PDA

View Full Version : அன்றொரு நாள்: ஆகஸ்ட் 19innamburan
18-08-2011, 07:28 PM
அன்றொரு நாள்: ஆகஸ்ட் 19
ஜனகரை ராஜரிஷி என்பார்கள். அவரது ராஜாங்கம் தாமரை இலை நீர். சிருங்கார சதகம் எழுதிய பர்த்துருஹரி தான், நீதி சதகம் படைத்த ராஜா; வைராக்ய சதகம் படைத்த ராஜரிஷி. புவனேஸ்வரத்தை அடுத்து ஓடுகிறது துக்கி என்ற நதி. அங்கு பிணக்குவியல், கலிங்கத்து போரில். கரையோரம் நின்ற நான் விக்கித்துப்போனேன். வாகை சூடும் தருணத்தில், அமைதி நாடி, போரை நிறுத்திய சக்ராதிபதி அசோகனின் ஞான நிலையை வியந்து. அவர் ஒரு ராஜரிஷி. புலந்தர் தர்வாஜா (கதவு) பார்த்திருக்கிறீர்களோ, ஆக்ரா அருகில் உள்ள ஃப்தேஹ்பூர் சிக்ரியில்? தீன் இலாஹீ என்று சர்வமதசம்மதம் நாடிய அக்பர், சம்ராட்டா? ஃபக்கீரா?
நான் சில சமயம் நினைத்துக்கொள்வது உண்டு. இளங்கோவடிகள் அரியாசனம் ஏறியிருந்தால்!கோயில் கட்ட அரசர்கள் சிரம் தாங்கிய கற்கள் வந்திருக்கமாட்டா. மணிமேகலை என்ற கருணைக்கடலாகிய காப்பியம் தோன்றிருக்காது. சிலப்பதிகாரம் வந்தால் தானே, மணிமேகலை. இத்தனை பீடிகை எதற்கு? கிரேக்க தத்துவ ஞானி ப்ளேட்டோ வருந்தி வருந்தி கேட்டது, இந்த ராஜரிஷி தான்~the Philosopher King.
ஆகஸ்ட் 19, 121 கி.பி ராஜரிஷி மார்க்கஸ் ஆரேலியஸ் என்ற ரோமாபுரி வெண்குடையானின் ஜன்மதினம். அவருடைய ‘தியானம்’ என்ற இறவா நூல், தத்துவ போதனை அளிப்பது மட்டுமல்லால், அவருடைய ஆசான் எபிக்டடஸ்ஸின் பாட நூலின் மூன்று தலைப்புகளின் அடியில், தியான பயிற்சிகளுடன் அமைந்திருப்பது, குறிப்பிடத்தக்கது. அவற்றின் இலக்கு: அவரவர் தன்னுடைய தீர்மானங்களை அலசுவதும், விசாலமானதொரு பிரபஞ்ச அணுகுமுறையை வளர்த்துக்கொள்வதும் என்க. அதற்கு ‘நானே எனக்கு எழுதியது’ என்று ஒரு பெயர். அவருடைய தியான நூல் ஒரு வகையில் பதஞ்சலி சூத்ரங்களை போல என்று நான் சொன்னால், அதற்கு விகல்பம் கற்பிக்க வேண்டாம்.
ரோமானியர்கள் இங்கிலாந்தை ஒரு காலத்தில் ஆக்ரமித்திருந்தார்கள். (இன்றும் அங்கு ஹாட்ரியன் சுவர் என்று ஒன்று உளது.) அக்காலத்து அரசனான ஹாட்ரியனே, இவருக்கு கல்வி அளிப்பதில் கவனம் செலுத்தினார். காலாகாலத்தில் தர்க்கவாதம், தத்துவம் எல்லாம் கற்றுக்கொண்ட மார்க்கஸ் ஆரேலியஸ் 169 கி.பி.யில் ஏகாதிபதி சக்கரவர்த்தியானர். காலத்திக்கேற்ப சமர்கள் பல புரிந்தார். அதற்கெல்லாம் மேலாக, ஏதென்ஸ் மாநகரில், நான்கு தத்துவ விசாரணை மையங்கள் அமைத்தார்.
அவரின் ‘அசையா நிலை’ (Stoicism) தத்துவத்தை பற்றி சில வரிகள்: அதன் படிநிலைகள் மூன்று.~
விருப்பும் வெறுப்பும்;
செய்யவா? /வேண்டாமா? என்ற உடனடியாக, முன்பின் சிந்திக்காமல் இயங்கும் நிலை;
ஏமாறாதே/அவசரக்கோலம் அள்ளித் தெளிக்காதே/எளிதில் மசியாதே என்ற எச்சரிக்கைகள்.
முதற்கண்ணாக, இயற்கையை புரிந்து கொண்டு, அதற்கிணங்க விருப்பங்களை அமைத்துக்கொள். எண்ணங்களை சிதறவிடாதே. உடனடியாக செயலில் இறங்கும்போது, நன்னடத்தையை நோக்கி நட. ஞானியை போல் நட என்று சொல்லாதே; அவரைப்போல் நடந்து காட்டு.
அவருடைய ஆசான் எபிக்டடஸ்ஸின் அறிவுரை: வாழ்க்கை நமக்கு குறிப்பால் உணர்த்துவது அன்றாட நடப்பு. அவற்றை வைத்து நாம் கருத்துக்கள்/சிந்தனைகள்/எண்ணங்கள்/ தீர்மானங்களென அமைத்துக் கொள்கிறோம். நம் சம்மதமும் அங்கு உள்ளடக்கம். எனவே, சிஷ்யப்பிள்ளைகளே! குறிப்பால் உணர்ந்ததை எல்லாம் வைத்து தீர்மானக்கோட்டைகள் கட்ட வேண்டாம். இந்த பின்னணியில் பார்த்தோமானால், மார்க்கஸ் ஆரேலியஸ்ஸின் ‘தியானம்’ எழுதும்போதே தத்துவப்பயிற்சியாக அமைந்து விட்டது எனலாம்.
“குறிப்புகளிலிருந்து கற்பனைக்கு ஓடாதே; முன்பின் சிந்திக்காமல் செயல்படாதே; விருப்பத்தைத் தணி.(தியானம்:9.7)
மார்க்கஸ் ஆரேலியஸ், தனது பயிற்சிகள் மூலமாக, தத்துவங்களை அறிந்து கொள்வதிலும், தன்னுடைய வாழ்நெறியை மேன்மை படுத்துவதிலும், ஆத்ம சுத்திகரிப்பிலும், நன்னடத்தை பயிலுவதிலும், ஏன், தன் வாழ்க்கையை உன்னதமானதாக உயர்த்திக்கொள்வதிலும் வெற்றி கண்டார் எனலாம். வேறு என்ன வேண்டும் பராபரமே?
மார்க்கஸ் ஆரேலியஸ் 180 கி.பி.யில் விண்ணுலகம் அடைந்தார். அறிஞர்கள் அவரது காலத்தில் இந்தியாவிலும், குறிப்பாக தமிழ் நாட்டிலும், தத்துவ விசாரணைகள் எப்படியிருந்தன? ராஜ்யபாரமும் ஞானவைராக்கியமும் இணைந்து செயலாற்றினவா? என்றெல்லாம் ஆராய்வளார்க.அதற்கு ராஜாஜி அவர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதிய ‘மார்க்கஸ் ஆரேலியஸ்’ என்ற நூல் ஒரு கலங்கரை விளக்கு என்க.


இன்னம்பூரான்.
19 08 2011
http://www.statusint.com/photo-coins/5448.jpg[/URL]


உசாத்துணை:
http://www.iep.utm.edu/marcus/