PDA

View Full Version : இழை ஒன்று கவிகள் பல



கிரிகாசன்
07-09-2011, 12:17 AM
செழுமலர் நிறைபொழில் சிதறிய திவலைகள்
சொரிவது எனவிழி நீர்வழிய
மெழுகெனும் குளிர்சுனை மலரது இதழ்களும்
எழுமெழில் முகமதில் தீ பரவ
தழுவிடு எனையென பருவமும் அவனிடம்
கொலை கொலையென மனம்தான் அழிக்க
எழுமிலை மறைகனி இதிலுறை பனிவிழும்
எழிலுறும் வகையென இவளிருந்தாள்

சொலுவென்ன குறையது சிறுவய துடையொரு
சிலையெனும் வடிவெடு ஆரணங்கே
கொலுவினி லிருஉரு உயிர்வர அருகினில்
குறுநடை பழகிட வருமெனவே
பொலபொலஎன உதிர் புதுவகை மலரெனும்
பொலிவொடு இதழ்வழி மதுமினுங்க
குலுங்கிடு மிவையென்ன கொடுமைகள் தருதென
குடமிரு வளை யயல் கோபமிட்டான்

அலைகடல்பெரியது அதைவிட இதுபெரும்
அதிசய மலையுது நீரின்றியே
மலையிடைஎழுமதி முகில்வரு மிடையினில்
மகிழ்வென நீந்திடும் மதிகுலைய
உலையிடு உயிரென ஊறிடும் நீர்விழு
உளதுயர் தெளிவெடு மீனசைய
விலையில திவளெழில் சிதைவது கொடிதென
விளைவது ஏதென இவன் வினவ

இழிவெரு துடனெடு எறிகயிறுளனென
திருபொருள் `திருவுடன்` அதிலொருகால்
அழி`வு`செய் இனமிவன் எதுஎன துயிர்துடி
ஒலியிடும் பொருள்கொள விழி பொழிந்தேன்
ஒழிவில தொருமுறை உயரிய பதில்தர
உளதொரு பெரியவர் உமையடைந்தேன்
வழியறி அறிவது வரவில்லை எதுவரை
வாழ்வென மீளவும் வழியுரையும்

எவனுன துடைமையை இருவிழி நீருற
எதிரியென் றில்லமும் கன்னமிட்டோன்
அவனது தருவனோ அதைவிட அவனது
எடுபொருள் கவரென இவனுரைத்தான்
நவமணி பொலிந்திடு ஒளியுடை சிலையென
இவளெழில் வதனமும் பூமலர
அவனிலை இவனென எடுஉன திதயமும்
எங்குள தெனஇதழ் களவுசெய்தாள்


*************************************

பொருள்





அலைகடல்பெரியது அதைவிட இதுபெரும்
அதிசய மலையுது நீரின்றியே
மலையிடைஎழுமதி முகில்வரு மிடையினில்
மகிழ்வென நீந்திடும் மதிகுலைய
உலையிடு உயிரென ஊறிடும் நீர்விழு
உளதுயர் தெளிவெடு மீனசைய
விலையில திவளெழில் சிதைவது கொடிதென
விளைவது ஏதென இவன் வினவ

அலைகடல் அதிசயிக்கத் தக்க வகையில் பெரியது. அதைவிட இந்த அதிசயம் பெரியது.
அதாவது நீரில்லாமலேயே அவளுடலில் அலையை க்காணும் அதிசயமென கூறி
(அலைபோலும் மேனி. அலைபோல வளைந்த மேனி, அலைந்து திரியும் மேனி ,
அலைபோல உணர்வுகள் கொள்ளும்மேனி, எப்படியாவது எடுத்துக்கொள்ளுங்கள்)


அந்த அதிசயித்தில் மனம் கவர வானில் முகிலிடையே நிலவு நீந்துவது போலும் , தாங்களும் தண்ணீரில் நீந்தவேண்டுமே என்ற
எண்ணத்தைவிட்டு உலைகொதி நீரிலிட்ட உயிரினம் துடிப்பதுபோல
அசைந்தமீன்கள் போன்ற கண்களில் நீர்வழிய அழகு கெடுகிறதே என்று அத காரணத்தை வினவினான்

இழிவெரு துடனெடு எறிகயிறுளனென
திருபொருள் `திருவுடன்` அதிலொருகால்
அழி`வு`செய் இனமிவன் எதுஎன துயிர்துடி
ஒலியிடும் பொருள்கொள விழி பொழிந்தேன்
ஒழிவில தொருமுறை உயரிய பதில்தர
உளதொரு பெரியவர் உமையடைந்தேன்
வழியறி அறிவது வரவில்லை எதுவரை
வாழ்வென மீளவும் வழியுரையும்

இழிவு! எருதுடன் எடு கயிறு உளன் (உடையவன்)( எமன்போல )
எனதிரு (என்னிடமுள்ள) பொருளினை `திருவுடன்` என்பதில்
`வு`அழித்து வரும் (திருடன்) இனத்தவன் எனது உயிர்துடிப்பான
ஒலியிடும் பொருளை (இதயத்தை) திருடிவிட்டதால் அழுதேன். அதற்கு என்ன செய்யலாம் எனக்கேட்க

எவனுன துடைமையை இருவிழி நீருற
எதிரியென் றில்லமும் கன்னமிட்டோன்
அவனது தருவனோ அதைவிட அவனது
எடுபொருள் கவரென இவனுரைத்தான்
நவமணி பொலிந்திடு ஒளியுடை சிலையென
இவளெழில் வதனமும் பூமலர
அவனிலை இவனென எடுஉன திதயமும்
எங்குள தெனஇதழ் களவுசெய்தாள்

கன்னமிட்டோன் - களவு செய்தவன்
முடிவில்.. அவன் அல்ல! அது இவன் நீதான் எனக்கூறி எடு உன் இதயத்தை என்று
அவள் இதழ்களை அவன் கன்னத்தில் பதித்து முத்தமிட்டாள்.
(களவுசெய்தாள் - கன்னமிட்டாள்]

கிரிகாசன்
08-09-2011, 06:00 PM
செய்த குற்றமென்ன?

திங்கள் பெரும்வானமதில் செய்துவிட்ட குற்றமென்ன
தேடிமுகில் மூடுகின்றதே!
மங்குஒளி தீபமது செய்துவிட்ட குற்றமென்ன
மாலையிளந் தென்றல் ஊதுதே
பொங்குநதி செய்ததொரு குற்றமென்ன போகுமிடம்
பாதையெங்கும் கல்லும்முள்ளுமே
அங்கும்வளைந் தேநெளிந்து ஓடுகையில் பாறையொன்று
அதைவிழுத்தி மகிழுகின்றதே!

செங்கமலம் வாழ்வினிலே செய்தவொருகுற்றமென்ன
சீண்டும் அலை ஆடுஎன்குதே
அங்கு படர் தாமரையின் இலையிழைத்த குற்றமென்ன
ஏறியநீர் விட்டொதுங்குதே
தங்கம் எழில்தந்தபோதும் தானறியா செய்ததென்ன
தீயழித்துத் தேகம் கொல்லுதே
எங்கணும்நற் சோலைதன்னில் உள்ளபூக்கள் செய்ததென்ன
ஏறும் வெயில் காய வைக்குதே

பெண்மையெனும் மென்மைசெய்த குற்றமென்ன பூமியிலே
மேனியது காந்தமாகவே
கண்ணியமே அற்றவர்கள் கண்டுஅதன் தூய்மைகொல்லக்
காப்பதற்கு யாருமில்லையே
சின்னவர்கள் வாழும்தமிழ் ஈழமண்ணில் செய்தென்ன
சாகவைத்து பூமிதின்னவே
மென்னுடலை ஆயிரமாய் மேதினியில் யாரும்விழி
கொள்ளமுதல் மண்ணும் மூடுதே

அள்ளி உடல் கொள்ளிவைத்து ஆவெனவே அலற இன்பம்
ஆனந்தமாய் துள்ளுகின்றார் காண்
நள்ளிரவுபேயன்றாகி நங்கையர்கள் பெண்ணவர்முன்
நாயிலும்கீழ் இழிவு செய்தார் ஏன்
எள்ளிநகையாடி இவர் இனமழிக்க பூமியெல்லாம்
என்னசெய்தார் தூங்குகிறார் காண்!
வள்ளிமணவாளனே சொல்! வாழ்வில்தமிழ் ஈழமகன்
செய்தபெருங் குற்றமென்ன சொல்!

கீதம்
08-09-2011, 10:27 PM
முதல் கவிதையில் காதலைத் தோய்த்து எழுதிக் காதலர் உள்ளம் கவர்ந்தீர்கள்.

இரண்டாம் கவிதையில் மானுடம் மறந்த மாக்களை மனக்குமுறலோடு சாடியுள்ளீர்கள்.

வார்த்தைகள் வசப்படுகின்றன உங்களுக்கு. எண்ணிய யாவையும் ஏற்றமுற எழுதும் உங்கள் திண்ணிய மனத்தைப் பாராட்டுகிறேன்.

ஜானகி
09-09-2011, 02:11 AM
வாத்தைகளெனும் இழைகளால் இட்ட கோலங்கள் அருமை...தொடரட்டும்...

கௌதமன்
09-09-2011, 04:13 PM
அட, சொற்கள் சுகமாக வந்து விழுகின்றனவே..
நண்பர் கிரிகாசன் ஒரு தமிழ்தாசன்
இவர் இன்னொரு தமிழருவி!!

Nivas.T
09-09-2011, 04:27 PM
மிக அருமை நண்பரே
நீங்கள் பொருள் சொன்ன பின்புதான் மிகவும் தெளிவாய் விளங்கியது

மிக நன்று
தொடந்து பதிவிடுங்கள்
பாராட்டுகள் கிரிகாசன்

seguwera
09-09-2011, 07:43 PM
இவர் கிரிகாசனா இல்லை கவிகாசனா

அருமையான கவிதைகள்
முதல் கவிதை கொஞ்சம் புரிவதற்கு கடினமாகத்தான் இருந்தது இரண்டு மற்றும் மூன்று கொஞ்சம் இலகுவாக இருக்கிறது

கிரிகாசன்
10-09-2011, 12:35 AM
என்னை அன்போடு பாராட்டிய அனவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
இவ்வளவு பாராட்டுகளை நான் எதிர்பார்க்கவில்லை. மனம் மகிழ்கிறது.

வாழ்வில் பிடிப்பில்லாவிட்டால் வாழ்வே பொய்யாகத் தோன்றும். சில வேளைகளில் மகிழ்ச்ச்சியாக இருக்கும்போது ... இப்படி எழுத தோன்றும்

காண்பது பொய்யா?

ஆழவெளி விண்ணோடை அழகுத் தோற்றம்
அதனூடே வெடித்தோடும் ஒளியின் சீற்றம்
கோளமெனச் சுழல்கின்ற குண்டுக் கற்கள்
குலைந்தோடும் தீநாக்கு குழம்பின் வீச்சு
தாழமுக்கக் குளிர்தணலைத் தணியாத் தன்மை
தாமிவைகள் விழிகொண்டும் தெரியக் காணேன்
ஏழையிவன் அறியாதோர் அதிசயங்கள்
இருப்பனவோ, பொய்யோ யான் ஏதும் அறியேன்

நீலவிண் பொய்யென்றால் நிலவும் பொய்க்கும்
நீள்நதியும் குளிரோடை நீந்தும் மீனும்
காலமெழும் தேன்கனிகள் கடலும் பொய்க்கும்
கதிரெழுந்து வீழுமதன் காட்சி பொய்க்கும்
ஆலமரம் அதனூடே அணையும் பட்சி
அலைந்து வரும் தென்றலதும் அழகுப்பூக்கள்
கோலமயில், கூவுங்கருங் குயிலும் பொய்யே
குவலயமும் பொய்யேஎன் கூற்றும் பொய்யே

வாழுகிறோம் மெய்கொண்டு வந்தோம் மண்ணில்!
வண்ணமலர் கண்டேநாம் இன்பம் கொண்டோம்!
வீழுகிறோம் எழுகின்றோம் வீசும் காற்றில்
வாசமது கொண்டோம் பின் வாழ்வும் கண்டோம்
நாளும்பொழு தாகவரும் நம்மைக் காக்கும்
நாணலிடை தொட்டசையும் நல்லோர் தென்றல்
ஆழவிடும் மூச்சின்றிப் பொய்க்கு மாயின்
அத்தனையும் பொய்த்து விடும் அகிலமன்றோ?

அலையாடும் தூரத்தே அணில்கள் ஓடும்
அழகுமயில் துளிவீழ அசைந்து ஆடும்
தலையாடும் இளங்காற்றில் தருக்கள் ஆடும்
தானாடி சலசலக்கும், தொலை தூரத்தில்
நிலவோடும் நிற்காது நெருங்கி மேகம்
நிலமோடும் அதனோடு நிதமும் ஓடும்
கலைகொண்டு காண்கின்றேன் காணுமிவை எக்
காலமும் பொய்யாவதிலைக் காணல் மெய்யே!

Ravee
10-09-2011, 01:24 AM
சந்தத்தில் சதிராடும் வார்த்தை வரிகள் மனக்கண் முன் காதல் பாசம் கனிவு இரக்கம் திகைப்பு சாந்தம் என பல முகம் காட்டுகிறது ... பாரதியின் ரௌத்திரதோடு ஒரு கவி தாருங்கள் நண்பரே ... :)

கிரிகாசன்
10-09-2011, 06:05 AM
சந்தத்தில் சதிராடும் வார்த்தை வரிகள் மனக்கண் முன் காதல் பாசம் கனிவு இரக்கம் திகைப்பு சாந்தம் என பல முகம் காட்டுகிறது ... பாரதியின் ரௌத்திரதோடு ஒரு கவி தாருங்கள் நண்பரே ... :)

இப்படியான கவிதைகள் சில ஏற்கனவே எழுதியுள்ளேன். ஆனால் அவை
ஈழத்தோடு சம்பந்தப்பட்டது பெரிதாக வன்மை பேசாவிட்டாலும்
அவற்றில் கவனமாக இருக்கவேண்டியுள்ளது. இதோ முன்னர் எழுதிய ஒன்றைப்
பகிர்ந்துகொள்கிறேன்.



என்ன உலகமடா?

கத்தும்கடலே பெருகிவிடு, கயவர் கூட்டம் அழித்துவிடு
செத்தும் காணச் சிறுமையரை தீயே பற்றி எரித்துவிடு
வித்தும் முளையும் பூவென்று வெறியர் கிள்ளி எறிகின்றார்
கொத்தும் மலராய் மேனிகளைக் கோரம் வெட்டிக் கொல்கின்றார்

சட்டம் போட்டு விதியெழுதி சரமாய்வார்த்தை தான் கோர்த்து
முட்டிமோதி விளையாடி மெல்லச் சுற்றுது பூவுலகு
வெட்டிபோடும் கைகளினை வேடிக் கையாய் விழிகண்டு
சுட்டுகொல்வோர் தோள்களினை தொட்டே தோழமை பேசுகிறார்

ஒற்றைக் கையை மேலோங்கி ஒன்றுமில்லை பாரென்று
மற்றக் கையில் வாள்தூக்கி மறைவில் எங்கள் மெய்கிழிக்க
பற்றுக் கொண்டு பார் என்று பாவிஉலகம் ஏமாற்றி
வெற்று கையை இரண்டாக்க விம்பம் வைத்துக்காட்டுதடா

வைத்துக் கட்டும் சொல்லாக வார்த்தை இரட்டை விதமாக்கி
மெத்தப்புழுகும் செயல்கண்டு மேனிதுடிக்கக் காண்கின்றேன்
சொத்தும்சுகமும் இதோஎன்றால் சுழலும் வேகக் காற்றாடி
வைத்துகொள்ளும் வேகத்தில் வானத்தேறி சுற்றுகிறார்

வெட்டிப் போடப் படமாக்கி வியந்து பார்த்த உலகமது
தொட்டில் இருந்து சுடுகாடு செல்லும்வயது மாந்தர்களைக்
கட்டிக் கொல்லும் காட்சியதை காட்டக் கண்டும் உலகமது
சட்டை செய்யாக் கண்களினை சாட்சி கருதி மூடுவதேன்

உள்நாட்டுள்ளே பேசிடுவோம் ஒருவர்வேண்டா என்கின்ற
கள்ளன் தானும் காட்சிக்காய் கடவுள்வேடம் போட்டுவர
துள்ளிக்காலில் வீழ்ந்தெம்மை சிவனே என்று கும்பிட்டு
கொள்ளிப்பேய்க்கு வாழ்வாகி கூடப்போ நீ என்கின்றார்

சொல்லும் வரையில் இராமகதை சொல்லக்கேட்டு காலையிலே
நல்லாள்சீதைக்(கு) அண்ணன்தான் ராமன் இலங்கா ஆளுகையில்
பொல்லாக் குணத்தோன் இராவணனும் உள்ளேவந்து போர்செய்தான்
கொல்லு என்றே கூத்தாடும் கூட்டம் கொண்டது உலகமடா

செல்லு வீதி ராஜமனை சிறந்த இவர்கள் அரசாங்க
கல்லுமனைகள் முன்னாலே கைகள்கோர்த்து கதறியழு
நில்லு நீதி கேட்டெழுந்து நேரே கண்முன் முகம்பார்த்து
சொல்லு, நீதி தாவென்றே சுற்றும் உலகைப் புரட்டியெடு

கிரிகாசன்
10-09-2011, 06:19 AM
எழுந்து நட!

கொட்டும் விழிகளில் சொட்டும் கண்ணீர்
விட்டுப் போவது எப்போது
தட்டும் கைகளும் சட்டக் கதவினை
தட்டித் திறப்பது எப்போது
கட்டிக் காத்தோம் மண்ணைப் பகைவனும்
விட்டுப் போவது எப்போது
சொட்டும் குருதியும் நெஞ்சக் குழியினுள்
சுட்டுக் குமுறுது என்செய்வேன்

நெட்டுக் கிடையென நீயுங் குப்புற
நித்திரை கொள்வது முடிவாகி
விட்டுச் சடரென வேகம் கொண்டிட
விழிகள்திறப்பது எப்போது
தொட்டுப் படபட வென்று முடித்திடச்
தொகையா யுள்ளது பலவேலை
முட்டித் தலைவழி வெள்ளம் பரவியுன்
மூச்சுத் திணறிட முன்னோடு

கட்டிக் கல்லொடு கடலில் தள்ளிடக்
கயவனெழுந்திட முன்னாலே
எட்டிப் படபட என்று கொடுத்தவன்
எண்ணம் பொடிபடச் செய்யாயோ
வெட்டிக்கதைகளும் வீணில்பேச்சுகள்
விட்டே சேர்ந்திடு ஒன்றாக
விட்டுதமிழனும் வேற்றுக் கொள்கையில்
வினையாய் அழிவது வேண்டாமே

டக்டக் டக்கென நேரம் ஓடுது
தாவி விரைந்திடு, நீயோடு
திக்திக் திக்கென அன்பில் நெஞ்சமும்
சேர்ந்து துடித்திட வேண்டாமோ?
வெம்மை கொண்டெழு விரைந்து ஓடுவர்
வீணர் குதி தலை பிடரி தொட
இம்மை எல்லையில் மறுமைகாண்பது
எப்படி அவருக்(கு) ஓதிவிடு

கிரிகாசன்
10-09-2011, 06:23 AM
இது புதுவழி


கத்திய ஓலமும் கதறியகுரலும்
கண்வழிநீர் பெரு ஆறெனவே
முட்டிவழிந்திடச் செத்திடுவோமெனச்
சித்தம் கலங்கிச் சிதறியதும்
கொத்து கொத்தாய் பல குண்டுக ளாயிரம்
கொண்டுவந்தே பகை கொட்டியதும்
பட்டுவெடித்ததும் பாய்ந்துசிதைத்ததும்
பால்குடிப் பிஞ்சினர் மார்புதனை

வெட்டிக்கிழித்தவர் இரத்தம் அழிந்திடச்
செத்தவும் அதைப் பெத்தவளோ
தொட்டு எடுக்கவும் நேரமின்றித் திசை
விட்டுத் தலை தெறித்தோடியதும்
பட்டதும் ஓடி விழுந்ததும் சிறு
கையொடு கால்கள் இழந்ததுவும்
கொட்டி முழக்கிய போர்ப்பறையும்
சிறு பெண்டிர் கெடுத்தவர் தூக்கினிலே

கட்டியவிதமும் ஆடைகளின்றி
செத்தவர்தம்மைச் சீரழித்துப்
பெட்டியிலிட்டுச் சந்தி சிரித்துப்
பேயென ஆட்டம் ஆடியதும்
வெட்டியகுழியும் பதுங்கியமனிதர்
தப்பமுதல் அவர் தலையினிலே
கொட்டிய மணலும் நின்றவர் கண்கள்
கொட்டவிழிக்கப் புதைத்ததுவும்

எத்தனை கோரம் இட்டபகைவரின்
இழிசெயல் எண்ணித் துடிமனதில்
ரத்தம்கசிந் துயிர் நட்டநடுங்கியே
முற்றிலும்வேதனை பெருகுதடா
சொந்தம் இழந்துசு தந்திரம் விட்டுச்
சுற்றிமுள் வேலியைக் கட்டிவைத்தே
மந்தை விலங்கு கள்போலொரு மானிட
வாழ்வு நமக்கொரு கேடோடா

விரிந்த குழல்தனும் குடலெடுத்தேபின்
வாரி முடிப்பேன் என்றலறி
வரிந்தே சபத மிட்டவள் திரௌபதி
வாழ்வுமுடிந் தது போனாலும்
அரிதொரு பாதச் சிலம்பினை யுடைய
மதுரையைக் கொழுத்திய கண்ணகிபோல்
பெரிதொரு சாபம் இட்டேமறமகள்
பிணமென ஆகிப் புதைந்தாலும்

விட்ட கண்ணீருக்கு விலை கொடுப்பாரெமை
குத்திஅழித்திட்ட கொடியவர்கள்
இட்டவர் சபதமும் சாபங்களும் எழுந்
தெதிரி தலைதனில் இடி விழுத்தும்
பட்ட நம்துன்ப மென் இருள் விட்டோடிட
பகலெழுந்தே ஒரு விடிவுவரும்
விட்ட இடந்தனைத் தொடர்ந் திடுவோம்
இது மாறுவழி யோர்அகிம்சை வழி

Nivas.T
10-09-2011, 12:08 PM
அருமை கிரிகாசன், வார்த்தைகளின் கோர்ப்பும், சொல்லவரும் கருத்தை சொல்லும் விதமும், அவற்றில் வெளிப்படும் உணர்ச்சி தெறிப்புகளும் மிக அருமை. அதிலும் என்ன உலகமடா? என்னை மிகவும் ஈர்த்துவிட்டது நண்பரே. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி

seguwera
10-09-2011, 02:01 PM
வெட்டிப் போடப் படமாக்கி வியந்து பார்த்த உலகமது
தொட்டில் இருந்து சுடுகாடு செல்லும்வயது மாந்தர்களைக்
கட்டிக் கொல்லும் காட்சியதை காட்டக் கண்டும் உலகமது
சட்டை செய்யாக் கண்களினை சாட்சி கருதி மூடுவதேன்


கட்டியவிதமும் ஆடைகளின்றி
செத்தவர்தம்மைச் சீரழித்துப்
பெட்டியிலிட்டுச் சந்தி சிரித்துப்
பேயென ஆட்டம் ஆடியதும்
வெட்டியகுழியும் பதுங்கியமனிதர்
தப்பமுதல் அவர் தலையினிலே
கொட்டிய மணலும் நின்றவர் கண்கள்
கொட்டவிழிக்கப் புதைத்ததுவும்


உணர்ந்து உருக்கமாக எழுதி இருக்கிறார்.
என்று தனியும் எங்கள் சுதந்திர தாகம்

கிரிகாசன்
10-09-2011, 11:33 PM
இந்த மன்றத்தில் இணைந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்.
இவ்வளவு பாராட்டும் வரவேற்பையும் காண பெருமிதமடைகிறேன்.

என் தமிழ்அன்னைக்கான கவி மலர் சாத்தும் பணி தொடரும்

கிரிகாசன்
11-09-2011, 09:50 AM
ஈழமெனும் எழில் தேசம்

பச்சை வயல் வெளிக் காற்று கதிர்களில்
பட்டு மேனி தொட்டு ஓடும்
சச்சச் சலவெனச் சத்தமிட்டே நாணி
சற்றுக் குனிந்துநெல் ஆடும்
அச்சச்சோ பாரடிஎன்று குருவிகள்
ஆலோலம் பாடிப் பறக்கும்
இச்சை தருமெழில் இன்பம்நிறைமணி
ஈழமென்னும் தமிழ்த் தேசம்

மெச்சுமெழில் நெற்றி பொட்டும் வியர்வைக்கு
மேனியில் முத்துக்கள் தோன்ற
உச்சி வெயிலினில் நின்று வெட்டிக்கதிர்
ஓர மடுக்கிடும் பெண்கள்
மச்சவிழி கணை மார்பி லெறிந்திட
மையலுறு இள மைந்தர்
இச்சையுடன் கதிர்கட்டி ஏற்றிவண்டி
இன்பங்கொளும் ஈழதேசம்

கட்டைவண்டிதனில் காளை சலங்கைக்கு
கால்கள் தாளமிட ஓடும்
வட்டமடித்தோடி வள்ளென நாய்களும்
விட்டுத் துரத்திடக் காணும்
பட்டணிந்து சிறுதம்பிகள் தங்கையர்
பெற்றவர் கைபிடித் தேகும்
எட்ட இருந்திடும் கோவில் குளமென
ஈழதேசம் எழில்காணும்

நெட்டைப் பனைமரம் நிற்க அதன்பின்னே
நீலவிண்ணில் முகிலோடும்
தொட்டுவிட வானத்தூர முயர்கோவிற்
தொங்கு மணிநாதம் கேட்கும்
வட்டகுளத்தினில் வானச் சுடர்கண்டு
வண்ண மலர் தலையாட்டும்
பட்டுசிறகுடன் பற்பல வண்ணத்துப்
பூச்சிகள் தேனுண்ண நாடும்

எட்டிக்குதித் தலை மீதெழுந்து துள்ளும்
ஏந்திழை கண்ணென மீனும்
கொட்டிக் கிடந்தெழில் கொஞ்சும் சுனைதனில்
ஒட்டிக்குளிர்த் தென்றல் வீசும்
தொட்டது மேகமென்றே வளர்ந்தே யுயர்
தென்னைகளில் இளநீரும்
சுட்ட வெயிலுக்குத்தாகம் தணித்திடும்
சூழல்கொள் ஈழ மெம்நாடு

நீள அலை விரித்தாடும் கடலதில்
நெய்குழல் மங்கையர் போலும்
ஆழமனதினில் ஆயிரம் எண்ணங்கள்
அத்தனையும் மறைத்தாடும்
மூழ்கிஎழுந்திட முத்துக்கள் சிப்பியில்
மூடிவைத்த குவை தேறும்
தோள்விரி மைந்தரும்தீரமுடன் கப்பல்
தோணிகள் ஓட்டிடும் தேசம்

வாழைக் கனிகொண்டு வானரங்கள்கிளை
தாவி மரந்தனில் ஏறும்
வேளைதனில் கனிமாவின் சுவைகண்டு
விட்டு ஒருஅணிலோடும்
கீழை மரக்கொப்பில் காணும்பலாக்கனி
கோதிகிளி யொன்று பேசும்
காளை ஒன்றுஅதன் கீழிருந்து அம்மா
காணென்று யாரையோ தேடும்

பூவிரி சோலைகள் பூம்பொழில் நீர்ச்சுனை
புல்விரிந்த பசும்தேசம்
தேவரின் வானுல கானது தோற்றிடும்
தீந்தமி ழீழம் எம்தேசம்
தீயெரிந் தேசுடு காடென மாறிடச்
சிங்களமே பழியாகும்
போய் விரிந்தே விதிபோடும் கணக்கது
பாதைமாறித் தெற்கும் சேரும்

காலமெனும் சுழல் சக்கரமானது
கீழும் மேலும் நிலைமாறும்
ஞாலம் சுழன்றிட நாளு மிரவுடன்
காலை பகல் என்றுஆகும்
கோலம் அவரது கொண்டது மாறியே
கூடி யழுதிட நேரும்
சீலமுடன் நம்ம தேசமமைந்திட
சேரும் வளங்களோ மீளும்
***

கிரிகாசன்
11-09-2011, 10:03 AM
`ஈழம் எழில்தேசம்’ மேலே காண்க

[ என்.. என்று தொடக்கமிட்டு ஏதாவது ஒரு தலைப்பில் (என் வாழ்வு, என் நண்பன்,
என்ன என்ன இப்படி எதுவாகவும் இருக்கலாம் என்று) நடந்த கவியரங்கத்தில்
பாட எண்ணி பாடாமல் விட்ட கவிதை ]

என் வாழ்வு ஏனோ

என்னென்று சொல்லாது ஏனோஇவ்வுலகிலே
என்அன்னை என்னயீந்தாள்
என்செய்வ தறியாது கண்கள்நீர் சொரியவே
என்வாழ்வை யிங்குகண்டேன்
என்நன்று என்அன்று என்னொன்றும் தெரியாமல்
என்னவோ வாழ்ந்திருந்தேன்
என்னெண்ணி என்னையும் இறைவன் படைத்தனன்
என்பதும் ஏதுமறியேன்

என்னவன் என்னிவன் என்நண்பன் அல்லவன்
எதையுமே அறிய அல்லேன்
என்மனம் வெண்பளிங் கென்றிடும் அண்மையில்
உள்ளதன் வண்ணங் கொண்டேன்
என்னவள் என்றொரு சின்னவள் வந்திட
என்வாழ்வு பங்கு கொண்டேன்
என்நலம் தன்னலம் இருவரும் கொண்டிட
எண்ணிலே மூவர் கண்டேன்

என்னது என்னது இன்பங்கள் கோடியாம்
என்றுளம் ஆவல் கொண்டேன்
என்மனம் என்னது எண்ணுவ தாற்றியே
என்புடல் கூசி நின்றேன்
என்னவோ ஆகியும் என்னமோ கூறியும்
என்மதி கெட்டலைந்தேன்
என்மன வானிலே என்மதி தேய்ந்திட
ஏனோ இருளில் நின்றேன்

என்னதான் வாழ்ந்தனன் இத்தனைகாலமும்
இன்பமாய் வாழ்ந்திருந்தும்
என்னதாய்ச் செய்தனன் என்னொரு பிள்ளை! ஆ..
இவனென்ற சொல்லுங் கேட்டேன்
என்விதி இங்கிவன் என்னுடன் சேர்ந்தனன்
என்பதும் கண்டிருந்தேன்
என்னருள்தேவிநீ என்னுடை வாழ்வெனும்
இதைநீயும் ஏன் படைத்தாய்?

seguwera
11-09-2011, 12:30 PM
என்னவள் என்றொரு சின்னவள் வந்திட
என்வாழ்வு பங்கு கொண்டேன்
என்நலம் தன்னலம் இருவரும் கொண்டிட
எண்ணிலே மூவர் கண்டேன்

'என்' னில் தொடங்கிய அத்தனை வரிகளும் அருமை நண்பரே

கிரிகாசன்
12-09-2011, 07:44 AM
(காதல் கவி என்ற இழையில் வேறுகவிதைகள் போட்டுவிட்டேன் அதனால் இப்போது முன்னர் எழுதிய காதல்கவிதை ஒன்றைச் சேர்த்துக் கொண்டு இங்கு காதல் கவிமட்டுமே தொடரலாமென நினைக்கிறேன்)


இயற்கையும் நாணும் இவளால்

மனவானி லொருநாளில் நிலவொன்று அழகோடு
எனதாசை உளம்மீது வலம் வந்ததே
கனவோடு மனம்சேர்ந்து களித்தேங்கும்நிலையாகி
தினமேங்கும் இவள்கொண்ட எழில் கொஞ்சவே

வளமான இளமேனி வளைந்தாடும்நிலைகண்டு
குளமான தலைதன்னை குறைசொல்லுமே
பழமான துண்ணாமல் பரிதாபம் கிளியொன்று
இதழென்னும் கனிகண்டு இருந்தேங்குமே

நுழைகின்ற மனதோடு நுகரின்ப மணம்கொள்ள
விழைகின்ற காற்றோடி உனைநாடுமே
வளைகின்ற இடைமீது வந்தாடி அதுஒன்றும்
இலையென்ற நிலைகண்டு பயந்தோடுமே

கனிவாழைஉடல்கண்டு கருமந்தி பழம்கொய்ய
நுனி சோலைமரம்தாவி கிளைதூங்குமே
தனிவாழை இதுவல்ல தடுமாறி இதுவென்ன
கனிநூறு பலதென்று மனம்நாணுமே

பொழுதோ ஓரிரவாகிப் பொன்னிலா வந்ததென்
றிவள்வதன எழில் கண்டு இருள் கூட்டுமே
களவே தம் தொழிலாக கைகொண்டசிலபேரும்
இவள்கோவிற் சிலையென்று விலைசொல்வரே

வளைகின்ற அடிவானில் விழுகின்ற கதிராலே
களைகொண்டு கீழ்வானம் சிவந் தாகுமே
இவள்நாண இருகன்னம் எழுகிற செவ்வண்ணம்
எழில்காண மனம் கோணி முகில் ஓடுமே

குளநீரில் இவள்நீந்த கயல்மீனும்விழிகண்டு
வலைபோட்டுப் பிடித்தாள்வஞ் சகி என்னுமே
குழல்கூந்தல் அவிழ்ந்தாட குளிர்நீரில் முகில்வந்து
விழுந்தானே எனமீனின் குஞ்சோடுமே

கழல்பாத மணியோசை கால்துள்ளி சல்லென்ற
விளையாடு மொலி கேட்டு தேர்வந்ததே
அழகான திருமாலின் அயல் சேரும் திருமகளும்
அதில்வந்தாள் என ஏழை நிலம்வீழ்வனே

ஒயிலான உடல் தூங்கும் மணிமாலைஅணியாவும்
இவளாலே மெருகேறித் தரம் கண்டதே
மயில்போலும் நடை கண்டு மழைமேகம்வருமென்று
வயல்நின்ற எருதோ தன் வீடேகுமே

தரைமீது இவள்செல்ல தனியே ஓர்பூந்தோட்டம்
விரைந்தோடுதென வண்டு வெறி கொள்ளுதே
அரவிந்தன் அடிவானில் வருகின்றஒருவேளை
தெரிகின்ற ஒளிபோலும் இவள்கூடிலே

கீதம்
12-09-2011, 08:22 AM
மெட்டமைத்துப் பாடினால் சுகமாய்த் தாலாட்டும் வரிகள். காதலி பற்றிய வர்ணனை வெகு அழகு. அதிலும் கள்வர் விலைபேசும் பொற்சிலை என்றது ரசிக்கவைத்து முறுவலுண்டாக்குகிறது. பாராட்டுக்கள். தொடர்ந்து பொழியட்டும் கவிச்சாரல்.

கிரிகாசன்
15-09-2011, 05:18 AM
மாலைவெயில் மஞ்சளிடும் மதுமலரும் வண்டுறங்கும்
மாமன் உந்தன்நெஞ்சி லெந்தன் மனமுறங்காதோ
சோலையிலே கிளியுறங்கும் சொல்லுங் குயில் தானுறங்கும்
சுந்தரமென் கூந்தல்மணம் கண்டுறங்காயோ
ஓலையிலே காற்றுவந்து ஓசையிடப் பாட்டிசைக்கும்
ஊமையிவள் பாடுங்குரல் உனையழைக்காதோ
காலையிலே பூமலரும் காற்றில்மணி யோசைவரும்
கற்பனையில் நீயிருப்பாய் கண்முன் எழாயோ

நீலவிழி மையெழுதி நினவிலுந்தன் மையலெழுதி
நீந்துகிறேன் கனவில் என்றும் நேரில் வாராயோ
வேலெறியும் விழியிலிவள் வேதனைதான் மீந்ததென்று
விரகமிடும் பனிவிலக வெம்மை தாராயோ
கோலமுகம் விண்ணுலவும் குளிர்நிலவின் விம்பமென்றார்
கூடுமொரு வான்முகிலாய் கொள்ள வாராயோ
பாலமுதம் போலவெனப் பனிமலரும் நீயெனவே
பார்த்துஒரு சேதிசொல்லப் பக்கம் வாராயோ

ஆடிவரும்தென்றலெனில் ஆக்கும்துயர் கொஞ்சமல்ல
அத்தனையும் நீக்கியுளம் அன்புகொள்ளாதோ
கூடிவரும் பூவின்மணம் கொல்லுதய்யா உன்நினைவில்
கொண்டதுவோர் துன்பம்தனைக் கிள்ள வாராயோ
கோடியெனத் தன்னருகில் கொள்ளையெழிற் தாரகைகள்
கொட்டிகிடந்தென்ன மதி கூடிவிடாதே
ஓடிஒரு சோடியினை உள்ளமதிற் காணும்வரை
ஒவ்வொருநாள் தேய்ந்துமது ஒய்ந்துவிடாதே

பூவில்மது உண்ணுவண்டு போய்விடவே துன்பம்வரும்
போதிலொரு சோலைமலர் வாடிடுமாமே
ஆவியிலே நீகலந்து ஆகிவிட்டோம் ஒன்றெனவே
ஆருயிரே நீஇலையேல் அழிந்திடுவேனே
கோவிலிலே பார்த்த சிலை குறுநடையில் போகுதடா
குமரியிவள் பேரழகு என்றதும் ஊரே
ஆவியிலே பேய்கலந்து ஆனதுவோ கோலமென்ன
ஆகஇவள் நோய்பிடித்தாள் என்றதுமின்றே!

நூல்திரிந்து போனதென நெய்விழியாள் ஆனதென்ன
நூலெடுத்து ஆடைநெய்ய நேர்ந்திடும் வாழ்வே
கால் இருந்து உச்சிவரை காதலெண்ணி நோயெடுத்தேன்
கன்னியென்னைக் காத்துவிட கைதொடுநீயே
வேல்விழியில் நீரெடுத்து விழிகலங்கி பார்வைகெட்டு
வேதனையில் பாடுகிறேன் விடிவு தாராயோ
வால்முளைத்த வெள்ளியொன்று வானிறங்கக் கனவுகண்டேன்
வாழ்வு இவள் முடியமுன்னே வந்துவிடாயோ