PDA

View Full Version : அது ஒரு பொற்காலம்

கீதம்
09-09-2011, 07:12 AM
கல்லும் உளியும் கணீர் கணீரென்று
காதலால் மோதிக் கலந்திருந்ததொரு காலம்.
தேர்ந்த சிற்பிகள் பலரும் சேர்ந்து நிறைந்திருந்த
சிற்பக்கூடத்தின் சீர்மிகுப் பொற்காலம்!

வளையாத கரங்களுக்கும் வசப்பட்டது
கலையெழில் மிக்க சிலையழகுகள்.
கண்ணால் பார்த்துக் கற்றுக்கொண்டன புதுக்கரங்கள்.
கைபிடித்துப் பழக்கிவிட்டன முதுக்கரங்கள்.

வேடிக்கை பார்க்கவந்த வெற்றுக்கரங்கள் சிலவும்
கற்றுக்கொண்டன கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிலையை
கண்டுபிடித்து வெளிக்கொணரும் கலையை!

நுட்பமும் நுணுக்கமும் மேவிய கரங்கள்
படைத்த சிற்பங்கள் பார்வை கவர்ந்தன.
மூளி, முடமென முடக்கப்பட்டவையும்
புனருத்தாரணம் அளிக்கப்பட்டு புதுவாழ்வு பெற்றன.

அயர்ச்சியோ… தளர்ச்சியோ….
அளவிலாப் பணிகளின் சுழற்சியோ….
ஒத்திசைத்து ஒலித்திருந்த உளிகள்
அத்தனையும் அதிரடியாய் ஓய்வு கொள்ள...
அரவமற்றக் கூடத்தில் ஆங்காங்கே ஒலிக்கின்றன,
ஒன்றிரண்டு உளிகள்!

இவையும் நாளை ஓய்ந்துபோகலாம்,
இயக்கம் முற்றிலும் நின்றுபோகலாம்.

உளிகளின் ஓசை நின்றுபோனாலும்
உயிரின் ஓசையாய் வடித்த சிலைகள் யாவும்
படைத்த கரங்கள் பற்றிய பிரக்ஞையற்று
மெளனமொழி பேசி நிற்கும் காலங்காலமாய்..

meera
09-09-2011, 07:47 AM
கீதம், உங்களின் கவிதை எனக்கு கல்கி அவர்களின் சிவகாமி சபதம் கதையை நினைவுட்டுகின்றன.

அருமையான கவிதை.

கௌதமன்
09-09-2011, 04:08 PM
வான்புகழ் வள்ளுவனுக்கு குமரியில் சீர்மிகு சிலை வடித்த சிற்பி கணபதி ஸ்தபதி அவர்கள் மறைந்த இந்தத்தருணத்தில் அவரை நினைவு கூறும் விதத்தில் (எதேட்சையாக அமைந்தாலும் கூட) சிறப்பானக் கவிதையைத் தந்த நண்பர் கீதத்துக்கு பாராட்டுக்கள்.

seguwera
09-09-2011, 08:04 PM
சிற்பக்கலை குறித்த அருமையான கவிதை.
சிற்பிகள் பேசாமல்
சிற்பத்தை பேச வைத்தார்கள்.
இந்த நவநாகரிக யுகத்தில் நாம் தொலைத்துக்கொண்டு இருக்கின்ற
கலைகளிலும் இதுவும் ஒன்று.

Ravee
09-09-2011, 08:46 PM
http://wwwdelivery.superstock.com/WI/223/1340/PreviewComp/SuperStock_1340-788.jpg

http://www.hindu.com/mag/2004/12/12/images/2004121200800802.jpg

நம் நாகரீகத்தின் வரலாறு என்ன என்பதை பறை சாற்றுவது சிற்பங்கள். அதன் வரலாற்று ஆசிரியர்கள் சிற்பிகள் அவர்களை கௌரவப்படுத்தியதற்கு நன்றி அக்கா

ஜானகி
10-09-2011, 01:39 AM
காவியம் படைக்கும் கல்லுக்கும் கவிதை கொடுத்த நல்நெஞ்சமே....நன்று...

Nivas.T
10-09-2011, 12:33 PM
இது எனக்கு ஆசிரியர்களையும், மாணாக்கர்களையும் பொருளுணர்த்துவதாய் உள்ளது

கவிதை மிக அழகுங்க

கீதம்
11-09-2011, 12:57 AM
கீதம், உங்களின் கவிதை எனக்கு கல்கி அவர்களின் சிவகாமி சபதம் கதையை நினைவுட்டுகின்றன.

அருமையான கவிதை.

நன்றி மீரா.(நீங்க எங்கயோ போய்ட்டீங்க... :))

வான்புகழ் வள்ளுவனுக்கு குமரியில் சீர்மிகு சிலை வடித்த சிற்பி கணபதி ஸ்தபதி அவர்கள் மறைந்த இந்தத்தருணத்தில் அவரை நினைவு கூறும் விதத்தில் (எதேட்சையாக அமைந்தாலும் கூட) சிறப்பானக் கவிதையைத் தந்த நண்பர் கீதத்துக்கு பாராட்டுக்கள்.

கெளதமன், உங்கள் பின்னூட்டம் பார்த்தே சிற்பி கணபதி ஸ்தபதி அவர்களின் மறைவு குறித்து அறிந்தேன். அவருக்கு என் அஞ்சலி.

முன்பு சிவப்பி கதை எழுதி பதிக்கவிருந்த சமயம், பாடகி சித்ராவின் குழந்தை குளத்தில் விழுந்து இறந்த செய்தி வெளியானதைக் கண்டு மனம் பதைத்தேன்.இப்போதும் அப்படியே.

சிற்பக்கலை குறித்த அருமையான கவிதை.
சிற்பிகள் பேசாமல்
சிற்பத்தை பேச வைத்தார்கள்.
இந்த நவநாகரிக யுகத்தில் நாம் தொலைத்துக்கொண்டு இருக்கின்ற
கலைகளிலும் இதுவும் ஒன்று.

பின்னூட்டங்களால் தொடர் உற்சாகம் தந்துகொண்டிருக்கும் உங்களுக்கு நன்றி சேகுவாரா.

கீதம்
11-09-2011, 01:01 AM
நம் நாகரீகத்தின் வரலாறு என்ன என்பதை பறை சாற்றுவது சிற்பங்கள். அதன் வரலாற்று ஆசிரியர்கள் சிற்பிகள் அவர்களை கௌரவப்படுத்தியதற்கு நன்றி அக்கா

அழகான சிற்பங்களின் படங்களோடு பின்னூட்டமிட்டதற்கு நன்றி ரவி.

காவியம் படைக்கும் கல்லுக்கும் கவிதை கொடுத்த நல்நெஞ்சமே....நன்று...

பாராட்டுக்கு நன்றி ஜானகி அம்மா.

இது எனக்கு ஆசிரியர்களையும், மாணாக்கர்களையும் பொருளுணர்த்துவதாய் உள்ளது

கவிதை மிக அழகுங்க

இன்னும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. இன்னொரு பொருளும் விளங்கும்.:) பின்னூட்டத்துக்கு நன்றி நிவாஸ்.

M.Jagadeesan
11-09-2011, 07:55 AM
கல்லேர் உழவருக்கு கெளரவம் செய்த
சொல்லேர் உழவராம் கீதம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

சிவா.ஜி
11-09-2011, 03:14 PM
ஆமாம் தங்கையே...அன்றைய காலத்தில்....கருங்கல்லை..சிலையாக வடிக்க உறவுகள் பல ஒட்டியிருந்தன...கூட்டுக்குடும்பத்தில். இன்றோ.....தனியாய்...தன்னந்தனியாய் செதுக்க யாருமின்றி தன் போக்கில் கல்லாய் மட்டுமே...அல்லது......தேவையற்ற வடிவங்களில் நிர்பந்தத்தால், சூழலால் உருவாக்கப்படுபவர்களாய்....

அழகான கவிதை...அர்த்தமுள்ள கவிதை. வாழ்த்துக்கள்ம்மா.

செல்வா
11-09-2011, 07:58 PM
எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாகும்னு நம்புவோம்... அக்கா.
எல்லா உளிகளும் ஓய்ந்து போவதோ அழிந்து போவதோ அத்தனை எளிதல்ல அக்கா.
புதிய புதிய உளிகள் வந்து கொண்டே இருக்கும்.
புதிய புதிய சிற்பங்கள் உருவாக்கப் படும். சில உளிகளால் பழையனவை புது வடிவம் பெறும்.
தமிழுள்ளவரை உளிகளின் ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும்.
எவ்வளவுதான் தூரமாய் போனாலும் சிற்பக் கூடத்தில் வேலை செய்தவனுக்கு உளிகளும் அவற்றின் ஓசையும் காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டேதானிருக்கும்.

அருமையான குறியீட்டுக் கவிதை.... வாழ்த்துக்கள் அக்கா...!

பென்ஸ்
12-09-2011, 12:22 PM
கீதம்...
இந்த வாரம் தஞ்சை சென்றிருந்தேன்....
வீட்டில் அழகுக்கு வைக்கலாம் என்று கற்சிலைகள் எதாவது கிடைக்குமா என்று ஒரு கற்கூடம் சென்றேன்...
என் விருப்பத்திற்க்கு இதமானவை எதுவும் இல்லை...

அந்த சிற்பியிடம் தேவதை சிலையோ அல்லது சிலை வைக்க கல் தூனோ கிடைக்குமா என...
அவர் எங்களிடம் இருப்பது இதுதான் என்றார்..
நானும் விடாமல், செய்து கொடுக்க முடியுமா என்று கேட்டேன்...
அவர்.. இல்லை என்று மறுத்து விட்டார்...
காரணம் என்னவோ...!!!

எதுவாயினும் காலத்திற்க்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்ளுபவை மட்டுமே நிலைக்கின்றன ....
மற்றவை மடிகின்றன...
கலையும் அதற்கு விதிவிலக்கல்ல...

கவிதைகள் மரபைதாண்டி வந்ததால்
புதுகவிதைகளாய் இன்னும் உயிரோடு...

கீதம்
13-09-2011, 04:02 AM
கல்லேர் உழவருக்கு கெளரவம் செய்த
சொல்லேர் உழவராம் கீதம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

அன்பின் மிகுதியால் அதீதமாய்ப் பாராட்டுகிறீர்கள். உங்கள் கவித்திறத்தின் முன் நான் எம்மாத்திரம்? தங்கள் பாராட்டுக்கு நெகிழ்வுடன் நன்றி சொல்கிறேன் ஐயா.

கீதம்
13-09-2011, 04:13 AM
ஆமாம் தங்கையே...அன்றைய காலத்தில்....கருங்கல்லை..சிலையாக வடிக்க உறவுகள் பல ஒட்டியிருந்தன...கூட்டுக்குடும்பத்தில். இன்றோ.....தனியாய்...தன்னந்தனியாய் செதுக்க யாருமின்றி தன் போக்கில் கல்லாய் மட்டுமே...அல்லது......தேவையற்ற வடிவங்களில் நிர்பந்தத்தால், சூழலால் உருவாக்கப்படுபவர்களாய்....

அழகான கவிதை...அர்த்தமுள்ள கவிதை. வாழ்த்துக்கள்ம்மா.

அண்ணா, உங்கள் பின்னூட்டம் கண்டு அசந்துபோனேன். என்ன நினைத்து எழுதினேனோ அது நிறைவேறுவதைக் கண்கூடாகக் கண்டு மகிழ்கிறேன்.

செல்வா குறிப்பிட்டதே இந்தக் கவிதையின் கரு. கவிதை என்னும் சிற்பமொன்று வடித்துவிட்டேன். அதைப் பின்னூட்டங்களெனும் உளிகள் ஒவ்வொரு விதமாய்ச் செதுக்கி புதிய புதிய பார்வையில் படைப்பினைப் பரிணமிக்கவைக்கின்றன.

அதே கருவில் இன்றைய வாழ்க்கையைப் பொருத்தி, செதுக்கப்படாத சிற்பங்களாய் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் வாழ்க்கை முறையை சொன்னவிதம் வெகு பொருத்தம். யதார்த்தமும் கூட. மிகவும் நன்றி அண்ணா.

கீதம்
13-09-2011, 04:16 AM
எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாகும்னு நம்புவோம்... அக்கா.
எல்லா உளிகளும் ஓய்ந்து போவதோ அழிந்து போவதோ அத்தனை எளிதல்ல அக்கா.
புதிய புதிய உளிகள் வந்து கொண்டே இருக்கும்.
புதிய புதிய சிற்பங்கள் உருவாக்கப் படும். சில உளிகளால் பழையனவை புது வடிவம் பெறும்.
தமிழுள்ளவரை உளிகளின் ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும்.
எவ்வளவுதான் தூரமாய் போனாலும் சிற்பக் கூடத்தில் வேலை செய்தவனுக்கு உளிகளும் அவற்றின் ஓசையும் காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டேதானிருக்கும்.

அருமையான குறியீட்டுக் கவிதை.... வாழ்த்துக்கள் அக்கா...!

மிகவும் நன்றி செல்வா, ஆறுதலான வார்த்தைகளுக்கும், அகமகிழும் விதமாய் அளித்தப் பின்னூட்டத்துக்கும்.

நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். :icon_b:

கீதம்
13-09-2011, 04:25 AM
கீதம்...
இந்த வாரம் தஞ்சை சென்றிருந்தேன்....
வீட்டில் அழகுக்கு வைக்கலாம் என்று கற்சிலைகள் எதாவது கிடைக்குமா என்று ஒரு கற்கூடம் சென்றேன்...
என் விருப்பத்திற்க்கு இதமானவை எதுவும் இல்லை...

அந்த சிற்பியிடம் தேவதை சிலையோ அல்லது சிலை வைக்க கல் தூனோ கிடைக்குமா என...
அவர் எங்களிடம் இருப்பது இதுதான் என்றார்..
நானும் விடாமல், செய்து கொடுக்க முடியுமா என்று கேட்டேன்...
அவர்.. இல்லை என்று மறுத்து விட்டார்...
காரணம் என்னவோ...!!!

எதுவாயினும் காலத்திற்க்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்ளுபவை மட்டுமே நிலைக்கின்றன ....
மற்றவை மடிகின்றன...
கலையும் அதற்கு விதிவிலக்கல்ல...

கவிதைகள் மரபைதாண்டி வந்ததால்
புதுகவிதைகளாய் இன்னும் உயிரோடு...

நீங்கள் சொல்வது சரிதான். அதனால்தான் மனம் தேற்றிக்கொண்டேனே கடைசிப்பத்தியில்.

ஆனாலும் ஆதங்கங்கள் அத்தனை எளிதில் அகன்றுவிடுவதில்லையே. பாருங்க, நீங்களும் இந்தக்காலத்தில் சிலை தேடிச் சென்றிருக்கிறீர்கள். இல்லையென்றாலும் வேண்டுமென்று விடாப்பிடியாய் கேட்டிருக்கிறீர்கள். நானும் கொஞ்சம் விடாப்பிடியாய் எழுதிக்கொண்டு இருக்கிறேன். என்றாவது ஓர்நாள்... வேண்டுவது கிடைக்காமலா போய்விடும்? :)