PDA

View Full Version : அன்றொருநாள்: ஆகஸ்ட் 03innamburan
03-08-2011, 05:26 AM
அன்றொருநாள்: ஆகஸ்ட் 03

நகரத்தார் சமூகம் திரை கடலோடியும் திரவியம் தேடியதால், எனக்கு கிடைத்தது, மலேயா புலி தபால் தலைகள்! தாத்தாவுக்கும், பெரியண்ணாவுக்கும், தெற்காசிய நாடுகளிலிருந்து வருமானவரி சம்பந்தமான மடல்கள் வந்த வண்ணம். முதல் முந்திரிக்கொட்டை என்ற செல்லமான உயர்பதவியிருந்ததால், நான் தபால் தலைகளை கொய்த பிறகு தான், மடல்கள் அவர்களை சேரும். கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு பிறகு, அவற்றை என் பேத்திக்குக் கொடுத்துவிட்டேன். முந்திரிக்கொட்டையாக இருந்தாலும், சமத்து இல்லை? அசை முடிந்தது!
மொகலாய சாம்ராஜ்யம் பெரிதாக இருந்தாலும், பாரதவர்ஷம் எனப்படும் இந்தியாவின் ஒருமைப்பாடு புலப்படவில்லை. அந்த வம்சம் க்ஷீணம் அடைந்தபின், உடைந்த கண்ணாடியை ஒட்டி வைத்தாற்போல் இருந்தோம், ஆங்கிலேயேனின் லகானில் மாட்டிக்கொள்ளும் வரை. நாட்டு பற்று, விடுதலை, தேசாபிமானம் (நேஷனாலிடி), மாகாணங்கள் முதலியவை 1947க்கு முன்னால். மொழிவாரி மாநிலங்கள், தேசம் ஒன்று, அபிமானம் பற்பல. இத்யாதி, 1947க்கு பிறகே. நமக்கு அருகிலேயே, அதற்கு பின் பத்து வருடங்களில், தலை தூக்கிய தேசாபிமானம் ஒன்றை பார்ப்போம். படிப்பினைகள் பல இருப்பதும் வெள்ளிடை மலை.
இரண்டாவது உலக மகாயுத்த இறுதி காலத்தில் ஜப்பான் விலகிய போது, மலேயாவின் செல்வநிலை மோசமாகி விட்டிருந்தது. விலைவாசி மானாவாரியாக ஏறிக்கிடந்தது. கூலி மிகக்குறைவு. வேலையில்லாத்திண்டாட்டம், அமைதியின்மை, வேலை நிறுத்தம். தகரத்தின் தாதுப்பொருளும், ரப்பரும், அரசாளும் ஆங்கிலேயருக்கு வேண்டும் என்பதால், கடுமையான, கொடுமையான தண்டனைகள், கைதுகள், நாடு கடத்தல். இந்தியா விடுதலை பெற்ற மறுநாள், ஒரு தீப்பொறி பறந்தது, மலேயாவில்; மூன்று வெள்ளைய தோட்ட மானேஜர்கள் கொலையுண்டனர். கெடுபிடி, அவசரசட்டம், போலீஸ் ஜபர்தஸ்து. வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போல, ஆங்கிலேயனால் ஜப்பானை எதிர்க்க நிறுவிய மலேயர்களின் கெரில்லாப்படை அவர்களையே தாக்கியது. நான் ஆதாரத்துடன் சொல்லும் வரலாற்றுண்மையை தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். பிரிட்டீஷ் ராணுவத்தின் சாமர்த்தியம் அபாரம். பிரிக்ஸ் திட்டமும், அதை தடபுடலாக, ஸர் கெரால்ட் டெம்ப்ளர் நிறைவேற்றியதும், கெரில்லா போருக்கு தன்னை சுதாரித்துக்கொண்டதும், மங்கலாக என் நினைவில் உள்ளது. ஒரு ஐந்து அம்ச திட்டத்தை வைத்து (மக்களுக்கு ரக்ஷணை, அரசியல் அமைப்புகள், பஞ்சாயத்து, வைரியை வலுவிழக்கச்செய்வது & உளவு) ராஜதந்திரம் செய்தனர். இதெல்லாம் இன்றைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்பு குறைவு.
ஜோஹூர், சரவாக், கேதா, மலேயா என்றெல்லாம் ஒன்பது குறுநிலமன்னர்கள். ஆங்கிலேய சாம்ராஜ்யக்குடை, 1874லிலிருந்து. 1876ல் குறுநிலங்களின் கூட்டமைப்பு. அதுவே பிற்கால மலேஷியாவின் தேசாபிமானத்திற்கு வித்திட்டது என்றால் மிகையாகாது. 1947ல் ஒரே கலவரமாகக் கிடந்த மலேயா அமைப்புகளில், பத்து வருடங்களுக்குள் தேசாபிமான உலா தொடங்கியதின் பின்னணி, ஒன்பது குறுநிலமன்னர்கள் எல்லாம் ஒன்று கூடி மலேயாவின் தலைவராக, அந்த நாட்டின் நேருவாகிய துங்கு அப்துர் ரஹ்மான் அவர்களை தேர்ந்தெடுத்தது: அன்றைய தேதி, ஆகஸ்ட் 3, 1957. இவர் கேதா சுல்தானின் சகோதரர். செல்வம், ஆஸ்தி கொடுப்பினைகள். இங்கிலாந்தில் உயர்கல்வி. 1949ல் பாரிஸ்டர் படிப்புக்கு பிறகு திரும்பிய போது மக்களின் விடுதலை தாகம் கண்கூடாகவே அவருக்கு தெரிந்தது. கம்யூனிஸ்ட் தாக்கமும் மிகை. மலேயர், சைனாக்காரர்கள், இந்தியர்கள் எல்லாரும் ஒரு சமூகமாக வாழவேண்டியதின் சிறப்பும், அருமையும் புலனாயிற்று. தலைவர்கள் என்றால், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவேண்டும். அவ்வாறே இயங்கினார், துங்கு: அலையன்ஸ் கட்சி என்ற சர்வதர்மகட்சியை 1952ல் தொடங்கினார். 1955 பொது தேர்தலில், அமோக வெற்றி. முதல்வரானார். நாட்டில் அமலிலிருந்த அவசரச்சட்டத்தை நீக்கி, கம்யூனிஸ்டுகளுக்கு சமாதானக்கொடியை காண்பித்தார், கறார் அணுகுமுறையை விடாமல். அதற்கு முன்னதாகவே ஆகஸ்ட் 31, 1957 அன்று விடுதலை என்பதை, பிரிட்டீஷ் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி, நிர்ணயம் செய்து கொண்டார். அவரை மக்கள் ‘பாபா கெமெர்டெக்கான்’ என்ற விருது அளித்துக் கொண்டாடினர். ( அவருக்கும் தபால தலை காதல் உண்டு; மலேசியா அதை பெருமை படுத்திய விதத்தையும் சித்தரித்திருக்கிறேன்.)
துங்கு அவர்களின் சீர்திருத்தங்களால், ஆளுமை இந்த ஒன்பது குறுநிலமன்னர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது என்றும், மற்ற இனத்தோருக்கு ஏமாற்றம் என்று பீ.பீ.ஸீ சொல்கிறது. சிங்கப்பூரும், சபாஹ்வும், சரவாக்கும் இணைய, ஒரு பெரிய மலேசிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இவருக்கும், சிங்கப்பூரின் முதல்வர் லீகுவான் யீக்கும் கருத்து வேறுபாடுகள் தலை தூக்க, சிங்கப்பூர் 1965ல் விலகியது. 1969ல் குலாலம்பூரில் கலவரம். 2000 சைனாக்காரர்கள் உயிரிழந்தனர். மறுபடியும் அவசர நிலை சட்டம். துங்கு அவர்கள் அரசியலிலிருந்து விலகினார். பிற்காலம், 1980 களில், மஹதீர் பின் முகம்மது அவர்களின் ஆட்சியை விமர்சனம் செய்தார். கருத்து வேற்றுமைகள் அதிகரித்தாலும், 2003ல் அவரை கெளரவித்து, அவரது நூற்றாண்டு நினைவார்த்தமாக வெளியிடப்பட்ட தபால் தலையை காண்க.
http://farm4.static.flickr.com/3085/2625136964_91483c171a.jpg
இன்னம்பூரான்
03 08 2011
உசாத்துணை:
http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/3/newsid_2943000/2943390.stm
http://www.au.af.mil/au/awc/awcgate/milreview/cassidy3.pdf
http://marshallbaldwin.com/issues/SW_Asia/British_Counterinsurgency_Ops_Malaya_1948-1960.pdf

aren
03-08-2011, 05:48 AM
எனக்கும் என்னுடைய சிறிய வயதில் இந்த தபால் தலைகளை சேகரிக்கும் பழக்கும் என் தந்தைமூலம் வந்தது. முந்திய மலாயாவின் பல தபால் தலைகள் என் சிறுவயது நண்பன் மூலம் எனக்குக் கிடைத்தது. அவனிடம் இருந்த டபுல்ஸ்களை என்னிடம் இருந்த மற்ற டபுல்ஸ்களைக் கொடுத்து வாங்கிக்கொண்டேன்.

இந்த தபால்தலை சேகரிப்பால் பல நாடுகளைப் பற்றி என் சிறு வயதில் அறிந்துகொண்டேன்.

உங்கள் பதிவு என் பழைய நினைவுகளை மீண்டும் கொண்டுவந்துவிட்டது.

aren
03-08-2011, 05:49 AM
இரண்டாவது பதிவு. மன்னிக்கவும்.