நேத்துதான் நடந்த மாதிரி இருக்கு. இன்னிக்கு தேதில அம்மா போய்ச்சேந்து முழுசா ஒரு வருஷம் முடிஞ்சாச்சு.

நானும் தலைவலி வந்தா காபி கலந்து குடிப்பேன். காபி நினைவு போயிடும் உடனே.. தலைவலி நினைவு பாடா படுத்தும்... ஏன்னா அது என் காபி. அம்மா காபி இல்ல.

அம்மா கடைசி நாலு வருஷம் அண்ணனுக்கு உடம்புக்கு வந்ததுலேருந்து தானும் மனசு ரொம்ப தளர்ந்து போயிட்டா. அவனுக்கு ஏதோ மனசு சம்பந்தப்பட்ட வியாதி. அம்மா மனசையும் சேத்து வறுத்தது அவன் உடம்பு.

என் நினைவு தெரிஞ்சதுலிருந்தே என் அண்ணா ஒரு காபி ப்ரியன். இல்ல இல்ல அம்மா ‘காபி சாப்பிடறயா’ன்னு கேட்டு கேட்டுதான் இப்படி காபி ப்ரியம் அவனுக்கு அதிகமாயிருக்கும்!. அவனுக்கு உடம்புக்கு வந்தாலும் வந்தது. எந்த வேலைக்கும் போக மாட்டான். வீட்டுக்குள்ள குறுக்கும் நெடுக்கும் நடந்துகிட்டே இருப்பான். எப்பப்பாத்தாலும் “அம்மா காபி, அம்மா காபி” ன்னு நச்சரிப்பான். மருந்து சாப்பிடுவான். தூங்குவான். அம்மாவும் இத்தனை காபி குடிக்காதேடான்னு சொல்றதுமாட்டும் சொல்லுவாள்... ஆனா மனசு கேக்காம, கலந்து கொண்டு போய் கொடுத்துட்டே இருப்பா. நடையா நடப்பா.சமையல் உள்ளுக்கும்..ஹாலுக்கும், அவன் ரூமுக்கும்...மறுபடி ஹாலுக்கும்...சமையல் உள்ளுக்கும்...ரூமுக்கும்...அதான் தெரியுமே!. அண்ணா கொறஞ்சது ஒரு நாளைக்கு 20 காபி குடிப்பான்...

அண்ணனுக்கு உடம்பு சரியே ஆகாததால அம்மாவுக்கு கடைசில காபி கொடுக்கறது கூட கொஞ்சம் அலுத்துப் போச்சு. அதாவது அண்ணாவுக்கு காபி கொடுக்கறது மட்டும் தான் அலுத்தது. அப்பகூட நானோ வேற யாராவது போணோம்னா “ ஒரு வா காபி சாப்பிடறயா”ன்னு கேட்டு குடுக்காம இருக்க மாட்டா..

எத்தனையோ தடவை அம்மா எனக்கு காபி குடுத்திருக்கா.. என்ன ஒரு 15,000 தடவை எனக்காக மட்டுமே கலந்திருப்பாளா?. அப்பறம் எங்கப்பாக்கு, அண்ணனுக்கு அப்பறம் வருவோர், போவோர்....எல்லாம் சேத்து மொத்தமா ஒரு 2 லட்சம் தடவை காபி கலந்திருப்பாளா? மேலயே இருக்கும். அம்மா கை காப்பி போட்டதை அவ போனப்பறம்தானே இத்தனை விமரிசையா நெனச்சுப் பாக்கறேன். தலை வலி வந்ததுனால தானே நெனச்சேன்? அப்படிதான் இருக்கும்! வரட்டும் எனக்கு அடிக்கடி தலைவலி.

18 வயசுல சுறுசுறுன்னு காபி கலந்து ஓடி ஓடி கொடுத்திருப்பா. 25 வயசுல விறுவிறுன்னு நடந்து போய் காபி கொடுத்திருப்பா. 45 வயசுல கால் வலி அதிகமாப் போய் நடை தளர்ந்தும் காபி கலந்து கொடுத்திருக்கா. உடம்பு முடியாத கிழவியானப்பறமும் நடையாய் நடந்து காபி கொடுத்திருக்கா.

ஒவ்வொருவருக்கும் காபி கலக்கும்போது தானும் ஒரு வா குடிப்பா. அதுதான் உண்மையில் ‘ஒரு வாய்’ - ‘ஒரு வா’..... அத்தனை பிடிக்குமோ எங்கம்மாவுக்கு காபி..?

என் அம்மாவின் அம்மா எத்தனை முறை என் அம்மாவுக்கு, என் அம்மா மாதிரி காபி உபசாரம் செய்திருப்பாள்?

இல்லை என் அம்மாவின் பெண் நான்தான், என் அம்மாவுக்கு...என் அம்மா மாதிரியே எத்தனை தடவை காபி உபசாரம் செய்திருப்பேன்? இதுவரை நான் வாழ்ந்த என் மொத்த வாழ்க்கையில் ஒரு 10 தடவை?! அவ்வளவுதான். இதுதான் நான்! அதுதான் அம்மா!

முற்றும்

காமாக்ஷி

சிவா.ஜி
15-09-2011, 02:19 PM
அந்த “ஒரு வா காப்பி குடிக்கிறியா”வுல கலந்திருக்கிறது காப்பிதூளும் பாலும் சர்க்கரையும் மட்டுமல்ல....அம்மாவின் அன்பு, அது, தான் பெற்ற பிள்ளைகளுக்கு மட்டுமானதல்ல எனச் சுருக்கிக்கொள்ளாத பேரன்பு.

அழகாய் சொல்லியிருக்கீங்க காமாக்*ஷி. வாழ்த்துக்கள்.

seguwera
15-09-2011, 04:16 PM
விருந்தோம்பலே கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்கிற இந்த காலத்தில் "ஒரு வா காபியில்" தாய்ப்பாசத்தையும் வீட்டிற்கு வந்தவர்களை உபசரிக்கும் உங்கள் தாயின் பண்பையும் அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் காமாட்சி. சிறுகதை ஆனாலும் அதில் நெஞ்சை பிழிய வைக்கும் பாச உணர்வு அருமை.

ஜானகி
16-09-2011, 07:01 AM
அம்மா கையால் போட்ட, சூடான காப்பி ஒருவாய் குடித்தது போலிருக்கிறது....தாய்மையெனும் பாலில், அன்பெனும் டிகாக்ஷன் கலந்ததாயிற்றே...?

கீதம்
16-09-2011, 09:33 AM
அம்மாவின் அன்பை ஒரு வா காபியின் மூலமே அழகா வெளிப்படுத்தியிருக்கீங்க. அப்பாவின் அனுசரணையும் அதில் கலந்திருக்கிறது அருமை. பாராட்டுகள் காமாக்ஷி.

கதையாகப் பார்க்க முடியவில்லை. அத்தனை அருமையான எழுத்துநடை. கதையின் பல இடங்களில் உங்கள் கைவண்ணத்தை ரசித்தேன். உதாரணத்துக்கு கீழே சில...

நமக்கெல்லாம் காபி குடிச்சாதான் தெம்புன்னா, அவளுக்கு காபி கலந்தாதான் தெம்பே!.

யாராவது அப்படி காபியை ஒரேதடியா நிறுத்திட்டா அவளால அந்த ஷாக்கை தாங்கவே முடியாதோ!?

இந்த அம்மாக்கு காபி கம்பெனியோட என்ன ஒப்பந்தமோ தெரியல? ஒரு நாளைக்கு எத்தனை காபி கொடுத்தா எவ்வளவு கமிஷனோ?

நானும் தலைவலி வந்தா காபி கலந்து குடிப்பேன். காபி நினைவு போயிடும் உடனே.. தலைவலி நினைவு பாடா படுத்தும்... ஏன்னா அது என் காபி. அம்மா காபி இல்ல.

எத்தனையோ தடவை அம்மா எனக்கு காபி குடுத்திருக்கா.. என்ன ஒரு 15,000 தடவை எனக்காக மட்டுமே கலந்திருப்பாளா?. அப்பறம் எங்கப்பாக்கு, அண்ணனுக்கு அப்பறம் வருவோர், போவோர்....எல்லாம் சேத்து மொத்தமா ஒரு 2 லட்சம் தடவை காபி கலந்திருப்பாளா? மேலயே இருக்கும். அம்மா கை காப்பி போட்டதை அவ போனப்பறம்தானே இத்தனை விமரிசையா நெனச்சுப் பாக்கறேன். தலை வலி வந்ததுனால தானே நெனச்சேன்? அப்படிதான் இருக்கும்! வரட்டும் எனக்கு அடிக்கடி தலைவலி.

என் அம்மாவின் அம்மா எத்தனை முறை என் அம்மாவுக்கு, என் அம்மா மாதிரி காபி உபசாரம் செய்திருப்பாள்?

இல்லை என் அம்மாவின் பெண் நான்தான், என் அம்மாவுக்கு...என் அம்மா மாதிரியே எத்தனை தடவை காபி உபசாரம் செய்திருப்பேன்? இதுவரை நான் வாழ்ந்த என் மொத்த வாழ்க்கையில் ஒரு 10 தடவை?! அவ்வளவுதான். இதுதான் நான்! அதுதான் அம்மா!

redblack
17-09-2011, 05:51 AM
அதுதான் அம்மாவுக்கும் பொண்ணுக்கும் உள்ள வித்தியாசம்

KAMAKSHE
17-09-2011, 06:04 PM
அந்த “ஒரு வா காப்பி குடிக்கிறியா”வுல கலந்திருக்கிறது காப்பிதூளும் பாலும் சர்க்கரையும் மட்டுமல்ல....அம்மாவின் அன்பு, அது, தான் பெற்ற பிள்ளைகளுக்கு மட்டுமானதல்ல எனச் சுருக்கிக்கொள்ளாத பேரன்பு.

அழகாய் சொல்லியிருக்கீங்க காமாக்*ஷி. வாழ்த்துக்கள்.

உங்கள் விமர்சனத்தில் கலந்திருக்கும் ஊக்கத்திற்கும் பாராட்டிற்கும் என் நன்றிகள்

Nivas.T
18-09-2011, 11:44 AM
ஒரு சிறு விசயத்தை எடுத்துக்கொண்டு அதன் மூலம் வெளிப்படும் அன்பையும், பரிமாணத்தையும் இவ்வளவு அழகாக, நயத்துடன் கதையின் நடையில் இருந்து சிறிதும் பிறளாமல் கதை சொல்ல முடியும் என்பதற்கு இந்தக் கதையும் ஒரு எடுத்துக்காட்டு.

உங்கள் எழுத்தின் ஆளுமை மிக அழகு

KAMAKSHE
19-09-2011, 01:03 AM
விருந்தோம்பலே கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்கிற இந்த காலத்தில் "ஒரு வா காபியில்" தாய்ப்பாசத்தையும் வீட்டிற்கு வந்தவர்களை உபசரிக்கும் உங்கள் தாயின் பண்பையும் அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் காமாட்சி. சிறுகதை ஆனாலும் அதில் நெஞ்சை பிழிய வைக்கும் பாச உணர்வு அருமை.

நன்றிகள்

KAMAKSHE
19-09-2011, 03:42 PM
அம்மா கையால் போட்ட, சூடான காப்பி ஒருவாய் குடித்தது போலிருக்கிறது....தாய்மையெனும் பாலில், அன்பெனும் டிகாக்ஷன் கலந்ததாயிற்றே...?

ஜானகி அவர்களின் சுடச்சுட வந்த விமர்சனம் என்னை குளிர வைத்துவிட்டது. நன்றி

KAMAKSHE
20-09-2011, 08:37 AM
ஒரு சிறு விசயத்தை எடுத்துக்கொண்டு அதன் மூலம் வெளிப்படும் அன்பையும், பரிமாணத்தையும் இவ்வளவு அழகாக, நயத்துடன் கதையின் நடையில் இருந்து சிறிதும் பிறளாமல் கதை சொல்ல முடியும் என்பதற்கு இந்தக் கதையும் ஒரு எடுத்துக்காட்டு.

உங்கள் எழுத்தின் ஆளுமை மிக அழகு

உங்கள் ஊக்கத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி

M.Jagadeesan
20-09-2011, 11:58 AM
பில்டர் காப்பி வேண்டுமா அல்லது இந்தியப் பிரதமர் பதவி வேண்டுமா என்று யாராவது என்னைக் கேட்டால் பில்டர் காப்பிதான் வேண்டுமென்று கேட்பேன்.

sarcharan
20-09-2011, 01:29 PM
மன்மோகன் சிங் பொம்மை வேணுமா தஞ்சாவூர் பொம்மை வேணுமான்னு கேட்டால் பதில் சொல்ல கஷ்டமா இருக்கும். :confused:

கொஞ்சம் யோசிக்கணும். ஒரு ஃபில்டர் காப்பி ப்ளீஸ்...:aetsch013:

KAMAKSHE
20-09-2011, 05:32 PM
அதுதான் அம்மாவுக்கும் பொண்ணுக்கும் உள்ள வித்தியாசம்

நன்றிகள்

Ravee
20-09-2011, 07:54 PM
சிறுவயதில் என் அம்மா கலந்து கொடுத்த காப்பி என் நினைவில் வருகிறது .... அந்த கருப்பட்டி தட்டி பில்டர் போட்டு மணக்க மணக்க அவர்கள் தந்த காப்பியை வீட்டில் யாருமே மறக்க முடியாது . இப்போது அவர்களால் கூட அப்படி ஒரு காப்பியை தர முடிவத்திலை ... அப்போதைக்கும் இப்போதைக்கும் உள்ள ஒரே வித்தியாசம் அப்பா இல்லை இப்போது ... சில இழப்புகளால் ஏற்ப்படும் இழப்புகள் இதெல்லாம் .

அருமையாய் நினைவுகளை கதைப்படுத்தி இருக்கிறீர்கள் காமாட்சி .....வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
21-09-2011, 03:10 AM
மன்மோகன் சிங் பொம்மை வேணுமா தஞ்சாவூர் பொம்மை வேணுமான்னு கேட்டால் பதில் சொல்ல கஷ்டமா இருக்கும். :confused:

கொஞ்சம் யோசிக்கணும். ஒரு ஃபில்டர் காப்பி ப்ளீஸ்...:aetsch013:

தஞ்சாவூர் பொம்மை தலையாட்டுமே!

aren
21-09-2011, 07:15 AM
எங்கள் வீட்டில் கிடைக்கும் காப்பியை அப்படியே ஞாபகப்படுத்திவிட்டீர்கள். கதை அருமை. பாராட்டுக்கள்.

அம்மாவின் கையால் கிடைக்கும் எதுவுமே தேவாம்ப்ரதம் தான்.

இப்போவெல்லாம் வெறும் இன்ஸ்டண்ட் காப்பிதான். என்ன செய்ய.

பிரேம்
21-09-2011, 12:17 PM
கதை மிக அருமை...
இன்னிலேர்ந்து உங்க ரசிகனாகிடுறேன்..காமாமாக்ஷி..

KAMAKSHE
22-09-2011, 03:48 AM
கதை மிக அருமை...
இன்னிலேர்ந்து உங்க ரசிகனாகிடுறேன்..காமாமாக்ஷி..

ரொம்ப ரொம்ப நன்றி.

KAMAKSHE
23-09-2011, 06:00 PM

நன்றிகள் ஆரென்