PDA

View Full Version : அன்றொரு நாள்: ஆகஸ்ட் 29



innamburan
28-08-2011, 06:31 PM
அன்றொரு நாள்: ஆகஸ்ட் 29

ப்ிரேமை ஒரு அழகிய சொல். பொருள் செறிந்தது. காதலில் கசிந்து, மையலில் ஆழ்ந்து, காமத்தில் சிக்கி, பக்தியில் மூழ்கி, இன்னும் வித்தைகள் பல செய்து வசீகரித்துவிடும் தன்மை, பிரேமைக்கு மட்டும் தான் உண்டு. சிலர் மற்றவரை ஆயுசு பர்யந்தம் வசீகரத்தால் கட்டிப்போட்டு விடுவார்கள். பெரும்பாலும் அவர்கள் பெண்மணிகள், சேஷ்டைகளால் வசீகரிக்கும் அந்த நீலமேக சியாமளனை தவிர! இந்த ‘தோடுடைய செவியனை’ பாருங்கள். உமையொரு ‘பாங்கி’ ஒரு எழில் சித்திரமன்றோ! மஹாவிஷ்ணு மஹாலக்ஷ்மியை ஹ்ருதயத்திலேயே அமர வைத்துக்கொண்டார். சரஸ்வதி பிரம்மாவின் நாவில் வாசம். சரி. சரி. இது எல்லாம் ஒரு போக்குக்காட்டத்தான். சுற்றி வளைப்பதும் கதைசொல்லியின் ஸ்வபாவமே.

என்னையும், மற்றும் பல்லாயிரம் நபர்களையும், கிஞ்சித்தும் பொறாமைக்கு இடம் கொடுக்காமல், நிரந்தர வசீகரணம் செய்த மாதரசி ஆகஸ்ட் 29, 1982 அன்று, தன்னுடைய 67வது பிறந்த நாளன்று, மறைந்து போனாள். அவளுக்கு வயது கிடையாது; நித்திய யுவதி. காலகட்டமும் இல்லை. அமரத்துவம் வாய்த்த சிரஞ்சீவி. முகராசியோ அபாரம். உடலழகோ சுண்டி இழுக்கும். அழகு பிம்பமான இவளை, சிலர் வாழ்வின் சிறப்பு அம்சம் என்றனர். மின்னலொளி, ஊடுருவும் ஜோதி, விகசிக்கும் ஒளி என்றெல்லாம் வருணித்தனர், சிலர். கலையம்சங்கள் பரிபூரணம். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு ஆத்மபலம். எட்டு வருடங்களாக புற்றுநோயினால் அவதிப்பட்ட போது,அவள் சொன்னது, “...புற்று நோயாளிகள் அத்துடன் வாழும் கலை கற்றுக்கொள்ளாவிடின், இருக்கும் வாழ்நாளை நாசமடித்துக்கொள்வர்; மிஞ்சிய வாழ்நாட்களை நான் ஆனந்தமாக அனுபவிப்பதை தடுக்க, இந்த வியாதி யார்? விடமாட்டேன்..’
இறக்கும் தறுவாயில் உடன் இருந்து அணுக்கத்தொண்டு செய்தவர், எட்டு வருடங்கள் முன்னால் மாஜி கணவர்.. பிரேமையின் ஆளுமை புரிகிறதா? ஆம், இவர் ஒரு நடிகை. கலை உலகமே இவரது காலடியில், ரசிகப் பட்டாளத்துடன். அத்தனை அபாரமான நடிப்பு, அவரது இயல்பு. பேசும் கண்கள், பேசாத உதடுகள், விசாலமான நெற்றி, கண்ணழகுடன், கன்னமும் அழகு. துணிச்சலும், அச்சம், மடம், பயிர்ப்பு, வெட்கம் எல்லாம் ஒரு சேர இருக்கும் வதனமோ! சந்திரபிம்பமோ! அவருடைய நடிப்புத்திறனுக்கும், முகாரவிந்தத்திற்கு போட்டா போட்டி. டைரக்டர்கள் தங்களுக்கு வேலையில்லை என்றனர். நடிக்க நேரிட்டால் தானே அவர்களுக்கு வேலை? கேமராக்கள் கோணம் நாடவில்லை. எங்கிருந்து பார்த்தாலும் கருணை மாறாத முகம். ஒரு நாளாவது முரண்டு பிடித்தது இல்லை. விளக்கம் கேட்பதில் ஒரு மென்மை. கேமரா முன் சோடை போனதே கிடையாது. மற்றபடி யாவருடனும் சிநேகபாவம். அரிதாரப்பூச்சு எல்லாம் மிகக்குறைவு. ஆக மொத்தம், இவருக்கு வந்து குவிந்த மூன்று ஆஸ்கர் பரிசில்களும் உகந்தவையே.
ஆம். இவரை பற்றி வம்பு வளர்ந்தது. 1949 இல் ராபர்ட்டோ ரோஸிலினி என்ற பிரபல இத்தாலிய டைரக்டருக்கும் மணமாகியிருந்த இவருக்கும் தொடர்பு; ஒரு குழந்தை ஜனனம். உலகமே தூற்றியது. அமெரிக்க செனேட்டில் தூஷணை. ஏழு வருட வனவாசம். ஏன் தெரியுமோ? ''Intermezzo,'' ''For Whom the Bell Tolls,'' ''Gaslight,'' ''Spellbound,'' ''The Bells of St. Mary's,'' ''Notorious'' ''Casablanca,'' ஆகிய படங்களில் இவருடைய நடிப்பு வாழ்வியல் பண்பு நிறைந்த கதாப்பாத்திரங்களுடன் ஒன்றி விட்டது. இவருக்கு புரியவில்லை.
‘நானொரு பரிசுத்தமானவள் என்று மக்கள் நினைப்பானேன். நல்லதும், கெட்டதும் எல்லாரிடமும் தானே இருக்கு.’ என்றார், இந்த அப்பாவி. ஆம் நாம் இங்கு பேசுவது உலகப்புகழ் நடிகை இங்க்ரிட் பெர்க்மென் அவர்களை பற்றி. அதான் சொல்றேனே. இந்த ஆனானப்பட்ட அமெரிக்கன் செனேட் 1972 இல், இவரை 22 வருடங்கள் முன்னால் இகழ்ந்ததிற்கு மன்னிப்பு கேட்டது, இவரிடம்.
சரி. முடித்து விடுகிறேன். இவருக்கு விருதுகள் கிடைத்த ''Gaslight'' : 1944 ''Anastasia'': 1956, ''Murder on the Orient Express'' : 1974. படங்களை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது. ஒரு பிரேமி நடிப்பதும் இல்லை; தன்னழகை விளம்பரப்படுத்துவதும் இல்லை. ஆனால் அவள் ததும்பாத நிறைகுடம் என்பதால், இயல்பும், நடிப்பும் ‘உமையொருபாகமாக’ பரிமளிக்கின்றன. இது ஒரு உவமை. சிவனடியார்கள் கோபிக்க வேண்டாம்.
இங்கிரிட் பெர்க்மென்னின் உடல் நிலை மிகவும் மோசமான பிறகு, இரண்டு படங்களில் நடித்தார். 1. இங்க்மார் பெர்க்மென் ( இவரை பற்றி ஒரு நாள் எழுத வேண்டும்.) என்ற பிரபல டைரக்டரின் ''Autumn Sonata'' இல் ஒரு பியானோ கலைஞராக; ''A Woman Called Golda.'' இல் இஸ்ரேலின் நிஜப்பிரதமர் கோல்டா மேய்ர் ஆக. அது தான் கடைசி படம், 67 வயதில். அவர் சொன்னது, ‘ இந்த வாய்ப்பினால், ஒரு மனுஷி, ஒரு நடிகை என்ற வகையில் வாழ்க்கை நான் எதிர்பார்த்த்திற்கு மேல் எனக்கு வரம் அளித்தது.
இன்னம்பூரான்
29 08 2011
http://media.kickstatic.com/kickapps/images/66470/photos/PHOTO_7255791_66470_18875118_ap_320X240.jpg







உசாத்துணை:
http://www.nytimes.com/learning/general/onthisday/bday/0829.html