PDA

View Full Version : கர்ணன் என் காதலன்சான்வி
10-08-2011, 06:54 AM
சரித்திரத்திலும், புராணக் கதையிலும் என் தந்தைக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அவர் கதை சொல்லிக் கேட்பதில் எனக்கும் ஆர்வம் உண்டு. பாட்டி வடை சுட்ட கதையே சொல்லி சலிப்பு மூட்டாமல் வித்யாசமாய் கதை சொன்னால் பிடிக்காதா என்ன??? :)

கண்டதும், கேட்டதுமாய் அவர் கதை சொல்ல, இந்த விதை அப்போதே விழுந்திருக்க வேண்டும் என்னுள். :)

கதை எழுத வேண்டும் எனும் ஆவல் என்னுள்ளே எழுந்த போது, என் சிறு வயது கதாநாயகன் கர்ணன் தான் நினைவில் வந்தான். எத்தனை பேருக்கு அவன் கதை தெரிந்திருக்கிறதோ??? எனக்கு தெரிந்த கர்ணனின் கதையை இயன்ற வரை ஒரு சிலருக்கேனும் தெரிவிப்போம் என களத்தில் இறங்கினேன் :) விளைவு???? இதோ....

====================================================

கர்ணன் என் காதலன் - முகவுரை

மகாபாரதத்தில் ஈடு இணை அற்ற வீரனாய் நாம் அறிந்த கர்ணனை பற்றிய என் பதிவு இது. ஒன்றா, இரண்டா அவன் சிறப்பு. ஈகைக்கும், நட்புக்கும் அவன் தந்த மதிப்பு.. செய்நன்றி மறவாத அவனது பண்பு, தன்னிலே தான் கொண்ட நம்பிக்கை, பிற உயிரையும் தன் உயிராய் நினைக்கும் பாங்கு.

வாக்கு மாறாமை, அத்துணைக்கும் மேலே, இணையற்ற வீரம், என்னிலைக்கு போயினும் தன்னிலை மறவாத நேர்மை என இன்னும் உண்டு ஆயிரம்.

சிறு வயது முதலே, என்னை கவர்ந்தவன், வீரம், ஈரம், தீரம், கம்பீரம், கொடை, ஆண்மை எனும் சொற்களுக்கு நான் உருவேற்றி இருந்த உருவம் கர்ணன். அதிலும் நடிகர் திலகம் நடிப்பில் கர்ணன் படம் பார்த்த போது, கச்சிதமாய் கர்ணனுக்குள் அவர் பொருந்திப் போனார்.

அந்தப் படமும் ஒரு காரணம் தான் கர்ணன் மீதான என் காதலுக்கு.

பிறந்தது முதலே விதியால் வஞ்சிக்கப்பட்டு, பல அவமானங்களுக்கு இடையே வளர்ந்தாலும் தன் திறமையை பிறர் புகழ வளர்த்துக் கொண்டவன். என் வாழ்க்கையில் கர்ணனை ஒரு முன் உதாரணமாய் கொண்டு நான் வாழ இன்னும் இருக்கின்றன நிறைய விஷயங்கள்

நிகரற்ற அந்த தூய வீரனைப் பற்றி நான் அறிந்த தகவல்களை உங்களுடன் பகிர விருப்பம். படித்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தவறு இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்.

ஏற்கனவே நிகழ்ந்தது என சொல்லப்பட்ட நிகழ்வுகளும், சில இணைய தளங்களின் வாயிலாக நான் அறிந்த விஷயங்களும், கூடவே என் கற்பனையும் கலந்து நான் சொல்லப் போகும் கர்ணனின் கதைக்கு, உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இக்கதையில் கர்ணன் தான் (என்) கதாநாயகன். எனவே அவனைப் பற்றி சில விஷயங்கள் மிகையாகச் சொல்லப் படலாம். அதற்காய் மற்றவர்கள் குறைவு என்பது அல்ல பொருள்.

தங்கள் புரிதலுக்கு என் பணிவான நன்றிகளை முன்கூட்டியே தெரிவிக்கிறேன்.

சான்வி
10-08-2011, 06:59 AM
பகுதி ஒன்று : அதிரதன்

கரை புரண்டு ஒடும் கங்கையின் கரையில், இரு கரமும் தலைக்கு மேல் கூப்பி, கண்களில் கண்ணீர் பெருகி வழிய, உலகுக்கே ஒளி தரும் சூரியனை மனம் உருக, காண்பவர் மனம் உருக, வேண்டிக் கொண்டு இருந்தார் ஒருவர். அவர் தான் அதிரதன். மகவொன்றை வேண்டி, மாதங்கள் பலவாய் அங்கே நாள் தவறாது ஆதவனை வேண்டும் தம்பதிகள் அவர்கள். ராதை அவரது மனைவி.

மனமுருக வேண்டி, பின்னர் கண்ணீர் நிறைந்த விழிகளுடன், நதியை நோக்க, தூரத்தில் ஏதோ ஒன்று ஆற்றில் மிதந்துவரக் கண்டார். மனைவிடம் அதையே காட்ட, அருகே வர வர அங்கே அவர்கள் கண்டது நன்றாய் அலங்கரிக்கப்பட்ட ஒரு பேழை.

நதியின் போக்கிலே செல்ல இருந்ததை, இவர் போய் எடுத்து வர, கரையிலே வைத்து இருவரும் பெட்டியை திறக்க, “தக தகதகக்கும் கதிரவனைப் போலே ஒளியுடன், அரைத்தெடுத்த சந்தனமும் குழைத்தெடுத்த குங்குமமும் கலந்த பூங்குவியலாய் ஒரு சிறு குழந்தை.

உடலோடு ஒட்டிய கவசமும், காதோடு ஒட்டிய குண்டலமும், குழந்தையின் உடலில் தங்கமென ஜொலிக்க, தங்க விக்ரகம் தான் அந்தக் குழந்தை.

கையில் ஏந்திய குழந்தை, அதிரதனை நோக்கி சிரிக்க, அவரும், அவர் மனைவியும் அடைந்த ஆனந்தம் சொல்லில் அடங்காதது.

வசுசேனன் எனப் பெயரிட்டு சீரும் சிறப்புமாய் வளர்த்தனர். மகவை வேண்டிய தம்பதியினருக்கு, அவர்கள் குல தெய்வமாம் சூரியனார் அந்தக் குழந்தையை அனுப்பியதாக கருதி, அந்தக் குழந்தையை உயிராய் கருதி வளர்த்து வந்தனர்.

சூரியனார் அனுப்பிய குழந்தையா அவன்??? அனுப்பியவள் பற்றி அடுத்த பகுதியில்...

சான்வி
10-08-2011, 07:01 AM
பகுதி இரண்டு : குந்தி

யாதவர்களிடம் இருந்து பிரிந்த ஒரு குலத்தவர்கள் போஜர்கள் என அழைக்கப்பட்டனர். குந்தி போஜனின் தேசம் பெரிதுதான். வளம் மிக்கதுதான். ஆயினும் புத்திரப் பேறு இல்லாத அரசன். இளவரசி ப்ருதா (ப்ரீதா) சூரசேனன் என்னும் போஜ யாதவ குலத் தலைவனுக்கு மகளாகப் பிறந்தவள். கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் தமைக்கை(சகோதரி) இந்த ப்ருதா.

குந்தி போஜருக்கு சுவீகாரம் தரப் பெற்ற பின்னர்தான் குந்தி தேவி எனப் பெயர் பெற்றார்.

குந்தி, நல்ல அழகும், பெரியோரை மதிக்கும் பண்பும் கொண்டவராகவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தார்.

ஒரு சமயம் இவர்கள் அரண்மனையில் தங்கிப் போக துர்வாச முனிவர் வந்தார். இவர் அத்திரி முனிவருக்கும், அனுசுயா என்ற மாதரசிக்கும் மகவாய் பிறந்தவர். ருத்திரரின் அம்சமோ என அச்சம் கொள்ளும் அளவுக்கு மகா கோபக்காரர். பல முனிவர்கள், கோபம் கொண்டு மற்றவரை சபிக்கும் போதெல்லாம் அவர்களது தவ வலிமை குறைந்திடும். ஆனால், இவருக்கோ, அப்படி சபிக்க நேரிடுகையில் எல்லாம், வலிமை அதிகரிக்கும். கூடவே பின்னே நடக்க இருக்கும் விஷயங்களை முன்கூட்டியே அறியும் வல்லமையும் படைத்தவராய் இருந்தாராம்.

எனவே இவர் சென்ற இடத்தில் எல்லாம், பெரும் மதிப்புடன் நடத்தப்பட்டார்.

அத்தகைய துர்வாசர் தம் அரமனைக்கு வருகை தருவதால், குந்தி தேவியே அவருக்கு பணிவிடை செய்யுமார் போஜ ராஜர் குந்தியை பணித்தார். குந்தியும், துர்வாசரின் மனதுக்கும், அமைதிக்கும், சிறிதும் குந்தகம் நேராது சிறப்பாய் பணிவிடை செய்து முடித்தார்.

அதில் அகம் மகிழ்ந்த முனிவரும், குந்திக்கு ஒரு மந்திரத்தை சொல்லிக் கொடுத்தார். எந்த தேவரையும் நினைந்த மாத்திரத்தில் கூப்பிட அருளிய வரம் அது. அந்த தேவரின் அம்சமாக, அவரின் சிறப்புகளையும், சக்திகளையும் கொண்ட ஒரு மகவை அந்த தேவர் அந்த மந்திரத்தின் வலிமைக்கு கொடுத்தாக வேண்டும்.

பின்னாளில் குந்திக்கு மகப்பேறு இல்லாமல் போகும் நிலையை முன் கூட்டியே அறிந்ததால் அந்த மந்திரத்தை துர்வாசர் அருளியதாக சொல்லப்படுகிறது.

விடை பெற்று முனிவர் சென்றதும், மந்திரத்தை பரிசோதித்து பார்க்கும் ஆவல் தன்னை உந்தித் தள்ள, காலையில் தன் உதயத்தால் உலகை ஒளிர்விக்க வந்த கதிரவனை மனதில் நினைத்து அந்த மந்திரத்தை சொல்ல, மந்திரத்தின் வலிமைக்கு கட்டுண்ட ஆதவன் குந்தியின் முன் தோன்றினார்.

கண்ணைக் கூசச் செய்யும் காந்தியுடன் கதிரவனைக் கண்ட குந்திக்கு, என்ன செய்வதென்ற தெரியாத நிலை. தன் விளையாட்டு புத்தியால் நேர்ந்த தவறை சொல்லி, கதிரவனை திரும்பப் போகச் சொல்ல, மந்திரம் சொல்லி அழைத்தால், மகவைத் தராது தன்னால் செல்ல இயலாது என அவர் செல்ல மறுக்க, தன் நிலையை (கண்ணி) எண்ணி அவள் மீண்டும் மறுக்க, மகவை பெற்றாலும் அவள் கன்னியாகவே இருப்பாள் எனச் சொல்லி, அவருடைய அம்சங்களைக் கொண்ட ஒரு குழந்தையை குந்தியின் கரத்தில் தந்து விட்டு கதிரவன் மறைந்தார்.

அந்தக் குழந்தைதான் இந்தக் கதையின் நாயகன் கர்ணன். கதிரவனின் ஆகிருதி, அவர்தம் திறம், வீரம் அனைத்தும் அவர் அம்சமாகவே இருப்பினும். இந்தக் கவசமும், குண்டலமும், கர்ணனது முற்பிறவியின் மீதம் என சில தகவல்கள் கூறுகின்றன.

அதை பற்றி நாம் அடுத்த பகுதியில் காண்போம்.

கீதம்
10-08-2011, 07:19 AM
மகாபாரதக் கதையின் ஒரு துளி, இங்கே, பிரவாகிக்கும் பெருநதியாய் உருவெடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சி, சான்வி. கர்ணன் பாத்திரம் மகாபாரதத்தின் உன்னதப் பாத்திரம். நன்றிக்கடனுக்கு இன்றும் நல்லுதாரணமாய்த் திகழும் பாத்திரம். உங்களைப் போல, என்னையும் இன்னும் பலரையும் கவர்ந்த பாத்திரப் படைப்பின் பெருமை சொல்லும் தொடரைத் துவங்கியதற்குப் பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

ஆதி
10-08-2011, 07:23 AM
துவங்கிய வேகத்தில் இரண்டு பகுதி தந்துவிட்டிர்கள், எழுத்தோட்டமும் எண்ணவோட்டமும் அழகு, தொடருங்கள், தொடர்கிறோம்...

என்னையும் மிக் கவர்ந்தவன், கர்ணன்..

ரங்கராஜன்
10-08-2011, 07:25 AM
வாசகரை படிக்க ஒரு சிறுகதையை படிக்க தூண்டுவது...... அதன் தலைப்பு...... இப்படி தான் இந்த தலைப்பும் என்னை தூண்டுகிறது......... வாழ்த்துகள்.

Nivas.T
10-08-2011, 07:44 AM
முன்னரே தெரிந்த கதை என்றாலும் நீங்கள் சொல்லும் விதம் மிக அழகு

தொடருங்கள்............. நாங்களும் தொடர்கிறோம்

பாராட்டுகள்

சான்வி
10-08-2011, 08:06 AM
உங்களைப் போல, என்னையும் இன்னும் பலரையும் கவர்ந்த பாத்திரப் படைப்பின் பெருமை சொல்லும் தொடரைத் துவங்கியதற்குப் பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

முதல் பின்னூட்டமாய் உங்கள் பதிவு வந்ததில் மிக்க மகிழ்ச்சி.

வாழ்த்துக்களுக்கு, வா(நே)சம் நிறைந்த நன்றிகள் :)

சான்வி
10-08-2011, 08:12 AM
துவங்கிய வேகத்தில் இரண்டு பகுதி தந்துவிட்டிர்கள், எழுத்தோட்டமும் எண்ணவோட்டமும் அழகு, தொடருங்கள், தொடர்கிறோம்...


துவக்கம் தான் எனக்கு எப்போதும் சிறு சுணக்கம் தரும். துவங்கி விட்டால் பின்னர் நிறுத்துவது கடினம் :)

இது போன்ற பின்னூட்டங்கள் வருமானால் இன்னும் இரண்டு பகுதி கூட எழுதலாம் தான்... ஆனால்.. ஆனால்... நான் கொஞ்சமே கொஞ்சம் சோம்பேறி :cool-smiley-016:

உங்கள் வரிகளுக்கு மிக்க நன்றி

சான்வி
10-08-2011, 08:14 AM
வாசகரை படிக்க ஒரு சிறுகதையை படிக்க தூண்டுவது...... அதன் தலைப்பு...... இப்படி தான் இந்த தலைப்பும் என்னை தூண்டுகிறது......... வாழ்த்துகள்.

தங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல

சான்வி
10-08-2011, 08:15 AM
முன்னரே தெரிந்த கதை என்றாலும் நீங்கள் சொல்லும் விதம் மிக அழகு

தொடருங்கள்............. நாங்களும் தொடர்கிறோம்

பாராட்டுகள்

உங்களுக்கு கதை மொதவே தெரியுமா??? அப்போ உங்கிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும் :)

வரவுக்கும், பதிவுக்கும் மிக்க நன்றி

தாமரை
10-08-2011, 09:28 AM
மகாபாரதத்தின் சிறப்பே அதில் உள்ள எந்த பாத்திரத்தையும் நாயகனாகப் பார்க்கலாம் என்பதாகும்.

சல்லியன் கூட சல்லி அல்ல அங்கே.. :sprachlos020::sprachlos020::sprachlos020:

ஒவ்வொருத்தரின் செயலுக்கும் காரண காரியங்கள் உண்டு அதில்..

காலங்கள் தாண்டி வாழ முடிந்ததின் அடிப்படை அதுதானே..

சுவையாக எழுதுகிறீர்கள். தொடருங்கள்.!!!

ஜானகி
10-08-2011, 10:26 AM
வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகளை உணர்த்துவதற்காகவே, இதிகாசங்களின் பாத்திரப்படைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அந்தவிதத்தில் கர்ணனின் பாத்திரப் படைப்பு மிகவும் ஆழமானது. அதனை அழகான விதத்தில், நயமாக எடுத்துரைக்கும் உங்களது முயற்சி பாராட்டப்படவேண்டியதுதான்.

வாழ்த்துக்கள்....தொடருங்கள்...பின்வருகிறோம்....மூழ்கி முத்தெடுக்கலாம்...

சிவா.ஜி
10-08-2011, 02:07 PM
கர்ணன்.......ஒரு காரணன்.....அவன் கதை சொல்ல விழைந்த சான்வியின் எழுத்தோட்டம்....அடுத்து வாசிக்க வைக்கிறது. அருமையான எழுத்து....எடுத்துக்கொண்ட கருவும் செழுத்து......வாசிப்போரை இழுத்து அமர வைக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி...மன்றத்தில் இன்னுமோர் அழகு தமிழ் தரும் தங்கை.

நாஞ்சில் த.க.ஜெய்
10-08-2011, 06:21 PM
என் ஆதர்ச நாயகன் கர்ணனின் கதையினை திரையில் கண்டதை விடவும் இந்த எழுத்து வரிகளில் படிக்கும் போது புதியதாய் படிப்பது போன்றே என் ஆர்வம் இன்னும் பலமடங்கு பெருகுகிறது ....தொடர்ந்து எழுதுங்கள் சான்வி அவர்களே ...

சான்வி
11-08-2011, 04:35 AM
சுவையாக எழுதுகிறீர்கள். தொடருங்கள்.!!!

உண்மை. ஏராளமான கிளைக் கதைகளுடன், சீரான, பல சிக்கல்கள் நிறைந்தது பாரதம்.

சல்லியனுக்கும் முக்கிய இடமுண்டு நான் எழுதும் வரிகளிலும்.

நன்றிகள் பல உங்கள் வரவுக்கும், ஊக்கம் தரும் வரிகளுக்கும்.

சான்வி
11-08-2011, 04:37 AM
வாழ்த்துக்கள்....தொடருங்கள்...பின்வருகிறோம்....மூழ்கி முத்தெடுக்கலாம்...

ஊக்கமும், உற்சாகமும் தந்து வாழ்த்தும் உங்கள் அன்பு உள்ளத்துக்கு உளம் நிறைந்த நன்றிகள்.

சான்வி
11-08-2011, 04:38 AM
வாழ்த்துக்கள் சகோதரி...மன்றத்தில் இன்னுமோர் அழகு தமிழ் தரும் தங்கை.

மேலும் வளரவென வாழ்த்த ஒரு சகோதரர் இருக்கையில், கவலையை இருக்கையில் விட்டு, களமிறங்க நான் தயாரிகிவிட்டேன் :)

மிக்க நன்றி அண்ணா.

சான்வி
11-08-2011, 04:40 AM
தொடர்ந்து எழுதுங்கள் சான்வி அவர்களே ...

பெருகும் உங்கள் ஆர்வம் என்னுள்ளும், சிறப்பாய் எழுதும் ஆர்வத்தை பெருக்குகிறது.

வரவுக்கும், ஊக்கம் தரும் வரிகளுக்கும் மிக்க நன்றி

சான்வி
11-08-2011, 04:46 AM
பகுதி மூன்று : சகஸ்ர கவசன் (கர்ணனின் முற்பிறவி)


இதை படிக்கும் வரை என்னடா, ஒரு பாவமும் அறியாத ஒருவனுக்கு, பிறந்தது முதல், சாவின் விளிம்பு வரை கூட எத்தனை அவமானங்கள்?? எத்தனை ஏச்சு பேச்சுக்கள் என அடங்காத என்ன ஓட்டங்கள் என்னுள்ளும் இருந்தது உண்டு. படித்த பின் கொஞ்சம் ஆறுதல் இருந்தாலும்.........

முதல் பிறவியில் கர்ணன் சகஸ்ர கவசன் என்னும் அசுரனாக இருந்தாராம். பிரம்ம தேவரிடம் பெற்ற வரத்தின் படி அவருடைய உடலை ஆயிரம் கவசங்கள் மூடி இருந்தனவாம். அந்தக் கவசங்கள் இருக்கும் வரை சகஸ்ர கவசனுக்கு அழிவு என்பது இல்லை. எவர் ஒருவர் தொடர்ந்து பன்னிரண்டு வருடங்கள் தவம் புரிந்துவிட்டு பின்னர் தொடர்ந்து பன்னிரண்டு வருடங்கள் போர் புரிகின்றானோ அவனால் தான் அசுரனுடைய ஒரு கவசத்தை உடைக்க முடியும். இவ்வாறு இருபத்தி நான்கு வருடங்கள் எவன் ஒருவன் தவமும், போரும் செய்து ஒவ்வொன்றாய் அவனது ஆயிரம் கவசங்களை உடைப்பது?? பின்னர் அவனைக் கொல்வது???

இந்த வரம் தனக்கு இருந்த காரணத்தால், சகஸ்ர கவசன் தொல்லைகள் எல்லை மீறித்தான் போய்விட்டனவாம். அனைவரையும் தாக்கி, பெரும் துயருக்கு ஆளாக்கி கொடும் செயல்கள் பல புரிந்தானாம். தேவர்கள் இந்த துயரங்கள் தாங்க இயலாது, மஹா விஷ்ணுவிடம் முறையிட, அசுரனை அழிக்க அவரே நரனாகவும், நாராயணன் ஆகவும் அவதாரம் எடுத்தாராம். நரன் பன்னிரெண்டு ஆண்டுகள் தவம் இருக்க, நாராயணன் அவனுடன் போரிட்டாராம். பின்னர் நரன் போரிட, நாராயணன் தவம் இருந்தாராம்.

இப்படியே, வருடங்கள் பல கழிந்தனவாம். ஒன்றன் பின் ஒன்றாக தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது கவசங்கள் உடைக்கப்பட்டது. அதற்குள் பிரம்ம பிரளயம்*** வந்து விட்டதாம். அப்போது, சகஸ்ர கவசன், இருந்த ஒரே கவசத்துடன், சூரியனிடம் தஞ்சம் புகுந்தாராம்.

இந்த சகஸ்ர கவசனே, மீதம் இருந்த ஒரே கவசத்துடன், கர்ணனாய், குந்தியின் மகனாய் பிறந்தானாம். இந்த அழிக்கப் பட வேண்டிய கவசத்தை அழித்திடவே, கிருஷ்ணர், நரனான அர்ஜுனனாகவும், நாராயணன் ஆகவும் பிறந்தனராம். வனவாசமாய் போன பன்னிரண்டு வருடங்கள் அர்ஜூனன் செய்த தவமாம்.

(ஆனால் அர்ஜூனன் இந்திரனின் அம்சம் என மஹாபாரதத்தில் வருகிறதே... அது உண்மை இல்லையா??? என ஐயம் வருகிறது. படித்து அறிந்ததை பகிரும் ஆவல். பகிர்ந்துவிட்டேன்.)

அந்த ஒரு கவசமும், இந்திரனால், கர்ணனிடம் இருந்து பெறப் பெற்றதை நாம் அனைவரும் அறிவோம் இல்லையா?? பின் வரும் அத்தியாயங்களில் மீண்டும் விளக்கமாக வரும்.

கர்ணனின் சிறு வயதின் நிகழ்வுகள் அடுத்த அத்தியாயத்தில்....

__________________________________________________ _

****பிரம்ம பிரளயம் : ப்ரபஞ்சம் அழியக்கூடியது. ஒரு முறை உருவாகும், மறு முறை அழியும். ஆக ஒரு சுழற்சியே. ப்ரம்மாவிற்கும் அழிவுண்டு.

ப்ரம்மவின் பிறப்பு, இறப்பு காலத்தின் நடுவே உள்ளது "மஹாகல்பம்"; ப்ரம்மாவின் இறப்பிற்கு பிறகு வரும் ப்ரளயம் "மஹாப்ரளயம்".

ப்ரம்மாவின் ஒரு நாள் "கல்பம்";; இந்த கல்பம் 14 மந்வந்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு மனு உண்டு.

அந்த மனுவின் வாழ்நாள் ஒரு "மன்வந்திரம்". இந்த மன்வந்திரத்தில் 72 சதுர் யுகங்கள் உள்ளன.

ஒரு சதுர் யுகம் என்பது நான்கு யுகங்கள் கொண்டது. அவை—க்ருதயுகம், த்ரேதாயுகம், த்வாபரயுகம், கலியுகம் என நான்கு யுகங்கள்.

ஒவ்வொரு கல்ப காலம் முடிந்ததும் உலகம் அழிகிறது. அதை சிறிய ப்ரளயம் என்பர். ப்ரம்மாவின் வயது 120 வருடங்கள். ஆக ஒவ்வொரு ப்ரம்மாவின் காலத்திலும் 42,200 ப்ரளயங்கள் (120x360 approx.).உருவாகின்றன.


இதிலும் இந்த யுகங்கள் எல்லாம் பல லட்சக் கணக்கான வருஷங்களைத் தன்னுள்ளே கொண்டதாம்

க்ருத யுகம் – 17,28,000 வருடங்கள் கொண்டது
த்ரேதா யுகம் – 12,96,000 வருடங்கள் கொண்டது
த்வாபரயுகம் – 8,64,000 வருடங்கள் கொண்டது
கலி யுகம் - 4,32,000 வருடங்கள் கொண்டது

(ஷ்........ ஷப்பா இப்போவே கண்ணைக் கட்டுதே... அப்போ பிரம்மாவுக்கு வாழ்நாள் வருசத்துல சொல்ல முடியாது போல இருக்கே....:sprachlos020:)

இந்த அரிய தகவல்களை எல்லாம் எனக்கு சொன்ன எங்க அப்பாவுக்கு இந்த பகுதி சமர்ப்பணம்.

(எனக்கு இதை புரிய வைக்க அவர் பட்ட பாடு இருக்கே... பாவம் எங்க அப்பா:D )

சான்வி
11-08-2011, 05:03 AM
பகுதி நான்கு : கர்ணனின் சிறு பிராயம்

கர்ணனின் எழில் மிகு குழந்தை பருவத்தை பற்றிய நிகழ்வுகள் இவை:

குழந்தையாய் இருக்கையிலும், அருகிருந்த முனிவரிடம் ஆசி பெற கர்ணனை எடுத்துச் செல்கையில், அவனது, கர்ண குண்டலங்களையும், உடலோடு போர்த்த கவசத்தையும், முக தேஜசையும் கண்ட முனிவர், அவனை எடுக்க, இரு கரத்தையும் நீட்டினாராம். உடனே குழந்தை, அதற்கு அணிவித்திருந்த அணிகலனை எடுத்து அவர் கையிலே வைத்தானாம்.

அகம் மகிழ்ந்த முனிவரும், குழந்தையை வாழ்த்தி, இவன் கொடுப்பதற்கு என்றே பிறந்தவன், என சொன்னாராம். அப்போது இருந்தே கேட்பவருக்கு கொடுக்கும் பண்பு கர்ணனுக்கு இருந்திருக்கிறது.

தன் தந்தை (வளர்ப்பு தந்தைதான்) அதிரதனைப் போலே தேர் ஓட்டினாலும், கர்ணனுக்கு போர்க்கலைகளில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அனைத்துக் கலைகளிலும் அவனுக்கு ஆர்வம் இருந்தாலும், வில் வித்தையில் அவனுக்கு இருந்த ஈர்ப்பை வேறு எதுவும் ஈடு செய்யவில்லை.

ஒரு பயிற்சி பெற்ற ஆசானிடம் முறையாய் இந்தக் கலையை கற்றிட வேண்டும் என உள்ளூர ஓடிய எண்ணத்தின் விளைவாய் அவன் தந்தையுடன், துரோணரிடம் சென்றானாம்.

துரோணர், அப்போது, ஹஸ்தினாபுர இளவரசர்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். பணிவாய் அவரை நமஸ்கரித்து, வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் தன் ஆர்வத்தை சொல்கிறான். ஷத்ரியர்களுக்கு தான் கற்றுக் கொடுப்பேன் - எனும் விரதம் கொண்டிருந்ததால், தேரோட்டியின் மகனுக்கு வித்தை கற்றுத் தர இயலாது என மறுத்து விடுகிறார்.

மனம் வருந்திய கர்ணன், ஆசான் இல்லாமலே நான் இந்த வித்தையை கற்றுக் கொள்கிறேன் பார் என மனதுக்குள் சூளுரைத்து, சுயமாகவே கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறான். இந்திய கலாசாரத்தின் படி, ஒரு வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டுமானால், அதற்க்கு கண்டிப்பாய் யாரையேனும் குருவாக கொள்ள வேண்டும்.

கர்ணன் தன் தந்தையான சூரிய பகவானையே குருவாகக் கொள்கிறான். பகலெல்லாம் அஸ்திரங்கள் பற்றிய விவரங்களைத் திரட்டி, பின்னர், சூரியன் மறைந்ததும், அந்த அஸ்திரங்களை பயிற்சி செய்தான். இப்படியே கடுமையான பயிற்சி மேற்கொண்டு தன்னை தானே இந்த வித்தையில் உயர்த்திக் கொண்டான்.

ஒரு சமயம், துரோணரின் குருகுலத்தில் மாணவர்களின் திறனை பரிசோதிக்க அவர் நடத்திய தேர்வை, கர்ணன் அறிய நேர்ந்தது. மரத்தால் செய்யப் பட்ட ஒரு பறவையின் உருவை, ஒரு மரத்தில் தொங்கவிட்டு, அதன் கண்ணை, இலக்காகக் கொண்டு அம்பு எய்யச் சொன்னாராம் அவர். பக்கத்தில் இருந்த பழ மரங்களில் கனிந்திருந்த பழங்கள் பல வீணானதுதான் மிச்சம். ஒருவர் கூட பறவையை அடிக்க வில்லையாம்.

சரி என, மாணவர்களை அழைத்து என்ன தெரிகிறது என மட்டும் கேட்டாராம். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாய் சொல்ல, அர்ஜூனன் மட்டுமே, அந்தக் பறவையின் கண் மட்டும் தெரிவதாய் சொல்ல, அவனை அம்பு எய்ய அனுமதிதாராம். இது அர்ஜுனனின் இலக்கை குறி பார்க்கையில் அவன் மனதை ஒருநிலைப்படுத்தும் திறனை சொல்லும் ஒரு விஷயம்.

இதை கேள்விப்பட்டு நம் நாயகன் என்ன செய்தானாம்????

அர்ஜூனன் ஒரு கண்ணை மட்டும் தானே அடித்தான், நான் அதே போல பறவையின் இரு கண்ணையும் அடிக்கிறேன் பார் என, பயிற்சிக் களத்தில் இறங்க, சொன்னதை செய்ய அவன் எடுத்துக் கொண்டதோ சில மணி நேரங்கள் மட்டும் தானாம். ஒன்றன் பின் ஒன்றாக இரு அம்பை ஒரே நேரத்தில் பொருத்தி, இரவிலே, தீவர்த்தியின் ஒளியில் இதை செய்தானாம்.

இது, வில் வித்தையைக் கற்றுக் கொள்வதிலும், அதை பயன்படுத்துவதிலும், கர்ணன் தீராத தாகமும், வேகமும் கொண்டிருந்தான் என்பதற்கு ஒரு சான்று.

இத்துணை கற்றுக் கொண்டாலும், தெய்வீக அஸ்திரங்களை, பயிற்சியில் சிறந்த ஒரு குருவினால் தான் தர முடியும் என்பதை கர்ணன் அறிந்தே இருந்தான். துரோணர் மறுத்து விட்ட படியால், அவரது குருவான பரசுராமரிடம் தான் அந்த வித்தைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தான்.

ஆனாலும், துரோணர் எப்படி, ஷத்ரியர்களுக்கு தான் கற்றுக் கொடுப்பேன் என இருந்தாரோ, அதுபோல பரசுராமர், பிராமணர்களுக்கு மட்டும் தான் கற்றுப் கொடுப்பது எனும் விரதம் பூண்டிருந்தார். பிராமணர் அல்லாதவர்களுக்கு அவர் கற்றுக் கொடுக்க மாட்டார்.

எனவே இது ஒரு தடையாக இருந்தது கர்ணனுக்கு. கர்ணன், கற்றானா?? அஸ்திரங்களை பெற்றானா?? என்பதை இனி வரும் பகுதிகளில் காணலாம்.

தாமரை
11-08-2011, 06:48 AM
பரசுராமரின் இன்னொரு ஷத்ரிய மாணவன் - பீஷ்மர்:icon_ush:

கீதம்
11-08-2011, 07:17 AM
சிக்கலான கதையை சிக்கலில்லாமல் தெளிவாக எழுதுவதற்கும், சரளமான எழுத்தோட்டத்துக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள் சான்வி. தொடர்ந்து வளரட்டும் கர்ணன் மீதான காதல்!

Nivas.T
11-08-2011, 07:23 AM
கர்ணனை பற்றியும் அவனது கவசகுண்டலம் பற்றியும் நான் அறியாத பல தகவல்கள். அவ்வளவு நல்லவனான கர்ணனை ஏன் கடவுளே முன்வந்து அழிக்க வேண்டும் என்பதன் காரணம் மிக அருமை. என்னே நமது இதிகாசத்தின் சிறப்பு

மிக்க நன்றி சான்வி தொடருங்கள்

Nivas.T
11-08-2011, 07:24 AM
பரசுராமரின் இன்னொரு ஷத்ரிய மாணவன் - பீஷ்மர்:icon_ush:

:eek: அப்படியா........... :icon_b:

தாமரை
11-08-2011, 08:53 AM
நர நாராயணர் - எனக்குத் தெரிந்த கதைகள்..

இரண்ய கசிபுவை அழித்த பின்னர் சாந்தமான நரசிம்மரின், நர உடலில் இருந்து நரனும், சிம்ம முகத்தில் இருந்து நாராயணனும் உருவானதாகக் கதைகள் சொல்கின்றன. சில கதைகள் நரநாராயணின் தந்தை தர்மதேவன் என்கின்றன. தரமதேவனுக்கும் தட்சனின் மகளான முருதி (அஹிம்சை) என்பவளுக்கும் குழந்தைகளாக பிறந்தனர் என்கிறது பாகவதம்.

நர நாராயண அவதாரங்கள் ஏன் எடுக்கப்பட்டன என்பதற்கு பாகவதம் சொல்வது ரிஷிகள், முனிவர்கள் எப்படி வாழ வேண்டும் என உணர்த்த.

இந்த நர நாராயணர்களைப் பற்றிய மூன்று கதைகள் உண்டு.

நரனும் நாராயனனும் பத்ரிகாசிரமத்திற்கு அருகில் இருந்த இரு சிகரங்களில் தங்கி தவம் புரிந்ததாகச் சொல்லப் படுகிறது. இவை இரண்டு சிகரங்கள் ஆகும். நாராயணச் சிகரத்தின் அடிவாரத்தில்தான் பத்ரிநாத் கோவில் உள்ளது. இந்தப்பகுதி கந்தமானப் பர்வதம் எனப்படும். அனுமன் பெயர்த்தெடுத்த சஞ்சீவி மூலிகை கொண்ட கந்தமானப் பர்வதம் இங்கு இருந்ததாகக் கருதப் படுகிறது.

நரனும் நாராயணனும் தவம் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் தவத்தைப் பார்த்து இந்திரன் வழக்கம் போலத் தவித்துப் போனான். தன்னுடைய வழக்கமான அஸ்திரங்களான மன்மதன் - ரதி, வசந்தன், அப்ஸரஸ் போன்றவற்றை அவன் ஏவ அவர்கள் இவர்களின் தவத்தைக் கலைக்க முயன்றனர். விழித்தெழுந்த நரன் எள்ளி நகைத்து தனது தொடையைத் தட்ட அங்கிருந்து கிளம்பினால் தொடைமயக்கி.. அதாங்க ஊர்(தொடை)வசி(மயக்குபவள்) ஹிஹி..

இதனால் நரனின் தபோபலம் குறைந்தது. இந்திரனுக்கு நாரணர் தனது அவதார ரகசியம் சொல்ல, அவனும் அடங்குகிறான். ஊர்வசி இந்திரன் சபைக்குச் செல்கிறாள்.

அடுத்து பிரஹலாதன் அப்பகுதிக்கு வேட்டைக்கு வருகிறான். வித்தியாசமான கோலத்தைக் காண்கிறான். இரு தவசிகள், மான் தோல்மேல். கையிலோ வில்லும் அம்புகளும். நாணேற்றியபடி தவம் செய்து கொண்டிருக்கும் அவர்களைக் கண்டதும் அவனுக்குச் சந்தேகம் வருகிறது. இவர்களோ ரிஷிகளைப் போலல்லாமல் ஆயுதங்களைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் ஷத்ரியர்களைப் போலல்லாமல் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யாரென தெரியவில்லையே என எண்ணி அவர்களின் தவத்தைக் கலைத்து சண்டைக்கு அழைக்கிறான். நரனும் பிரஹலாதனும் சண்டை இட நரனை வெல்ல முடியாது இறுதியாக பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகிக்கிறான் நம்ம பிரஹலாதன். விழித்தெழுந்த நாராயணன் மஹேஸ்வர அஸ்திரத்தால் பிரம்மாஸ்திரத்தை முறிக்க எதுவும் செய்ய முடியாமல் தோற்றுப் போன பிரஹலாதன் விஷ்ணுவை இறைஞ்ச, விஷ்ணு சொல்கிறார், நாராயணனை வெல்ல ஒரே ஒரு வழி உண்டு. அது அவனை வணங்குவதே ஆகும் என்று.

தன் ஆட்சியை இரண்யகசிபுவின் சகோதரன் இரண்யாட்சன் (வராகவதார வில்லன்) மகனான அந்தகாசுரன் ஒப்புவித்து விட்டு நாராயணனை எண்ணி தவமிருக்கும் பிரஹலாதனுக்கு முக்தி கிட்டுகிறது.

மூன்றாவதாக வருவதுதான் தம்போதவன் எனப்படும் சஹஸ்ர கவசன் என்ற கதை.

சஹஸ்வர கவசன் பெறும் கவசங்களின் பலம் கீழ்கண்டவாறாகும்.

அதை உடைக்க வேண்டுமானால் 1000 வருடங்கள் ஒருவன் போரிட வேண்டும். அப்படி ஒரு கவசம் உடைந்தால் உடைத்தவன் இறந்து போவான்..

இதனால் நரன் 1000 வருடங்கள் அவனுடன் போரிட்டு ஒரு கவசம் உடைத்து மரணமடைவான். நாராயணன் தனது 1000 வருட தபோபலத்தின் பயனாகப் பெறும் ம்ருத சஞ்சீவினி மந்திரம் கொண்டு நரனை உயிர்பித்து விட்டுப் போரைத் தொடருவான். நரன் 1000 ஆண்டுகள் தவம் செய்து அடுத்த இரவுண்டுக்குத் தயாராவான்.

1000 x 999 = 9,99,000 ஆண்டுகள் போர் தொடர்ந்தது. இதனால் த்ரேதா யுகம் தொடங்கிய போர் த்வாபர யுகத்திலும் தொடர்ந்தது. (பிரம்ம பிரளயம் வரலைங்க). 999 கவசங்கள் உடைந்ததும் பயந்து போன தம்போத்வன் சூரியனிடம் சரணடைகிறான். நரநாராயணர்கள் சூரியனை அசுரனை ஒப்படைக்கக் கேட்க, சூரியன் மறுத்து நாராயணனின் சாபத்திற்கு ஆளாகிறான்.

எப்படி விஷ்ணுவின் அம்சம் நரன் + நாராயணன் என இரண்டாகியது அப்படி சூரியனின் அம்சம் தம்போத்வனுடன் சேர்ந்து மனிதனாகப் பிறந்து நர நாராயணர்களால் அழிக்கப்படுவான் என்பதே அந்தச் சாபம்.

இதனால் கர்ணன் என்ற ஒரு மனிதனுக்குள் இரு அம்சங்களும் சமமாய் கலந்திருந்தன. சூரிய அம்சத்தினால் வள்ளலாக வாழ்ந்த அவன் அசுர அம்சத்தினால் கர்வமிக்கனாகவும் இருந்தான்.

இராம அவதாரத்திலே

இந்திரனின் அம்சமாக வாலி
சூரியனின் அம்சமாக சுக்ரீவன்

கிருஷ்ண அவதாரத்திலே

சூரியனின் அம்சமாகக் கர்ணன்
இந்திரனின் அம்சமாக அர்ச்சுனன்

அங்கு வாலி கொல்லப்பட்டான்.. இங்கே சுக்ரீவன் கொல்லப்பட்டான். அங்கே பாதி பலம் பறிக்கும் மாலையின் பலத்தை மறைந்திருந்து இல்லாததாக்கினான் இராமன். இங்கு கவச குண்டலங்கள் இரந்து பெறப்பட்டது.

ஆதி
11-08-2011, 09:05 AM
//இராம அவதாரத்திலே

இந்திரனின் அம்சமாக வாலி
சூரியனின் அம்சமாக சுக்ரீவன்

கிருஷ்ண அவதாரத்திலே

சூரியனின் அம்சமாகக் கர்ணன்
இந்திரனின் அம்சமாக அர்ச்சுனன்

//

அப்போ இறைவனின் அவதாரங்கள் அரக்கர்களை அழிக்க மட்டுமல்ல, தவறு செய்தால் தேவர்களையும் அழிக்கவும் எடுக்கப்பட்டிருக்கிறதா அண்ணா ?

தாமரை
11-08-2011, 09:25 AM
//இராம அவதாரத்திலே

இந்திரனின் அம்சமாக வாலி
சூரியனின் அம்சமாக சுக்ரீவன்

கிருஷ்ண அவதாரத்திலே

சூரியனின் அம்சமாகக் கர்ணன்
இந்திரனின் அம்சமாக அர்ச்சுனன்

//

அப்போ இறைவனின் அவதாரங்கள் அரக்கர்களை அழிக்க மட்டுமல்ல, தவறு செய்தால் தேவர்களையும் அழிக்கவும் எடுக்கப்பட்டிருக்கிறதா அண்ணா ?

அசுரர்களே தேவர்கள்தானே ஆதன்.. :confused::confused::confused::icon_ush::icon_ush::icon_ush:

ஆதி
11-08-2011, 09:29 AM
அசுரர்களே தேவர்கள்தானே ஆதன்.. :confused::confused::confused::icon_ush::icon_ush::icon_ush:

ஆமாயில்ல :)

அதை நான் மறந்துட்டேன் அண்ணா.................

சான்வி
11-08-2011, 10:59 AM
பரசுராமரின் இன்னொரு ஷத்ரிய மாணவன் - பீஷ்மர்:icon_ush:

தகவலுக்கு நன்றி அண்ணா. நானும் யார்கிட்டயும் :icon_ush::)

சான்வி
11-08-2011, 11:03 AM
சிக்கலான கதையை சிக்கலில்லாமல் தெளிவாக எழுதுவதற்கும், சரளமான எழுத்தோட்டத்துக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள் சான்வி. தொடர்ந்து வளரட்டும் கர்ணன் மீதான காதல்!

மனம் நிறைந்த பாராட்டுகளுக்கு இதயம் நிறைந்த நன்றிகள் கீதம்

சான்வி
11-08-2011, 11:07 AM
என்னே நமது இதிகாசத்தின் சிறப்பு

மிக்க நன்றி சான்வி தொடருங்கள்

உண்மைதான். சிறப்பில்லாதது என என்ன உள்ளது?? அனைத்தும் சிறப்புதான்

தொடரும் உங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி

சான்வி
11-08-2011, 11:34 AM
நர நாராயணர் - எனக்குத் தெரிந்த கதைகள்..

ஐ... கதையா??? சொல்லுங்க.. சொல்லுங்க..:)

இந்த நர நாராயணர்களைப் பற்றிய மூன்று கதைகள் உண்டு.

ஆடி மாசத்துல தள்ளுபடிதான் கெடைக்கும்-ன்னு சொல்வாங்க. இங்கே பார்த்தா.. ஒன்னுக்கு மூனா போனஸ் :) ரொம்ப சந்தோசம்

இதனால் நரனின் தபோபலம் குறைந்தது. இந்திரனுக்கு நாரணர் தனது அவதார ரகசியம் சொல்ல, அவனும் அடங்குகிறான். ஊர்வசி இந்திரன் சபைக்குச் செல்கிறாள்.

இந்த கதை எனக்கு புதிது.

தன் ஆட்சியை இரண்யகசிபுவின் சகோதரன் இரண்யாட்சன் (வராகவதார வில்லன்) மகனான அந்தகாசுரன் ஒப்புவித்து விட்டு நாராயணனை எண்ணி தவமிருக்கும் பிரஹலாதனுக்கு முக்தி கிட்டுகிறது.

இதுவும் புதிது

மூன்றாவதாக வருவதுதான் தம்போதவன் எனப்படும் சஹஸ்ர கவசன் என்ற கதை.

(பிரம்ம பிரளயம் வரலைங்க).

ஆனா, ஏன் வரலே??? நான் கதை கேக்கும்போது வந்திச்சு இல்ல??? :sprachlos020: :) ஜஸ்ட் கிடிங் அண்ணா. ப்ளீஸ் டோன்ட் மைன்ட் :)

எப்படி விஷ்ணுவின் அம்சம் நரன் + நாராயணன் என இரண்டாகியது அப்படி சூரியனின் அம்சம் தம்போத்வனுடன் சேர்ந்து மனிதனாகப் பிறந்து நர நாராயணர்களால் அழிக்கப்படுவான் என்பதே அந்தச் சாபம்.

தர்க்க ரீதியான கேள்விகளுக்கும் சரியான விடை தரும் இந்த விளக்கங்களை, அள்ளித் தந்த உங்களுக்கு என் சிறப்பு நன்றிகள்


உங்களின் இந்த அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி. அறியாத பல தகவல்களை உங்கள் மூலம் அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா(அனுமதி இன்றி அழைத்து விட்டேன். பிழை இருந்தால் மன்னிக்கவும்)

Nivas.T
11-08-2011, 11:53 AM
அங்கு வாலி கொல்லப்பட்டான்.. இங்கே சுக்ரீவன் கொல்லப்பட்டான். அங்கே பாதி பலம் பறிக்கும் மாலையின் பலத்தை மறைந்திருந்து இல்லாததாக்கினான் இராமன். இங்கு கவச குண்டலங்கள் இரந்து பெறப்பட்டது.

கர்ணன் என்று இருக்க வேண்டுமே அண்ணா :sprachlos020:

சிவா.ஜி
11-08-2011, 02:00 PM
மிக அழகான நடை. ஒரு இதிகாசக் கதையைப் படிப்பது போலில்லாமல், விறுவிறுப்பான நாவலைப் படிப்பதைப்போல இருக்கிறது உங்கள் எழுத்து. ரொம்ப சுவாரசியமா போகிற கர்ணனை...இன்னும் காண விருப்பம் பலப்பல.....தொடருங்கள் தங்கையே.

சான்வி
12-08-2011, 03:34 AM
இன்னும் காண விருப்பம் பலப்பல.....தொடருங்கள் தங்கையே.

ஊக்கம் மற்றும் வாழ்த்தோடு மேலும் எழுத உற்சாகத்தையும் தந்த சிவாண்ணாவுக்கு பாசம் நிறைந்த நன்றிகள் பல

சான்வி
12-08-2011, 08:00 AM
பகுதி ஐந்து : கர்ணனும் பரசுராமரும்

பரசுராமரை பற்றி கர்ணன் முதல் முதலில் கேள்விப் படும் போதும் நடந்த நிகழ்வுகள் :

தான் வில்வித்தையில் நிபுணன் ஆக வேண்டுமானால், சிறந்த ஒரு குரு தனக்கு வேண்டுமே, என துரோணரின் மறுப்புக்கு பின் உள்ளுக்குள் மருகிக் கொண்டு இருக்கையில் யாரோ யாரிடமோ பேசுகையில் பரசுராமர் என்ற பெயரை கேள்விப்பட்டானாம்.

சொன்னவரிடமே வினவி இருக்கிறான்.

பரசுராமர் யார்???

அவர் ரிஷி ஜமதக்னியின் மகன். ரிஷியாக இருந்தபோதிலும் அவர் ஒரு சிறந்த யுத்த வீரனாகவும் விளங்கினார்.

எப்படி அவர் சிறந்த யுத்தவீரர்?

அவர் 21 முறை உலகை வலம் வந்தவர், எந்த க்ஷத்திரியனாலும் அவரை வெற்றி கொள்ள முடியவில்லை. அவர் வில்லைக் கையிலெடுத்தால் உலகம் நடுங்கும். வில்வித்தையின் நுணுக்கங்களை அவர் நன்கு அறிவார். முனிவர்களும் அவர் புகழ் பாடிக் கொண்டு இருக்கின்றனர்

சரி முனிவர்கள் அவரைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள்??

அவர் வில் வித்தையின் மறு உருவம். அவர் அநீதியை அழிக்க வந்த கடவுள் ஆவார் எனக் கூறுகின்றனர் என சொன்னார்கள்.

அதைக் கேள்விப் பட்டதில் இருந்து, பரசுராமின் மேல், கர்ணனுக்கு, அபார பக்தியும், அளப்பறிய ஈடுபாடும் வந்தது. கர்ணன் பரசுராமரிடமே வில்வித்தை கற்க வேண்டுமென்று விரும்பினான். அவர் தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனாலும் தைரியமாக பரசுராமரின் ஆசிரமத்திற்குச் சென்றான். அவன் அவரை விழுந்து வணங்கினான்.

பரசுராமர் அந்த சிறுவனைக் கண்டு
குழந்தாய் நீ யார்? எனக் கேட்டாராம்.

அதற்கு கர்ணன், என்னை கர்ணனென்று அழைப்பார்கள்

பரசுராமர் : இங்கு வந்ததன் காரணம்?

கர்ணன் : தாங்கள் ஈடு இணையற்ற சிறந்த வீரராகக் கருதப் படுகிறீர்கள். வில்வித்தையின் நுணுக்கங்களை அறிந்தவர். நான் உங்கள் சிஷ்யனாக விரும்புகிறேன். மறுத்து விடாதீர்கள்.

கர்ணனின் பணிவு மற்றும் கற்பதில் உள்ள ஆர்வத்தைக் கண்ட பரசுராமர் அவனிடம் கருணை கொண்டார். அவர் விருப்பத்திற்கிணங்க கர்ணனும் வித்தைகளை செய்து காட்டினான். அவனது நுணுக்கத்தையும் கவனத்தையும் கண்ட பரசுராமர் ஆச்சரியமடைந்தார்.

கர்ணனின் வல்லமை அவன் வயதிற்கு மிஞ்சியதாக இருப்பதைக் கண்டார். அவன் தமக்கு சிஷ்யனாகத் தகுதியுள்ளவனே என்று நினைத்தார்.

கர்ணனுக்கு வில் வித்தை கற்றுக்கொடுக்க சம்மதித்தார். இதைக் கேட்ட கர்ணன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

அக்கால கட்டத்தில் க்ஷத்திரியரும் பிராமனருமே குருகுலத்திலிருந்து வில்வித்தை கற்க அனுமதி பெற்றவர். பரசுராமர் க்ஷத்திரியர்களை வெறுத்து வந்தார். அதனால் அவர் பிராமணர்களுக்கு மட்டுமே கற்றுக் கொடுக்க விரும்பினார்.

அவர் கர்ணனை பிராமணச் சிறுவனாகவே நினைத்தார்.

கர்ணனின் பயிற்சி எந்தவிதத் தடையுமில்லாமல் நடந்தது. குருவின் போதனைகளை அவன் உடனுக்குடனேயே புரிந்துகொண்டான். முதல் முயற்சியிலேயே அவைகளை பூரணமாக செய்தும் காட்டினான். இவ்வாறு கர்ணன் வில்வித்தையின் நுட்பங்களை குருவிடமிருந்து கற்றுக்கொண்டான். அவன் அன்புடன் குருசேவையும் செய்து வந்தான். காலம் சென்றது.

ஓருநாள் பயிற்சிக்குப் பின்னர், மதியம் பரசுராமர் களைப்பாக இருந்ததால் கர்ணன் மடிமீது தலை வைத்துத் தூங்கி விட்டார்.

அப்பொழுது ஒரு வண்டு பறந்து வந்து கர்ணனின் தொடையில் அமர்ந்தது. சிறிது நேரத்தில் அது அவன் தொடையைத் துளைக்க ஆரம்பித்தது. அவனால் அதை விரட்டவும் முடியவில்லை.

சிறிது அசைந்தால் கூட குருவின் தூக்கம் கலைந்து விடும். தாங்க முடியாத வலியிலும் அவன் அசையாமல் இருந்தான். அவன் தனக்கு வலித்தாலும் பரவாயில்லை, குருவிற்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று நினைத்தான்.

வண்டு துளைத்துக் கொண்டிருந்ததால் கர்ணன் தொடையிலிருந்து ரத்தம் பெருக ஆரம்பித்தது. பரசுராமரின் கன்னத்தில் பட்டது. அவர் உறக்கம் கலைந்து விட்டது. ரத்தத்தைக் கண்ட அவர் திடுக்கிட்டுக் கேட்டார்.

பரசுராமர் : என்ன இது? ரத்தம் எங்கிருந்து வந்தது?

கர்ணன் நடந்ததைக் கூறினான்.

பரசுராமர் : இத்தனை வலியையுமா நீ தாங்கிக்கொண்டாய்?

கர்ணன் : வலி தாங்க முடியாததாக இல்லை.

பரசுராமர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். அவர் கர்ணனைத் தலையிலிருந்து கால் வரைப் பார்த்தார். அவர் இதுவரை கர்ணனை பிராமணச் சிறுவன் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார். ஓரு பிராமணனால் இத்தகைய வலியைத் தாங்க முடியாது.

ஆகையால் கர்ணன் ஒரு பிராமணச் சிறுவனாக இருக்க முடியாது. க்ஷத்திரியனோ என்று நினைத்தார். கோபத்துடன் அவர் கர்ணனைப் பார்த்து,

பரசுராமர் : கர்ணா!

கர்ணன் : குருவே!

பரசுராமர் : உண்மையைச் சொல், யார் நீ? நீ என்னிடமிருந்து எதையும் மறைக்கவில்லையா?

கர்ணன் : எதை மறைத்தேன்? எனக்குத் தெரியவில்லை.

பரசுராமர் : நீ பிராமணன் தானா?? உண்மையைக் கூறு.

கர்ணன் பதிலேதும் கூறவில்லை. தலைகுனிந்து நின்றான். அவன் தன்னை தேர்ப்பாகன் அதிரதனின் மகனாகத்தான் நினைத்து வந்தான். ஆகையால் தான் ஒரு பிராமணனோ க்ஷத்திரியனோ அல்ல என்று நினைத்திருந்தான்.

அவனால் குருவுக்கு என்ன பதிலளிக்க முடியும்? அவனுக்கு பயமும் வருத்தமும் ஏற்பட்டது. கர்ணனின் அமைதி பரசுராமரின் சந்தேகத்தை உறுதி செய்தது. கர்ணனின் பணிவு, வீரம், குருபக்தி, ஆர்வம், எல்லாவற்றையும் மறந்து விட்டார்.

“நீ குருவை ஏமாற்றி வித்தை கற்றதால் தேவையான சமயத்தில் அது உனக்கு நினைவிற்கு வராது.” என்று பரசுராமர் கர்ணனை சபித்தார்.

கர்ணன் தன் உலகமே இருண்டது போலே உணர்ந்தான். அவன் குருவின் மனதை அவனறியாமலே காயப் படுத்தி இருந்தான்

மேலும் தேவையான சமயத்தில் அவனுக்கு அவன் கற்ற வித்தை கை கொடுக்காது என்ற சாபத்தையும் பெற்றான். அவன் பரசுராமரின் ஆசிரமத்தை விட்டு அகன்றான்.

பின்னர் நடந்தவை, அடுத்த பகுதியில்....

நாஞ்சில் த.க.ஜெய்
12-08-2011, 08:01 AM
கதை கதையாம் காராணமாம் ..ஒவ்வொருவரும் அவர்களின் செவிவழி மூலம் மாறுபாட்டாலும் புத்தகங்கள் மூலம் அறிந்த தகவல்கள் செயல் வடிவம் பெரும் பொது அவை உண்மையா என்று ஆராய்வதில்லை அவ்வாறு ஆராய முயலும் போது அதன் உண்மை வடிவத்தினை அறிய எடுத்து கொள்ளும் காலம் மிக அதிகம் அதிலும் தான் கண்டறிந்த உண்மைகளை மற்றவர்கள் உணர செய்வது அதை விட கடினம் ..இது போன்ற ஒரு செயல் முறை தான் இங்கே ....தாமரை அவர்களின் கதை கருத்துகளும் சான்வி அவர்களின் கதை கருத்துகளும் மாறுபட்டிருந்தாலும் புராணங்கள் கூறும் தகவல்கள் நிகழ்ந்தனவா இல்லையா என்று ஆராய்வதை விட அது கூறும் நற்கருத்துகளை ஏற்று கொள்வது மிக்க நன்று ...என் போன்றவர்களுக்கு இது போன்ற ஆக்கபூர்வமான செயல் பாடுகள் மூலம் அறியாத தகவல்கள் அறிந்து கொள்ள முடிகிறது .. தாமரை மற்றும் சான்வி அவர்களே தொடரட்டும் தங்கள் எழுத்து பணி ...

சான்வி
12-08-2011, 08:08 AM
பகுதி ஆறு : கர்ணனின் வாலிபப் பிராயம்

அயராத பயிற்சியின் மூலம் வித்தையிலும் வளர்ந்து, தானும் வளர்ந்து, கண்ணையும் மனதையும் நிறைக்கும் வாலிபப் பருவத்தில் கர்ணன்:

ஹஸ்தினாபுரத்திலே, பாண்டவ மற்றும் கௌரவ இளவரசர்கள் வித்தைகளைக் கற்று முடித்து தங்கள் திறமைகளை மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்த ஒரு நாள் குறிக்கப்பட்டு அதற்காய் ஒரு களம் உருவாக்கப்பட்டு இருந்தது.

செய்தியை அறிந்த நம் நாயகனும், அங்கே வில் வித்தையை வேடிக்கை காணச் சென்றான்.

என்ன ஒரு பிரம்மாண்ட களம் அது. ஒரு ஊரையே வளைத்து உருவாக்கப் பட்டு இருந்தது களம். நடுவே ஒரு பெரிய மேடை. கணக்கிலடங்கா மக்களும், ராஜ குல தோன்றல்களும் அங்கே குவிந்து இருந்தனர்.

திறமைகள் வெளிப்பட ஆரம்பித்தன. அது காணவே இயலாத காட்சியாய், அதுவரை கண்டிராத காட்சியாய் கண்டவரின் கண்களுக்கு பெரு விருந்தாய் இருந்ததாம். குதிரையேற்றம், யானை ஏற்றம், கத்தி சண்டை, விற்போர், மற்போர் என அத்தனையிலும் அற்புதங்கள் நிகழ்த்தினராம் அந்த இளம் வீரர்கள்.

ஆயுதங்களின் வீச்சு ஆயிரம் சின்ன மின்னல்கள் அந்தக் களத்திலே ஆங்காங்கே வந்தது போல, பிரகாசித்தன.

ஆனால், அனைவரின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டவன் அர்ஜூனன் ஒருவனே. அவன் காண்பித்த வித்தைகளை கண்டு, மக்கள் ஒரு மித்த குரலில், வில் வித்தையில் நிகரில்லாதவன் அர்ஜுனன் தான்.. என கோஷங்கள் எழுப்பினர்...

அவன் சகோதர்களுக்கும், அன்னைக்கும் பெருமிதத்தில் கண்களில் நீர் துளிக்க ஒரு ஆனந்தக் காட்சியின் அரங்கேற்றம் அங்கே...

அப்போது... இடி முழக்கமாய் ஒரு குரல் “அர்ஜுனா அகந்தை கொள்ளாதே” என அரங்க மேடையின் அருகே கேட்டது... அனைவரும் ஒரு சேர திரும்பிப் பார்க்க,

திண்ணென்ற தோள்கள் திரண்டே இருக்க,
பொன்னை ஒத்த வர்ணம் மேனிதனில் இருக்க,
கதிரொத்த காந்தி அவன் கண்களில் இருக்க,
பளபளத்த கவசமும், ஜொலித்த குண்டலமும்
அவன் அழகிற்கு அழகு சேர்க்க...

சவாலாய் மார்பதனைத் தட்டி, தற்பெருமை கொள்ளாதே
தனஞ்சயா, என அவைதனில் அவன் நடக்க, மலரைக்
மொய்க்கும் வண்டுகளாய் அவனை மொய்த்தன மக்கள்
கண்கள்.. அவர் அசைவின்றிப் போயினர் அவன்தம் வரவில்..

வந்தது நம் கதையின் நாயகன் தான்..

கர்ணன் : போட்டியிட ஆள் இல்லாததால், நீதான் சிறந்தவன் என கர்வம் கொள்ளாதே. நான் உன்னை விட சிறந்த வித்தைகளைக் காட்டுவேன். இதோ இங்கே நிறைந்திருக்கும் சபையினர் கண்களுக்கு என் திறமைகளை விருந்தாக்குகிறேன்..

என தான் கற்ற வித்தைகளை விருந்தாக்கினான். அசாதாரண விருந்து.

பர்ஜன்ய அஸ்திரத்தை விண்ணில் செலுத்தி, மழையை வருவித்தான், பின்னர் வாய்வ அஸ்திரத்தை கொண்டு மழையைக் கட்டுப் படுத்தினான்.

ஆக்னேயாஸ்திரத்தால் அக்னியை வரவழைத்தான். வருனாஸ்திரத்தால் அதைக் அணைத்தான்.

நிலையற்ற வேகத்துடன் சுழலும் உலோகத்தாலான பன்றியின் வாய்க்குள் குறிதவராது அஸ்திரங்கள் செலுத்தினான்.

அந்தர்தான அஸ்திரத்தைச் செலுத்தி மறைந்து, அரங்கத்தின் இன்னொரு இடத்தில் உடனேயே தோன்றினான்.

அதன் பிறகு கதையின் மூலம் பல சாகசங்களைச் செய்து காட்டினான். மக்கள் அவன் ஆற்றல் மிக்க வித்தைகளைக்கன்டு வியந்தனர்.

அங்கு ஆரவாரம் எழுந்தது. பாண்டவர்கள் அவனை ஸூத்புத்திரன் என்று கூறி அவன் வித்தைகளை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். ஸூத்புத்திரன் (தேரோட்டியின் மகன்) என்பதால் அவன் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதையும் மறுத்தனர். அவன் சமூகத்தாலும் அவமதிக்கப் பட்டான்.

போட்டிகள் முடிந்த உடனே துரியோதனன் அரங்கத்திற்கு ஓடிச்சென்று கர்ணனை ஆரத்தழுவி ஈடு இணையற்ற வீரனே, உன் வீரத்தையும், ஆயுதங்களைக் கையாளும் திறனையும் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் என் தேசமும் உன்னுடையதே. உன் விருப்பம் என்ன வென்று கூறு. நான் இப்பொழுதே அவற்றை நிறைவேற்றி வைக்கிறேன், என்றான்

கர்ணன் அவனிடம் கேட்டது என்ன??? துரியோதனன் கர்ணனுக்காய் செய்தது என்ன என்பதை நாம் அடுத்த பகுதியில் காண்போம்

சான்வி
16-08-2011, 08:13 AM
தாமரை மற்றும் சான்வி அவர்களே தொடரட்டும் தங்கள் எழுத்து பணி ...

உண்மைதான். தங்களின் வரவுக்கும், ஆக்கமும், ஊக்கமும் நிறைந்த பதிவுக்கும் மிக்க நன்றி.

சான்வி
16-08-2011, 08:23 AM
பகுதி ஏழு : கர்ணனும் துரியோதனனும்

கர்ணனின் வீரத்தையும், அவன் ஆயுதங்களை கையாளும் திறமையில் உள்ளம் மகிழ்ந்த துரியோதனன் கர்ணனிடம் நட்பாய் இருக்க வேண்டும் என மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். அவர்களைப் பற்றி இனி....

துரியோதனன் : கர்ணா, (என ஆவலுடன் கூவி அவனை ஆரத்தழுவி) ஈடு இணை அற்ற வீரனே, உன் வீரத்திலும், தீரத்திலும், ஆயுதங்களில் உனக்கு உள்ள தேர்ச்சியும் கண்டு ஆனந்தத்தின் எல்லையில் உள்ளேன் நான். நானும், என் தேசமும் இனி உன்னுடையது. என்ன வேண்டும் உனக்கு?? கேள்.. இப்போதே அதை நிறைவேற்றுகிறேன்

கர்ணன் : வேறெதுவும் எனக்கு வேண்டாம் அரசே. உங்கள் நட்பும், அர்ஜுனனுடன் வில் வித்தையில் போட்டியிட வேண்டும் என்பதுமே என் விருப்பம்.

துரியோதனன் : அப்படியானால், இப்போதே உன் விருப்பங்கள் நிறைவேறின என்று எண்ணிக் கொள். இன்றிலிருந்து நீ என் ஆருயிர் நண்பன். என்னைப் போலவே மதிக்கத்தகுந்த ஒருவன்

அர்ஜூனன் : கர்ணா இங்கே உன்னை யாரும் அழைக்கவில்லை. நீயாக வந்தாய். நாங்கள் உன்னிடம் பேசவில்லை. நீதான் அதிகமாகப் பேசுகிறாய். இந்த அமைதியான கூட்டத்தை அமைதியிழக்கச் செய்து விட்டாய். நான் இப்பொழுதே உன்னைக் கொன்று விடுவேன். ஆயுதம் எடுத்து வா, என்றான்.

கர்ணன் : அர்ஜுனா, இந்த அரங்கம் உனக்கு சொந்தமானதல்ல. இது ஒரு பொது இடம். வித்தை தெரிந்த யாரானாலும் இங்கு வந்து தன் ஆற்றலைக் காட்டலாம். அதில் உனக்கு என்ன ஆட்சேபணை?

நீ என்னை அவமதிக்கிறாய். உண்மையான வீரன் உன்னைப்போல் பேசுவானா?? போர் என்றால் நானும் தயார்தான். நான் இப்பொழுதே இங்கேயே உன்னை வீழ்த்தி விடுவேன், என்றான்.

இருவரும் போருக்கு ஆயத்தமாயினர். அரசகுமாரர்களுக்குப் பயிற்சி அளித்த துரோணாச்சாரியார் இடை இட விழைந்தார். கூட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. கர்ணனும் அர்ஜுனனும் சண்டையிடப் போவதை அறிந்த பாண்டவர்களின் தாயாரான குந்திதேவி மயக்கமடைந்தாள். கிருபாச்சாரியார் அரங்கத்தை அடைந்தார். துவந்த யுத்தத்தின் நியமங்களை அவர் அறிந்திருந்தார்.

கிருபாச்சாரியார் : கர்ணா உன்னுடன் போரிடத் தயாராக இருப்பவன் அர்ஜுனன். அவன் சந்திர வம்சத்து அரசகுமாரன். பாண்டுவின் மகன். அவனுடன் சண்டையிடுபவன் எல்லாவிதத்திலும் அவனுக்கு சமமாக இருக்கவேண்டும். நீ யாருடைய மகன்? யாருடைய மாணவன்? அதை இந்த சபைக்குக் கூறு, என்றார்.

கர்ணன் வெட்கத்தினாலும் அவமானத்தினாலும் தலை குனிந்து நின்றான். நான் ஒரு தேர்ப்பாகன் மகன். ஆகையால் நான் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன். மக்கள் அதைப்பெரிது படுத்துகிறார்கள். நான் யாராக இருந்தால் என்ன? மனிதனுக்கு வீரம் போதாதா? என்று கர்ணன் நினைத்தான்.

நடந்ததைக் கண்ட துரியோதனன் ஆத்திரமடைந்தான்.

துரியோதனன் : கிருபாச்சாரியாரே நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? அர்ஜுனன் அரசகுமாரன், கர்ணன் அரசகுமாரன் இல்லை என்று தானே நினைக்கிறீர்கள்? நான் இப்பொழுதே கர்ணனை அரசனாக்குகிறேன். அப்பொழுது அவன் அர்ஜுனனுக்கு சவால் விடலாம் இல்லையா?

என்று கூறிக்கொண்டே கர்ணனை அங்க தேசத்திற்கு அரசனாக்கினான். மக்கள் அதை வரவேற்றனர்.

கர்ணன் : (நன்றியுடன்) நான் இதற்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்?

துரியோதனன் : நான் எல்லாவற்றிற்கும் மேலாக உன் நட்பை மதிக்கிறேன். அதுவே போதும், என்று கூறி அவனை அணைத்துக் கொண்டான்.

கர்ணன் : என் மானம் காத்த மகாத்மாவே, என் உயிர் இருக்கும் வரை உன்னை நான் மறவேன், உன் வெற்றிக்கு வழி செய்யாது நான் இறவேன் என அவனை ஆரத்தி தழுவிக் கொண்டு அதீத உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் வடித்தான்.

அன்னை அறியேன், தந்தை அறியேன்....
என் ஆதியாய் நான் எதையும் அறியேன்..
என் குலம் அறியேன், அதன் வளம் அறியேன்..
உறவெனச் சொல்ல ஒருவரையும் அறியேன்...

என் திறம் அறிவேன், அதன் மறம் அறிவேன்..
எனை எனக்காக நேசித்த உன் அன்பை அறிந்தேன்
எனை மீட்டெடுத்த உன் நட்பை வரம் என அறிந்தேன்
உன் அன்பின் ஆழம் அறிந்தேன், என் உயிர் உள்ள வரை
உன்னை நான் பிரியேன் என் ஆருயிரே.. நானும் நீயும்
இனி ஓர் உயிரே...

(என கர்ணனுள் ஓடியது எண்ண ஓட்டம்....)

அர்ஜுனனும் கர்ணனும் சண்டையிட ஆரம்பிக்கும்போது தன் மகன் அரசனானதை கேள்விப்பட்ட அதிரதன் அங்கு வந்தான்.

அதிரதன் : மகனே... கர்ணா ...

கர்ணன் : தந்தையே... என அவர் பாதம் பணிந்தான்

அதிரதன் : பல்லாண்டு நீ வாழ்வாய் என் மகனே என உச்சி முகர்ந்தார்.
அதைக் கண்ட பீமன் கர்ணன் அதிரதனின் மகன் என்பதைத் தெரிந்து கொண்டான்.

பீமன் : கர்ணா நீ தேர்ப்பாகன் அதிரதனின் மகன்தானே? சந்திர வம்சத்தில் பிறந்த அர்ஜுனனுக்கு நீ எப்படி இணையாக முடியும்? என ஏளனத்துடன் கேட்டான்.

நீ அங்க தேசத்திற்கு அரசனாகத் தகுதியானவனல்ல. அர்ஜுனனால் யுத்தத்தில் கொல்லப்படுவதற்குக் கூட உனக்குத் தகுதி இல்லை, என்று கூறி அவமானப் படுத்தினான்.

அதைக்கேட்ட துரியோதனன் கோபம் கொண்டான்.

துரியோதனன் : நீ க்ஷத்திரியனைப்போல் பேச வில்லை. வீரம் தான் மிகமுக்கியம். கேவலம் ஜாதியைக் கொண்டா திறமையை எடை போடுவது??

அப்படி பார்த்தால், நமது ஆசிரியர்களான துரோணரும், கிருபாச்சாரியாரும் கூட ஷத்ரியர்கள் அல்ல தானே. அவர்கள் குலத்தைப் பற்றி நாம் குறை கூற முடியுமா???

ஆகையால் பிறந்த குலம் முக்கியமல்ல. கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்து, ஸூர்யனைப் போல் பிரகாசிக்கிறான்.

அங்கதேசத்தின் அரசனாக அவனுக்கு ஏன் தகுதியில்லை? அவன் அரசனாகத் தகுதியில்லை எனக் கூறுபவர் அவனுடன் போரிட்டு வெற்றிபெறட்டும்.

இதைக்கேட்டு சபையில் குழப்பம் ஏற்பட்டது. இருள் பரவியதால் சபை கலைக்கப்பட்டது. மக்கள் கர்ணனைப் புகழ்ந்து கொண்டே வீட்டுற்குத் திரும்பினர்.

அடுத்த நாள் என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.

சிவா.ஜி
16-08-2011, 02:42 PM
அந்தக்காலத்திலேயே சாதி ஒழிப்புக்கு ஆதரவுக் குரல் கொடுத்த துரியோதன பெரியார்..கெட்டவனில் நல்லவன் என்பதற்கு துரியோதனனின் சில பண்புகள் உதாரணம்.

அழகாய் எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். தொடருங்கள் தங்கையே.

Nivas.T
16-08-2011, 03:52 PM
திறமையான பலர் இருந்தும் சாதியை சாடைகாட்டி ஓரங்கட்டப்படுவது தொன்றுதொட்ட வழக்கமாக இருந்துவருகிறது

கதையை நகர்த்தும் லாவகம் மிக அருமை

தொடருங்கள்

தாமரை
16-08-2011, 04:45 PM
அந்தக்காலத்திலேயே சாதி ஒழிப்புக்கு ஆதரவுக் குரல் கொடுத்த துரியோதன பெரியார்..கெட்டவனில் நல்லவன் என்பதற்கு துரியோதனனின் சில பண்புகள் உதாரணம்.

அழகாய் எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். தொடருங்கள் தங்கையே.

துரியோதனனுக்கு தானே உண்மை வாரிசு என்ற நம்பிக்கை ஆழமாக இருந்தது. அதற்கான காரணங்கள் இதோ

1. திருதிராஷ்டிரனே மூத்தவர். ஆனால் அவருக்கு பார்வை இல்லாத காரணத்தினாலேயே பாண்டுவுக்கு முடி சூட்டப்பட்டது.

2. பாண்டுவின் சாபம் காரணமாக பாண்டு வனவாசம் சென்றபொழுது த்ருதராஷ்டிரன் மீண்டும் மன்னரானார்.

3. மூத்தவரான த்ருதிராஷ்ட்ரனின் வாரிசு தான் என்பதாலும், பாண்டவர்கள் யாருமே பாண்டுவின் நேரடி வாரிசுகள் இல்லை என்பதாலும் தானே வாரிசு என்பதில் அவன் அசைக்க முடியா நம்பிக்கை கொண்டிருந்தான்.

4. ஒரு முறை பாண்டவர்களை பார்த்து இதை வெளிப்படுத்தவும் செய்கிறான். பாண்டவர்கள் வெவ்வேறு தந்தையருக்குப் பிறந்தவர்கள் எனக் கிண்டல் செய்ய, பீமன் ஆட்டின் மனைவியின் மகனே எனக் கிண்டல் செய்கிறான்.

இது என்ன புதுக்கதை என துரியோதனன் விசாரிக்க, காந்தாரிக்கு ஒரு தோஷம் கழிப்பதற்காக ஆட்டுடன் திருமணம் செய்வித்து ஆட்டைக் கொன்றதாகத் தகவல் கிடைத்தது.

இதனால் கோபம் கொண்ட துரியோதனன் காந்தார மன்னன் அவர்கள் புதல்வர்கள் அறுபது பேரையும் சிறையில் அடைத்து ஆளுக்கு ஒரு பருக்கை சோறும் ஒரு நத்தைக் கூடு அளவு நீரும் கொடுக்கச் செய்தான்.

யாரும் கேட்டால் சோறும் நீரும் தருகின்றேன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அனைவரையும் கொன்றுவிடலாம் என்பது துரியோதனன் சாதுரியம்.

அனைவரிலும் மூத்தவனாகிய சகுனி சாமர்த்திய சாலி. தம் தம்பியர் அனைவரையும் அழைத்து, "துரியோதனன் நம் அனைவரையும் கொல்ல ஏற்பாடு செய்துவிட்டான். நாம் அவனை அடியோடு அழித்துப் பழிக்குப் பழி வாங்க வேண்டும். இதற்கு நாம் ஒரு தந்திரம் செய்ய வேண்டும்'' என்றான்.

"அண்ணா! நீயோ அறிவாளி! அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியது உன் கடமை. நீ என்ன சொல்கின்றாயோ அதை நாங்கள் அப்படியே செய்கின்றோம்'' என்றனர் தம்பியர்.

"ஒரு பருக்கைச் சோறும் நத்தைக் கூட்டில் தரும் தண்ணீரும் உண்டு யாரும் சில நாள்கூட உயிர் வாழ இயலாது. அனைவரும் இவ்வாறு இறப்பதைவிட நம்மில் யாராவது ஒருவன் உயிர் பிழைத்தால் பழிக்குப் பழி வாங்கத் தோதாக இருக்குமே! ஆதலால் நான் ஓர் யோசனை சொல்கின்றேன். அதன்படி செய்தால் துரியோதனனை அடியோடு ஒழித்துவிடலாம்'' என்றான் சகுனி.

"அறுபது பேருக்குத் தரும் சோற்றையும் தண்ணீரை யும் யாராவது ஒருவன் மட்டும் சாப்பிட வேண்டும். அப்போது ஒருவனாவது மேலும் சில நாட்கள் உயிரோடு இருப்பான். யார் சாப்பிடுவது என்று தீர்மானம் செய்யுங்கள்'' என்றான் சகுனி.

"அண்ணா! நீதான் புத்திசாலி. நீ உயிரோடிருந் தால்தான் துரியோதனனைப் பழிவாங்க முடியும். ஆகையால் நீயே சோறும் நீரும் உண்ணுதல் வேண்டும்'' என்று அனைவரும் ஒருமித்து உடன்பட்டனர்.

பட்டினியால் ஒவ்வொருவராகப் பட்டொ ழிந்தனர். சகுனி மட்டும் சோறும் நீரும் சிறிதள வாவது உண்டமையால் உயிர் தப்பினான். தன்னுடைய தகப்பனுடைய எலும்பிலிருந்து பகடை செய்து காத்திருக்கலானான் சகுனி.

அனைவரும் மாண்டிருப்பர் எனக் கருதிய துரியோதனன் சிறைச்சாலையில் புகுந்து பார்த்தான். சகுனி மாத்திரம் உயிரோடு இருப்பதைக் கண்ட துரியோதனன் ஆச்சர்யம் அடைந்தான். இவனிடம் ஏதோ சக்தி இருக்கிறது என நம்பத் தொடங்கினான். அதே சமயம் சகுனியும் துரியோதனனை புகழும் முயற்சியில் இறங்கி அவனை சிக்கெனப் பற்றிக் கொண்டான். துரியோதனனே உண்மையான வாரிசு என பல வகைகளில் பேசிப் பேசி அவனுக்கு மிகவும் நெருங்கி விட்டான்.

அன்று முதல் சகுனிக்குத் தடபுடலான உபசாரம் நடந்தது. அரண்மனையே சகுனி சொன்னபடி இயங்கியது. துரியோதனனும் சகுனி போட்ட கோட்டை தாண்டுவதில்லை.

எவ்வளவு உபசாரம் கிடைத்தாலும் சகுனி தன் குரோதத்தை மறக்கவில்லை.

துரியோதனனுக்கு நல்லவன்போல் நடித்து அவனைப் படுகுழியில் தள்ள சமயம் எதிர் பார்த்திருந்தான்.

சகுனியின் யோசனைப்படியே அஸ்தினா புரத்தில் புதிய அரண்மனை உருவானது. அரண்மனை புகுவிழாவுக்கு பாண்டவர் வரவழைக்கப்பட்டனர். விருந்து முடிந்த பின்பு சகுனி தருமனைச் சூதாட அழைத்தான்; வென்றான். திரௌபதியை மானபங்கப்படுத்தச் செய்தான். அதனால் பாண்டவரின் பகையைக் கிளறி விட்டான்.

சகுனி மூட்டிய பகைத்தீ பாரதப் போராக மூண்டது. துரியோதனன் அடியோடு அழிந்தான். துரியோதனன் அழிவு உறுதி எனக் கண்ட சகுனி, பழிக்குப் பழி வாங்கிய நிம்மதியோடு சகாதேவன் கையால் உயிர் துறந்தான்.


(இது ஒரு காலத்தில் அம்புலிமாமாவில் படிச்ச கதைங்கோ)

innamburan
16-08-2011, 05:27 PM
நான் விரும்பி படிக்கும் தொடர் இது. திரு.ஜெய் சொல்வதில் (...புராணங்கள் கூறும் தகவல்கள் நிகழ்ந்தனவா இல்லையா என்று ஆராய்வதை விட அது கூறும் நற்கருத்துகளை ஏற்று கொள்வது மிக்க நன்று ...) யதார்த்தம் இருக்கிறது. ஒன்று ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். மகாபாரதம் போன்ற காப்பியங்களில் இடைச்செருகல்களும் உண்டு. புதிய பார்வைகளும் உண்டு: சாப விமோசனம்~ புதுமை பித்தன்.
இன்னம்பூரான்

நாஞ்சில் த.க.ஜெய்
16-08-2011, 06:03 PM
அன்றே சாதியை வெறுத்து திறமையை மதித்த துரியோதனன் ஒரு நல்லவன் தான் என்பதில் ஐயமேதும் இல்லை ..இதற்கு காரணம் துரியோதனன் பஞ்ச பாண்டவர்கள் மீது கொண்ட வெறுப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்
இதன் மூலம் அவன் பெற்றது ஒரு மாவீரனான கர்ணனின் உண்மையான நட்பு...

நல்லவனான துர்யோதனன் தன அறிவற்ற கோபத்தினால் செய்த தவறினால் பெற்றது குரோதம் கொண்ட சகுனியின் நட்பு மூலம் கிடைத்த அழிவு ...இது நான் இதுவரை அறியாதது ...

எளிமையான தமிழ் நடையில் தொடரட்டும் இந்த பதிவு ....

அமரன்
16-08-2011, 08:55 PM
அன்புத் தோழி,

இணையத்தில் ஏற்கனவே படித்திருந்தேன். சொற்கட்டும் சொல்லும் விதமும் எழுதியவரை தேட வைத்தது. அவரே நமது மன்றத்தில் நம் நட்பாக உள்ளார் என்பதை நினைக்க பெருமையாக உள்ளது.

தொடருங்கள். பின் தொடர்ந்து வருகிறேன்.. மீள் வாசிப்பு என்றாலும் சுவைக் குறைவில்லாத படைப்பு.

தாமரை
17-08-2011, 03:02 AM
நான் விரும்பி படிக்கும் தொடர் இது. திரு.ஜெய் சொல்வதில் (...புராணங்கள் கூறும் தகவல்கள் நிகழ்ந்தனவா இல்லையா என்று ஆராய்வதை விட அது கூறும் நற்கருத்துகளை ஏற்று கொள்வது மிக்க நன்று ...) யதார்த்தம் இருக்கிறது. ஒன்று ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். மகாபாரதம் போன்ற காப்பியங்களில் இடைச்செருகல்களும் உண்டு. புதிய பார்வைகளும் உண்டு: சாப விமோசனம்~ புதுமை பித்தன்.
இன்னம்பூரான்

ஆமாங்க.. அப்படிப்பட்ட பல புதிய பார்வைகள் நம்ம மன்றத்தில் உதித்திருக்கின்றன என்பதும் பெருமைப் பட வேண்டிய விஷயம். :icon_b:

சான்வி
17-08-2011, 05:11 AM
கெட்டவனில் நல்லவன் என்பதற்கு துரியோதனனின் சில பண்புகள் உதாரணம்.

தொடருங்கள் தங்கையே.

உண்மைதான் சிவான்னா. நல்லவர்களில் சில கெட்ட பண்புகள் இல்லாது போகாது. அது போலே கெட்டவரிலும் சில நல்ல பண்புகள் இருக்கத்தான் செய்கிறது.

தொடர்ந்து வந்து ஊக்கம் தர உம்போன்ற சகோதரர் இருக்கையில் தடையென்ன எனக்கு?? நன்றி அண்ணா.

சான்வி
17-08-2011, 05:13 AM
கதையை நகர்த்தும் லாவகம் மிக அருமை

தொடருங்கள்

தொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி

சான்வி
17-08-2011, 05:21 AM
(இது ஒரு காலத்தில் அம்புலிமாமாவில் படிச்ச கதைங்கோ)

ஒரு காலத்தில் படித்த கதையை நிகழ்காலக் கதைக்குள் கதையாய் சொன்ன விதம் நேர்த்தி.

இது போன்ற விளக்கங்கள் மேலும் கதையை நன்கு விளங்கிக் கொள்ள உதவியாய் இருக்கும்.

மிக்க நன்றி அண்ணா உங்கள் பகிர்வுக்கு.

தாமரை
17-08-2011, 07:07 AM
உண்மைதான் சிவான்னா. நல்லவர்களில் சில கெட்ட பண்புகள் இல்லாது போகாது. அது போலே கெட்டவரிலும் சில நல்ல பண்புகள் இருக்கத்தான் செய்கிறது.

தொடர்ந்து வந்து ஊக்கம் தர உம்போன்ற சகோதரர் இருக்கையில் தடையென்ன எனக்கு?? நன்றி அண்ணா.

சரியாச் சொன்னீங்க.. ரொம்ப நாளைக்கு முன்னால சொன்ன விஷயத்தை ஞாபகப்படுத்தினீங்க

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=500477#post500477


http://www.tamilmantram.com/vb/showthread.php?p=354222&highlight=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF#post354222

சான்வி
17-08-2011, 08:05 AM
நான் விரும்பி படிக்கும் தொடர் இது. திரு.ஜெய் சொல்வதில் (...புராணங்கள் கூறும் தகவல்கள் நிகழ்ந்தனவா இல்லையா என்று ஆராய்வதை விட அது கூறும் நற்கருத்துகளை ஏற்று கொள்வது மிக்க நன்று ...) யதார்த்தம் இருக்கிறது. ஒன்று ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். மகாபாரதம் போன்ற காப்பியங்களில் இடைச்செருகல்களும் உண்டு. புதிய பார்வைகளும் உண்டு: சாப விமோசனம்~ புதுமை பித்தன்.
இன்னம்பூரான்

மேற்கோளோடு என் குறிக்கோளுக்கு ஒளி காட்டிய தங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி :)

சான்வி
17-08-2011, 08:10 AM
எளிமையான தமிழ் நடையில் தொடரட்டும் இந்த பதிவு ....

தொடரும் தங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி

சான்வி
17-08-2011, 08:19 AM
அன்புத் தோழி,

இணையத்தில் ஏற்கனவே படித்திருந்தேன். சொற்கட்டும் சொல்லும் விதமும் எழுதியவரை தேட வைத்தது. அவரே நமது மன்றத்தில் நம் நட்பாக உள்ளார் என்பதை நினைக்க பெருமையாக உள்ளது.

தொடருங்கள். பின் தொடர்ந்து வருகிறேன்.. மீள் வாசிப்பு என்றாலும் சுவைக் குறைவில்லாத படைப்பு.

தெரியாத கதையை யார் வேண்டுமானாலும் கற்பனை என எழுதிவிடலாம். தெரிந்த, அறிந்த விஷயங்களை எழுதுகையில் தேடலும் அதனால் வரும் சிரமமும் சற்றே அதிகமாக இருக்கும்.

எழுத்தின் கரு, என் மனதின் குரு என்பதால், சிரமமும் சற்று அதிகம்தான். ஆயினும், அந்த சிரமங்கள் எல்லாம் ஆதவனைக் கண்ட பணியாய் உருகித்தான் போயிற்று உங்கள் பின்னூட்டம் கண்டு.

இது போன்ற பின்னூட்டங்கள் மேலும் மேலும் எழுத ஊக்குவிக்கும் ஊட்டங்கள். :nature-smiley-009::nature-smiley-009:

இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகள் அமரன்:icon_03:

சான்வி
17-08-2011, 08:20 AM
ஆமாங்க.. அப்படிப்பட்ட பல புதிய பார்வைகள் நம்ம மன்றத்தில் உதித்திருக்கின்றன என்பதும் பெருமைப் பட வேண்டிய விஷயம். :icon_b:

:icon_b::icon_b:

சான்வி
17-08-2011, 08:22 AM
சரியாச் சொன்னீங்க.. ரொம்ப நாளைக்கு முன்னால சொன்ன விஷயத்தை ஞாபகப்படுத்தினீங்க

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=500477#post500477


http://www.tamilmantram.com/vb/showthread.php?p=354222&highlight=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF#post354222

இன்னும் நான் இங்கே நெறைய படிக்க வேண்டி இருக்கு. அது மட்டும் எனக்கு நல்லா தெரியுதுங்க. :)

கருத்து செறிவு மிகுந்த விவாதமாய் இருக்கும்போல. படித்து விடுகிறேன், வேலையின் இடையே வரும் இடைவெளியில்..:)

நன்றி அண்ணா.

சான்வி
17-08-2011, 09:03 AM
பகுதி எட்டு : துரோணர்

சண்டை அப்போதே நடந்திருந்தால், நமக்கும் ஒரு முடிவு தெரிந்திருக்கும், வில் வித்தையில் சிறந்தவர் யார் என்று. ஆனால் அது அப்போது நடக்கவில்லை.

கிருபராலும், துரோணராலும் அது தடுக்கப்பட்டது.

யார் இந்த துரோணர்??

இவர் பாரத்துவாச (பரத்வாஜ) முனிவரின் புதல்வர். இவருடைய மனைவி சதாநந்தரின் மகள் மற்றும் கிருபாச்சாரியாரின் சகோதரி கிருபை. அசுவத்தாமன் இவர்களின் மகன் ஆவான்.

துருபதனும், துரோணரும், துரோணரின் தந்தை பரத்துவாச முனிவரின் ஆசிரமத்தில் குருகுலத்தில் ஒன்றாய் வித்தை கற்றவர்கள். பால்ய காலத்து சிநேகிதர்கள். பயிற்சிக் காலத்தில் ஒரு நாள் காட்டில் மிக ஆபத்தான நிலையில் இருந்து, துருபதனை துரோணர் தன் உயிரையும் பொருட்படுத்தாது காப்பாற்றுகிறார்.

அந்த நன்றி உணர்வில், துருபதன், என் நாட்டில் பாதியை உனக்கு தருகிறேன் என்கிறார். அரசாட்சி அந்தணர்க்கு உரியது அல்ல என மறுத்துவிட்டு, நட்பை மட்டுமே வேண்டுகிறார்.

துருபதன், குருகுலம் முடிந்து நாடாள சென்று விட, இவரோ இங்கே, கிருபையை மணந்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

பாஞ்சாலத்தில் பெரும் பஞ்சம் வருகிறது. தனது மகன் அசுவத்தாமனுக்கு பாலுக்கு, ஒரு பசுவை தானம் பெற வேண்டி, தன் பால்ய சிநேகிதனான, துருபதனை சந்திக்கச் சென்றார்.

பாதி ராஜ்ஜியத்தை தருவதாக தான் தந்த வாக்குறுதியை மனதில் நினைத்து, அதற்காய் துரோணர் வந்திருப்பதாக எண்ணி துருபதன், துரோணரை அவமானப்படுத்தி, வெளியே அனுப்பி விடுகிறார்.

உணர்ச்சியின் கொந்தளிப்பில் அப்போது துரோணாச்சாரியார் ஒரு முடிவு எடுத்தார்...

அரசிருக்கும் அகந்தையில்
மமதை உன் சிந்தையில்
என் மாணவன் ஒருவனைக்
கொண்டு உனக்கு நான்
உண்மை உரைப்பேன்
ஒரு நாள்.... என.....

மனைவி மற்றும் மகனுடன், கிருபாச்சாரியாரிடமே தஞ்சம் புகுந்தார். அப்போதுதான், அவரது வித்தைகளையும், திறமையும் கேள்வியுற்ற பீஷ்மர் இவரை தன் பேரக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்குமாறு வேண்டினார்.

பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு பாடம் கற்பிப்பது மட்டும் இன்றி தன் மகன் அஸ்வத்தாமனுக்கும் கற்றுத் தந்தார். என்ன இருந்தாலும் மகன் அல்லவா?? அதனால் தனிக் கவனம் மற்றும் பாராட்டுதல்கள் அஸ்வத்தாமனுக்கு இருந்தன. அதைக் கண்டு பொறாமை உற்ற அர்ஜூனன், எப்படியும் ஆசிரியரின் உள்ளத்தில் ஒரு இடம் பிடிக்க வேண்டும் என வெறியுடன் இருந்தான்.

கடும் பயிற்சி மேற்கொண்டு அவர் உள்ளத்தில் இடம் பிடித்தான். அந்த குருகுலத்தின் மிகச் சிறந்த மாணவனாக அர்ஜூனன் இருந்தான்.

காலங்கள் உருண்டன. பயிற்சிகள் முடிந்ததும், குருதட்சினை தர பாண்டவர்கள் முன்வருகையில், துரோணர் கேட்ட குருதட்சினை இதுதான். அதுவும் அவரது பிரிய மாணவன் அர்ஜுனனிடம் “துருபதனை, போரில் வென்று என் முன்னே கொண்டு வந்து நிறுத்து” என்பதுதான். அவர் விருப்பத்தை அவ்வாறே நிறைவேற்றினான் அர்ஜூனன்.

துரோணர் போரில் தோல்வி அடைந்த துருபதனை நோக்கி..

"செல்வச் செருக்கால் தலை நிமிர்ந்து நின்றாயே..இப்போது உன் நிலையைப் பார். செல்வம் கடைசி வரை நில்லாது என்பதை உணர்ந்து ஆணவத்தை விட்டு அடக்கத்தைக் கடை பிடி என அறிவுரை சொல்லி, உன் நாட்டின் பாதியை எடுத்துக் கொண்டு..மறு பாதியை உனக்குத் தருகிறேன், நாம் நட்பைத் தொடரலாம்" என்று கூறி துருபதனை அவன் நாட்டுக்கே திருப்பி அனுப்பினார்

ஆனால், துருபதன் மனம் மாறவில்லை. துரோணரிடம் முன்னைவிட பல மடங்கு கோபம் கொண்டான்.

சான்வி
17-08-2011, 09:12 AM
பகுதி ஒன்பதில் ஒன்று : துருபதன் கோபம்

துரோணரின் மீது பல மடங்கு கோபம் கொண்ட துருபதன், துரோணரை வெல்ல தனக்கு ஒரு புத்திரன் வேண்டி ஒரு வேள்வியை ஆரம்பித்தான்.
அது சௌத்ராமணி என்ற வேள்வி

அந்த வேள்விதீயிலிருந்து அக்கினி போன்ற முகமும் பயப்படத்தக்க உருவமும் கொண்டு கத்தி, வில், அம்பு , கவசம் ஆகியவற்றுடன் ஓர் ஆண்மகன் தோன்றினான்

அப்போது ஒரு அசரீரி எழுந்து இவன் துரோணரின் சீடனாக வளர்ந்து அவருக்கே யமனாக மாறுவான். இவனால் பாஞ்சால தேசம் புகழ் பெறும் என்று ஒலித்தது.

அதன் பின் மீண்டும் மந்திரம் கூறி அக்னியில் அவிர் சொரிந்தபோது யாககுண்டத்தில் கரிய மேனியுடன் கூடிய அழகும், தாமரை இதழ்கள் போன்று கண்களும் கொண்டு ஒரு பெண் எழுந்து வந்தாள். அரசகுலத்திற்கே படு நாசம் விளைவிக்க போகும் பாஞ்சாலி இவளே என்று கூறியது அசரீரி.

ஆணுக்கு திஷ்டத்துய்மன் என்றும் பெண்ணுக்கு திரௌபதி என்றும் பெயரிட்டனர்.

திஷ்டத்துய்மன் துரோணரிடம் சீடனாக சேர்த்தான். துரோணர் தமது ஞானதிருஷ்டியால் திஷ்டத்துய்மன் என்று தெரிந்து கொண்டபோதிலும் எதிரி என்று எண்ணி மறைக்காமல் அனைத்து வேதங்களையும் நன்கு உபதேசித்தார். முடிவில் இந்த திஷ்டத்துய்மன் கையாலே அவர் மரணம் அடைந்தார் எனப் போகிறது பாரதம்.


பகுதி ஒன்பதில் இரண்டு : கர்ணனும், பானுமதியும்:


இனி நாம் நம் கதையின் நாயகனைப் பற்றிப் பார்ப்போம். இதை பற்றிய தகவல்கள் அதிகமாய் எங்கும் இல்லாததால், இணையத்திலும் கூட..... இந்தப் பகுதி கர்ணன் திரைப்படத்தை தொட்டவாறு இருக்கும். கொஞ்சம் என் கற்பனையும்....

துரியோதனன் தன் நண்பனை தன் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே... தன் மன்னவன், தன்னை தவிர அனைத்தையும் சிறப்பாய் கவனிப்பதாய் தன் தோழியிடம் “பானுமதி” குறை கூறிக் கொண்டு இருக்கிறார்.

அன்னையைக் காண்பார், அவர் தந்தையைக் காண்பார்,
தன் சோதரர்கள் அனைவரையும் காண்பார், தன் மண்ணைக்
காண்பார், அதன் மக்களைக் காண்பார்... அனைத்தையும்
சிறப்பாய்க் காண்பார்... என்னைக் காண மட்டும் வேளை
இல்லையா அவருக்கு....

(ஏனடி தோழி கேள் ஒரு சேதி என ஒரு பாடல் வரும் கர்ணன் படத்தில்)

அப்போது உள்ளே நுழைகிறார்கள் இருவரும். புதிய ஒரு ஆண்மகனைக் கண்ட நாணத்தில் பானுமதி உள்ளே செல்ல விழைய, அவளைத் தடுத்து, கர்ணனை அறிமுகப் படுத்துகிறான் துரியோதனன்.

(கர்ணன் படத்தில் இந்தப் பாடல் முடியும் வேளையில் இவர்கள் இருவரும் வர, பானுமதி ஓட, அவர் பின்னே செல்லும் துரியோதனன், கூடவே கர்ணன்... அந்த உரையாடலை நான் மிக ரசித்தேன்... அதை இங்கே பதிக்கிறேன்)

கர்ணன் : நிற்கக் கூடாத பாடல் நின்று விட்டது...

(பானுமதி யார் இவர் என ஒரு பார்வை பார்க்க.....)

துரியோதனன் : பானுமதி யார் இவர் என்ற பார்வை வேண்டாம்.... அவர் சொன்னதற்கு சரியான ஒரு பதிலை நீ கூற வேண்டும்..

பானுமதி : நிற்கவில்லை... நின்று கொண்டே தொடர்கிறது....

கர்ணன் : புரியவில்லையே... பாட்டு எங்கே தொடர்ந்தது.... இங்கே யார் பாடினார்கள்???

பானுமதி : தாங்கள் இப்போது பேசவில்லையா???

துரியோதனன் : பலே... பார்த்தாயா நண்பா.. உன் பேச்சையே பாட்டாக்கி விட்டாள் ..... என் மனைவி...

கர்ணன் : பேசிய நான், இந்தப் பேச்சை கேட்டு நாணி விட்டேன் நண்பா... பேசத் தெரிந்தவர்கள் எப்படி பேசி விட்டார்கள்...

துரியோதனன் : ஆஹா இதல்லவோ.. பேச்சு... ம்ம்ம்ம் நிற்பது தொடரட்டும்....

பானுமதி : வேண்டாம். ஆசனத்தில் அமரட்டும் ....

கர்ணன் : ஆஹா நல்ல சிலேடை....

(இப்படியாகப் போகும் அந்த உரையாடல்... காணக் காண சலிக்காத காட்சி எனக்கு... அமுதும் தேனும் எதற்கு??? இப்படி தமிழ் கேட்டுக் கொண்டு இருந்தால் ???)

இனி கதைக்கு...

பானுமதி : தாங்கள், இவர் யார் என சொல்லவே இல்லையே....

துரியோதனன் : இவன்.. கர்ணன்.. என் உயிர் நண்பன், கௌரவர்களின் மானத்தைக் காக்க, மண் மீது தோன்றிய மாவீரன். சூரியனைப் போல பிரகாசித்து, எதிரிகளை களத்தில் சூறையாடும் வல்லமை கொண்டவன். தயாள சிந்தனை, இரக்க குணம் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டவன். உன் அண்ணன்.

(கர்ணன் தன்னை பற்றித் தன் நண்பன் சொன்னதைக் கேட்டு பெருமிதத்தால் பூரித்து கண்கள் கசிய.. பானுமதிக்கு முகமன் சொல்கிறான்)

பானுமதி : அண்ணா, தங்களின் உறவும், நட்பும் எங்களுக்கு கிடைத்தது எங்களின் பூர்வ ஜென்ம புண்ணியம்.

அப்போது அங்கே வரும் சகுனியுடன் கர்ணனை அங்க தேசத்திற்கு அனுப்பி வைக்கிறான் துரியோதனன். கூடவே அன்பான வேண்டுகோளுடன்.

அங்கே சென்று பட்டமேற்ற பின் இங்கே வந்துவிடு நண்பா, நாடுதான் உனக்கு அது... வீடு இதுதான்.... நானும் உன் தங்கையும் உனக்காய் காத்திருப்போம் என்கிறான்.

கர்ணனுக்கு... பிறப்பில் இருந்தே... மற்றவருக்கு நான் எந்த விதத்திலும் தாழ்ந்தவன் அல்ல என்ற கருத்து மனதிலே இருந்தாலும்... தன்னையும் ஒரு அரசனாக... தன்னையும் ஒரு மனிதனாக... திறமை கொண்ட வீரனாக மதிக்கும் துரியோதனின் பால் எல்லை இல்லா பிரியமும்.. நேசமும், நட்பும் அவன் உள்ளத்துள்ளே பொங்கி அவன் நெஞ்சை நிறைத்தன.

கர்ணனின் அங்க தேசத்தில் என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.

Nivas.T
17-08-2011, 09:34 AM
"எடுக்கவோ? கோக்கவோ?" என்ற காட்சிக்காக காத்திருக்கிறேன்

மிக அருமை
மிக சுவாரசியம்
தொடருங்கள் தோழியே

நாஞ்சில் த.க.ஜெய்
17-08-2011, 06:16 PM
கண்டதும் காதல் என்பார் போல் கண்டதும் நட்பென்றாகி விடுமோ ? ஒருவனை அவன் குணமறியாமல் இது போன்ற வாய்ப்புகள் அளித்த துரியோதனன் செயல் எவரும் செய்யாதது ஆனால் இது சரிதானோ?...தன்னகத்தே கொண்ட மாறுபட்ட எளிய நடையில் சுவைபட சேகரித்த தகவல் மூலம் தொடரும் தொடரட்டும் சான்வி அவர்களே......

innamburan
17-08-2011, 07:21 PM
ஒரு நட்பிலக்கணம். திரு.வி.க.வும், ஈ.வே.ரா.வும் அரசியலில் எதிர் துருவங்கள். ஆனால் நண்பர்கள். திரு.வி.க. ஈரோட்டில் ஈ.வே.ரா.வின் விருந்தினர். ஸ்னானபானாதிகளை முடித்துக்கொண்டு வந்தால், ஈ.வே.ரா. திருநீறுடன் காத்திருக்கிறார்.

கீதம்
17-08-2011, 09:52 PM
நட்பின் பெருமையுணர்த்தும் நிகழ்வுகள். தொடர்ந்து வரும் பகுதிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

சான்வி
24-08-2011, 03:46 AM
"எடுக்கவோ? கோக்கவோ?" என்ற காட்சிக்காக காத்திருக்கிறேன்

மிக அருமை
மிக சுவாரசியம்
தொடருங்கள் தோழியே

காக்க வைத்தமைக்கு மன்னிக்கவும். இதோ இன்று வந்துவிடும்.

தொடரும் உங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி

சான்வி
24-08-2011, 03:50 AM
ஒருவனை அவன் குணமறியாமல் இது போன்ற வாய்ப்புகள் அளித்த துரியோதனன் செயல் எவரும் செய்யாதது ஆனால் இது சரிதானோ?

அந்தக்காலத்தில் அது சரியாகத்தான் இருந்திருக்கும். இப்போதுதான் யார் மீதும் ஒரு அபிப்பிராயத்திற்கு கண்டதும் வர முடிவதில்லை. காலங்கள் போனது. அன்பு மற்றும் நட்பின் அளவும் மாறி விட்டது. என்ன செய்ய??

ஊக்கம் தந்த வரிகளுக்கு நன்றி

சான்வி
24-08-2011, 03:54 AM
ஒரு நட்பிலக்கணம். திரு.வி.க.வும், ஈ.வே.ரா.வும் அரசியலில் எதிர் துருவங்கள். ஆனால் நண்பர்கள். திரு.வி.க. ஈரோட்டில் ஈ.வே.ரா.வின் விருந்தினர். ஸ்னானபானாதிகளை முடித்துக்கொண்டு வந்தால், ஈ.வே.ரா. திருநீறுடன் காத்திருக்கிறார்.

உண்மைதான். அப்போது நண்பர்களுக்கு இருந்த தெளிவு இப்போதைய நண்பர்களுக்கு இருக்கிறதா??? செய்கைகளில் உடன்பாடு இல்லாதிருந்தது அப்போது. செய்தவரிடமே உடன்பாடு இல்லாமல் போவது இப்போது. இந்நிலை மாறப்போவது எப்போது???

தங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி

சான்வி
24-08-2011, 03:55 AM
நட்பின் பெருமையுணர்த்தும் நிகழ்வுகள். தொடர்ந்து வரும் பகுதிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தவறாது வந்து ஊக்கம் தரும் தங்கள் அன்புக்கு நன்றி கீதம்.

சான்வி
24-08-2011, 04:04 AM
பகுதி பத்து : அங்க தேசம்


அங்க தேசம் சென்று பட்டாபிஷேகம் எல்லாம் வெகு விமரிசையாக முடிந்து... பின்னர் கர்ண மாமன்னர் அரசவைக்கு வருகிறார்....

ஆவலாய் கூடி இருந்தது மக்கள் கூட்டம். அவர் தானத்தில் சிறந்தவர். தர்மத்தில் உயர்ந்தவர் என்பதை அறிந்த மக்கள்... இனிப்பைத் தேடும் எறும்புகளாய் அவர் அவை தேடி வந்தனர்..

புகழ் பாடி பரிசு பெற வந்த மக்கள் ஒரு வரிசையில், கர்ண மன்னரைக் காண வந்த மக்கள் ஒரு வரிசையில், மக்களை மதிக்கும் அவர் பண்புக்காய் அவரைக் காண வந்த மக்கள் ஒரு வரிசையில் என மக்கள் வெள்ளம் அலை புரண்டாலும், கரை தாண்டாது காத்திருந்தனர்.

மன்னர் புகழ் பாட வந்தவர்... ஒருவர் பாடல் ஆரம்பித்தார்....

(கர்ணன் படத்தில் வந்த பாடல்கள் இவை)

மழை கொடுக்கும் கொடை ஒரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடை ஒரு மூன்று மாதம்
பசு கொடுக்கும் கொடை அது நான்கு மாதம்
பார்திபனாம் கர்ணனுக்கோர் நாளும் மாதம்

அவர் முடித்ததும் மற்றொருவர் பாடுகிறார்...

நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்
நாடு தோறும நடந்து சிவந்தன பாவலர் கால்கள்
நர்போருளை தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்
தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னர் திருக்கரமே

என் வரிகள் :

யாரும் உனக்கு எதுவும் தராவிடினும்
தருவார் யாரும் உனக்கின்றிப் போய்விடினும்
பெறுவதில் உள்ள சுகம் நீ அறியாமலே போய்விடினும்
கொடுப்பதில் வரும் சுகம் ஈடாகுமா அதற்கு??? என கொடுக்கவே
பிறந்தவன் நீ...

உனக்கென எதையும் எண்ணாது உன் நலம் என்றும்
எண்ணாது, பிறரை மகிழ்விப்பதிலே உன் உளம் மகிழ,
காண்போர் நெஞ்சம் நெகிழ, உளதே உன் வாழ்வு..

சீரான சீரிய சபையில்.. சிறுவன் ஒரு ஓடி வருகிறான்... காவலர்கள் துரத்த... அவர்களை நிறுத்தி காரணம் கேட்கையில்... (கர்ணன் படத்தில் கண்டு நான் நெகிழ்ந்த காட்சி)

சிறுவன் : மகாராஜா... மகராஜா.....

கர்ணன் : நில்... ஏன் இந்த சிறுவனை துரத்தி வருகிறீர்கள்...

காவலர் : பாட சாலைக்குத் தீ வைத்தான்... எனவே துரத்தி வந்தோம்... யார் தடுத்தும் முடியாமல் இவன் அரசவைக்குள் வந்து விட்டான் அரசே... மன்னிக்கவும்...

கர்ணன் : பாலகனே... யார் நீ ???

சிறுவன் : என் பெயர் மேகநாதன்..

கர்ணன் : உன் பெற்றோர்???

சிறுவன் : தாய் தந்தை அற்றவன், நான் ஒரு அநாதை...

கர்ணன் : என்ன ???

சிறுவன் : நான் கெட்டவனோ இல்லை அவர்கள் கெட்டவர்களோ... நான் அறியேன்...

கர்ணன் : என் இனமடா நீ.... ஆமாம்.. பாட சாலைக்கு தீ வைத்தாயாமே??? பாவம் அல்லவா அது. உன் போல் அறிவாளிகள் செய்யும் வேலையா இது??? தவறில்லையா???

சிறுவன் : அறிவில்லாதவர்கள் அப்படி செய்ய என்னைத் தூண்டினார்கள்...

கர்ணன் : என்ன சொல்கிறாய்?? எனக்கொன்றும் புரியவில்லையே...

சிறுவன் : என்னை பாருங்கள்.. படிக்கும் வயதல்லவா எனக்கு.... அறிவுப் பசி எடுத்து.. பல பாட சாலைகளைத் தேடிப் போனேன்.. எங்கும் இடம் இல்லை.

கர்ணன் : ஏன்???

சிறுவன் : பிறப்பரியாதவன், அநாதை, தாழ்ந்தவன், உயர்ந்தவனோடு படிப்பது பாவம் போ.. என்று என்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டார்கள்

கர்ணன் : கொடுமை...

சிறுவன் : உண்மை... அந்த கொடுமை உங்கள் ஆட்சியில் நடக்கக் கூடாது என்றுதான் பாட சாலைக்கு தீ வைத்தேன்.. இது குற்றமா???

கர்ணன் : இல்லை.. குற்றம் இல்லை... மகனே... அரசுக்கே புத்தி சொல்லும் அறிவடா உனக்கு... உன் போன்ற சிறுவர்களுக்காக ஒரு அரசன் நாட்டில் செய்ய வேண்டியது என்ன என்பதை நான் உன் அறிவின் மூலம் புரிந்து கொண்டேன்...

அனைத்தையும் குறைவின்றி செய்து விடுகிறேன்... இப்போது என்னை மன்னித்து விடு...

(என அந்த சிறுவனிடம் தன் இரு கரம் குவித்து மன்னிப்பு கேட்டார்..)

நாடாளும் அரசன், மகா பராக்கிரமசாலி... வித்தைகளில் நிகர் அற்றவன்.. என எத்துனை இருந்தாலும், தன் தவறு என உணர்ந்த மாத்திரத்தில் மன்னிப்பு கேட்க தயங்கினான் இல்லை கர்ணன்...

ஆணைகள் பல இட்டு, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதங்கள் இன்றி அனைவருக்கும் கல்வி என பல புதிய திட்டங்கள் வந்தன கர்ணன் ஆட்சியில்... வாரி வழங்கும் வள்ளலாய் கர்ணன் இருந்ததால்... மக்கள் வளம் குறையாது... நிலை தவறாது... ஒழுக்கம் தவறாது... உயர்ந்த பண்புகளுடன்... இருந்தனர்...

தன்னை நாடி வருவோர்க்கு இல்லை எனும் சொல்லை சொல்லாது இருந்தான் கர்ணன்.... யார் வந்தாலும் என்ன கேட்டாலும் அதை தவறாது கொடுப்பவன் கர்ணன்... எனும் அளவு அவன் புகழ் நாடு கடந்து பரவி இருந்தது... தடையின்றி தரும் அவரது குணத்தால்... “தானசூரன்” என்னும் பெயர் கொண்டு இருந்தான்...

ஆதவனை வணங்கும் வழக்கத்தை மாறாது எப்போதும் கடை பிடித்து வந்தான் கர்ணன்...

ஒரு நாள் அப்படி இறைவனை துதித்து வெளி வருகையில்... காவலாளி அவரைப் பணிந்து, “ஒரு தள்ளாத முதியவர் உங்களைக் காண வந்திருக்கிறார் அரசே” எனக் கூறுகிறான்.

“பணிவுடன் அவரை அழைத்து வா” என காவலாளியைப் பணிக்கிறான் கர்ணன்....

தள்ளாடும் கருத்த மேனி.. தன் சுமை தாங்க முடியாது வில்லென வளைந்த முதுகு... கந்தல் உடை... என உள்ளே வந்தவரை வணங்கி வரவேற்று, ஆசனத்தில் அமர வைத்து ஆழ்ந்து நோக்கினான் கர்ணன் ......

வந்தது யார்??? கர்ணனிடம் எதைப் பெற வந்தார் என்பதை அடுத்த பகுதியில் காண்போம்...

சான்வி
24-08-2011, 04:08 AM
பகுதி பதினொன்று : கர்ணனின் கொடை

கர்ணனிடம் தானம் பெற ஒரு முதியவர் வந்திருந்தார்... அவரைப் பற்றி இப்போது...

கர்ணன் ஆதவனை வணங்கி வெளி வருகையிலே... ஆதவனின் அசரீரி ஒலிக்கிறது. “கர்ணா உன்னிடம் தானம் பெற வந்திருப்பவன் இந்திரன்... உனது கவச குண்டலங்களை... உன்னிடம் பெற வந்திருக்கிறான். அவை உன்னிடம் உள்ள வரை உன்னை வெல்ல ஒருவரும் இல்லை உலகிலே...” என எச்சரிக்கை செய்தார்...

கர்ணன் : வர வேண்டும் முதியவரே.... வணக்கம்... தாமதத்திற்கு மன்னிக்கவும்...

முதியவர் : வணக்கம் மகாராஜா

கர்ணன் : (அவர் கரம் பிடித்து ஆசனத்தில் அமர வைத்து... அவரை நோக்கி) நான் என்ன செய்ய வேண்டும் தங்களுக்கு என கேட்கிறான்

முதியவர் :

என்ன கொடுப்பான், எதைக் கொடுப்பான்
என்றிவர்கள் எண்ணும் முன்னே....
பொன்னும் கொடுப்பான்...
பொருள் கொடுப்பான்
போதாது போதாது என்றால்...
இன்னும் கொடுப்பான்...
இவையும் குறைவென்றால்..
எங்கள் கர்ணன்.. தன்னைக் கொடுப்பான்...
தன் உயிரும் தான் கொடுப்பான்....
தயாநிதியே....

(கர்ணன் திரைப்படத்தில் நான் கேட்ட வரிகள்... சொந்தமாய் எழுதலாம் என்று முயற்சித்தேன்... இந்த வரிகள் என் இதயத்தின் இமயம் தொட்ட அளவு என் வரிகள் தொடவில்லை.. எனவே அதே வரிகள்...கூடவே அதை ஒட்டிய உரையாடலும்..)

கர்ணன் : தள்ளாத வயது.. பாவம்....

முதியவர் : மன்னா, வாழ எனக்கு சகல வசதிகளும் உண்டு... ஆனாலும் எனக்கு ஒரு ஆசை... என்னிடம் இல்லாதது... உம்மிடம் உள்ளது அது.. அதை நான் உங்களிடம் இருந்து பெற்றால்... தந்த உமக்கும், பெற்ற எனக்கும், உவகை தருமே எனும் பேராசை...

கர்ணன் : தன் மந்தகாச சிரிப்புடன்... பேராசைதானே கேளுங்கள்....

முதியவர் : எதையும் மறுக்காது கொடுக்கும் தாங்கள், நான் கேட்கும் இதையும் தருவீர்கள் என நம்பி வந்தேன்...

கர்ணன் : பெறவே வந்தீர்கள்... தரவே இருக்கிறேன்.. இன்னும் என்ன தயக்கம்... தயங்காது கேளுங்கள்...

முதியவர் : தங்கள் உடலோடு ஒட்டிய கவசமும், செவியோடு ஒட்டிய குண்டலமும் எனக்கு வேண்டும்.... அளிக்க முடியுமா உம்மால்???

கர்ணன் : மந்தகாசம்... விரிந்து சிரிப்பாய் வெடிக்கிறது..

முதியவர் : மன்னா இந்தச் சிரிப்பு....

கர்ணன் : ஏன் ஏமாற்றம் தரத் தக்கதாய் இருக்கிறதா???

முதியவர் : ம்ம்ம்ம்

கர்ணன் : தள்ளாடும் தேகம், தள்ளாடாத நோக்கம்... பொய்யான நடிப்பு... அதில் அடங்கி இருப்பது மெய்யான பிடிப்பு... (இதை விடவா நான் என் வரிகளில் எழுதிடுவேன்...:))

முதியவர் : நடிப்பா.... என்ன கூறுகிறீர்??? நான் கொண்டது வேஷமா????

கர்ணன் : ம்ம்ம்.... என்னிடம் வர வேஷம் வேண்டியதில்லை... இருந்தும்.. ஈடுபட்ட செயலின் தன்மை அப்படி பொய் உடம்பை போர்த்தி வரத் தூண்டியுள்ளது...

முதியவர் : கர்ணா .......

கர்ணன் : தேவேந்திரன்... விண்ணுலக அதிபதி....

(அவமானத்தில் கன்றி சிவந்த முகத்துடன் தேவேந்திரன் தன் உருவம் பெறுகிறான்....)

கர்ணன் : பணிவுடன் விழுந்து வணங்குகிறான்... தேவேந்திரா இது என்ன சோதனை... இல்லை என்ற சொல்லையே அறியாத இந்த மனிதனிடம் தெய்வம் தோன்றினால் போதுமே... உயிரையும் கொடுக்கத் தயங்க மாட்டேனே... கேவலம்... இந்த உடலைப் பிடித்திருக்கும் சிறு உறையையா கொடுக்க மறுத்து விடுவேன்... இதோ ஒரு நொடியில் வருகிறேன்...

(உள்ளே சென்று உயிர் வலிக்க, மெய் வலிக்க... பிறப்பு முதல்... இதுநாள் வரை தானோடு இருந்த, செவியோடு ஒட்டிய குண்டலங்களையும், உடலோடு ஒட்டிய கவசத்தையும், அறுத்தெடுத்து, அங்கம் தனில் குருதி ஒழுக, அந்த கவசத்தையும், குண்டலங்களையும், ஒரு தங்கத் தட்டில் வைத்து பணிவுடன் இந்திரனிடம் நீட்டுகிறான்)

(கர்ணனின் வலியையும், வேதனையும் கண்டு உள்ளம் கலங்குகிறான் இந்திரன்.... )

இந்திரன் : (உணர்ச்சிகளின் பிடியில் இருந்த இந்திரன்) கர்ணா .... நீ தெய்வத்திலும் சிறந்தவன்... உடலைச் சேவித்துக் கொடுத்து, கொடைக்கு சிகரம் கண்ட உத்தமன் நீ ... உன் உடலோடு பிறந்தவைகளை நீ இழந்ததால்... ஏற்பட்ட ஈனம் மறைந்து... அழகு உருவை நீ அடைவாய்... என வாழ்த்துகிறான்...

கர்ணனுக்கு... தன் உடலில் ஏற்பட்ட காயங்கள் மறைந்து... அறுந்துபோன காதும் முழுமை அடைந்தது...

தன் உடலோடு ஒட்டியதை இழந்தால்... தன் உயிரே போய் விடும் என்பதை நன்கு அறிந்தும் அதை... தன் உடலில் இருந்து அரிந்தும் தந்தவன்... உள்ளத்தால் எத்தனை உயர்ந்தவனாய் இருந்திருக்க வேண்டும்...

உளம் வேண்டுமா??? என் நாட்டின்
வளம் வேண்டுமா??? என் உயிர்
வேண்டுமா??? என என்ன எண்ணமடா
உனக்கு??

உயிர் போகும் நிலை வரினும்
பயிரான உன் கொடையின் தீரம்
கண்டதில் என் விழியில் ஈரம்

பலநாள் நீ நின்றிருந்தாய்
என் நெஞ்சத்தின் ஓரம்...

இன்றோ என் மனக் கடலின்
நீ இட்டது நங் கூரம்....

கர்ணனோடு என் காதல் இன்னும் வளரும்.....

கர்ணனோடு துரியோதன் நட்பு நாம் அனைவரும் அறிந்ததே... ஆனாலும் துரியோதனனுக்கு கர்ணன் கொடையில் சிறந்தவன் எனப் பெரும் புகழும் பெற்றதில் கொஞ்சம் பொறாமை இருந்ததாக ஒரு நிகழ்வை நான் படித்ததுண்டு...

அது எப்படி போனது, அவர்கள் நட்பு எப்படி, இப்படி ஆனது என்பதை பற்றி அடுத்த பகுதியில்....

சான்வி
24-08-2011, 04:18 AM
பகுதி பதினொன்று : துரியோதனன் பொறாமை :


இணையத்திலும்... சிலர் வாய் வழி கேட்கையிலும் நான் அறிந்த இந்த கதை... உண்மையில் நிகழ்ந்ததா என்பதை நான் அறியேன்.... கர்ணன் தொடர்பாய் நான் அறிந்தவை அனைத்தையும் இங்கே பகிர ஆசை. எனவே இந்த கதையும்....

கர்ணனின் கொடை பற்றி நாம் அறிவோம்... அவனிடம் யார் வந்து என்ன கேட்டாலும் தயங்காது, இல்லை எனும் சொல்லே இல்லாது வாரித் தருபவன்... விடியல் முதல் இரவு வரை கூட்டம் கூட்டமாய் மக்கள் அவனிடம் வந்து, ஆடு, மாடு, நிலம், பொன், பொருள் என தாங்கள் விரும்பும் அனைத்தையும் பெற்றுச் சென்றனர்...

அவன் புகழ் பாடும் மக்கள் எங்கும் நிறைந்து இருந்தனர்.... கர்ணனின் புகழ் நாள்தோறும் வளரக் கண்டு... ஒரு சிறு பொறாமை எட்டிப் பார்த்ததாம் துரியோதனுக்கு...

(இதில் தான் எனக்கு கொஞ்சம் உடன் பாடு இல்லை... ஏன் எனில், துரியோதனன் அவையில், அவன் புகழ் பாட வருவோரை எல்லாம் கர்ணன் புகழ் பாடச் சொல்லிக் கேட்டவன், கர்ணன் புகழில் பொறாமை கொள்வானா?? என்ன???:confused: சரி... கதைக்கு வருவோம்...)

கர்ணன்.. ஒரு சிறு நாட்டுக்குத்தான் அதிபதி.. நான் எல்லையற்ற பெரிய நாட்டின் இளவரசன், என்னால் கர்ணனைப் போலே ஆயிரம் மடங்கு தானம் செய்ய முடியும் என, எண்ணம் கொண்டு, துரியோதனனும் தான, தர்மங்களை செய்து வந்தானாம்.

அவனிடம் பொருள் பெற்றவர்களும்... அவனை புகழத்தான் செய்தனர்... ஆனாலும் கர்ணனை புகழும் அளவு என்னைப் புகழ வில்லையே என மனதில் ஒரு ஆற்றாமை அவனுக்கு இருந்ததாம்...

அப்போது, அவனுக்கு கர்ணனின் சிறப்பை காட்ட வேண்டும் என இந்திரன் முடிவு செய்து... ஒரு பிராமணன் போல தோற்றம் கொண்டு துரியோதனனி காண அவன் அவைக்கு வந்தார்...

(கர்ணன் புகழ் பரப்ப சரியா ஆள் இவர்தானே... தானம் தர தன்னை எந்த அளவு கர்ணன் வருத்திக் கொள்வான் என கண்ணாரக் கண்டவர் அல்லவா???:))

துரியோதன் : ஏ பிராமணனே... என்னிடம் இருந்து நீ பெற வந்தது என்ன?? என்ன வேண்டுமோ தயங்காமல் கேள்... எதுவானாலும் இக்கணமே அளிப்பேன் என இறுமாப்புடன் கூறுகிறான்.

இந்திரன் : (உனக்கு இத்துணை ஆணவமா என உள்ளுக்குள் நகைத்துக் கொண்டு) இளவரசே... நான் விரைவில் ஒரு யாகம் தொடங்கவிருக்கிறேன். அதற்கு தேவையான விறகுகள் கொடுத்து உதவினால்... போதுமானது..

துரியோதனன் : இத்துணை பெரிய ராஜ்யத்தின் மன்னனாகப் போகும் என்னிடம் இருந்து கேட்க வெறும் விறகுதானா தெரிந்தது உமக்கு... சரி உங்கள் அதிர்ஷ்டம் அவ்வளவுதான் போலும். உம் விருப்பப் படியே தேவையான விறகுகளை பெற்றுக் கொள்ளுங்கள்...

இந்திரன் : துரியோதனனை மிகப் பாராட்டி பேசிய பிராமணர்... கருணை உள்ளம் கொண்ட இளவரசே, நான் நடத்த இருக்கும் யாகம் இன்னும் பத்து நாட்கள் கழித்து தான். இப்போது விறகுகளை நான் பெற்றால், அதை சேமித்து வைக்கவும், மழையிலிருந்து காக்கவும் என்னிடம் போதிய இடம் இல்லை.

எனவே... நான் பத்தாம் நாள் வந்து விறகுகளை தங்களிடம் இருந்து பெற்றுக் கொள்கிறேன்... என பணிவுடம் சொல்ல...

துரியோதனனும் அவரது வேண்டுகோளை ஏற்றான்...

இந்திரன், வருணனை அழைத்து, துரியோதனனின் நாட்டில் மழை பொழியச் செய்தார்.

நாட்டில், எரி, குளம், நீர் நிலைகள் எங்கும் நீர் நிறைந்து விட்டது... இடை விடாது பெய்த மழை காரணமாக நாடே வெள்ளக் காடானது.. அனைத்தும் மழை நீரில் நனைந்தது.. ஒரு துரும்பு கூட நனையாமல் இல்லை...

பத்து தினங்களுக்கு பின் மழை நின்று... கதிரவன் மெல்ல எட்டிப் பார்த்து தன் கதிர்களால் மக்களை மகிழ்சியில் ஆழ்த்தினான்...

இந்திரன் மீண்டும் ஏழை பிராமணனாக வடிவம் எடுத்து துரியோதனன் அரண்மனைக்குச் சென்றான்...

இந்திரன் : பணிவுடன் வணங்கி, இளவரசே, இன்று என் யாகம் தொடங்குதிறது... எனக்கு வாக்களித்தவாறு விறகுகளை வழங்க வேண்டுகிறேன்...

துரியோதனன் : (கொஞ்சம் மனக் கிலேசம் கொண்டான் துரியோதனன்... அவருக்கு விறகு தரக் கூடாது என்பது அவன் நோக்கம் அல்ல... இப்போதைய சூழ்நிலையில் அவனால் காய்ந்த விறகுகள் தர முடியாது... அனைத்தும் நனைந்து போய் விட்டது... இதனால் அவன் மிக வருந்தினான்.)

பிராமணரே மன்னித்துக் கொள்ளுங்கள்... பத்து தினங்களாக இடை விடாது பெய்த மழையில் விறகுகள் அனைத்தும் நனைந்து போய் விட்டன. தற்சமயம் உங்களுக்கு விறகுகள் தர முடியாத நிலையில் நான் உள்ளேன்.

உங்கள் யாகத்தை சிறிது தினங்கள் தள்ளி வைத்துக் கொண்டால் நான் வாக்களித்த படி உமக்கு விறகுகளை தந்து விடுகிறேன்...

இந்திரன் : இளவரசே, உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் தாங்கள் அளித்த வாக்கை காப்பாற்ற வேண்டாமா??? நான் முதலில் கேட்ட போது ஒப்புக் கொண்டு இப்போது யாகத்தை தள்ளி வைக்கச் சொல்வது முறையா??? யாகம் என்பது நல்ல நாள், பார்த்து செய்வது அல்லவா??? அதை நான் எப்படி தள்ளி வைக்க முடியும்???

துரியோதனன் : (பிராமணன் பேச்சைக் கேட்ட துரியோதனன் மனம் மிக வருந்தியது... ஆனாலும் அதை வெளிக்காட்டாமல்... மீண்டும் சொன்னான்) என் கையில் என்ன உள்ளது ஐயா... ஒரு துரும்பு கூட மிஞ்சவில்லையே.. மழைக்கு.... அனைத்துமே ஈரமாகி விட்டது...

இந்திரன் : நீங்கள் சொன்ன சொல்லை காக்கத் தவறி விட்டீர்கள்... இது நியாயம் அல்ல... நான் யாகம் செய்ய இப்போது என்ன செய்வேன்... என மீண்டும் மீண்டும் கேட்க...

பணிவாய் பதில் சொல்லிக் கொண்டிருந்த துரியோதனனுக்கு கோபமும் வந்தது....

துரியோதனன் : இந்த நிலையில் நான் எப்படி என் வாக்குறுதியை காக்க இயலும்??? புத்தி உள்ளவர்கள் உம்மை போல பேசுவார்களா??? இனி உம்முடன் பேச நான் தயாரில்லை... நீங்கள் போகலாம்....

இந்திரன் : ஆம் புத்தி இல்லாதவன் தான் நான்... போயும் போயும் உம்மிடம் வந்தேனே.. விறகுகளை பெற... உம்மிடம் வராது கர்ணனிடம் நான் சென்றிருந்தால்... தன் உயிர் கொடுத்தாவது அவன் தன் வாக்கை நிறைவேற்றி இருப்பான்.

இப்போதும் தான் என்ன... நான் அவன் அரண்மனைக்கு சென்று... அவரிடம் விறகுகள் பெற்று போய் என் யாகத்தை நடத்துவேன்... எனக் கூறி வெளியேறினார்...

இது, துரியோதனனின் சுய கௌரவத்தை பாதித்தாலும், இந்த சூழ்நிலையில் கர்ணன் மட்டும் என்ன செய்து விட முடியும் என தன் உள்ளத்தை தேற்றிக் கொண்டான்...

பின்னர் அந்த பிராமணர் கர்ணன் அரண்மனைக்குச் செல்கிறார்... கர்ணன் அவரை பணிவுடன் வரவேற்று... தன்னால் அவருக்கு ஆக வேண்டியது என்ன எனக் கேட்கிறான்

பிராமணர் தனக்கு வேண்டியதை சொல்ல... கர்ணன்... மனதுக்குள் யோசிக்கிறான்... நல்ல நாள் பார்த்து செய்யும் யாகத்தை தள்ளிப் போட முடியாது... காய்ந்த விறகுக்கு எங்கே போக என சிந்தித்த வாறே... மேலே பார்க்க....

கூரையைத் தாங்கி நின்ற விட்டங்களும், சட்டங்களும் அவன் கண்ணில் பட... உடனே பணியாளர்களை அழைத்து அரண்மனையின் ஒரு பாகத்தை இடித்து... அதில் உள்ள மரங்களை சேகரிக்கக் கட்டளை இட்டான்... விரைவிலே... யாகத்திற்கு தேவையான விறகுகள் கிடைத்தன...

அதை ஒரு வண்டியில் ஏற்றி... வண்டியுடன் விறகுகளை எடுத்துச் செல்லுமாறு... கர்ணன் அந்த பிராமணனை வேண்டினான்...

கர்ணனை மனதாரப் பாராட்டி, அவனை வாழ்த்தி... பிராமணர் அங்கிருந்து கிளம்பினார்... துரியோதனன் அரண்மனை வழியே அந்த வண்டி போகையில்... அந்த பிராமணர், கர்ணனை புகழ்ந்து கொண்டே போக... தன் சுய கௌரவத்தையும் விட்டு, துரியோதனன் அந்த பிராமனரிடம் சென்று கர்ணன் மட்டும் எப்படி விறகுகளைத் தந்தான்-ன்னு கேட்டான்

பிராமணர் நடந்ததை சொல்ல... கர்ணனின் உண்மையான தர்ம குணத்தை துரியோதனன் பரிபூர்ணமாக உணர்ந்தான். அவன் மீது பொறாமை கொண்டது தவறு. உண்மையான ஈகை என்பது பணக்காரத்தனத்திலோ, பகட்டிலோ இல்லை... மனதில் தான் உள்ளது என்பதை உணர்ந்தான்...

கர்ணன் மீது தான் ஏற்கனவே கொண்ட... அன்பு பல்கிப் பெருகி... அவனுள்ளே கரை புரண்ட வெள்ளமாய் அலை அடித்தது....

சரி ஹீரோ இருந்தா கண்டிப்பா ஹீரோயின் இருக்கணும் இல்ல... அவங்க அடுத்த பகுதில வராங்க... :)

சான்வி
24-08-2011, 04:30 AM
பகுதி பதிமூன்று - கர்ணனின் காதலி (நான் இல்லைங்க.. சுபாங்கி :))

இன்று மிக முக்கியமானதொரு தருணம் நம் ஹீரோவின் வாழ்வில்....

தன் வழக்கமான பயிற்சிகளை முடித்துக் கொண்டு கர்ணன் திரும்ப வருகையில், "காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்" என ஒரு பெண்ணின் குரல் கேட்க, குரல் வந்த திசையில் கர்ணன் விரைய, அங்கே அவன் கண்ட காட்சி.......

மிரண்டோடும் குதிரைகள் ரதத்தை இழுத்துச் செல்ல, சாரதியின் இருக்கையில், அதை கட்டுப் படுத்த இயலாத ஒரு பெண், கதறிக் கொண்டு இருந்தாள்....

இயல்பிலே இரக்க குணம் கொண்ட நம் கதாநாயகன், பாய்ந்தோடிச் செல்கிறார் அவளைக் காக்க... பாயும் குதிரைகள், மீள முடியாத பாதாளம் நோக்கிச் செல்ல, பாய்ந்த நம் காளை அந்த குதிரைகளை பெரு முயற்சி செய்து அதை கட்டுக்குள் கொண்டு வர, அதற்குள் பாதை முடியும் இடம் வர.....

வேறென்ன.... அந்தப் பெண் மயங்கி விட்டாள்....

ரதத்தில் இருந்த அவளை அருகிருந்த நீர் நிலைக்கு அருகே அள்ளிச் சென்று, அவள் முகத்தில் சற்றே நீர் தெளிக்க.... பதறி விழிக்கிறாள் அந்த அழகிய நங்கை....

இதுவரை அவள் நலம் கருதி பதறி இந்த நாயகனுக்கோ... பதற்றம் நீங்கி ரசனை வந்து ஒட்டிக் கொள்ள... அவன் நெஞ்சில் காதல் பற்றிக் கொள்ள.... இதோ அங்கே நடந்தவை...

(கர்ணன் படத்தில் வரும் வசனங்கள்... நான் புன்னகையுடன் ரசித்தவை இவை என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ :)தமிழின் மீது காதல் இது போன்ற வசனங்களைக் கேட்கையில் அதிகரிப்பதை தடுக்க முடிவதில்லை:))

பக்கத்தில்... ஒரு வீர, தீர ஆண்மகன்... தன்னை காத்தவன்... கண்டதும் நாணத்தில்... பேச்சின்றி தன் பெற்றோர்களிடம் செல்ல எத்தனிக்க...

அவள் நாணம் கண்ட ரசனையில்... அவள் பின்னே செல்கிறான் நாயகன்....

கர்ணன் : பயமா???................ நாணமா?????????.................. கோபமா??????

நாயகி : ம்ம்ம் ......

கர்ணன் : ஹ ஹ ஹ ... பெண்கள் தேரோட்டுவது வீரமான செயல்தான்... அதை எதிர்பாராது... குதிரை மிரண்டு ஓடியதுதான் தவறு... அதற்காக நீ வருந்தத் தேவை இல்லை... பயப்படாதே...

நாயகி : (சொல்லி விட்டு கர்ணன் திரும்பி செல்ல எத்தனிக்க.....) அச்சச்சோ... போகிறாரே என அவசரமாக
கடவுள் போல வந்து காப்பாற்றினீர்.... இல்லை என்றால்????

கர்ணன் : நாட்டின் ஒரு நல்லழகை காத்த பேரு எனக்கு இல்லாது போயிருக்கும்... இதை நிகழச் செய்த ஆணடவனுக்கு நான் தான் நன்றி கூற வேண்டும் ...

நாயகி : நானும் தான் நன்றி கூறிகிறேன்.... கடவுளுக்கு அல்ல... உங்களுக்கு....

கர்ணன்: ஆஹா... இந்தப் பேச்சு எனக்கு தெம்பைத் தருகிறது.... நிலவும், மலரும், தேனும் ஒன்று கூடி ஒரு பெண் ஆகி.. என்னை புகழ்வதைக் கேட்பது இதுதான் முதல் முறை.

நாயகி : வசந்தம் வீசாத வேளையிலும் தங்கள் பேச்சு, உடலை குளிர வைத்து உள்ளத்தை இனிக்க வைக்கிறது ...

கர்ணன் : உனக்கு மட்டும் அல்ல, இனிமேல் இனிமை நமக்குச் சொந்தம்...

நாயகி : நமக்கு என்று நீங்கள் சொன்ன உறவைக் கேட்டதும் ... என் கண்களைப் பாருங்கள் ...

கர்ணன் : ஏன் கண்ணீர்???? இந்த ஆனந்தக் கண்ணீர் இனி தடை இன்றி பெருக வேண்டும்... அதில் நான் சலிப்பின்றி நீந்த வேண்டும்...

நாயகி : கவலை வேண்டாம்... அது எனக்கு சொந்தம்... கடலாகக் கூட இன்பக் கண்ணீர் பெருக்குவேன்...

கர்ணன் : பிறந்த பலனை பெற்று விட்டேன் ...

நாணத்தில் நாயகி அங்கே இருந்து ஓட ... கர்ணன் அவள் பின்னே ஓட, நாயகியைக் கானத்து பதறிய அவள் தோழி அவளைத் தேடி ஓடி வர, கர்ணனைக் கண்டவள் ...

தோழி : தங்கப் பதுமையின் அருகே வந்த பளிங்குச் சிலை போலே யாரம்மா இவர்???

நாயகி : நீ ஏனடி இங்கே வந்தாய்??

தோழி : நான் வந்தது பரவாயில்லை அம்மா, மகாராஜாவும், ராணியாரும் தங்களைக் காண வந்து விட்டனர் ... அதை சொல்லத்தான் நான் ஓடி வந்தேன் ...

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கையிலே தந்தை வரும் அரவம் கேட்டு, இங்கே கர்ணனை விட்டு விட்டு, அவர்கள் இருவரும் அவசரமாய் அவர்களை எதிர்கொள்ள விரைகின்றனர்...

நாயகியின் தந்தை : என்னம்மா இது??? ரதத்தை விட்டு இறங்கி இங்கே என்ன செய்கிறாய்????

நாயகியின் தாய் : சுபாங்கி ... உனைக் காணாது என்ன ஆனதோ என பதறி ஓடி வந்தோம் ...

நாயகி : ஒன்றுமில்லை அம்மா... வெப்பம் தாள வில்லை... தண்ணீர் அருந்தி வருகிறோம்... நீங்கள் போங்கள் அப்பா ... நாங்கள் பின்னால் வருகிறோம் ...

தந்தை : சுபாங்கி ... இந்த சந்திர சைல அரசனின் குலம் வளர்க்க இருக்கும் ஒரே குலக் கொடி நீ... உன்னை தனியே விட்டுப் போக விடுத்து நாங்கள் துடித்த துடிப்பு இன்று உயிரே ஆடி விட்டது ... ம்ம்ம்.... ம்ம்ம்... கிளம்பு போகலாம் ...

அவள் பின்னே ஓடி வந்த கர்ணன்... இவர்களைக் கண்டதும் தொடர முடியாது பின் தங்கி விட... பாவம் இவர்கள் பேசிய ஒன்றும் அவனுக்கு கேட்க வில்லை ...

ஊர் தெரியாது... அவள் பேர் தெரியாது கர்ணன் தவிக்க அவர்கள் மறுபுறம் திரும்பியதும் ஓடி சென்று சைகையில் அவள் பெயர் மற்றும் ஊர் என்னவென்று அவன் கேட்க...

தாய் தந்தையர் முன்னே செல்ல பேச இயலாத அவள் சைகை காட்டி அவள் ஊரைத் தெரிவித்து விட்டு சென்று விட்டாள்...

அவள் காட்டிய சைகை இதுதான்.... நெற்றிக்கு நேரே கையை வைத்துக் காட்டி... அதன் கீழே வளைவாய் ஒரு குறிப்பு காட்டி... இரு கைகளால்... மலை போல காட்டினாள்....

அஸ்திரங்கள் அனைத்தும் அத்துப்படி... தன்னிடம் தானம் பெற வருவோர் கேட்கும் முன்னே இன்னது தான் அவர்களுக்கு வேண்டும் என் அறிந்து அவர்கள் கேட்கும் முன்னே தருபவன்... வீரன்... சூரன்....

ஆனாலும் அந்தப் பெண் காட்டிய சைகை புரியவில்லை.... :)

காதல் கொண்ட மனம் அவள் யாராய் இருக்கும் என கலங்கித் தவிக்க.... தூக்கத்திலும் அவளை எண்ணிப் பிதற்ற.... வலிமை பொருந்திய அரசனும் தன் வலு இழந்தான் காதலினால்....


காரிருளாம் அவள் கூந்தலின் நடுவே
ஒளிரும் சந்திரனாம் அவள் முகம்

பொன்னை ஒத்த நிறம் அவள் மேனி...
பஞ்சுப் பொதியை ஒத்த கணம் அவள் வதனம்

பிறை நெற்றியில் பதித்த நல்வயிரமாம் அவள் திலகம்
ஆளை இழுக்கும் நீர் சுழியாம் அவள் இரு கண்கள்...

எனைக் கண்ட நாணத்தில் அவள் முகம் கொண்டதே
தாமரையின் வண்ணம்... தங்கத்தில் பதித்த பவளமாய்
அவள் செவ்விதழ்கள்... ஐயோ... அவை எனை மொத்தம்
எரிக்கும் செந்தழல்கள்...

வெண் மலர் கொண்ட அரும்பாம் பற்கள்..
தேன் கொண்ட கனியாம் சொற்கள்...

அவளின்றி இருந்தேனே... இத்துனை நாள்...
இனி நான் இருக்க இயலுமா... ஒரு நாள்????

மேலும் என்ன நடந்தது என்பது அடுத்த பகுதியில்...

சான்வி
24-08-2011, 04:41 AM
பகுதி பதினான்கில் ஒன்று : என் காதலன்

கர்ணன் அங்கே தன் உள்ளம் கொள்ளை கொண்டு போன பெண்ணைப் பற்றிக் கனவு கண்டு கொண்டு இருக்க... அந்தப் பெண் இங்கே என்ன செய்கிறாள் எனக் காண்போம்...

கண்ணான காதலனை கண்னருகே கண்டு வந்தவள்...
கையோடு அவன் மனத்தைக் கொண்டு வந்தவள்...
மறந்தாளே தன் மனதை அங்கே தொலைத்து வந்ததை...

கடமைக்காய் தன் கடன்களைச் செய்தாளே அன்றி, ஒன்றிலும் அவள் மனம் ஒன்றவில்லை..

காண்பவரிடம் எண்ணம் செல்லவில்லை... அவர்கள் கேட்டாலும் இவள் பதில் சொல்லவில்லை... பசியில்லை... பசி இன்றி தோழியின் வற்புறுத்தலுக்காய் உண்டாலும் அதில் ருசி இல்லை...

எந்நேரமும் தன்னையே தொலைத்தவளாய், எங்கோ வெறித்த பார்வையுடன்... இருந்தாள்....

பின்னர் என்ன நினைத்தாளோ.... சித்திரமாய்... தன் காதலன் உருவத்தை வரைய ஆரம்பித்தாள்... அச்சடித்த காகிதமாய்... அவனை சித்திரத்தில் தொட்டு எடுத்தாள்.....

அடுத்ததை காட்டும் பளிங்காம் அவன் வண்ணம்
அவனையே காட்டும் பதக்கமாய் என் எண்ணம்
தேக்கின் வலிமையில் தேகம்.. வாக்கின்
இனிமையில் மேகம்.. குதிரையை அடக்கிய
வீரம், நான் விழுந்தேன் அவர் ஓரம்.. நான்
விழிக்கையில் என்னருகே அவர் முகம்...
வேண்டும் மீண்டும் எனக்கந்த வரம்

என்னவொரு பிரகாசம் அவர் கண்ணில்...
அதில்தான் பரவசம் இந்த பெண்ணில்..
குலம் அறியேன், அவர் வளம் அறியேன்..
அன்பர் அவர் பெயரும் அறியேன், நான்
அறிந்ததெல்லாம் ஒன்றுதான்... இனி
நானும் அவரும் ஒன்றுதான்...

என, வீசும் காற்றையும், ஆடும் மயிலையும், ஓடும் மேகங்களையும் கர்ணனுக்காய் தூது விட்டாள்...

பெற்றவரை மறந்தாள், தோழியை மறந்தாள், புன்னகை மறந்தாள், பொன்னகை துறந்தாள்...

இவள் நிலை காண சகியாத தோழி அவள்.... விசாரித்து... கர்ணனின் பெயரைக் கண்டுபிடித்து... தன் இளவரசிக்கு சொல்லி விட்டாள்...

யார் என அறியாத போதே... தன் மனதை இழந்தவள்... இன்னார்தான் என அறிந்த பின்னே... மொத்தமும் மறந்தாள்... என்று நான் என் மன்னவனைக் காண்பேனோ... என ஏங்க... அவர் நினைவில் தூங்க... இருவர் கனவிலும் மாறி மாறி... இருவரும் வர....

கற்பனையிலே போனது காலங்கள் பல.... இருவரும் காதல் கடலில் சிக்கி தத்தளிக்க... அவர் ஏக்கம் அடுத்த பகுதியில் தீரும்...


பகுதி பதினான்கில் இரண்டு : நட்பின் ஆழம்


இப்போது... நமது நண்பர்களிடம் வருவோம்... கர்ணன் மீது துரியோதனன் வைத்த அன்பின் அளவை, கர்ணன் அறிய வந்த ஒரு சந்தர்ப்பம் பற்றி காண்போம்... கர்ணன் படத்தில் இருந்து...

கர்ணனும், பானுமதியும் சொக்கட்டான் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆட்டம் வெகு சுவாரஸ்யமாய் போகிறது... வெற்றி யாருக்கு எனும் நிலை வெகு அருகில்...

கர்ணன் : இந்த முறை எனக்குத்தான் வெற்றி ....

பானுமதி : அதுதான் நடவாது.. எந்த முறையும் வெற்றி எனதுதான்...

கர்ணன் : பெண்கள்.. எப்போதுமே தோல்வியை தாள மாட்டார்கள்... ஆகையால் நான் விட்டுக் கொடுத்தால் தான் உண்டு...

பானுமதி : ஆண்களுக்கு வீரம் அதிகம் இருக்கலாம்.. அறிவு பெண்களுக்கு தான் அதிகம்... இது அறிவு விளையாட்டு...

கர்ணன் : குழந்தைகள் சிறுகச் செய்தாலும் அதை பெரிதாய் பேசுவது மரபு... அதுபோல பெண்களின் சிறிய செயலையும் பெரிதாகப் பாராட்டுவது ஆண்களின் கடமை... அதைக் கொண்டு நீங்கள் அறிவோ திறமையோ அதிகம் படைத்தவர்கள் என அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்...

பானுமதி : இப்படி ஒரு வீண் நினைப்பும், தற்பெருமையும் தான் ஆண்களுக்கு மிச்சம்... ஆனால் எதிலும் வெற்றி எங்களுக்குத்தான்...

கர்ணன் : ம்ம்ம்... பேசு பேசு... வெற்றி எனைத் தேடி வந்து கொண்டு இருக்கிறது பார்.... பிறகு உன் பேச்சு தானாகவே நின்று விடும்... ஹ ஹ ஹ ஹ

அப்போதுதான் துரியோதனன் உள்ளே வருகிறான்... வாயிலை நோக்கி அமர்ந்திருந்த பானுமதி கணவன் வருகையைக் கண்டு எழுந்திருக்க... வாயிலுக்கு முதுகை காட்டி அமர்ந்திருந்த கர்ணன் ....

கர்ணன் : எங்கே ஓடுகிறாய்.... என அவள் மடியை பிடித்து இழுக்க....

பானுமதி அணிந்திருந்த மேகலையின் முத்துக்கள்... சிதறி... அப்போதுதான் அங்கே வந்து நின்ற துரியோதனனின் காலடியில் உருண்டன....

துரியோதணன் : ஹ ஹ ஹ ஹ... எனக்காக நிற்க வேண்டாம் உங்கள் ஆட்டம்... வெற்றி வரை தொடரட்டும்.... சிதறிய முத்துக்களை நான் எடுக்கட்டுமா??? எடுத்து அவைகளை நான் கோர்கட்டுமா??

அச்சம் கொஞ்சம், கண்ணீர் கொஞ்சமாய்... பானுமதி ஒரு ஓரமாய் நிற்க...

தான் செய்த காரியத்தின் நினைவில்... கூனிக் குறுகி... கர்ணன் துரியோதனிடம் செல்கிறான்....

கர்ணன் : நண்பா...

துரியோதனன் : கர்ணா... என்ன நடுக்கம்??

கர்ணன் : விளையாட்டின் உற்சாகத்தில்... செய்தது யாதென அறியாது நான் மடியை இழுத்து விட்டேன்... என் மாபெரும் தவறை உணர்ந்து என் உடலெல்லாம் பதறுகிறது...

துரியோதனன் : எவ்வளவு அறியாத்தனம் உனக்கு??? தங்கையின் மடியைப் பிடித்து இழுத்ததில் அண்ணனுக்கு ஏன் இந்த தடுமாற்றம்??? உன்னையும், என் மனைவியையும் நான் நன்கு அறியாதவனா??? இந்தப் பேதைமை உன்னிடம் உதித்ததே பெரும் தவறல்லவா???

பானுமதி... இத்துணை நேரமும் சிறு அச்சத்தோடு இருந்தவளின் கண்கள்... தன் கணவனின் அன்பில் நெஞ்சமும், விழிகளும் நிறைய கணவனை நோக்குகிறாள்.....

கர்ணன் : கண்கள் குளமாக... உயிரே... என் தெய்வமே...

துரியோதனன் : கர்ணா... என இருவரும் ஆரத் தழுவிக் கொள்கின்றனர்...

எனை சந்தேகம் கொள்ளவும்,
தீயிட்டு எனைக் கொளுத்தவும்
தங்கள் கண் முன்னே கண்ட
காட்சி இருப்பினும், என்னிடம்
நீங்கள் கொண்ட நம்பிக்கையை
நான் காணும் போது.. மரணம்
எனக்கு மறு நொடி ஆயினும்
மகிழ்வோடு ஏற்பேனே... மன்னவா

என பானுமதியும்...

நண்பனின் மனைவி எனும் நினைவின்றி
விளையாட்டை ஒரு பொருட்டாய் கருதி
அதிலே மூழ்கிப் போய், நான் செய்த
காரியம்... கடவுளுக்கே அடுக்காதே

நண்பா... ஆனாலும், என் மீது எத்துனை
நம்பிக்கை நீ வைத்திருந்தால் இப்படி
ஒரு வார்த்தை நீ சொல்லி இருப்பாய்...
என் உயிரே...

என் உயிரினும் மேலான என்னவனே,
எனை ஆளும் மன்னவனே, இதன்
கைமாறாய் நான் என்ன செய்வேன்??
என் உயிரை நான் உன் பொருட்டு
இழந்தாலும் அதற்கு ஈடாகுமா???

நட்பெனும் சொல்லுக்கு பிறந்த என்
நற்சித்திரமே, நட்பு வானில் நீ என்றும்
ஒரு நட்சத்திரமே... உன்னை நான்
நீங்கேன் என் நண்பா... என் உயிர்
போகும் வரை...

என கர்ணனும்... இருக்க...

எனக்கும் இந்த நட்பின் ஆழத்திலும், மெய் அன்பிலே ஆழத்திலும்.... எனை அப்படியே ஆழச் செய்த காட்சி இது....

அநீதி செய்பவன், பிறர் உடமைக்கு
உடையவனாய் ஆக எண்ணியவன்,
என ஆயிரம் குறைகள் உன்னை
சொன்னாலும், சொன்னவருக்கும்
இல்லாத மனமடா உனக்கு... துரியோதனா....

அதிலும் பாருங்களேன்... என்ன அழகாய்... அவ்வை பாட்டி... “வரப்புயர” என ஒத்தை வார்த்தையில் ஒரு மன்னனை வாழ்தினாராமே... அது மாதிரி.... ரெண்டு வார்த்தையில் எத்துனை அழகாய் சொல்லி விட்டான் தன் மனதை....

சிதறிய முத்துக்களை... நான் எடுக்கவோ... கோர்க்கவோ....

முத்துக்கள் பொதுவாக வழுவழுப்பானவை... அதை எடுக்க பொறுமை நிறைய வேண்டும்.... என் பொறுமை குறையவில்லை என்கிறான்....

எடுக்கவே பொறுமை அத்துணை வேண்டும் எனில், அதை கோர்க்க.... வெகுவாய் நிதானமும் இருக்க வேண்டும்....

அந்த, அப்படி வழுவழுப்பான முத்துக்களை எடுக்கவும், கோர்க்கவும் வேண்டிய பொறுமையும் நிதானமும் என்னிடம் உண்டு... கவலை இன்றி நீங்கள் ஆட்டத்தை தொடருங்கள் என சொல்லுகிறான்...

என்ன மனிதனடா நீ??? என்ன மனமடா உனக்கு??? அத்துணை நம்பிக்கையா உனக்கு??? நீ நல்ல நண்பன் மட்டும் அல்ல. நல்ல கணவனும் கூட. துரியோதனா உனக்கு என் வந்தனங்கள்

Ravee
24-08-2011, 09:43 AM
மன்னிக்கவும் சான்வி ... மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள் ..முதலில் பீஷ்மர் ...இரண்டாவதாக கர்ணன் இவர்களின் உறுதி வேறு எந்த கதாபாதிரங்களிலும் காண முடியாத ஒன்று. நீங்கள் எழுதுவதை தொடர்ந்து படித்து பின்னூட்டம் இட முடியாத வேலை பளுவில் இருக்கிறேன் . மன்னிக்கவும் ... சிறப்பாக தொடருங்கள். விரைவில் முழுதும் படித்து வருகிறேன்.

சான்வி
24-08-2011, 11:20 AM
உங்களுக்கு வேலைகளுக்கு இடையில் வேளை கிடைக்கும் வேளையில் படித்து உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள் அண்ணா.

வரவுக்கும், இதம் தரும் விளக்கத்துக்கும் நன்றி

Nivas.T
24-08-2011, 02:07 PM
ஆஹா அதற்குள் இவ்வளவு பதிந்துவிட்டனவா? அருமை தொடர்ந்து வருகிறேன். இதோ நான் எதிர்பார்த்த நிகழ்வு இறுதி பதிப்பில்.

அடுத்தது "உளத்தில் நல்ல உள்ளம்"

தொடருங்கள் தோழி மிக்க நன்றி

innamburan
24-08-2011, 08:12 PM
கர்ணன் ஒரு அதிசய கதை மாந்தன். சாதாரணன். அசாதாரண குணாதிசயங்கள்.அசாதாரணன். சாதாரண குணாதிசயங்கள்.

சான்வி
19-10-2011, 06:37 AM
அடுத்தது "உளத்தில் நல்ல உள்ளம்"

தொடருங்கள் தோழி மிக்க நன்றி

தொடர்ந்து வரும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி நிவாஸ்

சான்வி
19-10-2011, 06:39 AM
கர்ணன் ஒரு அதிசய கதை மாந்தன். சாதாரணன். அசாதாரண குணாதிசயங்கள்.அசாதாரணன். சாதாரண குணாதிசயங்கள்.

வரவுக்கும், பதிவுக்கும் நன்றி

சான்வி
19-10-2011, 06:46 AM
பகுதி பதினைந்து : யார் அந்தப் பெண்

பௌர்ணமி இரவு... பிரிந்திருக்கும் காதலர்களின், காதலை கொழுந்து விட்டு எரிய தூபம் போடும் குளிர்ந்த நிலவு...

தடையின்றி தன் வேலையை கர்ணனிடம் காட்ட... நிலவிலும் அவள் முகம்.... நினைவிலும் அவள் முகம்... கண் மூடிய கனவிலும் அவள் முகம்... என காணும் திசை எல்லாம், வேறு காட்சி ஏதும் இல்லை, தன் காதலி அவள் ஆட்சி அன்றி...

கற்பனையிலும், கனவிலுமே... அவர்களின் காதல் பெருகிக் கொண்டே இருக்க... அன்று தான் அவன் காதல் அவன் நண்பனுக்கு தெரியும் நிலை வந்தது...

துரியோதனனும், பானுமதியும், பௌர்ணமி ஒளியில் உலவி வர வெளியே கிளம்ப... உலவித் திரும்புகையில், கர்ணனின் அரண்மனை வழியே அவர்கள் செல்கையில்... சரி நண்பனை கண்டு செல்வோமே என இருவரும் இங்கே வர....

(கர்ணன் படத்தின் காட்சிகள் .......சற்றே நீண்ட காட்சி... என்வரிகளை விட அந்த வரிகளை நான் ரசித்ததால்... மாற்றம் ஏதும் செய்ய வில்லை...)

இருவரும் உள்ளே வரும் வேளையில்... கர்ணன் மஞ்சத்தில் இருந்து கீழே விழ...

துரியோதனன் : (பதறித் துடித்து...) கர்ணா....

கர்ணன் : (நெஞ்சத்தில் ஒரு கையை வைத்து.. ) ஆ.... வனமோகினி போல் வந்தவளே... உன் உயிரைக் காத்தவன் நான்... என் உயிரைக் கொள்ளை கொண்டு போகலாமா???

சுபாங்கி : இல்லை இல்லை... என் உயிரை நீங்கள் தான் கொள்ளை கொண்டு விட்டீர்கள்... (கற்பனையில் கூட அந்தப் பெண் ரொம்ப நன்றாக பேசுகிறாள்.)

கர்ணன் : ஆ... வந்துவிட்டாயா??? வா... வா.... என் அருகே வா... என அருகே இருந்த துரியோதனன் கரத்தை பிடித்து... கரமா இது... மலரல்லவா.??

துரியோதனன் : ஆமாம் ஆமாம்... மங்கையின் கரம் அல்லவா இது...

கர்ணன் : துரியோதனன் கரத்தை முத்தமிட்டு... மானே வா.. மயிலே... வா... கிளியே வா... என் அருகில் வா....

துரியோதனனும், பானுமதியும் ஆன மட்டும் சிரிப்பை அடக்கிக் கொண்டு... கர்ணனுடன் உரையாடலை தொடர்கின்றனர்...

அச்சோ.. பாவம் கர்ணன் துரியோதனனை முத்தமிட வேறு செல்கிறான்....

பானுமதிக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது...

கர்ணன் : ஆஹா.. என்ன இனிமையான சிரிப்பு... அப்படிச் சிரி...

இப்போது சிரிப்பது... துரியோதனனின் முறை ஆயிற்று...


கர்ணன் : மூடிய விழிகளை திறக்காமலே.. என்ன இது பயங்கரமான சிரிப்பு.?? என் மீது உனக்கு கோபமா???துரியோதனன் : விழிக்காமல் இருந்தால் வேதனை அல்லவா??? வேறு.. எப்படி இருக்கும் என் சிரிப்பு...

கர்ணன் : கண்ணே... என் மீண்டும் துரியோதனனை தழுவச் செல்ல...துரியோதனன் அவனை எழுப்ப விழைகிறான்...

துரியோதனன் : நண்பா... கர்ணா... நண்பா....

கர்ணன் விழித்து அருகே இருந்த துரியோதனனை கண்டவுடன்... நாணமும், அவமானமுமாய்... அந்தப் புறம் திரும்பிக் கொள்கிறான்...

பானுமதி : அண்ணா, இது எத்தனை நாளாக நடக்கிறது... நின்று கொண்டே தூங்கும் பழக்கம்??

கர்ணன் : நாணம் மிகக் கொண்டவனாய்... நீங்கள் எங்கே வந்தீர்கள் இந்த நேரத்தில்...

(அட..அட... பளிங்கு முகமும், பால் போன்ற நிறமும்... போய்... அந்தி நேர சூரியனாய் என் உள்ளத்தைக் கொள்ளவே/கொல்லவே வந்ததா... இந்த சந்தர்ப்பம்...)

துரியோதனன் : நல்ல நிலவு... உலவி வரலாம் எனப் புறப்பட்டோம்... இங்கே வந்ததும் உன்னை... பார்த்துப் போகலாம் என உள்ளே வந்தோம்...

பானுமதி : வந்தது நல்லதாகப் போயிற்று... வந்ததால்தான்... உங்கள் உயிருக்கு வந்த ஆபத்து புரிந்தது...

கர்ணன் : என் உயிருக்கு ஆபத்தா??? என்ன அது??? (ஐயோ பாவம் ஒண்ணுமே தெரியாது இவருக்கு.... )

இப்படி கேட்டது... பானுமதி... கர்ணனைப் போலவே... பாவனைகளை மாற்றிப் கொண்டு....

பானுமதி : ஆ... வனமோகினி போல் வந்தவளே... உன் உயிரைக் காத்தவன் நான்... என் உயிரைக் கொள்ளை கொண்டு போகலாமா???

அண்ணா... காதல் உரையாடல்.. கனவிலே உங்களிடம் பட்ட பாடு....

கர்ணன் : மீண்டும் நானச்சிரிப்பு... ஐயோ.... அவமானம்... அவமானம்.... அதுவும் உனக்கு தெரியும்படியாக இப்படி நடந்ததுவிட்டதே... இனி சாகும் வரை உன் நகைச்சுவைக்கு இந்த ஒரு விஷயம் போதுமே...

மூவருக்கும் சிரிப்பு வருகிறது...

துரியோதனன் : சரி சரி... இந்த விஷயத்தை உடனே கடுமையாக கவனித்தாக வேண்டும்...

பானுமதி : அதுமட்டும் அல்ல... நான் சாவதற்குள்... உங்களுக்கு சீக்கிரம் ஒரு கல்யானத்தை செய்து பார்த்து விடவேண்டும் என்று எனக்கு ஆசை கிடந்தது அடித்துக் கொள்ளுகிறது...

கர்ணன் : ஹ ஹ ஹ ..... இப்படி ஒரு பொறுப்புள்ள பாட்டி எனக்கு கிடைக்கவில்லையே என்றுதான் நான் ஏங்கிக் கொண்டு இருந்தேன்... பொறு.. நான் உண்மையைச் சொல்லி விடுகிறேன்...

பானுமதி : ஆ... அப்படி வாருங்கள் வழிக்கு...

கர்ணன் : கானகத்தில் நான் ஒரு பெண்ணைக் கண்டேன்...

துரியோதனன் : ஒ... அவள் அழகானவளா??

கர்ணன் : கதையைக் கேள்... அழகு எப்படி என்று தானே.. தெரியும்... அவள் ஒரு தேரை ஒட்டி வந்தாள்...

பானுமதி : அது ஒன்று போதுமே... உங்களுக்கு ... அவளைக் காதலிக்க... ()

கர்ணன் : கட்டுக்கடங்காமல் ஓடும் அதை நான் அடக்கி.. அவள் உயிரை நான் காப்பாற்றினேன்..

பானுமதி : ம்ஹூம்... அவமானத்தை எண்ணி அழுதிருப்பாள்.. உங்களுக்கா தெரியாது அவளை சிரிக்க வைக்க...

துரியோதனன் : ஆமாம்... அவளை சிரிக்க வைக்க நீ என்ன செய்தாய்???

பானுமதி : என்ன செய்திருப்பார்??? பேசி இருப்பார்... அவள் சிரித்திருப்பாள்... அப்படித்தானே என கர்ணனிடம் வினவ...

கர்ணன் : ஹ ஹ ஹ ஹ... அப்படித்தான் நடந்தது.. எப்படியோ அதை நீ அப்படியே சொல்லி விட்டாயே... எல்லா பெண்களுக்கும் இது இயற்கை போலும்...

துரியோதனன் : உண்மைதான்... எனக்கு, உன் தங்கைக்கும் ஏற்பட்ட அனுபவம் கூட கிட்டத்தட்ட அப்படித்தான்...

பானுமதி : வெட்கமும், கொஞ்சம் கோபமும் போட்டி இட... நீங்கள் பேசாமல் இருக்க மாட்டீர்கள்??? நம் கதை பழைய கதை... புதிய கதையில் அதைக் கொண்டு வந்து புகுத்தி குழப்பலாமோ??? வழக்கமானது என உணரும் போது ருசி குறைந்து விடாதா???

கர்ணன் : பலே.. தங்கையே... மனோதத்துவம் புரிந்தவள் நீ..

மூவரும் மீண்டும் சிரிக்க...

பானுமதி ; சரி.. சரி.. பிறகு???

கர்ணன் : பிறகென்ன... கரடி போல் வந்து விட்டனர் அவள் தாயும், தகப்பனாரும்... அவளால் என்னுடன் பேசக் கூட முடியவில்லை...

பானுமதி : ஐயோ.. பாவம்...

கர்ணன் : ம்ம்ம்ம்... ஊர், பெயர் ஒன்றுமே சொல்லவில்லை... கையால் ஜாடை காட்டி.. ம்ப்ச்...

பானுமதி : அடிப்பாவி.... அது சரி.. அவள் காட்டிய ஜாடைக்கு அர்த்தமாவது புரிந்ததா உங்களுக்கு???

கர்ணன் : புரிந்திருந்தால்... கனவா கண்டுகொண்டு இருப்பேன்... பறந்திருக்க மாட்டேனா அவள் இருப்பிடம் நோக்கி??

துரியோதனன் : ம்ஹூம்ம்... சரி என்ன ஜாடை செய்தாள்?? அதாவது நினைவு இருக்கிறதா???

கர்ணன் : அதை மறக்க முடியுமா??? என அன்று அவள் காட்டிய சைகையை மீண்டும் செய்து காட்டுகிறான்... செய்து விட்டு ஏக்கம் ததும்பும் காதல் பார்வை ஒன்றை பார்த்து இப்படி பார்த்து விட்டு போய் விட்டாள்... (அந்தப் பார்வை கூட கொள்ளை அழகு...)

பானுமதி : என்ன பெண் இவள்... இப்படி புரியாத ஒரு ஜாடையைக் காட்டி விட்டு போய் இருக்கிறாள்..

கர்ணன் : ஐயோ தங்கையே... உனக்குமா?? புரியவில்லையா?? என ஓய்ந்து போய் ஒரு இருக்கையில் சாய்கிறான்... நண்பா துரியோதனா...

துரியோதனன் : பானுமதி இவனை இப்படி தவிக்க விட்டு விட்டு என்ன செய்வது... என இருவரும் பேசிக்கொண்டே வெளியே செல்கிறார்கள்...

பானுமதி : உங்களுக்கு புரியவில்லையா??? நெற்றியைக் காட்டி, கீழே வளைவான குறி இட்டது சந்திரனைக் குறிக்கிறது... பின்னர் கையால் காட்டிய சைகை மலையைக் குறிக்கிறது...

துரியோதனன் : சந்திர மலை... அப்படி ஒரு நாட்டை நான் கேள்விப் பட்டதே இல்லையே...

பானுமதி : மலை எனும் சொல்லுக்கு சைலம் எனும் பொருளும் வரும்...

துரியோதனன் : சந்திர சைலம்... ஆஹா... அப்படி ஒரு தேசம் இருக்கிறது.... அதன் அரசர் நமக்கு நெருங்கிய நண்பர் தான்..

பானுமதி : அந்த நாட்டின் இளவரசிதான் அந்தப் பெண்...

துரியோதனன் : ஆஹா... அப்போது இவ்வளவு சுலபமாய் காரியம் முடிந்து விட்டது... இத்தனையும் சொன்னால் உன் அண்ணா அப்படியே பூரித்து விடுவான்... வா.. போய் சொல்லலாம்...

பானுமதி : இருங்கள்.. இதில் உங்கள் அவசரத்தைக் காட்ட வேண்டாம்... அவரிடம் சொல்லாமலே நாம் இதை முடிக்க வேண்டும்.. அப்போதுதான் அதிலும் ஒரு நகைச்சுவையை உண்டாக்கலாம்.

என் இருவரும் சிரித்துக் கொண்டே செல்கிறனர்..

இதை அறியாத கர்ணனின் நிலையோ வெகு பரிதாபம்...

யார் அவள்.. அந்தப் பூமகள்... என் உளம்
கவர்ந்த மான்மகள்.. பார்த்த நொடியில்
உச்சி முதல் பாதம் வரை உற்சவத்தில்
அலங்கரித்தாள்..

உச்சரித்த சொற்களிலே, உற்சாகத்தின்
உச்சியிலே ஏற்றி வைத்தாள்.. இருளடைந்த
உள்ளத்திலே அன்பின் தீபம் ஏற்றி
வைத்தாள்...

ஒளியாக வந்தவள், என் அக இருள் நீங்க
வந்தவள்... என் வாழ்வின் பொருளாய்
வந்தவள்... என் உள்ளம் கொத்தி எங்கே
சென்றாயடி கண்ணே...

உன்னை நான் காணும் நிலை வர வேண்டும்
விரைவில்... அல்லது என் உடல் மண்ணைக்
காணும் நிலை வந்துவிடும் விரைவில்...
வருவாயா பெண்ணே??? என் வசந்தமாய்...


கர்ணனின் திருமணம் அடுத்த பகுதியில்...

சான்வி
19-10-2011, 06:55 AM
பகுதி பதினாறு : கர்ணனின் நிச்சயதார்த்தம்


கர்ணனின் உள்ளத்தைக் கவர்ந்தவள் யார் எனத் தெரிந்தும், அவளைக் காணாது அவன் துடிக்கும் துடிப்பை நன்கு அறிந்த பின்னும், அமைதியாய் இருப்பார்களா, அவன் நண்பனும், சகோதரியும்??? கிளம்பி விட்டனர் சந்திர சைலத்திற்கு...

சீர் வரிசைத் தட்டுக்கள் அரன்மையை நிறைக்க... பொன்னும், பொருளும், மலரும், மணிகளும், அதிலே குவிந்து இருக்க... ஏகோபத்திய வரவேற்பு இருவருக்கும் அங்கே... இருக்காதா பின்னே.... இவர்களின் பேரரசுக்கு உட்பட்ட சிற்றசர் அல்லவா அந்தப் பெண்ணின் தந்தை...

இனி காட்சிகள் கர்ணன் திரைப் படத்தில் இருந்து...

பெண்ணின் தந்தை : விஷயத்தை சொல்லி ஒரு ஓலையை அனுப்பி இருந்தால்.. திருமணத்திற்கு நானே ஒப்புதல் தந்திருப்பேன். உத்தரவு இட்டிருந்தால்.. நானே நேரில் வந்திருப்பேனே... இதற்க்காக மகாராணியும் சக்கரவர்த்தியும் நேரில் வர வேண்டுமா??? என்றாலும் தங்கள் இருவர் வருகையால் எங்கள் இல்லம் பெருமை பெற்றது...

துரியோதனன் : எங்கள் வருகையால் மூன்று விஷயங்கள் பூர்த்தியாகின்றன..

ஒன்று : உலக வழக்கு... அதாவது பெண் கேட்டு வருபவர்கள் நேரில் வர வேண்டும் என்பது...
அடுத்தது... நாங்களே நேரில் வந்திருப்பதால்.. எங்கள் நண்பன், அங்க தேச மன்னன், கர்ணனின் தகுதி எத்தகையது என்பதை நீங்கள் அறிய வேண்டும்...
மூன்றாவது – மகாராணியின் ஆசை... அதை அவர்களே கூறுவார்கள்...

பானுமதி : எங்கள் வீட்டுக்கு வரும் மணப்பெண், எப்படி எப்படியெல்லாம் இருப்பாள், என்னென்னவெல்லாம் பேசுவாள், எதை எதை எல்லாம் செய்வாள் என்பதை அறிந்து, அதை முன்னதாகவே மணமகனுக்கு அறிவித்து, அவரை, இவள் நினைவுக்கு உள்ளாக்க வேண்டும் என்பதே எனது ஆசை..

பெண்ணின் தந்தை : தேவி சீக்கிரம் ராணியாரை பெண்ணிடம் அழைத்துப் போ...

பெண்ணின் தாயார் : தயை செய்யுங்கள் மகாராணி...

மகள் இருக்கும் இடத்திற்கு பானுமதியை அந்த அம்மாள்... அழைத்துச் சென்று...

பெண்ணின் தாயார் : சுபாங்கி... துரியோதனச் சக்கரவர்த்தியும், அவரது தர்ம பத்தினியும், இப்போதுதான் வந்தார்கள்.. அவர்களை வணங்கிக் கொள்ளம்மா...

அந்தப் பெண் வந்து பானுமதியை வணங்க...

பானுமதி : நான் யாரைவாது ஆசீர்வதித்தால் அவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும்.. நான் உன்னை ஆசிர்வதிக்கிறேன்...

பெண்ணின் தாயார் : மகாராணி.. நீங்கள் பேசிக் கொண்டு இருங்கள்.. நான் வருகிறேன்... (இங்கிதம் தெரிந்த பெரியவர்கள்...:) )

பானுமதி : சுபாங்கி, உனக்கு பாடத் தெரியுமா???

சுபாங்கியின் தோழி : அவர்களுக்கு அதைத் தவிர வேறொன்றும் தெரியாது...

பானுமதி : நடனம்???

சுபாங்கியின் தோழி : ஆடாத நேரமே கிடையாது...

பானுமதி : ம்ம்ம்ம் .... சித்திரம் வரையும் பழக்கம் உண்டா???

சுபாங்கியின் தோழி : பிரமாதமாய்... ஆ... எழுதி இருப்பதை காட்டட்டுமா???

பானுமதி : (கோபம் வருகிறது...என்ன பெண் இவள், அவளைக் கேட்டால் இவளே பதில் சொல்லிக் கொண்டு... முந்திரிக் கொட்டை.. வேண்டாம்... என் முன் மான் போல் ஓடி வந்ததை பார்த்தேன்... ஆணை போல் நடந்து வரும் ஆணின் முன் எப்படி நடப்பாய் ...

சுபாங்கியின் தோழி : அன்னம் போல் நடப்பார்கள்.. அதுதான் இவர்களது இயற்கை நடை...

பானுமதி : ஆமாம்... உனக்கு பேசத் தெரியுமோ???

சுபாங்கியின் தோழி : ஒ... ஒரு கேள்வி கேட்டால் ஒன்பது பதில்கள் சொல்வார்கள்...

பானுமதி : (சுபாங்கியின் தோழியை நோக்கி) ஒ.. நீதான் சுபாங்கியா??

சுபாங்கியின் தோழி : இல்லையே... நான் அவர் தோழி.. என் பெயர் மங்களா...

பானுமதி : இதுவரை ஒன்பது பதில் சொன்னவள் நீதான்... எனவே நீதான் சுபாங்கியோ என நினைத்தேன்...

இதுவரை.. நாணத்தில் கவிழ்ந்த தலை நிமிராத... நமது கதாநாயகி... இப்போதுதான் பேசுகிறாள்...

மங்களா: மன்னியுங்கள் மகாராணி...

சுபாங்கி : மகாராணி.. பயத்தால் உங்களுக்கு மறுமொழி சொல்லாது இருந்து விட்டேன்... மன்னிக்கவும்

பானுமதி : சிம்மத்தைக் கண்டால் பயப்படலாம்...

சுபாங்கி : கருணை வடிவான கடவுளைக் கண்டும் பயப்படுவது உண்டு... (ஐஸ் ஐஸ் )

பானுமதி : என்னைப் புகழுவது எனக்குப் பிடிக்காது... இருந்தாலும்.. நயமான உன் பேச்சு எனக்கு பிடிக்கிறது...

சுபாங்கி : நாணப் புன்னகை...

பானுமதி : அடியே மங்களா... உன் தோழியின் வீரத்தைப் பற்றி உன் எண்ணம் என்ன???

மங்களா : தேரை ஓட்ட ஆரம்பித்தால், வீர ஆண்மகன் ஒருவர் வந்து குதிரையை அடக்கும் அளவுக்கு... வேகம் இருக்கும்...

சுபாங்கி : மங்களா... என்ன விளையாட்டு இது...

பானுமதி ; பரவாயில்லை... அதற்குள்ள வயதுதானே உங்களுக்கு... மங்களா...

உன் தோழிக்கு ஒரு நல்ல துணையைக் கொடுக்கத்தான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்... என் அண்ணா கர்ணனுக்கும், உன் தோழி சுபாங்கிக்கும்.. திருமண நிச்சயம் இன்று நடைபெறுகிறது...

(வாக்கியத்தின் ஆரம்பத்தில் இருந்த விருப்பமின்மை... கர்ணன் எனும் பெயரைக் கேட்டதும்... பறந்து... நாணமும், ஆனந்தமும் போட்டி இட... அடடா... தங்கப் பதுமை... சிவந்த மலர்களின் கலவையாய் ஆனதே... )

பெரியோர்கள் சூழ அன்றே திருமணம் நிச்சயிக்கப் படுகிறது... திருமணமும் முடிகிறது.

(இதுவரை தான் அந்த திரைப்படத்தில் உள்ளது... அது ஏதோ.. திடீரென முடிந்து விட்டது போல ஒரு தோனல் எனக்கு. எப்படி பட்ட சம்பவம் அது... எனவே என் கற்பனைப் புரவியை தட்டி விட்டேன்... இனி வரும் வரிகள் என் கற்பனை....)

நிச்சயம் முடித்து விட்டு சுபாங்கி கர்ணன் உருவை வரைந்து வைத்திருந்ததை... பெற்றுக் கொண்டு தங்கள் ஊருக்குத் திரும்பினர்.. துரியோதனனும்.. பானுமதியும்...

கர்ணனின் இருப்பிடம் சென்று...

பானுமதி : என்ன அற்புதமான சித்திரம்... என்ன தத்ரூபம்...

துரியோதனன் : ஆமாம், அச்சு, அசலாய் அப்படியே உன் அண்ணனைப் போலவே உள்ளதே...

பானுமதி : இருக்காதா பின்னே.... ஒரு தரம் பார்த்ததிலே உள்ளத்தை தொலைத்தவள் அல்லவா???

கர்ணன் : என்ன இது.. யாரைப் பற்றி பேசுகிறீர்கள்... என்ன சித்திரம் அது.... எனக்கு ஏதாவது சொல்லலாம் அல்லவா??? (ஐயோ.. பாவம்)

பானுமதி : அதுவா.... யாரோ ஒரு பெண்... அவள்... தன் காதலனைக் கண்டது ஒரு முறைதானாம்... அவள் உயிரையே காப்பாற்றியவராம் அவர்.... அவர் உருவை வரைந்து வைத்துக் கொண்டு அதனோடு தான் தனிமையில் பேசுவதும், சிரிப்பதுமாம்...

கர்ணன் : (தன் காதலியோ என ஐயம் கொள்கிறான்...) எங்கே... அந்த சித்திரத்தைக் காட்டு பார்ப்போம்...

துரியோதனன் : அந்த பெண்ணும் மிக அழகானவள் தானாம்... தேர் ஓட்டுவதில் தேர்ந்தவளாம்....

கர்ணனுக்கே மனதில் முடிவே ஆகி விட்டது... இது தன் காதலிதான் என... அந்த சித்திரத்தைக் காணும் ஆவல்... அவள் பெயரைத் தெரிந்து கொள்ள ஆவல்... அவள் இடம் இன்னது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல்... ஆனாலும் பானுமதியின் முன்னர் அதை வெளிப்படுத்த தயக்கம்...

(கிண்டல் பண்ணுவாங்க இல்ல... )

கர்ணன் : யார் அந்தப் பெண்??? அவள் பெயர் என்ன???

பானுமதி : (அத்துணை சீக்கிரம் சொல்லிவிடுவேனா என்ன என் மனதுள் எண்ணிக் கொண்டு...) அவள் நமது தேசத்திற்கு உட்பட்ட ஒரு சிற்றசரரின் மகள் தான்... அவள் பெயர் கூட... என நிறுத்தி விட்டு... யோசனை செய்வது போல் நடிக்க...

ஆவலாய்... பெயர் அறியக் காத்திருந்தவன்... உள்ளே கோபம் கொஞ்சம் எட்டிப் பார்க்க....

துரியோதனன் : என்னவோ... சொன்னார்களே.... அது... வந்து....

கர்ணனுக்கு... அழுகையே வந்து விடும் போல ஆகிவிட்டது.... (பாவம்... இப்படியா ஒருவனை வம்புக்கு இழுப்பது..)

பானுமதி : (என்ன இருந்தாலும் அண்ணன் அல்லவா... அவன் துயரை இவள் பொறுப்பாளா????) அவள் பெயர் சுபாங்கி அண்ணா... சந்திர சைல இளவரசி....

கர்ணன் : சு...பா...ங்....கி... சு.....பா.....ங்....கி..... என்ன இனிமையான பெயர்!!!!

துரியோதனன் : அது மட்டும் அல்ல நண்பா.... அவளுக்கும் உனக்கு மணமுடிக்க நிச்சயித்து வந்தோம்.... அடுத்த திங்கள்.. உன்னவள் உன்னுடன் இருப்பாள்....

பானுமதி : இந்தாருங்கள் அண்ணா... அந்தப் பெண் வரைந்த சித்திரம்... உங்களை அப்படியே வரைந்து வைத்திருந்தாள்....

இதை நான் கேட்க தன் உயிரையே பிரிவது போல எடுத்து தந்தாள்... தன் உயிரிடம் தான் அது போகப் போகிறது என்பதால்...

கர்ணன், உணர்ச்சிப் பெருக்கில் நிலை குலைந்து போகிறான்... தன் காதல் நிறைவேறிய மகிழ்ச்சி... தன் காதலை நிறைவேற்றிய தன் நண்பனிடம் நெகிழ்ச்சி... தன் உயிர் தன்னை வரைந்ததை பெற்று வந்து தந்த தங்கையிடம் நெகிழ்ச்சி... அனைத்தும் அவனிடம் சேர்ந்து இருந்ததில் நிறைய மலர்ச்சி...

இதுவரை... சூத்புத்திரன்... என்றே பலவாறு கேலி செய்யப்பட்டு... காயம் பட்டு... பட்டு.. காய்த்துப் போன மனதில்... நட்பும், சகோதரப் பாசமும், கைகூடிய நேசமும், அவன் நெஞ்சை நிறைத்து தள்ளாட வைத்தன....

கர்ணன் : நண்பா... என் உயிரின் உயிரே... எனை இன்பத்திலே ஆழ்த்தி... மகிழ்ச்சியின் உள்ளே வீழ்த்தி ... மகிழ்ச்சியிலே.. நான் என்றும் இருக்க, எனக்கென இருக்கும் நண்பா... என்ன தருவேன் உன் அன்புக்கு... ஈடாக....

மகிழ்வென்னும் உணர்வே, அறியாத எனக்கு
மகிழ்வன்றி வேறு உணர்வே இல்லாது போனதே.
இகழ்வென்று நாளும் இருந்திட்ட போதும், இன்று
புகழ் கொண்டு நாளும் புலரும் படி ஆனதே...

பெற்றவள் அன்பின்றி நானும் புளுங்கிட்ட போதும்
உற்றவளாய், என்னவளை நீ தந்திட்ட போதும்...
உறுதுணையாய், உற்ற துணையாய், என் அன்பு
அணையாய் இருந்தாயடா நண்பா....

உன் அன்புக்கு இணையாய்... நான் என்ன கொடுப்பேன்...
உன்னிடம் இருந்த பெற்றவை இந்த செல்வமும்,
குறையாத வளமும், மதிப்பற்றவை.. இவை.. உன்
மதிப்பில்லா அன்புக்கு ஈடாய்...

இனி நான் எடுக்கும் ஜன்மம் அனைத்திலும் உனக்கு
நான் நன்றிக் கடன் பட்டேனடா.. நண்பா... நட்பு எனும்
சொல்லுக்கு ஒரு நல்லுதாரணம் நீ... நான் உன்னை
அலங்கரிக்கும் தோரணம்...


என... கர்ணனின் என்ன ஓட்டம்... பிறவிகளைக் கடந்து போனது.... கூடவே அந்த சித்திரத்தில் தன் வருங்கால மனைவி தன்னை தீட்டி இருந்த பாங்கிலே... இவன் அனல் மேல் பணியாய் உருகித்தான் போனான்...

மனநாளும் வந்தது...

சான்வி
19-10-2011, 07:00 AM
பகுதி பதினேழு : கர்ணனின் திருமணம்

கர்ணனின் திருமணம் இன்று... திருமணத்தில் போது நமக்கு புரியாத, நாம் அறியாத சடங்குகள் உண்டு ஏராளம்.... அத்தகைய சடங்குகள் எல்லாம் என்ன பொருள் கொண்டு நடக்கிறது என்பதை நான் அறிந்த வரையில் சொல்ல ஆசை... கர்ணனின் திருமணத்தை ஒரு குறை இன்றி நடத்த வேண்டும் அல்லவா???

(எனக்கு தெரிந்தவற்றை சொல்கிறேன்... ஏதேனும் விட்டுப் போனால் எனை வழி நடத்தும் பெரியவர்கள்... என் மீது கோபம் கொள்ளாது... எனை வழி நடத்துங்கள்... நன்றி..)

(நான் அறிந்தவையோடு, அறியாதவற்றை முறைப்படி அறிய வைத்த இணையத்துக்கும் என் நன்றி..)

நாள் நெருங்க நெருங்க... கர்ணனுக்கு பரபரப்பு கூடுகிறது... துரியோதனனுக்கும், பானுமதிக்கும் திருமணம் ஒரு சிறு குறை கூட இன்றி நடக்க வேண்டுமே... என உள்ளம் கிடந்தது அடித்துக் கொள்ளுகிறது... இப்போது அவர்கள் இடையே நடக்கும் உரையாடல்...

பானுமதி : (பரபரப்பாய் அமைதி இன்றி காணப்பட்ட தன் கணவரை நோக்கி) சுவாமி.. எதிரிகள் அவரை எதிர்கொள்ளும் போதும் தங்களை நான் இப்படிக் கண்டதில்லையே???

துரியோதனன் : கர்ணன் திருமணத்தை ஒரு குறைவின்றி நான் நடத்த வேண்டும் பானு...

பானுமதி : குறை ஒன்றும் வந்திடாது அதிலே... அனைத்தும் நல்லபடி நடக்க என்னால் ஆனா அனைத்தும் நான் செய்கிறேன்... நீங்கள் கலங்க வேண்டாம்...

துரியோதனன் : இல்லை.. கண்ணே... நான் அதை சொல்ல வில்லை... நான் என் நண்பன் நிலையை யோசிக்கிறேன்... பாவம்... பிறந்து முதலே.... இவர்கள்தான் தாய், தந்தை என் எத்துனை மகிழ்வாய், எல்லோரையும் போலே இருந்திருப்பான்...

அவன் அவர்களுக்கு பிறந்தவன் இல்லை என அறிந்த போது எத்துனை வருந்தி இருப்பான்... என்ன காயம் பட்டிருக்கும் அவன் நெஞ்சம்..

நானாய் இருந்திருந்தால்... காணாது போயிருப்பேன்... எத்துனை நெஞ்சுரம் கொண்டவன்... என்ன துன்பம் கொண்டிருப்பான் அவன் நெஞ்சில்... அதை என்றேனும் காட்டினானா வெளியே??

அவனைப் போய் வீசி எறிந்துவிட்டாளே... அவனைப் பெற்றவள். அவள் மட்டும் என் முன் வந்தால் பாரம்மா... நீ வேண்டாம் என விட்டெறிந்த பிள்ளை, எப்படி வளர்ந்திருக்கிறான் பார்... இவன் நண்பன் நான்... எனக் காட்டி பெருமைப் படுவேன்...

என்னிலிருந்து அவன் வேறு என என்னால் பிரித்து நோக்க இயலவில்லை... அவன் மனதில் ஒரு சிறு குறையும் இன்றி நான் இந்த திருமணத்தை நடத்தினாலும்... அவன் மனதில் அந்த அன்னையைப் பற்றிய வேதனை கொஞ்சமேனும் இருக்கும் அல்லவா??? அதனால் தான் வருத்தம்...

பானுமதி : வருந்த வேண்டாம் மஹராஜா, அன்னையைப் போல அன்பைப் பொழிய நீங்களும்.... உடன் பிறந்த தங்கையை அவரைத் தாங்க நானும் இருக்க, அவர் வருத்தம் போக்க நாம் ஆக வேண்டிய அனைத்தும் செய்யலாம்...

சரி.. சரி.. இப்படியே வருந்திக் கொண்டு இருந்தால்... உங்கள் நண்பர் வந்தால்.. அவருக்கு என்ன பதில் சொல்வீர்கள்... போங்கள் மன்னா... போய்.. ஆக வேண்டிய பணிகளுக்கு ஆவன செய்யுங்கள்...

இப்படி பேசிக் கொண்டு இருக்கையிலே... கர்ணன் அங்கே வருகிறான்...

துரியோதனன் : அங்க தேச அதிபதியே வருக... மன்னவனே வருக...

கர்ணன் : இது என்ன நண்பா... நீயுமா?? தங்கையே... நீயாவது சொல்லக் கூடாதா உன் கணவரிடம்.... என்னை இப்படி எல்லாம் சொல்ல வேண்டாம் என...

பானுமதி : அதுதானே... இப்படியா வரவேற்பது உங்கள் நண்பரை???

துரியோதனன் : பின்னே எப்படி???

பானுமதி : என்னைப் போல வரவேற்கக் கற்றுக் கொள்ளுங்கள்... “கொடை வள்ளலே.. வருக... ஈகையின் செம்மலே வருக....”

கர்ணன் : பலே... அடித்த இடத்தைத் துடைத்து விட்டு, மீண்டும் பலமாய் அதே இடத்தில் அடித்து விட்டாய்.... ஹ ஹ ஹ...

மூவருக்கும் சிரிப்பு வருகிறது...

பானுமதி : ஆமாம் அண்ணா... தங்கள் முகத்தில் ஏதோ ஒரு ஒளி கூடித் தெரிகிறதே... என்ன அது???

துரியோதனன் : ஆம் நண்பா... நாளுக்கு நாள் உன் தேஜஸ் அதிகமாவது என்ன விந்தை???

கர்ணன் : இது என்ன விந்தை???

துரியோதனன் : எல்லாம் இந்தக் காதல் படுத்தும் பாடு...

பானுமதி : இருக்காதா பின்னே... அதுவும் வரப்போகிறவள் இவருக்கு ஏற்ற துணை அல்லவா??? கற்பனையிலே எனக்கு காணத் தெவிட்டவில்லை... அவள் ரத்தத்தை ஓட்ட.. இவர் பின்னே அமர்ந்து செல்வதை...

கர்ணன் : போதும் போதும்... இன்று உன் நகைச் சுவைக்கு நான்தானா அகப்பட்டேன்... இதோ நான் கிளம்பி விட்டேன்...

பானுமதி : எங்கே கல்யாண வேலைகளை கவனிக்கவா??? ஆனாலும் இத்துணை அவசரம் கூடாது அண்ணா உங்களுக்கு...

துரியோதனன் : ஹ ஹ ஹ... கர்ணா... போதுமா உனக்கு???

கர்ணன் : அது சரி தங்கையே... இந்த திருமணம் பற்றி உன் எண்ணம் என்ன??? அதிலே ஏன் இத்துணை சடங்குகள் உள்ளன.

அதன் பொருள் எல்லாம் என்னவென்று எதுவும் தெரியவில்லை... விளக்கிச் சொல்லி எனக்கு விளங்க வைப்பாய் தங்கையே...

துரியோதனன் : சொல்லு தேவி... நானும் கேட்கிறேன்...

பானுமதி : திருமணம் எனும் சொல்லே ஒரு அழகான பொருள் கொண்ட சொல்தான்

திரு – என்றால்... மதிப்புக்குரிய... மரியாதைக்குரிய... என்றும் தெய்வத்தன்மை கொண்டது என்றும் பொருள்.. மணம் - எனும் சொல், வாசனை மற்றும் இணைதல் என்றும் பொருள் தரும். தெய்வீகத் தன்மை கொண்ட இணைதல், இருமனங்களின் இணைதல் என்றும் பொருள் வரும்...

கர்ணன் : அட இந்த விளக்கம் புதிது... சரி.. அதற்கேன் அத்துணை சடங்குகள்???

பானுமதி : சடங்குகள் அனைத்துமே ஒவ்வொரு உள்ளார்த்தம் கொண்டவை..

முதல் சடங்கு பொன் உருக்குதல்... அடுத்து...

கர்ணன் : அதென்ன பொன்னை உருக்குதலா??

பானுமதி : ஆம் அண்ணா... திருமாங்கல்யத்திற்குரிய தங்கத்தை கோவிலில் வைத்து பூசை செய்து பின்னர் ஒரு தட்டில் மங்கல பொருட்கள் அனைத்தும் வைத்து கொண்டு வந்து பூஜையறையில் வைக்கவேண்டும். பொன் உருக்கும் நாள் அன்று அதை மணமகனின் பெற்றோர் அல்லது பெரியோர் எடுத்து மணமகனிடம் கொடுக்க அவர் அதை பொற்கொல்லரிடம் கொடுத்து உருக்கவேண்டும்.

அவர் கும்பம் வைத்து விளக்கேற்றி தூபதீபம் காட்டி, வேண்டிய அனைத்தும் வைத்து தேங்காய் உடைத்துப் பூசை செய்து பொன்னை உருக்குவார். உருக்கியபின் தாய்மாமன் தேங்காய் உடைத்துப் பூசை செய்து அந்த இளநீரை உருக்கிய தணலில் ஊற்றி தீயை தணிப்பார். பின் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம் வைத்து வெற்றிலை மேல் உருக்கிய தங்கத்தையும் வைத்து மணமகனிடம் ஆசாரியார் கொடுப்பார். அதை மணமகன் வந்துள்ள சபையோருக்குக் காண்பித்து, அதன் பின் அந்த கொல்லருக்கு அரிசி, மற்றும் காய்கறியுடன் தட்சணை அளித்து உருக்கிய தங்கத்தைத் திருமாங்கல்யம் செய்ய ஒப்படைக்கவேண்டும்.

கர்ணன் : அடேயப்பா... இவ்வளவு இருக்கிறதா???

பானுமதி : அதுமட்டுமா??? இன்னும் இருக்கிறது நிறைய... கண்ணிக்கால் ஊன்றல், முலைப்பாலிகை போடல், அடுத்து பந்தல் அமைத்தல், மணமகன் அழைப்பு, மணமகன் புறப்படுதல், பெண் புறப்படுதல், மாப்பிள்ளை அழைப்பு, அரசு ஆணைக்கோல் (இது மருவி தற்போது அரசாணிக்கல் என ஆகிவிட்டது), வித்திடுதல் (அங்குரார்ப்பணம்), இரட்சாபந்தனம் (காப்பு கட்டுதல்), மணமகளை அழைத்தல், கன்னிகாதானம், தாலிகட்டுதல், மாலை மாற்றுதல், பால்பழம் கொடுத்தல், கோதரிசனம், கைபிடித்தல், ஸ்பத பதி (ஏழடி நடத்தல்), அம்மி மிதித்தல், கணையாழி எடுத்தல், பொரிஇடல், ஆசிர்வாதம், அட்சதை, என அனைத்தும் முடிந்ததும், மணமக்கள் மற்றும் அவர் பெற்றோரின் கையில் கட்டப்பட்டிருக்கும் காப்புகளை அவிழ்த்து, அத்துடன் தட்சினையும் சேர்த்து, திருமணத்தை குறைவின்றி நடத்திக் கொடுத்த குருக்களுக்கு தர வேண்டும்.

துரியோதனன் : எல்லாம் சரி.. அது என்ன இந்த ஸ்பத பதி??? மீதம் இருப்பவை பேர் சொல்லும் போதே புரிகிறது... இது மட்டும் ஏனோ....

பானுமதி : அதிலும் உண்டு ஒரு சிறப்பு... அது ஏழடி நடத்தல். ஒவ்வொரு அடிக்கும் ஒரு மந்திரம் உண்டு... மணமகன்... மணப்பெண்ணின் வலக்காலை ஏழு அடி எடுத்து வைக்க வேண்டுமாம்...

முதல் அடி : உனக்கு வாழ்வில் உண்ணும் உணவில் குறைவின்றி இருக்க இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும்

இரண்டாம் அடி : உடல் நலம் சிறந்து இருக்க, இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும்

மூன்றாம் அடி : நீ குறை இன்றி விரதத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும்

நான்காம் அடி : நல்ல சுகமும், மன சாந்தியும் கிடைக்க இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும்

ஐந்தாம் அடி : பசுக்கள் போன்ற தூய்மையே உருவான பிராணிகள் பின் தொடர்ந்து வரட்டும்

ஆறாம் அடி : சகல சௌபாக்கியங்களும் உனக்கு கிடைக்க இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும்

ஏழாம் அடி : உன் வாழ்வில் இடம்பெறும் சுபகாரியங்கள், ஹோமங்கள் அனைத்தும் நல்லபடி முடிய இறைவன் உன்னை பின் தொடர்ந்து வரட்டும். எழடிகள் நடந்த நாம் இருவரும் நண்பர்கள் ஆனோம். எது வந்தாலும் இருவரும் சேர்ந்து அனுபவிப்போம்.

என்று பொருள் தருமாம் அந்த மந்திரங்கள்...

கர்ணன் : சரி இந்த அட்சதை என்பது மஞ்சள் கலந்த அரிசிதானா???

பானுமதி : ஆமாம் அண்ணா. அதைத்தான் அறுகரிசி என்பார்கள். முனை உடையாத பச்சரிசி, அறுகம்புல், மஞ்சள் மாவு இவை கலந்த கலவையே அறுகரிசி... இதை திருமணத்திற்கு வருகை வந்தவர்கள் அனைவரும், இரு கைகளால் அள்ளி, மணமக்கள் மேல் தூவி, ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் சூழ பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவார்கள்...

துரியோதனன் காலைப் பார்த்து கேட்கிறான் கர்ணன் (அப்போ துரியோதனன் மெட்டி போட்டு இருந்தார் என் கற்பனையில்...)

கர்ணன் : ஆண்கள் ஏன் மெட்டி போட வேண்டும்???

பானுமதி : பெண்கள் மணமானவர்கள் என்பதைக் குறிக்க பெண்கள் நெற்றியில் அதாவது தலை வகுட்டின் ஆரம்பத்தில் குங்குமம் இடுவது வழக்கம்... நிமிர்ந்து நடக்கும் ஆணுக்கு, தன் எதிரே வரும் பெண், மணம் ஆனவள்... தவறான கண் கொண்டு காணக் கூடாது என்பதைக் காட்ட...

அதுபோல, தலை குனிந்து நடப்பவள் பெண்... எனவே தன் எதிரே வரும் ஆண்மகன் மணம் ஆனவன், இன்னொரு பெண்ணின் கணவன் என்பதைக் குறிக்க ஆண்கள் மெட்டி இடுவது மரபாயிற்று...

கர்ணன் : பலே... பலே... முன்னோர்கள் சொன்னவை எல்லாம்... உள்ளார்த்தம் கொண்டவை தான் இல்லையா???

துரியோதனன் : அது சரி... மாங்கல்யம் கட்டுகையில் இந்த மூன்று முடிச்சு போடுவதில் ஏதும் கருத்து உள்ளதா??? கூடவே மங்கள வாத்தியங்கள்.. அப்போது மட்டும் காதைக் கிழிக்கும் வண்ணம் இசைக்கப்படுவது ஏன்???

பானுமதி : அதற்கும் உண்டு அர்த்தம்.

முதல் முடிச்சு – நீ எனக்கும், நான் உனக்கும் கட்டுப்பட்டவர்கள்
இரண்டாம் முடிச்சு – நீ என் பெற்றோருக்கும், நான் உன் பெற்றோருக்கும் கட்டுப்பட்டவர்கள்
மூன்றாம் முடிச்சு – நாம் இருவரும் இந்த திருமணம் என்ற பந்தத்திற்கு கட்டுப் பட்டவர்கள்

என்றும் பொருள் கொள்ளலாம்...

கர்ணன் : சரி.. அந்த மங்கள வாத்தியங்கள்....

பானுமதி : ம்ம்ம்... சொல்கிறேன்... சொல்கிறேன்... சபையில் உள்ளோர் தும்முதல், மற்றும் அபசகுனமாக பேசுதல் இவை எதுவும் மணமக்களுக்கு கேட்காதவாறு இருக்கத்தான்... வாத்தியங்கள் அப்படி இசைக்கப்படுவது...

இப்படியாக பேசி முடித்து.. ஆக வேண்டிய காரியங்கள் எல்லாம் நல்ல படி முடித்து, மண நாளும் வந்தது....

எப்போதுமே... காண்பவர்களின் கருத்தை நிறைப்பவன் கர்ணன்.... மண நாள் அன்று சொல்லவும் வேண்டுமா???

தூய வெண்பட்டு உடுத்தி... பொன்னால் ஆபரணங்கள் பல பூண்டு, வாசனை திரவியங்கள் மணம் கமல... அலங்கரித்த பளிங்குச் சிலையாய்... சபைதனில் அவன் நடந்த பாங்கில்... காற்றும் அசையவில்லை ஒரு நிமிடம்.... என்ன அழகு... என்ன ஒளி, என்ன ஒரு காந்தம் அவன் பார்வையில்....


பளிங்கு சிலையே, உன் பார்வை
ஒரு கலையே.. உனைக் கண்ட
நிமிடம், உயிர் பெற்ற யாவரும்
ஆயினர் சிலையே....

கம்பீரம் உன் நடையே, உன் அழகு
உனக்கு அணியே... நீ அணிந்த
அணிகலனுக்கும் உன் அழகுதான்
ஒரு அணியே...

பட்டுடித்தி வந்திட்ட பகலவனே,
மேகம் மறைக்கும் சூரியனாய்,
நின் தேகம் மறைக்கும் ஆடைகள்
மலர் மேல் பணியாய் அதுவும்
உனக்கு அணியாய்...

கம்பீரம், தேஜஸ், காந்தி... என அத்தனையும் ஒன்றாய் கலந்த கலவையாய்.. கர்ணன்


அந்தப் பெண் மட்டும் என்ன...


தங்கப் பதுமைக்கு தங்கத்தில்
அணியிட்டால்.. தெரியுமோ என
வைரத்தால், உச்சி முதல் பாதம்
வரை, உற்சவ சிலையாய்
அலங்காரம் கொண்டு...

அத்தனைக்கும் மேலே, நாணத்தில்
சிவந்த முகத்தை அழகாரமாய்
கொண்டு... அன்னம் அது தோற்க
அவள் பாதம் மெல்ல தரையில்
பதிக்க...

கான்பவரும் காதல் கொண்டனர்
அவள் அழகில்... மேக வண்ணப்
பட்டு உடுத்தி தோகை அவள்
நடந்து வந்து... மணவறை
சேர்ந்தாள்.....ஆதவனும், நிலவும் அருகே
வராதாமே... யார் சொன்னது...
இதோ.. இங்கே மணவறையில்
இரண்டும் உள்ளதே...

தகதகக்கும் கதிரொளி கொண்டு
இருக்கும் இடத்தை ஜொலிக்க
வைக்கும் கர்ணன் – ஆதவனாய்..

குளிர வைக்கும் ஒளி கொண்டு
இருந்த இடத்தை ஒளியேற்றிய
சுபாங்கி – நிலவாய்...


வந்திருந்தோர் அனைவரும் மனதார வாழ்த்த... அட்சதைகள்... அள்ளி தெளிக்க.... மங்கல இசை எங்கும் ஒலிக்க... மங்கை அவள் இணைந்தால்... கர்ணனின் மனைவியாய் அவன் தனிமையை தகர்க்க....

கர்ணனிடம் பெற்றுச் சென்றவர்கள் அனைவரும் வந்திருந்தனர் அரங்கம் நிறைக்க... அவன் மீது வாழ்த்துக்களை அள்ளி இறைக்க...

அனைவரின் அன்பிலும் கரைந்து நின்றான் கர்ணன்.... அன்பிலே கரைந்த கர்ணனை கண்டு ஆனந்தத்தின் எல்லையிலே தொல்லைகள் இன்றி இருந்தான் அவன் ஆருயிர் நண்பன் ஒரு புறம்...

பெற்ற அன்னையைப் போலே அவனுக்கு அனைத்தும் பார்த்துப் பார்த்து செய்த அவன் தங்கை பானுமதியோ.... இந்தக் காட்சியில் உள்ளம் நிறைந்து, நெஞ்சம் மகிழ்ச்சியில் விம்ம நின்றிருந்தால்.. ஒரு புறம்...

கூடவே அதற்கு கொஞ்சமும் குறையாத சந்தோசத்தில்.. இந்தப் பெண் யார்....

அடிப்பாவி சான்வி..... நீயா???

உன் காதலனுக்கு கல்யாணம்... உனக்கு என்ன இத்துணை சந்தோஷம்????

இப்படி காதலிச்ச கர்ணனை வேற ஒரு பொண்ணுக்கு தாரை வாத்து கொடுத்துட்டு எப்படி உன்னாலே சந்தோஷமா இருக்க முடியுது????

(என் மனசாட்சி தாங்க இந்த சவுண்ட் குடுக்குது...)

அவனை எனக்கு பிடிக்காம விட்டுக் கொடுக்கலே... ரொம்ப பிடிச்சதாலே... அவனுக்கு பிடிச்சதை செஞ்சேன்... இது ஒரு தப்பா??? :)

என்ன ஆனாலும் அவன் என் காதலன் தான்... இப்போதான் எனக்கு அவன் மேல இன்னும் காதல் அதிகம் ஆகுது....

கர்ணன் இன்னும் வளர்வான்....

சான்வி
19-10-2011, 08:22 AM
பகுதி பதினெட்டு : கர்ணன் தேரோட்டியின் மகனா??


கர்ணனின் திருமணம் இனிதே, எந்தக் குறையும் இன்றி நடந்தேறியது... அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில்.... இரவு விருந்து முடித்து சம்மந்திகள் இருவரும் பேச வருகின்றனர்... (இந்தப் பகுதிகளும் கர்ணன் திரைப் படத்தை தவிர வேறு எங்கும் இல்லாததால்.. அவையே இங்கும்... என் கற்பனையுடன் கலந்து... )

அதிரதன் (கர்ணனின் தந்தை) : அனைத்தும் மிக நலமாய் நடந்தன... ஆனாலும் உங்கள் பெருந்தன்மை... சொல்லில் வடிக்க இயலாதது...

சுபாங்கியின் தந்தை : பெருந்தன்மையா?? தாங்கள் என்ன கூறுகிறீர்???

அதிரதன் : ஆமாம்... எளியவன் நான்... உம் போன்ற அரசர்களின் அடிமை... உங்கள் பெருந்தன்மையால் என் குலமும் இனி பெரும் பேரைப் பெற்று விடும்...

சுபாங்கியின் தந்தை : அடிமையா?? என்ன சொல்கிறீர்கள்??? தாங்கள் எனது மருமகன்.. அங்க தேச மன்னர் கர்ணனின் தந்தை அல்லவா???

அதிரதன் : உண்மை.. ஆனால்.. பிறப்பால் நான் தேரோட்டி தானே???

சுபாங்கியின் தந்தை : என்ன??? தேரோட்டியா??? (அதிர்ச்சியும், கோபமும் போட்டி போட்டுக் கொண்டு.. வருகிறது)

அதிரதன் : ஏன்?? துரியோதன மகாராஜா இதை தங்களிடம் சொல்லவில்லையா???

சுபாங்கியின் தந்தை : ம்ம்ம்ம் சொல்லாவிட்டால் என்ன?? அவருக்கு உட்பட்ட சிற்றரசு.. அதனிடம் எப்படி நடந்தாலும் தப்பில்லை... இந்த எண்ணம் பேரரசுக்கு இருக்கத்தானே செய்யும்... ஹ ஹ ஹ... சம்மந்தி அவர்களே.. எப்படியோ புலியும், பூனையும் ஒன்றாகி விட்டது.. அதனால் ஒரு புது சந்ததி உருவாகுமே எனும் உங்கள் புதிய ஆசை.. பலே... இந்தப் புதுமையைக் கேட்கவே எனது உள்ளத்தில் மகிழ்ச்சி கிளர்ந்தெழுகிறது...

நீங்கள் போய் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்...

அதிரதன் உள்ளே செல்லுகிறார்...

சு. தந்தை : தேரோட்டியின் மகன்... என் மருமகனா???

மறுநாள் காலை... கோவிலுக்கு செல்வோம் என சுபாங்கியின் தந்தை கூற, தந்தை, அன்னை, மகள் மற்றும் அவள் தோழி என நால்வரும் ரதத்தில் கிளம்புகின்றனர்...

செல்லும் வழியைக் கண்ட சுபாங்கி... குழம்பி தன் தந்தையிடமே கேட்கிறாள்....

சுபாங்கி : தந்தையே கோவிலுக்கு போகலாம் என் புறப்பட்டீர்களே... ஊரைதாண்டி ஆயிற்று... நாம் எங்கே போகிறோம்???

தந்தை : ம்ம்ம்... நம் நாட்டுக்கு...

சுபாங்கி : அப்பா...

தந்தை : அலறாதே... மகளே.. கர்ணன்... உன் கணவன்.. ஒரு தேரோட்டியின் மகன்.... அந்த உண்மையைக் கூறாது மறைத்து.. ஒரு ஷத்திரியன் மகளை மணந்து விட்டான்..

சுபாங்கி : அதனால்???

தந்தை : உன்னைத் தீண்டும் தகுதி அவனுக்கு இல்லை.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என எண்ணி எண்ணி வருந்தி, அவன் அழியட்டும்... அதுதான் அவன் செய்த செயலுக்கு தண்டனை..

அன்னை : அப்படி என்றால் என் மகளின் கதி???

தந்தை : மனந்தவனை மறக்க வேண்டியதுதான் உன் மகளின் விதி...

அன்னை : அய்யயோ.. இது என்ன அநீதி??

தந்தை : தேவி, உன் மகளோடு சேர்ந்து நீயும் அழு... நானும் அழுகிறேன்... ஆனால் என் மகளை மட்டும் அவனோடு சேர்ந்து வாழ் விடவே மாட்டேன்... இது உறுதி

சுபாங்கி : அப்பா, என் உயிரே அவர்தானப்பா... தேரை நிறுத்துங்கள்... நான் இறங்கி நடந்தேனும் என் தெய்வத்தை அடைகிறேன்...

தந்தை : அது மட்டும் நடக்காது மகளே... மானம் தான் எனக்குப் பெரிது... அதற்காய் நீ செய்யும் தியாகம் தான் அவனை மறப்பது...

சுபாங்கி ரதத்தில் இருந்து இறங்க எத்தனிக்க, அவளை இழுத்து அமர வைக்கிறார் அவளது தந்தை...

சுபாங்கி : அம்மா.. எனக் கதறி அவளது அன்னை மடியில் விழுகிறாள்...

அழுது கொண்டே ஊர் வந்து சேர்கின்றனர்...

அரண்மனையை அடைந்ததும், மகளைக் கீழே தள்ளி... இவளை உள்ளே அழைத்துப் போ என்கிறார் தந்தை...

அவமானத்தில், கோபத்தின் உச்சியில் இருக்கிறார் பெண்ணைப் பெற்றவர்....

குதிரை தின்ற மிச்சக் கொள்ளை உன்ன வேண்டியவன், தேனை அருந்த ஆசைப்படலாமா??? என உள்ளுக்குள் புகைந்து கொண்டு இருக்கிறார்...

வருகிறார் நம் கதா நாயகன் அங்கே...

கர்ணன் : சுபாங்கி... சுபாங்கி... (என அவளை அழைத்துக் கொண்டே வந்தவன் அங்கே குறுக்கும், நெடுக்குமாய் நடந்து கொண்டு இருந்த அவள் தந்தையைப் பார்த்து..) மாமா...

சு. தந்தை : மாமன்?? யார் அவன்??? மாமனாக்க விரும்பியவன் யார் அவன்??

கர்ணன் : மாமன் – யார் அவன் ?? மகளைக் கொடுத்தவன். மாமனாக்கியவன் - யார் அவன்?? – மகளை மணந்தவன்

சு.தந்தை : இரண்டு தவறு.. அதை எடுத்துச் சொல்ல உன்னால் முடிந்தது.. ஆனால் அந்த அளவுடன் உன் வாய்த்துடுக்கு முடியட்டும்... என் கோவம் எல்லையைத் தாண்டும் முன் போய்விடு..

கர்ணன் : போவதா?? எங்கே???

சு. தந்தை : இது மன்னன் வசிக்கும் இடம்... உன் போன்ற தேரோட்டி நிற்க வேண்டிய இடம் நடுத்தெரு...

கர்ணன் : பெரியவரே... சற்றே அடக்கத்துடன் பேசுங்கள்... நான் இப்போது அரசன் (கம்பீரமாய் தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்று கர்ணன் சொல்கிறான்)

சு. தந்தை : என்னதான் கர்ஜித்தாலும் பூனை புலியாக முடியாது... உன் ரத்தத்தில் அரசு ஓடவில்லை.. தேர் தான் ஓடுகிறது..

கர்ணன் : அனைவர் ரத்தமும் சிவந்து தான் ஓடுகிறது...

சு. தந்தை : ஆணவக்காரன். இப்படி எல்லாம் பேசி என் குல தர்மத்தை நீ குலைக்க முடியாது... மன்னன் மகளை, ஒரு மன்னன் மரபில் வந்தவன் தான் மணந்திருக்க வேண்டும்...

கர்ணன் : அதை மணக்கும் முன் யோசித்திருக்க வேண்டும்...

சு. தந்தை : தவறுதான்... என் மகள் வாழ்வற்றுப் போனாள்... நான் செய்த தவறுக்கு பலன் அது... இத்தோடு இந்த வழக்கு முடியட்டும்..

கர்ணன் : இறக்கும் வறை என் வாழ்வோடு இணைக்கப்பட்ட வழக்கு அது... நீங்கள் நினைப்பது போல அவ்வளவு எளிதாக முடியாது...

சு. தந்தை : முடியத்தான் வேண்டும்.. குலத்தால் சிம்மம் நான்.. குதிரை நீ... நான் தேர் ஏற விரும்பினால்... நீ அந்த தேரை ஓட்ட வேண்டும்... உன் நிலை என்னவென்று உனக்குப் புரிந்ததா???

தேரோட்டி, போய் விடு இங்கிருந்து...

கர்ணன் : கொதித்துப் போகிறான் இந்த பேச்சில்...

வெறி ஏறி நிற்கும் மன்னா, மகளின் வாழ்வு வீழ்ந்தாலும், குல பெருமை என வெறும் பேச்சு பேசும் மன்னா, இதற்கு இப்போதே ஒரு முடிவு வேண்டும்...

உன்னோடு என் உறவு இன்றுடன் முடிந்தது... உன் மகள் என் மனைவி அவள்... அவள் எனக்கு சொந்தம்... அனுப்பு அவளை என்னுடன்... கண்களில் அனல் பறக்க கர்ணன் அவரிடம் கூற, அதற்கு அவர்...

சு. தந்தை : ஹ ஹ ஹ ஹ... உறுமி விட்டான்.... ஹ ஹ ஹ தேரோட்டி... போய் விடு இங்கிருந்து...

கர்ணன் : இல்லை... எடு உனது வில்லை...

சுபாங்கியின் குரல் : அரசே...

கர்ணன் : சுபாங்கி... என குரல் வந்த திசையில் செல்ல எத்தனிக்க...

சு. தந்தை : நில்.. நீ செல்லாதே அங்கே...

கர்ணன் : முன்னமே சொன்னேன் நான் அவள் கணவன்

சுபாங்கியின் குரல் : பெண்ணுக்கு கணவன் பெரிதல்ல... பிறந்த குலம் தான் பெரிது... இதுவரை வாழ உதவி வந்த தந்தை தான் பெரிது... புதிதாய் வந்த கணவன் பெரிதல்ல..

சொல்லுக்கு செவி சாய்க்கா அரசரே.. வில்லுக்கு இரை ஆக்கி என்ன பயன்?? வீரம் வேண்டுமானால் வெளிப்படலாம்... ஆனால் நீங்கள் நினைக்கும் காரியம் நடை பெறாது... தாங்கள் வந்தது போலே போகலாம்...

கர்ணன் : எனைப் பிரிந்தால், உன் உயிர் பிரியும் என்று சொன்னவளே... அந்த எண்ணத்தை உன்னை விட்டு பிரித்து விட்டாயா?? கணவனுக்கு பின்தான் தெய்வம் என்ற இந்த நாட்டின் பெண் தர்மம்.. உன்னாலா பிழை பட வேண்டும்???

சு. தந்தை : ஹ ஹ ஹ ஹ

கர்ணன், தன் மீது ஆசை கொண்டு வந்தவளை, தான் மனந்தவளை கையோடு அழைத்துச் செல்ல ஆசையாய் வந்தவன்... அவளது இந்த வார்த்தைகளைக் கேட்டு... உடைந்து போகிறான்... உள்ளத்தால்... நொறுங்கிப் போகிறான்...

இதுவரை நான் அறியாதவர் தான்
எனை அவமானப் படுத்தினர். இன்றோ
என் மனைவி, என் உயிரின் சரி பாதி
அவளும் அன்றோ.. எனை அவமானப்
படுத்தினாள்...

அம்மா, என்னைப் பெற்றவளே, எனை
அன்றே கொன்று போட்டிருந்தால் இந்த
நிலை எனக்கு வந்திருக்குமா???

நான் என்னம்மா தவறிழைத்தேன்... எனை
நீ வெறுத்து ஒதுக்க... அன்று நீ துவக்கி
வைத்தது.. இன்று வரை ஓயவில்லை..

என் வாழ்வில் வரும் அத்துணை பெரும்
எனை ஏளனம் செய்தால் நான் என்னதான்
செய்வேன்... அத்துணை பாவமா நான்
செய்தேன்?? அறிந்து செய்தேனா?? அறியாமல்
செய்தேனா?? ஆயிரம் முறை அனுபவிக்கிறேன்
உள்ளம் அறுக்கும் வேதனையை... ஐயோ....


இன்னும் வருவான்...

சான்வி
19-10-2011, 08:24 AM
பகுதி பத்தொன்பது : என் மன்னவன், என் காதலன்

தனது மாமனார் மற்றும் மனைவியால் அவமானப் படுத்தப்பட்டு... கடும் சினத்துடன் தன் அரண்மனைக்கு வந்து சேருகிறான் கர்ணன். இனி அங்கே நடப்பவை...

பணியாளர்கள் மற்றும் அந்த அரண்மனையில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாய்.. பேசிக் கொண்டே தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்... புயல் போல உள்ளே நுழைகிறான் கர்ணன்

ஒரு சேவகன் : மன்னா, மகாராணி அவர்கள்....

கர்ணன் : இடையிட்டு... போய்விடு அந்தப் பக்கம்.... (என்று எரிச்சலாய் மொழிந்து விட்டு, தன் அறைக்குச் செல்கிறான்)

நன்கு மலர்களால் அலங்கரிக்கப் பட்ட அறை... பாலும் பழமும் ஒரு பக்கம் இருக்க.. குளிர் நிலவோ வானிலே இருக்க... இவன் மட்டும் நெஞ்சம் நிறைய வேதனையில் இருக்க...

அப்போதும் தனை ஆற்றிலே விட்டு விட்ட அன்னையை நினைத்து கண்களில் நீர் வழிகிறது... அதை துடைக்கத் தோன்றாது அவன் துக்கத்தில் இருக்க, மலர் அரும்புகள் பல அவன் மீது விழுகின்றன... திரும்பிப் பார்க்க அங்கே... சுபாங்கி...

அவளைக் கண்டதும் உடனே மகிழ்ச்சி, நெகிழ்ச்சி... பின்னர் வருகிறது அடங்காத கோபம்...

கர்ணன் : நீயா?? எங்கே வந்தாய்...

சுபாங்கி : நானேதான் ... என் இடம் வந்தேன்...

கர்ணன் : அங்கே உன் தந்தையின் முன்னே என்னை அவமானப் படுத்தி விட்டு இங்கே எங்கு வந்தாய்???

சுபாங்கி : இந்தப் பாலை அருந்துங்கள்...

கர்ணன் : பயப்படாதே... ஒரு பெண்ணிடம் என் வீரத்தை காட்டும் அளவு நான் கோழை அல்ல... நான் அமைதியாகச் சொல்லும் போதே போய்விடு இங்கிருந்து...

சுபாங்கி : எங்கே போவேன் நான்.. என் மன்னவன், நீங்கள்... நான் இங்கேதான் இருப்பேன் (சென்று கர்ணனின் அருகில் அமர்ந்து கொள்கிறாள்)

கர்ணன் : இது நல்ல மனைவிக்கு அழகு.. ஆனாலும் அங்கே அத்துணை பேசிவிட்டு இப்போது எங்கே வந்தாய்... சென்று விடு... என அவளை கீழே தள்ளுகிறான்...

சுபாங்கி : (அழுகையுடன்) அங்கே நடந்தது ஒரு நாடகம்... அப்படி பேசியது கூட நான் இல்லை.. என் தோழி மங்களா...

கர்ணன் : மங்களாவா??? கோபம் குறைந்து முகம் சற்றே தெளிகிறது...

சுபாங்கி : ஆமாம். அவள் என்னைப் போலவே பேசும் திறம் கொண்டவள்... (இன்னும் அழுது கொண்டே இருக்க, கர்ணன் அவளிடம் செல்கிறான்..)

கர்ணன் : சுபா... சுபா... பெண்ணுக்குள்ள சிறப்பெல்லாம் உன்னகத்தே கொண்டவளே... கோபம் கொண்ட கணவனிடம் இருந்து, குணம் கெட்ட தந்தையைக் காத்தாய்

சுபாங்கி : காரிய வெற்றிக்காக அந்த வழியைக் கையாண்டேன்... வெற்றி எனதுதான்.. ஆனாலும் நான் கையாண்ட முறைக்காக என்னை மன்னியுங்கள் பிரபு...

கர்ணன் : மன்னிக்கிறேன்.. மன்னிக்கிறேன்... எப்படி மன்னிக்க வேண்டும் உன்னை??? (இருவருக்கும் சிரிப்பு வருகிறது... ) (அப்பாடா சமாதானம் ஆயட்டாங்க பா... )

அது சரி.. நீ எனக்கு முன்னே இங்கே எப்படி வந்தாய்...

சுபாங்கி : என்ன, அப்படி கேட்டு விட்டீர்கள்... நான் தேரோட்டி நீங்கள் பார்த்ததில்லையா??? (பெருமையாய் தலை உயர்த்திக் கேட்கிறாள்..)

கர்ணன் : பார்த்திருக்கிறேன்... பார்த்திருக்கிறேன்... அடங்காத தேரோட்டத்தை, வெள்ளோட்டம் பார்த்த பின் தானே நான் உன்னையே பார்த்தேன்... ஹ ஹ ஹ

அதை மறப்பேனா நான்???

சுபாங்கி : போதும் உங்கள் பரிகாசம்... நான் தேரோட்டுவதில் என்ன தவறு... நான் தான் இப்போது தேரோட்டியின் மனைவி ஆகிவிட்டேனே...

இதுவரை... மந்தகாசமாய் புன்னகை அளித்த கர்ணனின் முகம்... தீ பட்டார் போல சுருங்கி... களை இழந்து போனது...

சுபாங்கி : ஏன்... ஏதாவது தங்கள் மனதை வருந்தச் செய்துவிட்டேனா???

கர்ணன் : சுபா.. கணவனை தேரோட்டி என நீ பெருமையைச் சொல்லுகிறாய்... ஆனால் மற்றவர் என்னைக் காயப்படுத்துவதே அந்த வார்த்தையைக் கொண்டு தான்...

ஷத்ரியனுக்கு உரிய வீரம் இருந்தும், பிறப்பரியா காரணத்தால்.. இழிகுலத்தான் என எல்லோரும் ஏசுவதைத்தான் என்னால் தாள முடியவில்லை..

சுபாங்கி : சுயநலமிகள் அப்படி பேசிவிட்டுப் போகட்டும்... குலம் எதுவானால் என்ன, இல்லை என்று சொல்லாத உங்கள் குணமும், போரில் யாராலும் வெல்ல முடியாத திறனும் உங்களை விட யாருக்கு உண்டு... எட்டுத் திக்கும் புகழ் பரவும் ஒருவர் அல்லவா நீங்கள்..

கர்ணன் : என் குலம் எக்குலமாயினும் எனக்கு கவலை இல்லை... ஆனால்.. பெற்றவளே என்னை, பேழையில் வைத்து ஆற்றிலே விட்டாள் எனில், என் பிறப்பில் என்ன இழுக்கு இருக்குமோ எனும் எண்ணம், என்னை வாழ விடாது செய்கிறது சுபா.

சுபாங்கி : கருனைக்குத் தாய் உள்ளம் என்பார்கள்.. ஆனால் ஒரு தாய் செய்த அநீதி நம் தலை மீது வந்து விடிந்தது... அதற்காக நீங்கள் ஏன் வருந்த வேண்டும்?? பிறர் தயவால் வாழ வேண்டிய நிலை இல்லையே நமக்கு.. பின் என்ன பயம்??

கர்ணன் : பயம் வேறு... மான உணர்ச்சி வேறு...

சுபாங்கி : என்னால் புரிந்து கொள்ள முடிகிறது... ஆயிரம் தான் நான் ஆறுதல் சொன்னாலும், என் தந்தையே என் கணவரை தாழ்த்திப் பேசிய போது, என் உடலும், உள்ளமும் கொந்தளித்துக் கொண்டுதான் இருந்தது... என்ன செய்வது... (அழுகை)

கர்ணன் : அவள் அழக் கண்டு இவனுள்ளும் வேதனை... என்னால் உன் மனம்படும் வேதனையைக் கண்டாயா??

சுபாங்கி : உங்கள் வேதனைக் கண்டு நான் படும் வேதனை அல்ல இது.. உத்தமருக்கு இப்படி ஒரு சோதனையா??? சத்தியம் ஒரு நாள் உங்கள் நிலையை இந்த சமூகத்துக்கு உரைக்காதா எண்ணும் ஆதங்கம் இது... அதை விடுத்து வேறு வேதனை என்ன எனக்கு???

கர்ணன் : உண்மை... நானாகி விட்டவள் நீ...

சுபாங்கி : என் உயிர் நீங்கள்.. நான் அருந்தும் தேன் உங்கள் வாக்கு... நான் காணும் வான் உங்கள் பார்வை... நான் நாடும் கோவில் உங்கள் இதயம்...

கர்ணன் : ஆஹா... இனிக்க இனிக்கப் பேசி, கனியக் கனியக் காணும் என் கண்மணியை, குலம் எண்ணும் பெயரால் என்னிடம் இருந்து பிரிக்க இருந்தனரே.... (என வருந்துகிறான்)

சுபாங்கி : பிரபு... குலம் என்பதும் இனம் என்பதும் பிறப்பைக் கொண்டு அறியப்படுவது இல்லை... வானுக்குள் இல்லை பேதம், விளக்குக்கு இல்லை இருள்... வீரத்தில் இருதுதான் குலம் பிறக்கும், அதில் மேல் என்றும் கீழ் என்றும் எங்கே இருக்கும்???

கொடுக்கும் கரங்கள் மேல் இருக்கும், பெறுபவர் கரம் தான் கீழ் இருக்கும். கொடுப்பவர் என்பது நீங்கள் அல்லவா??? தருமத்தின் தாயே கலங்காதீர்...

கர்ணன் : ஆஹா... என்னவளே.. என் உயிரே... என் மனதை அமைதிக்கு ஆட்படுத்தி, எனை மகிழ்ச்சிக்கு உட்படுத்த, உயிர் பெற்று வந்தாயா???


நீ இல்லாத இத்துணை வருடமும்
ஒரு நிமிடமாய்த் தான் போனதே...
இனி நீ இன்றி ஒரு நிமிடமும் என்
வாழ்வு நகராதே..

நான் நாடும் சொர்க்கம் நீ, என்
வாழ்வு உன் பக்கம் இனி...

என் மகிழ்ச்சியின் அகராதி நீ
என் காதல் ரதி நீ...

என்னவளே, என் பொருட்டு உன்னை
பெற்று வளர்த்து ஆளாக்கிய உன்
தந்தையைக் கூட எதிர்த்து வந்தாயே

உள்ளம் உருக்கிய உன் இந்த அன்புக்காய்
மன்னித்தேன் உன் தந்தையை... உனக்காய்


என கர்ணனின் என்ன ஓட்டமும்....


என் உள்ளத்தின் இஷ்ட தெய்வமாய்
உம்மை நான் பிரதிஷ்டை செய்து ஆனது
காலங்கள் பல...

அன்றிலிருந்து இன்று வரை கூடும்
இந்த அன்புக்கு எது தடை???

எத்துனை துயரம் அடைந்தாயோ
என்னவனே... என் அன்பின் மன்னவனே

பெற்றவள் உன்னை ஆற்றில் விட்டால்
என்ன? உன் உற்றவள் நான் உன்னை
எதன் பொருட்டும் நீங்கேன்... உன் துயர்
போக்காது தூங்கேன்...

சத்தியம் ஒரு நாள் வெல்லும்... அன்று
உள்ளார்ந்து ஒளிரும் உன் முகத்தைக்
காண காத்திருக்கேன் நானும்...

அதுவரை, உன் மனம் நோகாது, உன்
மலர் முகம் சுருங்காது, மலர்ந்திருக்க
வைத்திருப்பேன் நானும்...என அவன் வேதனையை நீக்கும் வடிகாலாய்... அவள் மனமும் இருக்க.... காலங்கள் போகிறது...


கர்ணன் இன்னும் வருவான் ....

சான்வி
19-10-2011, 08:27 AM
பகுதி இருபது : யார் பாக்கியசாலிஇந்தப் பகுதியில், கர்ணனும், சுபாங்கியும், தாங்கள் இருவரும், ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கின்றனர் என்பதை சொல்ல ஆசை... கற்பனைதான்...

கதிரவனிடம் இருந்து ஒளி பெற்று நிலவு ஒளிர்கிறது என நாம் படித்ததுண்டு... ஆனாலும் நிலவிடம் ஒளி பெற்று கதிரவன் ஒளிர்வதாய் நான் அறிவது இப்போதுதான் முதல் முறை..

கொதிக்கும் சூரியனாய், எரிக்கும் பார்வையுடன், மனதால், எளிதில் நெருங்க இயலாத தொலைவிலே அனைவரையும் நிறுத்தி வைத்தவன், தன் மனதை இரக்கத்துக்கும், ஈகைக்கும் மட்டும் திறந்து வைத்தவன்... இன்று இருந்த நிலை... அவனுக்கே புதிது...

அரண்மனையிலும் அவன் நேரம் தவறாமைக்கும், சொன்னதை, சொன்னது போல் செய்வதற்கும் பெயர் போனவன். நேரம் தவறி நடக்கும் எதையும், காணச் சகியாதவன்... தாமதமாய் வந்து, தயங்கிய பணியாளை... இல்லத்தில் சுகமில்லை எனும் காரணம் சொன்னவனுக்கு, விடுப்புடன் பொன் முடிப்பும் கொடுத்து இல்லாளை கவனிக்க அனுப்பினான்...

அனுப்பியவன் சிந்திக்கிறான்... இதற்க்கு முன்னும் இந்த காரணங்கள் நான் கேட்டிருக்கிறேன்... ஆனாலும் இது போல அவனுக்காய் யோசிக்க தோன்றவில்லையே... என ஆழ்ந்த சிந்தனையில்...

சுபாங்கி : என்ன சிந்தனை பிரபோ...

கர்ணன் : எல்லாம் நல்ல சிந்தனை தான்...

சுபாங்கி : புரியும்படி சொன்னால்தான் என்னவாம்???

கர்ணன் : என்னைப் புரிந்தவள், என்னுள் பல மாயம் புரிந்தவள், இது புரியவில்லையா???

சுபாங்கி : போதும் பரிகாசம்... சொல்லுங்களேன்...

கர்ணன் : நீ இப்படிச் சொல்லக் கேட்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி.. நான் சொல்வதில் இல்ல...

(அச்சோ... என்ன வெட்கம்??? கன்னம் ஆப்பிள் நிறத்துல ஆய்டிச்சே...) கண் நோக்கிய பெண்ணோ இப்போது மண் நோக்க...

மண் நோக்கிய அவளை மன்னன் நோக்க...

முகம் திருப்பி... அவள் நிற்க...

மறுபக்கமும் சென்று மன்னவன் அவள் முகம் நோக்க...

நாணமும், காதலும் போட்டி இட... அவள் மன்னன் முகம் காண...

படபடக்கும், இரு வண்ணத்துப் பூச்சி அவள் கண்களிலே... செங்காந்தள் நிறம் அவள் கன்னத்திலே... தறி கேட்டு ஓடும புரவி அவள் எண்ணத்திலே...

காற்றில் ஆடும் சருகாய் அவள் இதழ்கள்... அவள் மன்னவன் முகம் நோக்க...

வழிய வழிய காதலை விழி வழி இவள் இதயம் நுழைக்கும் முயற்சியில் கர்ணன் கண்கள்... உலகிலே தனக்கு மிகப் பிரியமான பொருளை நோக்கும் விதமாய் அவன் பார்வை... தொட்டால் வலிக்குமோ என மெலிதாய் வருடும் மயிலிறகாய்.. அவன் தீண்டல்...

தாங்க முடியா சுமையால் மூடின அவள் இமைகள்...

(ஓகே ஓகே... திட்டாதீங்க... வந்துட்டேன் பா... )

பக்கத்து நந்தவனத்தில் கேட்ட குயிலோசையில் கலைந்தன அவர்கள் சிந்தனை...

கர்ணன் : சுபா...

சுபாங்கி : ம்ம்ம்ம்

கர்ணன் : உறங்கி இருந்த என் உணர்வுகளுக்கு எல்லாம்.. உயிர் கொடுத்த என் உயிரே... நீ இன்றி இனி இருந்திடுமோ என் உயிரே???

சுபாங்கி : என்னுள்ளே பெண்மையை.. உயிர்பித்தவர் நீங்கள்... காதலை உயிர்வித்தவர் நீங்கள்... என் உயிரே உறைந்திருக்கும் என்னுயிர் நீங்கள்..

கர்ணன் : என் நிலவு நீ...

சுபாங்கி : என் வானம் நீங்கள்..

கர்ணன் : என் சுவாசம் நீ...

சுபாங்கி : என் மனதின் வாசம் நீங்கள்...

கர்ணன் : தாமரை மலர் நீ...

சுபாங்கி : எனை மலர்விக்கும் ஆதவன் நீங்கள்...

கர்ணன் : நிலவுக்கும், உனக்கும் வேறுபாடு தெரியவில்லை எனக்கு...

சுபாங்கி : உங்களிடம் ஒளி பெரும் நிலவு தானே நான்...

கர்ணன் : கண்ணே...

சுபாங்கி : மன்னா...

கர்ணன் : மென்மையான உணர்வுகள் மரத்துப் போன மரம் நான் என இருந்தேன்... நீ என் வாழ்வில் நான் அருந்தத் திகட்டாத தேன்...

சுபாங்கி : மரத்துப் போன உணர்வுகள் அல்ல அவை.. மறந்து போனவை... உம்மை விட்டு ஒதுங்கி இருந்தவை...

கர்ணன் : ஒதுங்கியனவா??? என்னிடம் இருந்தா???

சுபாங்கி : இல்லை.. இல்லை... பதுங்கியவை.... உங்கள் வீரம் கண்டு...

கர்ணன் : ஹ ஹ ஹ.... இப்போது மட்டும் வருவானேன்??? என் வீரம் மட்டுப் பட்டதா???

சுபாங்கி : மட்டற்ற வீரம் உம்முடையது... அது மட்டுப் பட வில்லை... அன்பினால் கட்டுப் பட்டது...

கர்ணன் : உண்மை... கட்டுண்டு கிடப்பதும்.. சுகம் தான் போலும்.....

சுபாங்கி : உங்கள் அன்பினால் நானும் கட்டுப் பட்டுப் போனேன்.... தேடி அலைந்து நான் கண்ட தேவாமிர்தம் நீங்கள்...

கர்ணன் : தேன்மதுரம் உன் பேச்சு...

சுபாங்கி : தீங்கிழைக்கும் உங்கள் பார்வை வீச்சு...

கர்ணன் : தீண்டக் கூடாதா???

சுபாங்கி : தடை தாண்டக் கூடாதா??

கர்ணன் : சம்மதம் தானா???

சுபாங்கி : சொல்லவும் வேண்டுமா???

கர்ணன் : மனதுக்கு இனியவளே, சுகம் தரும் என்னவளே... சுகித்திருப்பேன் உன் அருகினிலே..

சுபாங்கி : அன்பைப் பொழியும் அறுநிதியே, உங்கள் அன்பே என் கவசம்

கர்ணன் : சுபா... கனியக் கனியக் காதல் பேசும் என் கண்மணியே.... என் ஆருயிரே.... நான் இல்லை என் வசம்...

சுபாங்கி : எப்போதும் நான் உங்கள் வசம்..

கர்ணன் : என் வாக்கியம் நீ...

சுபாங்கி : நான் செய்த பாக்கியம் நீங்கள்..

கர்ணன் : குளிரும் நிலவே, குறிஞ்சி மலரே... குறை இன்றி வைத்திருப்பேன் உன்னை...

சுபாங்கி : ஒளிரும் கதிரே, ஓய்வில்லாப் பகலே... உம்மருகே நான் இருக்க குறை என்ன எனக்கு???

கர்ணன் : சுபா... சுபா... எனைக் குளிர்விக்கவே வந்த குங்குமமே... பாதம் பதிக்கும் பங்கையமே... நீ என் வாழ்வில் ஒரு நித்திய உதயம்

சுபாங்கி : நான் வாழ வேண்டுமே.. உங்கள் இதயம்...

கர்ணன் : தந்தேன் என் தாமரையே... நீ வாழத்தான் என் இதயம்...

சுபாங்கி : நீங்கள் என் இதய வானின் உதயம்...

கர்ணன் : இதைத்தான் நான் அப்போது சிந்தித்துக் கொண்டு இருந்தேன்.. என்னையே கொஞ்சம் நிந்தித்துக் கொண்டு இருந்தேன்...

சுபாங்கி : எதைப் பற்றியது உங்கள் சிந்தனை?? அதற்கு ஏன் நிந்தனை???

(கர்ணன் பணியாள் பற்றி சொல்கிறான்..)

சுபாங்கி : அதனால்???

கர்ணன் : இதுவரை நான், என் பணிகள் நேரம் தவறாது நடக்க வேண்டும் என எண்ணியதுண்டு... அதிலே அடுத்தவர் சிரமம் என்பது நான் அறிந்தேன் இல்லை... எனை அறிய வைத்தவள் நீ... என் அரிய பொக்கிஷம் நீ...

சுபாங்கி : என் அன்பின் அகராதி நீங்கள்... என் பொருட்டு உங்களுக்கு எத்துனை அன்பு........................ கண்ணா.....

கர்ணன் : அன்பே...

சுபாங்கி : உலகில் உள்ள அத்துணை உறவுகளும், சொல்லால், மொழியால், பொருளால்... எனை அன்பிலே குளிப்பாட்டியது போல, என் நெஞ்சம் நிறைந்து உள்ளது...

கர்ணன் : நெகிழ்ச்சியில் என் உள்ளம்... வேண்டுவன கேள்... நொடியில் தருகிறேன் உனக்கு...

சுபாங்கி : கேட்கும் முன்னே அனைத்தும் தர நீங்கள் இருக்கையில் வேறென்ன வேண்டும் எனக்கு???

கர்ணன் : ஏதாவது கேள்... நான் உனக்கு தந்தே ஆகவேண்டும்...

சுபாங்கி : என் இன்பம் நாடும் இதயம் அதில் நானே வசிக்க வேண்டும்
என் துன்பம் போக்கும் கரங்கள்... அதன் உள்ளே நான் உறங்க வேண்டும்...
எனை அன்பாய் நோக்கும் விழிகள்... அதன் இமையாய் நான் இருக்க வேண்டும்
என் உயிர் நீங்கள்... அதைக் காக்கும் மெய்யாய் நான் இருக்க வேண்டும்...
உங்கள் கடந்த காலம் அதை பொய்யாய் ஆகும் வலிமை எனக்கு வேண்டும்...
என நான் வேண்ட... வேண்டுவன நிறைய உண்டு...

கர்ணன் : சுபா... என் நலம் நாடும் என் நெஞ்சுக்கு இனியவளே...

சுபாங்கி : இன்னும் நான் வேண்டுவது ஒன்று உண்டு..

கர்ணன் : சொல் கண்ணே...

சுபாங்கி : நான் மேற்சொன்ன எதுவும் எனக்கு இல்லாது போயினும்...

கர்ணன் : ம்ம்ம்ம்

சுபாங்கி : என் மரணத்துக்கு முன்னே... நான் கண்ட கடைசி உயிர் நீங்களாக வேண்டும்.... இந்த வரம் மட்டும் தருவீரா பிரபோ...

கர்ணன் : (கலங்கிய விழிகள்.. கதறும் இதழ்கள்... பதறும் நெஞ்சம்...)

என்ன தவம் செய்தேன் நான் உன்னை என்னவளாய் அடைய.... அன்பே...

என் மரணம் உனக்கு முன் என்றாலும்... நீ எனைக் காணும் வரை என் உயிர் உடல் அருகே உனக்காய் காத்திருக்கும்..

சுபாங்கி : பிரபோ... உங்கள் மரணம் எனும் செய்தி எனைத் தீண்டும் போது.. அது உயிர் அற்ற என் உடலைத்தான் தீண்ட முடியும்...

கர்ணன் : என் உயிரே சுபா....

சுபாங்கி : என் தெய்வமே... பிரபோ...

(கர்ணனுக்கும், சுபாங்கிக்கும் இடையிலான பிரியத்தை சொல்ல இந்தப் பகுதியைத் தொடங்கினேன்... அதைத் தவிர வேறு எதுவும் சொல்ல இயலாமல் போய் விட்டது..)

அடுத்த பகுதியில் இன்னும் ஒரு முக்கிய நிகழ்ச்சியை சொல்ல வேண்டும்... சொல்கிறேன்...

Nivas.T
19-10-2011, 08:29 AM
கொஞ்சநாளாக நான் மன்றம் பக்கம் வர இயலவில்லை, அதனால் நிறைய பக்கங்கள் படிக்க வேண்டி இருப்பதால் விட்ட இடத்திலிருந்து படித்துவிட்டு வருகிறேன்

சான்வி
21-10-2011, 11:08 AM
நானும் இங்கே வந்து சில தினங்கள் ஆகிவிட்டது நிவாஸ்.

நீங்கள் படித்த பின் பின்னூட்டமிடுங்கள். நன்றி

Nivas.T
21-10-2011, 04:31 PM
எனது மடிக்கணினியில் நான் அடிக்கடி விருப்பிப் பார்க்கும் படம் கர்ணன் மட்டும்தான். அதிலும் ராமாராவ் அவர்களின் நடிப்பு பிரமாதப் படுத்தும். உங்கள் எழுத்தோட்டம் படம் பார்ப்பது போலவே இருக்கிறது. காட்ச்சிகள் அனைத்தும் கண்முன்னால். தொடருங்கள் ஆவலுடன் நான்.

பி.கு. பின்னோட்டம் இட முடியவில்லை என்றாலும் படித்துவிட்டாவது செல்கிறேன் :icon_ush:

சான்வி
29-10-2011, 06:36 AM
உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு நன்றி நிவாஸ்.

படித்தாலே மகிழ்ச்சிதான். :)

சான்வி
29-10-2011, 06:41 AM
பகுதி இருபத்தி ஒன்றில் ஒன்று : உண்மை நண்பன் :

பெயரளவிலும், அன்பிலும் மட்டும் அல்ல, ஒரு மன்னனாகவும் கர்ணன் தன் கடமைகளை இனிதே செய்து வந்தான்...

முன்னர் யுதிர்ஷ்டர் ராஜசூய யாகம் செய்திருந்தார். அது போல தானும் செய்ய ஆசை கொண்டான் துரியோதனன். இந்த யாகம் செய்ய ஒரு நிபந்தனை உண்டு. அந்த யாகத்தை தலைமை ஏற்று நடத்துபவருக்கு பல நாட்டு அரசர்கள் கட்டுப் பட்டு இருக்க வேண்டும்.

தனது ஆர்வத்தை துரியோதனன் கர்ணனிடம் சொல்ல, கர்ணன் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். சுற்றிலும் உள்ள பல நாடுகளுக்கு படை எடுத்துச் சென்று அனைவரையும் வெற்றி கண்டான். கால் வைத்த திக்கெல்லாம் வெற்றி.. வெற்றி... அவனுக்கு....

வெற்றியுடன் திரும்பிய அவனை, ஆரத் தழுவி வரவேற்றான் துரியோதனன்.

ஆனாலும் இந்த யாகத்தை செய்ய புரோகிதர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அந்த யாகம் செய்த ஒருவர் இருக்கையில், வேறொருவர் அதை செய்யக் கூடாது... தர்மர் இருக்கிறார்.. அத்தோடு கூடவே, தந்தை இருக்கையில் தந்தை தான் முன்னின்று செய்ய வேண்டும், எனக் கூறி யாகம் செய்ய மறுத்தனர்.

வேண்டுமானால், அதற்கு ஒப்பான, வைஷ்ணவ வேள்வி செய்யலாம்... எனக் கூறி அதைச் செய்தனர்...

முறைப்படி அனைவருக்கும், அழைப்பு அனுப்பப்பட்டு, அனைவருக்கும் தகுந்த மரியாதை செய்யப்பட்டது....

பெரியவர்கள் அனைவரும் கலந்து கொள்ள, வெகு விமரிசையாய் நடந்தேறியது அந்த வேள்வி. வேள்வியின் வெற்றிக்கு கர்ணனே காரணம் என எண்ணினான் துரியோதன். அவனிடம் இன்னும் ஒரு வேண்டுகோள் வைத்தான்.

போரில் பாண்டவர்கள் அனைவரும் தோற்றதும், தருமரின் மறைவுக்குப் பின், ராஜசூயாகத்தை தனக்காக நடத்தித் தருமாறு கோரினான்.

அப்படி செய்தால், தன் புகழ் மேலும் உயரும் எனும் ஆவல் அவனுக்கு...

அப்போது கர்ணன ஒரு சபதம் செய்தான். “மன்னா, அர்ஜுனனை நான் போரில் கொல்லும் வரை மது மாமிசங்களைத் தீண்டேன். இல்லை என்று வந்தோருக்கு, இல்லை எனும் சொல் என்னிடம் இராது” என்பதே அது.

மகாரதர்களான பீஷ்மர், துரோணர் என
அனைவரும் இருக்க, என்னில், என்
வீரத்திலும், தீரத்திலும், நம்பிக்கை
கொண்ட என் நண்பனே, உனக்காய்
நான் எதையும் செய்வேன். என்
சக்திக்கு அப்பாற்பட்டதானாலும்
என் உயிர் கொடுத்தேனும் அதை
உன் பொருட்டு செய்வேன்...

என் கர்ணனும்

ஆயிரம் சுற்றங்கள் எனை சூழ்ந்து
இருந்தாலும், என் எண்ணங்களை
நான் சொல்லும் முன்னே அறிந்து
என் முன்னேற்றத்துக்காய் பறந்து
என் நாட்டின் எல்லைகள் விரிந்து
என் மகிழ்ச்சியின் விரிந்தது
உன்னாலே... என் உத்தம நண்பனே...

என துரியோதனனும்... மனத்தால்... ஒருவரை ஒருவர் மேலும் மேலும் நெருங்கிக் கொண்டு இருந்தனர்...


பகுதி இருபத்தி ஒன்றில் இரண்டு : நான் தந்தை


அமுதூறும் காதலிலே கர்ணனும், சுபாங்கியும் இருக்க... தேனூறும் செய்தி ஒன்று கர்ணனுக்கு....

சுபாங்கி கருவுற்று இருந்தாள்....

எல்லை இல்லாத மகிழ்ச்சியில் கர்ணன். பிறப்பரியா எனக்கு என் பெருமை சொல்ல ஒரு மகவு.... ஒரு சிறந்த கணவனாய் இதுவரை இருந்தேன். இனிமேல் ஒரு நல்ல தகப்பனாகவும் நான் இருக்க வேண்டும். எனும் எண்ணம் அவன் உள்ளே..

மனைவி அவளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறான். பானுமதியும், துரியோதனனும் அவ்வப்போது வந்து அவள் நலம் விசாரித்துக் கொள்கின்றனர்.

மாதங்கள் உருண்டு ஓடுகின்றன.

புளிப்பான மாங்காய்கள் தான் சுபாங்கியின் விருப்ப உணவு...

ஒரு நாள்.. அவளுக்கு மாங்காயை வெட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்த கர்ணன்

கர்ணன் : சுபா....

சுபாங்கி : ம்ம்ம்ம்

கர்ணன் : நான் ஒன்று கேட்கட்டுமா???

சுபாங்கி : புதிதாய் என்ன சுவாமி... கேளுங்களேன்...

கர்ணன் : நீ கூச்சபடாமல் பதில் சொல்வதானால் கேட்கிறேன்

சுபாங்கி : அப்படி எனில் எனை கூச்சப்படுத்தவே ஏதோ கேட்கப் போகிறீர்கள்... சரி கேளுங்கள்..

கர்ணன் : இப்படி குழந்தையை சுமந்து கொண்டே இருப்பது பாரமாக இல்லையா???

சுபாங்கி : அது, கடவுள் பெண்களுக்கு என்றே கொடுத்த வரம்..

கர்ணன் : அப்படியா???

சுபாங்கி : ஆமாம். அன்பான கணவனின், கருவை உள்வாங்கிய நிமிடம் தொட்டு, அவரையே சிறு குழந்தையாய் பாவித்து, எங்கள் வயிற்றிலே வைத்து, அனைத்து வேலைகளையும், உண்பது, உறங்குவது போன்ற அனைத்தையும், பார்த்து பார்த்து, அந்த சிசுவின் அசைவை உணரும் நொடி இருக்கிறதே... சொல்லில் வடிக்க இயலாத சுகம் அது... சொல்லத் தெவிட்டாத இன்பம் அது.

வேண்டிச் சுமக்கும் வரம் அது. சுமை அல்ல சுகம்...

கர்ணன் : போதும் போதும்... இந்த வரம் உங்களுக்கே இருக்கட்டும் தாயே... ஆளை விடு.. ஹ ஹ ஹ

சுபாங்கி : என்ன தெரியும் உமக்கு. சூல் கொண்ட என்னில் கருவாய் உருக்கொண்டது நீங்கள் தான்..

கர்ணன் : சுபா... என் அன்பே...

சுபாங்கி : நீங்கள் அது போல இல்லையே... என் நினைவே இன்றி நீங்கள் போர்.. போர் என சென்று விடுவது பெருமை தரும் விஷயமாய் இருந்தாலும், நான் வேண்டும் வேளையில், உங்களால் என், என்னருகே இருக்க இயலாதது எனக்கு கொஞ்சம் வேதனை தருகிறது சுவாமி...

கர்ணன் : நீ சுமக்கும் சூல் ஒரு பத்து திங்கள் தானே கண்ணே..
என் நெஞ்சில் உன்னை நான் சுமப்பது நீ அறியாததா பெண்ணே???

சுபாங்கி : பிரபோ...

கர்ணன் : ஆம் சுபா, எனக்காய் உன் தாய், தந்தையரை விடுத்து என்னுடன் வந்தவள் அல்லவா?? நானாய் ஆனவள் நீ. உன்னை நான் நொடியும் நீங்காது உன்னுடனே இருக்கவே விழைகிறேன்.

என்ன செய்ய கடமை இருக்கிறது அல்லவா???

சுபாங்கி : அதை நன்றாய் நான் அறிவேன் சுவாமி.. ஆனாலும் மதிக்கு தெரிவது.. இந்த மட மனதுக்கு தெரியவில்லையே... (கண்ணீர் விடுகிறாள்)

கர்ணன் : (அவள் கண்ணில் நீர் வழிய இவனுக்கோ, நெஞ்சில் குருதி... )

வேண்டாம் கண்ணே, கலங்காதே... இனி உன் பொருட்டு நீ விரும்பும் வரை நான் உன்னோடு இருக்கிறேன்...

சுபாங்கி : என் உயிரே... என் தெய்வமே... (அடடா.. என்ன சந்தோசம் இந்தப் பொண்ணுக்கு)

கர்ணன் : நீ சிரிக்கையில் என் உள்ளம்...

(கர்ணன் திரைப் படத்தில் வரும் காட்சிகள்... கொஞ்சம் வேறுபடலாம்...)


தூதுவன் : பிரபுவுக்கு வந்தனம்

கர்ணன் : ம்ம்ம்ம்ம்

தூதுவன் : மன்னா... சந்திர சைல நாட்டில் இருந்து வந்திருக்கும் தூதுவன் நான். உங்கள் மாமியார் உங்கள் மனைவியை வளைகாப்பு நடத்த அனுப்பி வைக்குமாறு தங்களை கேட்டு ஒரு ஓலை அனுப்பி இருக்கிறார்.

சுபாங்கி : யார் என் அம்மாவா??? ஆர்வமும், மகிழ்ச்சியும் போட்டி இட, தூதுவனைக் கேட்கிறாள்...

தூதுவன் : ஆம் தாயே...

கர்ணன் : சுபா.... என அவளை அடக்கி விட்டு... ஏனப்பா, உங்கள் மகாராணிக்கு, தனக்கு ஒரு மகள் இருந்தது இப்போதுதான் நினைவு வந்ததா???

சுபாங்கி : பாரப்பா... நீ சற்றே ஓய்வெடுத்துக் கொள்...

தூதுவன் : சரி தாயே... என் வெளியே செல்கிறான்

சுபாங்கி : பாருங்கள் பிரபு... சற்றே அமைதியாகக் கேளுங்கள்... காப்பு சூட்டுதல் ஒரு பெண்ணுக்கு அவள் வாழ்வில் கிடைக்கும் பெரும் பேறு.. தாய் இருந்தும் எனக்கு அந்த நலம் கிடைக்கவில்லையே என நான் எண்ணி எண்ணி அழுதிருக்கிறேன். தெய்வமே எனக்கு அருள் செய்ய என் அன்னையின் அழைப்பை அனுப்பி இருக்கிறது.

தாங்கள் தயை கூர்ந்து தடை சொல்லாது எனை அனுப்பி வையுங்கள்.

கர்ணன் : தாயற்ற நான் படும் துன்பம், உன்னையும் தாயற்றவள் ஆக்கத் துணியுமா??? என் உயிரான நீ உலக வழக்கில் இருந்து விளக்கப் படுவதை நான் தான் விரும்புவேனா?? ஏதோ என் இதயம் உன்னை அங்கே அனுப்ப ஒப்பவில்லை..

என் மனதுக்கு இனியவள்.. மனம் வாட ஏதும் நடந்திடுமோ என்ற அச்சம் தான். அப்படி ஏதும் இருந்து விட்டால்... ஆ... நினைக்கும் போதே மான உணர்ச்சி கொந்தளிக்கிறது சுபா...

உத்தரவு தருவது எனக்கு நல்லதாகப் படவில்லை... எனைத் தவறாக நினைக்காதே... மன்னித்துவிடு...

சுபாங்கி : உங்கள் இஷ்டம். கொடுத்து வைக்காதவளுக்கு இந்த முடிவு இயற்கை... என் அழுது கொண்டே சென்று ஒரு பக்கம் அமர்கிறாள்...

அப்போது பானுமதி உள்ளே வருகிறார்...

பானுமதி : சுபா....

சுபாங்கி : மகாராணி... என தாயைத் தேடும் கன்றாய் ஓடிச் சென்று அவளை அடைகிறாள்...

பானுமதி, இவள் பொருட்டு கர்ணனிடம் பேசுகிறாள்..

பானுமதி : அண்ணா, வாயும் வயிருமாக உள்ள பெண்ணை, உயிரும் உள்ளமும் போல போற்ற வேண்டும். பூச்சூட வந்திருக்கும் தாயின் அழைப்பை ஏற்க மறுத்து விட்டீர்களா???

கர்ணன் : ஆமாம். அதனால் தான் இந்த சோகக் கண்ணீர்... ஏன் என்றால் பாசத்தின் மறு அவதாரம் அல்லவா என் மாமன், மாமியார்...

பானுமதி : அண்ணா, சற்று பொறுமையாக கேளுங்கள்... பெற்றோரின் கோபம் என்றுமே நிலைக்காது... அவர்களாக மனம் மாறி வரும்போது அதை தடை சொல்வது அழகும் அல்ல, மரியாதையும் அல்ல.. என் வேண்டுகோள்..

கர்ணன் : இஷ்டம் இல்லை என்பது போல முகம் திருப்ப...

பானுமதி : அல்லது என் உத்தரவு... சுபாவை நீங்கள் மனமார வாழ்த்தி, முகம் மலர போய் வா எனக் கூறுங்கள்...

கர்ணன் : ம்ம்ம்...ம்ம்ம்ம்... நடப்பது நடக்கட்டும்... எனக்கென்று இனி என்ன ஒரு புது அவமானமா வந்து விடப் போகிறது??? என சுபாங்கியின் பக்கம் திரும்பி.. போ..போ...

பானுமதி : ம்..ஹூம்... இதையே கொஞ்சம் இன்பமாக சொல்லி விட்டால் என்ன நஷ்டமாம்???

மகளே, ஒரு குறையும் இன்றி
மனதில் மகிழ்ச்சி நிறைய,
இதுவரை பட்ட வேதனை மறைய,
உன் வாழ்வில் இன்பம் நிறைய..

போய்... வா... மகளே... என ஒரு அன்னையாய் இருந்து அவளை கர்ணனின் ஒப்புதலின் பேரில் வழி அனுப்பி வைக்கிறாள்...அங்கே.. என்ன நடந்தது??? அடுத்த பகுதியில்...

சான்வி
29-10-2011, 06:45 AM
பகுதி இருபத்தி இரண்டில் ஒன்று : மீண்டும் அவமானம் :

பானுமதி வழி அனுப்புகையில் சுபாங்கிக்கு வரவேற்பு இப்படி எல்லாம் இருக்கும் என ஒரு பாடல் மூலம் சொல்லி அனுப்புகிறாள்..

இது போல...

காவலன் சேனை நின்றிருக்கும் - தந்தை
கண்களும் உன்னைக் கண்டிருக்கும்
பாவலர் தோழியர் இசை கேட்கும் அன்புப்
பார்வையெல்லாம் உன்னை வரவேற்கும்


தந்தையின் இல்லம் செல்லும் வழியில்... தனக்கு வரவேற்ப்பு இப்படி எல்லாம் இருக்கும் என ஒரு கற்பனையில் செல்கிறாள் சுபாங்கி...

ஊரெல்லாம் விழாக் கோலம் பூண்டு, விருந்தினர் வரவில் அரண்மனை நிறைய, மங்கல நாதங்கள் முழங்க, மலர்த் தோரணங்கள் வீதி எங்கும் தொங்க, அரண்மனை வாயிலில் இருந்து... தோழிகள் மலர் தூவி வரவேற்க, வழியும் அன்பும், அதை வார்த்தைகள் இன்றிச் சொல்லும், ஆனந்தக் கண்ணீருமாய், தாயும், தந்தையும் தன்னை வரவேற்கக் காத்திருப்பார் என ஒரு இனிய கற்பனையுடன் வருகிறாள்.

அரண்மனையும் வந்தது.. வாயிலில் யாரும் இல்லை. விழா நடக்க எந்த அறிகுறியும் இல்ல.

தோழியர் யாரும் இல்ல. உறவிறனர் ஒருவரும் இல்லை.

பணியாளர் மட்டும் இவளை வணங்கி இருக்க, குழப்பத்துடன் அரண்மனைக்குள் நுழைகிறாள்.

அன்பாய் வரவேற்க அன்னையும் இல்ல, பாசமாய் அரவனைக்க தந்தையும் இல்லை...

சுபாங்கி : அம்மா... அம்மா...

சு. தந்தை : நில். எங்கே வந்தாய்??

சுபாங்கி : காப்புச் சூட்ட. (வாக்கியத்தை முடிக்கும் முன்னே தந்தையின் இடையீடு..)

சு. தந்தை : என் முகத்தில் கரி பூசிச் சென்றவள் நீ. உனக்கு காப்பு சூடுவதா??? அதற்காய் என் வாயிலை மிதித்திதாயே... மானமில்லாதவளே...

சுபாங்கி : வார்த்தைகளை சிதற விடாதீர். சொல்லாய் வெளி வந்ததும் வாயு வெளியில் கலந்து காணாமல் போனாலும், அது விளைவிக்கும் பல விபரீதங்கள்..

சு. தந்தை : முறை இன்றி வந்தவளுக்கு, முகமன் வேறு சொல்ல வேண்டுமோ???

சுபாங்கி : முறை இன்றி வரவில்லை. அழைப்பு வந்ததால் தான் வந்தேன்.

சு. தந்தை : அழைப்பு... அரசாங்க வேலை விஷயமாய், அசலூர் போன கணவன் வீடு திரும்பும் முன் பூச்சூட்டி அனுப்பிடலாம் என கனவு கண்டாள் நான் கட்டிய மனைவி.. பாவம், வேலை விரைவில் முடிந்து நான் வந்துவிடுவேன் என அவளுக்கு தெரியவில்லை.

சுபாங்கி : அப்போது நீங்கள் என்னை அழைக்கவில்லையா???

சு. தந்தை : ஒரு தேரோட்டியின் மகனுக்காக, இந்த தேசத்தின் அரசனை தூக்கி எறிந்து சென்றவளுக்கு அழைப்பா???

சுபாங்கி : அப்பா... என் அருகே செல்ல விழைய...

சு. தந்தை : சீ... போ... எனத் தள்ளி விடுகிறார்..

சு. அன்னை : ஐயோ மகளே.. என ஓடி வருகிறார்... (இப்படித்தான் வரச் சொல்லிட்டு.. உள்ளே போய் இருக்கறதா???)

சு. தந்தை : இனி நீயும் சரி.. உன் சம்மந்தப்பட்ட எதுவும் இந்த நாட்டின் எல்லைக்குள் கூட வரக் கூடாது. போய் விடு இங்கிருந்து..

சு. அன்னை : நீங்கள் செய்வது கொஞ்சம் கூட முறை இல்லை.

சு. தந்தை : முறை தவறி காரியம் செய்தது உன் மகள். நான் அல்ல. ஒரு தேரோட்டியின்..

சுபாங்கி : அப்பா.. போதும் நிறுத்துங்கள். என் கணவர், ஒரு நாட்டின் அரசர். அவரைத் தரக் குறைவாக பேச உங்களுக்கு அதிகாரம் இல்லை.

சு. தந்தை : நீ இப்போது இருப்பது என் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி. இங்கே நின்று நீ இதை சொல்லக் கூடாது... போய் விடு இங்கிருந்து. கண் முன்னே நிற்காதே.

சுபாங்கி : என் கணவரின் சிறப்பை நீங்க ஓர் நாள் அறியத்தான் போகிறீர்கள். அப்போது நீங்கள் உங்கள் செயலுக்காய் வருந்தத்தான் போகிறீர்கள்.

சு. தந்தை : பார்கிறேன் அதையும் தான்.

சுபாங்கி : நான் வருகிறேன்.

சு. தந்தை : மீண்டுமா???

சுபாங்கி : நான் போகிறேன். இனி ஒரு முறை என் கால்கள் உங்கள் மண்ணில் பதியாது.

சு. அன்னை : மகளே...

சுபாங்கி : சென்று வருகிறேன் அம்மா..

நெஞ்சம் நிறைய கனவுகளுடன் வந்தவள், கண்கள் நிறைய கண்ணீரை சுமந்து திரும்பினாள்... கர்ணனின் இருப்பிடம்...


பகுதி இருபத்தி இரண்டில் இரண்டு : காப்பு விழா :


அவள் அவமானப்பட்டு திரும்பியதை அறிந்த கர்ணன், கொதித்தெழுந்தான். அவள் திருப்பி அனுப்பப் பட்டதை அறிந்த பானுமதியும் அவளை ஆறுதல் படுத்த வந்திருந்தாள்.

கர்ணன் : வேண்டாம் வேண்டாம் என நான் சொல்லச் சொல்ல.. சென்றாயே.. இப்போது வந்து அழு.... என் மனம் ஒப்பவில்லை, போகாதே என எத்துனை முறை சொன்னேன்?? கேட்டாயா என் பேச்சை?? இனி இப்போதும், எப்போதும் இந்தப் பேச்சை எண்ணி எண்ணி அழு... நானும் அழுது கொண்டே இருக்கிறேன்.

கருவுற்ற நாள் முதலாய், உன் கண்ணில் ஒரு நீர் மணி வர விட்டிருப்பேனா??? இப்படி உள்ளமும், நெஞ்சமும் பதறி, அழும் உனைக் கண்டு என் உள்ளம் கொதிப்பது உனக்கு புரிகிறதா சுபா???

சுபாங்கி : என்னை மன்னித்து விடுங்கள். தாயன்பை இழந்து துன்பப் படும் உங்களுக்கும், என்னுடைய அதே நிலைமை துன்பத்தை பெருக்கக் கூடாது என்றுதான் நான் அங்கே சென்றேன். ஆனால், அது நினைத்ததர்க்கு மாறாக, இடி மேல் இடி விழுந்தார் போல் ஆகும் என நான் எதிர் பார்க்கவில்லை.

என்னை மன்னித்து விடுங்கள், என்னை மன்னித்து விடுங்கள் எனக் கதறுகிறாள்.

கர்ணன் : அவள் நிலை காணச் சகியாது கலங்கி நிற்கிறான்.

பானுமதி : இருவரின் நிலை கண்டு, உள்ளம் உருகி, தாய்மை உணர்வு பெருக சொல்கிறாள்

அண்ணா, இதற்க்கு, இவ்வளவு கோபமும், ஆத்திரமும் தேவையே இல்லை. நமக்கு இதில் எந்தப் பழியும் வராது. உலகம் அவர்களைத்தான் பழிக்கும்.

சுபா, இந்த நிலையில் நீ அழக் கூடாது. உன்னைப் பெற்ற தாயைவிட உன்னிடம் அன்பு செலுத்த நான் ஒருத்தி இருக்கிறேன் அல்லவா?? அவரை விட பன்மடங்கு சிறப்பாக இந்த சடங்கை நான் உனக்கு செய்துவிட மாட்டேனா???

சுபாங்கி : நெகிழ்ச்சியில் அப்படியே பானுமதியைக் கட்டிக் கொள்கிறாள்.

கர்ணன் : கலங்கிய அவன் விழிகளும், பானுமதியின் வார்த்தைகளில் தெளிகிறது. அவள் அன்பு புரிகிறது. நட்பின் அருமை அதை விட சிறப்பாய் அவனில் நுழைகிறது.

என்ன தவம் செய்தேனோ நான்,
நண்பா உன்னையும், பானுமதி
போல ஒரு தங்கையும், நான்
அடைய...

என்னிலே பாதியான என்னவள் ,
அவள், துக்கம் மறைய,
அவளுள் இன்பம் நிறைய,
என் மனம் அதைக் கண்டு நிறைய

இலகுவாய் இருப்பது போல் காட்டி
அரிய பல செயல்களை அசாத்தியமாய்
நடத்தி, என்னை மகிழ்விக்கும் உங்கள்
அன்பு நான் காண்க கிடைக்காத வரம்

என் கர்ணன் எண்ணுகிறான்.

அன்னையும், தந்தையும், முன்னின்று
முறையாய் செய்திருக்க வேண்டிய
சடங்கு அது எனக்கு இல்லாது
போகாது, அதை விட அழகாய்
அதை விட சிறப்பாய் நடத்தும்
உங்கள் அன்புக்கு நான் என்ன
கைம்மாறு செய்வேனோ, என்
அனைத்துமான அன்னையே...

என சுபாங்கியும் எண்ணுகிறாள்.

முறையாய் செய்ய வேண்டியன செய்து, ஒரு குறையும் இன்றி, இனிதாய், இலகுவாய்... நடந்தேறுகிறது அந்த சடங்கு. பானுமதியின் நேரடி மேற்பார்வையில்.

அன்னையாய் இருந்து அனைத்தையும் அவளே செய்ய, தந்தையின் இடத்தில், துரியோதனன் இருந்து... ஊரே மெச்ச அனைவருக்கும் விருந்தளித்து, அவரது அகமும், முகமும் நிறைய, கர்பிணிப் பெண்ணை வாழ்த்த வைத்தாள்...

பாடல் வரிகள் கர்ணன் திரைப் படத்தின் வரிகள் :

மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உருமாறி
கொஞ்சும் கிளிபோல் பிள்ளை உருவானதே
மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உருமாறி
கொஞ்சும் கிளிபோல் பிள்ளை உருவானதே

அஞ்சி அஞ்சி நடந்தாள் அந்நாளிலே
இவள் அன்ன நடை தளர்ந்தாள் இந்நாளிலே
அஞ்சி அஞ்சி நடந்தாள் அந்நாளிலே
இவள் அன்ன நடை தளர்ந்தாள் இந்நாளிலே
துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே
துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே
துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே

மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உருமாறி
கொஞ்சும் கிளிபோல் பிள்ளை உருவானதே

மலர்கள் சூடி மஞ்சள் கூட்டி வளையல் பூட்டி திலகம் தீட்டி
மாதின்று வாழ் என்று வாழ்த்துப் பாடுவோம்
மலர்கள் சூடி மஞ்சள் கூட்டி வளையல் பூட்டி திலகம் தீட்டி
மாதின்று வாழ் என்று வாழ்த்துப் பாடுவோம்

கர்ணன் தந்த பிள்ளை என்றால் கார்மேஹம் அல்லவா
கர்ணன் தந்த பிள்ளை என்றால் கார்மேஹம் அல்லவா
எதிர் காலத்தில் இந்த தேசத்தில் அவன் கருணை செய்வான் அல்லவா
அவன் கருணை செய்வான் அல்லவா

மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உருமாறி
கொஞ்சும் கிளிபோல் பிள்ளை உருவானதே

என அழகாய் விழா நடந்து முடிந்தது... மனதுக்கு நிறைவாக...


இன்னும் வருவான்.

சான்வி
29-10-2011, 06:55 AM
இங்கே கர்ணனுக்கு அனைத்தும் நல்ல படி நடந்து கொண்டு இருக்கிறது. கூடவே அங்கே பாண்டவர்களும், கௌரவர்களும் என்ன செய்கிறார்கள்.. என்பதை இந்தப் பகுதியில் காண்போம்.

தருமர் செய்த ராஜசூய யாகம் தான் துரியோதனனின் பொறாமையும், வன்மமும், கொழுந்து விட்டு எரியக் காரணம். கூடவே திரௌபதியின் நகைப்பும் தான் எரிகின்ற அந்த கோபத்திற்கு எரியூட்டும் எண்ணெய்.

இந்த விவரங்கள் பலருக்கும் தெரிந்திருக்கும், ஆனாலும் கொஞ்சம் இதையும் பகிர்ந்து விட்டால் தொடர்ந்து படிக்க, ஏதுவாக இருக்கும் என்பதால், பாண்டவர், கௌரவர்களைப் பற்றிய ஒரு சிறு விளக்கம்.

ஆற அமர அவர்களைப் பற்றி சொன்னால், அத்தியாயங்கள் நீண்டு விடும். எனவே தூர இருந்து நோக்கும் ஒரு கழுகின் போக்கில் அங்கங்கே தொட்டுச் செல்கிறேன். ஆழமாய் விஷயம் தெரிந்தவர்கள் எனை மன்னிக்கவும். தவறு இருப்பின் சுட்டிக் காட்டவும். நன்றி.

மகாபாரதம் பல கிளைக் கதைகளைக் கொண்டது. சின்ன சின்னதாய் தன்னுள்ளே ஏராளமான விஷயங்களைக் கொண்டது. திரும்பிய பக்கம் எல்லாம் ஒவ்வொரு கதாபாத்திரங்கள். அத்துனைக்கும் ஒவ்வொரு சிறப்பு. படித்து தலை சுற்றிப் போவது அவ்வப்போது நடப்பதுதான்.

எங்கே துவங்க... எங்கே முடிக்க என்பதில் எனக்கு சிறு ஐயம் இருந்தாலும், முக்கியமான சில கதாப்பாத்திரங்கள், அவர்களைப் பற்றி நான் இங்கே விவரங்களைப் பகிர்கிறேன். அதற்காய் மீதம் இருப்பவர் முக்கியம் இல்லாதவர் அல்ல. கர்ணன் கதைக்கு தொடர்பு உடையவர்கள் பற்றி மட்டும் சொல்கிறேன்.

சாந்தனு என்பவரிடம், அதாவது அவரது முற்பிறவியில் இருந்து தான், கதை துவங்குகிறது.

இப்பிறவியில் சாந்தனுவின் மனைவி கங்கா. அவர்கள் புத்திரன் தேவவிரதன்.

ஒரு நிபந்தனையின் பேரில் கங்கையை திருமணம் செய்யும் சாந்தனு, தன் நிபந்தனையை மீற, அவரைப் பிரிகிறாள் கங்கை. சில வருடங்கள் கழித்து, பல கலைகளிலும் தேர்ச்சி பெற்ற வீரனாய் மகனை வளர்த்து சாந்தனுவிடம் ஒப்படைத்து மறைகிறாள்.

பின்னர் ஒரு செம்படவப் பெண்ணான, சத்தியவதியைக் கண்டு அவள் மீது மையல் கொள்கிறான் சாந்தனு. மூத்தவள் மகன் இருக்கையில், தன் மகளது மக்கள் அரசாள முடியாது எனக் காரணம் கட்டி மறுப்பு வர, அதை அறிந்த தேவவிரதன், பிரம்மச்சரியம் பூண்டு தன் தந்தைக்கு திருமணம் நடத்தி வைக்கிறார். அக்கணம் தான் தேவவிரதன் பீஷ்மர் ஆகிறார். பீஷ்மர் எனும் சொல்லுக்கு “செயற்கரிய செயலை செய்பவன்” என்று பொருளாம்.

மகன் தந்தைக்கு திருமணம் செய்து வைத்து, நடை முறையில் இல்லாத ஒரு விஷயத்தை நடத்திய மகனுக்காய், சாந்தனு ஒரு வரம் தாரார், பீஷ்மருக்கு... நீ எது வரை உயிர் வாழ விரும்புகிறாயோ அது வரை வாழ்வாய், என்று. பீஷ்மரை கொல்ல ஆள் கிடையாது. அவரா இறக்க நெனச்சாத்தான் முடியும்.

பின்னர், சத்தியவதிக்கு, இரு மக்கள். சித்திராங்கதன், விசித்திரவீரியன். சாந்தனு இறந்ததும், சித்திராங்கதனுக்கு பட்டம் சூடப்பட்டது. இவரை வலுவில் சண்டைக்கு இழுத்த ஒரு கந்தர்வனுடன் போரிட்டு இறந்து போறார். பின்னர் இளவலுக்கு பட்டம் சூடப்பட்டது. அவருக்கு கல்யாண வயசு வந்ததும், பீஷ்மர் அவருக்கு கல்யாணம் பண்ண எண்ணிக் கொண்டு இருந்த வேளையில், காசி நாட்டு மன்னர், தன் மகள்களுக்கு சுயம்வரம் நடத்த ஏற்பாடு செஞ்சு இருந்தார்.

இவர் அங்கே போய், முறையான விசாரிப்பு அப்புறம் கொஞ்சம் சண்டை போட்டு அந்த மூணு பெண்களையும் அழைச்சு வந்திட்றார். அவங்க, அம்பை, அம்பிகை, அம்பாலிகை. அம்பைக்கு, அங்கே சுயம்வரத்துக்கு வந்திருந்த சல்லியனை ரொம்ப பிடிச்சது. அதனால இங்கே வந்து கல்யாணம் செய்யும் போது சொல்றாங்க. சரி-ன்னு விசித்திர வீரியன் அவங்களை சல்லியன் கிட்டே அனுப்பறாங்க.

சல்லியன் மறுக்க, திரும்ப இங்கே வராங்க... இவங்களும் ஏத்துக்கல. மாறி மாறி அங்கயும் இங்கயும் இவங்க அலைஞ்சு, ஓஞ்சு போறாங்க. அப்போ இவங்களுக்கு பீஷ்மர் மேல கோவம் வருது. என்னைக்கா இருந்தாலும் அவர் அழிவு என் கைலதான்-ன்னு சூளுரைக்கறாங்க. இவங்கதான் அப்புறம் சிகண்டி ஆகி, குருஷேத்திரத்தில் பீஷ்மர் சாவுக்கு ஒரு காரணமா இருப்பாங்க.

அங்கே... அம்பிகை, அம்பாலிகை – க்கு புத்திர பாக்கியம் இல்லாமலே விசித்திரவீரியன் இறந்து போறாரு. அப்போ சத்தியவதி அம்மா, பீஷ்மரை கேக்கறாங்க. அவர் மறுக்க, அவங்களோட, முதல் மகனை அழைக்கறாங்க. அவர்தான் வேதவியாசர் என நாம் அனைவரும் அறிந்த, "த்தவைபாயணன்" (அவர் யோகத்தின் சக்தியால், "மகரிஷி" ஆனவர். கடல் போன்று இருந்த வேதங்களை முறைப் படுத்தி, நான்காய் வகுத்தவர். எனவே அவர் "வேதவியாசர்" எனவும் அழைக்கப்பட்டார்)

ஆனாலும் அவர் பார்க்க அருவருப்பான தோற்றம் கொண்டவர். அவர் அருகாமை விரும்பத் தகாததாக இருந்ததாம். தன்னோட அம்மா அழைப்புக்காய் வந்தவர், புத்திர பாக்கியம் தானம் தர ஒத்துக்கறார்.

அம்பிகை, அவரை பார்க்க பயந்து கண்களை மூடினதாலே – அவருக்கு பிறந்த குழந்தை கண் பார்வை இல்லாம இருந்தது. அவர் – திருதிராஷ்டிரர்

அம்பாலிகை – இவங்க, வியாசர் தோற்றம் கண்டு வெளிறிப் போறாங்க. எனவே அவருக்கு பிறந்த குழந்தை வெளிரின நிறத்துல, இருந்தது. அவர் – பாண்டு.

முதல் மகன் பார்வை இல்லாது இருந்ததால், திரும்பவும் சத்தியவதி அம்பையை வியாசர் கிட்டே அனுப்ப, அவங்களோ, தன் தாதியை அனுப்ப, அவங்க, வியாசருக்கு நல்ல பணிவிடை செய்தாங்க. எனவே, வியாசரின் புத்தியும், அவர் போலவே நீதி அறிந்தவரா, ஒரு மகன் பிறந்தார். அவர் – விதுரர்.

திருதராட்டிரன், பாண்டு, விதுரர் மூவரையும்.. பீஷ்மர் தந்தை போல் இருந்து கவனித்துக் கொண்டார். போர் பயிற்சிகளையும், சாத்திரக் கல்வியையும் அளித்தார். அரசு காரியங்களை பீஷ்மரே கவனித்துக் கொண்டதால், நாட்டில் நல்லாட்சியும், அமைதியும் நிலவியது.

------

மைந்தர்கள் மூவரும் மணப்பருவம் அடைய, பீஷ்மர் திருதராட்டினனுக்கு காந்தார நாட்டு மன்னன் சுபவனுடைய மகளான காந்தாரியை மணமுடித்தார். கணவன் குருடனாக இருந்ததால், காந்தாரியும், வாழ்நாள் முழுவதும்..கண்களை துணியால் கட்டிக்கொண்டு தானும் குருடு போலவே இருந்தாள்.

கௌரவ வம்ச அழிவுக்குக் காரணமான சகுனி.. காந்தாரியின் சகோதரன் ஆவார்.

-------

கண்பார்வை இல்லாததால், திருதராட்டிரன்..அரசாளும் தகுதியை இழந்தான். வயது வந்ததும் பீஷ்மர் பாண்டுவை அரியணையில் அமர்த்தி, அவனுக்கு முடி சூட்னார். திருதிராட்டிரன் பெயரளவில் மன்னனாய் இருந்தான்.

-------

பாண்டுவிற்கு...மணம் முடிக்க நினைத்தார் பீஷ்மர். குந்தியின் சுயம்வரத்தில், குந்தி பாண்டுவிற்கு மாலை சூட்டினாள்.

சில காலத்திற்குப் பிறகு..மந்திர நாட்டு மன்னன் மகளும், சல்லியனின் தங்கையுமான மாத்ரி என்பவள் பாண்டுவிற்கு இரண்டாம் மனைவி ஆனாள்.

--------

விதுரர்...தேவகன் என்னும் மன்னனின் மகளை மணம் புரிந்தார்.

இவ்வாறு, மூன்று சகோதரர்களுக்கும் திருமணம் நிறைவேறியது.

--------

அரியணை ஏறிய பாண்டு அஸ்தினாபுரத்திற்கு அடங்கா மன்னர்களை அடக்கி, அவர்களை கப்பம் கட்ட வைத்தான். நாட்டில் நல்லாட்சி செய்தான். பாண்டுவின் செயல்களை மக்கள் பாராட்ட, பீஷ்மரும் மகிழ்ந்தார்.

ஒருநாள் வேட்டையாட..பாண்டு தன் பரிவாரங்களுடன் காட்டிற்கு சென்றான். அங்கு புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த இரு மான்கள் மீது, யோசனையின்றி அம்பு செலுத்தினான். ஆண்மானாக இருந்த கிந்தமர் என்னும் முனிவர். அவரது மறைவில் வேதனை உற்ற அவர் மனைவி, பாண்டுவிற்கு 'இல்லற இன்பத்தை விரும்பிப் பாண்டு மனைவியுடன் கூடும் போது இறப்பான்" என சாபமிட்டார். இதனால், புத்திர பாக்கியம் இல்லாமல் போகுமே என பாண்டு கவலையுற்றான்.

மன்னனின் கலக்கம் கண்ட குந்தி, தனது இளமைப்பருவத்தில், துர்வாசர் அருளிய மந்திரத்தைப் பற்றிக் குறிப்பிட்டாள். மகிழ்ந்தான் பாண்டு.

பின்னர் குந்தி :

தர்மதேவதையை எண்ணி மந்திரத்தை ஓத, யுதிஷ்டிரனை பெற்றாள்.
வாயு பகவான் அருளால் பீமன் பிறந்தான்..
தேவேந்திரன் அருளால் அர்ச்சுனன் பிறந்தான்.

இதில் இரண்டாம் மனைவிக்கு வாரிசு இல்லாமல் போகுமே என பாண்டு கூற, பாண்டுவின் விருப்பப்படி, மாத்ரிக்கு மந்திரத்தை உபதேசிக்க, மாத்ரியும் அம்மந்திரத்தை பிரயோகித்து இரட்டையர்களான அசுவனி தேவர்களை எண்ணி ஜபித்தாள். அதனால்..நகுலன், சகாதேவன் பிறந்தனர்.

ஐந்து அருமைப் புதல்வரை பாண்டு அடைந்தான்.

அஸ்தினாபுரத்தில், திருதிராட்டினன், பாண்டு அடைந்த சாபத்தை எண்ணி, அவனுக்கு மகப்பேறு இல்லை என மகிழ்ந்து இருந்தான். நாடாளும் உரிமை தன் சந்ததிக்கே என்றிருந்தான். அப்போது பாண்டு மகப்பேறு அடைந்த விஷயத்தை அறிந்தான். அப்போது காந்தாரியும் கருத்தரித்திருந்தாள்.

குந்திக்கு குழந்தைகள் பெற்ற செய்தி அறிந்து, ஆத்திரத்தில் தன் வயிற்றில் அடித்துக் கொண்டாள். அதன் விளைவாக ஒரு மாமிச பிண்டம் வெளிப்பட்டது. வியாசர் அருளால், அதிலிருந்து நாளொன்றுக்கு ஒருவர் வீதம், நூறு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நூற்றொருவரைப் பெற, நூற்றொரு நாட்கள் ஆயிற்று. காட்டில் பீமன் பிறந்த அன்று அஸ்தினாபுரத்தில் துரியோதனன் பிறந்தான்.

துரியோதனன், பேராசையும், பிடிவாதமும் உடையவனாக வளர்ந்தான். அவனை அடுத்து பிறந்த துச்சாதனன், தீமையில் அண்னனை மிஞ்சினான். கடைசி தம்பியான விகர்ணன் தவிர அனைவரும் கொடியவர்களே.

காட்டில் வாழ்ந்து வந்த பாண்டவர் ஐவரும், ரிஷிகளிடம் கல்வி கற்று, அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டனர்.

இந்நிலையில், ஒரு நாள் காமவயப்பட்டு, பாண்டு மாத்ரியை அணுகிய போது, பண்டைய சாபத்தால், உயிரிழந்தான். மாத்ரியும் உடன் அவனுடன் இறந்தால், குந்தியும், பாண்டவர்களும், பீஷ்மரிடம் வந்தனர். திருதிராட்டினனும், அன்புள்ளவன் போல நடந்துக் கொண்டான். சத்யவதியும், அம்பிகையும், அம்பாலிகையும் தவத்தை நாடிச் சென்றனர்.

திருதிராட்டிரன் பார்வையற்றவனாய் இருந்த படியால், குருகுலத்து ஆட்சியை, பாண்டுவே நடத்தி வந்தான் என்பதால், பாண்டு புத்திரர்களிடம் மக்களுக்கு நாட்டம் அதிகம் இருந்தது.

இச்சமயத்தில் அஸ்தினாபுரத்து அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டன. அரசகுமாரர்களில் யுதிஷ்டிரர் மூத்தவர் ஆனபடியால், இளவரசர் பட்டத்துக்கு அவரே உரியவர் ஆனார். பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோர்.... யுதிஷ்டிரரை இளவரசர் ஆக்கினர்.

இவர் சத்தியத்திற்கும், பொறுமைக்கும், இருப்பிடமாக இருந்தார். அவரது தம்பிகளும், நாட்டின் எல்லை விரிவடைய உதவினர். பாண்டவர்கள் உயர்வு கண்டு, துரியோதனன் மனம் புழுங்கினான். விரைவில் யுதிஷ்டிரர் நாட்டுக்கு மன்னன் ஆகிவிடுவாரோ என எண்னினான். தன் மனக்குமுறலை சகுனியிடமும், துச்சாதனனிடமும், கர்ணனிடமும் வெளிப்படுத்தினான்.

சின்னதா சொல்லணும்-ன்னு ஆசைப்பட்டேன். இதை விட சின்னதா சுருக்கமா எப்படி சொல்றது-ன்னு தெரியலைங்க. :sprachlos020:

மிச்சத்தை அடுத்த பகுதில சொல்றேன்.

***************************************************************

நான் மறந்து போன விஷயங்களை நினைவு படுத்த உதவிய, இணையத்துக்கும், இந்தக் கதையை படிக்க என்னை தூண்டிய என் தந்தைக்கும் நன்றிகள்.

சான்வி
29-10-2011, 07:00 AM
பகுதி இருபத்தி நான்கு : என்ன நேர்ந்தது தொடர்ச்சி :


துரியோதனன், பாண்டவர்கள் மீது பொறாமை கொண்டு இருக்கிறான். அவர்களின் புகழ் நாளுக்கு நாள், மக்கள் மத்தியில் பெருகுவது கண்டு, மனதுக்குள் புழுக்கம். இதில் அவனுக்கும் இல்லை பழக்கம். எனவே அதை சகுனியிடமும், துச்சாதனனிடமும், கர்ணனிடமும் பகிர்ந்து கொள்கிறான்.

அங்குதான் அவன் செய்த தவறு. சூழ்ச்சியின் மொத்த வடிவம் சகுனி. சுயநலத்தின் திருஉரு துச்சாதனன். இவர்களிடம் சொன்னால்... பிறகு வேறு எங்கே நல்ல வழியில் போவது.

கர்ணன் வழி வீர வழி தான்.. அவன் பேச்சு, சகுனியின் மயக்கும் மாய வலையின் முன்னே எடுபடவில்லை. நண்பனுக்காய், தானும் மனமின்றி அதை ஒப்புக் கொள்கிறான்.

சகுனி, பாண்டவர்களை சூதில் வெல்லலாம், என துரியோதனுக்கு உருவேற்றுகிறான். மூவரும் கூடிப் பேசி, எப்படியாவது, பாண்டவர்களை சிறுது காலம் ஊரை விட்டு அனுப்பினால், இவர்கள் நல்லன பல செய்து மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என யோசனை செய்து முடிவு செய்தனர்.

திருதிராட்டிரன், இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆயிரம் புத்திமதிகள் சொல்லியும் அது வீணாகப் போயிற்று. முடிவில், துரியோதனன், அவர்களை தந்தை வெளியே அனுப்பவில்லை எனில் தன் உயிரை மாய்த்துக் கொள்வதாகச் சொல்லவும், பிள்ளை பாசத்தில் பாண்டவர்களை வாரனாவதம் அனுப்ப ஒப்புக் கொள்கிறார்.

இங்கும் சகுனியின் யோசனையின் பேரில், அரக்கு மாளிகை ஒன்றை சிற்பியும், அமைச்சனுமான புரோசேனன் என்பவனைக் கொண்டு அமைத்தனர். அவர்கள் உறங்குகையில், மாளிகைக்கு தீயிட்டு எரித்து அனைவரையும் சாம்பலாக்கும் எண்ணம்.

இதை அறிந்த விதுரர், பாண்டவர்களை தக்க படி எச்சரித்து அனுப்புகிறார். அவர்களும் மாளிகையில் இருந்து தப்பி விடுகின்றனர். பாண்டவர்களும், குந்தியும், இறந்ததாக எண்ணி, பீஷ்மர், முதலானோர் பெரும் துக்கம் கொள்கின்றனர்.

துரியோதனனும், தான் துக்கமாய் இருப்பது போல நடித்துக் கொள்கிறான்.

தப்பிய பாண்டவர்கள், காட்டினில் அலைந்து திரிகையில் தான் பீமனுக்கும் இடும்பிக்கும் திருமணம் நடந்து, கடோத்கஜன் பிறக்கிறான். பின்னர் அங்கே தோன்றும் வியாசரின் அறிவுரைப் படி, ஏகசக்ர நகரத்தில் ஒரு பிராமணர் வீட்டில் தங்குகின்றனர். அப்போது தான் பகாசூர வதம் நடக்கிறது.

அப்போது ஒரு நாள், திரௌபதி சுயம்வர செய்தி கிடைக்கப்பெறுகின்றனர். வியாசர் வந்து அங்கே இவர்களைப் போகப் பணிக்கிறார். பாஞ்சால தேசத்திற்கு செல்கின்றனர்.

அங்கே அர்ஜூனன் சவாலில் வென்று திரௌபதியை வீட்டுக்கு அழைத்து செல்கிறனர். பெண்ணை பாராமலே, கிடைத்ததை ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என அன்னை சொல்ல, அதன் படி இவள் ஐவருக்கும் மனைவி ஆகிறாள்.

திரௌபதியின் தந்தைக்கு, மகள் ஐவருக்கு மனைவி ஆவதில் உடன் பாடு இல்லை. மீண்டும் வியாசர் தோன்றி, அவள் முன் வினைப் பயன் தான் இது. அவள் கற்புக்கு இதனால் களங்கம் உண்டாகாது என சமாதானம் சொல்கிறார்.

இந்நிலையில், பாண்டவர்கள் உயிருடன் இருப்பது, அஸ்தினாபுர மக்களுக்கு தெரிய வருகிறது. அது அவரவர் மனதுக்கு தகுந்தவாரும், ஆனந்தத்தையும், அதிர்ச்சியையும் தருகிறது.

பீஷ்மர், விதுரர் போன்ற பெரியவர்களின் ஆலோசனைப் படி பாதி ராஜ்ஜியம் பாண்டவர்களுக்கு தரப் படுகிறது. காடும், மலையும் கொண்ட பகுதியான, காண்டப்பிரஸ்தம் அவர்களுக்கு தரப் படுகிறது.

எல்லாரும் அங்கே போய் இருக்காங்க. அங்கே தேவேந்திரன் கட்டளைப்படி, விசுவகர்மா என்னும் தேவசிற்பி மிகச் சிறந்த, அழகிய ஒரு நகரத்தை இவர்களுக்கு உருவாக்கினான். அதுவே இந்திரபிரஸ்தம் எனப்பட்டது. அப்போ, நாரதரின் அறிவுரைப் படி, இங்கே திரௌபதியுடன் வாழ, ஒரு உடன்படிக்கை வருகிறது. வருடத்துக்கு ஒருவர் என வாழ வேண்டும். அப்போது மற்ற நால்வர் இவர்கள் இருக்குமிடம் வராது இருக்க வேண்டும் என்பதுதான் அது.

இந்நிலையில் ஒரு நாள், திரௌபதி, தருமருடன் இருக்கையில், நள்ளிரவில் ஒரு அந்தணன் தருமரை, தன் பசுக்களை யாரோ களவாடி விட்டதாக, எழுப்ப விழைய, அவரைத் தடுத்து, அர்ஜூனன் தானே சென்று, அவன் பசுக்களை மீட்டுத் தருகிறான். அவர்கள் தனிமையில் குறுக்கிட்டதாய் எண்ணி, தானே அங்கிருந்து வெளியேறுகிறான்.

அபோதுதான் அர்ஜூனன், கிருஷ்ணரின் தங்கையான சுபத்திரையை மணந்து கொள்கிறான். இவர்களின் புதல்வனே அபிமன்யு..

கான்டவ வனம்-ன்னு ஒரு வனம் இருக்கு, அவங்களுக்கு பாகம் பிரிச்ச பகுதில. ஆனா அந்த வனத்தை அழிக்கவே முடியலே இவங்களாலே. அங்கே, பல அரக்கர்களும், விஷ ஜந்துக்களும் இருந்தது. அதனாலே பலருக்கு தொல்லை.

இந்நிலையில் அக்னி தேவனுக்கு பலத்த பசி ஏற்படுது. என்ன சாப்டும் அவர்க்கு பசி அடங்காததலே... அவர் பிரம்மாவை சரண் அடைய, அவர் கான்டவ வனம் தான் உன் பசிக்கு தீர்வு-ன்னு சொல்லிட்றார். இவர் மகிழ்ந்து அந்த வனத்தை அழிக்கப் போக, இந்திரன் அதை விட மாட்டேன்றார்.

மழையா பொழியறார். அப்போ அக்னி தேவன், நம்ம கிருஷ்ணன் மற்றும் அர்ஜூனன் உதவியை நாடி வராங்க. அக்னி தேவன் அப்போ சில ஆயுதங்களை இருவருக்கும் தந்ததா சொல்லப்படுது. அர்ஜுனனுக்கு, காண்டீபமும், எடுக்க எடுக்க அம்பு குறையாத ரெண்டு அம்பறாத் துணியும், நான்கு வெள்ளை குதிரைகள் பூட்டிய ஒரு அழகிய ரதமும் கெடைக்குது. கிருஷ்ணனுக்கு, சுதர்சன சக்கரமும், கௌமோதகி அப்டீன்ற ஆயுதமும் கெடைச்சதாம்.

அதைக் கொண்டு ரெண்டு பெரும் உதவி பண்ண, அக்னி அந்த வனத்தை அழிச்சாங்க. அதிலே மனம் மகிழ்ந்த அசுர சிற்பியான மயன், அர்ஜுனனுக்கு ஏதாவது கைம்மாறு செய்ய விரும்பறாரு. அர்ஜுனனும் சரி, கிருஷ்ணனும் சரி, செய்த உதவிக்கு கைம்மாறு வாங்க மறுக்கறாங்க.

சரி-ன்னு மயன் தருமர் கிட்டே போய், என்னால் உலகமே வியக்கும் ஒரு சபையை நிறுவ முடியும், அதை வந்து இந்திரபிரஸ்தத்துல நிறுவ அனுமதிக்கணும்-ன்னு வேண்டிக்கிறேன்-ன்னு பணிவா கேட்க. தருமர் சம்மதம் சொல்றார்.

மயன் நெறைய வேலை செஞ்சாராம் அந்த சபைக்காக. இமயமலைக்கு அந்தப் பக்கம் போய், பொன்னும், மணியும், ரத்தினங்களும், கொண்டு வந்து சபா மண்டபம் அமைச்சாராம். சுவர்களும், தூண்களும், தங்கத்தால் செய்யப்பட்டு, விலை உயர்ந்த ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதாம். படிக்கட்டு கூட பளிங்கால் கட்டப் பட்டதாம். செய்குன்றுகள், நீர்வீழ்ச்சிகள்-ன்னு பல விஷயங்கள் அங்கே ரொம்ப சிறப்பா இருந்ததாம்.

முக்கியமான இன்னொரு விஷயம், தரை இருக்கும் இடம், தண்ணீர் இருப்பது போலவும், தண்ணீர் இருக்கும் இடம் தரை போலவும் இருக்கற மாதிரி அமைச்சு கொடுத்திருந்தார் மயன்.

பார்க்கரவங்க எல்லாம் அப்படியே அசந்து போய்ட்டாங்க. (பாவம் இங்கேதான் நம்ம துரியோதனன் வந்து தரை-ன்னு நெனச்சு தண்ணிலே விழுந்து, திரௌபதி அவங்களை பார்த்து சிரிச்சிடுவா.)

இந்த சபா மண்டபத்தை பார்க்க வர, நாரதர், மூவுலகத்திலும் இது போல ஒரு மண்டபத்தை நான் கண்டது இல்லை – ன்னு பாராடிட்டு, அப்புறம் தருமரை, ராஜசூய யாகம் செய்யச் சொல்லார்.

நாம முன்னவே படிச்ச மாதிரி, ராஜசூய யாகம் செய்யனும் – ன்னா, யாகம் செய்யற மன்னர் தலைமையை சுத்தி இருக்கற நாட்டுக்கார மன்னர்கள் ஏத்துக்கணும். இதிலே பலர் ஒத்துக்கிட்டாலும், மகத நாட்டு மன்னன் ஜராசந்தன், ஒத்துக்க மாட்டார்-ன்னு முடிவு பண்ணி அவரோட சண்டை போட பீமனை அனுப்பறாங்க. ஜராசந்தனிடம் முதலிலே அடிமையாக என்பத்தி ஆறு நாட்டு மன்னர்கள் இருந்தாங்களாம். கூடவே இன்னும் பதினாலு பேர் அந்த ராஜாவோட சிறையில் இருந்தாங்களாம்.

இவரை ஜெயிச்சுட்டா, அவங்க எல்லாம், தருமருக்கு கீழே வந்திடுவாங்க இல்ல. அதுக்குதான் இந்த ஏற்பாடு. பீமனும் அங்கே போய், ஜராசந்தனை, இரண்டாகக் கிழித்து, தலை மாற்றிப் போட்டு அவரை கொன்னுட்றாங்க.

யாகம் நல்ல படியா முடிஞ்சு, தருமர், மன்னாதி மன்னர் ஆனார்.

நம்ம துரியோதனுக்கு, பொறாமை இன்னும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பிச்சது. இந்த யாகத்திலே, சகோதரர்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பொறுப்பு குடுத்தாங்க. நம்ம ஹீரோ நண்பருக்கும் ஒரு பொறுப்பு இருந்தது. அது என்னன்னா, யாகத்துக்கு அன்பளிப்பா வர பொருளை எல்லாம் வாங்கி வச்சிருக்கும் பொறுப்புதான்.

அங்கே வந்து குவிஞ்ச, பொன்னையும், மணியையும், ரத்தினங்களையும் பார்த்து பார்த்து இவருக்கு மனசுல அழுத்தம் அதிகமாகுது.

கூடவே, விழாவுக்கு வந்தவங்க, தருமர் தாழ் பணியும் போது, அவங்க மகுடம் தருமர் பாதம் படுது. அதை பார்த்து இவருக்கு உள்ளே படுத்துது. கூடவே பாஞ்சாலியும் இவரைப் பார்த்து ஏளனமா சிரிக்கறாங்க. தரை-ன்னு நெனச்சு தண்ணில விழுந்துட்றார். பாவம்.

அங்கே இருந்து அஸ்தினாபுரத்துக்கு வந்ததில இருந்த, இவரால, இவர் மனசைக் கட்டுப் படுத்த முடியாத அளவுக்கும், கோபத்திலும், பொறாமையிலும் புழுங்கறார்.

அவங்க இருக்கற வரை என்னோடதும் ஒரு ஆட்சியா??? அர்ஜுனனின் காண்டீபம் என்னை பார்த்து கேலி செய்கிரதா??? பீமனின் கதை என்னை பார்த்து கெக்கலி கொட்டி சிரிக்கிறதா??? அந்த தருமரின் புகழுக்கு முன்னே நான் எல்லாம் எம்மாத்திரம்???

அப்படி என்ன கண்டனர் மக்களும், பிற நாட்டு மன்னர்களும், தருமரிடம்??? எவ்வளவு பேர் வந்தனர்??? எத்துனை பரிசுகளைக் கொண்டு வந்து அவர் காலடியில் கொட்டினர்??? என எண்ணி எண்ணித் தவிக்கிறான்.

இப்போதான் நம்ம ஹீரோ துரியோதனுக்கு உதவி பண்றார். சுத்தி இருக்கற, வங்கம், கலிங்கம்–ன்னு எல்லாரையும் தோற்கடிச்சு, துரியோதணன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரான். ஆனாலும் ராஜசூய யாகம் செய்யக் கூடாது-ன்னு பெரியவங்க எல்லாம் சொல்லிடறாங்க.

அதனால அதற்கு ஈடான பலன் தர வைஷ்ணவ வேள்வி செய்யறாங்க.

என்னதான் செஞ்சாலும் துரியோதனன் மனம் ஆறவில்லை. அவங்க, புகழும், அவங்க கீர்த்தியும், இவனை தூங்க விடவே இல்லை.

அவனுக்கு ஆறுதலாய் பேசி சகுனி, ஒரு தெய்வீக மண்டபத்தை அமைத்து, அதை பார்வையிட வருமாறு பாண்டவர்களை அழைத்து, அப்புறம் அவர்களை சூதாட்டம் ஆடச் செய்யலாம். என்னை சூதாட்டத்தில் வெல்ல யாராலும் முடியாது-ன்னு உனக்கே தெரியும்.

அவர்களை நாட்டை வைத்து ஆடச் சொல்லி, அவங்க நாட்டை நாம வாங்கிடுவோம். அப்புறம் அவங்க இங்கே இருக்க முடியாது இல்லை-ன்னு பேசி பேசிப் அவனைக் கரைச்சு, அவங்க அப்பா கிட்டே சொல்லி சம்மதம் வாங்கராங்க.

அவர் சம்மதிச்சாரா??? இல்லையா??? அடுத்த பகுதியில்.

நாஞ்சில் த.க.ஜெய்
01-11-2011, 10:01 AM
மெருகேறி கொண்டே செல்லும் சான்வி அவர்களின் கர்ணன் என் காதலன் ...

சான்வி
03-11-2011, 09:34 AM
நன்றி தங்கள் வரவுக்கும், பதிவாய் வந்த ஊக்கம் நிறைந்த பின்னூட்டத்துக்கும்.

sarcharan
03-11-2011, 11:04 AM
ஞாயிற்றுகிழமை மகாபாரதம் பார்த்தது போல இருந்தது சான்வி, உங்களுக்கு எங்களது நன்றி!

subsekar
03-11-2011, 05:32 PM
கர்ணன் என் காதலன் என்ற தலைப்பு இழுக்க இன்று தான் இத்திரிக்கு முதல் முதலாக வந்தேன். சிவாஜி நடித்ததனாலோ என்னவோ கர்ணன் பாத்திரம் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. வீரன், தானத்தில் சூரன், ஆனால் அவனுக்கேற்ற நற்பலன்கள் பெறாத பரிதாபத்துக்குரியவன். இத்தொடரை நானும் இன்று முதல் ஆரம்பத்திலிருந்து படிக்கப் போகிறேன். யுதிஷ்டிரர் பெயர் ஓரிருஇடத்தில் தவறாகப் பதியப் பட்டிருக்கிறது, முடிந்தால் பிழை திருத்தி விடவும். இந்தப் பெரிய செயற்கரிய செயலைத் துவக்கியிருக்கிறீர்கள் உங்களுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்!

சான்வி
04-11-2011, 04:10 AM
ஞாயிற்றுகிழமை மகாபாரதம் பார்த்தது போல இருந்தது சான்வி, உங்களுக்கு எங்களது நன்றி!

உங்கள் வரவுக்கும், மகிழ்ச்சி தந்த பதிவுக்கும் மிக்க நன்றி.

சான்வி
04-11-2011, 04:14 AM
சிவாஜி நடித்ததனாலோ என்னவோ கர்ணன் பாத்திரம் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது.

முற்றிலும் உண்மை. எனக்கு அப்படித்தான்.

இத்தொடரை நானும் இன்று முதல் ஆரம்பத்திலிருந்து படிக்கப் போகிறேன்.

படித்து தங்கள் மேலான கருத்துக்களை பதியுங்கள். அது இன்னும் சிறப்பாக எழுத உதவும்.

யுதிஷ்டிரர் பெயர் ஓரிருஇடத்தில் தவறாகப் பதியப் பட்டிருக்கிறது.

சிரமத்திற்கு மன்னிக்கவும். தட்டச்சு பிழையாய் இருக்கும். விரைவில் மாற்றி விடுகிறேன். மாற்றியதில் ஏதும் விட்டுப் போயிருந்தால், மீண்டும் சுட்டிக் காட்டுங்க

இந்தப் பெரிய செயற்கரிய செயலைத் துவக்கியிருக்கிறீர்கள் உங்களுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்!

இது போன்ற ஊக்கம் தரும் வரிகளை படிக்கையில் மேலும் மேலும் எழுத வேண்டும் எனும் ஆர்வம் துளிர்க்கிறது.

மிக்க நன்றி

சான்வி
07-11-2011, 03:29 AM
பகுதி இருபத்தி ஐந்து : சூதாட்டம் பகுதி ஒன்று

சூதாட, பாண்டவர்களை அழைக்க தந்தையின் சம்மதம் வேண்டி துரியோதனனும், சகுனியும் கேட்க, திருதிராட்டிணன் அதை மறுக்கிறார். ஆனாலும் சகுனி விடாம துரியோதனுக்காய் பேசறார்.

துரியோதனன், புத்திசாலி, நல்ல திறனும் உடையவன். இயல்பாவே அவனுக்கு அரச நீதி தெரிஞ்சுதான் இருக்கு. பிற மன்னர்களின் புகழ் அதிகம் ஆவது, நமது அரசுக்கு ஆபத்து எனும் விஷயம் அவனுக்கு நன்கு புரிந்து உள்ளது.. அப்படி எல்லாம் சொல்றாங்க.

திருதிராஷ்டிரர் : (இவருக்கு கோவம் வருகிறது.) என் மகனை அழிக்க வந்த நாசகாரன் நீ. பேச்சாலும், தந்திரத்தாலும், அடுத்தவரை தோற்கடிக்கும் சாகசக்காரன் நீ. ஏன் அவன் மனதில் பாண்டவர்கள் மீது, வெறுப்பையும், துவேஷத்தையும் வளர்க்கிறாய்??? இவன் எத்துனை பிழைகள் செய்தாலும் அதை பொறுத்துக் கொண்டு அவர்கள் அமைதியாய் இருக்கிறார்கள் தானே. மேலும் மேலும் ஏன் இவனைத் தூண்டி விடுகிறாய்??

சகுனி : அந்த சபா மண்டபத்தில், நங்கையரும் இவனைப் பார்த்து நகைத்தனரே... அது கூட உமக்கு ஒரு பொருட்டு இல்லையா???

திருதிராஷ்டிரர் : தண்ணீருக்கும், தரைக்கும் வித்தியாசம் தெரியாது இவன் விழுந்ததற்கு அவர்கள் எப்படி பொறுப்பாக முடியும்??? தடுமாறும் ஒருவரைப் பார்த்து நகைப்பது மனித இயல்பு தானே???

துரியோதனன் : (தந்தையின் பேச்சைக் கேட்டு கடும் கோவம் கொள்கிறான்) நான் வேறு எதுவும் கூறி வாதாட விரும்பவில்லை. பாண்டவர்களை இங்கே அழையுங்கள். ஒரு சூதாட்டத்தில் அனைத்து சொத்துக்களையும் நாம் கவர்ந்திடலாம்.

திருதிராஷ்டிரர் : மகனே... நீ சொல்வது நியாயம் அல்ல. வஞ்சகத்தால் பிறர் பொருளை கவர நினைப்பது இழிவான செயல். வீரர்கள் யாரும் இதுபோல ஒரு செயலை செய்ய மாட்டார்கள். பாண்டவர்கள் எனக்கு உன் போன்றவர்கள் தான். நான் சொல்வதைக் கேள். இந்த என்னத்தைக் கைவிடு.

துரியோதனன் : எனக்கு முடிவுதான் முக்கியம். அதை எப்படி அடைவது என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. மாமா, சொன்னது போல, சூதாட்டத்தில் அவர்களை வெல்வேன். நாடு நகரம் என அனைத்தும் நான் அவர்களிடம் இருந்து கைப்பற்றுவேன் இது உறுதி. இதற்க்கு நீங்கள் சம்மதிக்கவில்லை எனில், இங்கேயே பெருகும் என் குருதி, என வாளைக் கையில் எடுக்க..

திருதிராஷ்டிரர் : பிள்ளைப் பாசம், கொள்கையைப் பறக்க விட, சம்மதிக்கிறார்.

பின்னர் துரியோதனனும், சகுனியும் சேர்ந்து, ஒரு தெய்வீக மண்டபத்தை அமைக்கின்றனர். அதன் விழாவுக்கு பாண்டவர்களை, திரௌபதி உட்பட அனைவரையும் அழைக்குமாறு துரியோதனன் சொல்கிறான்.

திருதிராஷ்டிரர் : (அருகே இருந்த விதுரரை அழைத்து) விதுரா, நீ பாண்டவரிடம் சென்று, இந்த தெய்வீக மண்டபத்தை பற்றிக் கூறி, திரௌபதி சமதியினராய் அனைவரையும் வரச் சொல்லி, நான் அழைத்தாய் சொல்வாயாக. கூடவே, துரியோதனன், சகுனி திட்டத்தை, குறிப்பால் உணர்துவாயாக..

விதுரர் அங்கே சென்று நடந்ததை கூறுகிறார். சூதாடும் எண்ணம் கண்டு, தருமர் கொஞ்சம் கலக்கம் கொள்கிறார். துரியோதனன் என்றுமே நமக்கு நல்லது செய்பவன் அல்ல. அப்போது இதிலும் ஏதோ சூழ்ச்சி உள்ளது என எண்ணுகிறார்.

சகோதர்களும் அவ்வாறே கோவம் கொண்டு பேச, தருமர் அவர்களை அமைதிப்படுத்துகிறார். பெரிய தந்தை நம்மை அழைத்து இருக்கிறார். சிறிய தந்தை அதனை கூற இங்கு வந்துள்ளார். இதை நாம் மறுப்பது சரியல்ல.. என அவர்களை சமாதானப் படுத்தி, அனைவரும் அஸ்தினாபுரம் வருகிறார்கள்.

(இந்த சூதாட்டப் பகுதியின் சிறப்பை.. நான் முன்னர் ஒரு வலை தளத்தில் படித்துள்ளேன். அனைத்தும் அறிந்தவர் தருமர். கூடவே அவரின் சகோதரன், சாஸ்திரங்களில் வல்லுனன். இருவரும் இருக்க சூதாடச் சென்றால் என்ன நேரும் என்பது தெரியாமலா இருந்திருக்கும்??? அப்படி இருப்பின், சூதாட ஏன் ஒப்புக் கொண்டார் இந்த தருமர். என ஆயிரம் கேள்விகள் எனக்கு நானே கேட்டதுண்டு)

தன் தந்தைக்கு, அவர் அன்னை சொன்னதை வைத்து எழுதிய பதிவை சொன்ன வலைத்தளம் அது. பிதாவின் கதைகள் எனும் பெயரில். அங்கே தான் இந்த விவரங்களைப் படித்தேன் நான். அதிலே கர்ணனும், தருமரின் சிறப்பை அரிய நேர்ந்த ஒரு சம்பவம் சொல்லப்பட்டது. அதை உங்களுடன் பகிர்கிறேன்.

சூதாட அழைத்தால் என்ன சொல்ல வேண்டும். என்ன பேச வேண்டும் என துரியோதனன், சகுனி, மற்றும் கர்ணன் மூவரும் ஒத்திகை பார்கின்றனர். அப்போது அங்கே.....

சகுனி: “ நான் யோசித்து ஒரு வழி உருவாக்கியிருக்கிறேன். அதன் மூலம் பாண்டவர்கள் ஐஸ்வர்யம் அனைத்தையும் அவர்கள் நாட்டையும் வென்று விடலாம். அதற்கு ஒரு நாடகம் நடத்த வேண்டும். நாடகம் எவ்வித தடங்கலும் இல்லாமல் நடக்க வேண்டுமானால் ஒரு முறையாவது ஒத்திகை பார்க்க வேண்டும்.”

துரியோதனன்: “நாடகமா? போர் இல்லாத வெற்றியா?”, அவநம்பிக்கை தொனிக்க விழைகிறான்.

சகுனி: “என்ன நாடகம் என்று சொல்லுகிறேன். அதைக்கேள்! யுதிட்டிரனையும் மற்ற பாண்டு புத்திரர்களையும் இங்கு விருந்துக்கு அழைக்க வேண்டும். பிறகு நிதானமாக சொக்கட்டான் ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். யுதிட்டிரனை ஆட அழைக்க வேண்டும். ஆட ஆரம்பிக்கும் முன் ஆட்டம் சுவாரஸ்யமாய் இருப்பதற்காக சில பொற்காசுகள் வைத்து விளையாடலாம் என்று ஆரம்பித்து அதற்கு யுதிட்டிரன் சரி என்று சொன்னதும், வலை விரிப்பது போல் பகடைப் பாயை விரிக்க வேண்டும். பிறகு பகடை அஸ்திரத்தை எடுப்பதற்குமுன், ஒவ்வொரு முறை காயை உருட்டும் போதும் சில பல பணய பொருள்கள் வைக்கலாம் என்று ஆரம்பித்து, ஆட்ட முடிவில் யாரிடம் பணயம் வைக்க ஏதும் பொருள் இல்லையோ அவர்கள் நாட்டை - இராஜ்யத்தை வைத்து ஆட வேண்டும் என்று முடிக்க வேண்டும்.”

துரியோதனன்: “'மாமா, புரிகிறது! சொக்கட்டான் ஆடி வெல்லலாம் என்று சொல்கிறீர்கள். நாடகத்தில் நீங்களும், நானும், கர்ணனும் வேண்டுமானால் நடிக்கலாம். யுதிட்டிரன் வந்து நடிக்க வேண்டும். அவன் வந்தாலும், அதற்கு மேலாக பகடைக் காய்கள் நடிக்க வேண்டும். போகாத ஊருக்கு வழி என்பார்கள். இப்போது போகாவிட்டாலும், எப்போதாவது போகும் போது கேட்ட வழி உபயோகப்படும். ஆனால் தங்கள் யோசனை 'கிட்டாத பழத்திற்கு கொட்டாவி' என்று தான் முடியும். பழமே கிட்டாத போது வாயைத் திறந்து மூடினால் என்ன பயன்? இவ்வளவு நாட்கள் யோசித்து இப்படி ஒரு வழி. ஆட்டம் முழுவதும் அனைத்தும் தோற்று யுதிட்டிரன் நாட்டை வைக்கும் போது, நான் எதிர் பணயமாக எந்த நாட்டை வைப்பது? இந்த நாடு இன்னும் என் கைக்கே வரவில்லை! வரும் முன்பே பணயம்? இது சரிப்படாது. வேறு வழி உண்டானால் கூறுங்கள்!”

சகுனி: "துரியோதனா! நீ கேட்பது சரிதான். நானும் இப்படித்தான் ஆரம்பிப்பேன் - நீயும் இப்படித்தான் கூறவேண்டும். 'என்னிடம் நாடு இருந்தால் வைத்து விளையாடுவேன். இல்லாததால் இதுவரை வென்ற பொருள் அனைத்தும் பணயமாக வைத்து விளையாடுகிறேன்' என்று சொல். யுதிட்டிரனும் சரி என்பான்".

துரியோதனன்: "நாட்டுக்கு ஒரு சாக்கு சொல்லிவிட்டீர்கள். முதலாவதாக யுதிட்டிரன் பொருள் அனைத்தும் இழக்க வேண்டும். கடைசியாகத்தான் நாடு. நான் முன்பே கேட்டேன். நாம் நடிக்கலாம். பகடைக் காய்கள் நம் பக்கம் நடிக்க வேண்டுமே?"


சகுனி: "புரிகிறது துரியோதனா! காய்கள் தன்னிச்சையாகத்தானே விழும். வேண்டிய எண்ணிக்கை எப்படி விழும் என்று தானே கேட்கிறாய். இதோ பார்! இரண்டு விதமான பகடைக்காய்கள் வைத்திருக்கிறேன்." மடியிலிருந்து ஒரு ஜோடி மரத்தால் ஆனதும், மற்றொரு ஜோடி தந்தம் போன்ற வெள்ளை காய்களையும் எடுத்து வைத்தான் சகுனி. "துரியோதனா! முதலில் இந்த மரக்காய்களின் சக்தியைப் பார். நீ முன்று எண்ணிக்கைகளை சொல்".

துரியோதனன்: "ஒன்று, ஐந்து, பன்னிரண்டு"

சகுனி மூன்று முறை காய்களை உருட்ட, ஒன்று, ஐந்து, பன்னிரண்டு விழுகிறது. துரியோதனனும், கர்ணனும் கண்கள் அகல விரியப் பார்க்கிறார்கள். சகுனி, அருகில் அமர்ந்த கர்ணன் காதில் ஏதோ சொல்லிவிட்டு, துரியோதனைப் பார்த்து, "நீ இப்போது இந்த காய்களை எடுத்து மூன்று முறை உருட்டு" என்று கூற, துரியோதனன் உருட்டுகிறான். பன்னிரண்டு, ஐந்து, ஒன்று விழுகிறது. துரியோதனன் சந்தேகமாய்ப் பார்க்கிறான்.

கர்ணன்: "நண்பா! மாமா என் காதில் 'பன்னிரண்டு, ஐந்து, ஒன்று என்று விழும் பார்' என்று தான் கூறினார். ஆக மாமா காய்களை நடிக்க வைப்பார் என்று தான் தோன்றுகிறது.

துரியோதனன்: "மாமா, இந்த வெள்ளைக்காய்கள்?"

சகுனி: "இந்த காய்கள், மரக்காய்களைக் காட்டிலும் சக்தி வாய்ந்தது. முதல் ஆட்டத்தில் நான் வெள்ளைக்காய்களை வைத்துக்கொண்டு ஆடுவேன், யுதிட்டிரன் மரக்காய்களை வைத்துக்கொண்டு ஆடுவான். பிறகு இரண்டாவது ஆட்டத்தில் காய்களை மாற்றி ஆடலாம் என்று கூறி இந்த வெள்ளைக்காய்களை யுதிட்டிரனிடம் கொடுப்பேன். அவன் தோற்பான்.

கர்ணன்: "மாமா! அதிக சக்தி உள்ள காய்களை யுதிட்டிரன் கையில் கொடுத்தால்...எனக்குப் புரியவில்லையே?"

சகுனி: "சக்தி உள்ளது என்றால், என்னிடமிருந்து விலகி இருந்தாலும் , நான் சொன்னபடி கேட்கும் என்பதுதான். புத்திசாலி, அதிபுத்திசாலி இருவரில் அதிபுத்திசாலி பக்கத்தில் இல்லாது எதிரில் எங்கோ இருந்தாலும் குறிப்புணர்ந்து காரியம் செய்வான். அதுபோலத்தான் வெள்ளைக்காய்கள். புரிகிறதா?"

துரியோதனனும் கர்ணனும் வாய்பேசாது தலையை ஆட்டுகிறார்கள்.

துரியோதனன்: "மாமா! நீங்கள் முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவது உறுதியான பின், இரண்டாவது ஆட்டம் ஏன்? முதல் ஆட்ட முடிவில் நாடு முழுவதும் நம் கையில். பின் என்ன?"

சகுனி பெரிதாகச் சிரிக்கிறான்.

சகுனி: "துரியோதனா! செல்வமும் நாடும் நம் கைக்கு வந்ததும் பகையை மறந்து விடுவதா? பாண்டு புத்திரர்களை அப்படியே விட்டுவிடலாமா? அடுத்த ஆட்டத்தில் ஐவரையும் அடிமைப்படுத்த வேண்டும்."

கர்ணன்: "ஐயோ! அடிமைப்படுத்துவதா?"

சகுனி: "துரியோதனா, தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்ற சொற்படி நீதான் கலவரப்பட வேண்டும். ஆனால் கர்ணன் 'ஐயோ' என்று துடித்துவிட்டான். இதோ பார்! கர்ணன் வாயாலேயே பாண்டவர் ஐவரும் அடிமை என் கூற வைக்கிறேன்....ம்...இரண்டாவது ஆட்ட ஒத்திகையை ஆரம்பிப்போமா? கர்ணா! நீ இங்கு என் எதிரில் வந்து அமர். நீதான் யுதிஷ்டிரன். நான் துரியோதனன் சார்பில் ஆடும் சகுனி. துரியோதனா - நீ துரியோதனன் தான்."

கர்ணன்: "எனக்கு மட்டும் வேறு வேடமா, அதுவும் யுதிஷ்டிரன் வேடம்?"

சகுனி: "என் பங்கை நான் தான் செய்ய வேண்டும். அதுபோல துரியோதனனும் தான். யார் இப்போது யுதிஷ்டிரனை அழைத்து வர முடியும்? அதற்காகத்தான் நீ!"

கர்ணன் எழுந்து எதிர் பக்கம் அமர்கிறான். துரியோதனன் சகுனியையும் கர்ணனையும் மாறி மாறிப் பார்க்கிறான்.

சகுனி: "இது துரியோதனன் பேசும் வசனம் - 'யுதிஷ்டிரா! முதலில் இரண்டு ஆட்டம் சொக்கட்டான் ஆடலாம் என்று சொன்னோம். எதிர்பாராத விதமாக முதல் ஆட்டத்திலேயே நீ நாட்டை இழக்கும் படி ஆகிவிட்டது. இரண்டாவது ஆட்டம் ஆட என்ன செய்வது? முதல் ஆட்டத்தில் இந்த வெள்ளைக் காய்கள் மாமா சகுனிக்கு அபரிமிதமான வெற்றியை கொடுத்தது. இரண்டாவது ஆட்டத்தில் அதன்மூலம் உனக்கு வெற்றி கிடைக்குமோ என்னவோ! யாருக்குத் தெரியும்? இரண்டாவது ஆட்டம் ஆடாது போனால் நான் ஏதோ இந்த வெள்ளைக்காய்களில் சூது செய்து வெற்றியைப் பெற்றுவிட்டேன் என்றுகூடச் சொல்லுவார்கள். ஆகையால் அவசியம் ஆட வேண்டும்.

இந்தமுறை பணயமாக பெரிதாக ஒன்றும் வேண்டாம். ஒருவருக்கு ஒருவர், நம் சகோதரர்களை மாற்றிக்கொண்டால் போதுமானது. அதாவது உன் சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் என் சகோதரர்கள் எண்ணிக்கையில் இருபதுபேர் சமம். நீ முதல் தடவை காய்கள் உருட்டுவதில் வெற்றி பெற்றால், அதாவது குறிப்பிட்ட எண்ணிக்கை சொல்லி அது விழுந்தால் என்பக்கம் இருந்து இருபது பேர் உன்பக்கம் வந்து விடுவார்கள். உனக்கு அடிமை செய்வார்கள். நான் வென்றால் நகுல, சகாதேவன், இருவரில் ஒருவரை எனக்கு கொடுத்துவிட வேண்டும்.”

கர்ணன் தன்னை முழுவதுமாக யுதிஷ்டிரனாக பாவித்து யோசிக்கிறான்.

"யுதிஷ்டிரா, உன் பதில் என்ன?" என்று வாஞ்சையோடு சகுனி வினவுகிறான்.

"துரியோதனா! உன் வார்த்தைகள், எந்த தவறும் இல்லாதவை. இங்கு இருப்பவர்கள் அங்கு வந்தால் என்ன? அங்கு இருப்பவர்கள் இங்கு வந்தால் என்ன? பூரண சம்மதம்."

கர்ணன் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வந்ததும் சகுனி உற்சாக மிகுதியில் பலமாக படபடவென கை தட்டுகிறான். கர்ணன் திடுக்கிட்டு விழிக்கிறான். "என்ன?", கர்ணன் வினவ,
துரியோதனன், "கர்ணா! நீ சொன்ன வார்த்தைகள் உனக்கே தெரியவில்லை. ஆட்டமிழந்து தோற்றால் நாங்கள் ஐவரும் அடிமை என்றுதான் சொன்னாய். 'என்ன?' என்று இப்போது
கேட்கிறாயே?"

கர்ணன் நடந்ததை முழுதும் கேட்டு மனம் துடிக்கிறான். ‘யுதிஷ்டிரனாக பாவித்த மாத்திரமே சகோதரர்கள் நூற்றியைந்து என்று கூறியிருக்கிறானா? யுதிஷ்டிரன் அப்படிப்பட்டவனா?'
கர்ணன் சிந்தனை தடைபடுகிறது. மனத்தால் ஒரு நிமிடம் தன்னை யுதிர்ஷ்டிரனாக நினைத்தமைக்கும், அவன் போல பேசியதருக்குமே இந்த மாதிரி வார்த்தைகள் என்னிலே வந்தால், எத்துனை சிறப்பு மிக்கவரா இருப்பார் அவர்??? என அவன் சிந்தனை ஓடுகிறது...

பிறகு நடந்தது என்ன என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

சான்வி
07-11-2011, 03:38 AM
பகுதி இருபத்தி ஆறு – சூதாட்டம் : பகுதி இரண்டு :

சூதில் எப்படி வெல்லலாம் என துரியோதனன், சகுனி பேசிக் கொண்டு இருக்க, கர்ணன் அங்கே பார்வையாளனாய். சூதாட்ட நாடக ஒத்திகையில் கர்ணனுக்கு தருமர் வேடம் கிடைக்க, தருமராக தன்னை நினைத்த மாத்திரத்தில் சகோதர்கள் நூற்றி ஐந்து என தன்னை அறியாமல் சொல்கிறான். அதை அவன் அரிய நேர்கையில், தருமர் மீதான மதிப்பு, மேலும் உயர்கிறது.

அங்கே மேலும் என்ன நடக்கிறது என்பதைக் காண்போம்.

சகுனி அவர்கள் மீண்டும் ஒருமுறை, பாண்டவர்களை எப்படி சொக்கட்டான் ஆட அழைப்பது, அவர்களை எப்படி வலையில் சிக்க வைப்பது, என்பது பற்றி ஆவலாய் விவாதிக்க ஆரம்பித்தார். கனிவான பேச்சு எனும் தூண்டிலில், சகோதர பாசம் எனும் புழுவை வைத்து, யுதிர்ஷ்டிரனை பிடிக்கலாம் என முடித்த போது, சொல்லில் அடங்கா திருப்தி துரியோதனனுக்கு.

ஆனால், கர்ணனுக்கு மட்டும் உள்ளே கலக்கம். துரியோதனன், தன் சகோதரர்களைக் கூட இழக்கத் தயாராகி விட்டானா என. அதுவும் சகுனியின் ஊக்கமும், உற்சாகமும் நிறைந்த பேச்சில் மட்டுப்பட்டது.

மூவருக்கும் ஒரே நேரத்தில் சிந்தனை ஓடுகிறது. பாண்டவர்களை சூதாட்டம் மூலம் அடிமைப் படுத்தி விடலாம். ஆனால், திரௌபதி??? அவளை என்ன செய்வது??? கர்ணனுக்கு, அவள் சுயம்வரத்தில், அவமானப்பட்ட சிந்தனை. துரியோதனுக்கோ, சபா மண்டபத்தில், அனைவர் முன்னிலையில் தன் தடுமாற்றத்தைக் கண்டு நகைத்த அவமானம். என மூவர் சிந்தனையிலும் அவளே... இருந்தாள். இந்த எண்ண ஓட்டத்தின் முடிவாக திரௌபதி, திரௌபதி – அவளுக்கு அழிவு வேண்டும் என தங்களுக்கே கேடு வேண்டி நின்றனர்.

பலமுறை பல சந்தேகங்களை, துரியோதனனும் கர்ணனும் கேட்டுக் கேட்டு ஆட்டத்தில் வெற்றி என உறுதி செய்து கொண்டனர். வழி அனுப்பும் முன்பாக சகுனி துரியோதனன், கர்ணன் இருவரையும் பார்த்துக் கூறினான்.

"இந்த நாடகம் இத்துடன் முடிந்து விட்டது என்று எண்ணாதீர்கள். பாண்டு புத்திரர்கள் ஐவரையும் வென்ற பிறகு மிக முக்கியமான பகுதி இந்த நாடகத்தில் உண்டு. அதை இப்போது உங்களுக்கு கூற மாட்டேன். ஒத்திகை ஏதும் இல்லாமல் நான் நடத்தப் போகும் பகுதி அது.

துரியோதனா! அந்த நேரத்தில் நீ மிகவும் பொறுமையாகவும், நிதானத்துடனும் இருக்க வேண்டும். அதிலும், அதற்கு அடுத்த வெற்றிக்கும் பிறகு கூட மிக மிக நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இது மிக அவசியமானது. என்னிடம் இப்போது ஏதும் கேட்காதீர்கள்.

அந்த சந்தர்ப்பத்தில், துரியோதனா! நீ எதையும் யோசியாது நான் சொல்வதற்கு மட்டும் 'சரி' என்று சொல்ல வேண்டும். பிறகு பண்டவர்கள் வாசம் வனத்தில் தான். போய்வாருங்கள்!" என விடை கொடுத்தான் சகுனி.

நாடகத்தின் கடைசி பகுதி என்னவென்று சகுனி முன்பே முடிவு செய்துவிட்டான். சகுனியின் நினைப்பு இப்படிப் போனது! ‘கடைசிப் பகுதியை இப்போதே சொன்னால் துரியோதனன் தயக்கம் காட்டுவான். கர்ணனும் கூட உற்சாகப் படுத்த மாட்டான். ‘பாண்டவரை அடிமைப்படுத்த வேண்டும்' என்ற உடனேயே கர்ணன் கையைச் சுட்டுக்கொண்டவன் போல 'ஐயோ!' என்று கூவிவிட்டான்.

யுதிஷ்டிரன் எல்லாவற்றையும், எல்லோரையும், தன்னையும் இழந்து நிற்கும் போது 'யுதிஷ்டிரா! உன்னிடம் விலை மதிப்பில்லா மாணிக்கம் ஒன்று உள்ளது. அது உனக்கு எப்போதும் சகல சௌபாக்கியத்தையும் தரவல்லது. அதை எதிர் நிறுத்தினால் நிச்சம் வெற்றி உனக்கு உண்டாகும்', என பலவாறு வார்த்தை ஜாலங்களை அள்ளி வீசி, திரௌபதியை பணயமாய் எதிர் நிறுத்தி, இதுவரை இழந்த பொன், பொருள், நாடு, நகரம் முதலியவற்றை மீட்க வேண்டி ஆடு எனச் சொல்ல வேண்டும். திரௌபதியை தாராளமாய் புகழ வேண்டும்; துதிக்க வேண்டும்.

தண்ணீரில் மூழ்குபவன் சிறு மரத்துண்டு மிதந்தாலும் அதைப் பற்றுவான். அதுபோல், கலங்கி நிற்கும் யுதிஷ்டிரன், புத்தி, மனம் ஏதும் செயல்படாது. பிரமித்து, திரௌபதியையும் வைத்து விளையாடுவான். தவிர தோற்றாலும் 'நீங்கள் அனைவரும் உள்ள இடத்திற்குத்தான் அவளும் வருவாள்' என புரிந்தும் புரியாமலும் வேகமாய் முன்னும் பின்னும் சொல்லி ஏதாவது குழப்பம் செய்து, ஆட வைத்து, வெற்றி கொண்டு, பிறகு யுதிஷ்டிரன் செய்தது அனைத்தும் தவறு, குற்றம், என குறைகள் கூறி, பாண்டவர்கள் வனவாசத்திற்கு வழி வகுத்துவிட வேண்டும்.

இந்த சாகசத்தில் துரியோதனன் ஒத்துழைப்பும் வேண்டும். 'நாட்டை வென்ற பிறகு இரண்டாவது ஆட்டம் ஏன்?' என்று கேட்டவன் அல்லவா? சிறு பொறியே, பெரு நெருப்புக்குக் காரணம் ஆகும். திரௌபதியோ அணையா நெருப்பு. அவளையும் அடிமை என்று கடைசியில் சொல்லி, நாட்டைவிட்டு வெளியேற்றிவிட வேண்டும். பாண்டவரை வென்ற வெற்றிக் களிப்பில், துரியோதனன் இருக்கும் போது இதைச் சொல்லி, சொல்லியபடி செய்து, எல்லோரையும் வனவாசத்திற்கு அனுப்பிவிட வேண்டும்.

துரியோதனன் தன் புஜபலத்தில் அதிகம் நம்பிக்கை கொண்டவன். பாண்டவர்களை எப்படியோ வெற்றி கொண்டு வனவாசம் அனுப்பிவிட்டால் போதும்; திரௌபதியால் ஏதும் செய்ய முடியாது என்று எண்ணுவான்.

எனக்குத் தெரியும் அவளால் பெருந்தீயை உருவாக்க முடியும் என்று. சட்டியில் இட்ட தீயைப் போல, அவளையும் அடிமை என்று கூறி, நாட்டை விட்டு எட்டி வைத்துவிட வேண்டும். அப்படி செய்யாமல் போனால், திரௌபதி நாட்டில் இருந்தாலும், காட்டில் இருந்தாலும் தீதுதான்.’

பெண் என்பவள் அளப்பறிய சக்தியை தன்னுள்ளே கொண்டவள். அதிலும் சக்தியின் வடிவாகவே யாகத்தில் தோன்றியவள் இவள். இவளிடம் சற்று எச்சரிக்கையைத்தான் இருக்க வேண்டும்.

சகுனி தனிமையில் அமர்ந்து மேலும் சிந்தித்தான். 'துரியோதனன் ஒன்று, ஐந்து, பன்னிரண்டு என்ற காய்களை உருட்டுதல் மூலம் வெற்றி என நினைக்கிறான். நாடகத்தில் காய்கள் ஒரு சிறு அங்கம். "காய்கள் நடிக்குமா?" என்றும் கேட்டான்! நடிக்க வைப்பேன் என நம்பவைத்தேன். இது ஆரம்பம்; அவ்வளவுதான்.

முதலில் யுதிஷ்டிரனை வரவழைக்க வேண்டும். காய் ஆட வைக்க வேண்டும். பிறகு ஆட்ட முடிவில் நாடு எங்களுடையது என்று முடிக்க வேண்டும். இது நாடகமோ அல்லது நிஜமோ. இந்த பகுதி, எதிர்பாராது கடைசியில் தான் வர வேண்டும். இந்த வனவாசத்தை முதலிலோ அல்லது ஆட்ட நடுவிலோ சொன்னால் எல்லாம் குலைந்து போய்விடும். துரியோதனன் ஒரு முரட்டு குழந்தை. அவனை நாடு எனும் பொம்மையக் காட்டிதான் வழிக்குக் கொண்டுவர வேண்டும்.

யாருக்கும் துளி சந்தேகம் கூட ஏற்படாதவாறு என் சொக்கட்டான் வலை பின்னப்பட வேண்டும். பாண்டவர்களோ, அல்லது விதுரர், பீஷ்மர் போன்றவர்களோ சற்று சந்தேகப் பட்டுவிட்டால், நான் என்ன சாமர்த்தியம் செய்தாலும் காரியம் கைகூடாது.

முதலில் சிறு எண்ணிக்கையில் பொற்காசுகள் பணயம். அப்போது, துரியோதனன் கைப்பொருள் மட்டும் தான் ஆட உபயோகப் படுத்தப்படுகிறது - என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். அரசாங்க கருவூலத்திலிருந்து அரைக்காசு கூட துரியோதனன் பெறவில்லை என்று விதுரர் முதலில் நம்ப வேண்டும். பிறகு யுதிஷ்டிரன் கேட்டதைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படும்படி செய்ய வேண்டும்.

மன்னன் என்பவன் தனக்கு பிரியமானவர்களுக்கு சந்தோஷ மிகுதியால் தான் அணிந்திருக்கும் ஆபரணங்களைத்தான் தருவான். துரியோதனனும் முதலில் யுதிஷ்டிரனின் முத்து மாலையைத்தான் கேட்க வேண்டும்.

யுதிஷ்டிரன் கண்ணில் சூது மறைந்து, தம்பி துரியோதனன் கேட்டதைக் கொடுக்க வேண்டும் என்ற மன ஆவலை உண்டாக்க வேண்டும். பிறகு பசு மந்தைகள், சில கிராமங்கள், பல கிராமங்கள் என வலையைப் பெரிதாக்க வேண்டும். ஒரு நிலையில் பல பிரதேசங்களை வென்று, கடைசியில் இந்திரப்பிரஸ்தம் என்று கேட்க வேண்டும்.

அப்போது யுதிஷ்டிரனின் நாட்டின் பல பகுதிகள் துரியோதனன் கையில் வந்திருக்கும். அந்த நிலையில் யுதிஷ்டிரனால் ஏதும் செய்ய முடியாது. வென்ற பகுதிகளை பணயமாய் காட்டி, இந்திரப்பிரஸ்தம் கவர வேண்டும். குரங்கு ஆப்பம் பிட்ட கதைதான் - நாடு முழுதும் நம்வசம்!

"ஐயோ!" என்று கூவிய கர்ணன் வாயால், "இங்கு இருப்பவர்கள் அங்கு வந்தால் என்ன? அங்கு இருப்பவர்கள் இங்கு வந்தால் என்ன? பூரண சம்மதம்" எனக் கூற வைத்தது போல், நாடகத்தின் மறுபகுதியை நடத்திவிட வேண்டும்'.

சகுனி யோசித்து திட்டமிட்ட நாடகம் நன்றாகவே நடந்து கொண்டிருந்தது. ஆனால் யுதிஷ்டிரன் திரௌபதியையும் தோற்றான் என்றவுடனேயே, சகுனியின் பிடிப்பை மீறி, துரியோதனனும், அவன் சகோதரர்களும் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்துவிட்டனர்.

சற்றும் எதிர்பாராமல் கர்ணனும் கூட அல்லவா, திரௌபதியிடம் தன் துவேஷத்தை, தாதி என விளித்து அவையில் கொட்டி விட்டான்.

ஆக, இதுவரை, ஆற அமர பல நாட்கள் ஒத்திகை பார்த்து நடத்திய நாடகத்தின் முடிவில் எது நடந்துவிடக் கூடாது என சகுனி நினைத்தானோ அதில் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர், துரியோதனனும் அவன் கூட்டமும்

(என்ன நடந்தது என்பதை நம்மில் பலரும் நன்கு அறிவர். எனவே அவை மிகச் சுருக்கமாய்....)

சூதாட்டம் தொடங்கியது. தாயம் உருட்டப்பட்டது. விதுரர், பீஷ்மர் போன்றோர் மௌனியானார்.

பந்தயம் என்ன? என்றார் தருமர்.

அளவிலா செல்வம் என்னிடம் உண்டு. ஒரு மடங்கு நீங்கள் வைத்தால் ஒன்பது மடங்கு நான் வைப்பேன் என்றான் துரியோதனன்...

ஒருவர் ஆடப் பணயம் வேறொருவர் வைப்பதா?? என்றார் தருமர்.

மாமன் ஆடப் பணயம், மருமகன் வைக்கக்கூடாதா? இதில் என்ன தவறு? என எதிர்வாதம் புரிந்தான் சகுனி.

பரபரப்பான ஆட்டத்தில், படிப்படியாக ஏராளமான பொருட்களை இழந்தார் தருமர். மாடிழந்தார். ஆடிழந்தார். அவர் படைகள் அனைத்தும் இழந்தார். நாடு இன்னும் இழக்க வில்லை தருமா, நாட்டை வைத்து ஆடு, என்று தூண்டினான் சகுனி.

விதுரர் இதை தடுக்க ஆன மட்டும் முயற்சி செய்கிறார். ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது போய் விட்டது. இழந்தது எல்லாம் மீண்டும் பெறலாம். மீண்டும் ஆடு. வைத்து ஆட பொருள் இல்லை என எண்ணாதே, உனது தம்பிகளை வைத்து ஆடு. என மீண்டும் காயுருட்ட வைத்து, சகோதரர்கள் நால்வரை இழந்தார் தருமர்.

அதிலே மகிழ்ச்சி மிக அடைந்தான் துரியோதனன். அதற்கு சகுனி, வெந்த புன்னை கோல் கொண்டு குத்தாதே, இவர்கள் உன் சகோதரர்கள் என பாண்டவர்கள்பால் அன்பு மிக்கவரைப் போலே பேசி, திரௌபதியை வைத்து இழந்த அனைத்தையும் மீட்கலாம் என யோசனை கூறுகிறார்.

சிறிதும், சிந்தனையின்றித் திரௌபதியை அந்த கொடியவர் அவைக்களத்தில் பணயமாக வைத்தார் தருமர். திரௌபதியும் சூதில் வீழ்ந்தாள். கௌரவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

விதுரரிடம், நீங்கள் சென்று பாஞ்சாலியை இங்கே தாதியாய் பணிபுரிய அழைத்து வாருங்கள் எனக் கூற... கோபம் மிகுந்த விதுரர், கௌரவர்களே! பேராசை கொண்டு பிழைகள் பல செய்கிறீர். பாண்டவர் பாதம் பணிந்து, அவர்கள் இழந்ததை அவரிடமே கொடுத்து விடுங்கள். இதனை நீங்கள் மேற்கொள்ளவில்லை எனில் மகாபாரதப்போர் வரும். நீங்கள் அனைவரும் அழிந்து போவீர். என அறிவுரை கூறுகிறார்.

அதற்கும் சிரித்த துரியோதனன், என்னை சபிப்பதே உங்களுக்கு வேலையாகப் போய்விட்டது எனக் கூறி தேரோட்டியை அழைத்து திரௌபதியை அழைத்துவரப் பணிக்கிறான். திரௌபதி மறுக்க, துச்சாதனன் செல்கிறான். சென்று அங்கே தனித்திருந்த அவளை, தலை முடியைப் பற்றி அவைக்கு இழுத்து வருகிறான்.

அவள், கதறிக் கதறி அங்கே இருக்கும் அவையோரிடம் நியாயம் கேட்க, சகுனி முன் வாயில் வழியே வரும்போதே நியாயம் தான் பின் வாயில் வழியாகப் போய்விட்டதே. பின்னர் யார் சொல்லுவார் நியாயம்??

யுதிர்ஷ்டிரர், தன்னை இழந்து, என்னை இழந்தாரா??? அல்லது என்னை இழந்து தன்னை இழந்தாரா?? என பாஞ்சாலி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவார் யாரும் இல்லை. தன்னை இழந்த பின், என்னை அவரால் எப்படி சூதில் வைத்து ஆட முடியும்??? எனக் கேட்டாள்.

பீஷ்மர் கூட, கணவனுக்கு கட்டுப் பட்டவள் மனைவி. எனவே தருமன் உன்னை வைத்து ஆடியதும் முறைதான் என்று சொல்லி விடுகிறார்.

அவை நடுவே விரித்த கூந்தலுடன் இவள் பேச பேச ஆத்திரம் கொண்ட அறிவிழந்தவர்கள், அடிமைகளுக்கு எதற்கு அங்கவஸ்திரம்??? நீக்குங்கள் அதை.. என சொல்ல, அவர்கள் ஆடைகளும் கூடவே திரௌபதியின் ஆடையும் நீக்கச் சொல்கின்றனர்.

கண்ணனின் அருளால், அவள் ஆடை வளர்ந்தது அவள் மானம் காக்க, அவள் உடுத்தி இருந்த மஞ்சள் ஆடையில்.. அவளே கொழுந்து விட்டு எரியும் நெருப்பு போல பிரகாசித்து, அவையில் இருந்தவர் அனைவரும் வெப்பத்தை உணர்ந்தனராம். நடந்த அவமானத்தில் வெளிறிய அவள் முகம், நெருப்பில் தோன்றும் வெள்ளை சுடராய் ஜொலிக்க, மேல்நோக்கி எரியும் நெருப்புக்கு புகை கீழ் நோக்கி போவது போல விரித்த அவள் கூந்தல்...

சபை நடுவில் அவள் நிற்க, ஒன்றுக்கு ஐந்தாய் கணவர்கள் இருக்க, தன் நிலை இப்படி ஆனதே என அவள் கலங்கி நின்றது சில நிமிடம் தான். துகிலுரிக்கும் அவமானம், நடந்த பின், காளியாய் ஆனாள் பாஞ்சாலி..

சகுனி கூட இதை எதிர்பார்க்க வில்லை. அவன் எண்ணியது எல்லாம், பாண்டவர் ஐவரையும் அடிமையாய் காட்டி, பாஞ்சாலியையும் கூட நாட்டைவிட்டு எட்டி வைத்துவிட வேண்டும் என்றுதான் நினைத்திருந்தான்.

ஆனால் பஞ்சபூதங்களின் துணையுடன் பட்டினப்பிரவேசம் புறப்பட்டதுபோல், பாஞ்சாலி அரச அவையில் விரித்த கூந்தலுடன் வளர்ந்த வஸ்திரத்துடன், ஊழி கூத்து நடத்தும் மாகாளி
போலே நின்று கேட்க ஆரம்பித்துவிட்டாள்.

சூதும் சதியும் அறிந்த சகுனியே கலங்கிவிட்டான். இனி நடப்பது எதுவும் நம் கையில் இல்லை. நடப்பது நடந்தே தீரும் - என்று எதிர்பார்த்து மனத்தை திடப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான் சகுனி.

பாஞ்சாலி என்ன செய்தாள், தன்னைக் காக்க தன் மானம் காக்க என்பதை நாம் அடுத்த பகுதியில் காண்போம்.

சான்வி
07-11-2011, 03:56 AM
பகுதி இருபத்தி ஏழில் ஒன்று – சூதாட்டம் – இறுதிப்பகுதி :

அனைவரும் கூடி இருந்த சபையில், ஆடை இழுத்து அவமானப் படுத்தப்பட்டாள் திரௌபதி. பின்னர் என்ன நேர்ந்தது என்பதைக் காண்போம்.

அவையில் அவளுக்கு நேர்ந்த அவமானத்திற்கு மன்னிப்பு கேட்கிறார் மன்னர் (திருதராஷ்டிரன்)

(அவமானப்பட்டிருக்கும் திரௌபதி நீதி கேட்டு, மன்னர் திருதராஷ்டிரர் முன்னால், மற்றவர்கள் வாய்மூடி மௌனமாய் இருக்கும் போது தன் பக்கத்தைத் தானே எடுத்துச் சொல்லும் நிலையில் நிற்கிறாள்)

மன்னரின் அனுமதியின் பேரில், சகுனியின் சூதை முறியடித்து, தானே சூதாடி, ஐவரையும் சூதில் வெல்வதாயும், அதுவரை ஆடி இழந்த அனைத்தையும், மீண்டும் பாண்டவர்களுக்கே அளித்து, அவர்களை திரும்ப அதே மரியாதையுடன் அனுப்பி வைத்ததாயும் அந்த இணைய தளத்தில் (பிதாவின் கதைகள்) நான் படித்தேன்.

மீண்டும் அடுத்த நாள் அவை கூடுகிறது.

முந்தைய தினத்தின், சூதாட்டத்தில் அரச குமாரர்கள் அத்துமீறல் பலருக்கு பலவாறு பரவி, அவை நிரம்பி வழிகிறது.

சூதாட்டம் என்பது மகிழ்ச்சிக்காய், வெறும் பொழுது போக்காய் மட்டுமே ஆடப் பட வேண்டியது. அதை வினையாக மாற்றியது யார்? என்பன போன்ற ஆராச்சிகளைக் கை விட்டு, மீண்டும் அதே போலே இரு இளவரசர்களும் ஆடட்டும். இதில் தோற்றவர்கள் வனவாசம் போகட்டும் என முடிவு செய்யப்பட்டு, ஆட்டம் மீண்டும் துவங்குகிறது.

இப்போதும் சகுனி, மந்திரம் சொல்லி, துர் தேவதைகளை பகடைக்காயில் கட்டி இருக்கிறான்.

இந்த சூதில் தோற்றால், தன் தலையை தானே கொய்து கொள்வதாக, துரியோதனனுக்கு வாக்கு கொடுத்திருந்தார்.

அந்த தேவதைகளை விடுவிக்கும் பொருட்டும், சகுனியின் உயிரை காக்கும் பொருட்டும், யுதிர்ஷ்டிரர், வெல்லும் வாய்ப்பு இருந்தும் தோற்கிறார் சூதில்.

ஒத்துக்கொண்ட முறைப்படி, பன்னிரு ஆண்டுகள் வனவாசமும், ஒரு வருடம் அஞ்ஞாதவாசமும் செய்ய வேண்டும். அந்த ஒரு வருடத்தில் அவர்கள் வெளிப்பட்டால் மறுபடியும் வனவாசம் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவரை இந்திர பிரஸ்தம் அஸ்தினாபுரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். தருமர் திரும்ப வந்தவுடன் அவரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் முடிவு செய்யப்படுகிறது.

சூதாட்டக் களத்தில் தோல்வி அடைந்த போதும் கூட யுத்தம் பற்றிய சிந்தனை பாண்டவர்களுக்கு இல்லை. பாஞ்சாலியை துகிலுரிந்து அவமானப் படுத்தியதால் வந்த வினை. வினையை விதைத்தவர்கள், அதை அறுக்க, அறுவடை வரும் போது தயாராக வேண்டும் இல்லையா??? இதில் பாண்டவர்களின் சபதங்கள் :

பாஞ்சாலி துகிலுரியப்பட, அவள் கண்ணனை வேண்ட, அவள் வஸ்திரம் வளர, அதை இழுத்த துச்சாதனன் மயங்கி விழ.....

பீமன் எழுந்தான். 'விண்ணவர் மேல் ஆணை. பராசக்தி மீது ஆணை. கண்ணன் மேல் ஆணை. எங்கள் மனைவி திரௌபதியை, தொடை மீது உட்கார் என்று கூறிய துரியோதனனை போர்க்களத்தில் தொடையைப் பிளந்து அவன் உயிரை போக்குவேன். சேலை பிடித்து இழுத்த துச்சாதனனின் தோள்களைப் பிளப்பேன்' என்று சபதம் செய்தான்.

அர்ச்சுனன் எழுந்து 'பாஞ்சாலியின் சேலையை அகற்றச் சொன்ன கர்ணனை போரில் மடிப்பேன். இது கண்ணன் மீதும், திரௌபதி மீதும், காண்டீபம் என்னும் என் வில் மீதும் ஆணை' என்று சபதம் செய்தான்.

சகுனியின் தலையை துண்டிப்பேன் என்றான் சகாதேவன்.

பாரதப்போரில் சகுனியின் மகனான உலூகனைக் கொல்வேன் என்றான் நகுலன்.

பாஞ்சாலியோ, எந்தப் பெண்ணுக்கும் இல்லாத அவமானம் எனக்குத் தந்த துச்சாதனன், துரியோதனன் இவர்கள் ரத்தத்தை கூந்தலில் தடவி குளித்து பின்னரே கூந்தல் முடிப்பேன் என்றாள்.

அவளது சூளுரையைக் கேட்டு, விண்ணகம் மலர் மாரி பொழிந்தது. மண்னகம் அதிர்ந்தது. இதுதான் பாண்டவர்களின் சபதங்கள்.


பகுதி இருபத்தி ஏழில் இரண்டு : வனவாசம் :


பாண்டவர் வனவாச சேதி அறிந்து, அஸ்தினாபுர மக்கள் அழுது துடித்தனர். அவர்களுடன் காடு செல்லவும் முயன்றனர். தருமர் அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு கிளம்பினார்.

வனத்திலும் அவர்களைக் காண, ரிஷிகளும் மற்றவரும் வந்த வண்ணம் இருந்தனர். அவர்களுக்கு உணவளிக்க முடியாது வருத்தம் மிகக் கொண்ட யுதிஷ்டிரர், மற்றும் பாஞ்சாலி, சூரியனை வேண்ட, அட்சய பாத்திரம் கிடைத்தது.

சகோதரர்களுக்கு போரில் விருப்பம் இருந்தாலும், தருமரின் சொல்லுக்கு பணிந்து வனவாசத்தில் இருந்தனர். அப்போது அங்கு வரும் வியாசர், இந்த பதிமூன்று வருடங்கள் வெறும் தவக்கோலம் பூண்டு இருத்தல் மட்டும் போதாது.

துரியோதனன், தன் பலத்தை பெருக்கிக் கொள்வான். ஏற்கனவே வலிமை வாய்ந்த, பீஷ்மர், துரோணர், கர்ணன் முதலானோர் அவன் பக்கத்தில் உள்ளனர். எனவே நீங்களும் உங்கள் பலத்தை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். நான் 'பிரதிஸ்மிருதி' என்னும் மந்திரத்தை சொல்லித் தருகிறேன்.அர்ச்சுனன் இமயம் சென்று..இம் மந்திரத்தை உச்சரித்துச் சிவபெருமானையும்,தேவேந்திரனையும், திக்குப் பாலகர்களையும் வேண்டித் தவம் செய்வானாக.சிவபெருமான் பாசுபதக்கணையை நல்குவார்.அவ்வாறே பிறரும் சக்தி வாய்ந்த கருவிகள் பலவற்றை அளிப்பார்கள்' என்று கூறி மறைந்தார்.

அது போலவே சென்று, அனைத்துக் கலைகளையும் மேலும் நன்கு கற்று நிகரற்ற வீரனாய் அர்ஜூனன் திகழ்ந்தான். அவ்வாறே ஆன்ம பலத்திலும் சிறந்து இருந்தான். அதனாலேயே ஊர்வசியிடம் “பேடியாகப் போவாய்” என சாபம் பெற்றான். இவ்வாறே அவன் தேவலோகத்தில் வசித்து வந்தான்.

பீமனும், திரௌபதியின் விருப்பம் காரணமாக “சௌகந்தம்” எனும் ஆயிரம் இதழ் கொண்ட மலரை எடுத்து வரும் பொருட்டு சென்று அங்கே அனுமனை சந்திக்கிறார். அஞ்சனை மைந்தனால் ஆலிங்கனம் செய்யப்பட்டு புதியதோர் ஆற்றலும், உன், எதிரிகளால் உன்னை எதுவும் செய்ய முடியாது எனும் வரமும் பெறுகிறான் பீமன்.

அர்ச்சுனனை பிரிந்த சகோதரர்கள் அவரை மீண்டும் எப்போது காண்போம் என்றிருந்தனர்.அப்போது ..இந்திர உலகத்திலிருந்து ஒரு தேர் வந்தது.அதில் வந்திறங்கிய அர்ச்சுனன், தன் தேவலோக அனுபவங்களை, மற்றும் சிவபெருமானிடம் பாசுபதக்கணை பெற்றது என எல்லாவற்றையும் சொன்னான். அனைவரும் மகிழ்ந்தனர்.

இந்நிலையில் வனவாசம் பத்து வருடங்கள் ஓடிவிட்டது. மீதம் இரண்டு ஆண்டுக்காலம் அவர்கள் காம்யகம் முதலிய வனங்களில் சஞ்சரித்தனர்.

பல திருத்தலங்களுக்குச் சென்று திரும்பிய அந்தணன் ஒருவன், காம்யக வனத்தில் பாண்டவர்களை சந்தித்து அவர்களது நிலைமையை அறிந்தான். அவன் அஸ்தினாபுரம் சென்று திருதிராட்டினனைக் கண்டு பாண்டவர்களின் மேன்மையைக் கூறினான்

காட்டில் பாண்டவர் நிலை அறிந்த துரியோதனன் கவலையுற்றான். பதின்மூன்று ஆண்டுகளில் செயலிழந்து போவார்கள் என எண்ணியது தவறு என எண்ணினான்.

சகுனி, துரியோதனனிடம், 'நாமும் காட்டிற்குச் சென்று பாண்டவர் நிலையறிந்து, நம் செல்வச் சிறப்பையும் காட்டி வருவோம்' என்றான்.

கானகம் சென்று, அங்கே பாண்டவர்களின் தங்குமிடம் அருகே கூடாரம் இட்டு தங்கி இருந்தனர்.

அருகில் இருந்த தடாகத்தில், கூட்டம் கூட்டமாக கந்தர்வர்கள் வந்து நீராடுவது..கௌரவர்களுக்கு இடையூறாக இருக்க, கந்தர்வர்களை உடனடியாக விலகுமாறு துரியோதனன் கட்டளையிட்டான்.

இருவருக்கும் போர் மூண்டது. இதில், கௌரவர்கள் தோல்வியுற, அவர்களை கைகளைக் கட்டி இழுத்துச் சென்றனர் கந்தர்வர்கள்.

அப்போதும் பகையை மனதில் கொள்ளாது, அவர்களை போராடி விடுவித்தனர் பாண்டவர்கள்.

அங்கே ஒருநாள், பாண்டவர்கள் அனைவரும் வெளியே சென்றிருக்க, அவ்வழியே சென்ற ஜயத்ரதன் திரௌபதியின் அழகில் மயங்கி கண்டவுடன் காதல் கொள்கிறான். பாஞ்சாலி அதை மறுக்க, அவன் விடாது இவளை வற்புறுத்தி, அவளை கவர்ந்து செல்கிறான். திரும்ப வந்த பாண்டவர்கள் இவனுடன் போரிட்டு, பீமன் அவனைக் கொல்லப் போகையில் தருமர் அவனை விட்டு விடச் சொல்கிறார்.

அவமானம் அடைந்த ஜயத்ரதன், சிவனைக் குறித்து கடும் தவம் புரிந்து, பாண்டவர்களை போரில் வெல்ல வேண்டும் எனக் கோருகிறான். கண்ணன் துணை இருப்பதால், அவர்களை வெல்ல முடியாது. வேண்டுமானால், ஒரு நாள் அவர்கள் அனைவரையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலை அளிக்கிறேன் என வரம் அருளி மறைந்தார். இவன்தான் 13ம் நாள் போரில் வீரன் அபிமன்யுவைக் கொன்றவன்

பன்னிரண்டு கால வனவாசம் முடியும் தருணம் நெருங்கியது. அதற்குள் பாண்டவர்களுக்கு ஒரு சோதனை வந்தது. வேள்விக்கு உதவும், அரணியுடன் கூடிய கடைகோல் ஒன்றை முனிவர் ஒருவர் இழந்தார். அது ஒரு மானின் கொம்பில் ஒட்டிக்கொள்ள, மருண்ட மான் அதனுடன் ஓட்டம் பிடித்தது. தமது வேள்வி தடைபடாமல் இருக்க, அதை மீட்டுத்தரும்படி, பாண்டவர்களை அம்முனிவர் கேட்டார்.

மானைத் தொடர்ந்து போய், அந்த கடைகோலை கண்டுபிடிக்க இயலாது, நச்சுப் பொய்கையில் நீர் அருந்தி, ஒருவர் பின் ஒருவராக உயிர் துறந்து, பின்னர் தருமர் அந்த யட்சனுக்கு பதில் கூறி, அனைவரையும் உயிருடன் பெற்ற நம் அனைவருக்கும் தெரிந்த கதை தான்.

ஓராண்டுகால அஞ்ஞாத வாசத்தை எப்படி நிறைவேற்றுவது என ஆலோசித்த பாண்டவர்கள், அதற்கு விராட நாடே ஏற்றது என முடிவு செய்தனர்.

இதில் விருப்பம் இல்லாத அர்ஜூனன், நீங்கள் ராஜசூய யாகம் செய்த மன்னர், இன்னொரு மன்னரிடம் அடிமையாய் இருப்பதா என மறுத்தான்.

அப்போது தருமர் 'தம்பி வருந்தாதே. கங்கன் என்னும் பெயருடன் துறவுக் கோலம் பூண்டு, விராட மன்னனுக்கு ஆசி கூறும் உயர் நிலையில் இருப்பேன்' என்றார்.

பின் ஒவ்வொருவரும் எப்படி மாறுவேஷத்தில் இருப்பது எனப் புலப்படுத்தினர்.

தான் சமையல்கலையில் வல்லவன் என்றும், மடைப்பள்ளியைச் சார்ந்து வல்லன் என்னும் பெயருடன் சுவையான உணவு மன்னனுக்கு அளிக்கும் பணியில் ஈடுபடுவேன், என்றான் பீமன்.

தான் இந்திரலோகத்தில் பெற்ற சாபத்தை பயன்படுத்திக் கொள்ளப் போகதாகவும், அதன்படி 'பேடி' வேஷம் தாங்கி, பிருகன்னளை என்ற பெயருடன், அரசகுமாரிக்கு நடனம், இசை ஆகியவை கற்றுத் தரும் பணியில் ஈடுபடப் போவதாக அர்ச்சுனன் கூறினான்.

தான் குதிரை இலக்கணங்களை அறிந்திருப்பதால், தாமக்கிரந்தி என்ற பெயரில், குதிரைகளை பாதுகாப்பாக வளர்க்கும் பணியில் ஈடுபடப் போவதாக நகுலன் கூறினான்.

தான் தந்திரிபாலன் என்ற பெயரில், மாடுகளைப் பார்த்துக் கொள்ளும் பணியில் ஈடுபடப்போவதாக சகாதேவன் உரைத்தான்.

தான் சைரந்தரி என்னும் பெயருடன் மன்னன் மனைவிக்கு ஒப்பனை செய்யும் பணியில் ஈடுபடுவேன் என்றாள் திரௌபதி.

பின், தங்கள் ஆடை, மற்றும் ஆயுதங்களை வைக்க இடம் தேடி, மக்கள் நடமாட்டம் அற்ற ஒரு சுடுகாட்டில், ஓங்கி வளர்ந்த ஒரு வன்னி மரத்தின் உச்சியில் இருந்த பொந்தில் அனைவற்றையும் வைத்தனர்.

பின்னர் தருமர் துர்க்கையை நோக்கி தியானம் செய்ய, துர்க்கையும் காட்சி அளித்து, அஞ்ஞாத வாசம் நல்லபடி நடந்தேறும் என்றும், பின் போரில் வெற்றியும் கிடைக்கும் என்றும் வரம் அளித்து மறைந்தது.

தருமருக்கு, தன் தெய்வீகத் தந்தையின் அருளால் தனக்கு வேண்டிய கோலம் தானாகவே வந்தமைந்தது. அதைப்போலவே மற்றவர்கள் தோற்றமும் அவரவர்கள் நினைத்தபடி மாறினர்.

அனைவரும் அவர் அவர் ஏற்றுக் கொண்ட வேலையை திறம்பட செய்தனர். பத்து மாதங்கள் அஞ்ஞாத வாசம் கழிந்தது. பின் ஒரு நாள்:

அரசி சுதேட்சணைக்கு தம்பி ஒருவன் இருந்தான். அவன் பெயர் கீசகன். அவன் அந்த நாட்டு படைத்தளபதியும் ஆவான். அவன் ஒரு நாள்.. அரசியைக் காண வந்த போது, சைரந்தரியைக் கண்டான். ஆசைக் கொண்டான். தன் இச்சைக்கு பணியுமாறு கேட்டான்.

வீண் தொல்லை தராதே! என் கந்தர்வக் கணவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்' என சைரந்தரி எச்சரித்தாள்.

காதல் மயக்கம் தீராத அவன், அரசியிடம் சென்று, அவ்வேலைக்காரியை எனக்கு பணியச் சொல் என்றான். தம்பி, அவள் அடைக்கலமாய் வந்தவள். அவளுக்கு தீங்கு இழைத்தால், அவளின் கந்தர்வக் கணவர்கள் உன்னைக் கொன்றுவிடுவார்கள்' என்றாள்.

ஆனால் அவன் பயப்படவில்லை. காதல் நோயால் மயங்கினான். வேறு வழி தெரியாத அரசி, சைரந்தரியிடம் கீசகன் வீட்டிற்கு உணவு கொண்டு செல்ல பணித்தாள்.

'நீ தான் போக வேண்டும்" என அரசி கடுமையாக ஆணையிட்டாள்.

சைரந்தரியும் சென்றாள். அவள் கையைப் பிடித்து இழுத்து..அவளை கீசகன் அணைக்க முயன்றான். ஓடிய அவளை எட்டி உதைத்தான். அரசமண்டபத்திற்கு வந்துவிட்டார்கள் அவர்கள். "இந்த அநீதியைக் கேட்பார் இல்லையா?' என கதறினாள். விராட மன்னன் உட்பட அனைவரும் மௌனமாய் இருந்தனர்.

பீமன் அவளை தனியாக சந்தித்து ஒரு யோசனைக் கூறினான். அதன்படி சைரந்தரியும், கீசகன் ஆசைக்கு இணங்குவது போல நடித்து, அவனை நடனசாலைக்கு வரச் சொன்னாள்.

அங்கே கீசகனை காலால் மிதித்துக் கொன்றான் பீமன். கீசகன் கொல்லப்பட்ட சேதி கேட்ட அவன் சகோதரர்கள் சைரந்தரியைக் கொல்ல வர, பீமன் அவர்களையும் கொன்றான்.

விராடன், இதற்கெல்லாம் சைரந்தரிதான் காரணம் என அவளை வெளியேற்றி விடுமாறு அரசியிடம் கூறினான்.

சைரந்தரி, அரசியிடம் இன்னும் ஒரு மாதம் பொறுத்திருக்கக் கூறினாள். 'கந்தர்வர்களால் இனி யாருக்கும் தீங்கு நேராது..நன்மையே நடக்கும்..இது சத்தியம்' என்றாள். அரசியும் சரி என அனுமதித்தாள்.

பதிமூன்று ஆண்டு காலம் முடியும் நேரம் நெருங்குகையில், துரியோதனன், இவர்களை எப்பாடு பட்டாவது கண்டு பிடித்து விட்டால், மேலும் ஒரு பதிமூன்று ஆண்டுகள் இவர்களை வனத்திலே இருக்க வைத்து விடலாம் என நாடு முழுதும் ஒற்றர்களை அனுப்புகிறான். அப்போதுதான் கீசகன் பற்றி அரிய நேருகிறது. நிச்சயம், பீமனால் தான் அவன் இறந்திருப்பான்.

விராட தேசத்தின் மீது நாலா புறமும் இருந்து போர் தொடுத்தால், நிச்சயம் அவர்கள் வெளிப்படுவார் என பேரும் படை திரட்டி, அங்கே போர் தொடுக்கச் செல்கின்றனர்.

அப்போது பிருகன்னளை வேடத்தில் இருக்கும் அர்ஜூனன், தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். பீஷ்மர், துரோணர், கர்ணன் போன்ற அனைவரையும் தோற்கடித்து, வெற்றியை உத்திரனுக்கு (விராட தேச இளவரசன்) உரித்தாக்குகிறான்.

அதில் பாண்டவர்கள் வெளிப்பட்டதாக, துரியோதனன் கூற, தருமர் அதை மறுத்து, ஒரு வருடம் முடிந்து பின்னரே தங்களை தாங்கள் வெளிப்படுத்தியதாக மறுக்கிறார். இதை பீஷ்மரும் அறிவார் எனக் கூறுகிறார்.

பின்னர், விடார தேச அரசர், தன் மகள் உத்திரையை அர்ச்சுனனுக்கு மணம்’ செய்ய விழைய, அர்ஜூனன், அவளை தன் மகள் போல ஒரு வருடம் நடத்தியதால், அவளை தான் மணமுடிக்க இயலாது, எனக் கூறி, தன் மகன் அபிமன்யுவுக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்கின்றனர்.

மீதி அடுத்த பகுதியில்...

சான்வி
07-11-2011, 04:01 AM
பகுதி இருபத்தி எட்டு : தூதும் அதன் முடிவும்


பாண்டவர்களின் வனவாசம் முடிகிறது. திட்டமிட்ட படி விராட தேச இளவரசி உத்திரைக்கும், அர்ஜுனனின் புத்திரன் அபிமன்யுவுக்கும் திருமணம் கோலாகலமாய் நடக்கிறது. திருமணத்திற்கு அழைக்கப்பட்ட மன்னர்கள் பலர் இருந்தனர்.

அவர்கள் நடுவே, வனவாசம் முடிந்தது. இனி ஆக வேண்டியது என்ன எனும் ஆலோசனை நடக்கிறது. கண்ணன், துரியோதனன் வஞ்சனையால் நாட்டை கவர்ந்து, வனவாசம் போக நிபந்தனை விதித்தான். அதை தவறாது நிறைவேற்றினர் பாண்டவர்கள். இனி ஒப்புக் கொண்ட படி நாட்டின் பாதியை தரக் கோரி யாரையேனும் தூது அனுப்ப வேண்டும் எனக் கூறினார்.

ஆனால், கண்ணனின் இக்கருத்தை பலராமர் ஏற்கவில்லை. சூதாட்டத்தில் தோற்ற நாட்டை திரும்பவும் தருமாறு வற்புறுத்துவது நியாயமில்லை. தூதுவன் நயமாக பேசிப்பார்க்கலாம். கொடுத்தால் பெறலாம். ஆனால் அதற்காக போர் கூடாது' என்றார்.

இந்த முக்கிய பிரச்னையில் பலராமரின் கருத்து ஏற்றத்தக்கதல்ல. பலநாட்டு மன்னர்களின் உதவி பெற வேண்டும். முதலில் கேட்போர்க்கே உதவுதல் மன்னரின் இயல்பாகும். ஆகவே உடன் செயல்பட வேண்டும். துரியோதனனிடம் செல்லும் தூதுவன் திறை வாய்ந்தவனாய் இருக்க வேண்டும் என்றார் துருபதன்.

துருபதனின் கருத்து ஏற்கப்பட்டது.

பிற மன்னர்களின் உதவியைப் பெறுவதில் துரியோதனன் முனைப்புக் காட்டினான்.

கண்ணனைப் பார்க்க துவாரகைக்குச் சென்றான். அதே நேரம் அர்ச்சுனனும் சென்றான். அப்போது கண்ணன் உறங்கிக் கொண்டிருந்தார். கண்ணனின் தலைப்பக்கம் துரியோதனனும், கால் பக்கம் அர்ச்சுனனும் அமர்ந்திருந்தனர். கண்விழித்துப் பார்த்த பரமன் கண்களில் முதலில் அர்ச்சுனனே தென்பட்டான். அர்ச்சுனன் பரமனின் உதவியைக் கேட்டான். துரியோதனனும் அதே சமயம் கேட்டான். நானே முதலில் வந்தேன் என்றான் துரியோதனன்.

ஆனால் நான் பார்த்தனைத்தான் முதலில் பார்த்தேன் என்றார் கண்னன். ஆயினும் என் உதவி இருவருக்கும் உண்டு. என் உதவியை இரண்டாகப் பிரிக்கிறேன். ஆயுதம் இல்லா நான் ஒரு பங்கு, ஆயுதம் ஏந்தி கடும் போர் புரியும் அக்குரோணிப்படைகள் *** ஒரு பங்கு. அர்ச்சுனன் இளையவனாக இருப்பதால், அவன் விரும்பியது போக எஞ்சியது உனக்கு' என்றார் கண்ணன்.

அர்ச்சுனன் கண்ணன் மட்டுமே போதும் என்றான். தனக்குக் கிடைத்த படைப் பெருக்கம் குறித்துப் பெரிதும் மகிழ்ந்தான் துரியோதனன்.

பின், பலராமரிடம் சென்று உதவிக் கோரினான் துரியோதனன். பலராமரோ, கண்ணனுக்கு எதிராக என்னால் செயல் பட முடியாது. அதே சமயம் நான் பாண்டவர் பக்கம் போக மாட்டேன். நடுநிலைமை வகிப்பேன். போர் நடக்கையில் தீர்த்தயாத்திரை செல்வேன்' என்று கூறிவிட்டார்.

மத்ர தேச மன்னன் சல்லியன். பாண்டுவின் மனைவியான மாத்ரியின் சகோதரர். நகுல, சகாதேவர்களின் தாய் மாமன். பாண்டவர்கள் அவனை தங்கள் பக்கம் இருக்க வேண்டினர். அவனும் அதையே விரும்பினான். பெரும் படையுடன், பாண்டவர்கள் இருக்குமிடம் சென்றான்.

அவன் செல்லும் வழியெல்லாம், பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. படைவீரர்களுக்கு சிறந்த உணவு தரப்பட்டது. இவை யாவும், துரியோதனன் ஏற்பாடாகும். இது அறியா சல்லியன், இவை தருமரால் செய்யப்பட்டது என எண்ணினான். இது துரியோதனனுக்கு தெரிய வந்தது. அவன் ஓடோடி வந்து, சல்லியனிடம் எங்கள் வரவேற்பை ஏற்றமைக்கு நன்றி என்றான்.

துரியோதனின் சூழ்ச்சி வேலை செய்தது. சல்லியன் 'இவ்வளவு உபசரிப்பு அளித்தமைக்கு என்ன கைமாறு செய்வேன்' என்றான்.

வரும் போரில் தாங்கள் எங்களுக்கு உதவிட வேண்டும், என்றான் துரியோதனன். சல்லியன் தர்ம சங்கடத்தில் சிக்கிக் கொண்டான். ஆயினும், துரியோதனனுக்கு தன் ஆதரவு உண்டு என்றான்.

பாண்டவர்களை திட்டமிட்டபடி சந்தித்த சல்லியன், இடை வழியில் நடந்தவற்றைக் கூறினான். பாண்டவர்கள் அதிச்சியுற்றனர்.

என்ன செய்வது என அறியாத தருமர், ஒருவாறு மனம் தேறி, சல்லியனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். வரவிருக்கும் போரில் கர்ணனுக்கு தேரோட்டும் நிலை ஏற்படின், அர்ச்சுனனின் பெருமையை, அவ்வப்போது அவனுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதே அவ்வேண்டுகோள். பதினேழாம் நாள் போரில் சல்லியன் இதை நிறைவேற்றியதை பின் காண்போம்.

பாண்டவர்களின் தூதுவன், பாஞ்சால நாட்டுத் துருபதனின் புரோகிதன், அஸ்தினாபுரம் அடைந்தான். பாண்டவர்கள் பதின்மூன்று ஆண்டுகள், காட்டிலும், நாட்டிலும், நிபந்தனைப்படி வாழ்ந்து விட்டனர். அவர்களிடம் நாட்டை ஒப்படைப்பதே சரியான நீதியாகும். அப்படி அளிக்காவிடின் யுத்தம் தவிர்க்கமுடியாது என்றான்.

தூதுவன் உரை கேட்டுக் கர்ணன் கோபமுற்றான். பாண்டவர்களை வெற்றிக் கொள்ளத் தன்னால் முடியும் என்றான்.

கர்ணன் சொன்னதை பீஷ்மர் ஏற்கவில்லை. திருதிராட்டிரன் தூதுவனை திரும்பிப் போக பணித்தான்.

பின், திருதிராட்டிரன் கௌரவர்கள் கருத்தை பாண்டவர்களுக்குத் தெரிவிக்க சஞ்சயனை தூதுவனாக பாண்டவர்களிடம் அனுப்பினான். இந்திரப்பிரஸ்தத்தை மட்டுமல்ல, ஒரு கையளவு நிலம் கூட பாண்டவர்க்கு தரமுடியாது. போர் வருமேயாயின்..பாண்டவர் தோல்வியைத் தழுவுவர்.' என்றான் சஞ்சயன் பாண்டவர்களிடம்.

போரில் தருமருக்கு விருப்பமில்லை. ஆனாலும், நாட்டைத் திருப்பித் தராவிடின், போர் தவிர வேறு வழியில்லை என அறிந்துக்கொண்ட சஞ்சயன் அதை திருதிராட்டிரனிடம் வந்து தெரிவித்தான்.

திருதிராட்டிரன், விதுரரை அழைத்து அவர் கருத்தைக் கேட்டான். விதுரர் நீதிகளைக் கூறினார். பாண்டவர்களை வீரம் மட்டும் காக்கவில்லை. அவர்கள் போற்றும் தர்மம்தான் அவர்களின் உன்னத படை என்றார். மேலும், துரியோதனனிடம், அது இல்லை என்றும், அவன் மகத்தான துன்பம் அடையப் போகிறான் என்றும் உரைத்தார்.

திருதிராட்டிரன், விதுரர் கூறியது உண்மை என்பதை அறிந்தாலும், புத்திரப் பாசத்தால் மதி இழந்து தடுமாறினார்.

அடுத்த நாள் சபையில் இது தெரிவிக்கப் பட்டது.

பீஷ்மர், இன்னமும் காலம் கடத்தாமல் பாண்டவர்களின் நாட்டை திருப்பிக் கொடுங்கள். இல்லையேல் யுத்தத்தில் அனைவரும் மாண்டுவிடுவோம் என்றார்.

வழக்கம் போல பீஷ்மர் உரையை கர்ணன் ஏற்கவில்லை. இவர் நம்முடன் இருந்தாலும், இவர் மனம் பாண்டவர் வசமே உள்ளது. யுத்தம் வந்தால் நான் ஒருவனே பகைவர்கள் அனைவரையும் அழிப்பேன்' என்றான்.

கர்ணனைக் கண்டித்தார் பீஷ்மர். உன் வீரம் அனைவருக்கும் தெரியும், தற்பெருமை கொள்ளாதே என்றார்.

துரியோதனனிடம், பிடிவாதத்தை விடுமாறு திருதிராட்டிரன் கூறியும், அவன் கேட்கவில்லை.

தந்தையே! நான் அனைத்து விஷயமும் அறிந்தவன். என்னை தடுக்காதீர்கள். போர் தொடங்கட்டும் பார்ப்போம். என்னிடம் 11 அக்ரோணி படை உள்ளது. அவர்களிடம் 7 மட்டுமே உண்டு. அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என நான் எண்ணவில்லை. அதனால்தான் 5 ஊர்கள் போதும் என கெஞ்சிக் கேட்கிறார்கள். ஐந்து ஊசிமுனை அளவு நிலம் கூட அவர்களுக்கு நான் தரமாட்டேன் என்று கூறி அவையை விட்டு வெளியேறினான்.

சஞ்சயன் தூதாக வந்து சென்றபின், தருமர், எதற்கும் துரியோதனனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம் என்றார். மீண்டும் தூது செல்ல கிருஷ்ணன் தயாரானார்.

ஆனால் பீமன் கொதித்து எழுந்தான். சமாதானம் வேண்டாம். போர்தான் வேண்டும் என்றான். அர்ச்சுனன், நகுலன், சஹாதேவனும் சமாதான முயற்சியை விரும்பவில்லை. திரௌபதியும், அழுதவாறே துரியோதனன் சபையில் தான் பட்ட வேதனையை நினைவூட்டினாள்.

கிருஷ்ணர் அஸ்தினாபுரம் செல்லப் புறப்பட்டார். இதை அறிந்த திருதிராட்டினன், மகிழ்வது போல நடித்தான். விதுரரை அழைத்து தேர், யானை, குதிரை ஆகியவற்றையும் ரத்தினக் குவியல்களையும் பகவானுக்கு பரிசுப் பொருள்களாக வழங்க வேண்டும். என் நூறு புத்திரர்களும் கண்ணனை எதிர்கொண்டு அழைக்க வேண்டும். வரவேற்பு பிரமாதமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கூறினான்.

அவன் கருத்தை அறிந்த விதுரர், இத்தகைய ஆடம்பரங்களை கண்ணன் விரும்ப மாட்டார் என்றான்.

அஸ்தினாபுரத்தை அடைந்த கண்ணனும், இவ் வரவேற்புகளை பொருட்படுத்தாது, திருதிராட்டினன் மாளிகைக்கு செல்லாது விதுரரின் வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்த குந்தி அவரை வரவேற்றாள்.

துரியோதனன் கண்ணனை தன் மாளிகைக்கு விருந்தினராக வந்து மகிழ்விக்குமாறு வேண்டினான். ஆனால் கண்ணன் சம்மதிக்கவில்லை. காரியம் நிறைவேறுவதற்குள், தூதுவர் பகைவர் வீட்டில் உண்பது வழக்கமில்லை என்றார்.

கௌரவர், பாண்டவர் இருவருக்கும் நடுநாயகமாக விளங்கும் தாங்கள் ஏன் எங்களை பகைவராய் எண்ணுகிறீர்கள்? என துரியோதனன் கேட்டான்.

அதற்கு கண்ணன், பாண்டவர்கள் தர்மத்தை போற்றி நடக்கிறார்கள். நீ, அந்த தர்மவான்களை அழிக்க எண்ணுகிறாய். நான் எப்போதும் தர்மத்தின் சார்பில் இருப்பவன். தர்மத்திற்கு எதிரி, எனக்கும் எதிரி. அந்தவகையில், நீயும் எனக்கு பகைவன். ஆகவே உன் விருந்தை நான் ஏற்கமாட்டேன் என்றார்.

துரியோதனனின் விருந்தை கண்ணன் மறுத்தாலும், அவனது அவைக்கு தூதுவராய் சென்றார்.

பரந்தாமன் அவையில் நுழைகிறார். அனைவரும் எழுந்து வரவேற்க, அவரை அவமதிக்க வேண்டி, துரியோதனனும், கர்ணனும் மட்டும் எழாமல் இருக்கின்றனர். பரந்தாமன் பாதத்தை சற்றே அழுத்த, துரியோதனன் அவன் ஆசனத்தில் இருந்து கண்ணன் பாதத்தில் வந்து விழுகிறான்.

இதைக் கண்டு கோபம் கொள்கிறான் கர்ணன்

முறைப்படி அனைவருக்கும் வணக்கம் சொல்லி தன் இருக்கையில் அமர்கிறான் கண்ணன்.

திருதிராட்டினனை நோக்கி, துரியோதனனுக்கு அறிவுரைக் கூறி, அவன் அழிவைத் தடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், திருதிராட்டிரன், தன் இயலாமையைக் கூறினான்.

பின் கண்ணன் துரியோதனனைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

உனது தந்தையும், மற்றும் அனைத்து சான்றோரும், நீ பாண்டவர்களுடன் சேருவதையே விரும்புகின்றனர். அதைக் கேளாத நீ பெரும் துன்பமடைவாய். பீமனையும், அர்ச்சுனனையும் வென்றாலே, உனக்கு உண்மையான வெற்றி கிட்டும். ஆனால், அவர்களை வெல்ல உன் பக்கம் யாரும் இல்லை. குலத்தை அழித்த பழி உனக்கு வேண்டாம். பாண்டவர்களுக்கு பாதி நாட்டைக் கொடுத்துவிட்டு, அவர்களுடன் இணைந்து வாழ்வாயாக என்றார்.

துரியோதனன் பழைய பல்லவியையே திரும்ப பாடினான். ஊசி முனை அளவு நிலம் கூட தரமுடியாது என்பதில் உறுதியாய் இருந்தான்.

சான்றோர் உரையையும் நீ மதிக்கவில்லை. சமாதானத்தையும் விரும்பவில்லை. இப்படி இருக்கும் நீ போர்க்களத்தில் அழிவது உறுதி என்றார் மாதவன். அவரை ஒத்துப் பேசினார் விதுரர். துரியோதனன், அவர் பிறப்பைக் கேவலப் படுத்தி பேசி விடுகிறான். துரியோதனன் அவ்வாறு பேசக் கண்ட கர்ணன், சொல்லொணாத் துயரம் கொள்கிறான். கோபம் கொண்ட விதுரர் தன் வில்லை எடுத்துக் கொண்டு அவனைக் கொல்ல வருகிறார். கண்ணன் அவரைத் தடுக்கிறான்.

உலகை அழிக்கும் ஆற்றல் கொண்டது உங்கள் வில். கோபம் கொள்ளாதீர். அமைதி அமைதி என்கிறார்.

உண்மைதான் கண்ணா, என் வில்லுக்கு உலகை அழிக்கும் வலு உண்டு.. அது இவனுக்கு பயன்படக் கூடாது. என கோபத்தில் அவரின் விஷ்ணு தனுசுவை உடைத்து எரிந்து விட்டு அவையை விட்டு வெளியேறுகிறார்.

கண்ணன், துரியோதனனுக்காய், பரிதாபப் படுகிறார். யுத்த சமயத்திலா உனக்கு இவ்வாறு நேர வேண்டும்??? என்று.

அதை அலட்சியம் செய்து, என் நண்பன் கர்ணன் இருக்கையில் எனக்கு என்ன கவலை என்கிறான்.

கண்ணன் : நன்கு யோசனை செய்து உன் முடிவில் ஏதும் மாற்றம் இருந்தால் எனக்கு கூறு

துரியோதனன் : இப்போது சொல்லி இருப்பதே நல்ல முடிவுதான்.

கண்ணன் : சரி அப்போது நான் கிளம்ப வேண்டியதுதானே???

திருதிராஷ்டிரர் : சென்று வா கண்ணா. அடுத்த சந்திப்பு??

கண்ணன் : போர் பூமியில்...

கண்ணனை பீஷ்மர், விதுரர், துரோணர், திருதிராட்டிரன், அசுவத்தாமா, விகர்ணன் ஆகியோர் கரம் குவித்து வணங்கி வழி அனுப்பினர்.

கண்ணன், வெளியேறும் பொழுது, கர்ணனுடன் சற்று தனித்து பேச வேண்டும் என அழைக்கிறார். கர்ணனும் செல்கிறான்.

அப்படி என்னதான் பேசிக் கொண்டார்கள்??? அடுத்த பகுதியில்..

**************************************************

அக்குரோணிப்படைகள் ***

ஓர் அக்ரோணி படை என்பது:

21870 - தேர்கள் (ரத)
21870 - யானைகள் (கஜ)
65610 - குதிரைகள் (துரக)
109350 - காலாட்படைகள் (பதாதிகள்)
அடங்கியது ஆகும்.

சான்வி
14-12-2011, 02:52 AM
பகுதி இருபத்தி ஒன்பதில் ஒன்று : நீயும் ஒரு சத்ரியன்

கர்ணனுடன் தனித்து பேச வேண்டும் என கண்ணன் அழைக்க, என்னவாக இருக்கும் எனும் யோசனையுடன் கர்ணன் செல்ல, அவர்கள் உரையாடல் இனி...

கிருஷ்ணர், கர்ணனை தன் ரதத்தில், தன் அருகே அமர்த்திக் கொள்கிறார். கர்ணனோ, மனதில் நிறைய குழப்பமும், கூடவே கொஞ்சம் சங்கடமும் கொண்டவனாக முள் மேல் இருப்பது போல அமர்ந்திருக்கிறான். கடவுள் ஆனவன், மகாராணி குந்தியின் மருமகன், பாண்டவர்களுக்கு அனைத்துமானவன்.. இவனருகே நான் அமர்வதா??? என உள்ளத்திலே எண்ணங்கள் ஓடுகிறது.

இதை அறிந்த கண்ணன்,

கர்ணா, சங்கடம் வேண்டாம். தேரோட்டியின் மகன் நான் எனும் எண்ணம் உன்னை என்னிடம் இருந்து விலகி இருக்க வைக்கிறதா?? நீ இதுவரை உண்மை என் எண்ணி இருந்தது உண்மை அல்ல.

அதிரதன் மற்றும் ராதா உனை வளர்த்தவர்கள். பெற்றவர்கள் அல்ல.

கர்ணன் : கண்ணா, நானும் அறிவேன் அதை. (விழிகளில் நீர்) பிறப்பரியாதவன் நான். பிறந்த அன்றே எனைப் பேழையில் வைத்து கங்கையில் விட்டு விட்டாள் என் அன்னை.

கண்ணன் : உன் பெற்றோர் யாரென அரிய வேண்டாமா நீ??

கர்ணன் : தந்தை இவர் என தாய் சொன்னால்தான் தெரியும், அவளே யார் என அறியாதவன் நான். என்ன செய்வேன்???

கண்ணன் : பாண்டவர்களின் அன்னை குந்தி தான் உன் தாய். குந்திக்கும், சூரியக் கடவுளுக்கும் பிறந்தவன் நீ.

கர்ணன் : என்ன?? (ஆனந்தமும், கண்ணீரும் ஒன்றை ஒன்று மிஞ்ச தடுமாறுகிறான் கர்ணன்)

கண்ணன் : உண்மை. குந்தி கன்னியாக இருந்த போது, துர்வாசர் தந்த வரத்தை பரிசோதித்து பார்க்கையில் நீ பிறந்தாய். ஊர் உலகம் என்ன சொல்லுமோ என எண்ணி, ஒரு பேழையில் வைத்து, ஆற்றில் விட்டு விட்டாள்.

கர்ணன் : அம்மா... என் அம்மா... குந்தி தேவி. பாண்டவர்கள் என் சகோதரர்கள்... நான் தனியில்லை. நானும் ஒரு ஷத்ரியன். நானும் ஒரு உயர்ந்த குலத்தில் பிறந்தவன். என் பிறப்பில் எந்தக் களங்கமும் இல்லை. என் பிறப்பும் உயர்ந்ததுதான்.

கண்ணன் : ஆம் கர்ணா. நீ குந்தி அத்தையின் மகன்தான். ஆகவே நானும் உன் உறவினன்.

கர்ணன் : மகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி எனக்கு... எத்தனையோ ஏற்றங்கள் என் வாழ்வில் வந்த போதும், பிறப்பரியா ஒரே குறை, அத்தனைக்கும் அடியில் இருந்து, கண்ணுக்குள் விழுந்த துரும்பாய் எனை வருத்திக் கொண்டே இருந்தது பரந்தாமா. அந்த வருத்தம் போக கரும்பாய் இந்த விவரம் சொன்ன உனக்கு என் கோடி நன்றிகள் இதயத்தில் ஆழத்தில் இருந்து..

கண்ணன் : பாண்டவர்களில் மூத்தவன் நீ. என்னுடன் வா. உன்னை நான் குந்தி அத்தையிடம் அழைத்துச் செல்கிறேன். நீதான் அனைவருக்கும் மூத்தவன், கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களில். நீதான் அரசுக்கு உரியவன். அரசாளும் உரிமை உனக்குத்தான். என்னுடன் வந்து விடு உன்னை சக்ரவர்த்தியாக்குகிறேன்.

பாண்டவர்கள் சந்தோசம் மிக அடைவர் உன்னை அவர்களின் மூத்த சகோதரன் என்பதை அரிய நேர்கையில். துரியோதனனும், தருமனும், உன்னை மகிழ்ச்சியாய் மன்னனாக ஏற்றுக் கொள்வர்.

யுத்தம் இல்லாது, ரத்தம் சிந்தாது, பல உயிர்கள் இறந்து போகாது இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு வந்துவிடும்.

கர்ணன் : ஆனாலும்.....

கண்ணன் : உயர் குலத்தவன் கர்ணா நீ. இத்துணை நாளும் ஒரு தேரோட்டியின் மகனாகவே நடத்தப்பட்டாய். போதும் இந்த அவமானம். நீ ஒரு மாமன்னாக இருக்க வேண்டியவன். பாண்டவர்களும், கௌரவர்களும், யாதவர்களும் உன் தாழ் பணிய பவனி வர வேண்டியவன் நீ.

ஆனால், நீயோ, துரியோதனனிடம் யாசகம் பெறும் நிலையில் இருக்கிறாய். வந்துவிடு என்னுடன்.

கர்ணன் : (கண்ணன் பேசியதை கேட்ட கர்ணனுக்கோ, பேச நா எழவில்லை. ஆச்சரியமும், சந்தோசமும், துக்கமும் போட்டி இட, ஒரு கலவையான உணர்வில் அவன் ஆழ்ந்த குரலில் பேசத் துவங்குகிறான்)

குந்தி மாதா என் அன்னை என்றீர். பெற்றதோடு என்னை ஆற்றில் விட்டவர் அவர்.

கண்ணன் : உண்மை, ஆனாலும், உனைக் கண்டேடுப்போர் உனைக் காக்க வேண்டி, அந்தப் பேழையில் பொன்னும், பொருளும், நிறைய இட்டு வைத்தவள். உன் நினைவிலே இதுவரை உயிரை விட்டு வைத்தவள்.

கர்ணன் : ஆமாம். ஆனால், அந்தப் பொன்னையும், மணியையும், இன்று வரை தீண்டிக் கூட பார்க்காது, தங்கள் அன்பைக் கொட்டி என்னை வளர்த்தவர்கள் என் தந்தையும், அன்னையும்.

பாலூட்டி, சீராட்டி, எனைப் பாராட்டி வளர்த்த அன்னையையும், தன் மகனை விட சிறப்பாய், நல்ல ஒரு ஆசானாய் இருந்து, என் ஒவ்வொரு அசைவிலும், முன்னேற்றத்திலும், எனை ஊக்கப் படுத்திய தந்தையையும், என் நலம் ஒன்றே லட்சியமாய்க் கொண்டு வாழும் அந்த அன்பு உள்ளங்களை விட்டு நான் எப்படி வருவேன்??

அன்பாலும், பாசத்தாலும், எனைக் காத்து வளர்த்த பெற்றோரை, நீங்கள் இந்த உலகையே எனக்குத் தருவதாக இருந்தாலும், நான் எப்படி விட முடியும்??

நான் அவ்வாறு செய்வது நியாயமா?? வயதான காலத்தில் அவர்களை தவிக்க விட்டால் அது தர்மமா??

கண்ணன் : இல்லை கர்ணா. அது...

கர்ணன் : அவர்கள் மட்டுமா??? துரியோதனன்... ஈருடல் ஓருயிராய் இருக்கும் அவனை விட்டு நான் எப்படி வருவேன். மொத்த உலகமும் என்னை ஒரு தேரோட்டியின் மகன் என இழிவு படுத்திய போதும், தன்னைப் போலவே என்னை எண்ணியவன். தன் ராஜ்ஜியத்தில் ஒரு பகுதியை எனைக் கண்ட அன்றே எனக்கு உரியதாக்கியவன். தன் புகழ் பாடுவோரையும் என் புகழ் பாட வைத்தவன். என்னை எனக்காகவே மதித்தவன். என் நெஞ்சில் அன்பை விதைத்தவன்

அளவிட முடியாமல் என் மீது அன்பைப் பொழிந்தவன். அன்னையாய், தந்தையாய், எனை ஆறுதல் படுத்தும் நண்பனாய், என் அனைத்துமாய் ஆனவன் அவன். இத்துணை அன்புக்கும் நான் அவனுக்கு என்ன கைம்மாறு செய்வேன். பாண்டவர்களுடன் போர் என்று அறிவித்த போதும், அவன் என்னையே நம்பி இருக்கிறான்.

இந்த சமயத்தில், தான் பாண்டவர்களோடு சேர்ந்தால் அது அவனுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் ஆகாதா?? நான் துயரத்தில் இருந்த போது, தோள், கொடுத்து தாங்கி எனை உயரத்தில் வைத்தவன் அவன். அவனை நான் இந்த நேரத்தில் பிரிந்தால், என் மனமே எனைக் கொன்று விடாதா??

அவனே என் தலைவன். அவனே என் உயிர். அவனே என் எஜமானன்.

நான் அவனுடன், அவன் பக்கம் இருந்து போர் புரிவேன். போரில் வென்றால், என் எஜமானரின் கட்டளையை நிறைவேற்றிய ஆனந்தம் அடைவேன். உயிர் நீத்தாலும், நண்பனுக்காய் இறந்தேன் என்பதில் மகிழ்ச்சி மிக அடைவேன்.

நீங்கள் இத்தனை சொல்லியும் உங்கள் பேச்சை மறுக்கும் நிலையில் நான் இருப்பதை எண்ணி வேதனைப் படுகிறேன். மன்னியுங்கள் என்னை.

துரியோதனனை விட்டு என்னால் வர இயலாது. இந்த உண்மையும் போர் முடியும் வரை யாருக்கும் தெரியாமல் இருந்தால், மகிழ்வேன் கண்ணா.

நாம் பின்னர் சந்திப்போம்.

கிருஷ்ணர் : தன் மனதுக்குள் கர்ணனின் நிலை மாறா பண்பை எண்ணி எண்ணி.. சிலாகிக்கிறான். சபாஷ் கர்ணா.. உண்மைக்கும், விஸ்வாசத்துக்கும் வாழும் உதாரணம் நீ... என அவனுள்ளே எண்ணங்கள் ஓட, வெறும் தலையசைப்பில் விடை பெறுகிறான்.

நானும் ஒரு ஷத்ரியன்
பாண்டவர்களில் மூத்தவன்
குந்தி தேவியின் மைந்தன்

குறை சொல்லி என்னை குறுகச் செய்த போது
நிமிர இயலாது என் உடல் இனி ஒடுங்க வேண்டியது இல்லை

நான் யாரைக் கண்டும் ஒதுங்க வேண்டியது இல்லை.
உள்ளுக்குள் நான் உறைய வேண்டியது இல்லை.

என, ஆனந்தமும், முதல் முறையாய், ஏதோ சுவாசிக்க, தன் முழு உயரத்துக்கு நிமிர்ந்து நிற்க தடையாய் இருந்த ஏதோ ஒன்று விலகினார் போல, புரியாது இருந்த ஏதோ ஒன்று விளங்கினார்போலே நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியில் கர்ணன்.


பொன்னை விரும்பவில்லை.
அன்னை விரும்பவில்லை

தம்பிகளையும் விரும்பவில்லை
ஆள் அம்புகளையும் விரும்பவில்லை

மாமன்னர் ஆகலாம் என்றேன்
அதையும் விரும்பவில்லை

நம்பிக்கைக்கு மறு பெயர் நீ
விஸ்வாசத்தின் மறு பெயர் நீ
நட்பின் விஸ்வரூபத்திலும் நீ..

பெற்றவள் யாரெனத் தெரிந்தும்
வளர்த்தவர்களை மறக்காத மாண்பு

அரசாளும் வாய்ப்பு இருந்த போதும்
நண்பனின் அன்புக்கு அடிமையான பண்பு

என அத்தனை சிறப்புகளை உன்னுள்ளே
கொண்டவனடா நீ... கர்ணா...

என கண்ணனும்.. இரு வேறு மனநிலையில் இருவரும் பிரிகின்றனர்.


பகுதி இருபத்தி ஒன்பதில் இரண்டு : கண்ணனும், குந்தியும் :கர்ணனிடம் பேசி விட்டு, அவன் வர மறுத்ததும், விலகி.. குந்தி இருக்கும் இடம் தேடிச் செல்கிறான் கண்ணன். (கர்ணன் திரைப்படமும், என் கற்பனையும் கலந்தவை)

அங்கே... தூது சென்ற கண்ணனுக்கு என்ன பதில் சொன்னனரோ என ஆழ்ந்த சிந்தனையுடன் அமர்ந்து இருந்தார் குந்தி தேவி.

கண்ணன் : அத்தை...

குந்தி : கண்ணா.. வந்துவிட்டாயா?? வா... வா... அங்கே என்ன நடந்தது??? ராஜ்ஜியம் தர ஒப்புக் கொண்டனரா??

கண்ணன் : ராஜ்ஜியமா??? ஐந்து பேருக்கு, ஐந்து ஊரையாவது கொடுங்கள் எனக் கேட்டேன் அத்தை. ஊசி முனை அளவு கூட தர மறுத்து விட்டனர்.

குந்தி : ஐந்து ஊரைக் கூடவா தர முடியாது என்றனர்???

கண்ணன் : நான் என்ன செய்யட்டும் அத்தை. நீதியைச் சொன்னேன். நியாத்தை சொன்னேன். அவர்கள் மறுத்து விட்டனர்.

குந்தி : சரி இனிமேல் என்ன முடிவு???

கண்ணன் : வேறென்ன போர்தான்.

குந்தி : முடிவு???

கண்ணன் : வெற்றிதான்

குந்தி : யாருக்கு ???

கண்ணன் : துரியோதனனுக்கு ...

குந்தி : கண்ணா..... (விழிகளில் நிறைந்த நீருடன்...)

கண்ணன் : துரியோதனனுக்கு அல்ல என்று கூறினேன் அத்தை.

குந்தி : போதும் உன் விளையாட்டு. அரசியாகவே பிறந்து, அரசியாகவே வாழ்ந்து, ஐந்து வீர மக்களைப் பெற்றும், வயிற்றுச் சோற்றுக்கு, பிறர் கையை எதிர்ப்பாக்கும் நிலையில் இருப்பதே கொடுமை. இதில் நீ வேறு என் உள்ளத்தைக் கொல்லாதே கண்ணா.

கண்ணன் : வெற்றி உன் மக்களுக்கு என்பது உன் கையில் உள்ளது அத்தை.

குந்தி : மீண்டும் விளையாட்டா கண்ணா???

கண்ணன் : இல்லை அத்தை விளையாட்டு அல்ல. நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு நீ உண்மையைச் சொல்ல வேண்டும்.

குந்தி : கேள்...

கண்ணன் : அத்தை, சிறு வயதில் உனக்கு ஒரு மகன் பிறந்து, அதை நீ ஆற்றில் விட்டது உண்மையா??

குந்தி : கண்ணா, உன் தகப்பனுக்கும் இது தெரியாதே??? இந்த விஷயம் அறிந்தவள் என் தோழி ஒருவள்தான். அவள் கூட இப்போது உயிருடன் இல்லையே... உனக்கு எப்படித் தெரிந்தது??

கண்ணன் : பாவ காரியங்கள் என்றும் மறைந்து விடாது அத்தை. அது எப்படியோ வெளி வந்து விடும்

குந்தி : கண்ணா, என்னை மன்னித்து விடு. உலகம் அறிந்தவன் நீ. நான் செய்த பாவ காரியத்துக்காக நான் இதுவரை அனுபவித்த துன்பம் போதும். என்னைக் காப்பாற்று.

கண்ணன் : அத்தை, உன் முதல் மகன் உயிரோடுதான் இருக்கிறான்.

குந்தி : என்ன???? (ஆனந்தமும், கண்ணீரும்) என் மகன் உயிரோடு இருக்கிறானா?? கிருஷ்ணா, யார் அவன்?? சொல் சீக்கிரம்.

கண்ணன் : உன் மகன் தான் உன் எதிரி..

குந்தி : என்ன எதிரியா???

கண்ணன் : ஆமாம் அத்தை. அர்ஜுனனை அழிக்கவே பிறந்ததாக மார் தட்டிக் கொண்டு இருப்பவன். கர்ணன். கர்ணன்தான் உன் முதல் மகன்

குந்தி : கர்ணன்... கர்ணன் என் மகன்... அவனைக் காணும் போதெல்லாம்... ஏதோ என்னுள்ளே செய்த உணர்வுகள் இதுதானா?? என் தாய்மைதானா அது??

கர்ணா, என் மகனே...

ஐயோ... ஆனால் அவன் சேர்ந்திருக்கும் இடம் சரி இல்லையே...

கண்ணன் : ஆம் அத்தை.

குந்தி : நான் உடனே சென்று அவனை என்னுடன் அழைத்து வந்து விடுகிறேன். எதிரிகள் கொட்டம் உடனே அடங்கி விடும்.

கண்ணன் : நல்ல யோசனை அத்தை. உடனே செய்.

குந்தி : இதோ.. உடனே செல்கிறேன். (என புறப்படுகிறார்)

கண்ணன் : சென்று வா.. ஆனால் அவன் உன்னுடன் வர மறுத்தால்... நான் சொல்வது போலச் செய்.

குந்தி : மறுத்து விடுவானா என்ன?? (கண்ணீர்) சரி என்ன செய்ய வேண்டும் சொல்.

கண்ணன் : அவன் வராவிட்டாலும், இரண்டு வாரமாவது கொடு எனக் கேள்.

குந்தி : வரமா??? என்ன அது???

கண்ணன் : அர்ஜுனனை அழிப்பதாக, கர்ணன் துரியோதனுக்கு வாக்களித்து இருக்கிறான். அர்ஜுனனைக் கொல்ல வல்லது அவனிடம் உள்ள நாகாஸ்திரம். அதனை ஒருமுறை தவிர மறுமுறை உபயோகிப்பது இல்லை என ஒரு வரம்.

குந்தி : ஆனால், அந்த ஒரு முறையிலே, அர்ஜுனனுக்கு ஆபத்து வந்துவிட்டால்???

கண்ணன் : என்ன அத்தை? நான் தான் கூடவே இருக்கப் போகிறேனே. எதையாவது செய்து சமாளிக்கிறேன்.

குந்தி : சரி. மற்றொன்று????

கண்ணன் : அர்ஜுனனைத் தவிர மீதம் உள்ள நால்வரை கொல்வதில்லை எனும் வரம்.

குந்தி : சரி கேட்கிறேன். ஆனால், இதனால் கர்ணன் உயிருக்கு ஒன்றும் ஆபத்து வராதே???

கண்ணன் : என்ன அத்தை நீ?? போரில் உலகே மான்டாலும், உன் பிள்ளைகள் மட்டும் இருக்க வேண்டும் எனும் உன் எண்ணம் நியாயமா??

குந்தி : என்ன செய்வேன் கண்ணா, பெற்ற வயிறு அல்லவா???

கண்ணன் : உண்மைதான். ஆனாலும், அவன் சேர்ந்த இடம் தீயவர்களிடம். என்ன செய்வது அத்தை??

குந்தி : ஐயோ... என் முதல் மகன்.. அவன் உயிருக்கு ஆபத்தா??

கண்ணன் : விதி அது எனில், அதை மாற்றும் வலிமை யாருக்கு உண்டு அத்தை. பிறந்ததுமே உன் கை நழுவிப் போனவன், இதிலிருந்து மீண்டு வந்தால் வரட்டும். இல்லை எனில், விதி விட்ட வழி என்று இருந்துகொள்.

குந்தி : ஐயோ... என்னைப் போல ஒரு பாவியை அன்னையாய் அடைந்ததில் என்னென்ன அவமானம் அடைந்தானோ?? என் செல்வம்??

கண்ணன் : அத்தை... சென்று வா...

குந்தி கர்ணனை சந்திக்கும் பகுதி... அடுத்த பகுதியில்...

சான்வி
14-12-2011, 07:10 AM
பகுதி முப்பது – தாயும், சேயும் :

கண்ணன், குந்தியிடம், கர்ணன் தான் அவரின் மூத்த பிள்ளை எனக் கூறிகிறார். கர்ணனை சந்தித்து, அவனை, தன்னிடம் அழைத்து வரும் ஆவலில் அங்கே செல்கிறார். இனி அங்கே நடப்பவை.

(கர்ணனுக்கு குந்தி தான் அவன் தாய் என்பதை கண்ணன் அறிவிப்பதாக வருகிறது. ஆனால், அதை குந்தி தேவி தன் வாயால் கர்ணனுக்கு சொல்வதைப் போலே கர்ணன் திரைப் படத்திலும், திரு.தாகூர் அவர்களின் வரிகளிலும் வருகிறது. இவர் கவிதையில், குந்தியை கர்ணன் யாரென அறியாதது போலவே வருகிறது. அவை இரண்டும் கூடவே என் கற்பனையும் கலந்து அந்தக் காட்சி இதோ உங்களுக்காக...)

கங்கையின் நதிக்கரையில், சூரிய பகவானுக்கு, தன் பிராத்தனையை செய்து கொண்டு இருக்கிறான் கர்ணன். அவனைக் காண அங்கே காத்திருக்கிறார் குந்தி.

மாலை மயங்கிய பொழுதிலே, மறையும் சூரியனின் ஒளியிலே, கண்கள் மூடி, கூப்பிய கரங்களுடன் கர்ணன் பிராத்தனை செய்து கொண்டிருக்க, ஆசை தீர, தன் மகனை கண் குளிர, நெஞ்சம் விம்ம கண்டு ரசிக்கிறாள் அந்தத் தாய்.

குந்தி : மகனே... கர்ணா...

கர்ணன் : யாரம்மா நீங்கள்?

குந்தி : உன் வாழ்வின் உதயத்தை இந்த உலகறிய வைத்தவள் தானப்பா நான். அதை உலகுக்கு அறிவிப்பதில் இருந்த, தயக்கத்தையும், சங்கடத்தையும் உதறி எறிந்தேன். உன்னை என் மடியில் ஏந்த வந்தேன்.

கர்ணன் : தாயே, உங்கள் கண்களில் வழியும் அன்பு, என் இதயத்தின் கனத்தை, ஆதவனைக் கண்டு பனி உருகுவது போல உருக்குகிறது தாயே. உங்கள் குரல் கேட்கையில், அது எதோ ஜென்ம ஜென்மன்களாக நான் கேட்டுப் பழகிய குரல் போல என் உள்ளத்தை அசைக்கிறது தாயே. சொல்லுங்கள் தாயே.. என் பிறப்பின் மர்மம் எந்த விதத்தில் உங்களோடு தொடர்பு உடையது??

குந்தி : மாவீரனே, நான்தான் குந்தி.

கர்ணன் : குந்தி தேவியா நீங்கள்?? அர்ஜுனனின் தாய்….

குந்தி : ஆம் மகனே. நான் அர்ஜுனனின் தாய்தான். அதற்காய் என்னை நீ வெறுக்க வேண்டியது இல்லை மகனே.

உன்னை முதல் முதலாக, அஸ்தினாபுரத்தின் திறமைகளை வெளிப்படுத்தும் களத்தில், கீழ் வானில் உதயமாகும் கதிரவரின் கதிரைப் போல, அரங்கத்தையே ஒளி பொருந்தியதாய் ஆக்கிய உன் வருகை கண்டு யாரின் தாய்மை நெஞ்சம் குளிர்ந்து போனதோ, யாருடைய உணர்வுகள் உன்னை உயிர்வரை தீண்டியதோ, யாரின் மனம் உன்னை உச்சி முகர்ந்து, உச்சி முதல் பாதம் வரை ஆயிரம் முத்தங்களால் அர்சித்ததோ அந்த மனம் கொண்டவள் அர்ஜுனனின் தாய்தான்.

அதே களத்தில், கிருபாச்சாரியார், யார் நீ?? உன் தந்தை யார் எனக் கேட்டு, ஒரு ஷத்ரியனுடன் இன்னொரு ஷத்ரியன் தான் போரிட வேண்டும் எனக் கூற, தலை கவிழ்ந்து, பேச்சிழந்து, அவமானத்தில் முகம் ரத்தமெனச் சிவக்க, நீ நிற்கையில், எவள் வயிறு பற்றி எறிந்ததோ, அந்த துர்பாக்கியசாலி நான் தான். இதே அர்ஜுனனின் தாய்தான்.

உன் அவமானம் கண்டு நான் கலங்கி நிற்கையிலே, துரியோதனன், அந்த சபையிலே உன்னை அங்க தேச அரசனாக்கினான். அப்போது நிமிர்ந்த உன் சிரம் கண்டு என் நெஞ்சம் பூரித்து, மனதார துரியோதனனின் பாதம் பணிந்தேன் நான். என் மகனின் துயரம் போக்கிய அந்த தூயவன் நெடுங்காலம் வாழ நெஞ்சம் நிறைந்த ஆசிகளை, மனதாலே பொழிந்தேன்.

என் நெஞ்சம் விம்ம, பாசம் பொங்க, நான் இருந்த இடம் விட்டு, உன்னை வழியும் என் கண்ணீரால் அர்ச்சித்து, ஆலிங்கனம் செய்ய உன் பக்கம் வர என்னுகையில், மகனே என உனைத் தேடி அதிரதன் வந்தார். தந்தையே என அவர் பாதம் பணிந்தாய் நீ. அதைக் கண்டும் நகைத்தனர் பாண்டவர்களும், அவர் நண்பர்களும். அப்போது நிமிர்ந்த உன் சிரம் எக்காரணம் கொண்டும் தாழாது இருக்க, இறைவனை ப்ராதித்து, உன்னை மனம் நிறைந்து ஆசீர்வதித்தாளோ, அதே அர்ஜுனனின் தாய் தான் நான்.

எவள் ஒருவள் இன்று வரை உனக்காய், உன் நலனுக்காய், உன்னை பெற்று, அவள் உன்னை இழந்து அன்று வருடம் தவறாது, முழு நாளும், உணவின்றி இருக்கிறாளோ, அதே பாவிதான், இந்த அர்ஜுனனின் தாய்.

கை நழுவிப் போன தன் செல்வம், இருக்கிறதா??? இல்லையா??? இருப்பின் நலமாய் இருக்கிறதா??? என, ஒவ்வொரு நாளும் நினையாத நாள் இல்லை. ஆண்டுகள் பல சுகமாய் இருந்தாலும், சுகவீனப்பட்ட போதும், மாறாத உன் நினைவில் மாண்டு மாண்டு உயிர் பெற்ற உன் அன்னை நான் தானப்பா...

கர்ணன் : உங்கள் வார்த்தைகளில் என் நெஞ்சத்தில் நிறைந்திருந்த கவலைகளும், வருத்தங்களும் கரைந்தே போயின தாயே.

வாருங்கள் தாயே.. (என தன் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறான்) தங்கள் வரவில் என் குடில் பெரும் பேறு பெற்றது...

நான் தங்களுக்காய் என்ன செய்ய வேண்டும்??

குந்தி : உன்னிடம் எனக்கு ஒரு வேண்டுகோள் உண்டு. நான் உன்னை என்னோடு அழைத்துப் போக வந்தேன்..

கர்ணன் : எங்கே???

குந்தி : என் மகனாய் நீ இருக்க வேண்டிய இடத்துக்கு...

கர்ணன் : ஐந்து மக்கள் அங்கே இருக்க, எனக்கு அந்த இடம்???

குந்தி : நீதான் என் முதல் மகன். நீயே அனைவருக்கும் மூத்தவன். (பேசிக் கொண்டே அவள் கர்ணனை வைத்து அனுப்பிய பேழையைக் காண்கிறாள்) இதோ... நான் உன்னை வைத்து அனுப்பிய பேழை...

கர்ணன் : -------

குந்தி : (உள்ளே வைத்திருந்த தன் புடவையை எடுத்து) இதோ.. உன்னையும் என்னையும் ஓர் இரவு இணைத்து வைத்திருந்த புடவை.. என அதை தன் மீது எடுத்துப் போட்டுக் கொள்கிறாள். நெஞ்சமும், வயிறும் குளிர்கிறது. முதல் நாள், கர்ணன் பிறந்த போது தான் அடைந்த இன்பத்தை மீண்டும் அடைகிறாள்.

(அந்தப் புடவை அவளை ஒன்றும் செய்யவில்லை. கர்ணன், தன் அன்னையை தேடுவதை அறிந்த, சில பெண்கள், தங்களை தான் அவன் அன்னை என சொல்லிக் கொண்டு அவன் இடம் நாடி வந்தனர். அப்போதெல்லாம் கர்ணன், அவன் அன்னையின் புடவையை அவர்களிடம் தருவான். ஆனால், அந்தப் புடவையை அவர்கள் தீண்டினாலே தீயில் சுட்டது போல காந்தியது அவர்களுக்கு. ஏமாற்ற வந்தவர்கள் எல்லாம் ஏமார்ந்து போயினர்.)

அந்தப் புடவை குந்தியை ஒன்றும் செய்யாதது கண்டு கர்ணனுக்கு அவள்தான் தன் அன்னை என்பது உறுதி ஆகிறது.

கர்ணன் : ஆனந்தத்தின் எல்லையிலே நின்று அவன் அழைக்கிறான்... அம்மா...........

குந்தி : இதோ, அன்று நான் கேட்ட என் மழலைச் செல்வத்தின் குரல்...

கர்ணன் : அம்மா....

குந்தி : அன்று என் செவி சுவைத்த இன்பத்தை இன்று மீண்டும் நான் அடைந்தேன்...

கர்ணன் : அம்மா....

குந்தி : அழை மகனே.. என்னை அழை.... மீண்டும் மீண்டும்... அழை... நான் இன்று வரை இழந்திருந்த இன்பம்... நிறுத்தாதே... அழை..

கர்ணன் : அம்மா... அம்மா... அம்மா....

(வருடக் கணக்கில் தேடி அலைந்த அன்னையை கண்டவுடன்... நினைவு தப்புகிறது கர்ணனுக்கு, அவனை மடியில் அள்ளி வைத்துக் கொண்டு... அவன் மயக்கம் தெளிவிக்கிறாள் அந்தத் தாய்.)

குந்தி : விதி அன்று என்னை பாதகி ஆக்கி விட்டது மகனே. நீயும், நானும் குற்றவாளிகள் அல்ல... இதற்க்கு மேல் எனை விவரம் கேட்காதே.

கர்ணன் : வேண்டாம் அம்மா... வேண்டாம். எனக்கு நீங்கள் போதும். எங்கெல்லாமோ தேடினேன் அம்மா உங்களை. தேடி தேடி களைத்தேன் தாயே... தேடித் தேடி களைத்தேன். எங்கும் காண முடியவில்லை தங்களை. எத்தனை வழிகளைக் கையாண்டேன். என் அன்னையைக் கண்டுபிடிக்க. எதிலும் எனக்கு வெற்றி இல்லை.

பிறப்பறியாது, இறக்கும் வழி அறியாது, என்னை எசுவோரின் சொல்லம்புகள் சல்லடைக் கண்களாய் என் இதயத்தைத் துளைத்த போதும், அந்த அவமானத்தை, நான் ஒதுக்கி வாழ்ந்த வாழ்வுக்கு இன்று ஒரு பொருள் தந்தீர்கள் அம்மா.

உங்கள் வரையில் இறந்து விட்ட என்னை, மீண்டும் தேடி வந்த உங்கள் அன்புக்கு காணிக்கையாக நான் ஏதாவது தர வேண்டும். கேளுங்கள் அம்மா..

குந்தி : மகனே....

கர்ணன் : உங்கள் மகனிடம் ஏதாவது கேளுங்கள் அம்மா...

குந்தி : உன் சகோதரர்கள் ஐவரோடு நீயும் சேர வேண்டும். இனி எதிரிகள் கூட்டம்(துரியோதனன்) கூண்டோடு அழிய வேண்டும்...

கர்ணன் : இது சோதனை அம்மா. சோதனை. உயிரினும் உயர்ந்த நட்பை, நன்றியை கொன்று விடு என்று சொல்வது சோதனை அம்மா.

குந்தி : நம்மை நாம் அறியாத காலத்தில், அவர்கள் நட்பு நமக்கு கிடைத்தது. இப்போது அனைத்தும் அறிந்த பின், நட்பை விட ரத்த பாசம்தான் பெரிதாக இருக்க வேண்டும்???

கர்ணன் : இது சரியான பேச்சா??? அம்மா?? ரத்தபாசம் உடையவர்கள் என்னை மறந்திருந்த போது, நான் யார் என்றே அறியாத ஒருவன், ரத்த பாசம் உடையவனாக என்னை ஆக்கிக் கொண்டானே, அவன் எனக்கு தெய்வம் அல்லவா??

அவமானம்தனைப் போக்கி, என் மானம்தனைக் காத்த, அவனை, நான் நீங்கினால் அது தருமமா???

உறவானவர்கள் எனை உதறிய போதும், உயிரானவன் அவன், என் உயிரின் எஜமானன் அவன்.

அவனை நான் விடலாகுமா தாயே???

குந்தி : என் உயிரைத் திருகும் வலி தருகிரதப்பா உன் பேச்சு...

கர்ணன் : அம்மா... என்னை மன்னியுங்கள், தங்களைப் புண் படுத்தும் எண்ணம் இல்லை...

குந்தி : உன்னோடு நான் இருக்க வேண்டும் எனும் என் எண்ணம் தவறா???

கர்ணன் : அதை இந்த இக்கட்டான சூழலில் கேட்பது சரியா???

குந்தி : நான் உன்னை அரிய நேர்ந்தது இப்போதுதானே....

கர்ணன் : என் உயிர் அவன் வசமானது எப்போதோ தானே..

குந்தி : சரி.. மகனே. ஆனால், எனக்கு இரண்டு வாரமாவது கொடு...

கர்ணன் : வரமா??? என்னிடம் இருந்தா??? உங்களுக்கா???

கேளுங்கள் தாயே...

குந்தி : உன்னால், உன் தம்பிமார்கள் அழிந்தார்கள் என இருக்கக் கூடாது. இந்த வரம் கொடு...

கர்ணன் : அம்மா, அர்ஜுனனை நான் அழிக்கிறேன் என நான் வாக்கு தந்திருக்கிறேன் துரியோதனனுக்கு. அதை என்னால் மீற முடியாது. அர்ஜுனனைத் தவிர மீதம் உள்ள நால்வருக்கும் என்னால் எந்தத் தீங்கும் வராது அம்மா. இது சத்தியம்.

அர்ஜூனன் இறந்தால், என்னோடு உம்மக்கள் ஐவர். நான் இறந்தால், எப்போதும் போல பாண்டவர்கள் ஐவர். எப்படியாயினும் உமக்கு மக்கள் ஐவர் அம்மா.

சரி அடுத்த வரம்???

குந்தி : அர்ஜூனன் மீது, நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேலே பிரயோகிக்கக் கூடாது.

கர்ணன் : ம்ம்ம்... இறைவன் போல ஒருவன் நடத்தும் நாடகம் இது. தர்மம் வெல்ல வேண்டும். அதற்காய் இது போல எல்லாம் நடக்கத்தான் வேண்டும். சரி தாயே. அந்த வரத்தையும் தந்தேன்.

குந்தி : மகனே... என அவனைத் தழுவுகிறாள்...

கர்ணன் : அம்மா...

குந்தி : சொல் மகனே...

கர்ணன் : அம்மா...

குந்தி : சொல் கண்ணே....

கர்ணன் : எனக்கும் இதுபோல ஒரு இரண்டு வரம் வேண்டும் தாயே.. உங்களிடம் இருந்து...

குந்தி : உனைப் பெற்றதைத் தவிர வேறு எதையுமே நான் செய்யவில்லை... ஒரு குழந்தைக்கு இருந்திருக்க வேண்டிய எந்தச் சுகத்தையும் உனக்கு நான் தரவில்லை... என்ன வேண்டும் கேள் மகனே...

கர்ணன் : போர் வர இருக்கும் இந்தச் சமயத்தில் நான் உங்கள் மகன் எனும் விஷயம் வெளியில் தெரிந்தால்... பெரும் அனர்த்தங்கள் நிகழும். எனவே, நான் தங்கள் மகன் எனும் விஷயத்தை நான் இறக்கும் வரை நீங்கள் யாருக்கும் சொல்லக் கூடாது.

குந்தி : என்ன பாவம் செயதேனப்பா நான்...

கர்ணன் : இந்த வரம் தந்தேன் எனச் சொல்லுங்கள் அம்மா...

குந்தி : சரி மகனே.. தந்தேன்... சரி.. மற்றொரு வரம்???

கர்ணன் : நான் பிறந்த பிறகு, என் நினைவறிந்து நான் இன்றுதான் தாய் மடியின் சுகம் அறிந்தேன். அந்த சுகம் எனக்கு மீண்டும் வேண்டும். நான் இறந்த பிறகு, எனை மடியில் இட்டு மகனே... என நீங்கள் அழ வேண்டும்... (கர்ணனின் விழியில் தாரை தாரையாய் கண்ணீர்...)

குந்தி : ஐயோ... (என கர்ணனின் வாய் பொத்தி) இது என்ன வரமப்பா என்னைக் கொல்லும் வரம்???

கர்ணன் : தயை கூர்ந்து தாங்கள் எனக்கு இந்த வரத்தை தர வேண்டும் அம்மா...

குந்தி : பெருகி வழியும் கண்ணீருடன்... சரி மகனே... தந்தேன்...

(ஆரத் தழுவிக் கொண்ட இருவரும்... பிரியும் வேளை வருகிறது...)

குந்தி : மகனே... நான் வரவா???

கர்ணன் : போங்கள் தாயே....

என் மகன், உத்தமன்,
நட்பிற்கு ஒரு உருவம் என் மகன்
நம்பிக்கையின் மறு உருவம் என் மகன்

பிறப்பரியா சோகம் அவனை சூழ்ந்திருதிருந்த போதும்
அளப்பறிய ஆற்றலுடன் வாழ்ந்திருந்தவன்

கிடைக்காத தாய் பாசம் கிட்டிட்ட போதும்
நட்புக்காய் அதைகூட விட்டவன்

என்னோடு வந்தால் ராஜ்ஜியமே தனதாகும்
என அறிந்திருந்த போதும் மாறாதவன்

வளர்த்த பெற்றோருக்கும், தன்னை நம்பிய
நண்பனுக்கும், தாயைக் கூட தள்ளி வைத்த
தூயோனே... உனைப் பெற்ற அன்றை விட
பெரும் இன்பம் நான் அடைந்தேனப்பா உன்
மாறாத நிலை கண்டு...

என குந்தியும்....

ஆற்றிலே எனை விட்ட அன்றே,
எனை மறந்து போனாள் என் அன்னை
என, எண்ணி எண்ணி இறந்து போனேனே..

அன்று முதல் இன்று வரை
எனை மனதால் சுமந்த மாதரசியே,
அன்பில் நீ ஒரு அரசியே..

உங்கள் வரையில் இறந்தே போன என்னை
தேடி வந்து, தெவிட்டாத அன்பைத் தந்து
எனை மனிதனாக்கி, எனை பிறப்பால்
புனிதனாக்கிய என் தெய்வமே...

உங்கள் அன்புக்காய், இந்த வையத்தையும்
கொடுக்கும் வலு இருந்தாலும் கொடுத்திருப்பேனே..

ஆனால், என் நண்பனை விட்டு வர வேண்டும்
என நீங்கள் கேட்டு அதை நான் மறுக்கும் நிலை
வந்தமைக்கு வருந்துகிறேன் தாயே...

என் கர்ணனும், இரு வேறு மனநிலையில் இருந்தனர்....

அன்றைய இரவு அவர்களுக்கு... துயிலா இரவாய் இருந்ததை நான் சொல்லவும் வேண்டுமா???

போருக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளுடன் அடுத்த பகுதி...

சான்வி
14-12-2011, 07:13 AM
பகுதி முப்பத்தி ஒன்று – யுத்ததின் காரணமும், யுத்தமும்

சூதாட்டக் களத்தில் தோல்வி அடைந்த போதும் கூட யுத்தம் பற்றிய சிந்தனை பாண்டவர்களுக்கு இல்லை. பாஞ்சாலியை துகிலுரிந்து அவமானப் படுத்தியதால் வந்த வினை. வினையை விதைத்தவர்கள், அதை அறுக்க, அருவடை வரும் போது தயாராக வேண்டும் இல்லையா??? இதில் பாண்டவர்களின் சபதங்கள் :

பாஞ்சாலி துகிலுரியப்பட, அவள் கண்ணனை வேண்ட, அவள் வஸ்திரம் வளர, அதை இழுத்த துச்சாதனன் மயங்கி விழ.....

பீமன் எழுந்தான். 'விண்ணவர் மேல் ஆணை. பராசக்தி மீது ஆணை. கண்ணன் மேல் ஆணை. எங்கள் மனைவி திரௌபதியை, தொடை மீது உட்கார் என்று கூறிய துரியோதனனை போர்க்களத்தில் தொடையைப் பிளந்து அவன் உயிரை போக்குவேன். சேலை பிடித்து இழுத்த துச்சாதனனின் தோள்களைப் பிளப்பேன்' என்று சபதம் செய்தான்.

அர்ச்சுனன் எழுந்து 'பாஞ்சாலியின் சேலையை அகற்றச் சொன்ன கர்ணனை போரில் மடிப்பேன். இது கண்ணன் மீதும், திரௌபதி மீதும், காண்டீபம் என்னும் என் வில் மீதும் ஆணை' என்று சபதம் செய்தான்.

சகுனியின் தலையை துண்டிப்பேன் என்றான் சகாதேவன்.

பாரதப்போரில் சகுனியின் மகனான உலூகனைக் கொல்வேன் என்றான் நகுலன்.

பாஞ்சாலியோ, எந்தப் பெண்ணுக்கும் இல்லாத அவமானம் எனக்குத் தந்த துச்சாதனன், துரியோதனன் இவர்கள் ரத்தத்தை கூந்தலில் தடவி குளித்து பின்னரே கூந்தல் முடிப்பேன் என்றாள்.

அவளது சூளுரையைக் கேட்டு, விண்ணகம் மலர் மாரி பொழிந்தது. மண்னகம் அதிர்ந்தது. இதுதான் பாண்டவர்களின் சபதங்கள்.

இனி, யுத்த களம் பற்றி சில விவரங்கள் :

இன்றைய கால கட்டத்தில் வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டம் தான் நமக்கு. வெற்றி வேண்டுமாயின் எப்படியும் போராடித்தான் ஆக வேண்டும். கதை நடந்ததாய் சொல்லப்படும் காலத்தில் அப்படி இல்லை. போருக்கு என சில நியமங்கள் இருந்தன.

படைகள் நான்கு வகைதான்.

ரதப்படை(தேர்ப்படை), கஜப்படை(யானைப்படை), துரகப்படை(குதிரைப்படை), பதாதிப்படை(காலாட்படை).

இந்த நான்கு படைகளும், கீழ்காணும் அளவுகளில் இருந்தால் அவை ஒரு அக்குரோனிப் படை எனப்படும்.

ஓர் அக்ரோணி படை என்பது:

21870 : தேர்கள் (ரத)
21870 : யானைகள் (கஜ)
65610 : குதிரைகள் (துரக)
109350 : காலாட்படைகள் (பதாதிகள்) அடங்கியது ஆகும்.

இதில், ரதப்படை தான் இருப்பதில் உயர்ந்தது. ஒரு அக்குரோனிப் படை-க்கு ஒரு ரதர்தான் (ரதப்படையில் சிறந்த வீரர்) தலைமை வகிப்பார். அவரவர் திறம் கொண்டு அவரை கீழ்க்கண்டவாறு பிரிப்பர்.

அதிரதர்:

இவர்கள்தான் இருப்பதிலே திறம் அதிகம் உள்ளவர்கள். எவர் ஒருவர், தனியாளாக ஒரு தேரின் மேல் நின்று தமது ரத, கஜ, துரக, பதாதிகளுக்கு அழிவுவராமல் காத்துக்கொண்டு, ஒரே சமயத்தில், பல்லாயிரம் தேர் வீரர்களோடு போரிடும்/போரிட்டு வெல்லும் வல்லமை உடையவரோ அவரே அதிரதர்

மஹாரதர்:

இவர்கள், அதிரதருக்கும் கீழே, அதாவது, தனி ஒருவராக நின்று, ஒரே சமயத்தில், பதினோராயிரம் தேர்வீரரோடு போரிடும்/போரிட்டு வெற்றி கொள்ளும் வல்லமை பொருந்தியவர்கள்.

சமரதர்:

இவர்கள் திறமை, அதற்கும் கீழே, ஒரு சமயத்தில், ஒரு தேர்வீரரோடு, போரிடும் / போரிட்டு வெற்றி பெரும் வல்லமை கொண்டவர்.

அர்த்தரதர்:

இவர்கள், அப்படி, ஒருவரோடு, ஒரு சமயத்தில், ஒருவர் மட்டும் போரிடும் போதும், தமது, ரதம் மற்றும் உடமைகளை இழந்து விடுபவர்.

யுத்தம் கூட ரெண்டு விதமா இருக்கும்-ன்னு சொல்றாங்க.

சமமான பலமும், சமமான தகுதியும், உடையவர்கள் மோதினால் அது துவந்த யுத்தம். இப்படித்தான் இருக்கனு-ன்னு யுத்த சாஸ்திரங்கள் சொல்லி இருக்கு. சம தகுதி இல்லாத இருவர், மோதினால் அதன் பெயர் சங்குலம். இதை இன்னும் தெளிவா சொல்லணும்-ணா நம்ம பேச்சு வழக்கில் இருக்கும் கச முசா தான் சரியான பொருத்தம்.

கசம், கசத்தோடும், முசம், முசத்தோடும், அல்லாது, கசம் முசத்தோடு சண்டை இடுவதுதான் அது.

கச(ஜ)ம் – யானை, முசம் – முயல். யானையும், முயலும் சண்டை போட்டா, அது நியாயம் இல்லைதானே. அதுதான் சங்குல யுத்தம்.

எதுக்கு, இத்தனை பெரிய விளக்கம்??? இதோ கதைக்கு வந்துட்டேன்...

எல்லாருமா சேர்ந்து கௌரவர்களின் சேனாதிபதியா பீஷ்மரை தேர்ந்தேடுத்தாங்க. இதுல துரியோதனனுக்கு விருப்பம் இல்ல. அவனோட தேர்வு நம்ம கதாநாயகன்தான். ஆனாலும் பெரியவங்க சொன்னதுக்காக ஒத்துக்கறான்.

யுத்தத்திலே யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு-ன்னு பிரிக்கறாங்க. அதில்தான் மேலே நான் சொன்ன பிரிவுகள் வருகின்றன. பீஷ்மர், கர்ணனை, என்னதான் அதிரதனாய் அவன் திறமை இருந்தாலும், பரசுராமரிடம் பெற்ற சாபத்தாலும், கர்ண, குண்டலங்களை பிரிந்தாலும், கர்ணன், அதிரதன் ஆக முடியாது என்கிறார்.

அங்கே இருந்த துரோணர் அவன் மஹாரதர் கூட அல்ல, அர்த்தரதர் என்கிறார்.

இதனால் வலியும் வேதனையும் கொள்ளும் கர்ணன், பீஷ்மரிடம், “பிதாமகரே, தாங்கள் என்னை இத்துணை தூரம் வெறுக்கக் காரணம் என்ன?? அதை நான் அறியேன். இப்படி கடுமையான வார்த்தைகளை நீங்கள் சொல்லலாமா?? நீங்கள் இந்தப் படையின் தளபதி. கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை பரவி இருக்கும் சேனைக்கு அதிபதி. வெற்றி ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டிய இடத்தில், இந்த பாகுபாடு பார்க்கலாமா??

பீஷ்மர் : சாபங்கள் உனக்கு இருப்பது உண்மைதானே???

கர்ணன் : அதற்காய் என் திறமையை குறைத்து மதிப்பிடுவது அறிவீனம். தங்களுக்கு வயதின் தளர்ச்சி, எனவேதான் நீங்கள் இப்படி உரைக்கிரீர். என்றவன், துரியோதனன் பக்கம் திரும்பி, நண்பா, இவ்வளவு பேசும் இவர், நான் என்னதான் போராடினாலும், எத்தனை சேனைகளை வென்றாலும், அந்தப் பெருமை எல்லாம் இவருக்கே செல்லும். எனவே இந்த மனிதர் சேனாதிபதியாக இருக்கும் வரை நான் போர்க்களம் புக மாட்டேன். இது சத்தியம்.

பாண்டவர்களின் படையும், அவருக்கு துணையாய் வந்த படையும் சேர்ந்து மொத்தம் ஏழு அக்குரோனிப் படைகள். அதற்கு, முறையே, துருபதன், திஷ்டத்துய்மன், விராடன், சிகண்டி,
சாத்யகி, சேகிதானன், திருஷ்டகேது என்பவர்கள் சேனாதிபதிகள் ஆயினர். இதில், திஷ்டத்துய்மன் பிரதம சேனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

துருபதன் :

பாஞ்சால தேசத்து அரசன். திரௌபதி, சிகண்டி மற்றும் திஷ்டத்துய்மன் அவர்களின் தந்தை. துரோனரிடம், அர்ஜூனன் மூலம் அவமானப்பட்டவன்.

திஷ்டத்துய்மன் :

துருபதன் புதல்வன். துரோனரைக் கொல்லவே பிறப்பெடுத்தவன். அவரிடமே பயின்றவன்.

விராடன் :

பாண்டவர்கள், அஞ்ஞாத வாசம் செய்த தேசத்தின் அரசர். தற்போது, அர்ஜூனன் மைந்தன் அபிமன்யுவின் மாமனார். அர்ஜுனனின் சம்மந்தி.

சிகண்டி :

முற்பிறவியில் அம்பா எனும் பெண்ணாக இருந்தபோது இவள் காசி அரசனின் மூத்த மகளாவாள். அம்பிகா, அம்பாலிகா என்போர் இவளது தங்கைகள் ஆவர். இவர்களுக்குச் சுயம்வரம் நடந்தபோது, அங்கிருந்த மன்னர்களையும், இளவரசர்களையும் தோற்கடித்து, இம் மூன்று பெண்களையும், பீஷ்மர் அவர்களது விருப்பத்துக்கு மாறாகக் கூட்டிச் சென்றார். அவர், இப்பெண்களை அஸ்தினாபுரத்து மன்னனான விசித்திரவீரியனுக்கு மணமுடித்துக் கொடுப்பதற்காக சத்யவதியிடம் ஒப்படைத்தார்.

அம்பா வேறொருவனிடம் தனது மனதைப் பறிகொடுத்திருந்ததால் விசித்திரவீரியன் அவளை மணந்துகொள்ளாமல் அவளது தங்கைகள் இருவரையும் மட்டும் மணந்து கொண்டான். அம்பா தான் விரும்பியவனை நாடிச் சென்றாள். அவளைப் பீஷ்மர் கூட்டிச் சென்றதனால் அவன் அவளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். பீஷ்மரிடம் திரும்பி வந்த அம்பா, தன்னை மணந்து கொள்ளூமாறு பீஷ்மரை வற்புறுத்தினாள். மணமுடிப்பதில்லை என விரதம் பூண்டிருந்த பீஷ்மரும் அவளை மணம்செய்ய மறுத்துவிட்டார்.இதனால் மிகவும் அவமதிக்கப்பட்டதாக கருதி அவரை பழி வாங்க விரும்புகிறாள். பீஷ்மர் தன்னால் இறக்க வேண்டும் என கடும் தவம் இருக்கிறாள்.அவளே சிகண்டினி ஆக மறுபிறவி எடுக்கிறாள்.

அவள் பிறக்கையில் அவளை ஒரு மகன் போல வளர்க்க வேண்டும் என மன்னருக்கு அசரீரி கேட்கிறது.அதன்படியே போர்முறைகளில் பயிற்றுவிக்கப்பட்டு ஒரு இளவரசனைப்போல் வளர்கிறாள். ஒரு பெண்ணை திருமணமும் செய்துகொள்கிறாள். ஆனால் உண்மையை அறிந்த மனைவி அவளை அவமதிக்கிறாள். இதனால் மனமுடைந்த சிகண்டி பாஞ்சால நாட்டை விட்டு விலகி காட்டில் தற்கொலை செயதுகொள்ள முயல்கிறாள்.அச்சமயம் ஒரு யக்சன் அவளைக் காப்பாற்றி அவளுடன் பாலின மாற்றம் செய்து கொள்கிறான்.

சிகண்டி என்ற பெயருடன் ஒரு ஆணாக பாஞ்சாலம் திரும்புகிறான். தனது மனைவியுடன் இனிது வாழ்ந்து பிள்ளைகளையும் பெறுகிறான். அவனது மறைவிற்குப் பின்னர் அவனது ஆண்மை யக்சனுக்குத் திரும்புகிறது.

சாத்யகி :

இவன், கண்ணனின் குலமான யாதவ குலத்தைச் சேர்ந்த ஒரு வீரனாவான். சாத்யகி, கண்ணனிடமும், அருச்சுனனிடமும் மிகுந்த மதிப்பு வைத்திருந்தான். சாத்யகியும், அருச்சுனனும் துரோணரிடம் ஒன்றாகப் போர்ப் பயிற்சி பெற்றவர்கள். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கில், சாத்யகி பாண்டவர்களை ஆதரித்தான்

சேகிதானன் :

யது குலத்தை சேர்ந்தவர். விற்போரில் வல்லவர்.

திருஷ்டகேது :

இவரைப் பற்றிய விவரங்களும் தெரியவில்லை. (தெரிந்தவர் யாரேனும் இருந்தால், பகிர்ந்து கொள்ளுங்கள்)

அதே போல, கௌரவர்களின் பதினோரு அக்குரோனிப் படைக்கும் சேனாதிபதிகள் கீழ்க்காணுமாறு இருந்தனர். பீஷ்மர், கிருபர், துரோணர், ஜயத்ரதன், சல்லியன், சுதட்சிணன், கிருதவர்மா, அசுவத்தாமா, பூரிசிவரசு, சகுனி, பாகுலிகன்

பீஷ்மர் :

நாம் அனைவரும் அறிந்தவர்தான். சந்தனு, கங்கை இருவரின் புத்திரர். உள்ளத்தில் அனைவருக்கும் மூத்தவர். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் தாத்தா. இவர்தான் பிரதம தளபதி கௌரவர்களுக்கு.

கிருபர் :

அஸ்தினாபுரம் அரசவையில் ராசகுருவாக இருந்தவர். சரத்வான் மற்றும் ஜனபதி தம்பதியினருக்குப் பிறந்தவர். இவரது இரட்டையரான உடன்பிறப்பு கிருபி அந்நாட்டு தளபதி துரோணரின் மனைவியாவார். குருச்சேத்திரப் போரில் கௌரவர்கள் பக்கம் போரிட்டவர். போரின் முடிவில் பரீட்சித்து மாமன்னரின் அரசகுருவாக பணியாற்றுகிறார். இறவாதவர்கள் எனக் கருதப்படும் எண்மரில் ஒருவர்.

துரோணர்:

கௌரவர், பாண்டவர்களுடைய ஆசான் ஆவார். இவர் போர்க்கலைகளில் மிகவும் தேர்ந்தவர் ஆவார். இவர் பாரத்துவாச (பரத்வாஜ) முனிவரின் புதல்வர் ஆவார். இவருடைய மனைவி சதாநந்தரின் மகள் கிரிபி. அசுவத்தாமன் இவர்களுக்குப் பிறந்த மகன் ஆவான்

ஜயத்ரதன்:

சிந்து நாட்டு அரசன் மற்றும் கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவன். காம்யக வனத்தில் தங்கியிருந்த பாண்டவர்கள் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தபோது, திரௌபதி தனித்து இருந்தாள். அப்போது அங்கு வந்த ஜயத்ரதன் ஆசிரமத்தின் வெளியே நின்றுக்கொண்டிருந்த திரௌபதியை கண்டதும் காதல் கொண்டான். அதை அவளிடம் வெளிப்படுத்தினான். காமவயப்பட்ட அவன் அவளை தூக்கிச் செல்ல முயன்றான். அவன் செயலை, உடன் இருந்தோர் தடுத்தும் கேட்கவில்லை.
வேட்டைக்குச் சென்ற ஐவரும் ஜயத்ரதன் திரௌபதியை அபகரித்து சென்றுவிட்டதை அறிந்தனர். தேர் சென்ற சுவடை கொண்டு ஜயத்ரதனுடன் போரிட்டனர். அவனை கயிற்றில் கட்டித் தேரில் ஏற்றி தருமரிடம் அழைத்து வந்தான் பீமன். தருமரின் ஆணையால் அவனை மொட்டையடித்து அனுப்புகின்றனர். நாணித்தலைக் குனிந்து திரும்பிய ஜயத்ரதன்,கங்கைக் கரைக்குச் சென்று பரமசிவனை நோக்கி கடும் தவமிருந்து அவரிடம் பாண்டவர்களை கொல்லத்தக்க வலிமையை வேண்டுகிறான். கண்ணனின் துணையிருப்பதால், பாண்டவர்களை வெல்ல முடியாது.ஆனாலும் அவர்களை ஒரு நாள் எதிர்த்து நிற்குமாற்றலை அவனுக்கு அளிக்கிறார். இந்த வரம் குருச்சேத்திரப் போரில் பதின்மூன்றாம் நாள் போரில் பயனாகிறது.

சல்லியன் :

மத்ரா நாட்டின் அரசனாவான். இவனது சகோதரி மாத்ரி, பாண்டுவின் இரண்டாவது மனைவி. நகுலன், சகாதேவன் இவனது மருமக்கள் ஆவர்.பாண்டவர்களின் அன்புக்குப் பாத்திரமானவன். வில் வித்தையிலும் போர்முறைகளிலும் தேர்ந்தவன். தேரோட்டத்தில் வல்லவன். கண்ணனுக்கு இணையாக தேர் ஓட்டும் வல்லமை கொண்டவன்.

பாண்டவர்களுடன் சேர வந்த இவனை, வழியில் உபசரித்து, இவரை தன் பக்கம் சூழ்ச்சி மூலம் இழுத்துக் கொண்டவன் துரியோதனன்.

சுதட்சிணன் :

விற்போரில் வல்லவர். அதைத் தவிர வேறு விவரங்கள் நான் அறியேன். (தெரிந்தவர் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்)

கிருதவர்மா :

இவன், கண்ணனின் குலமான யாதவ குலத்தைச் சேர்ந்த ஒரு மன்னன். குருச்சேத்திரப் போரில் கௌரவர்கள் பக்கம் தனது நாராயணி சேனையுடன் சேர்ந்து போரிட்டவன்.போரின் முடிவில் கௌரவர்கள் பக்கம் எஞ்சியிருந்தவர்கள் மூவரில் ஒருவன். அசுவத்தாமன் பழிக்குப் பழியாக இரவில் தூங்கிக்கொண்டிருந்த திருஷ்டத்யும்னன்,சிகண்டி,பாஞ்சாலியின் ஐந்து சிறுவர்கள் என படுகொலை செய்த அநீதிக்கு துணை நின்றவன். போரின் முடிவில் நாடு திரும்பி ஆண்டுவந்தபோது தனது யாதவ குலத்தைச் சேர்ந்த மற்றொரு மன்னனான சாத்யகியால் கொல்லப்பட்டான்

அசுவத்தாமா :

இவன், துரோணாச்சாரியாருடைய மகனாவான். இவன் இந்துக்களின் ஐதீகத்தின்படி, ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவன். துரோணாச்சாரியார் இவன்மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். மகாபாரதப் போர் நடந்துகொண்டிருந்த போது, அசுவத்தாமன் இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட வதந்தியை நம்பித் துரோணர் கவலையில் இருந்தபோது இளவரசன் திருஷ்டத்யும்னனின் வாளுக்கு இரையாகித் துரோணர் காலமானார்.

போரின் முடிவில் கவுரவர் பக்கம் உயிர்பிழைத்திருந்த மூவரில் இவனும் ஒருவன். தனது தந்தையை நயவஞ்சகமாக கொன்ற திருஷ்டத்யும்னனை இரவில் தூக்கத்தில் இருக்கும்போது கொன்று பழி தீர்த்தவன். பாண்டவர்களின் ஐந்து குலக்கொழுந்துகளையும் பாண்டவ கடைகளையும் அதே இரவில் கொன்றான்.

பூரிசிவரசு :

கண்ணனைப் பெற அவதரித்தவள் தேவகி. அவளுடைய சுயம்வரத்தில், சௌமதத்தனனுக்கும், சினிக்கும், பெரிய யுத்தம் வந்தது. வாசுதேவனுக்காக, சினி, சௌமதத்தனனை, ஜெயித்து, தேவகியை, தன் தேரில் ஏற்று சென்று விட்டானாம். அந்த நாள் முதல் இந்த இரு குலங்களும் ஜென்ம விரோதிகள் ஆகினாறாம். இதில் சினியின் பேரன் சாத்யகி. சௌமதத்தணன் மகன் பூரிசிவரசு. சோமதத்தன் இரண்டாம் புத்திரன்.

சகுனி :

காந்தார நாட்டின் மன்னன். திருதிராஷ்டிரரின் மைத்துனன். காந்தாரியின் சகோதரன். கௌரவர்களின் தாய் மாமன்.

பாகுவிகன் :

சோமதத்தன் தந்தை. சந்தனு தம்பி. பிரதீபன் குமாரன். சரியான விவரங்கள் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அதன் பின்னர், இருசாரரின் படைகளும் அணிவகுத்து போர்க்களம் நோக்கிச் சென்றன.

மீதம் அடுத்த பகுதியில்...

சான்வி
14-12-2011, 07:20 AM
பகுதி முப்பத்தி இரண்டில் ஒன்று : யுத்தகளம்

இலட்சக்கணக்கான வீரர்கள் அழிய பாரதப்போர் தொடங்கும் முன் இரு சாராரும் சில விதிமுறைகளைப் பின்பற்ற ஒப்புக் கொண்டனர்.

அவை வருமாறு

போர் பகலில் மட்டுமே நடைபெறும்.
ஆயுதமின்றி இருப்போரிடம் போரிடக் கூடாது
புறமுதுகிடுவோரை தொடர்ந்து சென்று தாக்கக்கூடாது
இரு வீரர்கள் போரிடுகையில்..மூன்றாமவர் இடையே புகுந்து ஒருவரைத் தாக்கக் கூடாது
அடைக்கலம் அடைந்தவர்களைக் கொல்லக்கூடாது
யானைப் படையுடன் யானைப்படையும், தேர்ப் படையுடன் தேர்ப்படையும், குதிரைப் படையுடன், குதிரைப் படையும், காலாட் படையுடன், காலாட்படையும் மட்டுமே போரிட வேண்டும்.

இப்படி ஒரு நியதியை ஏற்படுத்திக் கொண்டாலும் சில நேரங்களில் அதையும் மீறி போரிட நேர்ந்தது.

ஆர்வமாய் இருந்த அர்ஜூனன், எதிரே நிற்கும் தன் உறவினர்களைப் பார்த்து, இவர்களுடன் போர் புரிவதா?? உலகம் என்னை பழிக்காதா?? என துயரம் கொண்டு, போர் புரிய இயலாமல் அவன் ரதத்திலே அமர்ந்து விட...

பகவான் கண்ணன், தக்கது எது?? தகாதது எது?? என விரிவாய் சொல்கிறார்... அதுவே பகவத் கீதை. அதன் பின்னர் யுத்தம் துவங்கி, பதினெட்டு நாட்கள் நடந்தது. இது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே விரிவாக இல்லாவிடினும், மிகச் சுருக்கமாய்... என்னால் இயன்ற வரை இலகுவாய்... அங்கே நடந்தவை, நான் அறிந்தவகை உங்களுக்கு சொல்கிறேன்.

கண்ணன், அர்ஜுனனுக்கு சொல்வது போல நம் அனைவருக்கும் சொன்ன விஷயங்கள் இவை.

அர்ச்சுனா, வருந்தாதே. தகுதி இல்லாதவரிடம் இரக்கம் காட்டாதே! ஞானிகள், இறந்தவர்களுக்காகவோ, இருப்பவர்களுக்காகவோ துயரம் கொள்வதில்லை. இங்கு உள்ளவர்களும் உடல் அழிந்தாலும் இருப்பார்கள். அவர்கள் உயிர் அழிவதில்லை. இந்தப்பிறவியில் உயிருடன் கூடிய உடம்புக்கு இருக்கும் இளமை, அழகு, முதுமை மீண்டும் மறுபிறப்பிலும் ஏற்படும். இப்படி தோன்றுவதும், மறைவதும் உயிர்களின் இயல்பு என்பதை உணர். இதுவே உலக இயற்கை என்ற தெளிவு பெற்றால், இன்ப துன்பங்கள் யாரையும் நெருங்காது. இதை உணர்ந்தவர் எதற்கும் கலங்குவதில்லை.

அர்ச்சுனா, நிரந்தரமில்லா உடலின் அழிவுக்கு கலங்காதே. உயிர் அழியாது. தனது புண்ணிய பாவ செயல்களுக்கு ஏற்ப மறுபிறவி அடையும். ஆத்மா கொல்வதும் இல்லை. கொல்லப்படுவதும் இல்லை. ஆகவே கலங்காது எழுந்து போர் செய். கடமையை நிறைவேற்று.

ஆத்மாவிற்கு பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. இது எப்போதோ இல்லாதிருந்து பிறகு திடீரென பிறந்ததன்று. இது என்றும் இறவாதது. என்றும் பிறவாதது. அதாவது உடல் கொல்லப்பட்டாலும், உயிர் கொல்லப்படுவதில்லை.

கிழிந்து போன பழைய ஆடைகளை விடுத்து, புது ஆடைகளை உடுத்துவது போல் உயிர் நைந்து போன உடல்களை விட்டுப் பிரிந்து புதிய உடலைப் பெறுகிறது. எந்த போர்க்கருவியும் உயிரை வெட்டாது. உடலை எரிக்கும் தீ உயிரை எரிப்பதில்லை. வெட்டினாலும், குத்தினாலும் உயிருக்கு ஒரு துன்பமும் இல்லை. ஆகவே மாளப்போகிறவர்களுக்காக நீ ஏன் அழுகிறாய்? அவர்கள் வினைப் பயனை அவர்கள் விதிப்படி அடைவர்.

பிறந்தவர் இறப்பதும், இறந்தவர் பிறப்பதும் இயல்பு. அதற்காக ஏன் வருத்தம். இவ்வுலக நியதியை யாராலும் மாற்ற இயலாது. ஆகவே நீ உன் கடமையை ஆற்று.

இந்த ஆன்மாவின் செயல் விந்தையானதுதான் எனினும் மாற்றமுடியா தன்மையைக் கொண்டது. எல்லார் உடம்பிலும் உள்ள ஆத்மாவை யாராலும் கொல்ல முடியாது. ஆகவே, நீ யாருக்காகவும் வருந்த வேண்டாம். தவிர்க்க இயலா போர் வந்து விட்டது. வீரர்களை வரவேற்க சொர்க்கவாசல் தயாராய் விட்டது. சிறந்த வீரர்கள் அங்கு செல்ல உன் கடமையைச் செய். இது தர்மயுத்தம் என்பதை நினைவில் கொள். இங்கு நீ தயக்கம் காட்டினால், புகழை இழப்பாய். அத்துடன் மட்டுமின்றி, அது உனக்கு பழியும் தரும்.

இரக்கத்தால் நீ போரிடவில்லை என பகைவர்கள் எண்ணமாட்டார்கள். போரிட அஞ்சுகிறாய் என சிறுமைப்படுத்துவர். வீரனான உனக்கு அந்த இழுக்கு வரலாமா? இதைவிடப் பெருந்துன்பம் எதுவுமில்லை. வென்றால் இந்த மண்ணுலகம், வீர மரணம் அடைந்தால் விண்ணுலகம். இதனை மறக்காது துணிந்து போர் செய்.

வெற்றி, தோல்வி பற்றியோ, இன்ப. துன்பம் பற்றியோ, இலாப, நஷ்டம் பற்றியோ கருதாமல் ஊக்கத்துடன் போர் செய். பழி, பாவம் உன்னைச் சாராது. புகழும், புண்ணியமும் உனக்குக் கிடைக்கும்.

என மேலும் பலவாறு கண்ணன், அர்ஜுனனுக்கு சமாதானம் கூறினார்.

கண்ணனின் அறவுரைக் கேட்டதும், பார்த்தனின் மனக்குழப்பம் தீர்ந்தது. அவன் கண்ணனை வணங்கி, கண்ணா, என் மயக்கம் ஒழிந்தது. என் சந்தேகங்கள் தீர்ந்தன. என் தயக்கங்கள் அகன்றன. இனி உன் சொல் படி நடப்பேன் எனக்கூறி போரிடத் தயாரானான்.

போருக்காய் எல்லாரும் தயாராய் களத்தில் இறங்க... திடீரென, தருமர், தன் கவசங்கள், ஆயுதங்கள் அனைத்தையும் களைந்து விட்டு, நிராயுதபாணியாக... தன் ரதத்தை விட்டு இறங்கி, கௌரவர்களின் சென்றார். அங்கே சென்று, பிதாமகர், துரோணர் என அனைத்து பெரியவர்களிடமும், ஆசியும், போரிட அனுமதியும் பெற்று வந்தார்.

அவர் அங்கே வரக்கண்ட துரியோதனன் சமாதானத்துக்கு வருவதாக தவறாக எண்ணினான்.


முப்பத்தி இரண்டில் இரண்டு : தினவாரியான யுத்தம் :

பதினெட்டு நாட்கள் தொடர்ந்து நடந்த யுத்தத்தில், ஏகப்பட்ட இழப்பு இருசாராருக்கும். அதை தினவாரியா, நாம் இங்கே காண்போம்.

மிகவும் விளக்கமாக நான் சொல்லி படிப்பவரை துன்புறுத்தமாட்டேன். முக்கிய நிகழ்வுகளை மட்டும் கோடி காட்டுகிறேன். நான் அறிந்த தகவல்களை இன்னும் மெருகேற்ற உதவிய இணையத்துக்கு என் நன்றிகள்.

அறிந்தவர்கள், அறிந்ததையே நான் திரும்ப சொல்வதற்கு எனை மன்னிக்கவும். முக்கிய தகவல் எதுவும் விட்டுப்போனாலோ, இல்லை நான் சொல்வதில் தவறு இருந்தாலோ, என்னை நேர் செய்யுங்கள். நன்றி.

முதலாம் நாள் யுத்தம்:

முதலாம் நாள் போர் சங்குல யுத்தம் என அழைக்கப் படுகிறது. ஓர் ஒழுங்குக்கு உட்படாமல் முறை கெடப் போரிடல் 'சங்குல யுத்தம்' ஆகும். இருதிறத்துப் படைகளும் மோதின. பதினெட்டு அக்குரோனிப் படைகளும் ஒரே இடத்தில் மோத, எங்கு நோக்கினும் சிங்கம் போல கர்ஜிக்கும் வீரர்கள். யானைப்படையும், குதிரைப்படையும் மூர்க்கத்தனமாக மோதிக் கொண்டன. அதனால் எழுந்த தூசு விண்ணை மறைத்தது. பீஷ்மர் வீராவசத்தோடு போர் புரிந்து எண்ணற்ற வீரர்களைக் கொன்றார். சுவேதனுடன் அவர் போர் பயங்கரமாய் இருந்தது. பீஷ்மரால் அவன் கொல்லப்பட்டான். அவன் மரணம் பாண்டவ வீரர்களை நடுங்க வைத்தது. கௌரவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். உத்திரனும் கொல்லப்பட்டான்.

இரண்டாம் நாள் யுத்தம் :

முதலாம் நாள் போரில் இரு முக்கிய உயிர்கள் கொல்லப்பட்டதால், அதை மனதில் கொண்டு இரண்டாம் நாள் போர் படைகள் திருத்தி அமைக்கப் பட்டன. பாண்டவர்கள் படை கிரௌஞ்ச வியூகத்தில் நிறுத்தப்பட்டன. கிரௌஞ்சப் பறவை வடிவில் படைகளை அமைப்பதால், அதற்கு கிரௌஞ்ச வியூகம் என்று பெயர். துருபத மன்னன் அதற்குத் தலையாக நின்றான். தருமர் பின் புறத்தில் நின்றார். திருஷ்டத்துய்மனும், பீமனும் சிறகுகளாக இருந்தனர்.

வியூகம் என்பது, தங்கள் படைகள் எப்படி தாக்கும், எப்படி காக்கும் என்பது போன்ற யூகத்தை, எதிராளிக்கு கொடுப்பது. அதற்கு ஏற்றார் போல, எதிராளி தன் படையை அமைத்துக் கொள்ள வேண்டும். இதில் யுத்த கலைகளை பலவாறு கற்று, அதிலேயே பயிற்சிகள் மிக உடையவர்கள்தான் சில கடினமான வியூகங்களை உடைக்க இயலும்.

மிக முக்கியமான நபர், அல்லது, யாருக்காக போர் நடைபெறுகிறதோ, அவரை அந்த வியூகத்தின் நடுவே நிற்க வைத்து, அவர்களைக் காத்தபடி சூழ்ந்து நின்று மற்ற வீரர்கள் போரிடுவார்.

அந்த நபரை தாக்க வேண்டுமெனில், வியூகத்தை உடைக்கத் தெரிந்தவர் வேண்டும். அப்படித்தான் பீஷ்மர் இந்த கிரௌஞ்ச வியூகத்தை உடைத்து உள்ளே சென்று போரிட்டார். கண்ணபிரான் தேரை ஓட்ட, அர்ச்சுனன், பாட்டனாரைப் பயங்கரமாக தாக்கினான். பீஷ்மர், அர்ச்சுனன் மீது எழுபத்தேழு அம்புகளை செலுத்தினார். மற்றொரு புறம், துரோணரும், திருஷ்டத்துய்மனும் கடும் போர் புரிந்தனர். திருஷ்டத்த்ய்மனுக்கு உதவியாக பீமன் வந்தான். அவனைத் தடுத்து நிறுத்த துரியோதனன் கலிங்கப் படையை ஏவினான். ஆனால் பீமன் அப்படையைக் கதிகலங்க வைத்தான். அப்படைக்கு உதவ பீஷ்மர் வந்தார். அவரை அபிமன்யூவும், சாத்யகியும் சேர்ந்து தாக்கினார். அவர்களது தாக்குதலால், பீஷ்மரின் தேர்க் குதிரைகள் நிலை குலைந்து தாறுமாறாக ஓடின. இதனால், அர்ச்சுனனை எதிர்ப்பார் இல்லை. அவன் விருப்பம் போல கௌரவ வீரர்களைக் கொன்று குவித்தான். அவன் யாராலும் வெல்ல முடியாதவனாகக் காட்சியளித்தான். அப்போது சூரியன் மறைய, அன்றைய போர் முடிவுற்றது.

மூன்றாம் நாள் யுத்தம் :

இரண்டாம் நாள் போரில் கௌரவர் கை தாழ்ந்திருந்தது. அதனால் மூன்றாம் நாள் போரை மாற்றி அமைக்க பீஷ்மர் விரும்பினார். படைகளை கருட வியூகமாக அமைத்தார். அதன் தலைப்பக்கம் பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமா, சல்லியன், பகதத்தன் ஆகியோர் பொருத்தமான இடத்தில் நின்றனர். துரியோதனன், அவ்வியூகத்தின் பின் புறத்தில் நின்றான். அதை முறியடிக்கும் விதத்தில் பாண்டவர்களின் தளபதியான திருஷ்டத்துய்மன் தன் படைகளை பாதி சக்கர வியூகமாக அமைத்தான். அவன் வலப்பக்கமாக நின்றான். அதன் இரண்டு பக்கங்களிலும் பீமனும், அர்ச்சுனனும் நின்றனர். தர்மர் இடையில் நின்றார். மற்றவர்கள் பொருத்தமான இடங்களில் நிறுத்தப்பட்டனர்.

உச்சக்கட்டம் அடைந்தது அன்றைய போர். அர்ச்சுனன் அம்பு மழை பொழிந்து கௌரவர் படையை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தான். பீமன், துரியோதனன் மார்பில் அம்பை செலுத்தினான். ரத்தம் பீரிட துரியோதனன் பீஷ்மரிடம் சென்று, உண்மையில் நீங்கள் முழு பலத்தையும் காட்டி போரிடவில்லை. இது நியாயமா? பாண்டவரிடம் நீங்கள் கருணை காட்டினால் என்னிடம் முதலிலேயே தெரிவித்திருக்கலாம் என்றான்.

அது கேட்டு நகைத்த பீஷ்மர், உனக்கு நான் பலமுறை சொல்லியுள்ளேன். பாண்டவர்களை யாராலும் கொல்ல முடியாது. என் ஆற்றல் முழுதும் ஆயினும் உனக்கே தருவேன் என்று கூறி போர்க் களம் சென்று சங்கநாதம் செய்தார். கௌரவர் படை உற்சாகம் அடைந்தது. பாண்டவர் படையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அர்ச்சுனன் உள்பட அனைவரும், தளர்ந்து காணப்பட்டனர்.

கண்ணன் அர்ச்சுனனிடம் அர்ச்சுனா, என்னவாயிற்று உனக்கு? பீஷ்மரையும், துரோணரையும் வெல்வேன் என்றாயே?? அதை மறந்து விட்டாயா?

உற்சாகம் அடைந்த அர்ச்சுனன் தனது ஒரு அம்பால் பீஷ்மரின் வில்லை முறித்தான். பீஷ்மர் வேறு வில்லை எடுத்தார். எட்டு திசைகளிலும் அம்புகளைச் செலுத்தி மறைத்தார். பல அம்புகள் அர்ச்சுனன் மேல் பாய்ந்தன. ஆனால், அர்ச்சுனனின் திறமை இயல்பாய் இல்லாததை கண்ணன் உணர்ந்தார்.

பீஷ்மர் மீது கொண்ட அன்பினால் அப்படி இருப்பதாய் எண்ணிய கண்ணன், தானே பீஷ்மரைத் தாக்க எண்ணி தேரை நிறுத்தி, சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தி பீஷ்மரை நோக்கி போனார். இதைக் கண்ட பீஷ்மர் ஆனந்தம் அடைந்தார். கண்ணன் கையால் மரணமா? அதை வரவேற்கிறேன் என்று மகிழ்ந்தார்.

அர்ச்சுனன், கண்ணனின் செயல் கண்டு மனம் பதறி ஓடோடி கண்ணனிடம் சென்று காலைப் பிடித்துக் கொண்டு நீங்கள் ஏன் ஆயுதம் ஏந்த வேண்டும்? நான் போரிடேன் என்ற உங்கள் சபதம் என்னவாயிற்று? என்னை உற்சாகப் படுத்த இச்செயலா? அப்படியாயின் இதோ புறப்பட்டேன். சினம் வேண்டாம் என வேண்டினான்.

கண்ணனின் ஆவேசம் தணிந்தது. பின் அர்ஜுனனின் காண்டீபம் இடியென முழங்கியது. யானைகள் சாய்ந்தன. குதிரைகள் வீழ்ந்தன. காலாட் படையினர் சரிந்தனர். மாலை நெருங்க அன்றைய போர் முடிவுக்கு வந்தது.

(பதிவு நீண்டுவிட்டதால், மீதம் உள்ளவை அடுத்த பதிவில்..)

சான்வி
14-12-2011, 07:22 AM
பகுதி முப்பத்தி மூன்று : தினவாரியான யுத்தம் தொடர்ச்சி :

நான்காம் நாள் யுத்தம் :

பீஷ்மர் வியாளம் என்ற வியூகத்தை அமைத்தார். ஐந்து பனைகளை அடையாளமாக உடைய கொடியுடன் போர் புரிந்தார். அனுமானைச் சின்னமாகக் கொண்ட கொடியுடன், அனுமானின் பேராற்றலுடன் போரிட்டான் அர்ஜூனன். அபிமன்யு போர் முனைக்கு வந்தான். அவனைப் பூரிசிரவசு, அஸ்வத்தாமா, சல்லியன் ஆகியோர் எதிர்த்துப் போர் புரிந்தனர். ஒரு புறம் பீமன், துரியோதனின் தம்பியர் எண்மரைக் கொன்றான். தன் கதையால் யானைகளை வீழ்த்தினான். பீமனின் மைந்தன் கடோத்கஜன் வெற்றி மேல் வெற்றி பெற்றான். துரியோதனின் வீரர்கள் சோர்ந்து போயினர். பலர் மாண்டனர்.

தம் மக்கள் மாண்டது குறித்து திருதிராட்டினன் மனம் கலங்கியது.

நான்காம் நாள் போர் நின்றது. பீஷ்மரைக் காணச் சென்ற துரியோதனன், நீங்களும், துரோணரும், கிருபரும் இருந்தும் என் தம்பியர் மாண்டனரே! பல வீரர்கள் உயிர் இழந்தனரே, பாண்டவர்கள் வெற்றியின் ரகசியம் என்ன?

இது குறித்து பலமுறை உன்னிடம் சொல்லி இருக்கிறேன். பாண்டவர்களுடன் சமாதானமாகப் போவதே நன்று என வற்புறுத்தி இருக்கிறேன். எங்கு கண்ணன் உள்ளாரோ, அங்கு தர்மம் இருக்கிறது. எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு வெற்றி இருக்கிறது. இப்போதும் காலம் கடந்து விடவில்லை. போரைக் கைவிட்டு அவர்களுடன் இணை. இல்லையேல் மீளாத்துயரில் ஆழ்வாய் என்றார் பீஷ்மர்.

துரியோதனன் இணங்கினான் இல்லை.

ஐந்தாம் நாள் போர்

பீஷ்மர் மகர வியூகம் வகுத்தார். வடிவத்தில் இது முதலைப்போல் இருக்கும். திருஷ்டத்துய்மன் சியேன வியூகம் அமைத்தான். இது பருந்து போன்றது. பல ஆயிரம் பேர் மாண்டனர். துரியோதனன், துரோணரைப் பார்த்து, குருவே நீர் பாண்டவர்களைக் கொல்லும் செயலில் ஈடுபடுங்கள். உம்மையும், பீஷ்மரையுமே நான் நம்பியுள்ளேன் என்றான்.

அதற்கு துரோணர் பாண்டவரிடம் பகை வேண்டாம் என பலமுறை சொல்லியும் ஏற்கவில்லை நீ. ஆயினும் என்னால் இயன்ற அளவு போரிடுவேன் என்றார்.

சாத்யகியும், பீமனும் துரோணருடன் சண்டையிட, அர்ச்சுனன் அஸ்வத்தாமாவுடன் போரிட்டான். அபிமன்யூ துரியோதனனின் மகன் லட்சுமணனுடன் போரிட்டான். சூரியன் மறைய அன்றைய போர் முடிந்தது.

ஆறாம் நாள் யுத்தம் :

போரில் திருஷ்டத்துய்மன் மகர வியூகம் அமைத்தான். பீஷ்மர் கிரௌஞ்ச வியூகம் அமைத்தார். ஒருவருடன் ஒருவர் போர் புரிந்தனர். பீமன் அன்று சிறப்பாக போரிட்டான். பகைவர்களைக் கொன்று குவித்தான். துரியோதனன் பீமனுடன் போர் புரிய நெருங்கினான். அதைக் கண்ட பீமன் துரியோதனா, நீ இங்குத்தான் இருக்கிறாயா? உன்னைப் போர்க் களம் எங்கும் தேடி அலைந்தேன். இன்றுடன் உன் வாழ்வு முடிந்தது என்று கூறி அவன் தேர்க் கொடியை அறுத்துத் தள்ளினான். பெரும் போருக்குப் பின் துரியோதனன் சோர்ந்து வீழ்ந்தான். சூரியன் மறைய அன்றைய போர் நின்றது.

ஏழாம் நாள் யுத்தம் :

ஆறாம் நாள் போரில் மயங்கி விழுந்த துரியோதனன் மயக்கம் தெளிந்து பீஷ்மரிடம் முறையிட்டான். எனது அச்சமும், சோர்வும் என்னைவிட்டு அகவில்லை. உங்கள் உதவி இல்லையேல் எப்படி வெற்றி பெறுவேன் எனக் கெஞ்சிக் கேட்டான். பீஷ்மர், தன்னால் முடிந்த அளவிற்கு போரிடுவதாகக் கூறி பாண்டவர்களை எதிர்த்தார். துரியோதனன், உடலெங்கும் புண்பட்டு வருந்தினான்.

துரோணருக்கும், விராடன் மைந்தனுக்கும் நடந்த போரில் அம் மைந்தன் மாண்டான். ஒரு புறம் நகுலனும், சகாதேவனும் சேர்ந்து சல்லியனை எதிர்த்து போரிட்டனர். அவன் மயக்கம் அடைந்தான். பழைய பகையைத் தீர்த்துக் கொள்ளக் கருதிய சிகண்டி பீஷ்மருடன் போரிட்டான். கடுமையாய் இருந்த போர். சூரியன் மறைய முடிவுக்கு வந்தது. அன்று இரவு கிருஷ்ணருடைய வேணுகானம் புண்பட்ட வீரர்க்கு இதமாக இருந்தது.

எட்டாம் நாள் யுத்தம் :

பீஷ்மர் மகர வியூகம் அமைத்தார். அது கடல் போல் காட்சி அளித்தது. நாற்சந்தி போன்ற சிருங்கடக வியூகத்தை திருஷ்டத்துய்மன் வகுத்தான். இது வலுவானது. பகைவரின் வியூகம் எதுவானாலும் அதைச் சிதறச் செய்யும் ஆற்றல் உடையது. பீமன் துரியோதனன் தம்பியர் எண்மரைக் கொன்றான். அது கண்டு துரியோதனனும், திருதிராட்டிரனும் வருந்தினர். கௌரவர்கள் படை தோல்வி மேல் தோல்வி கண்டது.

அன்று நடந்த போரில் பீமன் யானைப் படையை அழித்தான். கடோத்கஜன் வீரர்கள் பலரைக் கொன்றான். துரியோதனனை எதிர்த்து கடும் போர் செய்து, அவன் தேரை அழித்தான். அவன் மார்பில் அம்புகளைச் செலுத்தினான். ரத்தம் பீரிட்டது. ஆயினும் துரியோதனன் கலங்காது நின்றான். கடோத்கஜன் போர் வலிமைக் கண்டு துரோணர் முதலானோர் கடோத்கஜனைத் தாக்கினர். பீமன் தன் மகனுக்கு உதவிட விரைந்தான். பீமன் மேலும் துரியோதனன் தம்பியர் எண்மரைக் கொன்றான். இதுவரை பீமன் துரியோதனன் தம்பியர் இருபத்தினான்கு பேரைக் கொன்றிருந்தான். இரவு வர அன்றைய போர் நின்றது.

ஒன்பதாம் நாள் யுத்தம் :

பீஷ்மர் சர்வதோபத்ர வியூகம் வகுத்தார். பாண்டவர்களும் அதற்கேற்ப ஒரு வியூகம் வகுத்தனர். பார்த்தனின் சண்டைமுன் கௌரவர் படை பரிதாபமாக காட்சி அளித்தது. அபிமன்யூவும் போரில் பல வீரர்களைக் கொன்றான். திரௌபதியின் புதல்வர்கள் ஐவரும் அபிமன்யூவுடன் சேர்ந்து அவனுக்கு துணை நின்றனர். அனைவரும் அலம்புசன் என்பவனுடன் போர் புரிந்தனர். அவனோ மாயப்போர் புரிந்தான். எங்கும் இருள் சூழும்படி அம்பு மழை பொழிந்தான். அபிமன்யூ மாற்றுப் அம்பால் மாயையை விலக்கி அலம்புசனைத் தாக்கினான். அலம்புசன் போர்க்களம் விட்டு ஓடினான்.

துரோணருக்கும், அர்ச்சுனனுக்கும் போர் மூண்டது. குருவும், தன் சீடன் என எண்ணவில்லை. சீடனும், இவர் எனது குரு என எண்ணவில்லை. பின் பாண்டவர்கள் ஒன்று கூடிப் பாட்டனாராகிய பீஷ்மரை எதிர்த்தனர். ஆயினும் பீஷ்மரை அசைக்க முடியவில்லை.

பாண்டவர்கள் முயற்சி, தளர்ச்சி ஆனதை அறிந்து கண்ணன் சக்கரத்தை கையில் ஏந்தினார். பீஷ்மரை வீழ்த்த எண்ணம் கொண்டார். தம்மை நோக்கி பரந்தாமன் வருவதுக் கண்டு பீஷ்மர், கண்ணா என் உயிருக்கு விடுதலை வேண்டுகிறேன் என வேண்டிக் கொண்டார்.

பரமனைத் தொடர்ந்து ஓடிய பார்த்தன், போர்க்களத்தில் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்ற கண்ணனின் பிரதிக்ஞையை நினைவூட்டினான்.

சூரியன் சாய அன்றைய போர் முடிந்தது.

அன்று இரவு பாண்டவர்கள் கண்ணனை வணங்கி, இதுவரை நடைபெற்ற போரில் பீஷ்மரை வெல்ல முடியவில்லையே என்ற கவலையை வெளியிட்டனர். நீண்ட யோசனைக்குப் பின், அவரை வெல்வது குறித்து அவரையேக் கேட்க முடிவெடுத்தனர். பின் பீஷ்மர் இருக்குமிடம் சென்று வணங்கினர். பீஷ்மர் அனைவரையும் அன்புடன் தழுவிக் கொண்டார். பின் அர்ச்சுனன், தாத்தா, போர் தொடக்கத்திற்கு முன் உங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் என வாழ்த்தினீர்கள். தங்களை வென்றால்தானே எங்களுக்கு வெற்றி? தங்களைத் தோற்கடிப்பது எப்படி?' என்றான்.

அதற்கு பீஷ்மர் நான் போரில் புறமுதுகு காட்டி ஓடுபவரோடோ, ஆயுதம் இல்லாதவரோடோ, பெண்ணோடோ, பேடியினிகளிடனோடோ போரிட மாட்டேன். பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய சிகண்டியை முன் நிறுத்தி நாளை என்னுடன் போரிடு. சிகண்டியின் முன் என் ஆயுதம் பலனன்றி போய்விடும். அப்போது நீ என்னை எதிர்த்துப் போர் செய். வெற்றி கிட்டும் என்றார்.

கங்கை மைந்தன் கூற்றைக் கேட்டு பாண்டவர்கள் அமைதியாகப் பாசறைக்குத் திரும்பினர்.

பத்தாம் நாள் யுத்தம் :

பீஷ்மர் வீழ்ச்சி அடையும் நாள் வந்தது. கௌரவர்கள் அசுர வியூகத்தை அமைக்க, பாண்டவர்கள் தேவ வியூகத்தை அமைத்தனர். சிகண்டியை முன் நிறுத்திப் பாண்டவர்களின் படை முன்னேறியது. இதுவரை இல்லாத பாதுகாப்பு இன்று பீஷ்மருக்கு இருந்தது. சிகண்டியின் அம்புகள் பீஷ்மர் மார்பில் பாய்ந்தன. விரதப்படி பீஷ்மர் சிகண்டியைத் தாக்கவில்லை. ஆயுதம் ஏதும் கையில் இல்லை. அர்ச்சுனன் அம்பு செலுத்தி, பீஷ்மரின் கவசத்தைப் பிளந்தான். வில்லை முறித்தான். அவரின் வேலாயுதத்தையும், கதாயுதத்தையும் தகர்த்தான். அர்ச்சுனனின் அம்புகள் பீஷ்மரின் உடலெங்கும் தைத்தன.

தேரிலிருந்து பீஷ்மர் சாய்ந்த போது தேவர்கள் மலர் மழை பொழிந்தனர். இரு தரப்பாரும் பீஷ்மரின் வீழ்ச்சிக் கண்டு திகைத்தனர். கீழே வீழ்ந்தவரின் உடல் தரையில் படவில்லை. உடம்பில் தைத்திருந்த அம்புகள், அவர் உடல் பூமியில் படாது தடுத்தன. அவரைக் கௌரவிக்க, கங்காதேவி, பல ரிஷிகளை அனுப்பினாள். அன்னப் பறவை வடிவம் தாங்கி அவர்கள் பீஷ்மரிடம் வந்து பணிந்து சென்றனர். அவர் உத்தராயண புண்ணிய காலம் வரை உயிருடன் இருக்கத் தீர்மானித்திருந்தார். இப்படி மரணத்தைத் தள்ளிப்போடும் வரத்தை தந்தை சாந்தனுவிடமிருந்து பெற்றிருந்தார்.

அவர் உடல் பூமியில் படவில்லையாயினும், தலை தொங்கி இருந்தது. அருகில் இருந்தோர் தலயணைக் கொணர்ந்தனர். ஆனால் அவற்றை விரும்பாத பீஷ்மர் அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் மூன்று அம்புகளை வில்லில் பொருத்தி வானத்தில் செலுத்தினான். அவை, நுனிப்பகுதி மேலாகவும், அடிப்பகுதி தரையில் பொருந்துமாறும் அமைந்து பீஷ்மரின் தலையைத் தாங்கின. பீஷ்மர் புன்னகை பூத்தார்.

பீஷ்மருக்கு தாகம் எடுத்தது. பல மன்னர்கள் தண்ணீர் கொணர்ந்தனர். பீஷ்மர் அர்ச்சுனனை நோக்கினார். குறிப்புணர்ந்த அர்ச்சுனன், அம்பு ஒன்றை பூமியில் செலுத்தினான். கங்கை மேலே பீரிட்டு வந்தது தன் மகனின் தாகம் தீர்க்க.

பீஷ்மர், பின் துரியோதனனைப் பார்த்து, அர்ச்சுனனின் ஆற்றலைப் பார்த்தாயா? தெய்வ பலம் பெற்றவன் இவன். இவனிடம் சிவனின் பாசுபதக் கணையும் உள்ளது. விஷ்ணுவின் நாராயணக் கணையும் உள்ளது. அது மட்டுமின்றி, அனுமனின் ஆற்றலைப் பெற்ற பீமனின் வல்லமையும் உனக்குத் தெரியும். இப்போதேனும் நீ சமாதானமாய் போய் விடு. அவர்கள் நாட்டை அவர்களிடம் ஒப்படைத்து விடு. இப்போர் என்னுடன் முடியட்டும் என்றார். அவரின் அறிவுரையை அவன் ஏற்கவில்லை.

பீஷ்மர் தன்னை அவமதித்தால் கர்ணன் அவர்பால் கோபம் கொண்டிருந்தான். ஆனால், போர்க்களத்தில் அவரது வீரத்தைக் கண்டு அவன் கோபம் மறைந்தது. அதுவே கர்ணனின் பெருந்தன்மையான குணமாக இருந்தது. பீஷ்மரின் வீரம் அவனைக் கவர்ந்தது. விரோதிகளிடம் கூட இருக்கும் நேர்மையை மற்றும் நல்ல குணங்களை அவன் போற்றினான். சாவுப் படுக்கையில் இருந்த பீஷ்மரைக் காணச் சென்றான்.

கர்ணன் : பிதாமகரே, உங்களுக்கு மரியாதை செய்ய கர்ணன் வந்திருக்கிறேன்.

பீஷ்மர் : (கண்களில் கண்ணீர் வழிய, ஒரு தந்தை மகனைத் தழுவுவது போல தழுவிக் கொண்டார்). கர்ணா, நான் உன்னை வெறுப்பதாக நினைக்கிறாய் அல்லவா?? எனக்கு உன்னிடம் சிறிதளவு கூட விரோதம் கிடையாது. நீ சிறந்த வீரன் என்பதை நான் அறிவேன். நீ கடவுளைப் போன்றவன். வீரத்திலும், தீரத்திலும் உனக்கு இணையானவர் கிடையாது. யுத்தக் கலையில் நீ அர்ஜுனனுக்கும், கிருஷ்ணனுக்கும் இணையானவன். ஆனால் நீ உன் வீரத்தின் மீது கர்வம் கொண்டவன். உன் கர்வத்தைப் போக்கவே நான் உன்னை கடிந்து கொண்டேன்.

இதைக் கேட்ட கர்ணன் குரல் அன்பினால் கம்மியது.

கர்ணன் : நான் அறியாமையாலோ, அல்லது அதனால் வந்த கோபத்தாலோ உங்களை கடிந்து பேசியிருந்தால் இந்த தேரோட்டி மகனை மன்னியுங்கள் பிதாமகரே.

பீஷ்மர் : போதும் கர்ணா.. உன் பிறப்பின் ரகசியம் நான் அறிவேன். நீயும் என்னை தாத்தா என்றே அழை. நான் சொல்வதைக் கேள் கர்ணா..

கர்ணன் : பீஷ்மர் உண்மையை அறிந்தவர் என்பதை அறிந்த கர்ணன்.. ஆச்சிர்யப்படுகிறான். சொல்லுங்கள் தாத்தா...

பீஷ்மர் : கௌரவர்களால் யுத்தத்தில் ஜெயிக்க முடியாது. நீ உன் தம்பிமார்களுடன் சேர்ந்துகொள். துரியோதனனை யுத்தம் செய்வதிலிருந்து விலக ஆலோசனை கூறு. அப்படி நீ செய்வாயானால், அனைவரும் அமைதியுடன் இருக்கலாம்.

கர்ணன் : என்னை மன்னியுங்கள் தாத்தா. பதிமூன்று வருடங்கள் நான் துரியோதனனின் அரவணைப்பில், அவனது உப்பைத் தின்று உடல் வளர்த்திருக்கிறேன். இப்போது சண்டை என வரும்போது நான் என் தம்பிகளுடன் சேர்ந்து விட்டால், அது நான் என் நண்பனுக்கு செய்யும் துரோகம் அல்லவா??? இந்த உலகம் என்னை மன்னிக்குமா?? முதலில் என் மனம் என்னை கொன்றுவிடாதா?? என்னால் அது இயலாது தாத்தா.

முடிவை நான் அறிந்தே இருந்தாலும், நான் துரியோதனுக்கு எதிராக யுத்தம் செய்ய மாட்டேன் தாத்தா. நீங்கள் சொல்லி நான் மறுக்க வேண்டிய நிலைக்காக என்னை மன்னியுங்கள்.

பீஷ்மர் : அறம் முடிவில் வெல்லும். நீ விரும்பியபடியே செய் கர்ணா, எனக் கூறி ஓய்வுக்காய் தன் கண்களை மூடினார் பீஷ்மர். கர்ணனும் தன் இருப்பிடம் திரும்பினான்.

(கர்ணன் யுத்த களத்தில் இறங்குவான் அடுத்த பகுதியில்....)

நான் அறியா தகவலையும், அறிந்ததை இன்னும் மெருகேற்றவும் உதவும் இணையத்துக்கு எனது சிறப்பு நன்றிகள்

சான்வி
14-12-2011, 07:32 AM
பகுதி முப்பத்தி நாளில் ஒன்று : தினவாரியான யுத்தத்தின் தொடர்ச்சி :


பதினோராம் நாள் யுத்தம் :


பத்தாம் நாள் போர் கௌரவர்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. பீஷ்மர் வீழ்ச்சிக்குப் பின் யார் தலைமை ஏற்று போர் தொடர்வது என்ற சிந்தனை எழுந்தது. பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பின்னர் களம் இறங்குவதாக சொன்னதின்படி கர்ணன் களம் இறங்கினான்.

கர்ணனை பிரதம தளபதியாக்க ஒரு சாரர் கருத்து தெரிவித்தாலும், கர்ணன் குரு துரோணர் தளபதியாக இருக்கட்டும் எனக் கூறினான். எனவே பதிரோனாம் நாளில் இருந்து பதினைந்தாம் நாள் வரை துரோணர் தளபதியாக இருந்தார். துரியோதனன், கர்ணன் மற்றும் துரோனரிடம் எப்படியாவது தருமரை உயிருடன் பிடித்து என்னிடம் ஒப்படையுங்கள் என வேண்டினான்.

தருமரை உயிருடன் பிடித்து விட்டால், அவரை மீண்டும் சூதாட வைத்து, தோற்கடித்து, ஆயுட்காலம் முழுதும் வனவாசம் என்று அனுப்பி விடலாம் என்று திட்டமிட்டான் துரியோதனன்.

இந்த் செய்தி ஒற்றர்கள் மூலம் பாண்டவர்களை எட்டியது. அதனால், தருமருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. துரோணர் சகட வியூகம் வகுத்தார். பாண்டவர்கள் கிரௌஞ்ச வியூகம் வகுத்தனர்.

கர்ணன் களம் இறங்குகிறான் என்றதும், கலக்கத்தில் இருந்தனர் பாண்டவ படையினர். கண்ணனின் ஆலோசைனையின் பேரில், பீமனின் மகனான கடோத்கஜனை போரிட அழைத்தனர்.

கர்ணன் கால் பதித்த இடம் எல்லாம் காலனின் ஆட்சியாகவே இருந்தது. அவன் சென்ற வழியில் எல்லாம் ஆயிரக்கணக்கான வீரர்கள் மடிந்தனர்.

அன்றைய போரில் அபிமன்யூவின் கை ஓங்கியது. அவனுக்குத் துணையாக கடோத்கஜன் இறங்கினான். துரியோதனின் லட்சியத்தை நிறைவேற்ற துரோணர் தருமர் மீதே குறியாக இருந்தார். இதை உணர்ந்து அர்ச்சுனன் தருமர் அருகே வந்தான். பீமனும் தருமரை காப்பதில் ஈடுபட்டான்.

அபிமன்யூவின் போர்த்திறன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவன் துரியோதனனின் மகன் லட்சுமணனைத் தாக்கி அவனைப் பிடித்துத் தேர்ச் சக்கரத்தில் கட்டிக் கொண்டு திரும்பினான். இதனை அறிந்த சல்லியன் அபிமன்யூவைத் தடுத்து நிறுத்திப் போரிட்டான். சல்லியனின் வில்லையும் தேரையும் முறித்தான் அபிமன்யூ.

இந்நிலையில் சூரியன் மறைந்தான். போர் நின்றது.


பனிரெண்டாம் நாள் யுத்தம்:


தருமரை உயிருடன் பிடிக்க வேண்டுமானால், அர்ஜுனர் அவர் பக்கம் இருக்கக் கூடாது எனவே அவனை திசை திருப்ப வேண்டும் என திட்டம் தீட்டி, திரிகர்த்த வேந்தனாகிய சுசர்மன் மற்றும் அவனது சகோதரர்கள் சத்தியரதன், சத்தியவர்மன், சத்தியகர்மன் ஆகியோர், தென்திசையில் இருந்து அர்ஜுனனுக்கு சவால் விட்டனர். அர்ஜுனன், பாஞ்சால நாட்டு மன்னன துருபதனின் சகோதரன் சத்தியஜித்திடம் தருமரை பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சவால் விட்டவர்களை எதிர்க்கச் சென்றான்.

மும்மரமாக நடைபெற்ற அன்றைய போரில் கண்ணனின் திறமையால், அர்ஜுனனின் ரதம், யுத்தகளத்தின் அனைத்து பகுதிகளிலும் சுழன்றது. கௌரவர்களும் வெற்றி அல்லது வீரமரணம் எனப் போரிட்டனர். திரிகர்த்த வேந்தனை வெல்ல முயற்சித்து, அது பலிக்காததால், வாயு அஸ்திரத்தை ஏவி, அனைவரையும் வீழ்த்தினான் அர்ஜுனன். அதிலே சுசர்மன் மட்டும் தப்பினான்.

அந்தப் போரை முடித்துக் கொண்டு அர்ஜுனன், தருமரைக் காக்கும் பொருட்டு, துரோணரை எதிர்த்தான். துரோணரின் திறமை அன்றைக்கு அனைத்துப் போரையும் கவர்ந்தது. தன்னை எதிர்த்த அனைவரையும் அவர், தன் ஆற்றல் முழுவதும் காட்டி எதிர்த்தார். துரோணரை முறியடிக்க திஷ்டத்துய்மன் வந்தான். தன் மரணம் இவன் கையில் என அறிந்திருந்த துரோணர், அவனைத் தவிர்த்தார்.

அதே நேரத்தில் சத்யஜித் தன் திறமை முழுதும் காட்டி தருமரைக் காக்க முற்பட்டான். அவனுக்கும் துரோணருக்கும் நடந்த போர் தீவிரமாக இருந்தது. முடிவில் சத்தியஜித் மரணத்தை தழுவினான். அதைக் கண்ட விராட மன்னனின் தம்பி சதாணீகன் துரோணரை எதிர்க்க கோபமுற்ற துரோணர், ஒரே அம்பில் அவன் தலையைக் கொய்தார்.


துரோணர், தருமரை சிறை பிடித்து விடுவாரோ என பயந்த பீமன் அங்கே வந்தான். அவன் மீது பல யானைகளை ஏவினான் துரியோதனன். அவைகளைப் பந்தாடினான் பீமன்.

அங்கே பகதத்தன் தன் சுப்ரதீபம் எனும் யானையில் வந்து பீமனுடன் போரிட்டான். அந்த யானை பீமனின் தேரைத் தகர்த்தது. பின்னர் அது பீமனை தன் துதிக்கையால் தூக்கி எறிய முற்பட்டது. அப்போது பீமன் அதன் மர்மஸ்தானத்தில் தாக்கினான். அந்த வலியிலும் அது அவனைக் காலால் மிதித்துக் கொள்ள முற்பட்டது. ஆனாலும் பீமன் அதனிடம் இருந்து தப்பினான். பின்னர் அந்த யானை அபிமன்யுவின் தேரை தூள் தூளாக்கியது. சாத்யகியின் தேறும் அதே நிலைக்கு வந்தது.

யானையின் அட்டகாசம் கண்ட அர்ஜுனன் அங்கே விரைந்து வந்தான். அர்ஜுனன் பகதத்தனுடன் கடும் போர் புரிந்தான். பீமன் அந்த யானையின் மீது பாய்ந்து அதனுடன் சண்டை இட்டான். அர்ஜுனன் தன் ஒரு அம்பால் யானையின் கவசத்தை உடைக்க, அதன் பின்னர் பீமன் அந்த யானையைக் கொன்றான்.

ஒரு கடுமையான போருக்கு பின்னர், அர்ஜுனன் எய்த ஒரு அம்பு மாவீரன் பகதத்தனைக் கொன்றது.

பின்னர் அர்ஜுனன் திருதிராஷ்டிர மன்னனின் மைத்துனர்களான அசலன், விகுஷன் ஆகியோரைக் கொன்றான். சகோதரர்களின் மரணத்தை அறிந்த சகுனி மாயையால் இருள் பரவச் செய்தான். அது அர்ஜுனனின் ஒரு ஒளிமயக் கணையால் நீங்கியது. சகுனி பயந்து வேறிடம் நோக்கி நகர்ந்தான். தருமரை பிடித்து விடலாம் என்ற துரோணரின் கனவு பலிக்கவில்லை.

கௌரவர்கள் கலங்க, பாண்டவர்கள் மகிழ அன்றைய போர் ஒரு முடிவுக்கு வந்தது.

அன்றைய போர் கண்டு சினம் கொண்ட துரியோதனன், துரோனரிடம் சென்று வாக்கு தவறியதாக கடுமையாகப் பேசினான். இதனால் துரோணர் கோபம அடைந்து, அவர்களுடன் சண்டை வேண்டாம் என ஆயிரம் முறை சொன்னபோது கேட்காத நீ இப்படி பேசாதே எனக் கூறினார். அதைக் கேட்ட துரியோதனன் பணிந்து அவரிடம் எப்படியாவது தருமரைப் பிடித்துத் தாருங்கள் என வேண்டினான்.

அதைரியப்படாதே துரியோதனா.. நாள் ஒரு உன்னதப் போர் முறையக் கையாளப் போகிறேன். நீ எப்படியாவது அர்ஜுனனை இங்கே இல்லாமல் செய்துவிடு. பின்னர் தருமரை நான் உனக்கு பிடித்துத் தருகிறேன் என்றார்.

துரோணரின் பேச்சில் நம்பிக்கை வர துரியோதனன் சென்றான்


பதிமூன்றாம் நாள் யுத்தம் :


துரோணர் தன் படைகளை சக்ரவியூகத்தில் அமைத்தார். இருப்பதிலே மிகவும் சிக்கலானது இது. அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் மட்டுமே அதை உடைக்கத் தெரியும், அவர்கள் அங்கே இல்லை. துரோணர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, துரியோதனன் ஆட்கள், தென்திசையில் அர்ஜுனனுக்கு அழைப்பு விடுக்க, அவன் அங்கே செல்கிறான்.

அர்ஜூனனின் மகன் அபிமன்யூ, அவரது தாயின் வயிற்றில் இருந்தபோது அர்ஜூனன் அவரது தாய் சுபத்ராவிற்கு சக்கரவியூகம் ஏற்பாடுகளைப் பற்றிக் கூறியபோது கேட்டதால், அவனுக்கு சக்கரவியூகம் பற்றி பகுதியளவு தெரியும். சுபத்ரா முதல் பகுதிய விளக்கங்களைக் கூறும்போது மட்டுமே விழிப்புடன் இருந்தார் அதன் பின்னர் அவர் தூங்கிவிட்டார். எனவே அபிமன்யூவிற்கு அந்த அமைப்பிற்குள் நுழைவது எவ்வாறு என்பது மட்டுமே தெரியும். ஆனால் அதிலிருந்து தான் எவ்வாறு வெளிவருவது என்பது தெரியாது. எனவே, நான்கு பாண்டவ சகோதரர்களும் அர்ஜூனன் மற்றும் கிருஷ்ணர் இல்லாததால் அபிமன்யூவைத் தலைமையாகக் கொண்டு சக்ரவியூகத்தில் நுழைய முடிவுசெய்தனர்.

வெகுவிரைவில் அபிமன்யூ சக்ரவியூகத்தில் நுழைந்தான். ஆனால் பாண்டவர்களின் திட்டப்படி மற்ற வீரர்கள் உள்ளே நுழையும் முன்னே, வியூகம் உடைபட்ட இடம் அடைக்கப் பட்டது ஜயத்ரதன் மூலம். சிவபெருமானிடம் பெற்ற வரத்தின் படி, ஒரு நாள் முழுதும் பாண்டவர்களை எதிர்க்கும் வலு அவருக்கு உண்டு.

அதனால், அபிமன்யு தனி ஒருவனாய், துரோணர், கிருபர், கர்ணன், அசுவத்தாமா, துரியோதனன் ஆகியோரை எதிர்த்தான். ஆனால் விரைவிலேயே நேர்வழியில் அவனுடன் போராடி வெல்ல முடியாது என்பதை அறிந்த துரோணர், பின்னிருந்து அவனைத் தாக்கினார். அவனது தேர்க் குதிரைகளை வெட்டினார். அதைக் கண்ட அவன், வாளையும், கேடையத்தையும் எடுத்துக் கொண்டு நூற்றுக்கணக்கான வீரர்களை வெட்டி வீழ்த்தினான். துரோணர் பின்னிருந்து அவன் வாளை உடைக்க, கர்ணனும் அவ்வாறே அவன் கேடையத்தை உடைத்தான்.

எல்லாம் இழந்தாலும், நெஞ்சுரம் இழக்காது, ஒரு கதாயுதத்தை கையில் ஏந்தி அசுவத்தாமாவை விரட்டினான். யுத்த விதிகளுக்கு புறம்பாகவே அபிமன்யு அழிக்கப்பட்டான்.

தென்திசையில் எதிரிகளை அழித்துத் திரும்பிய அர்ஜுனன் இதைக் கேட்டு மயங்கி விழுந்தான். இதன் மூல காரணம் ஜயத்ரதன் என அறிந்தான். அடுத்தநாள் அந்தி சாய்வதற்குள், அவனை மடிப்பேன் அல்லது என் உயிர் மாய்ப்பேன் இது சத்தியம் என தன் காண்டீபத்தின் மீது சத்தியம் செய்தான். அப்போது அந்த ஒலியில பூமியே அதிர்ந்ததாய் கூறுவதும் உண்டு.

தொடரும்...

சான்வி
14-12-2011, 07:35 AM
பகுதி முப்பத்தி ஐந்து : தினவாரியான யுத்தத்தின் தொடர்ச்சி :


பதினான்காம் நாள் யுத்தம் :


முந்தைய தினத்தின் இறுதியில் அர்ஜுனனின் சபதத்தை கேட்ட ஜயத்ரதன், போர்க்களத்தை விட்டு ஓடிவிடலாமா என யோசித்தான். அது வீரருக்கு அழகன்று என மற்றவர்கள் தடுத்தனர். அர்ஜுனனை எண்ணி துரோணர் கலங்கினார். அதற்கேற்ப பத்மவியூகம், சகடவியூகம் என வியூகங்களை வகுத்தார்.

கண்ணன் தேரை ஓட்ட, அனுமனின் கொடி கொண்ட ரதத்தில், ஆக்ரோஷமாய் அர்ஜுனன் உள்ளே வர, அவனை எதிர்க்க, துரோணர், துரியோதனனின் தம்பியான துர்மர்ஷணனை பெரும்படையுடன் அர்ச்சுனனை நோக்கி அனுப்பினர். சிறிது நேரத்திலே, அவன் புறமுதுகிட்டு ஓடினான். அவன் ஓட்டத்தைக் கண்டு சினம் கொண்ட துச்சாதனன் அர்ஜுனனை எதிர்க்க வந்தான். அவனும், சோர்ந்து முடியாமல் திரும்பி விட்டான்.

துரோணர் எதிர்க்க வந்தார். அர்ஜுனனின் அன்றைய இலக்கு ஜயத்ரதன் ஆதலால் அர்ஜுனன் அவரைத் தவிர்த்து வியூகத்தை உடைத்து உள்ளே புகுந்தான். ஜயத்ரதனை நோக்கி முன்னேறிய அர்ஜுனனைக் கண்ட துரியோதனன், துரோணரைக் கடிந்து கொண்டான். அர்ஜுனனை வேறு வகையில் திசை திருப்பினால், தருமரைக் கைப்பற்றுவது சுலபம் என்பதால் அவனை அங்கே விட்டேன் என்றார்.

என் கவசத்தை உனக்குத் தருகிறேன், அதை நீ போட்டுக் கொண்டு போய் அர்ஜுனனுடன் போராடு. வெற்றி உனக்குத்தான் என அவரது மந்திர கவசத்தை துரியோதனனுக்கு தந்தார்.

அர்ஜுனனை எதிர்க்க வந்த துரியோதனனை அர்ஜுனனின் அம்புகளால் ஏதும் செய்ய முடியவில்லை. அவன் வியக்க, கண்ணன் உண்மை உரைக்க, பின்னர் கவசம் இல்லாத இடங்களில் யுத்த முறைக்கு புறம்பாக அர்ஜுனன் தாக்க, வலி தாளாமல் துரியோதனன் வேறிடம் சென்றான்.

அர்ஜுனன் ஜயத்ரதன் இருக்கும் இடம் நோக்கி செல்ல, அங்கே அவனை எதிர்க்க, பூரிசிரவஸ் வந்தார். அவருடன் அர்ஜுனன் போரிட, அர்ஜுனனின் உதவிக்கு சாத்யகி வந்தார். பூரிசிரவஸ் – இன் தாக்குதலால் சாத்யகி மயக்கம் அடைந்தான். அவனைக் வெட்ட வாளை ஓங்கினார் பூரிசிரவஸ். ஓங்கிய கையை பார்த்தனின் அம்பு துளைக்க, அது வாளுடன் வீழ்ந்தது.

நான் இன்னொருவனுடன் போரிட, அறநெறி கெட்டு நீ என் கையை துண்டித்து நிந்தனைக்கு உரியது என்றார் பூரிசிரவஸ். நேற்று என் மகனைக் நீங்கள் கொன்றது மட்டும் அறவழியா?? அதைக் கூறும் தகுதி உமக்கு உள்ளதா என அர்ஜுனன் கேட்டான்.

தன் செயலுக்கு நாணி, யுத்தம் விடுத்து, பரமனை நினைத்து தியானத்தில் ஆழ்ந்தார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த சாத்யகி, தியானத்தில் இருந்த பூரிசவரஸின் தலையைக் கொய்தான்.

மாலை நேரம் நெருங்கிக் கொண்டு இருந்தது. பலரையும் வென்று அர்ஜுனன் ஜயத்ரதனை நெருங்கினான். அப்போது ஜயத்ரதன் துரோனரிடம், நீங்கள் ஆயிரம் பேருக்கு கற்றுக் கொடுத்தாலும், வேறு யாரும் அர்ஜுனனைப் போலே சிறந்து விளங்கவில்லையே ஏன்??? என வினவ, அவன் தன் வலிமையுடன், தவ வலிமையையும் கொண்டு விளங்குகிறான் என்றார்.

துரோனர் இங்கே ஜயத்ரதனைக் காக்க, மீதம் உள்ள பாண்டவர்களை அங்கே எஞ்சி இருந்த மற்றவர் துணையுடன் கர்ணன் ஒரு வழி செய்து கொண்டு இருந்தான். அத்தனை பேர் வந்தாலும், எதிர்க்க இயலாத நிலை. விஜயம் அவனுக்கு தந்து கொண்டு இருந்தது ஜெயம்.

வியூகத்தின் நடுவே பாதுகாப்பாய் இருந்தான் ஜயத்ரதன். அந்தியோ நெருங்கிக் கொண்டு இருந்தது. அவன் கதை முடிக்க வேண்டுமானால் துரோனரைத் தாண்டிப் போக வேண்டும். அந்த மனிதரோ, அவனைக் காக்கும் அரணாய் இருக்க, கண்ணன் ஒரு உபாயம் செய்தான். தன் சக்ராயுதம் கொண்டு சூரியனை மறைத்தான். தன் வாக்கை நிறைவேற்ற முடியாத அர்ஜுனன், துக்கம் மிக தீக்குளிக்க ஏற்பாடுகள் செய்ய, அதைக் காணும் ஆவலில் வெளி வந்தான் ஜயத்ரதன். அவன் வெளி வந்ததும், கண்ணன் உடனே, சக்ராயுதத்தை விளக்க, சூரியன் மறையாதது கண்டு, அவன் மீண்டும் தன்னை மறைத்துக் கொள்வதற்குள், கண்ணன் சொல்படி அர்ஜுனனின் பாசுபத அஸ்திரம், அவன் சிரசைக் கொய்தது.

தன் மகன் தலையை எவன் ஒருவன் தரையில் விழச் செய்கிறானோ, அவனது தலை சுக்கல் சுக்கலாய் போக வேண்டும் என, தவம புரிந்து கொண்டு இருந்தான் ஜயத்ரதன் தந்தை விருத்தாட்சத்திரன். இதை கண்ணன் உரைத்தான். கொய்த அந்த தலை தவத்தில் இருக்கும் தந்தை மடியில் சென்று விழுமாறு செய்தான் அர்ஜுனன்.

தன் மடியில் ஏதோ விழக் கண்ட விருத்தாட்சத்திரன், அதை எடுத்து நோக்க, தன் மகனின் சிரம். அவர் பதறி அதை எறிய, அவர் தலை சுக்கல் சுக்கலானது. ஒரே நேரத்தில் தந்தை, மகன் இருவரும் மறைந்தனர்.

பாண்டவர்களுக்கு மகிழ்ச்சி. கௌரவர்களுக்கு துயரம். அன்றைய போரில் துரியோதனன் தம்பிகள் பலர் மாண்டிருந்தனர். இதனால் துயரம் மிகக் கொண்ட துரியோதனன், தன்னைத்தானே நொந்து கொண்டான்.

அவன் மனவேதனையை உணர்ந்த துரோணர், தன் முழு ஆற்றலையும் செலுத்திப் போரிடத் துணிந்தார். பகைவரைத் தொலைத்துவிட்டுத்தான் தன் கவசத்தைக் களைவேன் என சபதம் செய்து, சூரியன் மறைந்த பின்னும் யுத்தம் செய்ய தயார் ஆனார்.

தன்னை எதிர்த்து வந்த சிபி என்னும் மன்னனின் தலையைக் கொய்தார். தன்னை எதிர்த்த திருஷ்டத்துய்மனின் மைந்தரைக் கொன்றார்.

பீமன் வேறு புறத்தில் துரியோதனனின் தம்பியரான துர்மதனையும்,துஷ்கர்ணனையும் கொன்றான். சாத்யகி சோம தத்தனை எதிர்த்தான். சகுனி சோம தத்தனுக்கு உதவினான்.

கடோத்கஜன் ஒரு புறம் கடும் போர் புரிந்தான். அவன் மகன் அஞ்சனபர்வா அஸ்வத்தாமாவை எதிர்த்து போரிட்டான். ஆயினும் அம்மகன் கொல்லப்பட்டான். மகனை இழந்த ஆத்திரத்தில், அஸ்வத்தாமாவுடன் கடும் போரிட்டான் கடோத்கஜன். இருவரும் சளைக்கவில்லை. பின்னர் கர்ணனிடம் வந்தான் கடோத்கஜன். அவனது பேராற்றலைக் கண்ட துரியோதனன் நடுங்கினான். அரக்கர்களுக்கு இரவில் தங்கள் பலம் இருமடங்காய் அதிகரிக்கும் அல்லவா??? எனவே கடோத்கஜனை அடக்க வழின்றி தவித்தனர் கௌரவர்கள்.

துரியோதனனின் வற்புறுத்தலின் பேரில் அர்ஜுனனைக் கொல்ல வைத்திருந்த சக்தி ஆயுதத்தை (இந்திரன் கர்ணனின் கொடைக்கு மகிழ்ந்து, ஒரு முறை மட்டும் உபயோகிக்கலாம் எனக் கொடுத்திருந்தது) கடோத்கஜன் மேல் பிரயோகிக்க, அவன் மாண்டான்.

ஆயினும், இனி எப்படி அர்ச்சுனனைக் கொல்வது என கவலையில் மூழ்கினான் கர்ணன்.

பாண்டவர்களோ பதின் மூன்றாம் நாள் போரில் அபிமன்யூவை இழந்ததற்கும், பதினான்காம் நாள் போரில் கடோத்கஜனை இழந்ததற்கும் வருந்தினர்.

இந்த அளவில் அன்றைய போர் நின்றது.


பதினைந்தாம் நாள் யுத்தம் :

தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்து வந்த துரியோதனன் நம்பிக்கையை இழக்கவில்லை. துரோணர் வெற்றியை பறித்துத் தருவார் என எண்ணினான். துரோணரும் கடுமையாகப் போரிட்டார். போரின் உக்கிரத்தைக் கண்டு கண்ணன் ஆழ்ந்து சிந்தித்தார். அறநெறிப்படி துரோணரை வெல்ல முடியாது என உணர்ந்தார். பிரமாஸ்திரத்தையும் துரோணர் பயன்படுத்தக் கூடும் என எண்ணினார்

ஏதேனும் பொய் சொல்லித் துரோணரின் கவனத்தைத் திருப்பினாலன்றி வெற்றி கிடைக்காது என எண்ணினார் கண்ணன். ஒரு முனையில் யுத்தகளத்தை கலக்கிக் கொண்டிருந்தான் பீமன். அசுவத்தாமன் என்ற புகழ் மிக்க யானையைக் கதாயுதத்தால் கடுமையாக தாக்கினான். அது சுருண்டு விழுந்தது. அசுவத்தாமன் என்ற அந்த யானை இறந்ததில் அசுவத்தாமனே இறந்தாற்போல உணர்ச்சி வயப்பட்ட பீமன், 'அசுவத்தாமனை கொன்றுவிட்டேன்' என கத்தினான்.

இது துரோணர் காதில் விழுந்தது. தலையில் இடி விழுந்தாற் போல ஆனார். ஆனால் பின் மனம் தெளிந்தார். அச் செய்தி பொய்யாய் இருக்கும் என எண்ணினார். ஆற்றல் மிக்க தன் மகன் அசுவத்தாமனை யாராலும் கொல்லமுடியாது என நினைத்து போரைத் தொடர்ந்தார்.

ஆயிரக்கணக்கான குதிரைகளையும், வீரர்களையும், யானைகளையும் கொன்று குவித்தார். ரத்த வெள்ளம் பெருக்கெடுத்தது. போர்க்களம் ரத்தக் கடல் போல் காட்சியளித்தது. அணையப் போகும் ஜோதி இன்னும் பிரகாசமாய் எறிவது போல, அன்றைய போரில் அவரது ஆற்றல அபரிமிதமாக இருந்தது. அவரது திறம் மயிர்க் கூச்சரியச் செய்ததாம்.

துரோணர், விண்ணுலகம் செல்லும் காலம் வந்ததை உணர்ந்த வஷிஷ்டர் முதலான ரிஷிகள் அவரிடம் வந்தனர். சாந்த நிலை அடையுங்கள் என வேண்டினர். முனிவர்கள் கூற்றும், சற்று முன்னர் கேட்ட பீமன் கூற்றும் அவரது போர்ச்செயலை அறவே நிறுத்தின. உண்மையில் மகன் கொல்லப்பட்டானா? என்ற வினா உள்ளத்தை வாட்ட, சத்தியமே பேசும் தருமரிடம் கேட்டால் உண்மை தெரியும் என அவரை அணுகினார்.

இதை முன்னமே யோசித்த கண்ணன், ஒரு நன்மையின் பொருட்டு பொய் சொல்லுமாறு தருமரிடம் கூறினார். தருமர் மறுத்தார். அசுவத்தாமன் என்னும் யானை இறந்தது உண்மைதானே! அதையாவது சொல்லுங்கள் 'என கண்ணன் வற்புறுத்த, தருமரும் சரியென அதை அவர் கூற முற்பட்டபோது 'அசுவத்தாமன் இறந்தான்' என்ற செய்தி மட்டும் காதில் விழுமாறும், மற்றவை விழாதவாறும் சங்கை எடுத்து முழங்கினார் கண்ணன்.

தருமரின் கூற்று பொய்யாய் இராது என துரோணர் ஆயுதங்களைத் தூக்கி எறிந்து விட்டு தியானத்தில் ஆழ்ந்தார். அந்த நேரம் பார்த்துத் திருஷ்டத்துய்மன் வாள் கொண்டு துரோணரின் தலையைத் துண்டித்தான். அவரது தலை தரையில் உருள, உடலிலிருந்து கிளம்பிய ஜோதி விண் நோக்கிச் சென்றது.

கண்ணன் செய்த சூழ்ச்சியில் பங்கு கொண்ட தருமரின் செயல் தவறானது என ஒரு சாரர் விவாதிப்பது உண்டு. இன்னும் ஒரு தகவலை, அதுவரை தருமரின் ரதம் நிலத்தில் படாமல் இருந்ததாயும், இந்த அவரது செயலுக்குப் பின், அவர் ரதம் மண்ணில் பதிந்ததாயும் கூறுவது உண்டு.

துரோணரின் வீழ்ச்சியோடு பதினைந்தாம் நாள் போர் முடிந்தது.

துரோணரின் வீழ்ச்சிக்குப் பின் நமது கதையின் நாயகன் தான் பிரதம தளபதி.

அவரது வீரத்தின் தீரத்தை அடுத்த பகுதியில் காண்போம்.

சான்வி
14-12-2011, 07:40 AM
பகுதி முப்பத்தி ஆறு : தினவாரியான யுத்தத்தின் தொடர்ச்சி


துரோணரின் மறைவுக்குப் பின்னர், ஒரு மனதாக கர்ணன் பிரதம தளபதியாக நியமிக்கப் படுகிறான். மகாபாரத்தில், பதினாறு மற்றும் பதினேழாம் நாள் யுத்தம் “கர்ண பர்வா” எனும் தலைப்பின் கீழ் உள்ளது.

கர்ணன் தளபதியாய் ஆனதும், கண்ணன், அர்ஜுனனிடம் கர்ணனைப் பற்றி சொல்கிறார்.

கர்ணன் ஒரு மாவீரன். அவனை உனக்கு சமமானவன் மட்டும் அல்ல உன்னை விட வீரத்தில் மேலானவன்.

ஆற்றலில் அவன், தன் வழியே வரும் அனைத்தையும், பொசுக்கிடும் வலிமை கொண்ட நெருப்புக்கு சமம்.

வேகத்தில், கட்டுக்கடங்காமால் மோதும் மூர்க்கத்தனமான காற்றுக்கு சமம் அவன்.

சீற்றம் கொள்கையில், தன்னைக் கூட அழித்துக் கொள்வான் அவன்.

வலிமையான பண்பில், உடல் அமைப்பில், அவன் சிங்கத்துக்கு ஒப்பானவன்.

உயரமும், உயரத்துக்கேற்ற பருமனும், நீண்ட கைகளும், பரந்த மார்பும் உடையவன்.

வெல்லமுடியாதவன். கொல்லப்பட முடியாதவன். உணர்ச்சிமிக்கவன். தோள்கள் தினவெடுத்தவன்.

போர்க்கலையின் ஒவ்வொரு செயல்பாடுகளின் மீதும் வெறிபிடித்தவன்.

எதிரிகளை தினறடிப்பவன். அவன் நண்பரின் பயங்களை சிதறடிப்பவன்.

மொத்தத்தில் அவன் ஒரு நாயகன். இதுவரை நாயகனாய் இருந்த அனைவருக்கும் முதலானவன்.


மூவுலகின் தலை சிறந்த அனைத்து வீரர்களும், கடவுளர்களும் ஒன்று சேர்ந்து சண்டை இட்டாலும் அவனை வெல்ல முடியாது. எனவே அதற்காய் பலரின் கோபத்துக்கு அவனை ஆளாக்கி, அவனது வலிமை பாதியாய் மட்டுப்படுத்தப்பட்டது.

ஆனாலும் கூட, அவனுக்கும், உனக்கும் நடைபெற இருக்கும் மாபெரும் சண்டையில், சிறந்த, சிதறாத கவனம், மற்றும் தெளிவு இருந்தால் மட்டுமே அவனை வெல்வது சாத்தியம்.

என பலவாறாய் அர்ஜுனனுக்கு யோசனைகள் சொல்லி, அவனை கர்ணனுடனான யுத்தத்துக்கு கண்ணன் தயார் செய்தார்.


பதினாறாம் நாள் யுத்தம் :


பதினாறாம் நாள் பாண்டவர்கள் அனைவருக்கும் உள்ளுக்குள் ஒரு வித பயத்துடனே ஆரம்பித்தது.

கர்ணன் ஒற்றை ஆளாய் நின்று பாண்டவர்கள் அனைவரையும் முறியடித்தான்.

அவன் கால் பதித்த இடம் எல்லாம் காலனின் ராஜ்ஜியம் தான்.

சகதேவன், துச்சாதணனை எதிர்த்து, கடுமையான யுத்தம் செய்து அவனை தோற்கடித்தான். அவனது படைகளையும் துவம்சம் செய்தான்.

நகுலன் கௌரவ சேனையை கலங்கடித்துக் கொண்டிருந்தான் ஒரு பக்கம். அழிவைக் கண்ட கர்ணன், அங்கே வந்தான்.

நகுலன் : (அவனைக் கண்டு ஏளனமாய் நகைத்தபடியே) ஒ.. பாவ ஆத்மாவே, என்னுடைய நல்ல நேரம் நீ என் முன்னே இங்கே இருப்பது. நீதான் இந்த யுத்தத்துக்கே அடிப்படையானவன். உன்னை இன்று கொல்வதன் மூலம் என் தீராத தாகத்தைத் தனித்துக் கொள்கிறேன். உன்னை தனித்து கொல்கிறேன். வா என்னுடன் போருக்கு.

கர்ணன் : சில திறம் குறைந்த வீரர்களை வெற்றி கொண்ட செருக்கில் சவால் விடாதே. இன்று நான் உன்னுடைய ஆணவத்தை அழிக்காமல் விட மாட்டேன்.

நகுலன் : வாயினால் பேசியது போதும். இனி அஸ்திரங்கள் பேசட்டும், என கர்ணன் மீது என்பது அம்புகள் தொடுத்தான்.

பதிலாய் கர்ணன் எழுபது அம்புகளில் அதை முறியடித்தான். நகுலனின் வில்லை முறித்தான். அவன் சாரதியை அழித்தான். மேலும் மூன்று அம்புகளால் அவன் தேர்க் குதிரைகளை கொன்றான்.

கோபம் கொண்ட நகுலன், ரதத்தில் இருந்து குதித்து, கூரிய ஈட்டியை தன் பலங்கொண்ட மட்டும் வேகமாய் கர்ணன் மீது எறிந்தான். அதை கர்ணன் தன் ஒரே அம்பினால் செயலிழக்கச் செய்தான்.

அதுவும் பயனில்லாது போக, நகுலன் யுத்தகளத்தில் வேறு இடத்திற்கு ஓடினான். கர்ணன் அவனைத் துரத்திச் சென்று வழி மறித்தான்.

கர்ணன் : சிறுவனே.. என்ன சொன்னாய் என்னை நோக்கி.. நினைவு இருக்கிறதா???

ஆணவம் கொள்வது, அறிவைக் கொன்று விடும். இனிமேலாவது, உனக்கு சமமானவர்களுடன் போரிடு. உன்னைவிட ஆற்றல் கொண்டவர்களிடம், அடங்கிப் போ...

போ.. போய் கண்ணன் மற்றும் அர்ஜுனனின் மறைவில் இளைப்பாறு.. எனக் கூறி அவனைக் கொல்லும் வாய்ப்பு இருந்தும், அன்னைக்குத் தந்த வாக்குக்காக அவனை விட்டுச் செல்கிறான்.

அவமானத்தில் தலை குனிய, அவன் தருமரைத் தேடிச் சென்றான். அங்கே தருமருக்கும், துரியோதனனுக்கும் யுத்தம் கடுமையாக நடந்து கொண்டு இருந்தது. யுதிர்ஷ்டிரர் கை மேலோங்கி, துரியோதனன் தன் ஆயுதங்கள் அனைத்தையும் இழந்தான். உடனே அவனைக் காக்க, கிருபர், கர்ணன், அசுவத்தாமா அனைவரும் வந்தனர். அவர்களின் நடுவே கொஞ்சம் களைப்பாறி பின்னர் வேறொரு ரதத்தில் ஏறி, துரியோதனன் மீண்டும் யுதிர்ஷ்டிரருக்கு சவால் விட, கோபம் கொண்ட அவர், மீண்டும் ஒரு கடும் யுத்தத்திற்கு பின்னர், ஒரு ஈட்டியை எடுத்து, துரியோதனனை நோக்கி எறிய முற்பட்டார்.

அது அவனை துளைத்துக் கொண்டு, அவன் உயிரைப் போக்கி இருக்கும். பீமனின் சபதம் நினைவு வர, தருமர், அவனை உயிருடன் விட்டார். அவனும் தப்பி வேறிடம் சென்றான்.

அவரை கர்ணன் எதிர்த்தான். தருமர் கர்ணன் மீது அம்பு மழை பொழிய, கர்ணனின் பத்து அம்புகள், அவரது உடமைகளை களைய, கோபம் கொண்ட அவர் தனது சக்தி ஆயுதத்தை கர்ணன் மேல் பிரயோகிக்க, கர்ணன் மூர்ச்சை அடைந்து ரதத்தில் வீழ்ந்தான்.

கர்ணன் இறந்தே போனான் என அனைவரும் கருத, அவனது சாரதி அவனை யுத்த களத்தில் இருந்து விலக்கிச் செல்ல விளைய, மூர்ச்சை தெளிந்து ஏழுந்தான் கர்ணன். எழுந்தவன், தருமரை முறியடிப்பது அப்போதே என முடிவு கட்டி களத்தில் இறங்கினான்.

தருமரின் ரதத்தை காவலாய் இருந்து காத்த அனைத்து வீரர்களையும் துவம்சம் செய்தான். அவரது வில்லை ஓடித்தான். தருமர் வேறு வில் கொண்டு கர்ணன் மீது ஒரு அம்பை எய்தார். அது இலக்கை நெருங்குகையில், கர்ணன் வேறொரு அம்பால் அதை முறியடித்தான்.

கோபமுற்ற தருமர், ஒரு தெய்வீக அஸ்திரத்தை கர்ணன் மீது ஏவினார். அதுவும் தவறாது நான்காய் பிரிந்து, கர்ணனின், இரு தோள்களையும், ஒன்று அவன் மார்பையும், ஒன்று அவன் தலையையும் தாக்கியது.

தாக்கிய அனைத்து இடங்களிலும் குருதி வழிய, இன்னும் மூர்க்கமானான். அவனது ஒரு அஸ்திரம் தருமரின் தேரை சுக்கல் சுக்கலாக்கியது. தருமர் வேறு தேர் தேடி அந்த இடம் விட்டு மறைய, கர்ணன் அவரைத் தொடர்ந்து சென்று வழி மறித்தான்.

தருமரைக் கொல்லும் வாய்ப்பு இருந்தும், தன் தாய்க்கு கொடுத்த வாக்குக்காக தருமரை, நீங்கள் உங்கள் குருவிடம் கற்றவை அனைத்தும் மறந்து போனீர் போலே, சென்று மீண்டும் அதை எல்லாம் நினைவு படுத்திக் கொண்டு வாருங்கள். சண்டை இடலாம். எனக் கூறி அவரை விட்டான்.

இதனால் பெரும் அவமானம் அடைந்தார் தருமர்.

இந்த அளவில் அன்றைய யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது.

என்னதான் கர்ணனின் திறமை வெளிப்பட்டாலும், பாண்டவர்களுள் இருவரைக் கொல்லக் கிடைத்த வாய்ப்பை கர்ணன் நழுவ விட்டது துரியோதனனுக்கு வருத்தத்தைக் கொடுத்தது.

மனதில் வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாது, அவன் கர்ணனிடம் சென்றான்.

துரியோதனன் : கர்ணா, என் ஆருயிர் நண்பா.. நானும், எனைச் சார்ந்தோரும் உன்னை நம்பியே இருக்கிறோம். எங்களை நீ காப்பாயாக..

கர்ணன் : நண்பா, அதை நானும் அறிவேன். உன்னிடம் நான் இன்று சில விஷயங்களை மனம் விட்டுப் பகிர்ந்து கொள்கிறேன்.

அச்சம் கொள்ளாதே. அது உன் தைரியத்தைக் கொன்று விடும்.

அர்ஜுனனுக்கும், எனக்கும் உள்ள நிறை, குறைகளை உனக்கு நான் சொல்கிறேன் கேள். எனக்கு வேண்டிய உதவி நீ செய்தால் நிச்சயம் வெற்றிக் கனி நமக்குத்தான்.

துரியோதனன் : உன் வாக்கு பலிக்கட்டும். சொல் நண்பா...

கர்ணன் : என் தெய்வீக அஸ்திரங்கள் அர்ஜுனனிடம் இருப்பதற்கு சமமானவை தான். எதிரிகளை அழிப்பதில் அவனை விட நான் மிஞ்சினவன் தான். மற்றும், உடல் வலுவிலும், மன வலுவிலும், எண்ணத்தின் தீர்கத்திலும் நான் அவனை விட வலுவானவன் தான்.

இந்திரனுக்காய், விஸ்வகர்மாவால் தயாரிக்கப்பட்ட என் வில் “விஜயா” காண்டீபத்தை விட சக்தி வாய்ந்ததுதான். இந்திரன் என் குருவான பரசுராமருக்கு அதை அளிக்க, என் கற்கும் திறமையில் மகிழ்ந்த என் குருநாதர் அதை எனக்கு அளித்தார்.

என் அம்பு மழையை சமாளிக்க அர்ஜுனனால் இயலாது. என் அம்பின் வீச்சுக்கு முன்னே அவனால் நிற்க இயலாது...

துரியோதனன் : அதுதான் தெரிந்த விஷயம் ஆயிற்றே நண்பா... உனக்கு அவன் ஈடாக முடியுமா???

கர்ணன் : ஆனால்... கவனி நண்பா...

துரியோதனன் : ஆனால் என்ன கர்ணா???

கர்ணன் : அர்ஜுனன் என்னை விட எந்த விதத்தில் சிறந்தவன் என்று சொல்கிறேன் கேள்...

அர்ஜுனனின் சாரதியாய் இருப்பவர், சகல உலகங்களை தனக்குள் அடக்கிய, தாய் தேவகியின் தெய்வீகப் புதல்வன் கண்ணன். மூவுலகுக்கும் கடவுள் அவன்.

மேலும் அந்த ரதம், அக்னி பகவானால், கான்டவ வானத்தைக் அழிக்க அவருக்கு வழங்கப்பட்ட தெய்வீக ரதம். எந்த சக்தி வாய்ந்த அஸ்திரத்தாலும் அழிக்க முடியாத வலுப் பெற்ற ரதம் அது. அதன் குதிரைகளும் அப்படியே. மனோ வேகத்துக்கு ஈடான வேகம் கொண்டவை அந்தக் குதிரைகள்.

பார்த்தனிடம் இரு அம்பறாப் துணிகள் உள்ளன. என்றுமே தீர்ந்து போகாத அம்புகளை உடையவை. எடுக்கக் குறையாது அம்புகள் அதிலே நிறைந்து கொண்டே இருக்கும். என்னிடம் அது போல இல்லை.

அவன் காண்டீபத்தின் நானும் தெய்வீகத் தன்மை உடையது. அழிக்க இயலாதது. துண்டிக்க இயலாதது.

அர்ஜுனனின், ரதத்தில் கட்டப்பட்டிருக்கும் கொடியில் உள்ள குரங்கு சின்னம். நீ இதை நிச்சயம் அறிந்திருப்பாய். சாட்சாத் அனுமார் அந்தக் கொடியில் வீற்றிருக்கிறார். யுத்த களத்தில் அர்ஜுனன் ரதம் வரும் வழியெல்லாம் அதன் கர்ஜனை ஒலித்து, நம்மவரை நடுங்க வைக்கும்.

துரியோதனன் : அப்போது நம் நிலை....

கர்ணன் : கவலை வேண்டாம் நண்பா... நான் இருக்கிறேன். ஆனாலும் எனக்கு நீ ஒரு உதவி செய்தாயானால் நிச்சயம் நான் அர்ஜுனனை வெல்வேன்.

துரியோதனன் : என்ன செய்ய வேண்டும் என் உயிருக்கும் மேலானவனே???

கர்ணன் : எனக்கு மட்டும் கண்ணனைப் போலே ஒரு சாரதி இருந்தால் என்னால் நிச்சயம் வெல்ல முடியும்.

துரியோதனன் : அவர் அளவுக்கு சாரதியா???

கர்ணன் : ஆம் நண்பா. நமது பிரிவில் இருக்கும் சல்லியன். மிகச் சிறந்த பயிற்சி கொண்டவர். தேரோட்டுவதில் கண்ணனுக்கு நிகரானவர் அவர். அவர் மட்டும் எனக்கு சாரதியானால், வெற்றி நமக்கு நிச்சயம் தான்.

கூடவே எனக்கு ஆயுதங்கள் நிரம்பிய வண்டிகளும் என்னுடன் வேண்டும்.

துரியோதனன் : நிச்சயம் நண்பா... நான் இப்போதே சென்று சல்லியனிடம் பேசுகிறேன். நீ கேட்ட அனைத்தும் உனக்கு நாளை தயாராய் இருக்கும். இப்போது நீ ஓய்வெடு நண்பா. நான் உன்னை காலையில் சந்திக்கிறேன்.

கர்ணன் : ஆகட்டும் நண்பா... சென்று வா...

உறக்கம் எப்படி வரும்??? கர்ணனுக்கு தன் முடிவு தெரிகிறது. ஆனாலும், நண்பனுக்காய்... தன் அனைத்தையும் இழக்கத் துணிந்தான்.

மீதம் அடுத்த பகுதியில்...

சான்வி
14-12-2011, 07:43 AM
பகுதி முப்பத்தி ஏழு : தினவாரியான யுத்தத்தின் தொடர்ச்சி:


கர்ணன் தனக்கு தேரோட்டியாக சல்லியன் இருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என சொல்ல, துரியோதனன் அவரை கர்ணனின் தேரோட்டியாக இருக்குமாறு கேட்க அவரது இருப்பிடம் செல்கிறான். இனி அங்கே நடப்பவை.

துரியோதனன் : ஆட்சியாலர்களுக்கெல்லாம் முதல்வரே, மத்ர தேசத்து மன்னரே.. வணக்கம். நான் தங்களிடம் ஒரு உதவியை நாடி வந்துள்ளேன்.

சல்லியன் : சொல் துரியோதனா. என்ன வேண்டும்??? நானும் என் சேனையும் அதற்காய் காத்திருக்கிறோம்.

துரியோதனன் : அர்ஜுனனை போரில் வெல்ல, நீங்கள் கர்ணனுக்கு தேரோட்டியாக இருந்து, கர்ணனை வழி நடத்த வேண்டுகிறேன் மன்னா.

சல்லியன் : (கோபம் மிக) என்ன??? நான் கர்ணனுக்கு தேரோட்டியாவதா??? நீ என்னை அவமதிக்கிறாய் துரியோதனா...

துரியோதனன் : கோபம் வேண்டாம் அரசே. சற்றே பொறுமையாய் கேளுங்கள்.

நீங்கள் போரிடுவதில், கண்ணனுக்கு நிகரானவர். கர்ணனுக்கு சாரதியாய் இருந்து அவன் அர்ஜுனனை வெல்ல துணை புரிய வேண்டும்.

நீர் அறியாதது இல்லை. பாண்டவர்களால் என் சேனை பெருத்த அழிவுக்கு உட்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் அது முழுதாய் அழிந்து விடும்.

கர்ணன், அர்ஜுனனை அழிக்க நினைக்கிறான். ஆனால், அதற்கு பரமாத்மாவுக்கு சமமாய் ரதம் ஓட்டவல்ல தங்களின் துணை இருந்தால் நிச்சயம் கர்ணன் வெல்வான். அர்ஜுனனை தோற்கடித்தால், பின்னர் பாண்டவர்களை வெல்வது எளிது.

அரசர்க்கு அரசர், நீங்கள் மட்டும் சம்மதித்தால், உங்கள் இருவரையும் யாராலும் அழிக்க முடியாது. அழிப்பது என்ன நெருங்கக் கூட முடியாது.

தயை கூர்ந்து நீங்கள் சம்மதியுங்கள்.

சல்லியன் : துரியோதனா, நான் ஒரு அரசன். ஆனால், கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன். என் நிலை இறங்கி நான் அவனுக்கு தேர் ஒட்டுவதா?? நடவாது.

அத்தோடு நினைவில் வை, பரந்த என் தோள்களுக்கு பல்லாயிரம் வீரர்களை அழிக்கும் வலு உண்டு. காற்றின் வேகத்தில் சுழன்றோடும் என் ரத்தத்துக்கும், அதிலே கட்டப்பட்ட குதிரைகளுக்கும், ஆயிரம் சேனைகளை அழிக்கும் வலு உண்டு. என் வில்லுக்கும் அந்த வலு உண்டு. என்னிடம் உள்ள தெய்வீக அச்திரங்களுக்கு மலைகளைக் கூட தூளாக்கும் வலு உண்டு.

ஷத்ரியர்கள் மேலானவர்கள். நான் ஒரு ஷத்ரியன். நான் பிறப்பில் இழிந்தவனான கர்ணனுக்கு ஏன் தேர் ஓட்ட வேண்டும்??? நான் ஒரு நாட்டுக்கு அரசன். பெருமைக்கும் புகழுக்கும் சொந்தக்காரன். இந்த அவமானம் எனக்கு ஏன் வர வேண்டும்.

நான் என் நாட்டுக்குத் திரும்ப என்னை அனுமதிப்பாயாக துரியோதனா.

(இவ்வாறு சொல்லி விட்டு, சல்லியன் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தார். அவரை தடுத்து நிறுத்திய துரியோதனன் மிகவும் பிரியமாக கீழ்க்கண்டவாறு பேசினான்)

துரியோதனன் : உண்மைதான் அரசரே. நீங்கள் கர்ணனை விட மேலானவர்தான். நான் தங்களை அவமதிக்க விரும்பவில்லை/முயலவுமில்லை. என் மனதில் சில காரணங்கள் உண்டு. கர்ணன் அஸ்திரங்கள் உபயோகத்தில் அர்ஜுனனை விட மேலானவன். தாங்கள் ரதம் செலுத்துவதிலும், குதிரைகளை கட்டுக்குள் வைப்பதிலும் பகவான் கிருஷ்ணரை விட மேலானவர். வாசுதேவன் அனைவருக்கும் முதல்வன். அவனை யுத்தத்தில் வெல்ல யாராலும் இயலாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனாலும் அவன் பார்த்தனுக்கு சாரதியாய் இருக்கிறான். நீங்கள் கண்ணனைப் போல இருமடங்கு திறமை வாய்ந்தவர். தாங்கள் கர்ணனுக்கு ரதம் ஓட்டினால் உங்களுக்கு அது அவமானம் தராது. மாறாக பேரையும், புகழையும் தான் தரும்.

சல்லியன் : கண்ணனுடன் என்னை ஒப்பிட்டுப் பேசிய உன் பேச்சில் மனம் மகிழ்ந்தேன் நான். உனக்காய் என முடிவை நான் மாற்றிக் கொள்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நான் என்ன சொன்னாலும் கர்ணன் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். என்னை அவமதிப்பது போலே அவன் நடந்தால் நான் அவனுக்கு சாரதியாய் இருக்க மாட்டேன். இதற்கு சம்மதம் எனில், கர்ணனுக்கு தேர் ஓட்ட நான் சம்மதிக்கிறேன்.


துரியோதனனும், கர்ணனும், ஆவார் நிபந்தனைக்கு ஒத்துக்கொள்ள, சல்லியன் கர்ணனின் சாரதி ஆனான்.

யுதிர்ஷ்டிரருக்கு கொடுத்த வாக்கை இவர் காப்பாற்ற வேண்டுமே.. அதாவது, கர்ணன், அர்ஜுனனுடன் போர் புரிய நேர்ந்தால், அர்ஜுனனை பாராட்டியே பேச வேண்டும். இது கர்ணனின் ஆவலைக் குன்றச் செய்யும் என்பதால்.

தாய் மாமன் ஆயிற்றே.. விடுவாரா... செவ்வனே செய்தார் அந்தப் பணியை. ஆரம்பம் முதலே அர்ஜுனனையே பாராட்டிக் கொண்டு இருந்தார். அதில் கர்ணனின் மனம் சிறிது சலனப்பட்டாலும், பின்னர், தன்னைத் தானே தேற்றிக் கொண்டு அவரிடம் வாதிட்டான்.

இருவரின் வாதம் கண்ட துரியோதனன் இடையே புகுந்து, இருவரும் தங்களுக்குள் போரிடுவதை நிறுத்தி, எதிரிகளுடன் போரிடுங்கள். அதுவே நான் வேண்டுவது என்றான்.

இருவரின் கவனமும், யுத்தகளத்துக்கு வந்தது.

இனி யுத்தகளம்...


பதினேழாம் நாள் யுத்தம் :


துரியோதனனின் பக்கத்தில், கிருபரும், கிருத்வர்மன் வலது புறம் இருக்க, அவர்களைத் தாண்டி, சகுனியும், உலுகனும் ஒரு இருக்க, சுசர்மன் இடது புறம் காக்க, துரியோதனன் அவர்களுக்கு நடுவே இருக்க, அவனுக்கு பின்னே, ஆயிரம் வீரர்களுடன் யானை மீது துச்சாதனன் இருக்கிறான். அனைவருக்கும் பின்னே வியூகத்தைக் காக்க அஸ்வத்தாமா இருக்கிறான்.

இவர்கள் அனைவருக்கும் முன்னிலையில் கர்ணன் நிற்கிறான். அவனுக்கு பின்னே அவனது வீர மக்கள், விருஷசேனா, பானசேனா மற்றும் சுசேனா ஆகியோர் நிற்கிறார்கள். இவர்கள் மூவருமே பாலகர்கள். ஆனாலும் வீரர்கள். போர்க்கலையில் விர்தகர்கள். போர் வெறியன் கர்ணன். அவன் மக்கள் இப்படி இல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியப் படவேண்டும்.

பாண்டவர்கள் பக்கத்தில்....

அர்ஜுனன், திஷ்டத்துய்யுமன், பீமன், சாத்யகி, பாஞ்சாலியின் புத்திரர்கள் ஐவர், சிகண்டி, நகுல, சகதேவர்கள், என அனைவரும் அணிவகுத்து நிற்க, அவர்களின் பின்னே, தருமர் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்தார்.

மாவீரர்கள் அனைவரும் அணிவகுத்து நிற்க, சங்கநாதங்களும், போர் முரசுகளும் இரு புறமும் முழங்க, வேங்கைகளும், சிறுத்தைகளும், சீறிப் புறப்பட ஆயத்தமாய் இருந்தன. ஆனால், முதல் நாள் போரை ஒப்பிடுகையில், போர் வீரர்களில் எண்ணிக்கை, மூன்றில் ஒரு பாகமாய் குறைந்திருந்தது.

யுத்தம் ஆரம்பமானது. ரத, கஜ, துரக, பதாதிகள் அனைவரும், வெற்றி அல்லது வீர மரணம் எனும் எண்ணம் கொண்டு, தங்கள் லட்சியமாய் முடிந்த வரை பகைவர்கள் எண்ணிக்கையை குறைப்பது என்பதைக் கொண்டு ஒருமித்தக் கருத்துடன் நடந்த அன்றைய போர்... யுத்த சரித்திரத்தில் ஒரு மைல்க் கல்தான்.

கர்ணனின் ஆரம்பம் அசத்தலாகவும், பாண்டவர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்தது.

பாண்டவர்களின் தரப்பில், சிறந்த வீரர்களாகக் கருதப்பட்ட, பானதேவன், சித்திரசேனன், சேனவிந்து, தபன் மற்றும் சூரசேனனை எளிதில் வீழ்த்தினான்.

அவனது ரதத்தை இருபுறமும் இருந்து காத்தனர் அவனது இரு மக்கள். சத்தியசேனன் மற்றும் சுசேனன். விருசசேணன் கர்ணன் தேரின் பின்னால் இருந்து தன் தந்தையைக் காத்தான்.

கர்ணன், மாவீரர்கள் ஐவரைக் கொன்றதை கண்டவுடன், அவனுடன் போரிட, பாண்டவர் தரப்பில் இருந்து, திஷ்டத்துய்மன், சாத்யகி, பாஞ்சாலியின் புத்திரர்கள், பீமன் மற்றும் சிகண்டி என இத்துணை பேரும் சேர்ந்து ஒருவனான கர்ணனை எதிர்த்தனர்.

அனைவரையும் ஒரு புன்னகையுடனே எதிர்க்கொண்டான் கர்ணன். போர்.. போர்... என திணவெடுத்த அவன் தோள்கள் பூரிப்பில் மேலும் விரிய, சாந்தம் தவழும் முகம் சந்திரன் எனில், வீரம் ததும்பும் முகம் சூரியனின் காந்தியுடன், கொளுத்தும் வெய்யிலில், பூமியில் தோன்றிய சூரியனாய், சூரர்களை அழிக்க வந்த சொர்ண சொரூபமாய், தான் இருக்கும் இடத்தையே தன் வீரத்தால் ப்ராசிக்க வைத்தான் கர்ணன்.

அவன் சென்ற வழி எல்லாம், எதிரிக்கு அழிவு. அவர்கள் படையில் நிலை குலைவு. அவன் வீரத்தைக் காணக் காண, ஒவ்வொரு கௌரவர் தரப்பு வீரனுக்கும், உள்ளுக்குள் உற்சாகம் குமிழியிட்டுக் கிளம்பியது.

தீரச் செருக்கு, திமிறி வெளிப்பட்டது அனைவருக்கும். வீறு கொண்டு அவர்கள் வேங்கைகளாய் வெறும் கையுடன், பாண்டவர் தரப்பு வீரர்களைப் பந்தாடினர்.

மின்னலும், இடியுமாய், விஜயத்தின் (கர்ணனின் வில்) வீச்சின் சத்தம் அந்த யுத்த களத்தில் எங்கு நோக்கினும் கேட்டது. சல்லியனின் திறமையில், கர்ணனின் ரதம், யுத்தகளம் எங்கும் சுற்றி, சுழன்று அடிக்கும் சூறாவளியாய், எட்டுத் திக்கும் விஜயம் செய்து, ஜெயம் தந்தது துரியோதனனுக்கு.

ஆரம்பத்தில் கர்ணனை ஊக்கம் கெடுத்த சல்லியனும், கர்ணனின் திறம் கண்டு உண்மையான வீரனை நான் இங்கே கண்டேன். அவன் மீது பெரும் மதிப்பு கொண்டேன் என உள்ளத்திலே கர்ணனை மெச்சி, உச்சி முகர்ந்தார்.

அவன் கண்ணசைவில் அவன் எண்ணம் புரிந்து, களத்தை அவனுக்கு சாதகமாக்கினார்.

காணக் காணத் தெவிட்டவில்லை சல்லியனுக்கு கர்ணனின் வீரம். களைப்பு என்பதே அறியாதவனா இவன் என மலைப்பு வந்தது அவருக்கு...

இதுவரை இருந்த உன்னை அறிவேன் நான்
ஓயாது இருந்த உன் கொடையின் தன்மை அறிவேன் நான்

உன்னுள்ளே உறங்கிய வீரம் அதை இன்றே அறிந்தேன்
ஓயாது உன்னை தூற்றிய என் சித்தம் தெளிந்தேன்

உண்மையான வீரம் எது என்பதை அறிந்தேன்
ஓயாத உன் தீரம் அதை இன்று அறிந்தேன்

உனைக் கீழானவன் என்ற என் எண்ணம் அதைக் களைந்தேன்
சுழன்று சீரும் உன்னிலே புயலின் வேகம் கண்டேன்

ஒருவனாய், நீ எதிரிகளை மட்டும் இன்றி
என்னை நோக்கி வரும் அம்புகளையும்
தடுத்ததாய்.

உன்னை மதியாத என்னை நீ மதித்தாய்
என்னை பிறர் மிதியாது காத்தாய்

ஆண்மகனடா நீ...
சீரும் வேங்கையாய் உன் தீரம்
பாயும் சிங்கமாய் உன் வீரம்

ஆயிரம் யானைகள் சேர்ந்தது உன் யுத்த பலம்
அளவு சொல்ல முடியாதது உன் ஆன்ம பலம்

எனக்கு சமமில்லை நீ என்றேன். அந்த ஆண்டவனும்
உனக்கு இணையில்லை என்கிறேன் நான்

உத்தமனாய் உள்ளாயடா நீ போரிலும்...
புறமுது காட்டுவோரை விடுத்து
ஆயுதம் அற்றவரை விடுத்து,

ஆயிரம் பேர் சேர்ந்து தாக்கினாலும் தடுத்து
சாய்க்க முடியாத மலையாய் நின்றாய்

ஆரம்பத்தில் இருந்த உற்சாகம்
சிறுது கூட குன்றாமல் குறையாமல்,
இருக்க இருக்க உன் காந்தி கூடுவது
என்ன மாயமோ???

விழுப்புண்கள் அவை கூட உன் அழகுக்கு
அழகுதான் சேர்க்கிறது. வழியும் உன் குருதி
உனக்கு வாழ்த்துதான் சொல்கிறது.

எப்படி இருந்த கௌரவ சேனை???
பிதாமகரின் பிரசன்னத்தில் கூட
விசனமாய் இருந்தவர்கள், வீரன்
உன் பிரகாசத்தில், வீறு கொண்டனர்

நீ என் மகனாய் இருந்திருந்தால்...
என் புகழ் இறவாது இருந்திருக்கும்

இப்போதும் என்ன??? உன் பெயர்
உள்ளவரை என் பெயரும் இருக்கும்

என் வாழ்நாளின் பிறந்த பயனை
நான் அடைந்தேன் கர்ணா உன்னாலே...

(கர்ணன் என் காதலன்.... இந்தப் பகுதி சற்று மிகைப் படுத்தப்பட்டதாக கூட தோணலாம். கதையின் நாயகனுக்காய்... பொறுத்தருளுங்கள் :))

சான்வி
14-12-2011, 07:52 AM
கர்ணன் என் காதலன் : 38

பகுதி முப்பத்தி எட்டு : தினவாரியான யுத்தத்தின் தொடர்ச்சி:


கர்ணன் யுத்த களத்தில் காலனைப் போலே போர் புரிந்தான். பாண்டவர்களின் சேனையில் பெரும் அழிவுக்கு காரணமாய் இருந்தான். எனவே, அவனை எதிர்க்க, பாண்டவர் தரப்பில் இருந்து, திஷ்டத்துய்மன், சாத்யகி, பாஞ்சாலியின் புத்திரர்கள், பீமன் மற்றும் சிகண்டி என அனைவரும் சேர்ந்து ஒருவனான கர்ணனை எதிர்த்தனர்

அவர்களில் முதலாய் கர்ணனை நோக்கி வந்த பீமனின் வில்லை கர்ணனின் மகன் சுசேனன் முறிக்க, விரைந்து வேறு வில்லை எடுத்த பீமன், பத்து அம்புகளால் சுசேனனின் கதையை முடித்தான். கர்ணன் மீதும் அம்பு மழை பொழிந்தான். கர்ணனின் இன்னொரு மகனான பானுசேனனையும், கூரிய கத்தி போன்ற அம்பினால் கொன்றான். தன் மக்கள் இருவரையும் தன் கண் முன்னே கொன்ற பீமனின் மீது கர்ணன் கடும் கோபம் கொண்டான். தொடர்ந்த பீமன், கர்ணனுக்கு துணையாய் வந்த சேனையை அழிக்கத் தொடங்கினான்.

பீமன் கடுமையாய் தாக்கப்பட்டான் கர்ணனால். இருவருக்கும் இடையே கடும் யுத்தம் நடந்தது. கர்ணன் பீமனால் தாக்குண்டு மயங்கி தேரில் விழுந்தான். அன்றைக்கு பீமன், போர்க்களத்தில் யமனைப் போலக் காட்சி தந்தான்.

சல்லியன், கர்ணனை போர்க்களத்தில் இருந்து வெளியேற்றிச் சென்றான்.

களம், பீமனின் கைக்குள் வந்தது. எங்கு நோக்கினும், ரத்த வெள்ளம். அன்று அவன் சபதமான துச்சாதணனை கொல்வேன் என்ற சபதம் நிறைவேறியது.

துச்சாதணனின் ரத்தம் பருகிய பீமன், காணவே பயங்கரமாய், இருந்தானாம். ஒரு பக்கம் அவனுக்கு பயந்த சேனைகள் ஓட, ஒரு பக்கம் அவன் கொன்று குவித்த சடலங்கள் இருக்க, அவன் செல்லும் வழியெல்லாம், புயலுக்குள் சிக்கிய பூவனமாய் சின்னாபின்னமாகின.

ஓரளவு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு கர்ணன் விரைந்து வந்தான் களத்துக்கு. வெற்றியின் மதர்ப்பில் இருந்தான் பீமன். தோல்வியின் தாக்கத்தில் இருந்தவன் கர்ணன். வீறு கொண்ட வேங்கையாய் கர்ணன் பாய, செருக்கு கொண்ட சிறுத்தையாய் பீமன் இருக்க, விரைவில் பீமன் களைத்துப் போனான்.

ஆயுதங்கள், ரதம் என தன் உடமைகள் அனைத்தையும் இழந்து, அந்த இடத்தை விட்டு வேறிடம் செல்ல, அவனைத் தொடர்ந்த கர்ணன், யாராலும் வெல்ல இயலாதவன் எனும் செருக்கு இருப்பின், வெற்றி உனக்கு நிரந்தரம் அல்ல எனக் கூறினான்.

இதன் இடையே, தருமர், கர்ணனிடம் தன் தோல்வியை எண்ணி எண்ணி உள்ளத்தில் மறுகிக் கொண்டு இருந்தார். அவரது தோல்வியை கேள்வியுற்ற அர்ஜுனனும், கிருஷ்ணரும் அவரைக் காண பாசறைக்கு செல்ல, தருமாரோ, கர்ணன் வீழ்ந்தானா??? என வினவுகிறார்.

இல்லை. கர்ணனை நான் இன்னும் களத்தில் சந்திக்கவே இல்லை. தங்கள் நிலையை அறியவேண்டி இங்கு வந்தேன் எனக் கூறினான் அர்ஜுனன்.

அதிலே அதிருப்தியுற்ற தருமர், கோபத்துடன் அர்ஜுனனை சாடுகிறார். உன் போன்ற கோழைக்கு காண்டீபம் எதற்கு?? இதோ நிற்கிறாரே ஆபத்பாந்தவன், அவரிடம் கொடுத்துவிடு. அவர் போரில் கர்ணனை வெல்வார் என்கிறார்.

அர்ஜுனனும் கோபம் கொண்டு, தருமரை தகாத வார்த்தைகள் சொல்கிறான். இத்துணைக்கும் முழு முதல் காரணம் நீர்தான். உம்மால்தான் இந்த நிலை வந்தது. சூதாட ஒத்துக் கொண்டதும் நீங்கள். ஆடி தோற்றதும் நீங்கள்.

என்னை காண்டீபத்தைக் கைவிடச் சொல்பவன் எவனாயினும் அவனை கொல்வதாய் நான் ரகசிய பிரதிக்ஞ்னை செய்துள்ளேன். இப்போதே உன் கதையை முடிப்பேன் என அர்ஜுனன் கூவுகிறான்.

இதை கண்ணுற்ற கண்ணன், இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கிறார்.

தான் செய்த தவறுக்கு தருமர் வருந்த, அர்ஜுனனோ, தான் இதுவரை எதிர்த்தும் பேசாத தருமரை, தன் மனம் போனபடி பேசி அவரை உள்ளத்தால் இறந்து போகச் செய்கிறான் கண்ணனின் ஆலோசனையின் பேரில்.

பின்னர், கர்ணனின் உயிரை எடுத்துவிட்டுதான் இனி மறுவேலை என, களம் புகுந்தான் அர்ஜுனன்.

அங்கே சென்று பீமனுக்கு தன் அண்ணனின் நிலையை அறிவித்து, கர்ணனை நாடிச் சென்றான்.


கர்ணனின் தீரம் :


அங்கே கர்ணனோ ஒரு திறம் வாய்ந்த அதிரதனாய் கண் கூசும்படி ஜொலித்துக் கொண்டு இருந்தான்.

ஒருவர் பின் ஒருவராக தன்னை எதிர்க்க வந்த பாண்டவ அதிரதர்களை கொன்று குவித்துக் கொண்டு இருந்தான். செல்லும் வழியெல்லாம் தன் முத்திரையைப் பதித்தான். ஆயிரக் கணக்கான வீரர்கள் இருந்த இடம் தெரியாது போயினர்.

பாண்டவப் படையினர் கர்ணனின் தீரம் எனும் கடலுக்கும் மூழ்கிக் கொண்டு இருந்தனர். அவர்களைக் காக்கும் படகாய் அர்ஜுனன் அங்கே வந்து சேர்ந்தான்.

இதன் இடையே, துச்சாதணனை பீமன் கொன்ற முறைக்காக, கர்ணனின் சகோதரன் சித்ரசேனன் பீமனை கடிந்து பேசிக் கொண்டு இருக்க, யுத்தமான்யு சித்திரசேனனுக்கு போரிட சவால் விடுத்து, போரிலே அவன் தலையைக் கொய்து கொன்றான்.

தன் கண் முன்னே உயிரிழந்த இருவரின் இறப்பிலும், துக்கமும், ஆவேசமும் கொண்ட கர்ணனை நோக்கித்தான் அர்ஜுனன் வந்து கொண்டு இருந்தான்.

சல்லியன், கர்ணனிடம், கர்ணா, இதோ அர்ஜுனனின் ரதம் உன்னை நோக்கி வருகிறது.

உன் பலமனைத்தும் ஒருங்கிணைத்து, தயாராய் இரு. போர்க்களத்தின், உன் பக்கத்து வெற்றி உன் தோள்களில் மட்டும் உள்ளது இப்போது. துணிந்து நில் என சொல்லிக் கொண்டு இருந்தார்.

இது இவ்வாறு இருக்க, துச்சாதனன் மற்றும் சித்திரசேனனின் மறைவில் கோபம் கொண்ட கர்ணனின் மகன், வ்ரிஷசேணன், நகுலனை நோக்கி அம்பென விரைந்தான். யாராலும் அவனைத் தடுக்க இயலவில்லை. (கர்ணனின் மகன் அல்லவா???)

சுற்றி இருந்தவர் அனைவரையும் தோற்கடித்து, நகுலனை அடைந்து நகுலின் ரதக் குதிரைகளை எல்லாம் கொன்றான். நகுலன், வேறொரு ரதத்தில் ஏறிக் கொள்ள, அதையும் உடைத்தான். கோபம் கொண்ட நகுலன், தன் வாளையும், கேடயத்தையும், எடுத்துக் கொண்டு கீழே குதித்தான். அவனோடு சரிக்குச் சரியாய் போரிட்டான் இளையவன்.

நகுலன் சோர்ந்து போகும் நேரம், கண்ணன், நகுலின் நிலையை அர்ஜுனனுக்கு கூறினான்.

உடனே அங்கே விரைந்தான் அர்ஜுனன். அர்ஜுனனைக் கண்டதும், நகுலன் அவனிடம், தயவு செய்து இவன் கதையை முடித்து விடு எனக் கூறி பீமனின் ரதத்தில் ஏறிக் கொண்டான்.

விரைந்த அவனைத் தொடர்ந்த வ்ரிஷசேணனை பின்னிருந்து அம்பெய்து கொன்றான் அர்ஜுனன்.

தன் மகன் பிரமாதமாய் சண்டை போடுகிறான் எனக் கேள்வியுற்ற கர்ணன் அதைக் காண ஆவலாய் வந்தான். அவன் கண் முன்னே அர்ஜுனன், வ்ரிஷசேணனை தலையைக் கொய்து கொன்றான்.

இதுதான் முறையா?? நீயெல்லாம் ஒரு ஷத்ரியனா?? இதுதானா உன் யுத்த லட்சணம்??? என கர்ணன் வினவுகிறான்.

தனி ஒருவனாய் சிக்கிக் கொண்ட என் மகனது வில்லை பின்னிருந்த அறுத்த வீரன் பேசும் மொழிகளா இவை என அர்ஜுனனும் திரும்ப வினவுகிறான்.

துரோணரின் செயலை பின்தொடர்ந்து தான் செய்த செயலுக்கு வெட்கினான் கர்ணன்.

மகனின் மரணமும், அது தந்த ரணமுமாய் அர்ஜுனனை போருக்கு அழைத்தான் கர்ணன்.

அப்போது கண்ணன் :

தெளிந்து நில் அர்ஜுனா, துணிந்து நில். மாவீரன் கர்ணன் உன்னை நோக்கி வருகிறான். அவனது வில்லின் ஒலி போர்க்களம் எங்கும் ஒலிக்கிறது கேள். அவனது அம்புகளுக்கு முன்னர் உன் ஒருவனால் மட்டுமே நிற்க இயலும்.

சிவபெருமானின் அன்பும், ஆசிகளும் உன்னுடன் இருக்க வெற்றி உனக்கே இருக்கட்டும் என, தைரியமும், ஆசிகளும் கூறினார்.

அர்ஜுனன் : மூவுலகுக்கும் கடவுளான நீங்க என்னுடனே இருக்கையில் வெற்றி எனக்கு நிச்சயம் தான். கர்ணனைக் கொல்லாது நான் யுத்த களத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. ரதத்தை கர்ணனின் இடம் நோக்கி செலுத்துங்கள்

ஒன்று நான் இருக்க வேண்டும், இல்லையெனில் கர்ணன் இருக்க வேண்டும். இருவரில் ஒருவர்தான் தான் இந்தப் போரின் முடிவில்.

ஆனால், இருப்பவர், இல்லாதவர் இருவரின் புகழும் இந்த பூவுலகம் இருக்கும் வரை இறவாது இருக்கும்.

கண்ணன் : உண்மைதான் அர்ஜுனா...

(அங்கே கர்ணனின் நிலையோ... சொல்லி அடங்காத சோகத்திலும் அது தந்த வேகத்திலும் இருந்தது..)

ரத்தச் சிவப்பில் இருந்தன விழிகள் தன் மகனை நினைத்து.

பேரிகைகள் முழங்க, கோஷங்கள் எழும்ப, சங்குகள் முழங்க, இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும் நிலையைக் காண, தாங்கள் போட்டுக் கொண்டிருந்த சண்டைகளைக் கூட விட்டு விட்டு வந்தனர்.

சொர்க்கத்தில் கூட (சொர்க்கம் இருக்கான்னு கேக்காதீங்க பா. கதை சொன்னா சரின்னு கேட்டுக்கணும்) அனைத்து தேவர்களும், அசுரர்களும், ரிஷிகளும், கந்தர்வர்களும், ராட்ஷசர்களும், நாகர்களும், அப்சரஸ்களும், வித்யாதரர்களும் குவிந்து இருந்தனர்.

புகழ் பெற்ற இரு வீரர்களும் தன் திறனை முழு வீச்சில் வெளிப்படுத்தப் போகும் வித்தைகளைக் காண விழி இமைக்காது காத்திருந்தனர்.

சூரியனோ, தன் மகனுக்கு ஆசி கூறுவது போலே பிரகாசமான தன் கதிர்களை ஒளிர்த்துக் கொண்டு இருந்தான். இந்திரனும், தன் மகனின் வெற்றிக்காய் ப்ராத்தித்துக் கொண்டு ஆசிகளை வழங்கினான்.

மூவுலகத்தின் கடவுள், அர்ஜுனனின் ரத்தத்தை நடத்த, மத்ர தேச அரசன் கர்ணனின் ரதத்தை நடத்த, இருவரும் சந்திக்கும் வேளை நெருங்கியது.

காத்திருந்த அனைவரும், அர்ஜுனன் அல்லது கர்ணன் இருவரில் ஒருவர் பக்கம் சேர்ந்து கொண்டு, கோஷமிட்டுக் கொண்டனர்.

கர்ணனின் பக்கம், துரியோதனன், கிருதவர்மன், கிருபர், சகுனி மற்றும் அஷ்வத்தாமா அனைவரும் இருந்தனர். அவர்கள் பின்னே ஆயிரக்கணக்கில் வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.

அர்ஜுனனின் பக்கம், தருமரைத் தவிர்த்து சகோதரர்கள் மூவரும், சிகண்டி, சாத்யகி என அனைவரும் இருக்க, அவர்கள் பின்னும் ஆயிரக்கணக்கில் வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.

இருப்பினும், அனைவரும் இவர்கள் இருவரின் மோதலைக் காணும் ஆவலில் இருந்தனர்.

தேவர்கள் பூமாரி பொழிந்தனர். அர்ஜுனன் மற்றும் கண்ணனின் புகழ் பாடி, இனிய தென்றலை வீசச் செய்தனர்.

(மீதம் அடுத்த பகுதில்...)

சான்வி
14-12-2011, 07:55 AM
பகுதி முப்பத்தி ஒன்பது : அஸ்திரங்கள் :

வில் வித்தையின் தலை சிறந்த வீரர்கள் இருவரும் மோதப்போகின்றனர். அஸ்திரங்களின் ஆளுமை. அதை அறிய நமக்கு வேண்டும் அதை பற்றின புலமை, அதற்காய் இங்கே பகிர்கிறேன் விவரங்களை. அஸ்திரங்கள் என்பவை மிகவும் வலிமை வாய்ந்தவை. அனைவருக்கும் அவை கிட்டிவிடாது. முறையான பயிற்சியும், குருவின் துணையும் இருந்தால் மட்டுமே அவை வீரனுக்கு கைவசமாகும்.

பல அஸ்திரங்கள் இருந்தாலும், நான் அறிந்த அஸ்திரங்களைப் பற்றிய விவரங்களை (என் தந்தை சொன்னவையும், இணையத்தின் வழி நான் அறிந்தவையும்) இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இது கதையை இன்னும் சுவாரஸ்யமாக்கும்.


பிரம்மாஸ்திரம் : இலக்கை மொத்தமாய் அழிக்கும் வலிமை கொண்டது. வேறு எத்தகைய அஸ்திரத்தையும் எதிர்க்கும் வலிமை கொண்டது. அஸ்திரத்துக்கு அதிபதி பிரம்ம தேவன்.

பிரம்மஸ்ரிஷா : இதுவும் பிரம்மாவின் அஸ்திரம். தேவர்களையும் எதிர்க்கு வலிமை கொண்டது. பிரம்மாஸ்திரத்தின் அளவு அழிவை தரவல்லது.

இந்திராஸ்திரம் : இந்திரனின் அம்சமானது. ஆயிரக்கணக்கான அஸ்திரங்களை வானிலிருந்து மழை பொழிவது போலே பொழிய வைக்க வல்லது.

வஜ்ராயுதம் : இதுவும் இந்திரனின் அஸ்திரம். மின்னலால் தாக்குண்டது போல இலக்கை அழிக்கும் வலிமை கொண்டது.

பாசுபதாஸ்திரம் : சிவனிடம் இருந்து பெறப்பட வேண்டிய அஸ்திரம். இலக்கு எந்த இயல்புடையதாக இருப்பினும், அதை அடியோடு அழிக்கும் வலுப்பெற்றது.

ஆக்னேயாஸ்ச்திரம் : அக்னியின் அஸ்திரம். இலக்கை எரித்து சாம்பலாக்கும் அஸ்திரம்

வருணாஸ்திரம் : வருணனின் அஸ்திரம். எல்லைஇல்லாமல் எரியும் நெருப்பையும் அடக்கவல்லது. பொதுவாக ஆக்னேயாஸ்ச்திரத்தை எதிர்க்க செலுத்தப்படும் அஸ்திரம்

வாய்வாஸ்திரம் : கடுமையான சூறாவளியை உண்டாக்கும் அஸ்திரம். இலக்கை பூமியை விட்டுத் தூக்கி சுழற்றி அடிக்கும் அஸ்திரம். வாயுவின் அஸ்திரம்

சூரியாஸ்திரம் : இருளை மறைத்து ஒளியைக் கொடுக்கும் அஸ்திரம். சூரியனின் அஸ்திரம்.

நாகாஸ்திரம் : நாகமாய் மாறி இலக்கை அழிக்கும் வலுகொண்டது. கிடைத்தற்கு அரியது. பொதுவாய் இதற்கு ஈடான/எதிரான அஸ்திரம் கிடையாது.

நாகபாசானம் : விஷம் கொண்ட நாகங்கள், இலக்கை கட்டுண்டு கிடக்கச் செய்யும். இதில் கட்டுண்டவர் கடவுளே ஆனாலும் கண்விழிப்பது அரிது.

மோகினி அஸ்திரம் : விஷ்ணுவின் அஸ்திரம். எய்யப்படும் இலக்கை ஒரு மாயையில் சிக்க வைக்கும். ஒரு முழு சேனையையும் மதி இழக்கச் செய்யும் வலு கொண்டது

சம்மோஹனம் : எதிரியின் மொத்த சேனைக்கும் ஆபத்தை வரவழைக்கும் ஆற்றல் கொண்டது

பிரம்மோஹனம் : இதுவும் சம்மோஹன அஸ்திரத்தைப் போன்றது

நாராயனாஸ்திரம் : எண்ணற்ற அம்புகளையும், சக்கரங்களையும் இலக்கை நோக்கி மழை போல பொழியச் செய்யும். இதை யாரும் எதிர்த்து நின்றால், நிற்பவரின் வலிமையையும் இந்த அஸ்திரத்தில் சேரும். நிராயுதபாணியாய் நிற்பவரை அஸ்திரம் தாக்காது. ஒரு முறை மட்டுமே உபயோகிக்க இயலும். பின்னர் இது விஷ்ணுவை அடைந்து விடும்

வைஷ்ணவாஸ்திரம் : இதுவும் விஷ்ணுவின் அஸ்திரம். இலக்கை, அதன் இயல்பு எதுவாக இருப்பினும் அழிக்கும் வல்லமை கொண்டது.

பர்வதாஸ்திரம் : இலக்கின் மேல், வானத்தில் இருந்து மலை ஒன்றை விழச் செய்யும்.

(இன்னும் ஒரு அஸ்திரம் இருக்கிறது, ஆனால் பெயர் நினைவில் இல்லை. அந்த அஸ்திரம் எய்யப்படும் போது, எதிரிகள் அவர்களுக்குள்ளாகவே போரிடும்படி ஒரு மாயை உருவாகும். இந்த அஸ்திரத்தின் பெயர் விவரம் அறிந்தவர்கள் அதை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி)


இனி யுத்த பூமிக்கு...... அடுத்த பகுதி இறுதிப் பகுதி. சற்றே நீளம் அதிகம். எனவே இந்தப் பகுதி வெகு சுருக்கமாய்.

சான்வி
14-12-2011, 07:58 AM
கர்ணன் என் காதலன் : 40

பகுதி நாற்பது : இறுதிப் பகுதி

யுத்த பூமி


கர்ணன், மற்றும் அர்ஜுனன், இருவருக்கும் இடையே கடுமையான யுத்தம் துவங்கியது. இரு வீரர்களுமே தங்கள் மனதில் வெற்றி அல்லது வீரமரணம் எனும் எண்ணத்தை விதைத்திருந்தனர்.

துவக்கம் அர்ஜுனனிடம் இருந்து. ஆக்னேய அஸ்திரத்தை கொண்டு கர்ணனுக்கு துணை இருந்த அனைத்து வீரர்களையும் அக்னி கொண்டு துரத்தினான்.

அதற்கு பதிலாய் கர்ணன், வாருனாஸ்திரம் எய்தான். அது கரிய மேகங்களுடன் கூடிய மழையை வருவித்து அந்த இடத்தையே வெள்ளக்காடாக ஆக்கியது.

அர்ஜுனன் வாயுவாஸ்திரம் கொண்டு அந்த மழை மேகங்கள் அனைத்தும் தூர துரத்தினான். பின்னர், இந்திரனால் தனக்கு தரப்பட்ட சக்தி அஸ்திரத்தை கர்ணன் மேல் பிரயோகித்தான். அஸ்திரத்தின் வலிமையால் ஆயிரக்கணக்கான அம்புகள் காண்டீபத்திலிருந்து பாய்ந்து கர்ணனின் உடலை பதம் பார்த்தன.

அதற்கு பதிலாய் பார்கவா அஸ்திரத்தை கர்ணன் பிரயோகிக்க, அது பாண்டவ சேனையின் ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்றது.

அதில் கோபம் கொண்ட அர்ஜுனன், கண்ணாலும், பீமனாலும் ஊக்கம் பெற்று, பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தான்.

அது கர்ணனின் தரப்பின் ஆயிரம் வீரர்களைக் கொன்றது

கர்ணன் அதற்கு பதிலாக, ஐந்து சர்ப்ப அம்புகளை எடுத்து அதை கண்ணனின் மீது ஏவினான். அது கண்ணனின் உடலில் ஊடுருவி, பூமிக்குள் பாய்ந்து மீண்டும் கர்ணனிடமே செல்லத்துவங்க, அர்ஜுனன் அவற்றை தன் அம்புகளின் மூலம் துண்டு துண்டாக்கினான். அந்த அம்பினால் கண்ணனுக்கு பாதிப்பு எதுவுமே இல்லாமல், எப்போதும் போல சிரித்துக் கொண்டே இருந்தார்.

ஆனாலும், கண்ணனை, கர்ணன் தாக்கியதில் கோபம் கொண்ட அர்ஜுனன், கர்ணன் சேனையில் கர்ணனுக்கு துணை இருந்த ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்று குவித்தான்.

அர்ஜுனனின் தாக்குதலில் அஞ்சிய கர்ணனின் சேனை வீரர்கள் அனைவரும் அவனை விட்டு விலகிச் சென்றனர்.

தனி ஒருவனாய், அர்ஜுனனையும், அவனைக் காக்க நின்ற வீரர்களையும் தாக்கினான் கர்ணன்.

அர்ஜுனனிடம் அம்புகள் தீராத அம்புறாத் துணிகள் இரண்டு உண்டு. கர்ணனிடம் அது இல்லை.

அர்ஜுனனிடம் உடைக்க இயலாத காண்டீபம் உண்டு, கர்ணனிடமும் உடைக்க இயலாத விஜயம் உண்டு. ஆனால், காண்டீபத்தில் நாணை அறுக்க இயலாது. விஜயத்தில் அப்படி இல்லை.

காண்டீபத்தின் நானை அவிழ்க்க வேண்டுமானால் முடியும். ஆனால் அர்ஜுனன் கண் இமைக்கும் நேரத்தில் அதை மீண்டும் கட்டும் வலிமை உடையவன்

காண்டீபத்தில் நூற்றி ஒரு நாணும் உண்டு. செயற்கரிய வீரன் ஒருவன் காண்டீபத்தின் நாணை அறுத்தாலும் அந்த நூற்று ஒரு நாண் வரை அது மீண்டும் மீண்டும் வரும். ஆனால், காண்டீபத்தின் நாணை அறுப்பது அவ்வளவு சுலபம் அல்ல.

இது அத்தனை இருந்தும் கர்ணன் அர்ஜுனனை எதிர்த்தான்.

தனி ஒருவனாய், களத்தில் நின்று அர்ஜுனனை சார்ந்த வீரர்கள் அனைவரையும் களைத்துப் போகச் செய்தான்.

களத்தில் அர்ஜுனனும் கர்ணனும் மட்டுமே.

காணுதற்கு அறிய ஒரு காட்சி கண் முன்னே அரங்கேற, கண் இமைக்கக் கூட இல்லாமல் மக்கள் வெள்ளம் அதைக் கண்ணுற, நாடி, நரம்பு, ரத்தம், மனம் என அனைத்திலும் போர்த்திறம் ஊறிய இரண்டு வீரர்கள் அங்கே போரிட, காற்றும் அங்கே நின்று போனதாம் போரினைக் காண.

மேகமும், மேகமும் மோதினால் மின்னல் வரும். இது இயற்கை. மின்னலும், மின்னலும் மோதினால் வருவது என்னவோ??? அதுதான் அன்றைய குருச்சேத்திரம்.

யார் சிறந்தவர் :


போரில் அர்ஜுனனின் தாக்குதலில் கர்ணனின் ரதம், சில மீட்டர்கள் வரை பின்னுக்குத் தள்ளப்பட்டது. அதே அர்ஜுனனின் ரதம், கர்ணனின் தாக்குதலில் சில அங்குலங்கள் மட்டுமே பின்னுக்குத் தள்ளப்பட்டது.

இதற்காய் கண்ணன், கர்ணனைப் பாராட்ட, அர்ஜுனன் கோபம் கொண்டு, கண்ணனைக் கேட்டான்.

“என் தாக்குதலில் கர்ணனின் ரதம் மீட்டர் கணக்கில் நகர்ந்ததே அதற்கு நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே. நமது ரதம் நகர்ந்தற்க்கு அவனைப் பாராட்டுகிறீர்களே???”

“ஆம் அர்ஜுனா, அவன் ரதத்தில் மனிதர்களான சல்லியனும், கர்ணனும் மட்டும்தான் இருக்கிறார்கள். உன் ரதத்தில், நீயும், மூவுலகையும் தன்னுள்ளே அடக்கிய பகவான், நானும் இருக்கிறேன், மூவுலகங்களும் என்னுள் அடக்கம். கூடவே உன் தேரின் கொடியில் மகா பலசாலியாய் அனைவராலும் அறியப்பட்ட அனுமன் இருக்கிறார். நாங்கள் இருவரும் இருக்கும் ரதத்தை எந்த மனிதனாலும் அசைக்கக் கூட முடியாது. ஆனால், கர்ணனின் தாக்குதலில் ரதம், சில அங்குலங்களே நகர்கிறதே”

“வலிமை மிக்கவன், தனித்திருந்தாலும் தீரம் மிக்கவன் கர்ணன்”

இந்த விவாதம் அர்ஜுனன் தரப்பில் நடந்து கொண்டு இருக்க, அங்கே கர்ணனின் தரப்பில் என்ன நடக்கிரதெனக் காண்போம்.

கர்ணன் : எத்தனை முறை அவிழ்தாலும் அர்ஜுனன், காண்டீபத்தில் நாணை கண் இமைக்கும் நேரத்தில் கட்டிக் கொள்கிறானே. பலே... இப்போது தெரிகிறது அவனை ஏன் வில்வித்தையில் சிறந்தவன் என்று அனைவரும் சொல்கிறார்கள் என”

சல்லியன் : கர்ணா, உண்மைதான். அவன் குரு வில்வித்தையில் மிகச் சிறந்தவர். அவரது பரிபூரண ஆசியையும், அருளையும், வழிகாட்டுதலையும் பெற்றவன் அர்ஜுனன்.

அர்ஜுனனின் வலிமையைக் காணக் காண, கர்ணனிடம் உற்சாகம் ஊற்றுப் போலப் பொங்குகிறது.

கர்ணன் : இப்படி ஒரு போரைத்தான் நான் எதிர்நோக்கினேன். சளைக்காமல் போரிடும் வீரன் ஒருவனைத்தான் நான் தேடிக் கொண்டு இருந்தேன். நிமிடம் கூட என்னை ஓய்வெடுக்க விடாது, நான் கற்று வைத்த அத்தனை திறமையும் என்னிலிருந்து வெளிக்கொணர வைக்கும் இந்த அர்ஜுனன் மீதும் என் ப்ரீத்தி பெருகுகிறது. இந்த நிமிடத்தில் நான் தான் உலகிலேயே மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பவன்.

சல்லியன் : கர்ணா, எதிராளி வலிமை மிக்கவன் என்கையில் நமக்கு அவன் மீது வன்மம் வருவதுதானே இயல்பு. நீ சொல்வது இயல்புக்கு மீறியதாக அல்லவா இருக்கிறது.

கர்ணன் : இல்லை, மத்ரா தேச மன்னரே, எனக்கு அப்படி இல்லை, என் வரையில் நான் அப்படி இல்லை. போரிடும் போதும், நமக்கு நிகரானவர்களோ, நம்மை விட வலிமை மிக்கவர்களோ அவர்களோடு போரிடும் போதுதான் நமது திறமை முழு அளவில் வெளிப்படும்.

நம்மை மேலும், மேலும் வலுப்படுத்த, இதுபோன்ற போர்தான் அவசியம். நான் எப்போதும் விரும்புவதும் அதைத்தான். அது இன்றுதான் நிறைவேறுகிறது.

உண்மையில் அர்ஜுனன் ஒரு தலை சிறந்த வீரன்.

சல்லியன் : எதிரியிடம் கூட நல்லதைக் காணும் உன் வீரத்தின் திறத்தின் முன் நான் தலை வணங்குகிறேன் கர்ணா. மகனே.. உனக்கு சாரதியாய் இருப்பதில் வருத்தமும், உன்னை ஜெயிக்க விடக் கூடாது எனும் வக்கிரமும் கொண்டு இருந்தேன்.

உன் திறமையைக் கண்டதும், வக்கிரம் மறைந்தது. உன் குணம் கண்டு, என் வருத்தமும் மறைந்தது. இப்போது நீ பேசியதைக் கண்டதும், உன் மீதும், வாத்சல்லியமும், வாஞ்சையும் வஞ்சமின்றி பல்கிப் பெறுகிறது கர்ணா.

வெற்றி உன் வசமாகட்டும் கர்ணா.

கர்ணன் : உங்கள் அன்பை அடைந்தது என் பாக்கியம். மிக்க நன்றி அரசரே.

சான்வி
14-12-2011, 08:01 AM
நாகாஸ்திரம் :

இருவருக்கும் இடையே போர் தொடர்ந்து நடைபெறுகிறது. இருவரும் அஸ்திரங்களின் மூலம் ஒருவருக்கு ஒருவர் பதில் சொல்லிக் கொண்டு இருந்தனர்.

பல விதமான அஸ்திரங்கள் இரு தரப்பில் இருந்தும் வெளியேற, அதைக் கண்ட மக்கள், இருவரில் யாரோ ஒருவரின் பக்கம் சேர்ந்து அவருக்காய், கோஷங்கள் எழுப்பி அவர்களை உற்சாகப் படுத்தினர்.

இது இவ்வாறு இருக்க, இந்த யுத்தம் பற்றிக் கேள்வியுற்ற அஸ்வசேணன் என்னும் நாகம், இந்த யுத்தத்தைக் காண வந்தது.

இந்த நாகம், அர்ஜுனனை பழி வாங்க வேண்டும் என பல்லாண்டு காலமாய் காத்துக் கொண்டு இருக்கும் நாகம். அர்ஜுனன், அக்னிக்காக, கான்டவ வனத்தை அழிக்கையில், தன் தாயின் கருவில் இருந்த இந்த நாகம், மிகுந்த இடர்களுக்கு இடையில் தப்பிப் பிழைத்து, தன் தாயைக் கொன்றவனைப் பழி வாங்கிடத் துடித்துக் கொண்டு இருந்தது.

கர்ணனும், அர்ஜுனனும், போரிடுகிறார்கள் என்பதை அறிந்து, வேகமாய் களத்தை அடைந்தது. அர்ஜுனனைக் கொல்லவென கர்ணன் வைத்திருந்த நாகாஸ்திரத்தில் சென்று புகுந்தது.

கர்ணனும், பல அஸ்திரங்கள் எய்து பார்க்க, அர்ஜுனன் அத்தனை அஸ்திரங்களையும் தடுத்தான். அர்ஜுனனின் அத்தனை அஸ்திரங்களையும் கர்ணன் தகர்த்தான்.

முடிவில் கர்ணன், நாகாஸ்திரத்தை எடுத்து, விஜயத்தில் தொடுத்து, நாணை முழு நீளத்திற்கு இழுத்து எய்யப் போகும் தருணம், கர்ணனின் குறியைக் கண்ட சல்லியன் கர்ணனிடம், அவன் கழுத்துக்கு குறி வைக்காதே, மார்புக்கு குறி வை என்றான்.

கர்ணன், அர்ஜுனன் மாபெரும் வீரன், அவன் உயிர் சில நிமிடங்கள் ஆனாலும் துடித்து இறப்பதை நான் விரும்பவில்லை. ஒரே நொடியில் வேதனை இன்றி அவன் இறக்கட்டும். இதோ அவன் கழுத்துக்கு குறி வைத்து எய்கிறேன் அம்பை என்றான்.

சல்லியன் மீண்டும் வலியுறுத்தினான், சொன்னாள் கேள் கர்ணா, அர்ஜுனனிடம், நாகாஸ்திரத்துக்கு தகுந்த பதில் அஸ்திரம் கிடையாது. எனவே கண்ணன் நிச்சயம் ஏதாவது சூழ்ச்சி செய்வான். எனவே நீ அவன் மார்புக்கு குறி வை என்றான்.

கர்ணன் : இல்லை என் மனம் ஒப்பவில்லை. இதோ அவன் தலையைக் கொய்கிறேன் என அம்பை விடுத்தான்.

நாகாஸ்திரம், நெருப்பைக் கக்கிக் கொண்டு அர்ஜுனனை நோக்கிப் பாய, அர்ஜுனன் தன் முடிவு நெருங்கி விட்டது என கையைக் கட்டிக் கொண்டு காத்திருக்க, அண்டசராசரங்கள் நடுநடுங்க, போரை ஆவலாய் காணக் காத்திருந்த தேவர்கள் மனம் பதைபதைக்க, நாகஸ்திரம் அர்ஜுனனை நெருங்கியது.

அந்த நேரத்தில், கண்ணன் தன் காலால் தேரை அழுத்த, அது, ஒன்னரை அடி மண்ணுக்குள் புதைந்தது.

அர்ஜுனன் தலையைக் கொய்ய வந்த நாகாஸ்திரம், அர்ஜுனனின் கிரீடத்தை(அர்ஜுனனுக்கு அவன் தந்தை இந்திரனால் வழங்கப்பட்டது) மட்டும் சுக்குநூறாக உடைத்தது.

அஸ்திரம் திரும்ப கர்ணனை வந்தடைந்தது.

சல்லியன் கோபம் :


சல்லியன் கர்ணனை அறிவுருத்தினான். கர்ணா, இதோ மீண்டு வந்த அஸ்திரம், இப்போதாவது அதை அர்ஜுனன் மார்புக்கு குறி வை. கர்ணன் அதை எடுத்து வில்லில் தொடுக்கும் போதுதான், தன் தாய்க்கு, நாகாஸ்திரத்தை ஒருமுறைக்கு மேல் அர்ஜுனன் மேல் பிரயோக்கிக்க மாட்டேன் என வாக்கு தந்தது நினைவுக்கு வந்தது. அஸ்திரத்தை மீண்டும் அம்பறாத் துணிக்குள்ளே வைத்து விட்டான்.

இலக்கை சரியாகத் தாக்காத அஸ்வசேணன் மீண்டும் வந்து, நான் தான் நீ எய்த அம்பில் இருந்தவன். என்னை நீ மீண்டும் உபயோகித்துக் கொள். அந்த பாவியைக் கொல்லாமல் விட மாட்டேன். தேவர்கள் அனைவரும் திரண்டு வந்தாலும் அர்ஜுனனை நான் கொல்வதை தடுக்க இயலாது. என்கிறது.

அதை கர்ணன் மறுக்கிறான். ஆயிரம் அர்ஜுனன்களை நான் அழிக்க வேண்டி இருந்தாலும், ஒரே அஸ்திரத்தை நான் ஒரு முறைக்கு மேலே உபயோகிக்க மாட்டேன்.

மேலும், வெற்றி என் திறமை மூலமாக எனக்கு கிடைக்க வேண்டும். அடுத்தவர் மூலம் கிடைக்கும் வெற்றி எனக்கு வேண்டாம் என மறுத்துவிடுகிறான்.

அஸ்வசேனன், இவனிடம் பேசிப் பயன் இல்லை என, தானே அர்ஜுனனைத் தாக்கச் செல்கிறது. அதை கண்ட கண்ணன், அர்ஜுனனுக்கு அந்த நாகத்தை அழிக்குமாறு ஆணை இடுகிறான். அர்ஜுனனும், அந்த நாகத்தை அழிக்கிறான்.

அஸ்திரத்தை கர்ணன், உள்ளே வைத்ததைக் கண்ட சல்லியன், கோபம் கொண்டு, அஸ்திரத்தை எடுத்து தாக்கு கர்ணா என்கிறான்.

கர்ணன் : (தாய்க்கு தந்த வாக்கு என்பதை சொல்ல இயலாத கர்ணன்) நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல வேண்டாம். உங்கள் வேலை ரதத்தை செலுத்துவது மட்டும்தான். அதை செய்யுங்கள்

சல்லியன் : (இந்த பதிலில் ஆத்திரம் அடைகிறான் சல்லியன்)

இதன் பின்னர், கண்ணன், தேரினை பூமிக்குள் இருந்து வெளியே எடுக்கிறார்.

மீண்டும் இரு வீரர்களும், உயிரைப் பறிக்கும் அஸ்திரங்களை இருவரும் ஒருவர் மீது ஒருவர் எய்து கொண்டு போரிடுகிறார்கள்.

அர்ஜுனன், எய்த என்னன்ற அம்புகள் கர்ணனைத் தாக்க, கர்ணன் சோர்ந்து போகிறான். அப்போது அவன் முடிவு அவன் கண்களில் தெரிகிறது.

மரணம் தன்னை நெருங்கி வந்ததை கர்ணன் அறிகிறான் கால தேவனின் துணையுடன். “கர்ணா, பூமாதேவி உன் ரதத்தை தன்னுளே பிடித்து வைக்கப் போகிறாள்” கவனம் என எச்சரிக்கிறார்.

ஆனாலும், தேரின் சக்கரம், பூமிக்குள் புதைகிறது. தேர் அசைய மறுத்து நின்று விடுகிறது.

கர்ணன் : அரசரே, ரதத்தை மேற்கொண்டு செலுத்துங்கள்.

சல்லியன் : ரதம் இம்மி கூட நகராது. சக்கரம் மண்ணில் புதையுண்டு போயிற்று.

கர்ணன் : இறங்கி சரி செய்யுங்கள்

சல்லியன் : (கர்ணன் தன் சொல் பேச்சு கேட்க மறுத்த காரணத்தால்) அது என் வேலை அல்ல. என் வேலை ரதத்தை செலுத்துவது மட்டும் தான்.

கர்ணன் : இது என்ன வாதம். உடனே ரதத்தை மேலே கொண்டு வர ஆக வேண்டியதை செய்யுங்கள்.

சல்லியன் : முன்பே நான் துரியோதனனிடம் சொல்லி இருக்கிறேன், நீ என்னை அவமதிப்பது போல பேசினால், உன்னை விட்டு நான் விலகி விடுவேன் என்று. நீ என்னிடம் பேசும் முறை சரி இல்லை. நான் போகிறேன். நீயே உன் ரதத்தை சரி செய்து கொள்.

கர்ணன் : போர் முனையில் இப்படி என்னை நிராதரவாக விட்டுச் செல்வது நியாயம் இல்லை.

சல்லியன் பதிலேதும் பேசாது அவர் பாட்டுக்கு சென்று விட்டார்.

சான்வி
14-12-2011, 08:03 AM
கர்ணனின் முடிவு :

அர்ஜுனனுக்கு கர்ணன் இந்த நிலையில் இருக்கையில் போரிட விருப்பம் இல்லை. ஆனால் கண்ணன் ஆணை இட்டான். அவனைத் தாக்கு. தாக்கி அழித்துவிடு.

அப்போது

கர்ணன் : அர்ஜுனா, நில், என் தேர்ச்சக்கரம் மண்ணில் புதையுண்டு போயிற்று. கொஞ்சம் அவகாசம் கொடு. ஒரு நிமிடத்தில் அதை நான் சரி செய்து விடுகிறேன்.

அர்ஜுனன் மௌனமாய் அதற்கு சம்மதிக்க, கண்ணன், அர்ஜுனனி போரிடத் தூண்டுகிறான். அர்ஜுனன் பகவானை மகிழ்விக்க கர்ணனை தாக்கத் தொடங்கினான்.

கர்ணன் : தனியாய், சாரதி இன்றி, ரதமும் மண்ணிலே புதையுண்ட நிலையில் போரிடுவதுதான் வீரத்துக்கு அழகா??? அர்ஜுனா, நீ செய்வது நியாயமா?? கொஞ்சம் பொறு அர்ஜுனா.

கண்ணன் : தனியாய் வந்த சிறுவன் அபிமன்யுவை, மாவீரர்கள் அனைவரும் சேர்ந்து கொன்றீர்களே அது தான் வீரமா?? அதைச் செய்த வீரன் பேசும் வார்த்தைகளா இது??? சூதாட அழைத்தது நியாயமா??? வஞ்சகமாய், நாட்டை எடுத்துக் கொண்டது நியாயமா??? திரௌபதியை சபையில் துகிலுரித்து அவமானப் படுத்தியது நியாயமா??? இதை நீ செய்யாவிடினும், செய்தவர் பக்கம் இருந்து, அமைதியாய் வேடிக்கை பார்த்தது நீதானே???

கர்ணன் : எதுவும் பேசாமல், தன் சக்தி அஸ்திரத்தால் அர்ஜுனனை தாக்கினான். அது ஒரு கணம், அவனை நிலை குலையச் செய்ய, கர்ணன் அந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி, தன் தேர் சக்கரத்தை மண்ணிலிருந்து எடுக்க முயற்சித்தான்.

ஆனாலும், பிடித்திருந்தவள் பூமாதேவி அல்லவா??? விடுவாளா??? ஆன மட்டும் முயற்சித்தான் கர்ணன். அவனால் சக்கரத்தை வெளியே எடுக்க முடியவில்லை.

அந்தோ பரிதாபம், அப்போது தெளிவடைந்த அர்ஜுனன், கர்ணனைத் தன்னிடம் இருந்த சக்தி அஸ்திரத்தால் தாக்கினான்.

சரியாய் அவன் மார்பிலே பாய்ந்தது அஸ்திரம்.

அந்தக் கணத்தில் பரசுராமரின் சாபம் பலித்து, கர்ணனுக்கு, அஸ்திரங்களை ஏவும் மந்திரங்கள் மறந்து போக, உதவி அற்ற நிலையில், கர்ணன், புறமுதுகு காட்டாது, அர்ஜுனனின் அஸ்திரங்களை மார்பிலே ஏந்தினான்.

அம்பு மீது அம்பு விட்டான் அர்ஜுனன். ஆனாலும் கர்ணனின் உயிரை அவற்றால் தீண்டக் கூட முடியவில்லை. ஒரு கட்டத்தில், அர்ஜுனனின், மின்னல் வேக அம்புகள் அனைத்தும், மலர் மாலைகளாகி கர்ணனுக்கு விழத் துவங்கின.

குழம்பினான் அர்ஜுனன். விளக்கினான் கண்ணன்.

இதுநாள் வரையில் கர்ணன் செய்த தான தர்மங்களின் பலன் அவனைக் காக்கிறது. இரு வருகிறேன், என ஒரு வயோதிக ஏழை அந்தணன் வடிவெடுத்து கர்ணனிடம் செல்கிறான்.

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா

மன்னவர் பணியேற்கும்
கண்ணனும் பணி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா கர்ணா
மன்னித்து அருள்வாயடா

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழுந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா

கர்ணனை நாடினான் கண்ணன்.

கண்ணன் : அய்யோ.. தருமம் இப்படி வீழ்ந்து கிடக்கிறதே. யாசிக்க வந்த நானோ ஏதும் பெற முடியாத பாவி ஆனேனே.

கர்ணன் : யாசகமா??? பெரியீர், ஏது வேண்டும்??? என்னிடம் இருக்கும் எதையும் பெறலாம். இப்போது உயிர் ஒன்றுதான் இருக்கிறது. அது வேண்டுமா?? இல்லை என்றேன் என்ற சொல் வராமல், இருப்பதைக் கேட்டுப் பெற்று இறக்கும் போதும் எனக்கு பெருமை வரச் செய்யுங்கள்

கண்ணன் : நீ செய்த தருமத்தின் பயனை எல்லாம் எனக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விடு. அதுபோதும்.

கர்ணன் : ஆகா... எவ்வளவு சிறந்த சேவைக்கு என்னை ஆளாக்கிணீர்.

(என கர்ணன், தான் செய்த தான, தர்மத்தின் பலனை எல்லாம், தன் உதிரம் கொண்டு கண்ணனுக்கு தாரை வார்த்துக் கொடுத்தான்)

கண்ணன் : கர்ணா, அழியாப் புகழோடு முக்தியும் பெறுவாய் நீ

கர்ணன் : எனக்கு முக்தியும் சித்திக்கும் என்று அருள் புரியும் நீர் யார்???

கண்ணன் : நானா?? இதோ பார்.... என விஷ்வரூப தரிசனம் தருகிறான்.

கர்ணன் : பரந்தாமா, தங்களின் கருனைதானா என்னை ஆட்கொண்டது?? என கைகளைக் கூப்பியபடி தொழுகிறான்.

(தொழுதவன் மயங்குகிறான், மாதவன், அர்ஜுனனிடம் சென்று இப்போது தொடு உன் கணையை, கர்ணன் கதை முடிந்து விடும். அவ்வாறே அர்ஜுனன் செய்ய, கர்ணன் உயிர் உடலை விட்டுப் பிரிந்தது)

கர்ணன் : அம்மா..ஆ...ஆ...ஆ...

சான்வி
14-12-2011, 08:05 AM
கர்ணனின் உறவுகள் :


கர்ணனின் கடைசி ஓலம் அவன் அன்னையை எட்ட, விரைந்து வருகிறாள் போர்க்களத்துக்கு...

குந்தி : மகனே... மகனே... மகனே... என அலறித் துடித்து, கர்ணனை மடியில் ஏந்தி கதறுகிறார்.

சூரியன் : கர்ணா, என் மகனே... என நொடியில் தன் வெளிச்சக் கதிர்கள் இழந்து இருண்டு போகிறான்.

தருமர் : அன்னையின் குரல் கேட்டு, நகுலா, இறந்தது யார் அர்ஜுனனா?? இல்லை கர்ணனா?? அம்மா ஏன் மகனே மகனே என கதறுகிறார்???

நகுலன் : நான் அறிவேன் அண்ணா, நிச்சயம் இறந்தது கர்ணன்தான். ஆனாலும் அன்னை அழும் காரணம் தான் நான் அறியேன் அண்ணா.

தருமர்: சரி வாருங்கள் பார்க்கலாம் என சகோதரர்கள் நால்வரும் வருகின்றனர்.

குந்தி : மகனே... அய்யோ... சாகாப் புகழும், வளமும், நலமும், கொண்ட உன்னை விட்டு உயிர் பிரிந்ததா??? மகனே... என தன் மடியில் இருந்த மகனின் முகம் தொட்டு கதறிக் கொண்டு இருந்தால் இந்த அன்னை.

அர்ஜுனன் : அம்மா, என்னம்மா இது??

குந்தி : என் மகன். தன் உடன் பிறந்த சகோதரர்களான உங்களைக் காக்க தன் உயிரை ஈந்த என் முதல் மகன்.

அர்ஜுனன் : அம்மா....

குந்தி : ஆம் அர்ஜுனா, எனது தலை மகன் கர்ணன் தான்.

அர்ஜுனன் : அய்யோ.. என்னம்மா இது??? என் அண்ணனையா நான் கொன்றேன்?? அதிலும் அனைவரில் மூத்தவரையா நான் கொன்று விட்டேன்??? எதிரில் இந்த மாவீறனைக் கண்ட போதெல்லாம், அண்ணனைப் போல தோன்றியது இதனால்தாணா???

கிருஷ்ணா... கிருஷ்ணா... வஞ்சகன் நீ உன்னால் அல்லவா இந்த உத்தமனை நான் கொன்றேன்???


கிருஷ்ணன் : ம்ம்ம்ம்ம்.... ஹ ஹ ஹ... நான் கொன்றேன், நான் கொன்றேன் என ஏன் நீ வீணில் மார்தட்டிக் கொள்கிறாய்?? உன் ஒருவனால் அவனைக் கொல்ல முடியுமா??? முதலிலேயே நான் உன்னிடம் சொல்லி உள்ளேன்.

மாபெரும் வீரன் கர்ணன். அவனை தேவர்கள், மூவர்கள், ஏன் கடவுளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் கூட அவனைக் கொல்ல முடியாது. அளப்பரிய ஆற்றல் கொண்டவன்.

ஆற்றலில் அவன், தன் வழியே வரும் அனைத்தையும், பொசுக்கிடும் வலிமை கொண்ட நெருப்புக்கு சமம்.

வேகத்தில், கட்டுக்கடங்காமால் மோதும் மூர்க்கத்தனமான காற்றுக்கு சமம் அவன்.

சீற்றம் கொள்கையில், தன்னைக் கூட அழித்துக் கொள்வான் அவன்.

வலிமையான பண்பில், உடல் அமைப்பில், அவன் சிங்கத்துக்கு ஒப்பானவன்.

உயரமும், உயரத்துக்கேற்ற பருமனும், நீண்ட கைகளும், பரந்த மார்பும் உடையவன்.

வெல்லமுடியாதவன். கொல்லப்பட முடியாதவன். உணர்ச்சிமிக்கவன். தோள்கள் தினவெடுத்தவன்.

போர்க்கலையின் ஒவ்வொரு செயல்பாடுகளின் மீதும் வெறிபிடித்தவன்.

எதிரிகளை தினறடிப்பவன். அவன் நண்பரின் பயங்களை சிதறடிப்பவன்.

மொத்தத்தில் அவன் ஒரு நாயகன். இதுவரை நாயகனாய் இருந்த அனைவருக்கும் முதலானவன்.

சாபங்கள் எதுவும் இல்லாமல் இருந்திருந்தால், அழிவில்லாதவன் அவன். அழிக்க இயலாதவன் அவன்.

நம்பிக்கை எனும் சொல்லு இலக்கணம் அவன். விசுவாசம் எனும் சொல்லுக்கு பொருளானவன் அவன்.

நட்புக்கு, நடமாடும் உதாரணம் அவன். இறந்தாலும், இறவாமல் நம் நெஞ்சில் பொருந்தியன் அவன்.

கர்ணனின் சாவுக்கு பங்களித்த காரணிகள் இவை : (நன்றி விக்கிபீடியா)

1. கர்ணனின் சாவிற்கு முதல் மற்றும் முக்கிய காரணம் முனிவர் துர்வாசா ஆவார். அபர் குந்தியை ஆசீர்வதிக்கையில் மந்திரத்துடன் அவரது விருப்பத்திற்கு எந்த கடவுளையும் அழைக்கலாம் என்று ஆசீர்வதித்த அவர், அந்த மந்திரத்தின் பின்விளைவை அவரிடம் சொல்லவில்லை. எனவே, குந்தி அந்த மந்திரத்தின் பின்விளைவைப் பற்றிய விழிப்புணர்வின்றி தனது திருமணத்திற்கு முன்னதாக சூரியனை அழைத்தார். திடீர் பயத்தாலும் தொடர்ந்த தீய வழியினாலும் குழந்தை உருவானது. தேரோட்டி அதிரதாவினால் அவர் வளர்க்கப்பட்டதால் கர்ணனை க்ஷத்ரியராக ஏற்றுக்கொள்ளல் மறுக்கப்பட்டது. அஸ்தினாப்பூரின் சிம்மாசனத்திற்குரிய உண்மையான நபர் கர்ணன், யூதிஷ்திராவோ அல்லது துரியோதனனோ அல்ல, ஆனால் அவரது பிறப்பு ரகசியமாக வைக்கப்பட்டதால் இது அறியப்படவில்லை.

2. இராட்சத தேனீ வடிவத்தில் இருந்த பகவான் இந்திரன், கர்ணனின் தொடையைக் குடைந்தார். இது குரு பரசுராமரைக் கோபப்படுத்தியது, அவர் தொடர்ந்து கர்ணனை தனது சாதி பற்றி பொய்யுரைத்ததற்காக சாபமிட்டார். பின்னர் குருக்ஷேத்திராவில் நடக்கவிருந்த படுகொலைபற்றி பரசுராமருக்கு தெரியும் என்பது வெளியிடப்பட்டது. அர்ஜூனனுடன் போரிடும் முன்னர் இரவில் அவர் கர்ணனிடம் கனவில், உறுதியாக கௌரவர்களைத் தோற்கடிக்கவே கொடூரமான முறையில் அவரை நோக்கத்தோடு சாபமிட்டதாக விவரித்தார், கர்ணன் சாபத்தை பணிவுடன் ஏற்றுக்கொண்டதால், அவர் இறப்புக்குப் பின்னரும் எக்காலத்திற்கும் அழியாத புகழைக் கொண்டிருப்பார் என்று ஆசிர்வதித்தார்.

3. பசுவின் உரிமையாளரான பிராமணனின் சாபம்.

4. பூமாதேவியின் சாபம்.

5. பகவான் இந்திரனுக்கு தனது கவசம் மற்றும் குண்டலத்தை தன்னிடமிருந்து தானமாக அளித்தல், இந்த முறை அவர் பிச்சைக்காரராக மாறுவேடமிட்டிருந்தார், ஏனெனில் அவரது அதீத பெருந்தன்மைக் குணம்.

6. ஷக்தி ஆயுதத்தை கடோட்கச்சாவின் மீது செயல்படுத்தியது.

7. அவரது தாய் குந்திதேவிக்கு அளித்த அவரது இரண்டு சத்தியங்கள்.

8. அர்ஜூனனை கர்ணனின் நாகஸ்திரத்திலிருந்து காக்க கிருஷ்ணன் தேரை அழுத்தியது

9. குந்திக்கு தான் அளித்த இரண்டாவது சத்தியத்தின் பொருட்டு "நாகஸ்திரத்தை" இரண்டாவது முறை பயன்படுத்தாதது.

10. ஷால்யா, போர் மிகமுக்கியமான கட்டத்தில் இருந்த போது நடுவழியில் கர்ணனின் தேரை விட்டுச்சென்ற தேரோட்டி.

11. மகாபாரதப் போரின் ஆரம்பத்தில் கர்ணனுக்கு பாண்டவர்கள் தனது சகோதரர்கள் என்பது கிருஷ்ணர் மூலமாகத் தெரிந்தபோது, பாண்டவர்களின் மீதான கர்ணனின் பழிவாங்கும் எண்ணம் பயனற்றதானது. பாண்டவர்களின் மீதான கர்ணனின் பகைமை மறைந்தது. ஆனால், துரியோதனனின் மீதான விசுவாசத்தின் அடிப்படையில், கர்ணன் போரில் அர்ஜூனனுக்கு எதிராகப் போரிட முடிவுசெய்தார். மாறாக, பாண்டவர்கள் யாருக்கும் கர்ணன் அவர்களின் சகோதரர் என்பது கர்ணன் இறந்த பின்னர் வரையில் தெரியாது.

12. பகவான் கிருஷ்ணர், கர்ணன் தனது தேரை சேற்றிலிருந்து வெளியே கொண்டுவரும் போது அவரைக் கொல்லும்படி அர்ஜூனனை வற்புறுத்தினார்.

13. கர்ணன் ஆரம்பத்திலிருந்தே தனது தெய்வீக அம்பான விஜயாவை பயன்படுத்தவில்லை

14. கிருஷ்ணர் அர்ஜூனனை கர்ணனிடமிருந்து மூன்று முறை ஷக்தி, பார்கவா அஸ்திரா மற்றும் நாகாஸ்திரா ஆகியவற்றிலிருந்து காப்பாற்றினார்


துரியோதனன் : கர்ணா... என் நண்பா.. போய் விட்டாயா என்னை விட்டு??? அய்யோ... இதுவரை இருவரும் சேர்ந்து இருந்ததைப் போலே, நாணும் உன்னுடனே வந்திருப்பேனே நண்பா. வந்தாலும், செயற்கரிய செயலைச் செய்து நீ அடைந்த இடத்தை நான் அடைய முடியுமா???

நண்பா, என் பொருட்டு எதையும் நீ செய்வாய் என்பதை நான் அறிந்தே இருந்தேன். உன்னை நான் இழப்பேன் என கனவில் கூட எண்ணியதில்லை நண்பா.

என் உயிரே, உன் மீது நான் கொண்ட நட்புக்கு, நீ இத்துணை பெரிய தியாகம் செய்வாய் என் நான் அறியவில்லையே கர்ணா.

என்ன செய்து என் அன்பை இனி உனக்கு புரியவைப்பேன் என நீ கேட்டபோது நான் அறியவில்லை கர்ணா, உன் உயிரைத் தந்து அதை நீ உணர வைப்பாய் என..

நண்பா... கர்ணா... என் உயிரே....

சுபாங்கி : அத்தான்... என்னை விட்டு போய் விட்டீர்களா??? அய்யோ.. என் தெய்வம் என்னை விட்டுப் போய் விட்டதா??? என் உளம் வாடப் பொறுக்காத என் உயிர் என்னை வாட விட்டுச் சென்று விட்டதா???

சுபாங்கியின் தந்தை : மகளே.. சுபாங்கி... என தொடர்ந்து ஓடி வருகிறார்.

சுபாங்கி : பாருங்கள் அப்பா. பாருங்கள், நீங்கள் விரும்பாத உங்க மருமகனைப் பாருங்கள். என்னை வாழ்வித்த தெய்வம், மண்ணிலே வீழ்ந்து இருப்பதை பாருங்கள்.

சுபாங்கியின் தந்தை : கர்ணன், குந்தியின் மடியில் கிடப்பதைக் கண்டு.. உண்மை அறிந்து... மகளே... என கதறுகிறார்.

சுபாங்கி : அவர் இல்லாத உலகத்தில் எனக்கு எதுவுமே இல்லை. அவர் ஜீவன் இல்லாத, இடத்தில் நாணும் வாழ மாட்டேன். அத்தான்.. நீங்கள் வாழும் உலகிற்க்கே நாணும் வருகிறேன் அத்தான்... அத்தான்... அத்தான்... என கர்ணனின் மீது வீழ்ந்து சுபாங்கி இறக்கிறாள்.

சுபாங்கியின் தந்தை : கர்ணா, என் மருமகனே, போரிலே உன் வீரம் கண்டே, மனதளவில் உன் மீது மரியாதை அதிகரித்தது. உன் தீரத்தின் செருக்கில், எனது ஆணவச் செருக்கு அடியோடு அழிந்து போனது. போர் முடிந்ததும், உன்னிடம் மன்னிப்பு கேட்க எண்ணி இருந்தேனே... இனி நான் என்ன செய்வேன்.

யாரிடம் சென்று சொல்வது என் மனமாற்றத்தை??? சொன்னாலும் கேட்க முடியாது இடத்துக்கு சென்று விட்டீர்களே?? அய்யோ.. கர்ணா, மகனாய் உன்னை, மாளிகைக்கு அழைத்துச் செல்லலாம் என இருந்தேனே... என் ஆசை மண்ணோடு மண்ணாகிப் போனதே நான் என்ன செய்வேன்???

குந்தி : கர்ணா.. என் மகனே, தம்பிமார் ஐவரும் உன் தாள் பணிய, நீ முடிசூடி அரசாள வேண்டும் எனக் கனவு கண்டேன். கர்ணா..

தருமதேவதை : நீ ஏனம்மா அழுகிறாய்?? மலை போல் ஐந்து பிள்ளைகளை வைத்துக் கொண்டு கண்ணீர் வடிப்பது உன் போன்ற தாய்க்கு தகுமா?? எனக்கு இருந்தது ஒரே பிள்ளை. அவனையும் நான் இழந்து விட்டேனே. மகனே.. கர்ணா...

குந்தி : நீங்கள் யாரம்மா???

தருமதேவதை : தருமத்தின் தேவதை. எல்லாரும் சேர்ந்து என் மகனை கொன்று விட்டீர்களே?? உங்களுக்கு புகழ் உண்டா??? மோட்சம் உண்டா?? எனக்கென ஒரே ஒரு மகன் அவதரித்திருந்தான். அவன் பிறந்ததில் தருமம் தழைத்தது என சந்தோசம் கொண்டிருந்தேன்.

கிருஷ்ணா.. எத்தனையோ சதி செய்து, அவனை வாழ விடாது செய்தாயே. இது நியாயமா??? கருணைக் கடவுளுக்கு இது அடுக்குமா??

கிருஷ்ணன் : ஹ ஹ ஹ, தருமமாதா, அறம் அறிந்த நீயும் பிறர் போல புலம்புதல் சரியா??? என் செயல் விதி மாறி அமையுமா???

பரித்ராணாய ஸாதூநாம், விநாஷாய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய, ஸம்பவாமி யுகே யுகே ||

For the up-liftment of the good and virtuous,
For the destruction of evil,
For the re-establishment of the natural law,
I will come, in every age

சான்வி
14-12-2011, 08:08 AM
கர்ணா என் காதலனே:

என் இதய வானின் ஆதவனே,
மனதை நிறைத்த மாதவனே,
என்னை விட்டுச் சென்றாயோ??

எண்ணம் தனில் உன்னை விதைத்து
நெஞ்சம் தனில் உன்னை தைத்து
உரமேற்றிப் போனவன், இன்று
உயிர் விட்டுப் போனதென்ன??

உயிர் விட்டுப் போனவன்
என் உளம் தொட்டுப் போனவன்

என் மனம் வாடிய போதெல்லாம்
வாடாத தீரம் என்னில் தந்தவன்

சீராடும் பொழுதுகளில்
போராடும் வீரம் தந்தவன்

சிந்திக்கும் எண்ணம்
மந்தித்த வேளையிலே
சிந்தையிலே வந்தவன்

சீர்தூக்கிப் பார்க்கும்
சீரான குணத்தை
சீராகத் தந்தவன்

வாழ்வெனும் பாடத்தை
வாழ்ந்திடவே வேண்டுமென
போராகத் தந்தவன்

மறைந்தது நீயா???
மரித்தது நானா??

மறைந்தாலும்,
நீ மறைந்தது என்னிலே தெரிந்தாலும்,
நீ விட்டுப் போன பாடங்கள்
பசுமை நீங்கா நினைவுகளாய்
என்னிலே.. எப்போதும்...

உன்னைக் காதலித்தேன்
உன் தீரம் காதலித்தேன்
உன் ஈகை காதலித்தேன்
உன் நட்பைக் காதலித்தேன்
உன் காதலைக் காதலித்தேன்

இறக்கும் போதும் இறவாத உன் வீரம் அதை
நான் இறக்கும் வரை காதலிப்பேன்
இன்றும், என்றும், எப்போதும்
கர்ணா நீ என் காதலன்தான்.

__________________________

கர்ணனின் வாழ்வு, நாம் தெரிந்து கொள்ள வேண்டி, நாம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய பல நல்ல விஷயங்களை சொல்லி உள்ளது.

போராட வேண்டும் வாழ்வில்.

வாழ்வு எப்போதும் நமக்கு மலர்படுக்கை விரிக்காது. கல்லோ, முள்ளோ, நடந்து பார். உன் துன்பம், துயரை நீ கடந்து பார். வாழ்வில் வெளிச்சம் வரும்.

முடங்கிக் கிடந்தால், முன்னேற முடியாது. எண்திசையும் இருள்சூழ இருந்தாலும், முடங்கிப் போகாதே. முட்டி மோதி முயற்சித்துப் பார். மூர்சித்துப் போகும் வரை முயற்சித்துப் பார்.

வெற்றி உன் வசம். வாழ்வு உன் வசம்.

வாக்கு தவறாமை, விசுவாசம், ஈகை, நட்பு, என அனைத்தும் முக்கியம் தான் வாழ்வில்.

நம்பிக்கை எனும் கையை மூலதனமாக்கு. அதற்கு நல்ல நட்பை துணையாக்கு. உன் ஆத்மார்த்த அன்பை அதற்கு அணியாக்கு. அடைவாய் ஜெயம்.

பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்பதா வாழ்வு???
இதனால் வராதா தாழ்வு???

பிறந்தோம், வாழ்ந்தோம், வரலாறானோம் என இருக்கட்டும் வாழ்வு.
இப்படி இருப்பின் எப்படி வரும் தாழ்வு???

வாழ்க நலம்
என் இதயம் நிறைந்த நன்றிகள் :


இதுவரை நான் எழுதியதை ரசித்து, எனை ஊக்கப்படுத்தி, என் குறைகளை நிறைகளாக்க எனக்கு உதவிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கு என் முதற்க்கண் நன்றி

நான் அறிந்தவற்றை, மேலும் மெருகேற்றி, ஒரு வரிசையில் சீர்படுத்தி, அறியாத பல அறிய தகவல்களை நான் அறியச் செய்து, அதை உங்களுக்கு வழங்கிட உதவிட்ட இணையத்துக்கும், ஆதார நூல்களை இருந்திட்ட சில இனையதலங்களுக்கும் என் சிறப்பு நன்றிகள் பல.

விடாமல் தொடர்ந்து என் பதிவுகளைப் படித்து, எனக்கு ஊக்கம் தந்த என் இனிய தோழிகளுக்கு என் மனம் திறந்த, மடை திறந்த நன்றிகள்

கர்ணன் திரைப்படத்தை ஒட்டிய காட்சிகள் இந்தக் கதையில் நிறைய உண்டு. அந்தப் படத்திற்கு என் சிறப்பு நன்றி. கர்ணனை பற்றிய என் கற்பனைக்கு, நடிகர் திலகம் அந்தப் படம் பார்த்த பிறகு கணக்கச்சிதமாக பொருந்திப் போனார்.

சொல்லாமல் யாரையேனும் விட்டு விட்டிருந்தால், அவர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.

சான்வி
14-12-2011, 08:09 AM
இடையறாத அலுவல்கள் எனை இருக்க, வர இயலாது போனேன்.

மீதம் வைத்த பகுதிகளை இன்று பதிக்கிறேன். இந்த மாத துவக்கத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று உள்ளதால், இனி இங்கே வருவது சற்று சிரமமே. இயலாததும் கூட.

கர்ணனை பாதியில் விட மனமில்லாததால்... அதை பதித்துத் செல்கிறேன்.

ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும், என் ஆக்கத்துக்கு, உறுதுணையாய் இருந்த உங்கள் அனைவரின் நட்புக்கும் என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.

meera
14-12-2011, 08:12 AM
கர்ணன் திரைப்படத்தை எத்தனை முறை பார்த்திருக்கிறேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் இன்னும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு படம்.
சிவாஜியின் நடிப்பும் அதன் வசனங்களும் அதை விட கடைசியாய் அந்த பாடல்
"உள்ளத்தில் நல்ல உள்ளம்" இந்த பாடலை கேக்கும் போது எழும் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வர்ணிக்க தெரியவில்லை எனக்கு.

அழகான தொகுப்பு சான்வி.:)

மீண்டும் கண்முன்னே சிவாஜியை கண்டேன்.:eek:

கீதம்
15-12-2011, 11:10 AM
ஒட்டுமொத்தமாய் அத்தனைப் பகுதிகளையும் பதித்துவிட்டீர்கள், இனி படிப்பது உங்கள் பாடு என்று.:)

நேரம் கிடைக்கும்போது ஒவ்வொரு பகுதியாய்ப் படிக்கிறேன். உங்கள் தளராத முயற்சிக்குப் பாராட்டுகள் சான்வி.

எடுத்துக்கொண்ட பணியை நல்லமுறையில் முடிக்கவும் நேரம் கிடைக்கும்போது தமிழ்மன்றத்துக்கு வருகை புரிந்து இன்னும் பல படைப்புகளை நல்கவும் மனமார வாழ்த்துகிறேன்.

இனியவள்
02-10-2012, 12:57 PM
கர்ணனின் கதாப்பாத்திரமே மஹாபாரதத்தை மீண்டும் மீண்டும் படிக்க என்னைத் தூண்டும்.. கர்ணனை மீண்டுமொரு முறை கண்முன் கொண்டு வந்த தங்களுக்கு எனது நன்றிகள்...

கர்ணனைப் பற்றிய நூல்களை நான் தேடித் தேடிப் படித்த காலங்கள் என் மனக்கண் முன் நிழலடுவதை தவிர்க்க முடியவில்லை இத் தொடரைப் படித்த பின்பு.. நன்ற்கள் பல தங்களுக்கு...!