PDA

View Full Version : மழலை இன்பம்



M.Jagadeesan
01-08-2011, 01:19 PM
தமிழாசிரியர் வகுப்பில் நுழைந்தவுடன் அனைத்து மாணவர்களும் எழுந்து நின்று, " வணக்கம் ஐயா! " என்றனர்.

" வணக்கம் , அமருங்கள்! இன்று திருக்குறளில் , " மக்கட்பேறு " என்ற அதிகாரத்தைப் பார்க்கலாம். "

அப்பொழுது ஒரு மாணவன் எழுந்து," ஐயா! அதிகாரத்தின் பெயர் ' புதல்வரைப் பெறுதல் ' என்று உள்ளது. தாங்கள் ' மக்கட்பேறு ' என்று மாற்றி சொல்கிறீர்களே? " என்று கேட்டான்.

" தம்பி! தற்போதுள்ள குறள் வைப்புமுறை பரிமேலழகர் செய்தது. முற்காலத்தில் திருக்குறளுக்குப் பத்துப்பேர் உரை எழுதினார்கள். அந்தப் பத்துப் பேரில் பரிமேலழகரும் ஒருவர். அவருடைய உரை மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அவர் செய்த மாற்றம் இது. ' மக்கட்பேறு ' என்ற அதிகாரத் தலைப்பை ' புதல்வரைப் பெறுதல் ' என்று மாற்றி அமைத்தார்."

" ஐயா! அவர் அவ்வாறு செய்யக் காரணம் என்ன?"

" ஆண் பிறப்பு உயர்வு, பெண் பிறப்பு தாழ்வு என்ற பாகுபாடு திருவள்ளுவரிடம் இல்லை. ' பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ' என்பதுதான் வள்ளுவருடைய கொள்கை. ஆனால் பரிமேலழகர் , பிறப்பால் ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்று கருதியதே இம்மாற்றம் செய்ததற்குக் காரணம். சரி, நாம் பாடத்திற்கு வருவோம்.
இன்று நாம் பார்க்க இருக்கும் குறள்,

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

தம்முடைய குழந்தைகளின் மழலை சொற்களைக் கேளாதவர்கள் தாம் குழல் இனிது, யாழ் இனிது என்று சொல்வார்கள். 'குழல்' என்பது துளையுள்ள ஓர் இசைக்கருவி, ' யாழ் ' என்பது கம்பிகளால் உருவாக்கப்பட்ட ஓர் இசைக்கருவி. புல்லாங்குழல் ஒரு துளைக்கருவி; வீணை என்பது கம்பிகளால் உருவாக்கப்பட்ட இசைக்கருவி. இவைகள் எழுப்புகின்ற இனிய இசையைக் காட்டிலும் குழந்தைகளின் மழலை கேட்பது மிகுந்த இன்பம் பயக்கும் என்பதுதான் இக்குறளின் பொருள்."

" ஐயா! ' மக்கள் ' என்றால் குழந்தைகளா?"

" ஆம், தற்போது நாட்டில் வாழும் மனிதர்களை ' மக்கள் ' என்ற சொல்லால் குறிக்கிறோம். முற்காலத்தில் ' மக்கள் ' என்ற சொல் 'குழந்தைகள் ' என்ற பொருளைக் குறிக்கும். இப்போது கூட திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த சொல் ' குழந்தைகள் ' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது."

" ஐயா! எத்தனையோ இசைக்கருவிகள் இருக்க வள்ளுவர் குழலையும், யாழையும் என் குறிப்பிட வேண்டும்?"

" தம்பி! ' குழல் ' கண்ணன் கையில் இருப்பது; ' யாழ் ' சரஸ்வதியின் கையில் இருப்பது. எனவே ஆண் குழந்தை ஒன்று; பெண் குழந்தை ஒன்று என இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதே இனிய இல்லறத்திற்கு வழிகோலும் என்று வள்ளுவர் கருதி இருக்கலாமல்லவா? இப்போது அரசு சொல்லுகின்ற ' நாம் இருவர், நமக்கிருவர் ' என்ற குடும்ப நெறியை , வள்ளுவர் அன்றே கூறியிருப்பது வியப்பைத் தருகிறதல்லவா?"

" ஐயா! வள்ளுவர் குழந்தைகளைப் பெற்றவரா?"

" நிச்சயமாக! இந்த அதிகாரத்தின் முதல் குறளிலேயே அது தெரிகிறது.

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

திருவள்ளுவர் தம் அனுபவத்தின் வாயிலாகக் கண்ட உண்மைகளைக் கூறுமிடத்து எல்லாம் ' யாம் ' என்ற சொல்லைப் பயன்படுத்துவார். இன்னும் இரண்டு இடங்களில் ' யாம் ' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம்கண்டது இல்.

எனவே திருவள்ளுவர் இல்லறவாழ்வு நடத்தியவர், குழந்தைகளைப் பெற்றவர் என்பது உண்மை. அயலார் வீட்டுக் குழந்தைகளின் மழலையைக் கேட்பதைவிட, தான் பெற்ற குழந்தைகளின் மழலையைக் கேட்பதில்தான் இன்பம் அதிகம் என்ற கருத்துப்பட ' தம் மக்கள் ' என்ற சொல்லைப் பெய்தார்."

" ஐயா! குழந்தைகள் மழலை பேசும்போது சரியாகப் புரிவதில்லையே அது ஏன்?"

" தம்பி! சரியாகப் புரியாமல் இருந்தால்தான் அதற்கு ' மழலை ' என்று பெயர். சரியாகப் புரிந்தால் அதற்குப் பெயர் ' பேச்சு ' என்பதாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு குமுதம் பத்திக்கையில் படித்த நகைச்சுவைத் துணுக்கு இந்த சமயத்தில் நினைவுக்கு வருகிறது.

இரண்டு வயது குழந்தையைத் தூக்கிக்கொண்டு, அதன் தந்தை மருத்துவரிடம் வருகிறார். அவர் குழந்தைநல மருத்துவர். தந்தை மருத்துவரைப் பார்த்து,

" டாக்டர்! என் குழந்தைக்கு சரியாகப் பேச்சு வரவில்லை."

" குழந்தைக்கு எத்தனை வயது?"

" இரண்டு வயது டாக்டர்."

" இரண்டு வயதுதானே ஆகிறது? போகப்போக குழந்தை சரியாகப் பேசும் கவலைப்பட வேண்டாம்."

" அதில்லை டாக்டர்! குழந்தைக்கு " ப் " உச்சரிப்பு சரியாக வரவில்லை!; குழந்தை " ப் " க்குப் பதிலாக ' ற் ' உச்சரிக்கிறது.

" அதனாலென்ன பிரச்சினை? "

" அதுதான் பிரச்சினை டாக்டர்! குழந்தை என்னை ' அப்பா ' என்று கூப்பிடுவதற்குப் பதிலாக ' அற்பா!' என்று கூப்பிடுகிறது.

டாக்டர் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு ' இதற்கெல்லாம் மருந்து கிடையாது; காலப் போக்கில் சரியாகிவிடும். போய் வாருங்கள்." என்று சொன்னார்.

இதைக்கேட்ட மாணவர்கள் அனைவரும் 'கொல் ' என்று சிரித்தனர்.

அக்னி
01-08-2011, 02:42 PM
அந்த வகுப்பறையில் நானும் ஒரு மாணவனானேன்.

மிக மிக சுவைப்பட இருந்தது இப்பதிவு. வாசிக்கையில் ஒரு பரவச உணர்வு பரவியதை உணர முடிந்தது.

பாராட்டு மட்டுமல்ல, நன்றியும் கூட ஜெகதீஸன் ஐயாவுக்கு...

இதுபோலவே சுவைப்படத் திருக்குறளைத் தொடர்ந்தால், தொடர்வேன்...

M.Jagadeesan
01-08-2011, 02:53 PM
பாராட்டுக்கு நன்றி அக்னி!

aren
01-08-2011, 03:52 PM
திருக்குறளை வெறுமனே பாஸ் செய்ய மட்டுமே படித்திருந்த எங்களுக்கெல்லாம் உங்கள் எழுத்துக்கள் ஒரு வரப்பிரசாதம்.

இதுவரை நான் ஒன்றுமே படிக்கவில்லை என்று உங்கள் பதிவுகளின் மூலம் தெரிகிறது. இன்னும் நிறைய எழுதுங்கள்.

M.Jagadeesan
01-08-2011, 04:17 PM
பாராட்டுக்கு நன்றி ஆரென்!

நாஞ்சில் த.க.ஜெய்
01-08-2011, 05:49 PM
மழலைகள் பேசும் வார்த்தைகளை கேட்கும் சுகமே தனிதான் அதனை அனுபவபூர்வமாக கண்டுள்ளேன்..சித்தப்பா வா என்பதற்கு ..ப்பா வா ...ஜெய் வா என்று சிரித்து கொண்டே குழந்தைகள் கூப்பிடும் போது கோபம் வருவதில்லை என்ன என்று ஆர்வமே வருகிறது அவ்வாறு கூப்பிடுவதை கேட்கும் போது பின்னொரு முறை கூப்பிட சொல்லி கேட்பது ஆனந்தமாக இருக்கிறது...இதனை இன்று குறள் மூலம் விளக்கம் தந்த குறளைய்யா ஜெகதீசன் அவர்களின் பணிக்கு என் நன்றிகள் ..

innamburan
01-08-2011, 08:03 PM
எனது பாராட்டுக்கள்.

innamburan
01-08-2011, 08:07 PM
ஆகஸ்ட் 2, 1907 சாரனீய இயக்கம் தொடங்கிய நாள்.

M.Jagadeesan
02-08-2011, 12:32 AM
ஜெய், இன்னம்பூரான் ஆகியோரின் பாராட்டுக்களுக்கு நன்றி!

கீதம்
03-08-2011, 10:27 AM
அழகான விளக்கம். குழந்தைகள் பற்றிப் பேசினாலும் இன்பம், அவர்கள் பேசக் கேட்பதும் இன்பம். மொத்தத்தில் இந்தப் பதிவு மிகவும் ரசிக்கவைத்தது. நன்றி ஐயா.

Nivas.T
03-08-2011, 11:49 AM
சுவையான பதிவு

அழகான விளக்கம்

நன்றி ஐயா

M.Jagadeesan
04-08-2011, 10:41 AM
கீதம், நிவாஸ் ஆகியோரின் பாராட்டுகளுக்கு நன்றி!

sureshteen
11-12-2011, 12:51 AM
சுவையான பதிவு

அழகான விளக்கம்

M.Jagadeesan
11-12-2011, 02:41 AM
நண்பர் சுரேஷ்டீன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.