PDA

View Full Version : ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…அகத்தியன்
13-09-2011, 08:16 AM
ஊருக்கு போயிருந்தேன்… சென்ற முறை போன போது இருந்த டென்சன் , அவசரம், இன்ன பிற வகையறாக்கள் இந்த முறை இல்லாததால், அந்த ஒரு மாத விடுமுறையினை விட இந்த 2 வார விடுமுறை மிக திருப்தியுடனும் மகிழ்ச்சியாகவும் முடிந்தது. நிறைய பொழுதுகளை குடும்பத்துடன் கழிக்க முடிந்தது. உம்மாவுடன் நிறைய நேரம் கதைக்க முடிந்தது. இப்படி பல “முடிந்தது”க்கள்.


ஊர்க்கதைகள்தான் நிறைய சொல்ல வேண்டி இருக்கின்றது. குளத்து மீன்கள் என்றால் நிறைய ஆசை. சப்புக்கொட்டி சாப்பிடுவேன். இம்முறை ஊரில் இருந்த போது, களப்பிற்கு சென்றிருந்தேன். சந்தையில் வாங்குவதை விட அங்கு உடனே பிடித்த மீன்கள் வாங்கலாம் என்ற காரணத்தையும் தாண்டி கொஞ்சம் லாபமாக வாங்கலாம் என்பதே முன்நின்றது. பெரிய மணலை மீன் ( உங்க ஊர்ல என்ன சொல்லுவீங்களோ தெரியாது ) தொடக்கம், சிறிய சிறிய மன்னா மீன் வரை கிடைத்தது. நான் மீன் வாங்கிய மீன் பிடிகாரர், கட்டாரிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கின்றாராம். உழைப்பவர்கள் ஒரு போதும் ஓய்ந்திருக்க மாட்டார்கள் இல்லையா?


ஒன்றாக படித்த நண்பர்கள் – இப்போது வெகு தூரம் போய் விட்டது போல ஒரு பிரமை இன்னும் என்னை பீடித்த படியே இருக்கின்றது. அது உண்மைதான் என மனமும் நம்பத்தொடங்கிவிட்டது போலவே உணர்கின்றேன். ஒன்றாக திரிந்த நண்பர்களிடம், ஐந்தாறு வருடங்களின் பின் நமது நண்பனை காண்கின்றோம் எங்கின்ற ஒரு மலர்ச்சி இல்லை. ஏதோ ஒப்புக்கு ஒரு முகமனுடன், வேறு ஏதோ சிந்தனை ஆட் கொண்டவாறு விலகி விடுகின்றனர். குடும்பஸ்தர்களான அவர்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கலாம். நாளை நானும் இப்படி மாறிவிடுவேனோ என எணிக்கொண்டேன்.


பெருநாளைக்கு பட்டாசு வெடிப்பது ஒரு அலாதி அனுபவம். சுமார் 4 வருடங்களின் பின் இந்த முறை கிடைத்தது. தம்பிமாருடன் சேர்ந்து வெடி வெடித்தது. எத்தனை மகிழ்ச்சி. ஆனாலும் ஒரு ஜாக்கிரதை குணம் திடீரென ஒட்டிக்கொண்டதைப் போல உணர்ந்தேன். முன்பெல்லாம் கையில் ராக்கெட் வாணம் வைத்து அனாயசமாக விட்ட எனக்கு, இப்போது அதை செய்வதற்கான துணிவு கடைசி வரையிலும் வரவே இல்லை. குழாய் தேடி, வீட்டு மொட்டை மாடியில் நின்று வெடித்தோம். வயதானால், முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாகிவிடுவோமோ என்னவோ!!!எங்களூரின் பெருநாள் கொண்டாட்டங்கள் முன்பிருந்ததற்கும் இப்போதுள்ளதற்கும் நிறைய வித்தியாசங்கள். தற்போது ஏதோ ஒரு செயற்கைத்தனம் ஒட்டிக் கொண்டது போல ஒரு தோற்றம்.

பெருநாள் அன்று இரவு , என் தங்கை பற்பசை ட்யூப்பை வைத்து எதுவோ செய்து கொண்டிருந்தாள்.. என்ன என்றதற்கு, மருதாணி என பதில் வந்தது. பழைய நினைவுகள் என்னுள் பரவத் தொடங்கின.
முன்பெல்லாம் நாளை பெருநாள் என்றால், ஆளுக்கு ஒரு பொலித்தீன் பையுடன் கிளம்பிவிடுவோம், - மருதாணி மரம் தேடி. அதைப்பறித்து வந்து, அரைத்து வாழை இலையில் குண்டு குண்டாக உருட்டி அம்மாக்கள் தயாராக்கி வைக்க, இரவுச்சாப்பாடு முடித்துவிட்டு தொடங்கினால், அம்மா அழகழாக கைகளில் மருதாணி உருண்டைகளை அழுத்தி இடுவார். காலை வரை அவை உதிராமல் இருக்க, கைகளை பொலுத்தீன் பைகளால் கட்டிக்கொண்டு படுப்போம், பெருநாள் காலையில், மருதாணி உதிர்ந்து கைகள் நிறைய முழுச் செம்மஞ்சள் பொட்டுக்களை காட்டிச் சிரித்து நிற்கும்.
இதில், யாருடைய கை அதிகம் சிவத்திருக்கின்றது என்ற சண்டைக்கும் பஞ்சம் இருக்காது.பின்னர் கை கழுவி, பெருநாள் பலகாரம் உண்ணும் போது மருதாணி மணம் + பலகார வாசனை கலந்து வரும் ஒரு சுகந்தம்!!! அப்பா!! அதுதான் பெருநாள்..

அடுத்த தலைமுறையே நிறைய நீங்கள் இழந்துவிட்டீர்கள் !!

இனி என்ன அடுத்த விடுமுறைக்கு செல்லும் வரை இதையே அசை போட்டுக் கொண்டு காலம் தள்ள வேண்டியதுதான் ……………………

ஓவியன்
13-09-2011, 08:23 AM
வயது முதிர்ச்சி பக்குவத்தை நமக்குள் கொண்டு வந்து விடுமென்பது உண்மைதானே.....

வாழ்த்துகள் அகத்தியன், உங்களுடைய விடுமுறை ஊரில் இனிமையாக கழிந்தது கேட்க மிக்க சந்தோசம்.

meera
13-09-2011, 08:55 AM
வயதின் முதிர்ச்சி நம் சந்தோஷங்களை தட்டிச்செல்கிறது என்றே நானும் நினைக்கிறேன். என் திருமணத்திற்கு முன்பெல்லாம் நானும் என் இரன்டாவது தம்பியும் ஓயாமல் சண்டையிடுவோம். எப்பவும் அடிதடி தான். என் அம்மாவிற்கு இதுவே பெரும் தலை வலியாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் அரையடி தூரத்தில் நின்றுகொண்டு நலம் விசரிப்பதோடு சரி. சண்டையிடும் போது இருந்த சந்தோஷம் இப்போது இல்லை என்றே உண்ர்கிறேன்.

உங்கள் அனுபவம் பலருக்கும் தன் நினைவுகளை திருப்பி தரும் என்றே நினைக்கிறேன்.:eek::eek:

அன்புரசிகன்
13-09-2011, 10:07 AM
குடுத்துவைச்சனீங்கப்பா....

Nivas.T
13-09-2011, 10:13 AM
இழந்துவிட்டார்கள் என்பதே உண்மை

நாம் இழந்தது பாதி
நமக்கு அடுத்தவர் இழக்கப்போவது மீதி

aren
13-09-2011, 12:25 PM
நான் இன்னும் சிறியவனாகவே இருப்பதால் வயதானவர்களுடைய வேதனையை இன்னும் அனுபவிக்கவில்லை.

போன தலைமுறைக்கும் இந்த தலைமுறைக்கும் நிறைய மாறுதல்கள் உள்ளன. இந்த தலைமுறையினர் போன தலைமுறையினரை இளக்காரமாக பார்க்கிறார்கள்.

உங்களுடைய விடுமுறை இனிமையாக கழிந்ததுகுறித்து சந்தோஷம்.

seguwera
13-09-2011, 01:33 PM
தன் சோகத்தையும் மறந்த சந்தோசமான அகத்தியனின் பகிர்வு நன்று.சொந்த நாட்டுக்கே விருந்தாளி போல வந்து போகும் சோகம் எல்லா வெளிநாடு வாழ் இந்தியருக்கும் உள்ளது. சபிக்கப்பட்ட மனிதர்களாக அவர்களது வாழ்க்கை

சிவா.ஜி
13-09-2011, 01:51 PM
அருமையான பதிவு. பிடித்த மீன் வாங்குவதில் தொடங்கி, வெடிவெடித்தது, மருதாணியிட்டது என மகிழ்ந்து, இந்தத் தலைமுறை இழந்ததைச் சொல்லி அவர்களுக்காய் வருந்தியது என அகத்தியனின் இந்த விடுமுறை நினைவலைகள்..சுகமான நினைவுகளை எனக்குள்ளும் தொட்டெழுப்பிவிட்டது.

(அதெப்படி ஆரென்...இன்னும் சிறியவனா......அப்டி போடுங்க அருவாள.....)

அக்னி
13-09-2011, 04:04 PM
குடுத்துவைச்சனீங்கப்பா....
ரிப்பீட்டு...

இளங்கன்று பயமறியாது என்று சும்மாவா சொல்லிவச்சாங்க.
பொறுப்புக்கள் கூடி வர, முன்னெச்சரிக்கைகளும் கூடத்தான் செய்யும்.
அப்படியானால், பயம் என்று சொல்லுவதும் தப்புத்தானே.

உங்கள் விடுமுறைக்களிப்பின் ஆனந்தம் உணர்ந்தேன் உங்கள் பதிவில்...

:icon_b:

அமரன்
13-09-2011, 07:28 PM
வாங்கோ அகத்தியன்!

ஊர்க்காற்றுப் பட்டாலே தேகத்துடன் சேர்த்து நெஞ்சமும் சிலிர்க்கும். எங்கிருந்தோ வந்து புத்துணர்வு ஒட்டிக்கொள்ளும்.

நீங்கள் சொல்வது உண்மைதான்.

இன்றைய தலைமுறை நிறைய இழந்துவிட்டோம். நாளைய தலைமுறை இன்னும் இழந்திடும். இழப்புகளை வேறு "எவையோ" நிரப்பி விடும்.

கீதம்
13-09-2011, 10:38 PM
துக்கத்தைப் பகிரும்போது அது பாதியாகிறது, சந்தோஷத்தைப் பகிரும்போது அது இரட்டிப்பாகிறது என்னும் பொன்மொழி உண்டல்லவா?

அதற்கேற்ப ஒரு மூட்டை மகிழ்ச்சியை எங்களுடன் பகிர்ந்து பன்மடங்கு ஆக்கிக்கொண்டுவிட்டீர்கள். எங்கள் நினைவுகளையும் தூண்டிவிட்டீர்கள்.

காலம் மாற மாற நாமும் மாறிக்கொண்டே இருக்கவேண்டுமாம். அயல்நாடுகளுக்குப் பெயர்ந்த மனங்களில் அன்றைய காலமே ஸ்தம்பித்து நின்றுவிடுகிறது.

வருடங்கள் கழித்துச் செல்லும்போது நாம் மட்டும் இன்னும் பின்தங்கியே இருப்பது போலொரு உணர்வு. உண்மைதான் என்று உங்கள் பதிவு சொல்கிறது.

மகிழ்ச்சியையும் மன உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி அகத்தியன்.

அகத்தியன்
14-09-2011, 05:13 AM
என் மகிழ்ச்சியினை இன்னும் இரட்டிப்பாக்கிய மன்ற உறாவுகள்

ஓவியன், மீரா, அன்பு , Nivas.T , இளைஞர் ஆரென் :D;) , seguwera , சிவா.ஜி அண்ணா , அக்னி , மற்று அமரன் ( நலமா அமரா ? ) , கீதம் ( நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை கீதம் )

ஆகியோருக்கு என் நன்றிகள்

:):):):)

அமரன்
14-09-2011, 05:35 AM
நலமே அகத்தியன்!

உன்னைப் போன்ற மகிழ்வுடன் உன் பதிவுச் சுகத்தை உணர்ந்தேன்.

மதுரை மைந்தன்
14-09-2011, 11:01 AM
உங்கள் பதிவை படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி.

vseenu
20-09-2011, 02:49 PM
நல்ல பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.

Ravee
20-09-2011, 08:23 PM
அகத்தியரின் பதிவுகளை தேடி படித்த எனக்கு .... அவரின் சந்தோசங்களை பகிர்ந்ததில் சந்தோசமே .... உங்கள் நினைவலைகளை மீட்டி இன்னும் பல விசயங்களை படிக்கத்தாருங்கள் அகத்தியன் .

(அதெப்படி ஆரென்...இன்னும் சிறியவனா......அப்டி போடுங்க அருவாள.....)

அட ஆசைக்கு அப்படித்தான் இருந்துட்டு போகட்டுமே அண்ணா ... வயசுங்கிறது உடலுக்குத்தானே தவிர மனசுக்கு இல்லையே .... :lachen001:

aren
21-09-2011, 07:07 AM
அட ஆசைக்கு அப்படித்தான் இருந்துட்டு போகட்டுமே அண்ணா ... வயசுங்கிறது உடலுக்குத்தானே தவிர மனசுக்கு இல்லையே .... :lachen001:

உங்களுக்கெல்லாம் தாங்கமுடியவில்லை என்றே நினைக்கிறேன். உண்மையை ஒப்புக்கொள்ளவே மாட்டீர்களே. எனக்கும் மனமும் உடலும் ஒரே வயதில்தான் இருக்கிறது என்றும் இளமை!!!!!

Ravee
21-09-2011, 09:40 AM
உங்களுக்கெல்லாம் தாங்கமுடியவில்லை என்றே நினைக்கிறேன். உண்மையை ஒப்புக்கொள்ளவே மாட்டீர்களே. எனக்கும் மனமும் உடலும் ஒரே வயதில்தான் இருக்கிறது என்றும் இளமை!!!!!

அந்த இளமை குறையாமல் இன்னொரு தொடர் கதை கொடுத்தால் நன்றாக இருக்கும் அண்ணா... :p