PDA

View Full Version : அன்றொருநாள்: ஆகஸ்ட் 04:Iinnamburan
04-08-2011, 10:45 AM
அன்றொருநாள்: ஆகஸ்ட் 04:I

இந்திய விஞ்ஞானி ஹோமி.ஜே.பாபா ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். சடலம் பல வருடங்களுக்கு பிறகு கிடைத்தது. அமரரான வயது தோற்றம், இளமை. ஏனெனில், பனியில் உறைந்து விட்டது. நினைவுகள் உறைந்துவிட்டால், கால தேவன் என் செய்ய இயலும்? இன்று இருந்திருந்தால், அவள் வயது 83 இருக்கும். என் மனம் அவளை 14 வயது சிறுமியாகத்தான் காண்கிறது. உருவமே அப்படித்தான், கண் முன். இன்றைய தினம், ஆகஸ்ட் 4, 1944 அன்று அவளை அபகரித்து, கொடுங்கோல் அசுரன் எங்கோ கடத்திக்கொண்டு போனான். அநேகரின் ஜன்ம தினம் தெரியாவிடினும், மறைந்த தினம் தெரியும். ஆன் ஃபிராங்கின் பிறந்த தினம் தெரியும்; மறைந்த தினம் தெரியாது. ஆனால், உலகம் முழுதும் அவளை அறியும். இத்தனைக்கும் அவள் சாதனை ஒன்றும் செய்யவில்லை. அடைந்து கிடந்தாள், ஜூலை 6, 1942 லிருந்து ஆகஸ்ட் 4, 1944 வரை. குடும்பமே அஞ்ஞாத வாசத்தில், உயிருக்கு அஞ்சி. செய்த குற்றம், ஜெர்மனியில் யூதர் மதத்தில் பிறந்தது. நெதெர்லாந்துக்கு 1933 இல் ஓடிப் போயும், பயனில்லை. ஜெர்மனி அந்த நாட்டையே கபளீகரம் செய்து விட்டதே. ஒரே வழி, யூதரில்லாதவர்களின் உதவியில் ஒளிந்து வாழ்வது; அது தஞ்சம் கொடுத்தவர்களுக்கும் ஆபத்து. யாரோ துரோகம் செய்து விட, அவளும், மேலும் ஏழு பேர்களும் சிக்கினர், அன்று. ஹாலந்து, போலந்து, ஜெர்மனி என்று பல இடங்களில் உள்ள கொலைக்களங்களுக்கு அனுப்பபட்டனர். ஒருவர் மட்டும் உயிர் தப்பினார், அவள் தந்தை. ஆன்னும் அவளுடைய சகோதரி மர்கோட்டும் பெர்கன் -பெல்ஸன் கொலைக்களத்தில் மார்ச், 1945ல் மாண்டு போனார்கள்.
அவளுடைய அமரத்துவம், அவளது இலக்கிய நடையில். பிரமிக்கவைக்கும் படைப்பாற்றல். எழுதியது எல்லாம் உண்மை தான். ஆனால், இத்தனை பட்டவர்த்தனமாக! மட்டுறுத்தப்பட்டு தந்தையால் பதிப்பிக்கப்பட்ட அவளது டைரி (ஆம். இரண்டு வருடங்கள் அவள் எழுதிய டைரி, இன்று உலக பிரிசித்தம்.) லக்ஷக்கணக்கான வாசகர்களை இழுத்தது. மட்டுறுத்தப்படாத பதிப்பு, மேலும் பல லக்ஷக்கணக்கான வாசகர்களை கட்டிப்போட்டது. ஒரு சாதாரண குமரிப்பெண்ணின் டைரி அது. பாலியல் கவலைகள், சமய ஐயங்கள், குடும்ப உரசல்கள், தன் மேலேயே கோபம், இவை மட்டுமல்ல. தன்னிம்பிக்கை குறைவது, பொறுமையின்மை, ஆத்திரம், சலிப்பு. ஆங்காங்கே பொன்வாக்குக்கள்:
‘என்ன இருந்தாலும், எல்லாரும் நல்லவர்களே.’,
‘குழப்பம், இல்லாமை, சாவு ஆகியவற்றின் மீது கோட்டை கட்டுவதா?
‘உலகமே திக்குத் தெரியாத காடு ஆகிவிட்டதே.’
‘நம்மை குலைக்கப்போகும் இடி காதில் விழுகிறது.’
‘லக்ஷாதிலக்ஷம் பேர் படும் துயரத்தை உணர்கிறேன்.’
‘ஆண்டவா! கொடுமை ஒழியட்டும். சாந்தி நிலவட்டும்.’
‘என் லக்ஷியங்கள் தான் எனக்கு துணை.’
‘காலம் உதவும். நான் அவற்றை நிறைவேற்றுவேன்.’
இவை சில துளிகள். இவை ஒரு சிறுமியின் ஆர்வமா? கொள்கை பிரகடனமா? அல்லது, வழி ஒன்றும் புலப்படாமல், இரு வருடங்கள் ஒரு புத்தக அலமாரியின் பின் ஒளிந்து கிடந்த பெண்ணின் புலம்பலா? நீங்களே முழு டைரியையும் படித்து விடுங்கள். தப்புத்தவறி, உம்மிடம் அகந்தை ஒளிந்திருந்தால், ஓடி விடும். என்னால் இன்று மேலும் படிக்கமுடியாது. மன நீர் விழுகிறது. அது வெளி வராது. மனதுக்குள்ளேயே குமையும்.
இன்னம்பூரான்
04 08 2011
http://europeforvisitors.com/amsterdam/images/anne_frank_postage_stamp_from_1980_275_jaap2_is2974892.jpg


உசாத்துணை:
http://www.time.com/time/magazine/article/0,9171,991265-1,00.html