PDA

View Full Version : அன்றொரு நாள்: ஆகஸ்ட் 15.1innamburan
14-08-2011, 07:21 PM
 அன்றொரு நாள்: ஆகஸ்ட் 15.1
*தேசாபிமானம்
காலம் நகர, நகர, நிகழ்காலம் கடந்து போன வண்ணமிருக்கிறது; கடந்த காலம் வரலாற்றில் ஒளிந்து கொள்கிறது. வரலாறு மறந்து போகிறது. வருடா வருடம் ஆகஸ்ட் 15 அன்று இந்தியா விழாக்கோலம் பூண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, கடுந்தவமிருந்து விடுதலை வேள்வித்தீயில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தியாகிகளுக்கு நன்றி செலுத்தவும் வேண்டும். தலையெடுக்கும் புதிய தலைமுறைகளுக்கு விடுதலை கதைகள் சொல்லவும் வேண்டும். சம்பிரதாயங்களும், மரபுகளும், விழா நிகழ்வுகளும் அந்த சான்றோர்களின் புகழுரைக்கவேண்டும்; அவர்களின் சாதனைகளை பட்டியலிடவேண்டும். ‘சுதந்திரம் என் பிறப்புரிமை’ என்றார் லோகமான்ய திலகர். மஹாத்மா காந்தி சத்தியத்தை ஆக்ரஹம் செய்ய வைத்தார். கப்பலோட்டிய வ.உ.சிதம்பரனார் செக்கும் இழுத்தார். மஹாகவி சுப்ரமண்ய பாரதியாரின் சுதேசி பாடல்களின் உத்வேகத்தை சொல்லி மாளாது. லாலா லஜ்பத் ராய் ஒரு விடுதலை சேனையையே திரட்டினார். ஒரு எளிய பள்ளியாசிரியர், வங்காளத்திலிருந்து சென்னை வந்து, கடற்கரை திலகர் திடலில் தீக்கனல் பறக்க சொற்பொழிவாற்றி, விடுதலை வேண்டி நின்றார். அவருடைய பெயர் பிபின் சந்திர பால். இதையெல்லாம் மறக்கலாமோ? இது ஒரு துளி. வருடம் முழுதும், நாள் தோறும் போற்றினாலும் போதாது. நமது புனித சுதந்திர வேட்கையின் நீண்ட வரலாற்றை இன்றிலிருந்தாவது சிறார்களுக்கு சொல்வது, தேசாபிமானத்தின்* அடித்தளம்.
தேசாபிமானத்தின் உட்கருத்தை புரிந்து கொள்வதும், புரிந்ததை பகிர்ந்து கொள்வதும், அதன் விளைவாக எழும் கருத்துக்களை ஆக்கப்பூர்வமாக, மனக்கசப்பில்லாமல் விவாதித்துத் தெளிவு பெறுவதும், அடுத்த கட்டம் என்க. நாம் பிறந்த மண்ணின் மீது ஆசை; பாலபருவத்தில் விளையாடிய பேட்டையின் மீது பாசம்; வளர்த்த ஊரின் மீது காதல்; மொழிவாரி மாநிலத்தின் மீது ஒரு தழுவல்; பாரதமாதாவின் பாதாரவிந்தங்களில் அடைக்கலம். இவற்றில் ஒன்று கூட சோடை போகத்தேவை இல்லை. இவை எல்லாமே, ஒன்றொன்றும் தேசாபிமானத்தின் பரிமாணங்களே. முரண் யாதுமில்லை இங்கே. ஐந்து சகோதர சகோதரிகளில் அல்லது பத்து விரல்களில் அல்லது பாரதியாரின் பூனைக்குட்டிகளில் பேதம் ஏதும் இல்லை, ஐயா.
இனி ஒரு சேதி சொல்லாமல் இருப்பது நம்மையே ஏமாற்றிக்கொள்வதாகும்; நமது சந்ததியை வஞ்சிப்பதும் ஆகும். இன்னல்களும், இடர்ப்பாடுகளும், முறைகேடுகளும், விதி மீறல்களும், சட்டவிரோதங்களும், பொருளியல் குற்றங்களும், சமூக விரோதங்களும், சுயநல சுரண்டல்களும் இன்று பொது மன்றத்தில் அலசப் படுகின்றன. உலகமேடையில் நாம் பரிகசிக்கப்படுகிறோம். உதாரணமாக, லண்டன் டைம்ஸ் நாளிதழ் (ஆகஸ்ட் 6, 2011) தலையங்கத்தில். ‘...தனது உலகளாவிய மேன்மையையும், நாட்டின் செழிப்பையும் முன்னிறுத்தும் நிலையில் உள்ள இந்தியாவின் தேவை, ஆரோக்கியமான ஆளுமை. ஆனால், நாம் காணும் காட்சியோ, அடி சறுக்கும் இந்திய யானை, தடுமாற்றம், வலுவிழந்த அரசியல்...’ என்ற பொருள்பட எழுதியுள்ளது. வருந்தி பயன் ஒன்றுமில்லை. செயலில் துரிதமாக இறங்க வேண்டும். ஏற்கனவே மக்கள் சக்தியின் விழிப்புணர்வை காண்கிறோம். தணிக்கைத்துறை, லோகாயுக்தா போன்ற கண்காணிப்பு மன்றங்களின் ஆற்றல் புலப்படுகிறது. நீதி மன்றம் வேல் பிடித்து நிற்கிறது. இத்தருணம், ஜூன் 1891 இல் ‘...யார் இந்த அறிவிப்பைப் படித்தாலும், அக்கறையுடன் படியுங்கள்...அனைத்து சமூகத்தினருக்கும் - பிராமணர்களாக இருந்தாலும் சரி - அல்லது செட்டியார், வைசியர், சூத்திரர், முஸ்லீம்களாக இருந்தாலும் சரி...மனிதன் ஆயிரமாண்டுகளுக்கு வாழ்ந்தாலும் அவன் ஒரு நாள் மரணம் அடைவது திண்ணம். அதைப்போன்றே அவனது புகழும், சூரியனும், சந்திரனும் இருக்கும் வரை நிலைத்து நிற்பது நிச்சியம்...’ என்று பிரகடனம் செய்த மருது பாண்டியனின் சொல்லுக்கிணங்க, இந்திய மக்கள் யாவரும் நமது முன்னோர்கள் அருந்தவம் செய்து பெற்ற சுதந்திரத்தை, கண்ணியம் பிறழாமல், இராப்பகல் விழித்திருந்து,*
(‘Vigilance is the price of Liberty-J.S.Mill) நாணயம் என்ற வேலியமைத்து, போற்றி பாதுகாக்கவேண்டும். இந்த படி ‘முழங்கால் முறிச்சான்’. ஏறினால், தேவதரிசனம். இல்லையெனில், நாம் அடி சறுக்கிய இந்திய யானை.

மனம் தளர வேண்டாம். யாவருக்கும் அன்பான சுதந்திர தின வாழ்த்துக்கள். இளையத்தலைமுறைகளுக்காக, பிரதமர் நேருவின் உரை (15 08.1947), இங்கே.* இந்தியாவின் சிற்பிகளையும் காணலாம்.
http://www.youtube.com/watch?v=1wUcw8Ufx_Y
இன்னம்பூரான்
15 08 2011
சுதந்திர தினம் 2011
பி.கு.
அதீதம் மின் இதழின் சுதந்திர தின இதழின் தலையங்கமிது. அவ்விதழின் ஆசிரியருக்கு நன்றி.
http://image.shutterstock.com/display_pic_with_logo/1500/1500,1270109746,1/stock-photo-old-indian-independence-day-postage-stamp