PDA

View Full Version : என் பிரார்த்தனைகள் தொடரும்...



நாகரா
25-08-2011, 05:31 AM
தலைக் கனத்தைக்
கரும்பாக்களாய்க் கக்குகிறேன்

அன்பாம்
இருதய க(த)னத்தை
ஒரு சிறிதும் உணராத
உன்மத்தன் நான்
அஞ்ஞான வாக்கியங்களையே
வாய் கிழியப் பேசுகிறேன்

என் குற்றங்களை மன்னிக்கவும்
என்னை உன்னில் கரைக்கவும்
அன்பே
உன்னால் மட்டுமே முடியும்

அன்பே
என்னால் இயன்றதொன்றுமில்லை
உன்னில் பூரணமாய்ச் சரணடையவும்
மனமில்லேன் என்னில்
பூரணமாய்க் கூடியிருப்பதும்
நீயே

ஈடு இணையில்லாத
வள்ளல் நீயே
என்னை ஈடேற்ற
எல்லாத் தந்திரங்களையும்
செய்து வருகிறாய்

ஏக தேவனாம் உன்னால்
கூடாத காரியம் ஏதுமில்லை

நீசப் பாவியாம் என்னை
தேவ ஆவியாய் வந்து
இரட்சிப்பதும் நீயே

அன்பே
உன்னை விளங்கி
உந்தன் விளக்காய்
மண்ணில் விடிய
அருள்வாயாக

இந்தப் பிரார்த்தனையை
செய்ய வைப்பதும் நீயே
அன்றி வேறார் தாயே
எந்தையுமானாய் அன்பே
சற்குருப் பிள்ளையும் நீயே

அன்பே
உன்னைத் தாழிட
ஆர் வலர்?!(யார் வல்லவர்)

புன்செய் மண்ணாம்
என் கண்
நன்செய் விண்ணமுதாய்ப்
பொங்கும்
அற்புதமும் நீயே

இருகரங் கூப்பி
மார் நடு அழுத்தி
அன்பே
உன்னை வணங்குகிறேன்
உன் திறந்த இருதயம்
என்னில் காட்டி
உன் வடிகாலாக
என்னை உணர
அருள்வாயாக

அன்பே
உன் இச்சைக்கு
எப்போதும் இணங்குவதே
உண்மையான வணக்கம்
என்பது எனக்கு விளங்கும் வரை
என் பிரார்த்தனைகள் தொடரும்...

கீதம்
26-08-2011, 02:41 AM
அநாகர விளையாட்டில் அற்புதம் நிகழ்த்தும்
நாகரா ஐயாவுக்கு என் வந்தனங்கள்.

அன்பு மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்துவிட்டு,
அந்தோ பாவியானேன் என்று அரற்றுதல் முறையோ?
உண்மை வணக்கம் எதுவென்று உணர்ந்தபின்னும்
உன்மத்தனென்றே உம்மை விளித்தலும் தகுமோ?

கரும்பாக்களென்றும்
இனிதே பெருகட்டும் கரும்பின் பாகாக!
இரும்பான மனங்களிலும்
மலரும் அன்பு என்றேனும் அரும்பாக!

நாகரா
26-08-2011, 04:35 AM
அழகான உம் பின்னூட்டத்துக்கும், அது வெளிப்படுத்தும் உன் அன்பின் மிகுதிக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் கீதம்.