PDA

View Full Version : அன்றொரு நாள்: ஆகஸ்ட் 16innamburan
16-08-2011, 05:23 AM
அன்றொரு நாள்: ஆகஸ்ட் 16
Godmen எனப்படும் ஆங்கில சொல்லை தமிழாக்கம் செய்வது மெத்த கடினம். இப்போதைக்கு ‘மனித தெய்வம்’ என்ற சொல்லை தற்காலிகமாக வைத்துகொள்வோம். சாமியார்கள், அருள் வாக்கு சொல்பவர்கள், சாமியாடி, கோடாங்கி, மடாதிபதிகள், த்ரிவேணி அக்காடா தடாலடி நாகர்கள், ஸ்டைல் ஸ்வாமிகள், துறவிகள் இவர்களெல்லாம் தமக்கு தெய்வ சம்பந்தம் இருப்பதாகத்தான் முழங்குகிறார்கள். அவர்கள் எல்லாம் ‘மனித தெய்வங்களா’? குபேரானந்தாக்களும், இந்திரானந்தாக்களும் நிறைந்த இந்த நன்னாட்டை மேற்கத்தியவர்கள் Godmen Country என்கிறார்கள். தூய ஆன்மீகம் பேசுவதற்கு ‘மனித தெய்வம்’ என்ற தகுதி தேவையே இல்லை. ஏன்? இறை என்ற சொல் கூட அத்யாவசியமல்ல. சில படிநிலைகளுக்கு மேல் சொற்களும், அவை கூறும் பொருட்களும், தெளிவுரைகளும், விரிவுரைகளும், விஸ்தாரங்களும் உறைந்து போய் விடுகின்றன. ஆனால், மனம் பேசும்; செவி உள்ளே. அங்கே தான் சூக்ஷ்மம்.

திருமூலரும், தாயுமானவரும், அருணகிரி நாதரும், வள்ளலாரும், குணங்குடி மஸ்தானும், பக்தி இலக்கியம் படைத்த நாயன்மார்களும், ஆழ்வார்களும், மற்ற சிவனடியார்களும், வைணவ சான்றோர்களும், சாக்கிய முனியும், தீர்த்தரங்கரர்களும், இஸ்லாமிய ஞானிகளும், கிருத்துவ முனிவர்களும் பூவுலக தேவபதவி நாடவில்லை எனலாம். அவர்களில் சிலர் தெய்வ சன்னிதானத்தில் வாசம் புரிந்தவர்கள் என்ற சமயம் சார்ந்த நம்பிக்கையை அசைத்துப் பார்க்கக்கூட நமக்கு சக்தி இல்லை; தகுதி இல்லை; தேவையுமில்லை. அதை புரிந்துகொள்ளக்கூட மேற்கத்திய புரிதல் தேட வேண்டியிருக்கிறது, கடாதர் சட்டோபாத்யாயா அவர்களின் மனித தெய்வ சற்குணத்தைப் போல. இந்த பின்னணியில் கடந்த நூறு~நூற்றைம்பது ஆண்டுக்கணக்கில் பார்த்தால், சதாசிவ ப்ருமேந்திராள், சேஷாத்ரி ஸ்வாமிகள், ஜட்ஜ் ஸ்வாமிகள், வள்ளலார், பகவான் ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், பகவான் ரமண மஹரிஷிகள், காஞ்சி மஹா பெரியவா போன்றவர்களை ‘மனித தெய்வம்’ என்று பாராட்டினால் தகும். அவர்களை Godmen என்பது இழுக்கு. இது நிற்க.

ஆகஸ்ட் 16, 1886 கடாதர் சட்டோபாத்யாயா அவர்கள் அமரத்துவம் அடைந்தார். சொன்னால் நம்பமாட்டீர்கள். ஐம்பதே வயது. ஒரு ஏழை வைணவ குடும்பத்தில் ஜனனம். தாயும் தந்தையும் தெய்வீக கனவுகள் கண்டனராம். ஆறு வயதில் ஒரு ஆன்மீக அனுபவம். தந்திர சாத்திரத்திலும், வைணவத்திலும் ஊறிய ஒரு ஆன்மீக அன்னை முதல் ஆசான்; பின்னர் இவரை நிர்விகல்ப சமாதியில் ஆழ்த்திய ஒரு அத்வைத சான்றோன். சர்வமத சம்மதம். இஸ்லாமியராக இருந்ததாகவும், இஸ்லாமிய ஆன்மீகம் உணர்ந்ததாகவும், ஸுஃபி நிலை அறிந்து கொண்டதாகவும், கிருத்துவம், பிரம்ம சமாஜம் ஆகியவை புரிந்து கொண்டதாகவும் வரலாறு. ஹிந்து மத அடிப்படையில், வைணவகோட்பாடுகளும் கூறிய சாந்த பாவமும் (தன்மை), தாஸ்ய பாவமும் (அடிப்பொடி), சகியின் பாவமும் (பாங்கி), வாத்ஸல்யபாவமும் (அன்னை), மதுரபாவமும் ( காதல்) அன்றாடம் பயின்று வந்த இந்த மனித தெய்வத்தை உலகம் பகவான் ஶ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்ஸர் என்று அறியும். தொழும். அடி பணியும்.

அவரை பற்றி ஒரு நாளில் சில வார்த்தைகளில் அள்ளி தெளித்து பேசுவது தவறு. ஆனால், குறிப்பால் உணர்த்தலாமே. எல்லாரும் வந்து எழுதுங்கள், திசை மாற்றாமல், ஶ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்ஸர் சன்னிதானத்தில் நிற்கிறோம் என்ற அமைதியுடன், அடியாராக, தோழமையுடன், சிசுபாவத்துடன், கன்யா லக்ஷ்மியாக.
அடியேனும், இந்த இழையை மட்டும், ஒரு தொடராக அமைத்து, பகவான் ஆணையிடும்போதெல்லாம், அவருடைய பொன்மொழிகளை, அனுபவத்தை முன்வைத்து எழுதலாமா? ஏன் இந்த கேள்வி? கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னால், நான் மின் தமிழில் எழுதினது:
‘...தீடீரென்று என்றும் போகாத இடத்துக்கு போனால் ஶ்ரீ ராமகிருஷ்ணர், புதிய நூல் முகப்பிலிருந்து சிரிக்கிறார். சரி, என்று வீட்டுக்கு வந்த பிறகு, பல வருடங்களாக தொடாத புத்தக குவியலை நோண்டுகிறேன். பகவான், ஒரு பழைய புத்தகத்தின் முகத்திலிருந்து சிரிக்கிறார். கையில் ஆயிரம் பக்கங்களுக்கு விஷயம். சான்றோர்களின் துணை வேண்டுகிறேன்...’
அடுத்த படியாக: இந்த மெய்ஞான/விஞ்ஞான ஒவ்வாமை/முடிச்சுகள்/ ஒப்புமை எல்லாம் பலே பலே சர்ச்சைகள். அடுத்தவன் பெண்டு கழண்டு விடும்! ஶ்ரீ ராமகிருஷ்ணரை புரிந்து கொள்ள பொருத்தமான அறிமுகம்: ரொமைன் ரோலா என்ற ஃபிரன்ச் வேதாந்தி. இலக்கியத்திற்கு 1915ல் நோபல் பரிசு வாங்கியவர். அண்ணல் காந்தியின் அருமை நண்பர். அவர் சொல்கிறார்: “...ஶ்ரீ ராமகிருஷ்ணரின் ஆன்மீக அனுபவங்கள் சாகரம் போன்றவை. எனக்கும் அந்த அனுபவம் கிட்டியது உண்டு. இந்த சாகரமானது சர்வமதசம்மதத்தின் உச்சகட்டம். ்ஶ்ரீ ராமகிருஷ்ணரின் ஆன்மீக அனுபவங்களில் ஒரு மாபெரும் பிரபஞ்ச ஒற்றுமையையும், காலத்திற்கெல்லாம் மேற்பட்ட நிலையையும் காண்கிறேன்...”

ஒரு ்ஶ்ரீ ராமகிருஷ்ணரின் பொன்வாக்குடன்( ஏற்கனவே சொன்னது தான்) இன்றைய இழையை தொடங்குகிறேன். பகவானின் ஆசியை நாடுகிறேன்.
“ஒரு துரும்பானது ஒரு தரம் ஸ்பரிச வேதியினால் தங்கமாக மாற்றப்பட்டு விட்டால், அது 
பூமியில் புதைத்து வைக்கப்படலாம்; குப்பை மேட்டில் போடப்படலாம்; ஆயினும், அது 
எப்போதும் தங்கமாகவே இருக்கும். கடவுளை அடைந்தவன் நிலைமையும் அதுபோலத்தான். 
மனதைக் கவரும் உலகபொருட்களின் நடுவில் வசித்தாலும், வனத்தில் 
ஏகாந்தத்திலிருந்தாலும், ஒன்றும் அவனைக் கெடுக்கா." 
- ஶ்ரீராமகிருஷ்ணர்.
[இன்னம்புரான் 
23 03 2011]
இன்னம்பூரான்
16 08 2011
http://www.travelindia-guide.com/indian-stamps/collection/images/1973-RK_Paramhansa.jpg

நாஞ்சில் த.க.ஜெய்
16-08-2011, 09:28 AM
ஒரு துரும்பானது ஒரு தரம் ஸ்பரிச வேதியினால் தங்கமாக மாற்றப்பட்டு விட்டால், அது 
பூமியில் புதைத்து வைக்கப்படலாம்; குப்பை மேட்டில் போடப்படலாம்; ஆயினும், அது 
எப்போதும் தங்கமாகவே இருக்கும். கடவுளை அடைந்தவன் நிலைமையும் அதுபோலத்தான்.
உண்மையான கருத்து ... சுவாமி விவேகானந்தர் குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களினை பற்றிய பதிவின் மூலம் அறியா தகவல்கள், காணாத அஞ்சல் தலை ...

innamburan
16-08-2011, 05:01 PM
நன்றி, நண்பரே,
இதை ஐந்து நண்பர்கள் படித்ததாக அறிகிறேன். வாழ்த்துக்கள். பத்திரிகை தர்மம், வாசகர்களுக்கு ஆர்வமில்லாததை தவிர்ப்பது விவேகம் என்று சொல்கிறது. எனக்கும் பல சிரமங்கள் இருப்பதால், நான் எழுதுவது ஜனரஞ்சகமாக இருக்கிறதா? பயன் இருக்கிறதா? மாற்றங்கள் தேவையா? என்ற பின்னூட்டங்கள் உதவும்.பெரும்பாலானோர் படிக்காததை தவிர்க்க விரும்புகிறேன்.
வணக்கம்
இன்னம்பூரான்

நாஞ்சில் த.க.ஜெய்
16-08-2011, 06:34 PM
இன்னும்பூரான் ஐயா அவர்களே ...இந்த அன்றொருநாள் பதிவில் இது வரை அறியாத பல தகவல்கள் அறிய முடிகிறது .இந்த பதிவில் எழுதப்படும் தகவல்கள் படித்து குறிப்புகள் எடுக்கும் வகையில் உள்ளன ...நமது மன்ற தோழர்களுக்கு இருக்கும் பணிசுமையில் இது போன்ற தகவல்களை அறிவதற்கு ஆர்வம் இல்லை என்றுதான் நினைக்கிறேன் ...இது போன்ற பதிவுகளை ஒரே பதிவாக இடுவது நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன் ....

innamburan
16-08-2011, 07:21 PM
நன்றி. உங்கள் பாயிண்ட் புரிகிறது. ஆனால், புத்தகம் போன்ற நீண்ட பதிவை படிப்பது கடினம். சலித்து போய்விடுவார்கள். மற்ற கருத்துக்கள் வருகிறதா? பார்ப்போம். எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்ற தகவல் உண்டோ?