PDA

View Full Version : அன்றொரு நாள்: ஆகஸ்ட் 20



innamburan
19-08-2011, 07:15 PM
அன்றொரு நாள்: ஆகஸ்ட் 20
சில சமயங்களில் ஒவ்வாத உவமைகள் உண்மை உரைக்க பயன் படலாம். அவற்றிலொன்று சோவியத் கம்யூனிஸ்ட்களை ஶ்ரீ கிருஷ்ண பகவானின் யாதவர்களுடன் ஒப்பிடுவது. அதாவது அவர்களும் உலக்கை கொழுந்துகள், ஒருவரை ஒருவர் வெட்டி சாய்ப்பதில்! கொடுங்கோல் மன்னனை ஒழிக்க வந்த சூழ்ச்சியானது புரட்சியில் கொண்டு போய் விட, படுகொலைகள் பல ஆன பின், ஆட்சி பறிப்பு நடையேறி, அதன் விளைவாக,மென்ஷ்விக்/போல்ஷ்விக்/லெனினிஸ்ட்/கம்யூனிஸ்ட்/ட்ராட்ஸ்கியன்/ஸ்டாலினிஸ்ட் வகையறா உள்குத்துக்கள் சட சடக்க, யதேச்சதிகாரம் தலையெடுத்து, கொடுங்கோல் ஆட்சி நிலைக்கு வந்தது. முதல் உலகயுத்ததிலிருந்து, விவேகத்துடன் ஜகா வாங்கியது,சோவியத் ரஷ்யா. இரண்டாம் உலக யுத்தத்தில், ஹிட்லரின் மதியீனத்தால், கம்யூனிஸ்ட் கொடுங்கோல் ஆட்சி, முதலாளித்துவத்துடன் கை கோத்தது. ருசி கொண்ட பூனையாயிற்று. இன்று முதலாளித்துவம். அங்கு தலை விரித்தாடுகிறது. அது போகட்டும்.
உலக்கை கொழுந்துகள் ~அண்ணன்/தம்பி கொலை ~புரட்சியோ/கிரட்சியோ! ~ஆட்சி பறிப்பு ~ நாடு குலைந்தது ~முதலாளித்துவம் கொடி கட்டி ~கம்யூனிசம், நாடி துடிக்க... என்ற வரிசையின் கொலையுண்ட அரசியல் பலி கடாக்களில் ஒருவர் லெவ் டேவிடோவிச் ப்ரான்ஸ்டீன். ‘குறையொன்றுமில்லை. வாழ்வின் கொடுப்பினையும், மென்மையும் கிடைக்கவில்லை. அவ்வளவு தான்’ என்ற இந்த சேக்காளியை படுகொலை செய்து ஸ்டாலின் தன் வலிமையை கூட்டிக்கொண்டார்; ஆளுமையை நிலை நாட்டிக்கொண்டார்.
இத்தனைக்கும், லெவ் டேவிடோவிச் ப்ரான்ஸ்டீன் 1896 லியே புரட்சியாளர்களுடன் இணைந்த தலைமாந்தன். சிறை அதிகாரியின் பெயரில் போலி பாஸ்போர்ட்டு எடுத்து இங்கிலாந்து சென்றார், இவர். லெனினை லண்டனில் சந்தித்தார். இருவரும் ‘பொறி’ என்ற புரட்சி இதழை பிரசுரம் செய்வதில் இணைந்தனர். லெனினின் சர்வாதிகாரப்போக்கைக் கண்டு 1903 அவரிடமிருந்து விலகினார். 1905 ல் சுழற்சி புரட்சியொன்று உலகெங்கும் நிரந்தரமாக வளைய வந்து கொண்டிருக்கும் என்ற விந்தையான கருத்து ஒன்றை கூறி, நாடு கடத்தப்பட்டார். 1917ல் ரஷ்யாவுக்கு திரும்பி,கெரன்ஸ்கியின் தற்காலிக அரசினால் கைது செய்யப்பட்டாலும், அக்டோபர் 1917 புரட்சியில் பெரும்பங்கு வகித்தார். 1918இல் ப்ரெஸ்ட்-லிடோவ்ஸ்க்கில் நடந்த சபைக்கு, ரஷ்ய குழுவின் தலைவர் இவரே. 1919லிருந்து 1927 வரை பொலிட்பீரோவில் அங்கத்தினராக இருந்த ட்ராட்ஸ்கி ( லெவ் டேவிடோவிச் ப்ரான்ஸ்டீன்) யுத்த அமைச்சர் (கமிஸார்) பதவி வகித்தார்; உள்நாட்டுப் போரை நடத்தினார். எண்ணூறு ஆயிரத்திலிருந்து 3 மிலியன் ஆயிற்று, ராணுவ பலம். 1924ல் லெனின் இறந்த போது, தலைமைக்குப் போட்டி: ஸ்டாலின் x ட்ராட்ஸ்கி. ஸ்டாலின் கை ஓங்கியது. ட்ராட்ஸ்கி பதவி இறக்கப்பட்டார். (யாராவது அறிஞர் அண்ணாவின் வாரிசுகள், அது, இது, என்று பேசினால், நான் பொறுப்பு அல்ல.). கடாசப்பட்டார். கஷகஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கிருந்தும் 1929ல் துரத்தப்பட்டார். மெக்சிகோவில் சரண் புகுந்தார். ஸ்டாலினுடைய கூலியொருவன் கோடரியால் இவரை வெட்டிய தினம் ஆகஸ்ட் 20, 1940. மறு நாள் செத்துப்போனார்.
சமாச்சாரம் என்னவென்றால், இவர் ஸ்டாலினின் வாழ்க்கைச்சரித்திரம் எழுதிக்கொண்டிருந்தார். அதில் ஸ்டாலின் லெனினை கொன்றுபோட்டதாக, தகவல். அதான் கொலை விழுந்தது. ‘விலங்குப்பண்ணை’ என்ற நூலில் கம்யூனிச கொடுங்கோலாட்சியை விமரிசித்த ஜார்ஜ் ஆர்வெல், மே 4, 1946 தன்னுடைய பிரசுரகர்த்தாவுக்கு எழுதிய கடிதத்தில், ரஷ்யாவுக்கு பயந்து, இவர் எழுதிய ஸ்டாலினின் வாழ்க்கைச்சரித்திரத்தை பதிப்பிக்க யாரும் முன் வரவில்லை என்றும், வரலாற்றின் பல கூறுகளை அறிய, இத்தகைய நூல்கள் பொது மன்றத்திலிருக்க வேண்டும் என்றும் சொன்னார். வரலாறு படாத பாடு தான் படுகிறது. யார் சமச்சீர் வரலாறு எழுதப்போறா செந்தமிழ்நாட்டில்!?
இன்னம்பூரான்
20 08 2011


http://fc03.deviantart.net/fs42/f/2009/165/7/f/Trotsky_stamp_by_jsaturno.png



http://www.newstatesman.com/international-politics/2010/03/trotsky-stalin-russian-lenin

http://www.orwelltoday.com/trotskyst

நாஞ்சில் த.க.ஜெய்
20-08-2011, 06:12 AM
ட்ராட்ஸ்கி யின் மறுபட்டதோர் வரலாறு .....