PDA

View Full Version : மானம்பூச்சாவடிinnamburan
16-08-2011, 06:29 AM
மானம்பூச்சாவடி

(சார்! பழங்கதை என்றால் நாலு பேர் வருவார்கள்; போவார்கள். அதை எல்லாம் பெரிசு படுத்தாதங்கோ. ஆமாம். சொல்லிட்டேன்.)

ஐப்பசி மாசமா? அடை மழை விடாமல் கொட்டோன்னு கொட்டறது என்று அலுத்துக்கொண்டே உள்ளே வந்தார், நாராயணசாமி. இரண்டு கையிலும் சாமான்கள் கனக்கிறது. முடிஞ்சமட்டும் காபந்து பண்ணாவிட்டால், எத்தனை நஷ்டம் என்று கணக்கு, மனசுக்குள்ளே. இந்த அழகில் தறி நெய்யதறாவது, பாவு நீட்டுவதாவது என்று சமையலறையிலிருந்து கோமதியம்மா குரல் கொடுத்தாள். இவர் மழையில் நனைந்து, சளி பிடித்து, காய்ச்சல் வந்து அவதிப்படப்போறாரே என்பது தான் அவள் கவலையெல்லாம். தை பிறந்தா, அவருக்கு 57 வயது; கோமதிக்கும் நரை விழுந்தாச்சு; 50 ஆகல்லே, வயசு. மணி விழா கொண்டாடணும் உள்ளூர ஆசை, கோமதிக்கு, இப்பவே! அவராவது! இவளிடமே பிடி கொடுத்து சொல்றதாவது? ஊஹூம்!. ஆசைக்கு ஒரு பொண்ணு என்று கலாவதி; வயது 19. ஆஸ்திக்குன்னு ஒரு பிள்ளை என்று சேகர்; வயது 19. அதை கேக்க்றீகளா? இரட்டை பசங்க.

இப்போ போய் யாராவது அந்த பேச்சை எடுப்பாங்களா? எல்லாமே லேட்டுத்தான். அம்மாக்காரி முணுமுணுக்காத நாள் கிடையாது. காலாகாலத்திலே வளைகாப்பு, சீமந்தம் நடந்திருந்தா, கதையே வேறே. கலாவோட பொட்டைப்பசங்கல்ல கல்யாண மார்க்கெட்டில் நின்னுட்டு இருக்கும்னு சொல்லி சொல்லி, கோமதி ஒரு சொட்டுக் கண்ணீர் விடும் வரையாவது, அனத்துவாள். நாரயணசாமி தான், தாங்கமுடியாம, ‘நீ சும்மா மூலைலெ கிட’ என்பார். அடுத்த சுத்து அங்கலாய்ப்பு ஆரம்பிச்சுடும். கலா வந்து பாட்டியை அடக்குவாள். ‘ஆமாம்! அவரு வந்து இந்த கதியெல்லாம் பார்க்காமல் போய் சேர்ந்துட்டாரே, கொடுத்து வச்ச மனுஷரு, அதை சொல்லிடு, செல்லமே!’ என்று குரலை உசத்தி, கிணத்தாண்டே கீரை பறிச்சிட்டுருக்கிற கோமதிக்கும், நாலு வீடுகளுக்கும் கேக்கறமாதிரி, கூவி விட்டு, எதிர் வீட்டுலெ ராஜ்யபாரம் நடத்தும் மதனியோட, கோயிலுக்கு போயிடுவாள்.

சும்மா சொல்லக்கூடாது. நம்ம நாணாவுக்கு (அதான் நாரயணசாமி) நல்ல மனசு. பசங்க கண்லெயும் படக்கூடாது. வெட்கம்! அம்மாக்காரி ( இந்த நிஜக்கதையில் அது தான் அவள் பெயர். கேள்வி கேக்காமல் மேலே படியுங்கோ.) நாக்குலெ விழுந்து புரளாமல், உஷாரா இருந்துக்கணும். கோமதிக்கிட்ட இதமா பேசி அவ கண் கலங்காமெ பாத்துக்கணும்.

நாணா: ‘கோமு! நான் தான் இருக்கேனே. உன்னை ஒரு நாள் ஏதாவது சொல்லிருப்பேனா? எதுக்குக் கண்ணை கசக்கறே?’
கோமு: ‘எங்கப்பாவா உங்காத்து வாசல்லே தவம் கிடந்தார்? உங்கம்மா தானே வந்து பெண் கேட்டாள். அதை மறந்துட்டு...’ (நீருண்ட கார்மேகம் போல் கண்களில் தேக்கம்.)
கலா: ‘பாட்டி! கோயில் பிரசாதத்தைக் கொடு, என் கிட்ட.’ இந்த குட்டி யமன். ஜாடை மாடையா எல்லாரையும் கவுத்துடும். ‘அம்மாக்காரி வந்தாச்சு’ என்று நோட்டீசு கொடுக்கறா. பெருமாளே! அவளுக்கு நல்ல வரன் அமையட்டுமப்பா!


(‘தீக்ஷிதர்வாள்! நான் சொல்றதை கொஞ்சம் காது கொடுத்துக் கேளும். உங்க ஆசாரம், மடி, மடிசஞ்சி எல்லாம் பத்ரமா இருக்கு. நான் கலாவை பத்திப் பேசினா உமக்கு என்னையா தீட்டு? இந்த புருடாவெல்லாம் என்கிட்டெ செல்லாது, ஓய்! முணமுணப்பு காதிலே விழறது, சார்! ‘வயசு வந்த பொண்ணை வச்சுண்டு...’ னு மந்திரம் என்ன ஓதறீர்? பெரிய பண்ணை சாமி ஐயராத்து பாருக்குட்டி திரண்டு மூணு வருஷம் ஆச்சு! மூச்சு விட்டீறா? இல்லை? அவாத்துலே ஜலபானம் பண்ணாமயா, சமாராதனையில், மூக்கைப்பிடிக்கக் கொட்டிக்கிறீர்?)

நாணா வாசற்பக்கம் போறார். சேகர் வரான். கப்பு! சிகரெட் வாசனை!
**********

நாணாவும் ஒரு நாள் சின்னப்பையனா சைக்கிள் டயரை உருட்டிக்கொண்டு, தெருப்புழுதியெல்லாம் அப்பிக்கொண்டு, இதே மானம்பூச்சாவடியிலே, வேர்த்து வழிய ஓடினவர் தானே. தாத்தா தறி நெய்து கொண்டே, எத்தனை கதை சொல்லியிருக்கார்.
‘நாயக்கர் காலம்டா அப்போ. சொல்லப்போனா, நாமெல்லாம் குஜராத் பக்கம். ஆனா, குஜராத் இல்லை. தீபகற்பம், தீபகற்பம்னு நேத்து உரக்கப்படிச்சுக்கிட்டு இருந்தயே, அந்த மாதிரி தான் தொங்கறது பாரு செளராஷ்டிர தீபகற்பம், இந்தியா மேப்லே. அதாண்டா நம்ம ஒரிஜினல் மண்ணு. தடுக்கி விளுந்தா, ஒரு குட்டி ராஜா. அவுக அத்தனை பேரையும் வளைச்சுட்டார்லெ, இந்த சர்தார் படேல். அதை விட்றா, ராசா. சேவப்ப நாயக்கர் தான் நம்பளையெல்லாம் செளராஷ்டிராவிலிருந்து இங்கு கூப்பிட்டு கொண்டு வந்தாராம், எங்க பாட்டன் சொல்வாரு. அந்தக்காலத்து ராஜாவெல்லாம், தெனோம் கோடித்துணி தான் கட்டுவாக. பெரிய இடத்து பொம்பளைக பட்டுப்புடவை தான், அதுவும் ஒம்பளது கஜம். லோக்கல்காரனுக நாத்து நடுவாக. மகசூல் பண்ணுவாக. சோழன் பூமியில்லையா. விவசாயம் தான் தெரியும். கல்யாணம், காட்சி என்றால், கடனோ, உடனோ வாங்கி, ஜோஷி கடையில் , மாப்பிள்ளைக்கு பட்டு வேஷ்டி, ஜரிகை அங்கவஸ்திரம், கூறை புடவை எல்லாம் எடுத்தாகணும், கீர்த்தி இருக்கறதாலே வெளியூர் டிமாண்ட் வேறே. அதான், பட்டுநூல்க்காரங்களை, அதான் நம்பளை, இறக்குமதி பண்ணிட்டாக. நம்பளை தொந்தரவு பண்ணக்கூடாதுனு ஆர்டர் போட்டாறாம்லெ. (ஹி! ஹி! ந்னு பொக்கை வாயாலே சிரிச்சுக்கிட்டு! டேய்! நாணா! தாத்தாவை மறந்துடாதரா!)

தாத்தா பேரு கோபாலய்யர். பட்டுநூல்க்காரங்க பிராமண பேர் வச்சுப்பாங்க. வியாபாரத்திலே கூட்டுக் கூட உண்டு. அவர் போட்ட பிச்சை தான் நாலு தறி ஓடுது இப்போ. இந்த பட்டுநூல்க்காரங்க குடும்பமே உழைக்கும். ஒருத்தன் தறி போட்டால், கையோடு கையாக, இன்னொத்தர் பாவு நீட்டணும்., இன்னொத்தர் சாயமிடணும். எடுபிடி வேலை. ரிலீஃப் ட்யுட்டி. ஒத்தருக்கு ஒத்தர் மனக்கசப்பு வந்தாக்கூட, நடக்கிற வேலை நடந்து கொண்டே இருக்கும். சிறுசுகள் கூட சுறுசுறுப்பா சொன்ன வேலையை செய்யும். கோபாலய்யன் (ஒத்துப்போம். கும்போணத்திலே பாத்திருக்கேனே. ‘ர்’ மெய்யை ‘ன்’ மெய்யாக்குவதில் ஐயங்கார் தெருவில் ஒரு அற்ப சந்தோஷம்.) வச்சுட்டுப் போன பிதுரார்ஜிதம் கம்மியானதே, கூட்டுக்குடும்பம் கலைந்து போனதாலும், துளசிராம் குடும்பத்திலே குஞ்சும் குளவானுமாக தளைக்காததால் என்று தானே அம்மாக்காரி கரிச்சுக்கொட்டினா. அவள் பெற்றதே, நாணாவும், பானுவும். பானு பரமக்குடிலெ வாக்கப்பட்டப்பறம், பொறந்த வீட்டுக்கு லேசுலெ அனுப்பமாட்டங்கறாங்க. மதுரை ஆயிரங்கால் மண்டத்துக் கடைக்கு புடவை ஆர்டர் இருக்கு. ஆள் பலம் வேண்டிருக்கே என்று சால்ஜாப்பு சொல்றாக. ஆனா சொல்லக்கூடாது. மாப்பிள்ளை வருஷத்துக்கு ஒரு தடவை குடும்ப சகிதமா வந்துண்டு போவார். தாராளமா எல்லாருக்கும் கிஃப்ட்டு.
**********

பகல் கனவு என்றால் கானல் நீர் அல்லவே. கனவே நிஜம். நிஜமே கனவில். பகல் கனவு ஒரு படி மேலே. நூல் சிட்டங்களை காம்ரா உள்ளில் வைக்கும்போது, அதுவும் தகரியமா காலெடுத்து வைக்கிறது. இவருக்கு மீசை அரும்பு விட்ட நாளிலிருந்து பெண் தேடினார், துளசி ராம் (அதான், இவரோட அப்பா). ஆன, சாமான்யமா அகப்படவில்லையே. தட்டிப்போயிண்டே இருந்தது. நம்ம சேனங்குளம் சாரியார் மாதிரி, நான் உள்ளூர்லெ தான் பெண் எடுப்பேன் என்றால், குண்டுச்சட்டிலெ குதிரை ஓட்றமாதிரி மானம்பூச்சாவடிக்குள்ளேயே சம்பந்தம் பண்ணுவேன் என்று ஒத்தைக்காலில் நின்றார். நாலு வருஷம் அதிலேயே போயிடுத்து. இருக்கறது ஒரு சின்ன பேட்டை. எல்லா குடும்பங்களும் பரிச்சயம். கொஞ்சம் அங்கங்கே அரசல் புரசலாக இருந்தாலும், அன்யோன்யம் ஜாஸ்தி. கன்யாப்பெண்களே சொற்பம். ஆகாசத்திலேயிருந்து நாணாவுக்கு என்று நாணிக்கோணிண்டு ஒரு நாராயணி வருவாளா? என்ன?
(சொப்பனத்திலே கூட அடுக்கு மொழி. எல்லாம் இந்த சுனா மானாக்காரங்க வல்லம் மைதானத்தில் பேசின பேச்சுலெ வரது என்று நாணா அசட்டு சிரிப்பு சிரிச்சுக்கிறார். புரியறதா, தீக்ஷிதர்வாள்?)

மதனிக்காரி சொல்லித்தான் தெரியும், சிவராயர் தோட்டத்திலே, கோமதிக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள் என்று. அவளுடைய அப்பா சேதுரத்தினத்துக்கு ஒரே பெண், அவள். வயசு வித்யாசம், ஈடு சேரலை என்று துளசிராம் வீட்டுப்பக்கம் சேது எட்டிப்பார்க்கவில்லை. மதனி தான் நைச்சியமா பேசி, இந்த அம்மாக்காரியையும் இழுத்துக்கொண்டு போய் சம்பந்தம் பண்ணி வச்சா. நாணாவுக்கு 25 வயசு; கோமுவுக்கு 17 வயசு. ரொம்ப லேட்டுனு கல்யாணப்பந்தலிலேயே பேச்சு அடிப்பட்டது. அப்பறம் மானம்பூச்சாவடியே, மாசாமாசம் இவ முழுகறாளா என்று கேட்டபடி. மதனியும், அம்மாக்காரியும், கோணா மாணான்னு ஏதாவது சொல்லி, கோமுவை அழவைப்பாங்க. அடுத்தாப்லெ ஆரூடம், கிளி ஜோசியம், வைத்தீஸ்வரன் கோயில் சன்னதி தெருவில் நாடி பார்த்தது, பிள்ளாண்டான் குலத்தொழிலை விட்டுடுவான் என்று அவர் சொன்னது, கோயில், கும்பாபிஷேகம், திருவிழா எல்லாம் செளராஷ்டிரர்கள் போற்றுவது தானே. கோயில், குளம், ராமேசுவரம் எல்லாம சில வருடங்கள் பிடித்தன. அப்பிடி, இப்பிடி, முப்பது வயது ஆவதற்கு முன்னால் இரட்டையை பெற்றுக்கொண்டு, கோமதியம்மா தப்பித்துக்கொண்டாள். ஊர் வாயை விடுங்கோ. அம்மாக்காரியிடமிருந்தும், மதனியிடமிருந்தும் தப்பினாலே, எதேஷ்டம்.
**********

வீடு திமிலோகப்படறது. திருபுவனத்திலேருந்து சம்பந்தம் கொண்டாந்துருக்கா, மதனி. கலாவதிக்கு பொருத்தமான வரன் அப்டின்னு அடிச்சுச் சொல்றா. கோமதிக்குக் கூட இந்த வரன் குதிருனுமே என்று உள்ளூர ஆசை. தறியும் கிடையாது, திரியும் கிடையாது. பையன் நல்லா படிச்சிருக்கான். சாராபாய் கம்பெனியாமே. சூட்டும் பூட்டுமா, டாக்டர்கள் சகவாசம். ஊர் சுத்தணும். கார் வாங்கப்போறாணாமே! நாணாவுக்கு தான் பின் வைத்த காலை முன் வைக்க முடியல்லே. சேகரோ தத்தாரியா திரியறான். நாலு தறி இருக்கே. எப்டியும் இரண்டை வித்தாத்தான், கல்யாணசெலவுக்கு பணம் புரட்டமுடியும். அப்றம் சோத்துக்கு என்ன பண்றது? இதுக்கு திமிலோகம் என்ன? திமிலோகம்? அதான் இல்லை, தீக்ஷிதர்வாள்! கலாவதி இந்த வரன் வேண்டாம்னு அம்மாக்காரி மூலமா சொல்றா. இப்போ புரியறதா, அம்மாக்காரி கமுக்கம்? மதனியே ஆடிப்போய்ட்டா. இனிமே தான் கட்சி மாறாட்டம் எல்லாம். நாணா திருபுவனம் பக்கம் சாஞ்சுட்டார். கோமதி சுதாரிச்சுண்டுட்டாள்...

(நான் தான் சொல்லிண்டு வரேனோல்லியோ! கால்லே கஞ்சிக் கொட்டினமாதிரி, நீர் ஏன் துடிக்கிறீர், தீக்ஷிதர்வாள்! சரி. உம்ம திருப்திக்கு அவாத்துலே பேசினதை, வார்த்தைக்கு வார்த்தை நானே சொல்லிட்றேன். நானே கட்சி மாறிட்டேனே, சுவாமி! காது கொடுத்து கேளும்.)

கிணத்தாண்டே:

கோமதி: எங்கிட்ட சொல்லுடீ. யாராவது உனக்கு சொக்குப்பொடி போட்டுட்டானா?
கலா: (கால் விரலால் மண்ணை கீறராள்.) மெளனம்.
அம்மாக்காரி (உள்ளேயிருந்து) கலா! மதினி கூப்ட்றா, உன்னை.
சேகர்: எனக்கு தெரிஞ்சதை நான் சொல்லிட்றேன்.
கலா: (உரக்க) நீ வாயை மூடுடா.
நாணா: எல்லாரும் என்னமோ சூழ்ச்சி பண்றேள். நான் தானே அவாளுக்கு பதில் சொல்லணும். நான் இன்னிக்கே திருபுவனத்துக்கு ஒரு நடை போய்ட்டு வந்துரறேன். (இதான் புருஷ லக்ஷணம், தீக்ஷிதர்வாள். மத்தவாளை மிரட்டணும். நான் தான் ரைட்டு! ஊக்கும்! )
அம்மாக்காரி: டேய் நாணா! நான் தான் ஆத்துக்கு பெரியவ. ஆர்டர் போட்றேன். எனக்கு வந்த ஆர்டர் அது தான்.
மதனி! உங்களுக்கு நன்னா புரியும். அண்ணா இப்போ இல்லை என்றாலும், நீங்க அவரை தான் பண்ணிப்பேன் என்று ஒத்தைக்கால்லே நிக்கலையா?
கோமு! பெண்ணெடுக்க நான் தான் வந்தேன். ஒத்துக்கிறேன். மாமியார்னா நாலு வார்த்தை பேசத்தான் பேசுவா. பெத்த வயிறுடீ. ஆனா, உம்மேலே எனக்கு பாசம்டீ. எண்ணை தேச்சு விடுவேனே. ஞாபகம் இருக்கோ? நீயும் அவனும் ஆசையா இருக்கேள்னு எனக்கு எத்தனை சந்தோஷம். கோயிலுக்கு போகச்சே, நானும், மதினியும் அதான் பேசிப்போம்.
கலா: (சிரிச்சுண்டே) எங்கிட்டே சொல்லியிருக்கேயே, பாட்டி.
சேகர்: பாட்டின்னா பாட்டி தான். நான் கம்பூயட்டர் கத்துக்கறத்துக்கு அவ தானே காசு கொடுத்தா. பாட்டி கிட்ட சத்தியம் பண்ணிட்டேனா. சிகரட்டை விட்டுட்டேன்.
(அம்மாக்காரிக்கு முத்தம் கொடுக்க்றான். அவளுக்கு வெட்கம். மூஞ்சி சிவந்து போச்சு.)
அம்மாக்காரி: கலா அன்னிக்கே எங்கிட்ட சொல்லிடுத்து. தீக்ஷிதரோட பேரன், தமிழுக்குன்னு ஒரு பெரிய காலேஜ் இருக்காமெ. அதிலே ப்ரொஃபஸர். அவனை தான் பண்ணிக்கப் போறா. உனக்கு காலணா செலவு இல்லைடா. அவன் கட்டின புடவையோட வா ன்னு சொல்லிட்டான். அங்கேயே சேகருக்கு வேலை. என்னமோ எல்லா புஸ்தகத்தையும், ராமாயண ஓலை வச்சிருக்கையே, அதெல்லாம் கம்ப்யூட்டர் லெ போடணும். எங்கிட்ட காமிச்சான், அந்த பிள்ளையாண்டான், சோமாஸ்கந்தன். தறி! என்ன பெரிய தறி. பானு ஆத்துக்காரர் கிட்ட கொடுத்துடு. நல்ல மனுஷா.
நாணா: (மூர்ச்சை போடல்லை! அதான் பாக்கி. நா தழுதழுக்க;) அம்மா! (குரல் உடஞ்சு போறது.)
(தீக்ஷிதர் முதல் தடவையா பேசறது காதுலே விழறது: ‘என்ன சுவாமி! என் கிட்டேயே கைவரிசையை காண்பித்து விட்டீர்கள்! சோமு எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலையே. பெத்தவா போயிட்டா. எங்க கிட்ட வளர்ந்த பயல்! அதே. எல்லாம் நன்னா நடந்தா சரி. நாம்பளும் காலத்தை அனுசரிக்கணுமோல்லியோ! நான் போய், அவளை வழிக்கு கொண்டு வரேன். அதெல்லாம் சரி. உம்மை பாத்தா ஒரு மாதிரி இருக்கு. வயசு கூட சொல்லமுடியல்லை. நீங்க யாரு?)
பதில் இல்லை. ஆளைக்காணோம். நான் என்ன பைத்தியமா. இதுக்கெல்லாம் பதில் சொல்லிண்டு? நான் கோபாலய்யரோட ஆத்மசொரூபம். ஆமாம்.
--x--
இது வல்லமை சுதந்திர நாள் சிறப்பு இதழில் வந்த என்னுடைய சிறுகதை.
இன்னம்பூரான்

நாஞ்சில் த.க.ஜெய்
16-08-2011, 08:52 AM
அருமையான எழுத்து நடையில் ஒரு அருமையான கதை ...ஒரு எதார்த்தமான சம்பாசனையுடன் காலத்திற்க்கேற்றவாறு மாற்றம் பெரும் கதை....ஆனால் இந்த கதையில் சில வார்த்தைகளை புரிந்து கொள்ள இயலவில்லை அந்த சிலவார்த்தைகளின் தமிழர்த்தம் கூறினால் நன்றாக இருக்கும் ..அந்த வார்த்தைகள் காபந்து ,ராஜ்யபாரம், தீக்ஷிதர்வாள் ,ஜலபானம்,சமாராதனையில், மானம்பூச்சாவடி ,பிதுரார்ஜிதம் குளவானுமாக ...

innamburan
16-08-2011, 06:09 PM
நன்றி. கதையாசிரியர் கதைக்கேற்ப எழுத வேண்டும். மானம்பூச்சாவடி ஒரு செளராஷ்ட்ர சமூகத்தை பற்றி: 1940 -50.
பிராமண பாஷை: விளக்குவது என் கடமை.
காபந்து ~ பாதுகாப்பு.
ராஜ்யபாரம் ~ ஆளுமை.
தீக்ஷிதர்வாள் ~ ஒரு அந்தணர் இனம்.
ஜலபானம் ~ நீர் அருந்துவது
சமாராதனை~ விருந்து.
மானம்பூச்சாவடி~ தஞ்சை நகரில் செளராஷ்ட்ர சமூகம் வாழும் ஒரு பேட்டை:
பிதுரார்ஜிதம்~ அப்பன் வீட்டு சொத்து.
குளவான் ~ குழந்தை.
இன்னம்பூரான்

நாஞ்சில் த.க.ஜெய்
16-08-2011, 06:35 PM
இந்த வார்த்தைகளின் துணை கொண்டு இந்தகதையினை படிக்கும் போது
கதை முழுமை பெற்றதாக ஒரு மன நிறைவு ...நான் அறியாத சிலவார்த்தைகளை அறிய செய்த இன்னும்பூரான் ஐயா அவர்களுக்கு என் நன்றி ...

innamburan
16-08-2011, 06:38 PM
இது என்னுடைய முதல் சிறுகதை. மதிப்பீடுகளை வரவேற்கிறேன். உங்கள் இஷ்டப்படி எழுதலாம்.

கீதம்
17-08-2011, 11:31 PM
முதல் சிறுகதைக்கும், அது வல்லமையில் வெளிவந்ததற்கும் என் பாராட்டுகள் ஐயா.

நல்லதொரு கரு. அதைக் கையாண்ட விதமும் நன்று. காலத்திற்கேற்றாற்போல் தங்களையும் ஜீவாதாரத்தையும் மாற்றிக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆட்படுத்தப்பட்ட சில குடும்பங்களின் நிலையைக் கண்முன்னே அழகாகக் காட்டியுள்ளீர்கள். தலைமுறை இடைவெளிகளை நிரப்பும் பாட்டியின் (நானும் அம்மாக்காரி என்று சொல்லமுடியுமோ? என்ன இருந்தாலும் பெரியவள் இல்லையா? இப்போது செயலாலும் உயர்ந்துவிட்டாளே!) பரிவையும், பாசத்தையும், காதலுக்கு அவர் தரும் அமோக ஆதரவையும் நேர்த்தியாய் நேரம் பார்த்துச் சொன்னவிதம் அருமை. இடையிடையே உங்கள் தனிப்பட்ட கமெண்ட்டும் (கும்பகோணத்தில்....) யதார்த்தம் சேர்க்கிறது.

இத்தனை இருந்தும் கதையை முற்றிலுமாய் ரசிக்கவிடாதபடி சிறு நெருடல். அதாவது, கதை வாசகர்களாகிய எங்களிடம் சொல்லப்படுகிறதா? அல்லது தீட்சிதரிடம் சொல்லப்படுகிறதா? என்பது சரிவரப் புரியவில்லை. மேலும் பத்திகள் பிரித்துக்கொடுத்தால் படிக்கச் சுலபமாக இருக்கும். இது என் அபிப்பிராயம் மட்டுமே. தவறாக எண்ணவேண்டாம்.

தொடர்ந்து எழுதுங்கள். நான் முன்பே சொன்னதுபோல் உங்கள் எழுத்துநடை புதியது. அருகில் அமர்ந்து நேரில் கேட்பது போன்ற சுவாரசியத்தை உள்ளடக்கியது. அதுவும் அந்த தஞ்சாவூர் வழக்கு 'ஒம்பளது' ரசித்தேன். 'எம்பளது' என்று சொன்ன என் தாத்தாவைக் கேலி பேசியதை நினைத்து வருந்தவும் செய்தேன்.

உங்கள் அனுபவப் பெட்டகத்திலிருந்து இதுபோன்ற கதைகளை அடிக்கடி எதிர்பார்க்கிறேன்.

சிவா.ஜி
18-08-2011, 04:25 PM
எழுத்து நன்று இன்னம்பூரான்...கீதம் சொன்னதைப்போல...எங்களுக்காய் எழுதினால்...ரசித்து வாசிக்க நன்றாய் இருக்கும். எழுத்து என்பது...என்னைப்போன்ற சாதாரணனையும் சென்றடைய வேண்டும். நீங்கள் நல்ல கதை சொல்லி...கேட்கப்படவேண்டியவராயும் இருக்க வாழ்த்துக்கள்.

முதல் கதைக்கு மிக்க வாழ்த்துக்கள் நண்பரே.

பாரதி
18-08-2011, 06:08 PM
அன்புள்ள ஐயா,
முதல் சிறுகதைக்கு என் மனமார்ந்த வாழ்த்து.
உங்கள் கதை ஒரு பாணியில் அமையப் பெற்றிருக்கிறது.

பலரும் சொல்லும் சொற்களிடையில் கதையாசிரியரும் அவருடைய கோணம் என்ன என்பதை படிப்பவர்களிடம் சொல்ல முயற்சிக்கிறார்! இது கதை வேகத்தை குறைக்கும் என்பது என் தனிப்பட்ட எண்ணம்.

மேலும் ஒன்று - இது சிறுகதை என்ற முறையில் புனையப்பட்டிருப்பதாக கூறினாலும் கூட இடையிடையே நாடகபாணி முறையும் கையாளப்பட்டிருக்கிறது. இதையும் தவிர்த்திருக்கலாம் என்பதும் என் எண்ணம். அதாவது கதையாகவே எழுதி இருக்கலாம் அல்லது நாடகமாக எழுதி இருக்கலாம். இக்கதைக் கருத்தை நான் புரிந்து கொண்ட வரையில், நாடகமாக நீங்கள் எழுதி இருந்தால் பலரையும் எளிதாக சென்றடைந்திருக்கக் கூடும் என்று நம்புகிறேன்.

செளராஷ்டிரா சமூகம் என பின்னர் குறிப்பிட்டிருப்பதைக் கண்டேன். மதுரையில் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் அச்சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்களது வீடுகளுக்கு நான் பலமுறை சென்றிருக்கிறேன். அவர்கள் செளராஷ்டிரா மொழியில்தான் கதைக்கிறார்கள்! அங்கும் இப்போதும் தறி வேலையில் ஈடுபடுவர்களும் இருக்கிறார்கள். ஆனால் யாரிடத்தும் நீங்கள் பயன்படுத்திய மொழி நடையைக் கண்டதில்லை. ஒரு வேளை தஞ்சைப்பகுதியில் அவ்விதம்தான் அவர்கள் கதைக்கிறார்களா ஐயா?

மானம்பூச்சாவடி - கதைப்பெயரே சற்று வேறுபட்டுதான் இருக்கிறது.(மதுரையில் மறவர்சாவடி இருக்கிறது!)

உங்களிடமிருக்கும் அளவற்ற திறமையை ஒவ்வொன்றாக காண்பதில் உண்மையிலேயே மகிழ்கிறேன் ஐயா.

தொடருட்டும் உங்கள் எழுத்துப்பணி.

innamburan
18-08-2011, 08:21 PM
மிக்க நன்றி, திரு.பாரதி,
உங்கள் மதிப்பீடு எனக்கு மிக உதவியாக இருக்கும். சில விளக்கங்கள். 1. நான் நேரமின்மையாலும், பழக்கவழக்கத்தாலும், விரைவாக மனதில் தோன்றியபடி எழுதுவதாலும், மீள் பார்வை பார்க்காததாலும், இவ்வாறு அமைந்தது. நாடக பாணியிலும் இதே கருவை உருவாக்குவதாக எண்ணம். மற்றபடி எல்லாம் மாறி இருக்கும்.
2. மானம்பூச்சாவடி தஞ்சையில் செளராஷ்டிர பேட்டை என்று படித்ததை வைத்து பிராமணபாஷையில் எழுதியது, இது. மற்றபடி அந்த சமூகத்தை பற்றி கும்பகோணத்தில் ஏழு/எட்டு வயதில் என் மனதில் பட்டதை வைத்து எழுதினேன். 3. கதை சொல்லியின் பாணியை மாற்றுவது எளிதல்ல. மனம் பேசுகிறது அல்லவா! புதுமை பித்தன் பாணியும், தி.ஜானகிராமனின் பாணியும், கல்கியின் பாணியும் வெவ்வேறு. மற்றவர்கள் கருத்துக்களையும் அறிய அவா.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்

இராஜேஸ்வரன்
13-02-2012, 04:50 AM
நண்பர் இன்னம்பூரானின் முதல்கதை நான் நம் மன்றத்தில் படிக்கும் முதல் கதை.

கதையை சொன்ன விதம், உபயோகித்த எழுத்து நடை புதியதாக இருந்தாலும் ரசிக்கக்கூடியதாக இருந்தது.

தலைமுறைகளுக்கு ஏற்ப வாழ்க்கைமுறை மாறுகிறது என்ற கருவை கதையாக சொன்ன விதம் பிரமாதம்.


உங்கள் எழுத்துநடை புதியது. அருகில் அமர்ந்து நேரில் கேட்பது போன்ற சுவாரசியத்தை உள்ளடக்கியது.

இத்தனை இருந்தும் கதையை முற்றிலுமாய் ரசிக்கவிடாதபடி சிறு நெருடல். அதாவது, கதை வாசகர்களாகிய எங்களிடம் சொல்லப்படுகிறதா? அல்லது தீட்சிதரிடம் சொல்லப்படுகிறதா? என்பது சரிவரப் புரியவில்லை. மேலும் பத்திகள் பிரித்துக்கொடுத்தால் படிக்கச் சுலபமாக இருக்கும்.

நண்பர் சொன்னதையே நானும் சொல்ல விரும்புகிறேன்.

இனி உங்களின் கதைகளை தேடி படிப்பேன். பாராட்டுக்கள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
20-03-2012, 03:35 PM
நிறைய சமஸ்கிருதம், மற்றும் பிராமணர்கள் பேச்சு வழக்குகள் தெரிந்துகொண்டேன். மிகவும் நன்றி:)