PDA

View Full Version : அன்றொரு நாள்: ஆகஸ்ட் 28innamburan
24-08-2011, 07:40 PM
அன்றொரு நாள்: ஆகஸ்ட் 28
இந்தியாவில் கிருத்துவ மத பிரச்சாரத்தை கிழக்கிந்திய கம்பெனி தடை செய்திருந்தது, 1813 வரை. மத போதகர்களின் வேகம் அதற்கு தெரியும். அவர்கள் ஹிந்து மதத்தையும், சமூக கலாச்சாரங்களையும் தாக்கி, மக்கள் மனதை புண்படுத்தி, தங்கள் வணிக செழிப்பை பாதிப்பார்கள் என்று பயந்தது. அந்தத் தடையை நீக்கியதின் விளைவுகளில் அதுவும் ஒன்று. பெண்களின் கல்வி முன்னேற்றம், மருத்துவ வசதிகள், ஓரளவுக்கு தமிழார்வம் ஆகியவை மற்ற விளைவுகள், மதமாற்றத்துக்கு அடுத்த படியாக.
நாகர்கோயிலுக்கு, இங்கிலாந்தின் இரட்டை நகரமாக காஸ்போர்ட் என்ற, இரு மின் தமிழர்கள் வாழ்ந்த ஊரை, சொல்லலாம். சார்லஸ் மோல்ட், அங்கு மதபோதனை படித்த பின்,மனைவி மார்த்தாவுடன் நாகர்கோயில் வந்தது, 1819 ம் வருடம். 1821 இல் அச்சு இயந்திரமும், பெண்களுக்காக பள்ளிகளும், மதமாற்றமும் தொடங்கின. ஆனால், ஆரோக்கியம் கெட்டுப்போனதால், 35 வருட கிருத்துவ/சமுதாய பணிக்கு பிறகு,இருவரும் இங்கிலாந்துக்கே 1854 இல் திரும்பி விட்டனர். இவர்கள் எழுதிய மடல்களிலிருந்து, அக்காலம் தென்னகத்தில் பெண்ணினம் அடிமை படுத்தப்பட்டது தெளிவாகத் தெரிகிறது. கல்வி தான் பெண்ணின முன்னேற்றத்திற்கு வித்திட்டது, அதற்காகவாவது நாம் கிருத்துவ மத போதகர்களுக்கு நன்றி நவில வேண்டும். பாருங்களேன். இவர்களின் புத்திரிகளான எலிசாவும் ஸேராவும் பேச்சு தமிழில் சரளமாக பேசி, 1841ல், இவர்களின் ஹாஸ்டலில் 94 பெண்களுக்கு கல்வி அளித்தனராம். 26 இடங்களில் பள்ளிகள்; ஆசிரியைகள் அமர்த்தப்பட்ட புரட்சி. எலிஸா 1844 இல் ராப்ர்ட் கால்ட்வெல் என்ற மதபோதகரை மனந்து கொண்டு, அவருடைய பேட்டையாகிய இடையங்குடிக்கு போய் சேர்ந்தார். சமயம் சார்ந்த கல்வியிலும், மொழி சார்ந்த கல்வியிலும் நன்கு கற்று தேறிய ராப்ர்ட் கால்ட்வெல் சென்னைக்கு 1838 இல் வந்தார். இயல்பாகவே மொழியார்வம் கொண்டிருந்த ராப்ர்ட் கால்ட்வெல்லை தமிழ் சுண்டி இழுத்தது. மற்ற மொழிகளையும், ஜெர்மன் மொழியையும் கற்றுக்கொண்டார். மற்ற சர்ச்சைகளை பிறகு பார்த்துக்கொள்ளலாம். மேல்குடி மக்களை தவிர்த்து ஏழை பாழைகளை தேடி திருநெல்வேலி ஜில்லாவுக்கு, நீலகிரி, மதுரை வழியாக, இவர் 800 மைல்கள் தொலைவு,கால்நடையாக, பல கிராமங்கள் வழியாக சென்றிருக்கிறார். இடையன்குடியில் தங்கிவிட்டார், 1841 இல். இத்தனைக்கும் இந்தியா போன்ற நாடுகளின் வெக்கை இவரால் தாங்கமுடியாது என்று 1834 லிலேயே ஸ்காட்லாந்து டாக்டர்கள் எச்சரித்து இருக்கிறார்கள். காலாகாலத்தில் (1860) இவர்களின் மகள்களாகிய இஸபெல்லாவும், லூசியாவும் பள்ளிகளில் கல்வி கற்பித்து, தங்கள் பணியை விஸ்தரிக்கத்தொடங்கினர்.ஜூலை 1877 இல் வந்த ஏழு மாத பஞ்சத்தின் போது கால்ட்வெல்லும் அவரது குழுவும், சமய எல்லைகளை கடந்து, மக்கள் யாவருக்கும் தொண்டு செய்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. பின்னர், மதமாற்றமும் சூடு பிடித்ததும் உண்மை. இவர் தொண்டு பெரிதும் சாணர்கள் (நாடார்கள்) என்ற தாழ்த்தப்பட்ட இனத்திடையே. பிரச்சாரமெல்லாம் தமிழிலேயே. இன்றளவும், இடையன்குடியில் அவர் கட்டி 33 வருடங்கள் தொழுத மாதா கோயில், அவருடைய மக்கள் சார்ந்த கிருத்துவப்பணியில், மதத்தலைவர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஈடுப்பட்டதிற்கு சாக்ஷி. சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை, தற்காலம். சாணர்களை இழிவு படுத்தி எழுதியதாக, இவர் மேல் குற்றச்சாட்டு. அதற்கான ஆதாரம் எனக்கு கிடைக்கவில்லை.
இதையும் கேளுங்கள்: ‘ கால்ட்வெல்ல் தன் சாணர்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தார்...’நான் இந்தியன்’ என்றார்...1880 ஆம் வருடம் மாதா கோயில் விழாவுக்கு 3000 பேருக்கு மட்டும் இடமிருந்தாலும், வந்தவர்கள் 7000. அவர்களில் 2000 பேர்கள் ஹிந்துக்கள். 95 மத போதகர்கள் தமிழர்கள்...’ 1980ம் வருடச்செய்தி: (இது கீதா ஸ்பெஷல்) ‘எத்தனை மரங்கள்! ஒரு நூற்றாண்டில். நாள் தோறு ஒரு மரம் நடுவார், ஐயா.’. அவர் நட்ட இந்த பிரமாண்ட ஆலமரங்கள் அவருடைய ஆசியை பரப்புகின்றன.’ அவர் ஒரு அருமையான கதை சொல்லி. அவருடைய ஸ்காட்லாந்து கதைகள் பிரமாதம்.
இனி அவரின் தமிழ் புலமையை பற்றி: அகழ்வாராய்ச்சி செய்து, ‘பழைய காயல்’ பாண்டியர்களின் துறைமுகமாக இருந்ததை எடுத்துக்கூறி, மண் பாண்டங்கள், கட்டிட சாமான்கள் ஆகியவற்றை முன் வைத்தார். சங்க இலக்கியங்களையும், சுவடிகளையும் படித்து ஆய்வு செய்தார். ‘தொன்மையிலிருந்து 1800 வரை திருநெல்வேலி ஜில்லா’ என்ற அவருடைய ஆராய்ச்சி நூலை அரசே பதிப்பத்தது. தமிழுக்கு அவர் 1856 இல் ஒப்ப்பியல் இலக்கணம் வகுத்து 1875 இல் மீள்பார்வை செய்தது தமிழ் மொழி வரலாற்றின் மைல்கல். தமிழின் பெருமை, சம்ஸ்கிருத தொடர்பு/ தொடர்பு இல்லாமை, மற்ற மொழிகளுடன் ஒப்புமை எல்லாம் இவரால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பிற்கால சர்ச்சை ஒன்று: 1856 இல் லண்டனில் பதிவு செய்யப்பட்ட A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages. Harrison: London, 1856 என்ற நூல், சென்னை பல்கலைக்கழகத்தாலும் அதிகார பூர்வமாக பதிக்கப்பட்டதாக, எனக்கு நினைவு. 2008/9 இல் அதில் சில பகுதிகள் நீக்கப்பட்டதாக செய்தி வர, அதை திரு.பெ.சு.மணி அவர்களிடன் சொன்னேன். அவரும் விசாரித்து, அதை உறுதி படுத்தினார். விட்டுப்போன பகுதியில் தாழ்த்தப்பட்ட இனங்களை பற்றி இவர் எழுதியது, பல தற்காலிக சர்ச்சைகளுக்கு காரணமாயிற்று என்று ஞாபகம். மற்ற மொழிகளிலும், இடைச்செருகல்களும், இடை நீக்கங்களும் இருந்தாலும், தமிழனின் இந்த அதிகபிரசங்கித்தனம் கொஞ்சம் அதிகப்படி தான். நாம் தான் வெட்கப்படவேண்டும்.
1877 இல் இவரது 40 வருடப்பணிக்கு பிறகு, 63வது வயதில், கல்கத்தாவில் பிஷப் என்ற உயர் பதவி இவருக்கு அளிக்கப்பட்டது. திருநெல்வேலி பிஷப் ஆக நியமனம் ஆனார். 1968 இல் அவருடை சிலை, சென்னை கடற்கரையில் நிறுவப்பட்டது. மே 7, 1814 பிறந்த பிஷப் கால்ட்வெல், ஆகஸ்ட் 28, 1891 அன்று ஏசு பிரானிடன் உறங்கினார்.
இன்னம்பூரான்
28 08 2011
உசாத்துணை:
Kumaradoss, Y. Vincent, Robert Caldwell: A Scholar-Missionary in Colonial South India, Delhi: ISPCK, 2007. ISBN 978-81-7214-958-1

http://ecx.images-amazon.com/images/I/41NxHND9pML._SL500_AA300_.jpg