PDA

View Full Version : உறைக்குள்ளிருந்தே உயிர்மாய்க்கும் கத்தி!கீதம்
19-08-2011, 10:01 AM
சுவாதீனத்துடனிருங்கள்!
எந்நேரமும் எதிர்கொள்ளநேரிடும்
வலியின் சுவையறிந்த நாவுகளை!

வன்சொற்கள் விதைத்து
ரணங்களை அறுக்கும் கலையில்
கைதேர்ந்த அவை,
பதுக்கும் வலிகளையும் கண்டறிந்து
பரிகசிக்கும் வல்லமை பெற்றவை!

மேலாடையில் ஊர்ந்துசெல்லும்
சிற்றெறும்பைத் தட்டிவிடுவதுபோல்
அசட்டையாய் இருக்கக்கூடும் எனினும்,
குத்தீட்டிவெல்லும் கொடுஞ்சொற்கள் ஏந்தி
உதட்டு உறைக்குள் பதுங்கி
உங்கள் பலவீனத்தைப் பார்த்திருக்கும் அவற்றிடம்
உங்கள் பாசாங்கு பலிக்காமல் போகலாம்.

பாராமுகமாய் ஒதுங்கும்போதும்
பாய்ந்திழுத்துப் பேசி வளைத்து
வன்மப்புன்னகையினுள் வெஞ்சினம் மறைத்து
விடைபெறும் தருணம்
விருட்டென்று குரல்வளையில் செருகப்படும்
கூரிய சொற்களின் வீரியம் குறைக்கக்கூடும்,
மற்றுமொரு தருணம்
முனைப்புடன் தாக்கும் சொற்கள்…
முன்னிலும் கூர்தீட்டப்பட்டும்
முனைகளில் நச்சு தோய்க்கப்பட்டும்!

சுதாரித்துக்கொள்ளுங்கள்!
வக்கணை பேசும் இந்நாவிலும்
வஞ்சனை கொஞ்சம் இருக்கலாம்.

Nivas.T
19-08-2011, 11:37 AM
ஒரு நாணத்திற்கு இரண்டு முகங்கள்

எது உண்மையான முகம் என்று புலப்படுவதே இல்லை

தீயவைக்குள் உள்ள நல்லெண்ணம் என்றும் பாதிப்பதில்லை
நன்மைபோல் நடிக்கும் தீயஎண்ணம் என்றும்
பாதிக்காமல் விடுவதில்லை

பாதிப்புகளின் அனுபவம்
சொல்லம்புகளின் வலி

கவிதை வரிகளில் உணரமுடிகிறது

ஜானகி
19-08-2011, 03:09 PM
சகிப்புத்தன்மையும், மௌனமும் தான் நம்மிடம் இருக்கும் துருப்பிடித்த கேடயங்கள்.......அவற்றை உரிய விதத்தில் கையாண்டால் ....பயன் தெரியலாம்...இருந்தாலும் அதற்குள், தீச்சொற்களெனும் அமிலம் நம் மனதை சல்லடையாக்கிவிட்டிருக்கும்..........குறைந்தபட்சம் நாமாவது அந்தக் கொடிய ஆயுதத்தைப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளலாமே...

Ravee
19-08-2011, 07:04 PM
வார்த்தைகள் என்னும் வாள் வீச்சில்
உயிர் அற்றுப் போய் விழுந்த முகங்கள்
தனித்து போன நாக்குடன் பேச
எவர் முகமும் இல்லை அங்கே
தனிமை கொடுமைகள் அறிவுறுத்த
தயவு செய்யச்சொல்லி
எத்தனை முறை மன்னிப்புக் கேட்டும்
பாரா முகமாய் போனது முகங்கள்
நாவால் நல்லது கூறாமல்
வார்த்தைகளால் பொசுக்கும் போது
யார் இருப்பார் இவர் அருகே .... :frown:

அருமையான சிந்தனை அக்கா ....

innamburan
19-08-2011, 07:27 PM
சுவாதீனத்துடனிருங்கள்! சுதாரித்துக்கொள்ளுங்கள்! இவை வஞ்சனையில்லா விழ்ப்புணர்ச்ச்சி எச்சரிக்கைகள்.

நாஞ்சில் த.க.ஜெய்
20-08-2011, 04:54 PM
ஒருமுறைக்கு இருமுறை படித்தேன்.. நாவினை காக்க மறந்த மனிதனால் காயம் பட்ட மனதின் எண்ணவோட்டத்தை பிரதிபலிக்கும் கவிதை வரிகள் அற்புதம் அக்கா .....

அக்கா தவறாக நினைக்காவிடில் எனக்கு தோன்றிய ஒரு கருத்தை கூறுகிறேன் ..

மேலாடையில் ஊர்ந்துசெல்லும்
சிற்றெறும்பைத் தட்டிவிடுவதுபோல்
அசட்டையாய் இருக்கக்கூடும் எனினும்,

ஆனால் இந்த கவிதையின் இந்த வரிகள் மட்டும் ஏனோ இக்கவிதையுடன் பொருந்துவது போல் தெரியவில்லை ...

கௌதமன்
20-08-2011, 05:03 PM
ஆயுதமாயிருந்தால் போரிடலாம்
சிலருக்கு அதுவேதான் கேடயம்,
சிலருக்கு மனப்புண்ணின் அரிப்பை
சொரிந்து சுகமளிக்கும் கை,
சிலருக்கு ஆற்றாமையை தீர்க்கும் அருமருந்து,
சிலருக்கு பொறாமையைத் தணிக்கும் நீர்,
சிலருக்கு அதுவே தீராத நோய்.
எப்போதும் தாக்கப்படலாம் என்றே
எதிர்பார்த்து இருங்கள்
தாக்குதல் இல்லையென்றால்
அதற்கான சந்தர்ப்பத்தை அளியுங்கள்
பாவம் பரிதாபத்துக்குரியவர்கள்.

M.Jagadeesan
20-08-2011, 05:11 PM
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
நிலைகெட்டுப்போன நயவஞ்சகனின் நாக்குதான் அது.

அமரன்
20-08-2011, 08:47 PM
அக்கா..

இதைப் படியுங்களேன்..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14419

இந்தக் கவிதைக்கும் அங்கிருக்கும் பின்னூட்டங்கள் மிக மிகப் பொருத்தமாக இருக்கும்..

கீதம்
21-08-2011, 01:06 AM
ஒரு நாணயத்திற்கு இரண்டு முகங்கள்

எது உண்மையான முகம் என்று புலப்படுவதே இல்லை

தீயவைக்குள் உள்ள நல்லெண்ணம் என்றும் பாதிப்பதில்லை
நன்மைபோல் நடிக்கும் தீயஎண்ணம் என்றும்
பாதிக்காமல் விடுவதில்லை

பாதிப்புகளின் அனுபவம்
சொல்லம்புகளின் வலி

கவிதை வரிகளில் உணரமுடிகிறது

அந்த விநோதக் கத்திக்குத் தப்பியவர் யார்? உயிர்மாய்க்காவிடினும் உரசியாவது சென்றிருக்கும் எவரையும் எப்போதேனும்! பின்னூட்டத்துக்கு நன்றி நிவாஸ்.

கீதம்
21-08-2011, 01:09 AM
சகிப்புத்தன்மையும், மௌனமும் தான் நம்மிடம் இருக்கும் துருப்பிடித்த கேடயங்கள்.......அவற்றை உரிய விதத்தில் கையாண்டால் ....பயன் தெரியலாம்...இருந்தாலும் அதற்குள், தீச்சொற்களெனும் அமிலம் நம் மனதை சல்லடையாக்கிவிட்டிருக்கும்..........குறைந்தபட்சம் நாமாவது அந்தக் கொடிய ஆயுதத்தைப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளலாமே...

ஆயுதம் பயன்படுத்தாமல் வெறும் கேடயம் சுமந்தே எதிரிகளைக் களைப்படையச் செய்யலாம் என்கிறீர்கள். :icon_b: பின்னூட்டத்துக்கு நன்றி ஜானகி அம்மா.

கீதம்
21-08-2011, 01:12 AM
வார்த்தைகள் என்னும் வாள் வீச்சில்
உயிர் அற்றுப் போய் விழுந்த முகங்கள்
தனித்து போன நாக்குடன் பேச
எவர் முகமும் இல்லை அங்கே
தனிமை கொடுமைகள் அறிவுறுத்த
தயவு செய்யச்சொல்லி
எத்தனை முறை மன்னிப்புக் கேட்டும்
பாரா முகமாய் போனது முகங்கள்
நாவால் நல்லது கூறாமல்
வார்த்தைகளால் பொசுக்கும் போது
யார் இருப்பார் இவர் அருகே .... :frown:

அருமையான சிந்தனை அக்கா ....

பாராமுகமாய் ஒதுங்கும்போதும்
பாய்ந்திழுத்துப் பேசி வளைத்து

என்ற வரிகள் இவர்களுக்காகவே சொல்லப்பட்டது ரவி. ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காதாமே... இவர்களின் நிலையும் அப்படித்தானோ? பின்னூட்டத்துக்கு நன்றி ரவி.

கீதம்
21-08-2011, 01:15 AM
சுவாதீனத்துடனிருங்கள்! சுதாரித்துக்கொள்ளுங்கள்! இவை வஞ்சனையில்லா விழ்ப்புணர்ச்ச்சி எச்சரிக்கைகள்.

உங்கள் வெள்ளைமனம் இந்த வரிகளில் பிரதிபலிக்கிறது. பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா.

கீதம்
21-08-2011, 01:24 AM
ஒருமுறைக்கு இருமுறை படித்தேன்.. நாவினை காக்க மறந்த மனிதனால் காயம் பட்ட மனதின் எண்ணவோட்டத்தை பிரதிபலிக்கும் கவிதை வரிகள் அற்புதம் அக்கா ......

பின்னூட்டத்துக்கு நன்றி ஜெய். நாவால் காயப்படாதவரோ, காயப்படுத்தாதவரோ நம்மில் எத்தனைப் பேர்?


அக்கா தவறாக நினைக்காவிடில் எனக்கு தோன்றிய ஒரு கருத்தை கூறுகிறேன் ..

மேலாடையில் ஊர்ந்துசெல்லும்
சிற்றெறும்பைத் தட்டிவிடுவதுபோல்
அசட்டையாய் இருக்கக்கூடும் எனினும்,

ஆனால் இந்த கவிதையின் இந்த வரிகள் மட்டும் ஏனோ இக்கவிதையுடன் பொருந்துவது போல் தெரியவில்லை ...

இதில் தவறென்ன இருக்கிறது? தோன்றுவதை தாராளமாய்ச் சொல்லுங்கள்.

மனம் குதறும் வார்த்தைகளை அலட்சியப்படுத்திச் செல்வதற்கு சொல்லப்பட்ட உவமை அது. இதைவிடப் பொருத்தமாய் அந்நேரம் எனக்கு வேறெதுவும் தோன்றவில்லை ஜெய். :icon_p:

கீதம்
21-08-2011, 01:27 AM
ஆயுதமாயிருந்தால் போரிடலாம்
சிலருக்கு அதுவேதான் கேடயம்,
சிலருக்கு மனப்புண்ணின் அரிப்பை
சொரிந்து சுகமளிக்கும் கை,
சிலருக்கு ஆற்றாமையை தீர்க்கும் அருமருந்து,
சிலருக்கு பொறாமையைத் தணிக்கும் நீர்,
சிலருக்கு அதுவே தீராத நோய்.
எப்போதும் தாக்கப்படலாம் என்றே
எதிர்பார்த்து இருங்கள்
தாக்குதல் இல்லையென்றால்
அதற்கான சந்தர்ப்பத்தை அளியுங்கள்
பாவம் பரிதாபத்துக்குரியவர்கள்.

நாவெடுக்கும் பல்வேறு அவதாரங்களை நன்றாகவே உரைத்துள்ளீர்கள் கெளதமன். ஒவ்வொன்றையும் தனித்தறிய இயன்றது உங்கள் பலமே. இறுதியில் பரிதாபம் காட்டியதும் உங்கள் பெருந்தன்மையே...

அருமையான பின்னூட்டத்தால் அசத்திவிட்டீர்கள். நன்றி.

கீதம்
21-08-2011, 01:49 AM
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
நிலைகெட்டுப்போன நயவஞ்சகனின் நாக்குதான் அது.

அன்றே சொல்லிவிட்டார்
பார்புகழும் வள்ளுவர் தொடர்ந்து
பாட்டுக்கோட்டை கட்டியவரோடு
பற்பல பெருங்கவிஞர்களும்!
என்றாலும் நற்றமிழ் மன்றத்தில்
நம் பங்கை நவிலும் வாய்ப்பை
நாமிழத்தல் முறையோவென்னும்
நைப்பாசை உந்தித்தள்ள
ஏற்றிவிட்டேன் என்கவியை!

பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா.

கீதம்
21-08-2011, 01:57 AM
அக்கா..

இதைப் படியுங்களேன்..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14419

இந்தக் கவிதைக்கும் அங்கிருக்கும் பின்னூட்டங்கள் மிக மிகப் பொருத்தமாக இருக்கும்..

சுட்டியதற்கு நன்றி அமரன்.

திமிறித் திணறும் அடங்காமிருகம் கண்டு அரண்டுபோனேன்.:sprachlos020:

அசரவைக்கும் அனைத்துப் பின்னூட்டங்களும் கண்டு அயர்ந்துபோனேன். :icon_b:

அந்நாளில் நானும் ஓர் அங்கமாய் மன்றில் இல்லையே என்று மருகிப்போனேன்.:frown: