PDA

View Full Version : கொலைக்களத்திலிருந்து தப்பியோடிய கோமாதாகீதம்
30-08-2011, 01:31 AM
விந்தை நிகழ்வுகளும், விசித்திரத் தகவல்களும்

நாளேடுகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையச் செய்திகள் இன்னும் பல ஊடகங்கள் வாயிலாக தினந்தோறும் பல செய்திகள் நம்மை வந்தடைந்துகொண்டேதான் இருக்கின்றன. பெரும்பாலும் வன்முறை, கொலை, கொள்ளை போன்ற சமூகக் குற்றங்களும், அரசியல் கூத்துகள், அக்கிரமங்கள் போன்றவையும், பிரபலங்களின் அந்தரங்கம் பற்றிய அத்தியாவசியத் (?) தகவல்களும் அவற்றில் அடங்கும். பாராட்டுக்கும், பெருமைக்கும் உரிய நல்ல செய்திகள் சில, முந்தைய செய்திகளின் ஒளிவெள்ளத்தில் காணாமலோ, கண்டுகொள்ளப்படாமலோ போய்விடும். இவை இரண்டிலும் சேராமல் செய்திகளில் அச்சேறி மனங்களில் அச்சேறாமல் போன சில செய்திகளும் உண்டு. அவை சமயத்தில் நமக்கு வியப்பை அளிக்கக்கூடியவையாக இருக்கும்பட்சத்தில் அவற்றையும் அவை தொடர்பாக நமக்குத் தோன்றுவதையும் அடுத்தவரிடம் பகிரத் தோன்றும். எனக்கும் தோன்றியது. அதன் விளைவே இத்திரியின் உதயம்.

முன்னுரையெல்லாம் போதும், விஷயத்துக்கு வான்னு சொல்றீங்களா? வந்துட்டேன்.

முதல் செய்தி: குப்பையில் எறியப்பட்ட தங்கநகைகள். (http://au.news.yahoo.com/queensland/a/-/latest/10142251/qld-mans-treasure-is-now-anyones-trash/)

யாராவது தங்கநகைகளைக் குப்பையில் எறிவாங்களான்னு நீங்க கேட்கிறது எனக்குப் புரியுது. ஆனால் தங்கநகைகளை யாராவது குப்பை போடற பையில் (குப்பைகளுக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட, பெரும்பாலும் கருப்பு நிறத்தில் இருக்கும் பாலிதீன் உறைகள்) வைப்பாங்களா? அதுவும் வீடு மாத்தும் சமயம்?

வீடு மாத்துற அந்த இறுதிநேரம் எப்படிப்பட்ட பரபரப்பு இருக்கும்னு வாடகை வீடுகளில் வசிக்கிறவங்களுக்கு நல்லாவே தெரிந்திருக்கும். அப்படியொரு பரபரப்பில்தான் இருந்திருக்கார் ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்தைச் சேர்ந்த ஜெஃப்.

அன்று குப்பை எடுக்கும் நாள்! வாரத்தில் ஒருமுறை மட்டுமே வரும் அந்தப் பிரமாண்ட லாரிக்காக அந்தந்த வீட்டு வாசலில், முதல் நாளிலிருந்தே குப்பைத்தொட்டிகள் தவமிருந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் மூடியுடனான சக்கரம் வைத்த இரு பெரியக் குப்பைத்தொட்டிகள் (மக்கும் பொருட்களுக்கு ஒன்றும் மறுசுழற்சிக்கான பொருட்களுக்கு ஒன்றும்) உண்டு. குப்பை எடுக்கும் அந்தநாளில் குப்பைத் தொட்டியை வாசலில் வைத்திராவிட்டால் அடுத்தவாரம் வரை குப்பைத் தொட்டி நிரம்பி வழிந்து நாற்றமெடுக்க ஆரம்பித்துவிடும்.

வீடு காலி செய்யவேண்டியிருப்பதால் குப்பைகள் அதிகம் சேர்ந்துவிட, அப்பா பிள்ளைகளைக் கேட்டார், "பசங்களா.... குப்பையில போடவேண்டிய கவரையெல்லாம் கொண்டுவந்து கொடுங்க." பிள்ளைகள் சொன்னவேலையை சரியாகவே செய்திருக்காங்க. இவராவது அவற்றை இன்னுமொருமுறை சோதித்திருக்கலாம். போட்டுவிட்டார். குப்பைலாரி வந்து எல்லாவிட்டுக் குப்பைகளோடு இந்தக்குப்பைகளையும் அள்ளிக்கொண்டு போய்விட்டது. இந்த லாரிகளில் ஒரு வசதி. அதாவது குப்பைகளை உடனுக்குடன் உள்ளேயே கம்ப்ரெஸ் செய்து காலியிடத்தை அதிகமாக உருவாக்கிக்கொள்ளும். அப்படிக் கம்ப்ரஸ் செய்துமுடித்தப்பின் அதில் பொருட்களைத் தேடுவதென்பது, வைக்கோற்போரில் ஊசி தேடுவதை விடவும் கடினம்.

நகராட்சிக்கு மனு கொடுத்திருக்கிறாராம். உயரழுத்தம் கொடுக்கப்பட்டு ஒண்ணடி மண்ணடியாகிவிட்டக் குப்பைகளை மீண்டும் பிரித்துக் கண்டுபிடிப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமில்லை என்றாலும் நம்பிக்கையுடன் இருக்கிறார் ஜெஃப். மனைவியின் தங்க நகைகளும், வருங்கால சேமிப்பாய் இருந்த தங்கக்கட்டிகளுமாக அவற்றின் மதிப்பு ஐம்பதாயிரம் ஆஸ்திரேலிய டாலர்களாம். (இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 25 இலட்சம்) சென்றவாரம் தங்கள் 23வது திருமணநாளை சந்தோஷமாகக் கொண்டாடிய அவர்களுக்கு இப்படியொரு சோதனையும் வேதனையும். கல்யாணமான இத்தனை வருஷத்தில் அவங்க ரெண்டுபேரும் சண்டையே போட்டதில்லையாம். இந்த தடவையும் அப்படித்தானாம். ஆனாலும் என்ன? நண்பர்கள் இருக்காங்களே உசுப்பேத்திவிட! "என்னப்பா, பவுன் இன்னைக்கு என்ன விலை விக்குது தெரியுமா?"ன்னு கேட்கும்போதுதான் கண்மண் தெரியாத கோபம் வருதாம். எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றினால் வராதா பின்னே?

இதைப் படித்ததும் எனக்குத் தோன்றிய கேள்விகள் சில உங்களுக்கும் தோன்றியிருக்கக்கூடும். இத்தனை மதிப்பு மிக்கப் பொருட்களை இப்படியா அலட்சியமாக குப்பைக்கவரில் போட்டு வைத்திருப்பார்கள்? வீடு மாற்றும்போது விலைமதிப்புள்ள பொருட்களைத்தானே முதலில் பேக் செய்து பத்திரப்படுத்தவேண்டும்? நகை விஷயத்தில்ஆண்களை விடவும் பெண்கள் மிகவும் சிரத்தை எடுத்துக்கொள்வார்களே, இங்கு எப்படி அது இல்லாமல் போனது?

எனக்கொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் திருமணமாகி வந்தபின் சென்னையில் ஒரு வீட்டில் இரண்டு வருடங்கள் வசித்தோம். குடும்பம் பெருகவும் இன்னும் சற்றுப் பெரியவீடாய்ப் பார்த்துக் குடிபெயரும் நிலை ஏற்பட்டது. வீட்டைக் காலி செய்துகொடுக்கும்போது, சுத்தமாகக் கொடுத்தால் வீட்டு உரிமையாளர் மெச்சுவார் என்று நினைத்து, ஒரு குப்பை விடாமல் சுத்தம் செய்து பளிச்சென்று கொடுக்க, அவர் முகம் கருத்துவிட்டது.

"என்னம்மா நீ, வீட்டை இப்படித் துடைச்சுவச்சிட்டுப் போறே? எப்பவும் வீட்டைக் காலி செய்துட்டுப் போகும்போது குப்பையெல்லாம் அள்ளக்கூடாது, அப்படியேதான் விட்டுட்டுப் போகணும்" என்று எனக்கு அறிவுரை சொன்னார். ஆனாலும் எனக்கு மனம் ஒப்பவில்லை. அடுத்தடுத்த வீடுகளிலும் சுத்தம் செய்துவிட்டு, சிறிதளவு குப்பையை, தாள் போன்றவற்றைக் கிழித்து ஒரு மூலையில் போட்டுவிட்டு செல்வேன்.
காலி செய்யும் சமயம் மதிப்புள்ள பொருட்கள் எவையும் கவனக்குறைவால் குப்பையுடன் போய்விடக்கூடாது என்பதற்காக நம் பெரியவர்கள் செய்துவைத்த ஏற்பாடுதானோ இது?

அன்புரசிகன்
30-08-2011, 07:04 AM
நாங்கள் அலுவலகங்களில் ஒருவருடமாக இருந்து குப்பை கொட்டுவதை அவர் ஒரே இரவில் கொட்டியிருக்கார்... :D

கீதம்
30-08-2011, 11:39 PM
நாங்கள் அலுவலகங்களில் ஒருவருடமாக இருந்து குப்பை கொட்டுவதை அவர் ஒரே இரவில் கொட்டியிருக்கார்... :D

என்ன இருந்தாலும் அவரை நினைச்சா ரொம்பப் பாவமாத்தான் இருக்கு. இனி அவர் நகையின் கதி? கடலில் கரைச்ச பெருங்காயம்தான்.:icon_p:

கீதம்
30-08-2011, 11:42 PM
செய்தி 2.

முக்கால் நூற்றாண்டுக்குப் பின் நூலகம் வந்த புத்தகம். ( 9 ஜனவரி 2011)

( நன்றி: சங்கமம் இணையதளம், விக்கிபீடியா)

1934 இல் மெக்கி என்னும் சிறுவனுக்கு வயது 13. அந்த வயதில் கதைப்புத்தகங்களை விரும்பாத குழந்தைகள் யார்? அமெரிக்காவின் மிச்சிகன் நகரில் உள்ள மெளண்ட் கிளமெண்ட் பொது நூலகத்திலிருந்து அவன் எடுத்துச் சென்ற ஒரு கதைப்புத்தகம் அவனை வெகுவாக ஈர்த்தக் காரணத்தால் அதைத் திருப்பிக் கொடுக்கும் மனமில்லாமல் போய்விட்டது. நாளை நாளை என்று ஒத்திப்போடப்பட்டு ஒரு தருவாயில் அது அவனது சொத்தாகவே மாறிவிட்டது.

இப்போது அச்சிறுவனின் வயது 89. தன் பொக்கிஷங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த அவருக்கு இப்புத்தகத்தை இப்போதாவது நூலகத்திடம் ஒப்படைத்துவிடச் சொல்லி மனசாட்சி படுத்தியதாம். உடனே செயல்படுத்திவிட்டார். எப்படி?

இந்தப் புத்தகத்தை இத்தனை நாள் தான் வைத்திருந்ததற்காக ஒரு மன்னிப்புக் கடிதமொன்றை எழுதி இந்தப்புத்தகத்துடன் வைத்து நூலகத்துக்கு தபாலில் அனுப்பிவிட்டார். ஏன் நேரில் போகவில்லைங்கறீங்களா? அவருக்குத் தெரியுமே, இந்தப் புத்தகத்துக்கான அபராதம் கட்டவேண்டியிருந்தால் அவருடைய சொத்தையே அழித்தாலும் முடியாது என்பது!

ஆனால் நூலகம் என்ன சொல்லியிருக்கு தெரியுமா? "அவர் அபராதம் கட்டத் தேவையில்லை, அவருடைய இந்தக் கடிதத்தையும், அவர் அனுப்பிய புத்தகத்தையும் மக்கள் பார்வைக்கு வைக்கப்போறோம்" அப்படின்னு சொல்லி அந்தப் புத்தகத்தின் புதிய பிரதி ஒன்றையும் இலவசமா அவருக்கு அனுப்பியிருக்காங்களாம். எத்தனை வியப்பான செய்தி!

சரி,அப்படி திருப்பித் தரமுடியாதபடி அந்தப் புத்தகத்தில் அப்படி என்ன விசேஷம்? இருக்கிறது. ஒரு பாவப்பட்ட சிறுவனின் கதை அது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரபல பெண் எழுத்தாளர் மேரி லூயிஸ் எழுதிய ‘A Dog Of Flanders’ என்ற புத்தகம்தான் அது.

குழந்தையிலேயே அநாதையாக்கப்பட்ட ஒரு சிறுவன் அவனது வறிய தாத்தாவால் வளர்க்கப்படுகிறான். அவனுக்குத் துணை ஒரு நாய். அதுவும் அவனைப்போலவே ஒரு பாவப்பட்ட ஜீவன். இருவருக்குள்ளும் உண்டான நட்பும் அதனோடு இழையோடும் அவன் வாழ்வும் அவர்களின் துயரமுடிவுமே கதை! இந்தக் கதை 1975 வாக்கில் தொலைக்காட்சித் தொடராகவும் 1999 இல் திரைப்படமாகவும் வந்துள்ளது. வாய்ப்பு அமைந்தால் கட்டாயம் காணுங்கள். ஒரு கட்டத்திலாவது நம்மையறியாமல் கண்ணீர் வெளிப்பட்டுவிடும்.

மேரி லூயிஸ் எழுதிய பல புத்தகங்கள் குழந்தைகளுக்கானவை. அவர் இயல்பிலேயே வாயில்லாஜீவன்களின்பால் பிரியமுள்ளவராகவும் அவற்றின் காப்பாளராகவும் இருந்திருக்கிறார். ஒரு சமயத்தில் இப்படிக் காப்பாற்றப்பட்ட 30 நாய்கள் அவரால் வளர்க்கப்பட்டு வந்தனவாம். இப்படியொரு இளகிய மனம் படைத்தவர் மெக்கியின் இளகிய மனத்தை அவரது இளவயதில் ஈர்த்ததில் அதிசயம்தான் என்ன?

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? யாராவது நம்மிடமிருந்து இரவல் வாங்கிப் போன புத்தகங்களைத் திருப்பிக் கொடுக்கலைன்னா அதுக்காக வருத்தப்படக்கூடாது. அந்தப்புத்தகம் அவர்களை மிகவும் கவர்ந்த காரணத்தால்தான் திருப்பித் தரலைங்கறதைப் புரிஞ்சுகிட்டு என்னைக்காவது அவர்களுடைய மனசாட்சி வலியுறுத்தும்போது கட்டாயமாத் திருப்பித் தந்துவிடுவாங்கங்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கவேண்டும்.:)

Ravee
31-08-2011, 08:14 AM
அருமையான பகிர்வு அக்கா இப்போது நான் மேரி லூயிஸின் புத்தகங்களை தேட துவங்கி இருக்கிறேன் .... :)

பாரதி
31-08-2011, 09:23 AM
நிகழ்வுகளை உங்கள் கண்ணோட்டத்தில் பகிரும் விதம் நன்றாக உள்ளது. நன்றி. தொடருங்கள்.

M.Jagadeesan
31-08-2011, 12:32 PM
நெஞ்சை நெகிழவைத்த பகிர்வு! புத்தகங்கள் எப்பொழுதும் நம்மை ஏமாற்றாத நண்பர்கள். நன்றி கீதம்.

Nivas.T
31-08-2011, 12:44 PM
மிக அருமையான தகவல்கள்

பகிர்வுக்கு மிக்க நன்றீங்க

seguwera
31-08-2011, 01:31 PM
சகோதரியே, உங்கள் பதிவு நன்றாக இருந்தது.

இரவல் போன புத்தகங்கள் திருப்பி தராவிட்டாலும் பரவாயில்லை ஒருவரிடமே தங்கி இருப்பதில் என்ன பயன். குறைந்த பட்சம் ரெண்டு மூன்று பேரிடமாவது வாசிக்க நேர்ந்தால். நன்று. புத்தகம் திரும்ப வராவிட்டாலும் நம்மிடம் இருந்த புத்தகத்தை ஒரு நாலு பேர் படிக்கிறார்கள் என்ற மன திருப்தியாவது ஏற்படும்

நாஞ்சில் த.க.ஜெய்
31-08-2011, 05:10 PM
அக்கா தொடர்ந்து அளியுங்கள் இந்த வியப்பூட்டும் செய்திகளின் தொகுப்பை ...

கீதம்
01-09-2011, 04:14 AM
அருமையான பகிர்வு அக்கா இப்போது நான் மேரி லூயிஸின் புத்தகங்களை தேட துவங்கி இருக்கிறேன் .... :)

படிச்சிட்டு சொல்லுங்க ரவி. நான் இனிமேல்தான் தேடணும்.


நிகழ்வுகளை உங்கள் கண்ணோட்டத்தில் பகிரும் விதம் நன்றாக உள்ளது. நன்றி. தொடருங்கள்.

நன்றி பாரதி அவர்களே.


நெஞ்சை நெகிழவைத்த பகிர்வு! புத்தகங்கள் எப்பொழுதும் நம்மை ஏமாற்றாத நண்பர்கள். நன்றி கீதம்.

கருத்துரைக்கு நன்றி ஐயா.


மிக அருமையான தகவல்கள்

பகிர்வுக்கு மிக்க நன்றீங்க

நன்றி நிவாஸ்.

கீதம்
01-09-2011, 04:20 AM
சகோதரியே, உங்கள் பதிவு நன்றாக இருந்தது.

இரவல் போன புத்தகங்கள் திருப்பி தராவிட்டாலும் பரவாயில்லை ஒருவரிடமே தங்கி இருப்பதில் என்ன பயன். குறைந்த பட்சம் ரெண்டு மூன்று பேரிடமாவது வாசிக்க நேர்ந்தால். நன்று. புத்தகம் திரும்ப வராவிட்டாலும் நம்மிடம் இருந்த புத்தகத்தை ஒரு நாலு பேர் படிக்கிறார்கள் என்ற மன திருப்தியாவது ஏற்படும்

நன்றி சேகுவாரா. அந்தக் கடைசி பத்தி நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்டது. :)

நண்பருடைய புத்தக அலமாரியைப் பார்த்து அசந்துபோன ஒருவர், அவரிடம் ஒரு புத்தகத்தை இரவல் கேட்டாராம். அதற்கு அவர், '"'நான் யாருக்கும் புத்தகங்களை இரவல் கொடுப்பதில்லை, ஏனெனில் இரவல் வாங்கப்பட்டப் புத்தகங்களால் நிறைந்ததுதான் இந்த அலமாரி" என்று சொன்னாராம்.:) எங்கேயோ படித்தது. அதனால் புத்தகங்களை இரவல் கொடுக்கும் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்.


அக்கா தொடர்ந்து அளியுங்கள் இந்த வியப்பூட்டும் செய்திகளின் தொகுப்பை ...

ஊக்கமளிப்பதற்கு நன்றி ஜெய்.

கீதம்
01-09-2011, 04:24 AM
செய்தி 3.

53 ஆண்டுகளுக்குப் பின் வந்துசேர்ந்த காதல் கடிதம்

நன்றி: யாஹூ செய்திகள் (ஜூலை 16, 2011)

முக்கால் நூற்றாண்டுக்குப் பின் நூலகம் வந்த புத்தகத்தைப் பற்றிப் பார்த்தோம். நூலகத்தின் பத்திரிகைகளுக்கிடையில் சிக்கியிருந்த கடிதமொன்று அரை நூற்றாண்டுக்குப் பின் உரியவரைத் தேடிவந்தக் கதை தெரியுமா உங்களுக்கு? அதுவும் சாதாரணக் கடிதம் அல்ல, காதல் கடிதம்.

கிட்டத்தட்ட 53 வருடங்களுக்கு முன் காதலி வான்னி தன் காதலன் க்ளார்க்குக்கு (அதுதான் அவர் பெயர்) எழுதிய கடிதம் அது. கல்லூரி திரும்புமுன் ஏன் தன்னை தொலைபேசியில் அழைத்துப் பேசலைன்னு வருத்தப்பட்டு கேட்டு எழுதியிருக்காங்க. ஆனால் அந்தக் கடிதம் என்ன காரணத்தாலோ க்ளார்க்கை வந்தடையவே இல்லை.

அவரும் படிப்பை முடிச்சிட்டு, ஊருக்கு வந்து வான்னியைக் கல்யாணமும் செய்து, சேர்ந்து வாழ்ந்து, நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, பின் விவாகரத்தும் பெற்று விட்டாராம். அதோடு இல்லை, அவர் மதம் மாறி முகம்மது சித்திக்காகவும் ஆகிவிட்டாராம். இப்போது அவரைத் தேடி வந்தடைந்திருக்கிறது அக்கடிதம்.

நான்கு ஒரு சென்ட் அஞ்சல்தலைகளைத் தாங்கி 1958 ஆம் வருட முத்திரையை ஏற்று நிற்கும் அக்கடிதம் பென்சில்வேனியாவிலிருக்கும் கலிஃபோர்னியப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல் பெட்டிக்கு சிலவாரங்கள் முன்புதான் வந்து சேர்ந்திருக்கிறது. வியப்புக்குரிய கடிதம் பற்றி ஊடகங்கள் வாயிலாக அறிந்த அவருடைய அவருடைய நண்பர்களும் உறவினர்களும் தற்போது இண்டியானாபோலிஸில் வசிக்கும் 74 வயதான சித்திக்கிடம் இந்த விவரத்தைத் தெரிவித்துள்ளனர். அந்த செய்தியைக் கேட்ட சித்திக் சொல்லமுடியாத உணர்வுக்கலவையில் மிதக்கிறதா சொல்றாராம். ‘இதை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கடிதத்தின் மேல் அத்தனையொன்றும் ஆர்வமில்லை, இருந்தாலும் ஒரு குறுகுறுப்போடக் காத்திருக்கிறேன்’ என்று சொன்னாராம்.

எல்லாம் சரி, கடிதத்தை உரியவர் பிரித்துப் பார்க்குமுன்பே அது ஒரு காதல் கடிதம் என்று எப்படித் தெரியும்னு யோசிக்கிறீங்களா? அதிலிருக்கும் அஞ்சல் தலைகளை வைத்துதான். காதலர்களுக்கென்று பிரத்யேக அஞ்சல்தலைகளான்னு ஆச்சர்யப்படாதீங்க. எல்லோரும் உபயோகிக்கும் பொதுவான அஞ்சல்தலைகள்தாம் அவை. ஆனால் அவற்றைத் தலைகீழாய் ஒட்டினால் அது காதலின் அடையாளமாம். (காதல் வந்தாலே தலைகால் புரியாதுன்னு இதை வைத்துதான் சொல்றாங்களோ? :icon_ush:)

தலைகீழ் மட்டுமில்லை, அஞ்சல் தலையின் ஒவ்வொரு நிலைக்கும் ஒரு பொருள் உண்டாம். சொல்லவா?

நேராக இருந்தால் - வியாபார விஷயம்.

தலைகீழாய் இருந்தால் - காதல், தனிமை, தாபம்

தலைப்பகுதி வலப்பக்கம் பார்த்தபடி கிடைமட்டமாக இருந்தால் - அன்பு முத்தங்கள்

தலைப்பகுதி இடப்புறம் பார்த்தபடி கிடைமட்டமாக இருந்தால் - நான் உன்னை விட்டு நீங்கவே மாட்டேன்

மூலைவிட்டத்தை முன்னிறுத்தி அஞ்சல் தலையின் மேற்பகுதி வலப்பக்கம் பார்த்திருந்தால் - என்னைத் திருமணம் செய்துகொள்வாயா?

அதற்கு எதிர்திசையில் அதாவது தலை இடப்பக்கம் பார்த்தபடி இருந்தால் - உன்னை மணப்பது உறுதி

பாருங்க, அந்தநாளிலேயே அமெரிக்கக் காதலர்கள் அஞ்சல்தலைகளை ஒட்டுவதிலேயே சங்கேத மொழியை உருவாக்கிக் காதலித்திருக்காங்க.

என்ன தம்பிகளா, எங்க கிளம்பிட்டீங்க? கடிதம் எழுதத்தானே? இந்த முறையில் தபால் தலைகளை ஒட்டுமுன் ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வச்சிக்கணும். யாருக்கு எழுதறீங்களோ அவங்களுக்கும் இந்த சங்கேத மொழி புரிஞ்சிருக்கணும். இல்லைன்னா.... முதலுக்கே மோசமாகிடும். (ஆமா, ஒரு ஸ்டாம்ப் கூட ஒழுங்கா ஒட்டத்தெரியல, இதையெல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டு....):D

இன்னும் ஒரு விஷயம், இந்திய அஞ்சல்துறை இம்மாதிரிக் கோணல்மாணலா அஞ்சல்தலைகள் ஒட்டப்பட்டக் கடிதங்களை நிராகரிச்சிட்டா, அப்புறம் என்னைத் திட்டக்கூடாது. சரியா?

காதலுக்காக அஞ்சல் தலைகள் பற்றிப் பார்த்தோம். அஞ்சல் தலைகளைக் காதலிக்கிறவங்களைப் பற்றித் தெரியுமா? அஞ்சல் தலை சேமிப்பில் ஈடுபடுகிறவங்களோடு பேசிப்பாருங்க, புரியும். அஞ்சல்தலைகள் சேகரிப்பிலும், பன்னாட்டு நாணயங்கள் சேகரிப்பிலும் எனக்கும் தீராத ஆர்வம் உண்டு. கடந்த இருபத்தைந்து வருடங்களாச் சேகரிக்கிறேன். மும்முரமா இல்லைன்னாலும், அவ்வப்போது கிடைப்பதை. நல்ல உற்சாகமான பொழுதுபோக்கு அது. :icon_b:

Ravee
01-09-2011, 10:46 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21823

அட என் இந்த கவிதையை படித்து பாருங்கள் ... இது எல்லாம் நாங்க ரெண்டு வருஷம் முன்னாலேயே பீல் பண்ணிட்டோம்.....:lachen001: :D :lachen001:

seguwera
01-09-2011, 02:35 PM
53 வருடம் கழித்து ஒரு காதல் கடிதம் கிடைத்தது என்று கேட்க்கும்போது வந்த உற்ச்சாகம். (வான்னி- கிளெர்க் கடிதம் கிடைக்கும் முன்னரே) விவாகரத்து பெற்றுவிட்டனர் என்ற பொது மறைந்து விட்டது.

அப்புறம் எப்படியெல்லாம் யோசிச்சிருக்காங்க தபால் தலைய வச்சி எனும்போது ஆச்சர்யமாக உள்ளது

காலதாமதத்திற்கும் நம் தபால் துறைக்கும் என்றுமே காதல் உண்டு. உடம்பு சரியில்லாததர்க்கு கடிதம் எழுதினா ஆள் போய் சேர்ந்து கருமாதிக்குதான் கடிதம் கையில் கிடைக்கும் நல்லவேளை இந்த தலைமுறைக்கு
மின்னஞ்சல் குறுந்தகவல் என்று வந்ததிலிருந்து தபால் துறைக்கே வேலை குறைந்து விட்டது இன்று. இதுல என்ன ஒரு வரவேற்க வேண்டிய விஷயம் என்றால் மின்னஞ்சல் குறுந்தகவல் சம்பந்தப்பட்டோருக்கே நேராக கிடைக்கும் கடிதம் மாதிரி அப்பா கையிலோ அண்ணன் கையிலோ கிடைக்க வாய்ப்பில்லை

கீதம்
01-09-2011, 11:17 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21823

அட என் இந்த கவிதையை படித்து பாருங்கள் ... இது எல்லாம் நாங்க ரெண்டு வருஷம் முன்னாலேயே பீல் பண்ணிட்டோம்.....:lachen001: :D :lachen001:

அவளுக்கு எழுதிய கடிதத்தைப் படித்தேன் ரவி. ஒரு வருடத் தாமதக் கடிதம் பற்றி தக்ஸ் எழுதிய கதையும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25374)நினைவுக்கு வருகிறது. தாமதமாய் வந்து, வாழ்வைக் கெடுப்பதை விடவும் வராமலே இருந்திருக்கலாம் என்று அப்போது சபிக்கத் தோன்றுமோ? :confused:


53 வருடம் கழித்து ஒரு காதல் கடிதம் கிடைத்தது என்று கேட்க்கும்போது வந்த உற்ச்சாகம். (வான்னி- கிளெர்க் கடிதம் கிடைக்கும் முன்னரே) விவாகரத்து பெற்றுவிட்டனர் என்ற பொது மறைந்து விட்டது.

அப்புறம் எப்படியெல்லாம் யோசிச்சிருக்காங்க தபால் தலைய வச்சி எனும்போது ஆச்சர்யமாக உள்ளது

காலதாமதத்திற்கும் நம் தபால் துறைக்கும் என்றுமே காதல் உண்டு. உடம்பு சரியில்லாததர்க்கு கடிதம் எழுதினா ஆள் போய் சேர்ந்து கருமாதிக்குதான் கடிதம் கையில் கிடைக்கும் நல்லவேளை இந்த தலைமுறைக்கு
மின்னஞ்சல் குறுந்தகவல் என்று வந்ததிலிருந்து தபால் துறைக்கே வேலை குறைந்து விட்டது இன்று. இதுல என்ன ஒரு வரவேற்க வேண்டிய விஷயம் என்றால் மின்னஞ்சல் குறுந்தகவல் சம்பந்தப்பட்டோருக்கே நேராக கிடைக்கும் கடிதம் மாதிரி அப்பா கையிலோ அண்ணன் கையிலோ கிடைக்க வாய்ப்பில்லை

குறுஞ்செய்திகளின் வசதி கேட்டு சிலிர்த்துப்போனேன். :) உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி சேகுவேரா.

இந்தக் கடிதம் வான்னி - க்ளார்க் பிரிய நினைத்த பொழுதில் வந்திருந்தால் ஒருவேளை அவர்களைத் தொடர்ந்து இணைந்து வாழச் செய்திருக்குமோ என்று ஒருபக்கம் எண்ணத் தோன்றினாலும், கால ஓட்டத்தில் மனங்களில் உண்டாகும் மாற்றத்தை இந்த ஒரு கடிதம் மாற்றிவிடுமா என்றும் எண்ணத் தோன்றுகிறது.

Ravee
02-09-2011, 05:59 AM
காதலுக்காக அஞ்சல் தலைகள் பற்றிப் பார்த்தோம். அஞ்சல் தலைகளைக் காதலிக்கிறவங்களைப் பற்றித் தெரியுமா? அஞ்சல் தலை சேமிப்பில் ஈடுபடுகிறவங்களோடு பேசிப்பாருங்க, புரியும். அஞ்சல்தலைகள் சேகரிப்பிலும், பன்னாட்டு நாணயங்கள் சேகரிப்பிலும் எனக்கும் தீராத ஆர்வம் உண்டு. கடந்த இருபத்தைந்து வருடங்களாச் சேகரிக்கிறேன். மும்முரமா இல்லைன்னாலும், அவ்வப்போது கிடைப்பதை. நல்ல உற்சாகமான பொழுதுபோக்கு அது.ம்ம்ம் நான் அக்காவுக்கு ஏற்ற தம்பி என்றுதான் நினைக்கிறேன். எனக்கும் பள்ளிகாலத்தில் இருந்து அஞ்சல் தலைகள் மேல் ஒரு காதல் உண்டு ... மாநில அளவில் விருதும் பெற்று இருக்கிறேன். என் அண்ணன் தேசிய அளவில் பங்குகொள்ளும் தகுதி வாய்ந்ததவர். அவர் நாணயம் , கரன்சிகள், தபால்தலை, டெலிபோன் கார்ட், சங்கு சிப்பிகள், என சேமிப்பில் அவரே ஒரு அருங்காட்சியகம்.

கீதம்
02-09-2011, 11:12 AM
காதலுக்காக அஞ்சல் தலைகள் பற்றிப் பார்த்தோம். அஞ்சல் தலைகளைக் காதலிக்கிறவங்களைப் பற்றித் தெரியுமா? அஞ்சல் தலை சேமிப்பில் ஈடுபடுகிறவங்களோடு பேசிப்பாருங்க, புரியும். அஞ்சல்தலைகள் சேகரிப்பிலும், பன்னாட்டு நாணயங்கள் சேகரிப்பிலும் எனக்கும் தீராத ஆர்வம் உண்டு. கடந்த இருபத்தைந்து வருடங்களாச் சேகரிக்கிறேன். மும்முரமா இல்லைன்னாலும், அவ்வப்போது கிடைப்பதை. நல்ல உற்சாகமான பொழுதுபோக்கு அது.ம்ம்ம் நான் அக்காவுக்கு ஏற்ற தம்பி என்றுதான் நினைக்கிறேன். எனக்கும் பள்ளிகாலத்தில் இருந்து அஞ்சல் தலைகள் மேல் ஒரு காதல் உண்டு ... மாநில அளவில் விருதும் பெற்று இருக்கிறேன். என் அண்ணன் தேசிய அளவில் பங்குகொள்ளும் தகுதி வாய்ந்ததவர். அவர் நாணயம் , கரன்சிகள், தபால்தலை, டெலிபோன் கார்ட், சங்கு சிப்பிகள், என சேமிப்பில் அவரே ஒரு அருங்காட்சியகம்.

உங்களுக்கும் அண்ணனுக்கும் என் பாராட்டுகள் ரவி. நீங்க அஞ்சல் தலைகள் சேகரிப்பில் ரொம்பத் தீவிரம் என்று தெரியுது. நான் தீவிரமெல்லாம் இல்லை. இதுவரை ஒரு போட்டியில் கூடக் கலந்துகொண்டது கிடையாது. சேர்த்து வச்சிருக்கிறதையெல்லாம் அப்பப்போ பெட்டியிலிருந்து வெளியில் எடுத்துப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கிறதோடு சரி. :)

கீதம்
02-09-2011, 11:16 AM
ஆசைமுகம் மறந்துபோச்சே - ஒரு அம்மாவின் வேதனை

நன்றி: யாஹு செய்திகள் (5 மே 2011)

அமெரிக்காவின் லோவா நகரைச் சேர்ந்த டாரா ஃபால் (Tara Fall) என்னும் பெண்மணிக்கிருக்கும் இந்த நோய் விசித்திரமானது. முகமறதி நோய்! நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு நிமிடம் திரும்பினாலும் நம் முகம் மறந்துவிடும் அவருக்கு. மீண்டும் நாம் யாரென்பதை அவருக்கு நினைவுபடுத்த வேண்டும். தனக்கு இப்படி ஒரு நோய் வந்திடுச்சேன்னு நொந்துபோகவில்லை. தானே ஒரு புது வழியைக் கண்டுபிடிச்சாங்க. அதாவது மனிதர்களை அவர்களது மற்ற ஒப்பனைகளால், உடையால், தலையலங்காரத்தால், வேறு பல தனித்த அடையாளங்களால் இன்னாரென்று தெரிஞ்சுக்கறாங்களாம்.

50 First Dates மற்றும் கஜினி திரைப்படங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் அந்தப் படங்களில் கதாபாத்திரங்கள் கொண்டிருந்தது குறுகிய கால மறதி நோய்! சம்பவங்கள் சில மணி நேரத்துக்கு மட்டுமே நினைவில் இருக்கும். பின் மறந்துவிடும். ஆனால் இவருக்கு சம்பவங்கள் எதுவும் மறப்பதில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட நபரின் முகம் மட்டும் நினைவில் தங்காது. இன்னும் சொல்லப்போனால், தினம் தினம் பார்க்கும் தன் குழந்தைகளின் முகம் கூட மறந்துவிடுமாம். பள்ளிவிட்டு அழைக்கப்போகும்போது ‘பொன்னிற கூந்தல் கொண்ட இரு பெண்குழந்தைகள் சேர்ந்துவந்தால்... அவர்கள்தான் என் குழந்தைகளாக இருப்பார்கள்’ என்ற நம்பிக்கையுடன் அவர்களை அணுகுகிறாராம். எவ்வளவு வேதனை தரும் விஷயம் இது. கண்ணிருந்தும் குருடர் போலொரு வாழ்க்கை!

பிரபலமானவர்களையும் கண்டுபிடிக்கமுடியாமல் திணறுவாராம். மருத்துவப் பரிசோதனையின்போது, இவரிடம் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஒரு புகைப்படத்தைக் காட்டிக் கேட்டபோது இவருக்கு அவரைத் தெரியவில்லையாம். காரணம் ஒபாமா வழக்கமான கோட்சூட்டில் இல்லாமல் கூடைப்பந்து விளையாட்டு உடையில் இருந்ததுதானாம்.

இளவயதில் உண்டான வலிப்பு நோய்க்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை அவருக்குப் பரிசாய்த் தந்தது இந்நோய். ஆங்கிலத்தில் prosopagnosia எனப்படும் இந்நோயைக் குணப்படுத்த முடியாதாம். வாழ்நாள் முழுவதும் அவர் இப்படியே வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம்.

ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அவர் சொன்னது, "என் குழந்தைகளை என்னால் அடையாளம் காண முடியாது. ஆனாலும் அவர்களை தினம் பள்ளியிலிருந்து அழைத்துவருகிறேன். ஒவ்வொருநாளும் சந்தோஷத்தோடு தம் பிஞ்சுக் கைகளால் என்னைக் கட்டியணைத்து, 'நன்றிம்மா'ன்னு சொல்றாங்களே... அதைவிட வேறென்ன வேணும் எனக்கு?”

மறதிக்காரர்களைக் கேலி பேசும் மனிதர்களுக்கு மத்தியில், தன் குறையை நினைத்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல் வெளியுலகின் சவால்களை தினம் தினம் சந்திக்கும் இவருடைய வாழ்க்கை உண்மையிலேயே ஒரு பெரும் துணிகரச் செயல்தான்.

குறுகிய கால நினைவிழப்பு (Short Term Memory Loss), பன்முக ஆளுமைக் குறைபாடு (Multiple personality Disorder) (மொழியாக்கம் சரிதானா? :confused:) போன்ற நோய்களைப் பாமரரும் அறிந்துகொள்ளும் வகையில் வெளிவந்த கஜினி, சந்திரமுகி, அந்நியன், குடைக்குள் மழை போன்ற திரைப்படங்களுக்கு (மூலம் ஆங்கிலத்திலிருந்து களவாடப்பட்டிருந்தால் அவற்றுக்கும் சேர்த்து) நன்றி சொல்லியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் இவை போன்ற விசித்திர நோய்கள் பற்றி நமக்குத் தெரியாமலேயே போயிருக்கும்.

நாமும் டாரா ஃபால் போன்ற மனிதர்களைக் குறைகூறிக்கொண்டே இருந்திருப்போம். ‘நேத்து நல்லாப் பேசினாள், இன்னைக்குப் பாத்தா முகத்தைத் திருப்பிட்டுப் போறாள்’ன்னு பேசுவோம். எனக்கும் மூளையில் (உனக்கு அது இருக்கான்னு கிண்டல் பண்ணக்கூடாது :icon_ush:) ஒரு ஓரமா இப்படியொரு வியாதி எட்டிப்பார்க்கிறதோன்னு சந்தேகமாத்தான் இருக்கு. இதைப் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=532235&postcount=5)படித்தால் என் சந்தேகத்தின் நியாயம் உங்களுக்கும் புரியும். :)

seguwera
02-09-2011, 01:57 PM
பெற்றெடுத்த பிள்ளைகளையே மறந்து போகிறது மிகவும் பரிதாபகரமான ஒன்று. செய்தியை படிக்கும் நமக்கே வலிக்கிரதென்றால் அந்த அன்னைக்கு. ...

கீதம்
06-09-2011, 04:12 AM
பெற்றெடுத்த பிள்ளைகளையே மறந்து போகிறது மிகவும் பரிதாபகரமான ஒன்று. செய்தியை படிக்கும் நமக்கே வலிக்கிரதென்றால் அந்த அன்னைக்கு. ...

பின்னூட்டத்துக்கு நன்றி சேகுவாரா. அவரிடமிருந்து குறைகளைக் குறையாய் நினையாமல் வாழும் வித்தையைக் கற்றுக்கொள்வோம்.

கீதம்
06-09-2011, 04:19 AM
செய்தி.5

கொலைக்களத்திலிருந்து தப்பியோடிய கோமாதா (http://www.heraldsun.com.au/lifestyle/the-other-side/yvonne-the-fugitive-cow-surrenders-to-farmer-after-three-months-on-the-moove/story-e6frfhk6-1226128652981)

நன்றி: யாஹு செய்திகள் (3 செப். 2011)

ஆஸ்திரியாவில் (ஆஸ்திரேலியா அல்ல) வளர்க்கப்பட்டு இறைச்சிக்கென்று ஜெர்மனிக்கு விற்கப்பட்ட ஈவான் என்ற பசு, கடந்த மூன்று மாதமாய் ஜெர்மனியின் ஊடகங்களில் தலையாய இடம்பெற்றுவிட்டது. அப்படியென்ன சாதனை புரிந்துவிட்டதாம் ஈவான்?

பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்குப் போவது மாதிரி சந்தோஷமா பவேரியா போன ஈவானுக்கு அங்க போனதும்தான் தெரிஞ்சிருக்கு, இது புகுந்த வீடு அல்ல, கொலைக்களம் என்று. இறைச்சிக்கூடத்துக்கு அனுப்பப்படுவதற்கு முன், கடந்த மே 24 ஆம் தேதி, சாமர்த்தியமா தப்பி ஓடி பக்கத்திலிருக்கும் காட்டில் தஞ்சமடைஞ்சிடுச்சி. சரி, போவுதுன்னு அப்படியே விட்டுவிடலாமென்றால் அதுவும் முடியல. அப்பப்போ காட்டுக்கு வெளியிலயும் வந்துபோறதா தகவல் கிடைக்குது.

மணிக்கு 100, 120 கி.மீ. வேகத்தில் வால் பிடித்தமாதிரி நான்கு சக்கரவாகனங்கள் நெருக்கியடித்துப் போகும் நெடுஞ்சாலையில் குறுக்கே வந்துவிட்டால் எத்தனை ஆபத்து? எவ்வளவு பெரிய விபத்து உண்டாகும்? அதனால் ஈவானைக் கண்டதும் சுட காவல்துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டதாம். (இந்தியாவைப் பற்றிய சில டாகுமெண்டரிகளில் மாடுகள் சாலையில் படுத்துக்கிடப்பதையும், பெரும் போக்குவரத்தின் குறுக்கே மெத்தனமாய் நடைபோடுவதையும் ஏன் அப்படி வியந்து வியந்து செய்தியாக்குகிறார்கள் என்னும் விஷயம் இப்பதான் புரியுது)

ஆனா பாருங்க, பெத்தமனம் துடிக்கிற மாதிரி ஆஸ்திரிய கால்நடை சரணாலயமொன்று இதைக் கேட்டு துடிச்சுப் போச்சு. எதிர்மனு போட்டு ஆகஸ்டு 26 ஆம் தேதிவரைக்கும் இடைக்காலத் தடை வாங்கிடுச்சு. எப்படியும் அதற்குள் ஈவானைக் கண்டுபிடிச்சிடுவோம்கிற நம்பிக்கை அவங்களுக்கு. அதன்படி அவங்க மெற்கொண்ட முயற்சிகள் அபரிமிதமானது.

முதலில் ஈவானை, இறைச்சிக்கூட உரிமையாளர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கினாங்க. அதன்பிறகு ஈவானைக் கண்டுபிடிக்க அவங்க எடுத்துகிட்ட முயற்சிகள் யாரும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது. பசுவின் பாஷை தெரிந்த ஒருவரை ஏற்பாடு செய்தாங்க. டெலிபதி (இதுக்கு பொருத்தமான தமிழ் வார்த்தை தெரியல) மூலமா ஈவானோடு பேசி அதை அமைதிப்படுத்தினாராம். அது ரொம்பவே பயந்துபோயிருக்கிறதா சொன்னாராம். ஆஸ்திரியாவிலிருந்து பவேரியாவுக்கு பயணம் செய்த வேதனை அதன் உடலிலும் உள்ளத்திலும் இன்னும் இருக்கிறதா சொன்னாராம். அதோடு பேசி கொஞ்சங்கொஞ்சமா அதன் பயத்தைக் குறைச்சு அமைதிப்படுத்தினாராம்.

இதைப் படிக்கும்போது நம்ம ஊரில் ஒரு லாரியில் நூற்றுக்கணக்கான எருமைகளை அடிமாடாக் கொண்டுப்போவாங்களே, அதுதான் என் நினைவுக்கு வந்தது. அவற்றைப் பற்றியெல்லாம் யார் கவலைப்படுறாங்க? அந்தக் காட்சியைப் பார்த்தாலே பரிதாபமா இருக்கும். எப்படியும் கொல்லப்போறாங்க, அதற்குமுன் அவற்றை இத்தனை இம்சைப்படுத்தணுமான்னு தோன்றும். அதுவும் இரண்டு நாள் பயணமா இருந்தாலும், அவற்றுக்கு தீவனம், தண்ணீர் எதுவும் கொடுக்காமல் அப்படியேதான் கொண்டுபோவாங்களாம். நரக வேதனை என்பார்களே இதுதான் போலும்.

சரி, நம்ம ஈவான் விஷயத்துக்கு வருவோம். ஈவான் அப்பவும் வெளியில் வரத் துணியலையாம். அதனால் ஹெலிகாப்டர்களில் சுற்றி அகச்சிவப்புக் கதிர் காமெரா மூலம் அதன் இருப்பிடம் கண்டுபிடிக்க முயன்று அதுவும் தோல்விதான். அடுத்ததாய் ஆப்பிரிக்காவின் பிரசித்தி பெற்ற தட ஆய்வாளர் (மிருகங்களின் தடம்பார்த்துப் பின்தொடர்வதில் வல்லுநர்) ஒருவரை வரவழைத்து ஈவானைப் பிடிக்கச் செய்த முயற்சியும் வெற்றி பெறவில்லை.

ஆஸ்திரிய சரணாலயம் தொய்ந்துவிடவில்லை. அடுத்த நடவடிக்கையாய் காதலால் ஈவானைக் கையகப்படுத்திவிடலாமென்று எர்னெஸ்ட் என்ற காளையைக் கொண்டுவந்தார்களாம். அதன் அழைப்புக்கு இணங்கி ஈவான் வந்துவிடும் என்னும் நம்பிக்கையும் பொய்த்துப்போனது. காதலுக்கு மரியாதை இல்லை, தாய்மைக்காவது மரியாதை இருக்கிறதா என்று பார்ப்போம்னு ஈவானின் மகனைக் கூட்டிப்போய் குரல் கொடுக்கச் சொன்னார்களாம். ம்கூம்... உயிர்பயத்துக்கு முன் பிள்ளையாவது, குட்டியாவது!

இதற்கிடையில் ஜெர்மானியப் பத்திரிகை ஒன்று ஈவானைக் கண்டுபிடிப்பவர்களுக்கு பத்தாயிரம் யூரோக்கள் பரிசளிப்பதாய் விளம்பரம் செய்தது.

கண்டதும் சுடும் உத்தரவுக்கான இடைக்காலத் தடை முடிவடைந்துவிட்ட நிலையில் கடந்தவாரம் ஒரு மேய்ச்சல் நிலத்தில் சில பசுக்களோடு தென்பட்டு பிடிபட்டது ஈவான். இத்தனை நாட்களில் மக்கள் தன்னை மறந்திருப்பார்கள் என்று நினைத்து விட்டது போலும். இன்னும் இரண்டு நாள் ஆகியிருந்தால் தப்பியோடிய தன் சாதனையின் நூறாவது நாளைக் கொண்டாடியிருக்கும். ஒருவேளை அதைக் கொண்டாடத்தான் தன் இனத்தைத் தேடி வந்ததோ?

அதன் காதுவில்லையையும், கொம்பில் பதிக்கப்பட்ட முத்திரையையும் வைத்து அது ஈவான் என்று உறுதிசெய்யப்பட்டதாம். அப்பாடா, என்று நிம்மதிப் பெருமுச்சு விடுகின்றனர் சரணாலயத்தவர்கள். இனி ஈவான் தன் வாழ்நாளை நிம்மதியாகக் கழிக்கலாம்.

ஈவானைக் காட்டிக்கொடுத்த பண்ணை உரிமையாளருக்கு பத்தாயிரம் யூரோக்கள் கிடைத்ததா என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. அப்படி அவருக்குக் கிடைத்தால் அவர் இப்படிப் பாடக்கூடும்.

எங்கிருந்தோ வந்தாள்
இடைச்சாதி ஈவான் என்றாள்
இங்கிவளை நான் காணவே
என்ன தவம் செய்துவிட்டேன்...

இப்படிதான் ஐந்துவருடங்களுக்கு முன் அமெரிக்காவின் மான்டோனா மாநிலத்தைச் சேர்ந்த மோலி என்னும் பசு கொலைக்கூடத்திலிருந்து தப்பியோடியதாம். எப்படி? ஐந்தடி ஐந்தங்குலம் உயரமுள்ள வாயிற்கதவைத் தாண்டிக்குதித்தும், துரத்திப்பிடிக்க முயன்ற காவலர்கள், பாதுகாவலர்கள் கைகளில் அகப்படாமலும், வழிமறித்த ஜெர்மன் ஷெப்பர்டுக்கு போக்குக் காட்டியும், இருப்புப்பாதைகளைக் கடந்தும், மிஸ்ஸெளரி (Missouri) ஆற்றில் குதித்து அதையும் நீந்திக்கடந்ததாம். ஓடிக்களைத்த அது, முடிவில் மூன்று மயக்க அம்பூசிகள் மூலமாய் பிடிக்கப்பட்டதாம். ஆனாலும் அதன் துணிவால் ஈர்க்கப்பட்ட மக்களின் விருப்பத்திற்கேற்ப அது கால்நடை சரணாலயத்தில் விடப்பட்டதாம்.

வெளியுலகுக்கு வந்துவிட்டதால் ஆதரவு கிடைத்து அறுபடாமல் தப்பித்துவிட்டன இவை போன்றவை. எத்தனை மாடுகளின் முயற்சிகள் மதில் சுவருக்குள்ளேயே முடங்கிப்போயினவோ? ‘அம்மா….’வென்னும் அலறலுடன் ஆவி அடங்கிப்போயினவோ?

seguwera
06-09-2011, 03:07 PM
:lachen001:அப்போ அது கோமாதா இல்ல go go மாதா :lachen001:
:medium-smiley-045:அந்த ஊரு பரவாயில்லை மாடு சரணாலயத்தில் சந்தோசமாக இருக்கும்.ஆனால் நம்ம ஊருல சாப்பாடு சரியா போடாமலே சாகடிச்சிருவங்க :medium-smiley-045:

கலையரசி
07-09-2011, 02:00 PM
முதல் செய்தி நம்பத்தகுந்ததாய் இல்லை. ஐம்பதாயிரம் பெறுமான தங்கக்கட்டிகளை நம்மூரில் வீட்டில் வைத்திருந்தார்கள் என்று சொன்னால் நம்பலாம்; ஆஸ்திரேலியாவில் அதுவும் ஒரு குப்பை போடுகின்ற கவரில் என்றால் நம்ப முடியவில்லை. அங்கெல்லாம் தங்கத்தில் பெரும் முதலீடு செய்யமாட்டார்கள்; அப்படியே செய்தாலும் தங்க முதலீடுகளில் (Gold fund) தான் செய்வார்கள். (தங்க மதிப்பு சர்டிபிகேட்டில் இருக்கும். Physical gold இருக்காது) , அப்படியே தங்க பிஸ்கட் வாங்கினாலும் வங்கியின் லாக்கரில் தான் வைப்பார்கள். எனவே தான் இந்தச் செய்தி பொய்யாக இருக்குமோ எனச் சந்தேகம் வருகிறது.

இரண்டாவது செய்தியில் ஸ்டாம்புகளை ஒட்டும் விதத்திலிருந்து சங்கேத மொழியைப் பரிமாறியிருந்திருக்கிறார்கள் என்ற செய்தி எனக்குப் புதிதாக இருந்தது. சுவாரசியமாயும் இருந்தது.

நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்தால் திருப்பித் தராத பழக்கம் நம்மிடையே தான் உண்டு. அங்கும் இந்தப் பழக்கம் இருந்திருக்கிறதா? இத்தனை வருடங்கள் கழிந்த பின் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியதே அதைப் பாராட்ட வேண்டியது தான்.
முகம் மறந்து போகும் வியாதி பற்றிய செய்தியும் புது செய்தியாக இருந்தது. எத்தனை எத்தனை விநோத வியாதிகள்? இந்த வியாதி வந்த பிறகும் மூலையில் முடங்காமல் செயல்படும் அந்தப் பெண்மணி பாராட்டுக்குரியவர் தாம்.

கொலைக்களத்திலிருந்து தப்பியோடிய சாகசத்தால் மாட்டுக்குத் திரும்பவும் வாழ வழி கிடைத்துவிட்டது. வாழ்க ஈவான்!
சுவாரசியமான செய்திகளை எழுதும் விதம் செய்திகளை விட மிகவும் சுவாரசியமாயிருக்கிறது. தொடர்ந்து எழுது கீதம்!