PDA

View Full Version : அன்றொரு நாள்: ஆகஸ்ட் 17innamburan
16-08-2011, 07:18 PM
அன்றொரு நாள்: ஆகஸ்ட் 17
ஒரு நாள் என் தந்தையிடமிருந்து ஒரு கண்டனக்கடிதம்: ‘நீ ஒரு குண்டா. நானே வந்து உன்னை போலீசில் ஒப்படைக்கிறேன்.’ 1947ம் வருடம் ஒரு சிக்கலான வருடம். விடுதலை நெருங்க, நெருங்க ஆனந்தம். பிரிவினையும், உலகம் கண்டிராத வகையில் இன்னலும், வன்முறையும் மிகுந்த புலன் பெயர்தலும் சோகம். நானும் ராஷ்டீரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் சேர்ந்து, சர்ச்ச்ங்கச்சாலக் (தலைவர்) குரு. எம். எஸ். கோல்வால்கரை தரிசிக்கத் திருச்சி பயணம். அங்கே ஆப்தே என்பவர் ஒரு கேலி சித்திரம் காண்பித்தார்: காந்திஜி அழுத்திப்பிடிக்க, நேருஜி பாரதமாதாவின் கைகளை துண்டிப்பது போல். அதை எதிர்த்து நான் வெளியேறி விட்டேன். ஆனால், வீட்டு வாசலில் போலீஸ். அம்மா என்னை அடித்தாள். வெள்ளைக்காரன் போலீஸ் வந்த போது கவலை பட்டார், அப்பா. கோபிக்க வில்லை. இந்திய போலீஸ் வந்தபோது கவலையுடன், கோபமும் சேர்ந்து கொண்டது. அப்போது எனக்கு ஸர் சிரில் ராட்கிளிஃப்பை பற்றி தெரியாது. அவரும் முன் பின் அறியாத சிக்கலான பணியை தப்பும் தவறுமாக செய்திருக்கலாம்/ அது அரசியல்/ ஆளுமை அவசரமாக இருந்திருக்கலாம் அல்லது அது வெத்து சடங்காக இருந்திருக்கலாம் என்பதெல்லம் தெரியாது.

ஆகஸ்ட் 17, 1947: ராட்கிளிஃப்பின் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோடுகள்/ பிரிவினை பற்றிய திட்டம் அறிவிக்கப்பட்டது. எப்படி என்கிறீர்களா? எனக்கு தெரிந்தவர் ஒருவர் இறந்து போன பின், ஊர் வாயை மூட வேண்டி, ஈமக்கிரியை இணைந்து செய்த இரு மகன்கள்: பேச்சு வார்த்தை நின்னு போச்சு. பொண்டுகளை அடக்கி வச்சாச்சு. பசங்களை ஜன்மப்பகையாக்கியாச்சு. வாசல்லெ இருக்ற இரட்டைக்கதவு நடுவேலிருந்து சுவர் எழுப்பி, வீட்டை குட்டிச்சுவர் ஆக்கியாச்சு. முகாலோபனம் கிடையாது. நோ ஸ்னானப்ராப்தி. ஆனா, சின்னவன் பெரியவன் வீட்டு மேலே அடிக்கடி கல்லெறிவான்; கட்டப்பஞ்சாயத்துக்குப் போவான். பெரியவனும் குரலெழுப்பி சின்னவனை வைவான். அந்த மாதிரி.

இந்த இந்தோ-பாகிஸ்தான் ‘குட்டிச்சுவர்’ சிக்கலை வரலாற்றாசிரியர்கள் ஊன்றி கவனிக்கவில்லை. ஸர் சிரில் ராட்கிளிஃப் எல்லை வகுப்பதில் தவறுகள் பல செய்தாலும், அரசியல் உலகில் எல்லாரையும் -பிரிட்டீஷ், இந்திய காங்கிரஸ், ஜின்னா - ‘நியாயப்படுத்தினார்’ எனலாம். 1946லியே, சிதறிக்கிடந்த இந்தியாவை கிடந்ததை கிடந்தபடி விட்டு செல்ல தயாராக இருந்த பிரிட்டீஷ் சர்க்கார், உலகம் அதை ஒப்புக்கொள்ளாது என்பதையும் புரிந்து வைத்திருந்தது. அவர்களின் தனிமொழி: ‘அது காமாசோமா என்று இருந்தாலும், நமக்கேன் கவலை.’ ராட்கிளிஃப் வகுத்த எல்லைகளால், பிரச்னை எழலாம். ஆனால், என்ன செய்தாலும் பிரச்னை. நின்னா குத்தம். ஒக்காந்தா குத்தம். பிடித்த பிள்ளையார் குரங்காக மாறியதால், டென்ஷன் ஏறி, ஏறி,1948, 1965, 1971,1999 களில் யுத்தங்கள். 1998ல் இருதரப்பும் அணுகுண்டு சோதனை, அவ்வப்பொழுது பயங்கரவாதிகளின் தாக்குதல்கள்.

எல்லை தகராறு இல்லை என்று சொல்வதற்கில்லை. எந்த அளவுக்கு ராட்கிளிஃப்பின் மேல் பழி? 1947 பிரிவினை கலகங்களுக்கு வித்திட்டது, இந்த திட்டம் என்றால் மிகையாகாது. அந்த திட்டத்தை பற்றிய வதந்திகளும், ஊகங்களும் வேறு வன்முறையை அதிகரித்தன. ஒரு ஒழுங்கான, தார்மீகமான எல்லை திட்டம் வேண்டியிருந்தது. ஆனால், இவரின் திட்டம் அப்படி அமையவில்லையே.
அவரின் மேன்மைகள் பல. ஆனால், அவர் இந்தியாவுக்கு வந்தவரே இல்லை. அதையே தகுதியாக்கி விட்டார்கள் போல, பாரபக்ஷமின்றி நடப்பார் என்று!. ஜூலை 8 ஆம் தேதி இந்தியா வந்த பின் அவரிடம் ஆகஸ்ட் 15 கெடு நாள் என்று சொல்லப்பட்டது. ஐயகோ! காரியம் கெட்டு விடும்; நடவாது என்றார், பாவம். ஆனால், நேரு, ஜின்னா, மெளண்ட்பேட்டன் ஒன்று கூடி, கெடு கெடு தான் என்றனர். அவருக்கு பின்னணி செய்திகள்/தகவல்கள்/ஆவணங்கள் முறையாகக் கொடுக்கப்படவில்லை. உதவிக்கு திறன்மிக்க ஆள் கிடைக்கவில்லை.
ராட்கிளிஃப் கமிஷனில் நான்கு நீதிபதிகள்: காங்கிரஸுக்கு இரண்டு; முஸ்லீம் லீக்குக்கு இரண்டு. அவர்களின் இழுபறியின் விளைவு, சிக்கலான முடிவுகளை ராட்கிளிஃப் எடுக்க வேண்டும். அவர் ஹிந்து/முஸ்லீம்/சீக்கியருக்கு பாரபக்ஷம் காட்டவில்லையெனினும், பிரிட்டீஷ்ஷுக்கு அனுசரித்தார். அரசாணையில், ராட்கிளிஃப் கமிஷன் ‘மற்ற விஷயங்களையும்’ (other factors) கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் என ஷரத்து. அது பற்றி அவர் என்ன செய்தார்? தெரியாது. அவர் தான், (தன் வழக்கப்படி?) எல்லா ஆவணங்களையும் அழித்து விட்டாரே. ஆனால், எல்லாரும் புகார் வாசித்தார்கள், அவர் ‘மற்ற விஷயங்களையும்’கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று!
ஆணைக்கு உட்பட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி ராட்கிளிஃப் தன் திட்டத்தை கொடுத்து விட்டார். மெளண்ட்பேட்டன் ஆகஸ்ட் 15க்கு பிறகு கொடுங்கள் என்றார்! இவர் மறுத்து விடவே, மெளண்ட்பேட்டன் அதை ஆகஸ்ட் 17 ஆம் தேதி அறிவித்தார்.
பஞ்சாப்பின் 62% நிலம் (51% ஜனத்தொகை) இந்தியாவுக்கு. லாஹூர் பாகிஸ்தானுக்கு, அமிர்தசரஸ் இந்தியாவுக்கு. ஃபெரோஸ்பூர் ஜில்லாவில் கணிசமான பகுதி இந்தியாவுக்கு, குருதாஸ்பூரின் கணிசமான பகுதி, இந்தியாவுக்கு. அது காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவுக்கு உதவும் என்று கூப்பாடு.சரி. உண்மை நிலை யாதெனில், பஞ்சாப் மாநிலத்தை ஹிந்து/முஸ்லீம்/சீக்கியர் தளங்களாக பிரிக்க இயலாது. தேசியம் (nationality) என்று பார்க்கப்போனால், பஞ்சாப்பை கூறு போட இயலாது. அந்த அளவுக்கு எல்லாரும், எங்கேயும். பற்று ஒன்றே.அதிலே பன்க்ச்சர் போட்டுட்டாரே, ராட்கிளிஃப்! ஆக மொத்தம், முதல் கோணல் முற்றும் கோணலாக அமைந்தது. டென்ஷன் குறையவில்லை.

சொன்னால் விரோதம்! பிரிட்டீஷ், காங்கிரஸ், முஸ்லீம் லீக் என்ற முக்கோணத்தின் தலை மாந்தர்கள் ஒத்து போனதேயில்லை. ஆனால், அவர்கள் ஒத்தருக்கு ஒத்தர் ஒத்து ஊதியது, இந்த விஷயத்தில். இந்த அவசரக்கோலத்தை அள்ளி தெளிக்கும் உபாயத்தின் உபயம்: ஆகஸ்ட் 15/16 தேதிகளில், இரு நாடுகளுக்கும் எல்லை போடப்படவில்லை. அங்கு வசிக்கும் மக்களுக்கு தங்கள் குடியுரிமை அறிய வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அரசின் சிண்டை பிடித்து, ஆளுமையை கைப்பற்ற, இத்தனை அவசரம்! ஹூம்!
இன்னம்பூரான்
17 08 2011
http://www.sikhiwiki.org/images/0/0e/Sir-Cyril-Radcliffe-A.jpg

உசாத்துணை:
http://www.unc.edu/depts/diplomat/archives_roll/2002_01-03/chester_partition/chester_partition.html