PDA

View Full Version : கரையோர விருட்சம்

கீதம்
01-09-2011, 10:56 AM
தூக்கமும் விழிப்புமற்ற அரைமயக்கத்தின் கிறக்கத்தில்
முனகியபடியே மெல்லத் தவழும் என்னைச்
செல்லமாய்த் தழுவி நிற்கும்
கரையோரப் பெருவிருட்சமொன்றின்
கவிழ்ந்த கொப்புகளை முத்தமிட்டுக்கொண்டே
அம்மரத்தின் வேர்களை வருடி நடக்கிறேன்.

ஒரு நிலையில் நிற்க எனக்கு சம்மதமில்லை.
நெளிந்தும், வளைந்தும், ஊர்ந்தும்
அதன் கைகளுக்கு அகப்படாமல்
விளையாட்டாய் நழுவிக்கொண்டே இருக்கிறேன்.

அம்மரத்தின் மீதான உரிமைப்போர்
எனக்கும் பறவைகளுக்கும் எப்போதும் உண்டு.
என்னால் வளர்ந்ததால் எனக்கே சொந்தமென்று நானும்,
எச்சத்தால் விளைந்ததால் தமக்கே சொந்தமென்று பறவைகளும்
பேசும் நியாயத்துக்கு மரம் பதிலளித்ததே இல்லை.
பறவைகளின் கீச்சிடல்களுக்கும்,
என் கிச்சுகிச்சு மூட்டலுக்கும் ஒத்திசைவாய்
நாற்புறமும் தலையசைத்து ரசித்துக்கொண்டிருந்தது.

வேர்களை வருடி வருடி அதன் பாதங்களை
பலமிழக்கச் செய்துவிட்டதைப்பற்றி
மரம் அலட்டிக்கொள்ளவில்லை.
பறவைகள் அதன் தலையிலமர்ந்து
தாங்கள் கண்டறிந்த ரகசியத்தைப் பதறிப் பதறி
அதன் காதுகளில் சத்தமாக ஓதிக்கொண்டிருந்தன.
மரம் அப்போதும் கண்மூடி,
பெரும் ரசனையில் ஆழ்ந்திருந்தது.

அரவங்கள் அடங்கியிருந்த ஒரு உச்சிப்பொழுதில்
தன் இறுதிப் பிடிப்பையும் இழந்துவிட்டப் பெருமரத்தை
சத்தமின்றிப் பெயர்த்தெடுத்துச் சென்று
பொத்தென்று பேரருவியில் வீழ்த்தினேன்.

அந்தியில் அடையவந்தப் பறவைகள்
அலறித்துடித்தபடியே என்னிடம் கேட்கின்றன,
காணாமற்போன மரத்தைப் பற்றி!

அங்க அடையாளங்கள் சொல்லுங்கள்,
எங்கேணும் கண்டால் சொல்கிறேன்
என்றேன் நிதானமாய்!!

Ravee
01-09-2011, 01:53 PM
அம்மரத்தின் மீதான உரிமைப்போர்
எனக்கும் பறவைகளுக்கும் எப்போதும் உண்டு.

அந்தியில் அடையவந்தப் பறவைகள்
அலறித்துடித்தபடியே என்னிடம் கேட்கின்றன,
காணாமற்போன மரத்தைப் பற்றி!
அங்க அடையாளங்கள் சொல்லுங்கள்,
எங்கேணும் கண்டால் சொல்கிறேன்
என்றேன் நிதானமாய்!!

என்ன ஒரு வில்லத்தனம் ..... :eek:

M.Jagadeesan
01-09-2011, 02:32 PM
தினமும் மரத்தில் அண்டுகின்ற பறவைகளுக்கு அந்த மரத்தைப் பற்றி நன்கு தெரியும். அப்படியிருக்கும்போது, பறவைகள், ஆற்றினிடம் அங்க அடையாளங்களைக் கேட்பது பொருத்தமாகத் தெரியவில்லையே! கவிதையின் கருவும், எழுதிய விதமும் நன்று!

கீதம்
01-09-2011, 10:59 PM
என்ன ஒரு வில்லத்தனம் ..... :eek:

:icon_b::icon_b::icon_b:

தினமும் மரத்தில் அண்டுகின்ற பறவைகளுக்கு அந்த மரத்தைப் பற்றி நன்கு தெரியும். அப்படியிருக்கும்போது, பறவைகள், ஆற்றினிடம் அங்க அடையாளங்களைக் கேட்பது பொருத்தமாகத் தெரியவில்லையே! கவிதையின் கருவும், எழுதிய விதமும் நன்று!

பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா. அங்க அடையாளங்களைக் கேட்பவை பறவைகள் அல்ல, ஆறு.

தான் பெயர்த்தெடுத்ததை மறைத்து அப்படியொரு மரம் இருந்ததைப் பற்றியே தனக்குத் தெரியாது என்பது போன்ற பேச்சு அது. பறவைகளின் மனத்தைப் புண்படுத்துவதே அதன் நோக்கமாம்.

கடைசி பத்தியைப் பிரித்து எழுதாததால் உங்கள் புரிதலில் சிறு தடங்கல் நேரிட்டிருக்கலாம். இப்போது பிரித்திருக்கிறேன்.

Nivas.T
02-09-2011, 05:54 AM
யார் பறவை?

யார் நதி?

யார் மரம்?

எது அடையலாம் ?

ஏதோ ஒன்றை உணர்த்துவதுபோல் இருக்கிறது அது என்ன என்றுதான் சரியாக பிடிபடவில்லை

கவிதை மிக அருமை

Ravee
02-09-2011, 06:06 AM
யார் பறவை?

யார் நதி?

யார் மரம்?

எது அடையலாம் ?

ஏதோ ஒன்றை உணர்த்துவதுபோல் இருக்கிறது அது என்ன என்றுதான் சரியாக பிடிபடவில்லை

கவிதை மிக அருமை

அது கவிஞரின் தனிப்பட்ட விஷயம் அதெல்லாம் இங்கே கேக்கப்படாது. எல்லோருக்கும் சொல்லுறதுன்னா வெளிப்படையா போட்டு உடைச்சு இருக்க மாட்டாங்களா.... :icon_ush:

seguwera
02-09-2011, 02:11 PM
மனித பேச்சுக்கள் கேட்டு அலுத்துப்போன நேரத்தில் இந்த இயற்கையின் பேச்சு இனிமையே.
மூலம் பறவையின் எச்சம் என்றாலும்
நதியின் நீர் அதை தழுவாவிடின் ஏதங்கு விருட்சம். வளர்த்ததும் அவளே வீழ்த்தியவளும் அவளே.

கீதம்
08-09-2011, 11:39 PM
யார் பறவை?

யார் நதி?

யார் மரம்?

எது அடையலாம் ?

ஏதோ ஒன்றை உணர்த்துவதுபோல் இருக்கிறது அது என்ன என்றுதான் சரியாக பிடிபடவில்லை

கவிதை மிக அருமை

அது கவிஞரின் தனிப்பட்ட விஷயம் அதெல்லாம் இங்கே கேக்கப்படாது. எல்லோருக்கும் சொல்லுறதுன்னா வெளிப்படையா போட்டு உடைச்சு இருக்க மாட்டாங்களா.... :icon_ush:

இதில் தனிப்பட்ட விஷயம் எதுவுமில்லை தம்பிகளா! தினம் தினம் நம் வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம், எத்தனையோ நிகழ்வுகள் பற்றிக் கேள்விப்படுகிறோம், எத்தனையோ சூழல்களின் சாட்சியாய் வாழ்கிறோம்! எல்லாவற்றிலுமிருந்து எதையோ கற்றுக்கொள்கிறோம். கற்றுக்கொண்டவைகளை கவிதையாக்குகிறேன். நீங்களும் இதுபோன்ற உணர்வுகளைக் கடந்துவந்திருக்கக்கூடும். நான் முந்திக்கொண்டிருக்கிறேன். அவ்வளவே.

நிவாஸ், அடைதல் என்றால் பெறுதல் தவிர வேறொரு பொருளும் உண்டு. பறவைகள் மாலையில் குறிப்பிட்ட மரத்துக்குத் திரும்பி ஒன்றாய் இரவில் உறையும். அந்தச் செயலை 'அடைதல்' என்பார்கள். அதைத்தான் அந்தியில் அடையவந்த பறவைகள் என்று சொல்லியிருக்கிறேன்.

மனித பேச்சுக்கள் கேட்டு அலுத்துப்போன நேரத்தில் இந்த இயற்கையின் பேச்சு இனிமையே.
மூலம் பறவையின் எச்சம் என்றாலும்
நதியின் நீர் அதை தழுவாவிடின் ஏதங்கு விருட்சம். வளர்த்ததும் அவளே வீழ்த்தியவளும் அவளே.

உங்கள் தரப்பு நியாயமும் நன்றாய் உள்ளது. :icon_b: அவரவர்க்கு அவரவர் நியாயம். பின்னூட்டத்துக்கு நன்றி செகுவாரா.

meera
09-09-2011, 06:47 AM
அம்மரத்தின் மீதான உரிமைப்போர்
எனக்கும் பறவைகளுக்கும் எப்போதும் உண்டு.
என்னால் வளர்ந்ததால் எனக்கே சொந்தமென்று நானும்,
எச்சத்தால் விளைந்ததால் தமக்கே சொந்தமென்று பறவைகளும்
பேசும் நியாயத்துக்கு மரம் பதிலளித்ததே இல்லை.

யுத்தம் இல்லா உலகம் இல்லை. உரிமை போராட்டம் எல்லோருக்கும் உண்டு தான். அது ஒன்று தான். இதில் மனிதன் என்ன? மற்றவை என்ன?

வித்தியாசமான பார்வை. அழகான வரிகள். ஆழமான கருத்து கீதம். :icon_b::icon_b:

கௌதமன்
09-09-2011, 03:39 PM
நான்கைந்து தடவை படித்து விட்டேன். எப்போதும் போல முரணாக ஏதாவது எழுதலாமென்று பலமுறை யோசித்தும் பார்த்து விட்டேன். எத்தனை முறை எழுத முயன்றாலும் ‘ ஆகா பிரமாதம்’ எனபதைத் தவிர வேறு எதையும் எழுதத் தோன்றவில்லை. இது போல் உங்களின் இன்னொரு கவிதையும் என் முரண் முயற்சியில் ’முடிவிலி’யாய் நீண்டு கொண்டே இருக்கிறது. இன்னும் ரெண்டு மூணு வருடத்தில் ஏதாவது தோணாமலா இருக்கும். அப்பப் பாத்துக்கிறேன்....:confused:

கீதம்
11-09-2011, 12:40 AM
யுத்தம் இல்லா உலகம் இல்லை. உரிமை போராட்டம் எல்லோருக்கும் உண்டு தான். அது ஒன்று தான். இதில் மனிதன் என்ன? மற்றவை என்ன?

வித்தியாசமான பார்வை. அழகான வரிகள். ஆழமான கருத்து கீதம். :icon_b::icon_b:

சில சமயங்களில் உரிமைப்போராட்டங்கள் தீவிரப்பட்டு, கொண்டாடுவதைக் காட்டிலும் அழிப்பதில் அதீத உரிமையை நிலைநாட்டிக்கொள்கின்றனவே. பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி மீரா.

கீதம்
11-09-2011, 12:46 AM
நான்கைந்து தடவை படித்து விட்டேன். எப்போதும் போல முரணாக ஏதாவது எழுதலாமென்று பலமுறை யோசித்தும் பார்த்து விட்டேன். எத்தனை முறை எழுத முயன்றாலும் ‘ ஆகா பிரமாதம்’ எனபதைத் தவிர வேறு எதையும் எழுதத் தோன்றவில்லை. இது போல் உங்களின் இன்னொரு கவிதையும் என் முரண் முயற்சியில் ’முடிவிலி’யாய் நீண்டு கொண்டே இருக்கிறது. இன்னும் ரெண்டு மூணு வருடத்தில் ஏதாவது தோணாமலா இருக்கும். அப்பப் பாத்துக்கிறேன்....:confused:

முரண்பட்டவனிடம் முரணும் முரண்பட்டு நிற்பதன் காரணம் என்னவோ?

உறக்கத்திலும் தோன்றலாம் சில முரண்கள்! எழுந்தவுடன் மறந்தும்போகலாம்.

எதற்கும் ஏடும் எழுதுகோலும் தலைமாட்டுப் பக்கம் தயாராய் இருக்கட்டும். :icon_b:

ஜானகி
11-09-2011, 01:53 AM
வித்துக்கு உயிர் கொடுத்து உதவிய நீரலைகளே, அதன் வேர் பிடுங்கியதா....ஏன் ? புரியவில்லை...! வாழ்விலும் இன்ப துன்ப அலைகள் அலைக்கழிக்கும்போது மரமாக நிற்கவேண்டும் என உணர்த்துகிறதோ...? அந்தப் பக்குவம் வந்துவிட்டால்....எல்லாம் ஆனந்தமே...!

கீதம்
13-09-2011, 03:50 AM

பின்னூட்டத்துக்கு நன்றி ஜானகி அம்மா. எப்போதுமே உங்கள் பின்னூட்டங்கள் இதுவரை அலசாத ஒரு கோணத்தை பார்வைக்கு அளித்துப் பரவசப்படுத்துகின்றன. மிகவும் நன்றி.:icon_b:

கலையரசி
13-09-2011, 05:41 AM
ஓடுகின்ற நதியோரம் எவ்வளவு தான் பெரிய விருட்சமாகயிருந்தாலும் நீரலைகள் கொஞ்சங்கொஞ்சமாக அதன் வேர்களை அரித்து என்றாவது ஒரு நாள் வீழ்த்திவிடவே செய்யும். எனவே விருட்சமாக நிற்பதை விடவும் தண்ணீர் ஓட்டத்திற்கேற்ப வளைந்து கொடுக்கும் நாணலாக இருத்தல் நல்லது.

எனவே நாம் என்றும் வீழ்ந்துவிடாமல் இருக்க வேண்டுமானால் நாணலாக இருக்க வேண்டும் என்று கவிதை உணர்த்துகிறதோ! கவிதை மிக அருமை கீதம்!

கீதம்
24-11-2011, 11:29 PM

அர்த்தமுள்ளதும் அசத்தலுமானப் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி அக்கா.

கலாசுரன்
26-11-2011, 05:20 AM
:) கவிதை அருமை ...!!

பூமகள்
27-11-2011, 03:06 AM
என்ன ஒரு வில்லத்தனம் ..... :eek:

அதானே.. என்னே ஒரு வில்லத்தனம்... :rolleyes:

கீதம்
30-11-2011, 11:37 PM
அதானே.. என்னே ஒரு வில்லத்தனம்... :rolleyes:

என்னே ஒரு விமர்சனம்!:)

கீதம்
30-11-2011, 11:37 PM
:) கவிதை அருமை ...!!

நன்றி கலாசுரன்.