PDA

View Full Version : அன்றொரு நாள் 26.2innamburan
26-08-2011, 08:25 PM
அன்றொரு நாள் 26.2

கருமமே கண்ணாயினார் என்று நான் மாட்டுக்கு சகட்டுமேனியாக எழுதிக்கொண்டே போகிறேன். எத்தனை நாள் வண்டி ஓடுமோ? தெரியாது. தெரிந்து தான் என்ன செய்யபோகிறோம்? விட்டுப்போன அலுவல்கள் வேறு கூப்பாடு போடுகின்றன. அதையும் கவனிக்க வேண்டும். இத்துடன் இது உறங்க.

ஜாலியன் வாலா பாக் படுகொலையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த பண்டிட் கே. சந்தானம் அவர்களையே மறந்த நன்னாடு, இது. யானையைபோல் நீண்டகால நினைவாற்றல், நம் அஞ்சல் துறைக்கு. ஆகஸ்ட் 31, 1949 இல் மறைந்த பண்டிட் கே. சந்தானம் அவர்களை திடீரென்று நினைத்துக்கொண்டு, ஒரு வாரம் முன்னாலேய், ஆகஸ்ட் 25 அன்று அவருடைய தபால் தலையை வெளியிட்டு தன் தலையை காப்பாற்றிக்கொண்டது. இல்லை. அந்த தகவல் இன்னும் பொது மன்றத்தில் வைக்கப்படவில்லை. பேஷ்! நம் ஹிந்து இதழ் அதற்கு மேல். தம்மாத்தூண்டு துணுக்குச் செய்தி அளித்து, தன் விடுதலை வேட்கையை தணித்துக் கொண்டது. பலே! வட இந்திய நாளிதழ்கள் பரவாயில்லை/தேவலை.

தப்புத்தண்டா நடந்தா வெள்ளைக்காரன் கமிட்டி வச்சு, அதில் இரண்டு ராஜ விசுவாஸ இந்தியர்களை அமர்த்தி, நடந்த தவறுக்கு சால்ஜாப்பு கூறுவார்கள். ஜாலியன்வாலா கொலைக்களம் பற்றி விசாரிக்க ஹண்டர் கமிட்டி: ஐந்து வெள்ளை + நான்கு கறுப்பு. கமிட்டி மே 1920ல் அளித்த சான்றிதழ்: ‘... ஜாலியன்வாலா பாக் தோட்டத்தில் குவிந்திருந்த மக்கள் கூட்டம், ஒரு சூழ்ச்சியின் வெளிப்பாடு அல்ல. ஆனால், அது புரட்சியாக வெடித்தது. அன்றைய அடக்குமுறை சட்டம் தேவையாகத்தான் இருந்தது. அதை அடக்குமுறை என்பது மிகை. டயைர் துரை மானாவாரியாக சுட்டது தவறல்ல. ஆனால், எச்சரித்து இருக்கவேண்டும்; கொஞ்சம் குறைத்து சுட்டு இருக்கலாம்...’ ஓஹோ! ஆனால் இந்திய அங்கத்தினர்கள் ஒத்துக்கொள்ளவில்லை; மைனாரிட்டை ரிப்போர்ட் கொடுத்தார்கள். உங்களுக்குத் தெரியாத மைனாரிட்டியா?

அண்ணல் காந்தி, மக்களின் சார்பாக, காங்கிரஸ் கட்சியின் தரப்பில் தன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தார் ~சி.ஆர்.தாஸ், ஏ.எஸ்.தயாப்ஜி, எம்.ஆர்.ஜயகர் + கே.சந்தானம் (காரியதரிசி). காந்திஜி எங்கிருந்து சந்தானத்தை பிடித்தார் என்று தகவல் இல்லை. அவர் ஒரு பிரபல வழக்கறிஞர்; லாஹூர் தலைவர்கள் வழக்கு என்று ஒன்று நடந்தது. இவர் தான் அவர்களுக்கு வக்கீல். நியாயம் வழங்குவதற்கு லாஹூர் உகந்த இடமில்லை என்று சொல்ல ஸிம்லா சென்றார், ஒரு ரயில்பெட்டியின் இருக்கைகளுக்கு அடியே ஒளிந்து கொண்டு! நியாயம் கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம். 1916லேயே தன் பெண் மாதுரிக்கு லாஹூரிய ஆர்ய சமாஜிக்கு மணம் செய்து வைத்தார், இந்த கும்பகோணத்து ஐயங்கார் ( அவரை பற்றி எழுதாத இன்னம்பூரான் ஒரு இன்னம்பூரானா, என்ன?).

சரி. பாயிண்ட் என்ன என்று கேட்பது காதில் விழுகிறது! காந்தி கமிட்டியின் காரியதரிசியான பண்டிட்ஜி சந்தானம், தங்கு, தடை, கல்லு, முள்ளு, மிரட்டல், அடக்கு முறை எல்லாவற்றையும் மீறி, மின்னல் வேகத்தில் பஞ்சாப் மாகாணத்தில் சுற்றுப்பிரயாணம் செய்து, படுகொலையிலிருந்து தப்பிய 1700 நபர்களின் சாக்ஷியம் வாங்கி, 787 பக்கங்கள் கொண்ட இரு தொகுப்பு அறிக்கையை 1920 இல் காந்திஜியின் முன் வைத்தார். இன்றளவும், வேறு பொறுப்பான ஆவணங்கள் இல்லை. புரியறது. காந்திஜியை மறந்த நாம் இவரை மறக்காமல் இருப்பது எப்படி? நான் பத்தாம் பசலி. திரு.வி.க. அவர்களின் நற்றாயை போல் கர்நாடகம். அதான், என்னால் இப்படியெல்லாம் உதற முடியவில்லை.

சில தகவல்கள்: 1924 இல் பகத் சிங் வழக்கில் வாதாட ஒரு கமிட்டி’ அதன் பொக்கிஷதாரர், இவர் தான். அருமை நண்பர் லாலா லஜபத் ராய் ( இவரை பற்றி தெரியுமோ? பாஞ்சால சிங்கம்.) வேண்டுகோள் படி லக்ஷ்மி இன்ஷூரன்ஸ் கம்பேனி தொடங்கினார். 1947க்கு பிறகு, பிரிவினை அகதிகளின் மறுவாழ்வு கமிட்டியில் அங்கத்தினராக பணி புரிந்தார். இவரது திருமகள் நடத்திய ‘சக்தி’ இதழ் உலகின் முதன்மை இருபது இதழ்களில் ஒன்றாக, டைம்ஸ் இலக்கிய இதழால் கணிக்கப்பட்டது. அவரது கணவர் எம்.எல்.ஸோந்தி பிரபல சிந்தனையாளர். அவர் நம்மிடம் இல்லை. அவரது புகழும் மிளிரவேண்டும். எனக்கு இந்த ‘தேசமறதி’ பொறுக்கவில்லை. அதனால் மூன்று ஃபோட்டோக்கள். மூன்றாவதில், திருமதி. மாதுரியும், பேராசிரியர் ஸோந்தியும், தலை லாமாவுடன்.

நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்

26 08 2011

http://philamirror.info/2011/08/25/india-post-released-stamp-on-pt-k-santanam/fdc-k-santanam/

கீதம்
27-08-2011, 10:37 PM
இப்போதாவது அன்னாருக்கு மரியாதை செய்ய அரசும் அஞ்சல் துறையும் முன்வந்துள்ளதே! இல்லையென்றால் என்னைப் போன்றவர்களுக்கு அவரைப் பற்றித் தெரியாமலேயே போயிருந்திருக்கும். மற்றுமொரு அரிய மனிதரை எங்கள் மனங்களில் முன்னிறுத்திய தங்கள் பதிவுக்கு நன்றி ஐயா.