PDA

View Full Version : எப்போது வந்திருக்கும்?lavanya
07-04-2003, 12:04 PM
ஆண்தன
அசடுகள் காட்டாது
கம்பீரமாக பேசினாய்
நம் முதல் சந்திப்பில்
பார்வையில் ஸ்னேகம்
சத்தியமாய் வேறெதுவும்
தெரியவில்லை எனக்கு
அப்போதா....?

எப்போதாவது சந்திப்பில்
இரண்டொரு வார்த்தைகளும்
சின்னதாய் ஒரு புன்னகையும்
செலவழித்துப் போவாயே
அப்போதா...?

பழகிய ஒரு மழை நாளில்
கையிலேந்திய என் டிபன்
பாக்ஸிக்ல் உரிமையாய்
ஒரு விள்ளல் எடுத்தாயே
அப்போதா....?

உடல் நலம் சரியில்லாத
ஒரு நாளில் நான்குமுறை
போன் கால் உன்னிடமிருந்து...
எஞ்சிய போனிலெல்லாம்
நீயும் விசாரித்ததாய் சொன்னார்கள்
உன் என் நண்பர்கள்
அப்போதா...?

சின்ன சின்ன விஷேசங்களுக்கு
அனுப்பிய உன் வாழ்த்து
அட்டைகளில் மருந்துக்கும்
இல்லை விஷமங்கள்
இருந்திருக்க கூடாதா
என மனசு ஏங்கியதே
அப்போதா...?

எப்போது வந்திருக்கும்
உன் மீதான
என் காதல்.....?

rambal
07-04-2003, 03:18 PM
தேசிய கீதாமாய் உன் பெயர்..
தேசமே வேண்டாம் என்ற பிறகு
தேசியகீதம் ஏது?
அப்பொழுதுதான் போயிருக்கும்..

அம்மா சாவப்போவதாய்
கண் கலங்கி நின்றாயே..
அந்த கடைசி கடற்கரை சந்திப்பு..
அப்பொழுதுதான் போயிருக்கும்..

உன்னை ஆட்டோ ஏற்றி விடும் பொழுது
கடைசியாக உன் கையைப்
பிடித்த பொழுது ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டேனே...
அப்பொழுதுதான் போயிருக்கும்..

என்னை தனிமைச் சிறையில்
அடைத்து ஒளிகளைக் கூட
தடை செய்து சிறை வைத்தாயே..
அப்பொழுதுதான் போயிருக்கும்..

எப்பொழுது போயிருக்கும்
உன் மீதான
என் காதல்...?

poo
07-04-2003, 04:09 PM
பாசமழையில் காதல் பறவைகளாய்
சிறகடித்து நனைந்த
நம் நேசமான கரங்கள்
இன்பமாய் இணைந்த நொடிகள்
கண்களில் தொக்கி இனிதாய் இம்சிக்குமே...
அது இன்றுவரை தொடரத்தான் செய்கிறது...

ஸ்நேகமாய் வலம் வந்தபடி
ஆண் யார்.. பெண் யார்
மறந்தபடி சுவாசமே ஒன்றென
சுதந்திரமாய் மூச்சுவிடுவோமே..
அது இன்றுவரை தொடரத்தான் செய்கிறது..

உன் கையால் நானும்
என் கையால் நீயும்
ஊனமானாலும் உற்சாகமாய்
உணவருந்திய இன்ப இரவுகள்..
அது இன்றுவரை தொடரத்தான் செய்கிறது...

வார்த்தைகளுக்கு இல்லாத வலிமை
மௌனங்களுக்கு..
கண்களாயே பேசி கருத்தறிந்து
களம் நடத்தும்
காணக்கிடைக்காத காட்சிகள்..
அது இன்றுவரை தொடரத்தான் செய்கிறது...

ஒருவர் தவிர்த்து இதுவரை
யாரும் சுகமில்லாமல் இருந்ததில்லை..
நான் உடலிலென்றால்..
நீ மனதில்..
நீ உடலிலென்றால்..
நான் மனதில்.. - அந்த அற்புத சுகம்
சோகமாய் தெரிந்தாலும்
சுமையாய் இல்லாமல் சுகமாய் வலிக்குமே...
அது இன்றுவரை தொடரத்தான் செய்கிறது..

கண்ணீர் மட்டுமே
அடிக்கடி பிரசவிக்கும் - அதுவும்
ஆனந்தமாய்..
அது இன்றுவரை தொடரத்தான் செய்கிறது..

அலுவலகம் போனாலும்
தடையில்லாமல் தட்டும்
தொலைபேசி மணி..
தனிமையென்பதே மறந்துபோகுமே..
அது இன்றுவரை தொடரத்தான் செய்கிறது..

இப்படித்தான்..
அப்போது வந்த நம் காதல்..
இப்போது இருப்பதுபோலவே
எப்போதும் தொடரும்...

நாம் இணைந்துள்ளது -
மனதால்..
உடலால்..
உணர்வால்..
உயிரால்.. உண்மையாய்!!!.....

ஆதலால்..
அப்போது வந்த நம் காதல்..
இப்போது இருப்பதுபோலவே
எப்போதும் தொடரும்...

இளசு
07-04-2003, 05:04 PM
மூன்றும் மூன்று முத்துகள்.
முக்கவி திறம் எண்ணி
ஆனந்தக் கண்ணீர் முத்துகள்.....

திளைக்கின்றேன்...
களிக்கின்றேன்...
கனவு பலித்ததே... நானும்
தீர்க்கதரிசியா....???

chezhian
07-04-2003, 08:00 PM
வான வீதியில்
நீந்திச் சென்ற மேகத்தை
பூமியில் ஒரு பச்சை நங்கூரம்
நிறுத்திப் பொழியவைத்த
இயற்கை தந்ததடி
இருவருக்கும் ஒரே உணர்வு
எப்போது என்ற ஆராய்ச்சி வீண்
இனி எப்போதும் உனக்காக பொழிய நான்.

லாவண்யாஜி தந்த அருமையான கவிதைக்கு
பாராட்டு பதிலாய் என் கிறுக்கல்.

puppy
08-01-2004, 06:13 AM
அருமை கவிஞர்களே.........

Nanban
08-01-2004, 07:21 AM
எப்போது வந்திருக்கும் காதல், எப்போது போயிருக்கும் காதல், இன்னமும் தொடர்கிறது காதல் - மூன்று வித்தியாசப் பார்வைகள்.......

அருமையான காதல் கவிதைகள்!

இக்பால்
08-01-2004, 07:32 AM
விழுந்து உருண்டு...
எல்லாம் ஒன்று திரண்டு...
வந்தது இந்த காதல்.
பாராட்டுக்கள் அனைவருக்கும்.