PDA

View Full Version : அன்றொரு நாள்: ஆகஸ்ட் 18innamburan
17-08-2011, 07:00 PM
அன்றொரு நாள்: ஆகஸ்ட் 18
1. நூரத்தீன் அப்துர் ரஹ்மான் ஜாமி:
“இதென்ன மாயம் என்றா கேட்கிறாய்?
அதை உன் இதயத்தில் தேடுவாயாக.
எதை நீ நாடுகிறாய்? தம்பி! ஓ!
அதை! அந்த முடிச்சுப்போட்ட மர்மத்தையா?
எல்லாம் அறிந்த இறைவனை கேள்.
அவனல்லவோ வாய்மையறிந்தவன்!

பிஃட்ஸ்கெரால்ட் ஒரு ஆங்கில ஆன்மீகப் புலவர். அவர் நூரத்தீன் அப்துர் ரஹ்மான் ஜாமியின் ‘‘சாலமனும் அப்ஸலும்’ஆன்மீகக் கவிதை ஒன்றை மொழி பெயர்த்தார். இந்த பகுதி நீண்ட கவிதையின் ஈற்றடி. என்னால் இயன்ற எளிய தமிழ் வடிவம். கவிதைக்கும் எனக்கும் காத தூரம். அவருடைய ஆங்கில வடிவம் கீழே.
This is the Meaning of This Mystery
Which to know wholly ponder in thy Heart,
Till all its ancient Secret be enlarged.
Enough — The written Summary I close,
And set my Seal:
THE TRUTH GOD ONLY KNOWS.ஆகஸ்ட் 18, 1414 நூரத்தீன் அப்துர் ரஹ்மான் ஜாமியின் ஜன்மதினம். 81 வயது வரை வாழ்ந்த அந்த கவிஞர்/ஞானி/புலவர்/வரலாற்று ஆசிரியரின் என்றும் மங்காத புகழ், கருணைக்கடலான அவருடைய ஸுஃபீ கவிதைகள். அவருக்கு ஹீராட் முனிவர் என்று ஒரு பெயர் உண்டு. அந்த ஊரில் தான் அவருடைய பன்முகச்சேவைகள். மென்மையும், நுட்பமும், ஆன்மீகமும், உள்ளார்ந்த அனுபவங்களும், முனீந்திர குணாதிசயங்களை வரித்துக் கொண்ட சான்றோர்களின் அறிவுரைகளை சாவதானமாக, மனம் நிம்மதியில் மிதக்கும் போது மட்டுமே கிரஹிக்கமுடியும்.இப்போதைக்கு ஒரு திவலை மட்டும், உங்கள் பார்வைக்கு.
“...தெய்வமே! நீ எனக்கு. நான் உனக்கு. ஒன்றிப்போனோம். ஆனால், நீ இல்லாமல் நானில்லை. நானில்லாமலும் நீ சாஸ்வதமே...’

2.குண்டூர் கிரஹணமும், ஹீலியம் தனிமமும்.
ஜேன்ஸன் என்ற ஃபிரஞ்சு வானவியல் விஞ்ஞானி பூமத்திய ரேகை ஆய்வுக்கு பெரு நாட்டுக்கும், சூர்யக்கதிர் ஆராய்ச்சிக்கு இத்தாலியும், ஸ்விட்சர்லாந்தும், காந்தம் பற்றிய சோதனைகளுக்கு அசோரிஸ்ஸ்க்கும், வெள்ளி கிரகத்தின் பாதை அறிய ஜப்பானுக்கும், அல்ஜீயர்ஸ்ஸுக்கும், சூர்யகிரகணங்களை ஆராய அல்ஜீயர்ஸ், சையாம், ஸ்பெய்ன் எல்லாம் சென்றவர், 1868ம் வருட கிரகணத்தைக் காண, நமது ‘புகையிலை புகழ்’ குண்டூருக்கும் வந்தார். அச்சமயம் ஒரு மஞ்சள் சூர்யக்கதிரொன்று அவர் கண்ணில் பட, அதை ஆராய்ந்து, அது புதியதொரு தனிமத்தின் கீற்று என்றார். ஆனால் லேசில் மற்றவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. இந்த புவியில் தோன்றாத தனிமம் எதுவும் பிரபஞ்சத்தில் வேறு எங்கும் இதுவரை காணப்படவில்லை. ‘கீற்றுமில்லை;காற்றுமில்லை’ என பொருள்பட எள்ளி நகையாடினர். ஆனால், அதே வருடம் லாக்கியர் என்ற விஞ்ஞானி ஜேன்ஸன் குண்டூரில் கண்டுபிடித்தை ஆய்வு மூலம் உறுதி படித்தனார். சூர்யனுக்கு கிரேக்க மொழியில் ஹெலியோஸ் என்று பெயர். அந்த அடிப்படையில் இந்த தனிமத்திற்கு ஹீலியம் என்று நாமகரணமாயிற்று. என்னை கேட்டால், குண்டூரம் என்ற பெயர் தான் நியாயம்!

3.பெண்ணின் குரல்.
தாய்க்குலமே! கவலையற்க. நம் சட்டசபைகளில் மூன்றில் ஒரு பங்கு (சிவபெருமான் வேயுறு தோளிபங்கன் ஆனார் என்பது வேறு விஷயம்!) பெண்களுக்கு தரமாட்டோம் என்பவர்கள் போன்ற ஆண்வர்க்கத்தினர் எங்கும் இருந்திருக்கின்றனர். ஃபேன்னி ரைட் வாக்குரிமை நாடியது 1820. அந்தோனி மாமியும், ஸ்டாண்டன் மாமியும், அமெரிக்க அரசியல் சாஸனத்தை இது விஷயமாக திருத்தக் கேட்டுக்கொண்டது, 1878. இத்தனைக்கும் பெண்ணுக்கு வாக்குரிமை கிடையாது என்று திட்டவட்டமாக, ஒரிஜினல் சாஸனம் மறுக்கவில்லை. ஒரு நூற்றாண்டு போராட்டத்திற்குப் பின் தான் ஆகஸ்ட் 18, 1920 (நேற்று நடந்தால் போல் இருக்கிறது, வரலாற்றுக்கணக்கில்!) பெண்ணினத்திற்கு வாக்குரிமை கிடைத்தது, தாராளமய அமெரிக்காவில் என்றால், நம் லல்லு~புல்லு கட்டப்பஞ்சாயத்து பூமி தனில், எத்தனை யுகங்கள் ஆகும். எதற்கும் கலி கழியட்டும்! என்ன சொல்றேள்?
இன்னம்பூரான்
18 08 2011
:http://bks9.books.google.com/books?id=3r4XAAAAYAAJ&printsec=frontcover&img=1&zoom=1&edge=curl
http://rlv.zcache.com/helium_stamp_postage-p172157560055713364anr4u_400.jpg
http://www.nps.gov/wori/historyculture/images/Postage_Stamp.jpg


உசாத்துணை:
http://beutel.narod.ru/write/yusuf.htm
http://www.chemistryexplained.com/elements/C-K/Helium.html
http://www.spartacus.schoolnet.co.uk/USAsuffrage.htm
http://www.ghazali.org/articles/che-saari.pdf