PDA

View Full Version : தம்பி அவன் தங்க கம்பி- இறுதி பாகம்



மதுரை மைந்தன்
01-08-2011, 10:44 AM
அன்றைய தினமலர் செய்திகளில் மூழ்கியுருந்த கதிரேசனை அலைபேசியின் மணிச் சத்தம் கவனத்தை திருப்பியது.

" யாரு கதிரேசன் தான் பேசறீங்களா, நான் பெருமாள் ஆரப்பளையத்திலிருந்து பேசறேன்". என்ற குரல் கேட்டதும் " சொல்லுங்க பெருமாள் எப்படி இருக்கீங்க" என்றார் கதிரேசன். அவரும் பெருமாளும் மதுரை ஆரப்பளையத்தில் பக்கத்து பக்கத்து வீடுகளில் வெகு காலம் வசித்து வந்தனர். சில வருடங்களுக்கு முன் தான் கதிரேசன் அண்ணா நகரில் சொந்த வீடு கட்டிக் கொண்டு இடம் மாறினார்.

" இங்கே உங்களை தேடிக்கிட்டு உங்க தம்பின்னு சொல்லிக்கிட்டு குமரேசன் என்பவரும் அவருடைய மனைவியும் வந்திருக்காங்க. அவங்களுக்கு நீங்க இடம் மாறியது தெரியாது போல இருக்கு. ஆமா நீங்க உங்களுக்கு ஒரு தம்பி இருக்கிறதா சொல்லவே இல்லயே".

பெருமாள் குமரேசன் அங்கு வந்திருப்பதாக கூறியதை கேட்ட கதிரேசனுக்கு கை கால்கள் ஆனந்த்ததால் நடுங்க ஆரம்பித்தன. சிறு வயதில் திருவிழாவில் காணாமல் போன தம்பி மீண்டும் கிடைத்தது கேட்டு அவர் கண்களில் நீர் சுரந்தது. " அவங்களை இங்கே என்னொட விலாசத்தை கொடுத்து அனுப்புங்க. இத்தனை நல்ல சமாச்சாரம் சொன்ன உங்களுக்கு ரொம்ப நன்றி" என்று பெருமாளிடம் கூறி அலை பேசியை மூடிய கதிரேசன் முன்னால் இடுப்பில் கைவைத்து நின்றாள் அவருடைய சகதர்மிணி தெய்வனாயகி.

" யாரு போன்ல அப்படி என்ன சொன்னாங்க நீங்க இப்படி ஆடி போயிட்டீங்க"

" நமக்கு ஒரு நல்ல செய்தி கிடைச்சிருக்கு. சின்ன வயசில திருவிழாவில காணாமல் போன என்னோட தம்பி குமரேசன் திரும்ப வந்திருக்கனாம். இன்னும் கொஞ்ச நேரத்தில நம்ம வீட்டுக்கு வரப்போரான்".

" ஆமாம் யாரோ சொன்னாங்களாம். நீங்க உடனே நம்பிட்டீங்க. அது என்ன இவ்வளவு நாள் கழித்து உஙக தம்பிக்கு இப்ப உங்க ஞாபகம் வந்திருக்கு. என்னை கேட்டா ஊர்ல உள்ள நம்ம நிலத்துக்கு ஐடி காரங்க நல்ல விலைக்கு கேக்கராங்கனு கேள்விப்பட்டு யாரோ உங்களை ஏமாத்த வழி பண்றாங்க".

" உன்னோட குறுக்கு புத்தி எப்படியெல்லாம் வேலை பண்றது?. சின்ன வயசில காணாம போன என்னொட தம்பி உயிரோடு வறான்னு நான் எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கேன் தெரியுமா?"

" நான் என்ன சொன்னாலும் உங்க மூளைல ஏற்ற மாதிரி தெரியலை. நமக்கு பையன் படிப்பு, மகள் கல்யாணம்னு செலவுகள் இருப்பதை மறந்துடாதீங்க. நீங்க ஆச்சு உங்க தம்பி ஆச்சு". இவ்வாறு கூறிவிட்டு சமையல் அறைக்குள் சென்றாள் தெவனாயகி.

இருபது வருடங்களுக்கும் மேலிருக்கும். கதிரேசனின் பெற்றோர் குடும்பத்துடன் மதுரை புட்டு தோப்பு மைதானத்தில் வருடத்திற்கு ஒரு முறை நடை பெறும் புட்டு திருவிழாவுக்கு சென்றார்கள். விழாவைக் காண பெருந்திரளாக மக்கள் கூடுவதுண்டு. அன்றும் கூட்டம் நெரிக்கி தள்ளியது. எள் போட்டால் எள் கீழே எண்ணையாக விழக்கூடும். மைதானத்தின் நடுவில் ஒலி பெருக்கி கட்டி அதில் பக்தி பாடல்கள் வெளி வந்தன. கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு அவர்கள் முன்னேறினார்கள். சின்ன தம்பி குமரேசனின் கைகளை இறுக்கி பற்றிக் கொண்டு கதிரேசன் சென்றான்.

விழாவுக்கு வரும் சிறுவர்களை ஈர்க்கும் பலூன், பஞ்சு மிட்டாய், ஜவ்வு மிட்டாய் கடைகளை கண்டதும் உற்சாகம் அடைந்து கதிரேசன் கடைகளை நோக்கி திரும்பினான். கூட்ட நெரிசலில் குமரேசனின் கைப்பிடி நழுவியது கூட அவனுக்கு உறைக்கவில்லை. கடைகளை நெருங்கியதும் கையில் இருந்த காசைக் கொண்டு பலூனை வாங்கி அதை குமரேசனிடம் தர திரும்பியவனுக்கு அங்கு அவன் இல்லாதது பதட்டத்தை கொடுத்தது. கை கால்கள் நடுங்க குமரேசா என்று கத்தினான். சிறுவர்கள் தங்கள் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து முன்னேறிக் கொண்டிருந்த அவனுடைய பெற்றோர்களுக்கு அவன் கத்தியது கேட்டு பதை பதைத்து அவனை நோக்கி முன்னேறினார்கள். கூட்டமும் அவர்களின் பதட்டத்தைக் கண்டு வழி விட்டார்கள்.

கதிரேசனை அடைந்த அவன் பெற்றோர்கள் அவன் அழுது கொண்டிருப்பதை பார்த்து " குமரேசன் எங்கே தம்பி" என்று கேட்டார்கள். கதிரேசனுக்கு அவர்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. கூட்டத்தை விலக்கி அங்கு வந்த போலீசார்கள் " என்ன சார் பையனை காணோமா? அவன் எப்படி இருப்பான்னு சொல்லுங்க. நாங்க தேடிக் கண்டு பிடிச்சு தறோம்" என்றார்கள். ஒரு போலீஸ்காரர் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சின்ன நோட் குக்கை எடுத்து " சொல்லுங்க, பையன் பேர் என்ன? எந்த கிலாஸ்ல படிக்கிறான்" என்று கேள்விகளை அடுக்கினார். கதிரேசனின் தாயார் " குமரேசா எங்கே இருக்கே. கடவுள் தான் உன்னை எங்க கிட்ட சேக்கணும்" என்று அழலானார். அவரை சமாதான படுத்தினார் கதிரேசனின் தந்தை. " சார் பையனோட விவரங்களை சொல்லுங்க" என்ற போலிசாரிடம் அவர் " பையன் மூளை சரியில்லாதவன். அவனுக்கு தான் எங்க இருக்கேன்னு நினைவு கிடையாது" என்று சோகமாக கூறினார்.

தொடரும்..

aren
01-08-2011, 10:55 AM
நல்ல ஆரம்பம். இவ்வளவு நாள் வந்த தம்பி மூலம் நல்லது நடக்குமா அல்லது கெடுதல் நடக்குமா என்று தெரியவில்லை.

அடுத்த பாகத்தைப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன். தொடருங்கள்.

அக்னி
01-08-2011, 02:49 PM
தொலைந்த தம்பியை இலகுவிற் கண்டுபிடிக்க முடியாததன் காரணம்,
குமரேசனுக்கு மூளை வளர்ச்சிக் குறைவு என்பதன் மூலம் வலுப்பெறுகின்றது.

எனவே, அண்ணனைத் தேடிய அவரின் போராட்டம் எப்படியிருந்தது என அறியும் ஆவல் எழுகின்றது.
கூடவே, சொத்துக்கான சதியோ என்ற கதிரேசன் மனைவியின் சந்தேகம், எம்மிடமும் எழுகின்றது.

தலைப்பு, அண்ணன் தம்பிக்கிடையான பாசப்போராட்டமாக இக்கதை அமையும் எனக் குறிப்புணர்த்துகின்றது.

பார்க்கலாம் அடுத்தடுத்த அத்தியாயங்களில்...

பாராட்டுக்கள்...

நாஞ்சில் த.க.ஜெய்
01-08-2011, 06:01 PM
சிறப்பான துவக்கம் ...தொலைபேசி வழி கேட்டதும் தொலைந்து போன தம்பியினை நேரில் கண்டது போன்ற கதிரேசனின் ஆனந்தம் ..இதில் தேவ நாயகி கூறுவது போல் ஏமாற்றும் உத்தியினை கொண்டு தான் வந்திருப்பார் என்றே தோன்றுகிறது ..மூளைவளர்ச்சி குன்றிய சிறுவன் நினைவில் இது நமது ஊர் இவர்தான் தந்தை இவர்தான் அண்ணன் என்று நினைவிலிருக்க சாத்தியம் இல்லை ..அப்படியிருக்க தற்போது தாம் தனது தம்பி என்று கூறி கொண்டு வரும் நபரை கண்டு எச்சரிக்கையாக இருப்பது நன்று...தொடருங்கள் தோழர் ...பின் தொடர்கிறேன் நானும் ..

innamburan
01-08-2011, 07:55 PM
திரு. மதுரைமைந்தனின் படைப்பாற்றலை பாராட்டுகிறேன்.

மதுரை மைந்தன்
02-08-2011, 11:54 AM
கதையை பாராட்டி பின்னுட்டங்கள் இட்ட நண்பர்கள் aren, அக்னி, நாஞ்சில் த.க.ஜெய்,innamburan அனைவருக்கும் என் நன்றிகள்.

மதுரை மைந்தன்
02-08-2011, 11:57 AM
வெகு நேரம் மைதானத்தில் காத்திருந்தும் அவர்களுக்கு குமரேசன் கிடைக்கவில்லை. மகனை பறி கொடுத்த துக்கத்தில் கதிரேசனின் தாயார் மயக்கமுற்றார். யாரோ கொன்டு வந்த சோடாவை அவர் முகத்தில் தெளித்து அவர் நினைவுக்கு வந்ததும் அவரை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு கதிரேசனின் கைகளை இறுக்க பற்றிக் கொண்டு அவன் தந்தை வீட்டை அடைந்தார்.

அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் உறவினர்களும் ஒவ்வொருவராக வந்து ஆறுதல் கூறி சென்றார்கள். ஆனால் வீடோ மயான அமைதியில் இருந்தது. கதிரேசனின் தந்தை ஒரு இயந்திரம் போல வேலைக்கு சென்று வந்தார். அவன் தாயார் சமையல் செய்யும் நேரம் போக மீதி நேரம் கடவுள் படத்துக்கு முன் அமர்ந்து தியானம் செய்யலானார். கதிரேசனுக்கு தம்பி மீது அளவு கடந்த பாசம் உண்டு. அவன் எங்கிருக்கிறானோ என்ன செய்துகொண்டிருக்கிறானோ என்று கவலைப் படுவார். மகனை பிரிந்த துக்கத்தில் அவனுடைய தாய் தந்தையர் ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேர்ந்தனர்.

கதிரேசனின் தாய் மாமன் அவரை வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்து வைத்தார். கதிரேசனின் குடும்பம் பெருகியதும் அவர் கிராமத்துக்கு சென்று நில புலன்களை கவனிக்கலானார்.குமரேசனின் நினைவு வரும்போதெல்லாம் பெரும் சோகத்தில் ஆழ்ந்துவிடுவார் கதிரேசன். நான் கடவுள் படத்தை பார்த்துவிட்டு அதில் வர மாதிரி குமரேசனின் கண்களை பிடுங்கி ஏதாவது ஒரு கோவில் வாசலில் பிச்சை எடுக்க வைத்துருப்பார்களோ அவனை கடத்தி சென்ற பாவிகள் என்றெல்லாம் எண்ணி தூக்கம் வராமல் தவித்தார்.

ஆரப்பாளையம் நண்பர் பெருமாள் அலைபேசியில் குமரேசன் அவரை தேடி வந்திருப்பதை கேட்டு மெய் மறந்த கதிரேசனுக்கு குமரேசனின் நினைவுகள் அலை அலையாய் எழுந்தன. சிறு பையன்னாக இருந்த அவன் முகம் களையானது. நல்ல புஷ்டியாக எப்போதும் சிரித்த முகமாக இருப்பான். அவனுக்கு மூன்று வயதாகும் வரை அவனிடம் எந்த குறையையும் அவர்கள் காணவில்லை. ஆனால் அவனால் சரியாக பேச முடியாத்து கண்டு வருந்தினார்கள். அவனுக்கு தன் சுய நினைவில்லாமல் இருந்த இடத்திலேயே உடல் கழிவுகளை வெளியேற்றுவது கண்டு கவலைப் பட்டார்கள். தெரிந்த மருத்துவரிடம் அவனைக் காட்டிய போது அவர் அவனுக்கு மூளை வளர்ச்சி தாமதமாக இருக்கிறது என்றும் அவனை அவர்கள் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ஒரு முறை திடீரென்று அவனை வீட்டில் காணவில்லை என்றதும் அவர்கள் பதறிப் போய் தேடினார்கள். சிறிது நேரம் கழித்து அவர்களுக்கு தெரிந்தவர் ஒருவர் அவனை அழைத்துக் கொண்டு வந்து " பக்கத்து தெரு வழியா நான் போய்கிட்டு இருந்தப்போ உங்க பையன் அவன் பாட்டுக்கு சிரிச்சுகிட்டு நின்னிகிட்டு இருந்தான். அவனை சுத்தி சின்ன பசங்க அவனை கிறுக்கு பைத்தியம்னு கேலி செஞ்சுக்கிட்டிருந்தாங்க. நான் வங்களை அதட்டி போக சொல்லிட்டு பையனை கூட்டி வந்தேன். நீங்க என்ன இவ்வளவு அஜாக்கிரதையா இருக்கீங்க" என்று சொல்லி அவனை ஒப்படைத்து சென்றார். அன்றிலிருந்து அவனை எப்போதும் கண்கானிப்பது அவர்களுக்கு வேலையாகி விட்டது. இரவில் படுக்கும் போது கதிரேசனின் பெற்றோர்கள் குமரேசனை தங்கள் நடுவில் படுக்க வைத்து அவனைக் கட்டிக் கொண்டு தூங்குவார்கள்.

தன் நினைவுகளிலிருந்து மீண்ட கதிரேசன் குமரேசன் ஏன் இன்னும் வரவில்லை என்று வாசலுக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு கண்களில் கூலிங் க்ளாஸ் அணிந்து ஷர்ட் பாண்ட் அணிந்து ஒரு இளைஞன் பக்கத்தில் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து " இது கதிரேசன் என்பவரின் வீடு தானே?" என்று விசாரித்தான்.
" தம்பி, குமரேசா எப்படிப்பா இருக்கே நான் தான் கதிரேசன்" என்று கை கால்கள் ஆனந்தத்தால் நடுங்க " வாங்க வாங்க" என்று அவர்களை உள்ளே அழைத்தார்.

உள்ளே நுழைந்த குமரேசனும் அவனுடைய மனைவியும் அமர்ந்த பிறகு மின் விசிறியை சுழல விட்டார். சமையல் அறையிலிருந்து வெளியே வந்த தெய்வனாயகி" வாங்க" என்று ஒப்புதலுக்கு கூறிவிட்டு " இதோ பாருங்க எனக்கு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாத்தான் பேசத்தெரியும். ஊர்ல உள்ள நிலத்தை வித்து வற பணத்தில எங்க பையன் படிப்பு, பொண்ணு கல்யாணம் எல்லாம் பண்ணனும். அதனாலெ நீங்க உங்க பங்கை கேக்க கூடாது". என்றாள்.

மனைவி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் கதிரேசன் உறைந்திருந்த போது, குமரேசன் சிரித்துக் கொண்டே " அண்ணி எனக்கு உங்களையெல்லாம் பார்க்கணும்னு ஆசையா இருந்தது. அதான் வந்தோம். எனக்கு சொத்தில பங்கு எதுவும் வேண்டாம்." என்றான்.

அவன் அப்படி சொல்லி முடிக்கவும் " இதுக்கு தான் உன்னை குணப்படுத்தி வளர்த்து ஆளாக்கி படிக்க வைச்சு கல்யாணம் காட்சி எல்லாம் பண்ணினோமா?" என்று அவனிடம் கேட்டுக்கொண்டு ரெளத்திரமாக உள்ளே நுழைந்தாள் கதிரேசனின் அத்தை தாயம்மாள்.

தொடரும்..

sarcharan
02-08-2011, 12:37 PM
பலே! பழைய படம் பாத்தா ஒரு எஃபெக்ட். தொடருங்கள்!

சிவா.ஜி
02-08-2011, 01:08 PM
ஆஹா...அதற்குள் அடுத்த பாகம்...அந்த பாகத்திலேயே இரண்டாவது வில்லியின் அறிமுகம், சொந்த அத்தையே இத்தனைநாள் குமரேசனை ஏன் மறைத்து வைத்திருந்தார் என்ற சஸ்பென்ஸ்....எல்லாமே வந்துவிட்டது.

சுவாரசியமாகப் போகும் கதையின் அடுத்த அத்தியாயத்தைக் காணும் ஆவல் உண்டாகிறது. வாழ்த்துக்கள் நண்பரே.

நாஞ்சில் த.க.ஜெய்
02-08-2011, 05:43 PM
ஆஹா இது நல்லாஇருக்கே ? இத்தனை வருஷம் மறைத்து வைத்து இப்போ வந்து திடுப்புன்னு கேட்டா எப்படி? இவன்தான் என் தம்பிங்குரதுக்கு என்ன ஆதாரம் ..ஒருவன் தொலைந்து போய் புகார் கொடுக்கப்பட்டு ஏழு வருஷத்துக் குள்ளாக வரவில்லை என்றால் அவன் இறந்ததாக அறிவிக்கபடுவான் ..இது கூட தெரியாமல் எதோ பழையபடம் பார்த்துட்டு வந்து சத்தம் போட்ட எப்படி ன்னு ?கேக்க மாட்டோமா..

aren
03-08-2011, 02:14 AM
அத்தை தாயம்மாளுக்கு குமரேசனைப் பற்றிய தகவல் தெரியுமா? ஏன் இதுவரை சொல்லவில்லை.

புரிய கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.

கீதம்
03-08-2011, 10:15 AM
தங்கள் முந்தைய தொடர்கதைகளைப் போலவே இதிலும் நல்ல விறுவிறுப்பான ஆரம்பம். பாராட்டுகள்.

சொத்துக்காக அத்தை, யாரையாவது குமரேசனைப் போல் நடிக்கவைத்திருப்பாரோ என்ற சந்தேகம் உள்ளது. தொடருங்கள். பின் தொடர்கிறேன்.

அன்புரசிகன்
04-08-2011, 06:35 AM
விறுவிறுப்பான ஆரம்பம். எதிர்பார்ப்புக்களை தூண்டும் தொடர்புகள். தொடருங்கள்.

மதுரை மைந்தன்
05-08-2011, 10:49 AM
பலே! பழைய படம் பாத்தா ஒரு எஃபெக்ட். தொடருங்கள்!


அது எந்த பழைய படம்னு சொன்னா அதை பார்த்து கதையை வளர்க்க உதவியா இருக்கும். நன்றி

மதுரை மைந்தன்
05-08-2011, 10:52 AM
ஆஹா...அதற்குள் அடுத்த பாகம்...அந்த பாகத்திலேயே இரண்டாவது வில்லியின் அறிமுகம், சொந்த அத்தையே இத்தனைநாள் குமரேசனை ஏன் மறைத்து வைத்திருந்தார் என்ற சஸ்பென்ஸ்....எல்லாமே வந்துவிட்டது.

சுவாரசியமாகப் போகும் கதையின் அடுத்த அத்தியாயத்தைக் காணும் ஆவல் உண்டாகிறது. வாழ்த்துக்கள் நண்பரே.



வெகு நாட்களுக்கு பிறகு உங்களுடைய பின்னுட்டத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். நலமாக இருக்கிறீர்களா? நன்றி

மதுரை மைந்தன்
05-08-2011, 10:55 AM
ஆஹா இது நல்லாஇருக்கே ? இத்தனை வருஷம் மறைத்து வைத்து இப்போ வந்து திடுப்புன்னு கேட்டா எப்படி? இவன்தான் என் தம்பிங்குரதுக்கு என்ன ஆதாரம் ..ஒருவன் தொலைந்து போய் புகார் கொடுக்கப்பட்டு ஏழு வருஷத்துக் குள்ளாக வரவில்லை என்றால் அவன் இறந்ததாக அறிவிக்கபடுவான் ..இது கூட தெரியாமல் எதோ பழையபடம் பார்த்துட்டு வந்து சத்தம் போட்ட எப்படி ன்னு ?கேக்க மாட்டோமா..


நீங்க சொல்றது சரியே . ஆனால் பல வருடங்கள் கழித்து உயிருடன் தம்பி வந்திருக்கிறான் என்ற மகிழ்ச்சியில் அவன் தம்பிதானா என்று ஆராய மாட்டார்களென நினைக்கிறேன். நன்றி

மதுரை மைந்தன்
05-08-2011, 10:57 AM
அத்தை தாயம்மாளுக்கு குமரேசனைப் பற்றிய தகவல் தெரியுமா? ஏன் இதுவரை சொல்லவில்லை.

புரிய கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.


தொடர்ந்து படித்தால் புரியும் என நம்புகிறேன். நன்றி

மதுரை மைந்தன்
05-08-2011, 11:00 AM
தங்கள் முந்தைய தொடர்கதைகளைப் போலவே இதிலும் நல்ல விறுவிறுப்பான ஆரம்பம். பாராட்டுகள்.

சொத்துக்காக அத்தை, யாரையாவது குமரேசனைப் போல் நடிக்கவைத்திருப்பாரோ என்ற சந்தேகம் உள்ளது. தொடருங்கள். பின் தொடர்கிறேன்.


நன்றி நண்பரே!

மதுரை மைந்தன்
05-08-2011, 11:01 AM
விறுவிறுப்பான ஆரம்பம். எதிர்பார்ப்புக்களை தூண்டும் தொடர்புகள். தொடருங்கள்.


நன்றி நண்பரே!

மதுரை மைந்தன்
05-08-2011, 11:02 AM
அத்தை தாயம்மளின் திடீர் வருகை கதிரேசனுக்கு அதிர்ச்சி அளித்தது. தாயம்மாள் கதிரேசனின் நேரடி அத்தை இல்லை. அவருடைய தந்தையின் இரண்டாம் தாரத்துக்கு பிறந்தவள். அவளுக்கு அவர்கள் குடும்பத்தின் மீது தீரா பகை. அவளுடைய சொத்துக்களை கதிரேசனின் தந்தை அபகரித்து விட்டதாக புகார் சொல்வாள். அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வந்து உடனடியாக பணம் வேண்டும் இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி வாங்கி செல்வாள். அவள் அடிக்கடி கூறும் வசனம் " இந்த வெயில்ல லட்ச ரூபாய் கொடுத்தா கூட வரமாட்டேன். ஆனா வீட்டில அடுப்பில் பூனை தூங்கறது. நீ பணம் தந்தால் தான் நான் பொங்கி சாப்பிட முடியும்". கதிரேசானின் தந்தைக்கு தெரியும். அவளுக்கு கொடுக்கும் பனத்தை அவளுடைய குடிகார கண்வன் பிடுங்கி குடிச்சு அழிச்சிடுவான் என்று. இருந்தும் சகோதரி என்ற முறையில் அவளிடம் இரக்கம் காட்டுவார்.

ஆனால் கதிரேசன் அவளிடம் இரக்கம் காட்டவில்லை. மாறாக அவருக்கு அவள் மீது கோபமே வந்தது. குமரேசனை கடத்தி சென்று இத்தனை வருடங்களாக மறைத்து வைத்து இப்போ சொத்து நல்ல விலைக்கு போகிறது என்றவுடன் அவனை வைத்து பங்கு கேக்க வந்திருக்கிறாளே இவளை நன்றாக தண்டிக்க வேண்டும் என்று நினைத்து " நீ பண்ணியிருக்கிற காரியத்துக்கு உன்னை போலீஸ்ல ஒப்படைச்சு உள்ளே தள்ளினா தான் உனக்கு புத்தி வரும். ஆனா குமரேசனுக்கு குணமாகி என்கிட்ட வந்து சேர்ந்த மகிழ்ச்சில இருக்கேன். ஒண்ணும் பேசாம திரும்பி போ. இனிமே இந்த பக்கமே வந்துடாதே நான் பொல்லாதவனாயிடுவேன்" என்றார் கோபமாக.

அந்த நேரத்தில் அங்கு தள்ளாடிக் கொண்டு உள்ளே நுழைஞ்ச தாயம்மாளின் குடிகார கணவன் " என்ன இவங்க பணம் தழ மாட்டாங்களா. ளெண்டு தட்டு தட்டினா கொட்டு கொட்டுனு கொட்டிடுவாங்க இள்ள" என்று சொல்லிவிட்டு சுருண்டு கீழே விழுந்தார். தன் தலையில் அடித்துக்கொண்டு கண்வனை கைதாங்கலாக தூக்கி " இப்போ போறேன். எனக்கு பணம் கிடைக்கலனா ஒரு வக்கீலை பாத்து உங்களை கோர்டுக்கு இழுத்து சந்தி சிரிக்க வைக்கலனா என் பேரு தாயம்மா இல்லை" என்று கூறி சென்றாள்.

அவர்கள் சென்றதும் கதிரேசன் தம்பியின் கைகளை பற்றிக் கொண்டு " உன்னை மறுபடியும் பார்ப்பேனானு இத்தனை வருடங்களா ஏங்கிகிட்டிருந்தேன். இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு. ஆமாம் நீ இவங்க கூட எப்படி இருந்தே. பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கையே. இவங்க உன்னை எப்படி படிக்க விட்டாங்க" என்று மூச்சு விடாமல் கேட்டார். அதற்கு குமரேசன் " இவங்க என்னை வாழ விடலை. என்னை குணமாக்கி படிக்க வைச்சு திருமணம் பண்ணி வச்ச தெய்வங்களை பத்தி விவரமா சொல்றேன்" என்றான்.

அப்போது தன் கைகளை பிசைந்து கொண்டு பதட்டத்துடன் அங்கு வந்த தெய்வனாயகி " என்னங்க. ரொம்ப நேரம் ஆச்சு இன்னும் பசங்க ஸ்கூல் விட்டு வீடு திரும்பலையே" என்றார்.

தொடரும்

நாஞ்சில் த.க.ஜெய்
05-08-2011, 01:13 PM
ஆமா இவங்க எந்த ஆதரத்த வச்சி இவங்கள கோர்ட் க்கு இழுப்பாங்களாம்...

நாங்களும் எதிபார்க்கிறோம் குமரேசனை குணபடுத்திய தெய்வங்களை ...

அய்யய்யோ எங்களுக்கும் பதட்டமா இருக்கே குழந்தைகளுக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு ....

மதுரை மைந்தன்
05-08-2011, 10:18 PM
ஆமா இவங்க எந்த ஆதரத்த வச்சி இவங்கள கோர்ட் க்கு இழுப்பாங்களாம்...

நாங்களும் எதிபார்க்கிறோம் குமரேசனை குணபடுத்திய தெய்வங்களை ...

அய்யய்யோ எங்களுக்கும் பதட்டமா இருக்கே குழந்தைகளுக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு ....

அவரின் புகார் எல்லாமே அவர்களுடைய சொத்துக்கள் பரம்பரையானவை அவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு என்ற சட்டத்தை வைத்துதான். கதிரேசனின் தந்தையும் சொத்தை பிரித்து கொடுத்திருப்பார் ஆனால் தாயம்மாளின் குடிகார கணவர் அதை அழித்து விடக்கஊடாது என்று தயங்கினார். உங்களுடைய தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

சிவா.ஜி
07-08-2011, 08:00 AM
நல விசாரிப்புக்கு நன்றி நண்பரே. நல்ல நலம். தாங்கள் நலமா?

குடிகாரக் கணவனுக்கு பணத்தை அழும் தாயம்மாள்...குமரேசனை வளர்த்திருக்க முடியாது....வேறு யாரோ வளர்த்து, படிக்க வைத்திருக்கிறார்கள்...அவர்கள் யார்...குமரேசனின் வாழ்க்கை ரகசியம் என்ன....தாயம்மாளின் வழக்கு கதிரேசனுக்கு எந்தளவுக்கு தொந்தரவு கொடுக்கப்போகிறது....எல்லாம் தெரிந்துகொள்ள ஆவல் உண்டாக்கிவிட்டீர்கள்.

தொடருங்கள் நண்பரே.

மதுரை மைந்தன்
07-08-2011, 08:23 AM
தம்பி அவன் தங்க கம்பி-4

குமரேசன் சிரித்துக் கொண்டே " பயப்படாதீங்க அண்ணி, பசங்க பத்திரமா வந்து சேருவாங்க" என்று சொல்லி முடிக்கவும் கதிரேசனின் மகனும் மகளும் உள்ளே நுழைந்தனர். வரும் தேர்வுக்காக எங்களுக்கு தனி வகுப்புகள் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால் தான் தமதமாகிவிட்டது என்றது தெய்வனாயகிக்கு வயிற்றில் பால் வார்த்தது போல் இருந்தது. ஏற்கனவே சொத்தில் பங்கு வேண்டாம் என்று சொன்னவுடன் குமரேசன் மீது அன்பும் பாசாமும் உண்டாகி இருந்தது இப்போது வலுப்பெற்றது.

" வந்திருப்பது என்னோட தம்பி தானா என்று நீ சந்தேகப்பட்டாயே அருகில் வந்து பார்.அ வனுடைய நெற்றியில் ஒரு பெரிய தழும்பு இருக்கிறது. திருச்செந்தூருக்கு நான்கள் சாமி கும்பிட செறிருந்த போது செந்திலாண்டவர் விடுதியில் கீழே கிடந்த சோப்பு காகிததின் மேல் அவன் கால் வைக்க வழுக்கி விழுந்து நெற்றியில் அடி பட்டு ரத்தம் பெருக்கெடுத்தது. டாகடரிடம் காண்பித்து நெற்றியில் கட்டு போடப்பட்டது. அந்த தழும்பு தான் இது" என்று கதிரேசன் மனைவியிடம் கூறினார். முதல் தடைவையாக அதை கேள்விப் பட்ட குமரேசன் தழும்பை தடவி பார்த்து சிரித்தான்.

கதிரேசன் அவனிடம் " உன்னை காப்பாற்றி குணப்படுத்தி வாழ்வு தந்த அந்த தெவங்களை பற்றி அறிய ஆவலாக இருக்கிறது" என்றார். குமரேசன் " மாணிக்கம் அண்னனை பற்றி நீங்கள் அவசியம் தெரிஞ்சுக்கணும். கொஞ்சம் இருங்க நான் அவரையே இங்கே அழைக்கிறேன். அவர் மதுரையில் தான் இருக்கிறார் என்று சொல்லி தனது அலைபேசியில் தொடர்பு கொண்டு " அண்ணே நான் இங்க என்னோட அண்ணன் கதிரேசன் அவங்க வீட்டில இருக்கிறேன். அவங்களுக்கு உங்களை பார்க்கணுமாம். நீங்க உடனே வர முடியுமா?" என்றான். கதிரேசனிடம் அவன் " அவர் வந்திக்கிட்டு இருக்காராம். அவர் வாய் மூலமாக எல்லா விவரங்களையும் கேளுங்க" என்றான்.

"மாணிக்கம் வரும் வரை நாம பலகாரம் சாப்பிட்டு பேசிக் கொண்டிருக்கலாம்" என்றார் கதிரேசன். குமரேசனின் மனைவி அண்ணிக்கு ஒத்தாசை செய்ய சமையலறைக்கு சென்றாள். குமரேசன் காணாமல் போனவுடன் இருந்த வீட்டின் நிலமையையும் ஒருவர் பின் ஒருவராக மறைந்த பெற்றோர்களை பற்றியும் ஊரிலிருக்கும் தாய் மாமன் தன்னை வலர்த்து படிக்க வைத்து மணமுடித்து வைத்த விவரங்களையும் அவனிடம் கதிரேசன் விவரித்தார். பெற்றோரை பார்க்க முடியாமல் போனது குறித்து வருந்தினான் குமரேசன். சுவறில் மாட்டியிருந்த அவர்களுடைய புகைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்டு படத்தை தொட்டு கும்பிட்டான்.

சிறிது நேரம் கழித்து அங்கு வந்த மாணிக்கம் " வணக்கம் சார். குமரேசன் மாதிரி ஒரு தம்பி கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும்" என்றார். கதிரேசன் " நாங்க உங்களுக்கு ரொம்ப கடமைப் பட்டிருக்கிறோம். கூட பிறவாத அண்ணனாக இருந்தாலும் ஒரு அண்னனுக்கு மேலாக என் தம்பியை காப்பாத்தி குணப்படுத்தி அவனுக்கு ஒரு நல் வாழ்க்கை தந்திருக்கிறீங்களே உங்களுக்கு நான் ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கிறேன்" என்று உணர்ச்சி வசப்பட்டு மாணிக்கத்தின் கைகளை பற்றினார். நீங்க எப்படி என் தம்பியை காப்பாத்தினீங்கனு சொல்ல முடியுமா?" என்று அவர் கேட்டவுடன் மாணிக்கம் சொல்ல ஆரம்பித்தார். தெய்வனாயகி, குமரேசனின் மனைவி, கதிரேசனின் மகன், மகள் ஆகியோரும் அங்கு வந்து அமர்ந்து ஆவலாக கேட்டனர்.

" சார், நான் உங்க அத்தை தாயம்மாள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வசித்தேன். அப்போது நான் எட்டாம் வகுப்பு முடிக்கவில்லை. எனக்கு படிப்பு வரவில்லை. எட்டாம் வகுப்பு தேர்வில் தொடர்ந்து மூன்று வருடங்களாக பெயில் ஆனதால் என் படிப்பை நிறுத்தி விட்டார்கள் என் பெற்றோர். வேலை எதுவும் செய்யாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டு தாயம்மளுக்கும் அவருடைய கனவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். தாயம்மளின் கணவர் குடிச்சிட்டு வந்து அவரை அடிப்பார். சில சமயங்களில் குடிச்சிட்டு தெருவில் விழுந்து கிடந்த அவரை நானே அவரை வீட்டுக்கு கொண்டு சேர்ப்பேன். தெருவில் அவர்களுக்கு கெட்ட பெயர். ஒரு நாள் புட்டு திருவிழா பார்த்து விட்டு நான் திரும்பிக் கொண்டிருந்த போது அவர்கள் ஒரு சிறுவனை கூடி செல்வதை பார்த்தேன். அவர்களுக்கு குழந்தைகள் கிடையாது என்பதால் ஆச்சரியத்துடன் அவர்களை பின் தொடர்ந்தேன். வீடு அடைந்ததும் தாயம்மாள் கணவரிடம் " பையனைக் காணோம்னு அவங்க அழுது ஒப்பாரி வைக்கட்டும். பையன் வேணும்னா சொத்தில் பங்க பிரிச்சு கொடுங்கனு கேப்போம்" என்றார். அதற்கு அவளுடைய கணவர் " ஆமாம் நீ சொன்ன உடனே பணத்தை தூகி கொடுத்து பிள்ளையை வாங்கிட்டு போவாங்க. அவங்க போலீஸ்ல புகார் கொடுத்து நம்மளை கம்பி எண்ன வச்சிடுவாங்க. அதுக்கு பதிலா எனக்கு தெரிஞ்ச பிள்ளை பிடிப்பிறவன் ஒருத்தன் இருக்கான். அவன் கிட்ட இந்த பயலை வித்துடலாம். எப்படி என் ஐடியா?" என்றான்.

இதைக் கேட்ட என் மனம் பதை பதைத்தது. ஜன்னல் வழியே வீட்டுக்குள் பார்த்தேன். அங்கே குமரேசன் நிர்மலமாக தூங்கி கொண்டிருந்தான். பாவிங்க அவனுக்கு மயக்க மருந்து கொடுத்திருக்க வேன்டும். கலங்கமற்ற அவனுடைய முகம் என்னை வாட்டியது. இரவு படுக்க சென்ற எனக்கு தூக்கம் வரவில்லை. நான் எப்போதும் வீட்டின் மொட்டை மாடியில் தான் படுப்பேன். தாயம்ம்மாள் வீட்டிலும் அன்று அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் படுத்தார்கள். நள்ளிரவில் நான் அவர்கள் வீட்டு மாடியேறி குமரேசனை எடுத்துக் கொண்டு கீழிறங்கினேன். அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கலானேன். எங்கள் வீட்டுக்கு அவனை எடுத்து போவது முடியாது. ஏற்கனவே என்னோட தந்தை என்னை தண்டச்சோறு என்று திட்டுவது பொறுக்காமல் வீட்டை விட்டு ஒரு நாள் ஓடிப்போவது என்றிருந்தேன். குமரேசனை எடுத்துக் கொண்டு மதுரையை விட்டு வெளியே செல்லும் சாலையில் நடக்கலானேன்.


தொடரும்..

நாஞ்சில் த.க.ஜெய்
07-08-2011, 01:41 PM
குமரேசன் அவருடைய தம்பி தான் என்பது அந்த தழும்பு மூலம் நிருபணம் ஆகிடுச்சு ...சந்தோசமா இருக்கு ...
போறதுதான் போறோம் ஒரு நல்ல காரியம் செஞ்சிட்டு போவோம் என்கிற நல்லெண்ணம் உள்ள மாணிக்கம் உண்மையில் மாணிக்கம் தான் ....

கீதம்
08-08-2011, 08:00 AM
பலத்த எதிர்பார்ப்புகளைக் கிளப்பியபடி பயணிக்கிறது கதை. குமரேசனின் சித்தம் தெளிவானது எப்படியென்பதையும் அதில் மாணிக்கத்தின் பங்களிப்பையும் அறிய ஆவலாய் உள்ளேன். வெறும் ஏட்டுப்படிப்பை வைத்து ஒருவரின் குணநலன்களை எடைபோடக்கூடாது என்பதற்கு மாணிக்கம் நல்ல உதாரணம். தொடருங்கள், தொடர்கிறேன்.

மதுரை மைந்தன்
08-08-2011, 10:44 AM
குமரேசன் அவருடைய தம்பி தான் என்பது அந்த தழும்பு மூலம் நிருபணம் ஆகிடுச்சு ...சந்தோசமா இருக்கு ...
போறதுதான் போறோம் ஒரு நல்ல காரியம் செஞ்சிட்டு போவோம் என்கிற நல்லெண்ணம் உள்ள மாணிக்கம் உண்மையில் மாணிக்கம் தான் ....

உங்களுடைய அருமையான பின்னுட்டத்திற்கு பல நன்றிகள்.

மதுரை மைந்தன்
08-08-2011, 10:45 AM
பலத்த எதிர்பார்ப்புகளைக் கிளப்பியபடி பயணிக்கிறது கதை. குமரேசனின் சித்தம் தெளிவானது எப்படியென்பதையும் அதில் மாணிக்கத்தின் பங்களிப்பையும் அறிய ஆவலாய் உள்ளேன். வெறும் ஏட்டுப்படிப்பை வைத்து ஒருவரின் குணநலன்களை எடைபோடக்கூடாது என்பதற்கு மாணிக்கம் நல்ல உதாரணம். தொடருங்கள், தொடர்கிறேன்.

உங்களுடைய அருமையான பின்னுட்டத்திற்கு பல நன்றிகள்.

மதுரை மைந்தன்
08-08-2011, 10:49 AM
உடலெல்லாம் வியர்வை, கடந்து செல்லும் வாகன்ங்களிலிருந்து வந்த புகை, கும்மிருட்டு இவற்ரையெல்லாம் பொருட்படுத்தாது ஒரு உத்வேகத்தில் நடந்தேன். தோளில் குமரேசன் தூங்கி கொண்டிருந்தான். ஆரப்பாளையத்திலிருந்து கிளம்பி வைகை பாலத்தை கடந்து பறவை ஊரை தாண்டி சமயனல்லூர் அருகே வந்து கொண்டிருந்த போது என்னை கடந்து சென்ற லாரி ஒன்று நின்று ரிவர்சில் என்னை நெருங்கியது. ஆள் நடமாட்டமில்லாத அந்த இடத்தில் தோளின் பையனையும் சுமந்து கொண்டு என்னால் அங்கிருந்து ஓட முடியவில்லை. சில லாரி டிரைவர்கள் ரொம்ப மோசமானவர்கள். பெண்களையும் சிறுவர்களையும் பாலியல் பலாத்காரம் செய்யவும் தயங்க மாட்டார்கள். பருத்தி வீரன் படத்தை பார்த்திருப்பிங்களே. அதில் கடைசி காட்சியில் வருவது போல பல சமயங்களில் நடந்ததை கேள்வி பட்டிருக்கிறேன். என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டேன். ஆனால் என் துரதிர்ஷ்டம் பின்னால் வந்த ஒரு வாகனத்தின் வெளிச்சத்தில் என்னை கண்டு பிடித்து விட்டார் அந்த டிரைவர். லாரியை விட்டு கிழிறங்கி வந்து " அட மாணிக்கம் தம்பி! இந்த நேரத்தில எங்கே போயிட்டிருக்கே?" என்று கேட்டார் அவர். அவர் பெயர் முனுசாமி. எங்க தெருவுக்கு பக்கத்து தெருவில் வசித்து வந்தார். அவருடைய பையன் முத்துவும் நானும் பள்ளி தோழர்கள். அவர்கள் வீட்டுக்கு நான் நிறைய தடவை போயிருக்கிறேன்.

" ஆமாம் தோள்ல யாரு பையன்?" என்று கேட்டார் அவர். " என்னோட தம்பி" என்று நான் சொன்னவுடன் உனக்கு ஒரு தம்பி இருக்கிறதா சொல்லவே இல்லையே. சரி சரி உன்னை பார்த்தா ரொம்ப களைச்சு போயிருக்கெ வா வண்டில ஏறு. இப்ப நான் சரக்கை ஏத்திகிட்டு வந்துட்டேன். நாளைக்கு திரும்பர போது உன்னை மதுரையில் உங்க வீட்டுல கொண்டு போய் சேர்த்துடறேன்." என்றார். அதற்கு நான் " நான் வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன். வீட்டுக்கு திரும்ப போறதா இல்லை" என்றேன். அவர் என்னை சற்று முறைத்து பார்த்து விட்டு " சரி வா வண்டில ஏறு. போய்கிட்டே எல்லா விசயமும் பேசலாம்" என்றார். நான் லாரியின் முன் சீட்டில் குமரேசனை படுக்க வைத்து விட்டு அவனுடைய கால்களை என் மடியில் போட்டுக் கொண்டு அமர்ந்தேன்.

லாரியை ஓட்டிக்கொண்டே " எனக்கு எல்லா விசயமும் தெரியும் தம்பி. பரிட்சைல நீ பெயிலானதால உங்க அப்பா உன்னை ரொம்ப கோபிச்சுக்கறாருன்னு நம்ம பையன் சொன்னான். அதுக்காக பெத்தவங்களை விட்டு ஓடி வந்தது நல்லாயில்லை. நீ ஓடறது போதாதுனு உன் தம்பியை வேற கூட்டி வந்திருக்கிறயே உங்க அப்பா அம்மா மனசு என்ன பாடு படும். நான் சொல்றதை கேளு. நான் இந்த சரக்கு லாரியை கொடைக்கானலுக்கு கொண்டு போயிட்டிருக்கேன். அங்கே வந்து கொடைக்கானலை சுத்தி பாரு. நாளைக்கு சாயங்காலம் மதுரை திரும்பிடுவோம்" என்ற அவரிடம் உண்மைகளை கூறி அழுதுவிட்டேன். குமரேசனை தாயம்மளும் அவளுடிய கண்வனும் கடத்தி வந்து பிச்சைக்காரனா ஒரு ஏஜன்டிடம் விக்க போறாங்கனு கேட்டு அவனை எப்படியாவது அவங்க கிட்ட இருந்து காப்பாத்தணும்னுதான் இப்படி கிளம்பி வந்தேன் என்றேன். மேலும் அவரிடம் " அய்யா எனக்கு படிப்பு ஏறலை. தொழில் எதுவும் கத்துக்ககலை. வேலை வெட்டி பாத்து கல்யாணம் பண்ணிகிட்டு குழந்தைகளை பெத்து போட்டு ஒரு செக்கு மாடா வாழறது எனக்கு பிடிக்கலை. என்னால ஒரு நல்ல காரியம் பண்ன முடிஞ்சா பண்னனும்ங்கரதனால தான் இந்த பையனை தூக்கி வந்தேன். இவனுக்கு மூளை வளர்ச்சி குறைவு" என்றதும் அவர் ஸ்டீரிங் வீலிருந்து கையை எடுத்து தன் தலையில் அடித்துக் கொண்டார். என்னிடம் கோபமாக அவர் " நீ என்ன காரியம் பண்ணியிருக்கே? மூளை வளர்ச்சி இல்லாத பையனை எப்படி காப்பாத்தி குணப்படுத்த்தப் போற? இந்த பையனொட அப்பா அம்மா இவனை பிரிஞ்சு எத்தனை வேதனை படறாங்களோ? அவங்க போலீஸ்ல புகார் கொடுத்தா சீக்கிரமே போலீஸ் உன்னை பிடிச்சு ஜெயில்ல போட்டு பையனை அவங்க கிட்ட ஒப்படைச்சுடுவாங்க. இதெல்லாம் தேவையா உனக்கு?" என்றார்.

அவர் கூறியதைக் கேட்டு அதைர்ச்சி அடைந்த நான் " அய்யா நீங்க தான் என்னை எப்படியாவது காப்பாத்தணும். கொடைக்கானல்ல எனக்கு ஏதாவது வேலை வாங்கி கொடுத்தீங்கனா நான் பொழைச்சுக்குவேன். குமரேசனை அவனோட அம்மா அப்பாகிட்ட சேர்த்தீங்கனா அவங்க அவனுக்கு சோறு போட்டு பாத்துக்கத்தான் முடியும். அவங்களுக்கு வேற குழந்தைகள் இருப்பாங்க. அவங்களையும் வளர்த்து இவனையும் குணப்படுத்த கஷ்டப் படுவாங்க. ஆனா எனக்கு அவன் தான் எல்லாம். என் உயிரைக் கொடுத்தாவது அவனை குணப்படுத்தி அவனுக்கு நல் வாழ்க்கை அமைத்து அவனோட பெற்றோர்கள்கிட்ட ஒரு நாள் ஒப்படைப்பேன்." என்று சொல்லி குமுறி குமுறி அழுதேன். அவர் ஒன்றும் பேசாமல் லாரியை செலுத்தலானார்.

தொடரும்

sarcharan
08-08-2011, 12:09 PM
தாயம்மாவின் சண்டை எனக்கு ஜீன்ஸ் பட ராதிகாவை நினைவு படுத்தியது

நாஞ்சில் த.க.ஜெய்
08-08-2011, 06:40 PM
தெளிவாத்தான் கேக்குறாரு பக்கத்து வீட்டு காரரு ..என்னதான் நல்லது பண்ணுறேன்னு கிளம்புனாலும் சிக்கல் வராதவரைக்கும் நல்லாத்தான் இருக்கும் வந்தா எல்லாம் இந்த சனியனால வந்ததுன்னு பழி அந்த குமரேசன் மேல போயிருக்கும் நல்லவேளை இதெல்லாம் நடக்கல ...சுத்தி இருக்கிறவங்க எல்லாம் நல்லவங்களா போயிட்டாங்க போல ...

மதுரை மைந்தன்
10-08-2011, 10:48 AM
தாயம்மாவின் சண்டை எனக்கு ஜீன்ஸ் பட ராதிகாவை நினைவு படுத்தியது


நன்றி நண்பரே!

மதுரை மைந்தன்
10-08-2011, 10:49 AM
தெளிவாத்தான் கேக்குறாரு பக்கத்து வீட்டு காரரு ..என்னதான் நல்லது பண்ணுறேன்னு கிளம்புனாலும் சிக்கல் வராதவரைக்கும் நல்லாத்தான் இருக்கும் வந்தா எல்லாம் இந்த சனியனால வந்ததுன்னு பழி அந்த குமரேசன் மேல போயிருக்கும் நல்லவேளை இதெல்லாம் நடக்கல ...சுத்தி இருக்கிறவங்க எல்லாம் நல்லவங்களா போயிட்டாங்க போல ...

அருமையான பின்னுட்டத்திற்கு நன்றி நண்பரே!

மதுரை மைந்தன்
10-08-2011, 11:06 AM
சிறிது நேர மவுனத்திற்கு பின் லாரியை செலுத்திக் கொண்டே முனுசாமி பேசலானார். " உன் நிலமை எனக்கு புரியுது தம்பி. பையனைக் கூட்டிகிட்டு வீட்டுக்கு போக முடியாது. போனா உங்க அப்பாவே உன்னை போலீஸ் கிட்ட பிடிச்சு கொடுத்துடுவாரு. பையனொட அப்பா அம்மா எங்க இருக்காங்கனும் உனக்கு தெரியாது. அதனால கொடைக்கானல்ல எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் மூலமா உனக்கு ஏதாவது வேலையும் த்ங்க இடமும் ஏற்பாடு பண்றேன். ஆனா ஒரு நிபந்தனை. ஒரு நாள் பையனோட பெற்றோர்கள் செய்தி தாள்ல பையனைக் காணோம்னு விளம்பரம் கொடுத்தாங்கன்னா நீ அவங்க விலாசத்துக்கு போய் பையனை அவங்க கிட்ட ஒப்படைச்சுடணும். அது வரைக்கும் போலீஸ் கண்ல படாம இருக்கறது உன் சாமர்த்தியம். என்ன விளங்குதா?" என்றார். நான் தலையை ஆட்டினேன்.

வத்தலகுண்டு ஊருக்குள்ளே ஒரு டீக்கடை முன்னால் லாரியை நிறுத்தினார். " வா தம்பி டீ வாங்கி தறேன்" என்று சொல்லி வண்டியை விட்டு இறங்கினார்.குமரேசன் முழித்துக் கொண்டு மலங்க மலங்க பார்த்தான். நான் அவனுடன் கீழிறங்கி டீ கடைக்கு சென்றேன். கடையில் அந்த நள்ளிரவிலும் சினிமா பாட்டு ஒலித்தது. முனுசாமி கடைக்கார்ரரிடம் " பசங்களுக்கு பன்னு வாழப்பழம் டீ எல்லம் கொடுப்பா" என்று சொல்லிவிட்டு அங்கு வாளியிலிருந்த தண்ணிரில் முகம், கை கால்களை கழுவிக் கொண்டார். பன்னை கொடுத்ததும் வாங்கி அவசரமாக் குமரேசன் சாப்பிட்டான். பாவம் நல்ல பசி போலிருக்குனு நினைத்துக் கொண்டேன். எனக்கும் பசிக்கவே நானும் பன், பழங்களை சாப்பிட்டேன். டீயை வாங்கி குடிக்காமல் முனுசாமியையே பார்த்துக் கொண்டிருந்தான் குமரேசன். அவன் முகத்தில் பழைய சிரிப்பு தோன்றியது. முனுசாமி டீ க்லாசை ஆட்டி ஆட்டி உறிஞ்சு சாப்பிடுவதை பார்த்து டீயை என்னிடம் கொடுத்து முனுசாமியை நோக்கி கையை காட்டினான். எனக்கு அப்போது தான் விளங்கியது. சூடான டீயை ஆட்டி ஆட்டி ஆற வைத்து சிறிது சிறிதாக அவன் வாயில் ஊற்றினேன். அவன் அதை ரசித்து சாப்பிட்டான்.

அங்கிருந்து கிளம்பியதும் என்னிடம் " நாம இன்னும் கொஞ்ச தூரத்தில மலைக்கு மேல ஏறப்போறோம். மேலே போக போக குளிர ஆரம்பிக்கும். இந்தா இந்த கம்பளியை போர்த்திக்கொ பையனுக்கும் போர்த்தி விடு" என்றார். அவரும் ஒரு கம்பளியை சுற்றிக் கொண்டு தலையில் மப்ளரால் முண்டாசு கட்டியிருந்தார். " உனக்கு உறக்கம் வந்தா தூங்கு" என்று சொல்லி விட்டு தனக்கு தெரிந்த தெம்மாங்கு பாடல்களை பாடலானார். குமரேசன் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தான். எனக்கு தூக்கம் வரவில்லை. லாரியின் ஹெட் லைட் வெளிச்சத்தில் ஓடி மறையும் வளைவு நெளிவான சாலையை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டேன். கண்ணை விழித்த போது லாரி நின்று கொன்டிருந்தது வெளியே முனுசாமி பீடி புகைத்துக் கொண்டிருந்தார்.

" அட முழிச்சுகிட்டயா? நாம கொடைக்கனலுக்கு அப்பவே வந்துட்டோம். இதோ இது எனக்கு தெரிஞ்ச க்ள்ப்பு கடை" என்று கையை காட்டினார். லாரி ஷண்முக விலாஸ் ஓட்டல் என்ற போர்டு தொங்கிய கடைக்கு முன்பாக நின்றிருந்தது. " கீழிறங்கி வா. பையனையும் எழுப்பு. பின்னால கக்கூஸ் இருக்கு. அங்க போயிட்டு பல் விளக்கிட்டு வா. பலகாரம் சாப்பிடலாம்" என்றார் அவர். குமரேசனை எழுப்பி கீழிறங்கி அவர் சொன்ன மாதிரி செய்துவிட்டு அவர் பின்னால் அந்த கடைக்குள் நுழைந்தோம். அங்கு கல்லாயில் நெற்றியில் பட்டையாக விபூதி அணிந்து கழுத்தில் தங்க செயின் மின்ன முதலாளி அமர்ந்திருந்தார். " வாப்பா முனுசாமி இந்த தடவை எனக்கு என்ன கொண்டு வந்திருக்கே?" என்று கேட்டார் அவர். " சாமி உங்களுக்காக வற வழியில பண்ணைக்காடு தோட்டத்திலிருந்து செவ்வாழப்பளமும் ப்ள்ம்சும் கொன்டுவந்திருக்கேன் என்று சொல்லி அவரிடம் ஒரு குலை வாழப்பளத்தையும் ப்ள்ம்ஸ் பழங்களின் கூடையையும் கொடுத்தார் அவர்.

" சாமி நீங்க எனக்கு ஒரு ஒத்தாசை பண்னனும். இந்த பசங்க எனக்கு ரொம்ப வேண்டிய பசங்க. மதுரைக்காரங்க தான். இந்த பெரிய பையனுக்கு ஏதாவது ஒரு வேலை போட்டு தாங்க ரொம்ப புண்ணியமா போகும்" என்றார் முனுசாமி. அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அங்கு வந்த வேலைக்கர கிழவி குனிந்து குமரேசனின் கன்னத்தை வருடி திருஷ்டி சுற்றி சொடக்கு போட்டாள். அதே நேரம் கடை முதலாளி " வேலை போட்டு தறேன். எனக்கும் எடுபிடி வேலைக்கு ஒரு பையன் தேவைப்படறான். உனக்கு தான் தெரியுமே இப்பொ சீசன் டைம். நிறைய சுற்றுலா பயணிகள் வறாங்க. நிறைய பேருக்கு நம்ம கடை சாப்பாடு பிடிச்சிருக்கு. அது சரி இவங்க எங்கே தங்க போறாங்க?" என்று கேட்டர் அவர். உடனே குமரேசனை கொஞ்சிக் கொண்டிருந்த அந்த கிழவி " சாமி பசங்க என் கூட தங்கிக்கலாம். நீங்க எனக்கு தங்கறதுக்கு கடைக்கு பின்னல ஒரு அறை கொடுத்திருக்கீங்களே அங்கே நான் தனியாதான் இருக்கேன்" என்றார். முனுசாமி சிரித்துக் கொண்டே " அப்புறம் என்ன பழம் நழுவி பால்ல விழுந்த கதையா போச்சு. மாணிக்கம் தம்பி நீ அத்ருஷ்டக்காரன்" என்றார்.

தொடரும்

சிவா.ஜி
10-08-2011, 02:09 PM
நல்லமனசுக்காரர்களுக்கு எல்லாமே நல்லதாய் நடக்கிறது. மாணிக்கமும் நல்ல மனசுக்காரனே....இனி வருவதை வாசிக்க ஆவலும் கூடுகிறது...தொடருங்கள் நண்பரே.

கீதம்
10-08-2011, 09:47 PM
மாணிக்கத்தின் நிலையைப் புரிந்துகொண்டு உதவிய லாரி ஓட்டுநரையும், தானிருக்கும் சிறு அறைக்குள் இன்னும் இரண்டு சிறார்களுக்கு தங்க இடமளித்த முதியவளையும் போன்ற நல்லவர்களின் இருப்புதான் வீட்டைவிட்டு வெளியேறிய மாணிக்கத்தை தவறான பாதையில் செல்லவிடாமல் தவிர்த்திருக்கிறது. மனநிலை தவறிய குமரேசனுக்கும் நல்வழி காட்டியிருக்கிறது. தெளிவான எழுத்துநடைக்குப் பாராட்டுகள். தொடருங்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
12-08-2011, 08:14 AM
உதவும் நோக்கில் உதவுபவர்கள் தங்களிடம் உதவி அல்லது வேலை கேட்டு வருபவர்களின் உண்மை நிலையினை அறிந்து உதவி செய்வது நலம் இல்லையெனில் அவர்கள் முன்பே ஏதேனும் தவறுகள் செய்து அதற்காக அவ்விடம் விட்டு நகர்ந்து இவ்விடம் வந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக இவ்வாறு கேட்கும் உதவி, உதவி செய்ய நினைப்பவர்களையும் சிந்திக்க வைக்கும் ..

மதுரை மைந்தன்
21-08-2011, 11:19 AM
தம்பி அவன் தங்க கம்பி-7

எங்களை விட்டு விட்டு கிளம்பு முன் முனுசாமி என்னிடம் " என்ன தம்பி நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கா?. இந்த பையனோட பெற்றோர்கள் பேப்பர்ல விளம்பரம் செஞ்சாங்கனா உடனே அவங்க பையனை ஒப்படைக்கணும். அப்படி அவங்க விளம்பரம் கொடுக்கலைனாலும் நான் விசாரிச்சு கண்டு பிடிக்கிறேன். அது வரை இவனை பத்திரமா பாத்துக்க. இந்தா என்னோட லாரி ஆபீஸ் போன். எந்த அவசரத்திலெயும் நீ போன் செஞ்சீனா நான் உனக்கு வேண்டிய உதவி பண்ணுவேன்" என்றார்.

அப்போது முதலாளி கல்லாயை திறந்து அவரிடம் ஒரு நூறு ருபாய் தாளை நீட்டினார். அதைக் கண்ட முனுசாமி " சாமி உங்க கிட்ட பழத்துக்கெல்லாம் என்னிக்கு காசு வாங்கியிருக்கேன்?. வேணாமுங்க" என்றார். முதலாளி உடனே " அட பழத்துக்கு கொடுக்கலைபா இந்த பணத்தைக் கொண்டு பசங்களுக்கு நல்ல டிரவுசர், சொக்காய் எல்லாம் வாங்கி தா. அதோட முக்கியமா நல்ல கம்பளியா வாங்கி கொடு. குளிருக்கு உதவியா இருக்கும்" என்றார். " ஆமாம் நீங்க சொல்றது சரி தான்" என்று சொல்லி விட்டு எங்கள் அளவுகளை எடுத்துக் கொண்டு கடை வீதிக்கு சென்றார்.

அவர் சென்றதும் முதலாளி என்னிடம் " தம்பி போய் ரெஸ்ட் எடுத்துக்கோ. நாளையிலிருந்து வேலையை ஆரம்பி. நீ சாப்பாடு மேசையெல்லாம் சுத்தம் செஞ்சு சாப்பிடறவங்களுக்கு குடிக்க தண்ணி கொடுக்கணும். சமையலறையில் கூப்பிட்ட குரலுக்கு போயி அங்கே அவங்களுக்கு உதவணும். இதான் உன்னோட வேலை" என்றார். நான் அவரை கும்பிட்டு குமரேசனை கூட்டி கொண்டு கிழவி கூட அவளுடைய அறைக்கு சென்றேன். அறை கல் சுவர்களைக் கொண்டிருந்தது. தரை கரடு முரடாக மேடு பள்லங்களைக் கொண்டிருந்தது. எனக்கு அவைகள் ஒரு பொருட்டாக தோன்றவில்லை. நாங்கள் தங்கவும் எங்கள் தலைக்கு மேல் ஒரு கூரையுடனும் இருந்தது பெரிதாக தோன்றியது. " உங்க பெயர் என்னங்க?" என்று கிழவியிடம் கேட்டேன். " குருவம்மா" என்று பதிலளித்தார். அறையின் மூலையில் குவிந்திருந்த சாக்கு துணிகளை விரித்து இரண்டு படுக்கைகள் போல் ஆக்கினார் குருவம்மா. அவற்றின் மீது தனது கிழிந்த சேலைகளை விரித்து " உக்காந்துக்கப்பா தம்பி. நான் போயி உங்களுக்கு சாப்பிட சோறு கொண்டு வரேன்" என்று சொல்லி சென்றார். இப்படியாக எங்கள் புது வாழ்வு துவங்கியது.

நாட்கள் உருண்டன. தினம் காலை கிழக்கே வெளுக்க ஆரம்பிக்கும் போதே குருவம்மா எழுந்து ஓட்டல் வாசலில் தண்ணி தெளித்து சுத்தம் செய்து கோலம் போடுவார். பின் சமையலறையில் பாத்திரங்களை கழுவி காய் கறிகளை நறுக்கி அரிசியை கல் பொறுக்கி வைத்து விட்டு கிணற்றுலிருந்து நீரெடுத்து குளிப்பார். என்ன குளிராக இருந்தாலும் பச்சை தண்ணியில் தான் குளிப்பார். ஆனால் எங்களுக்கு கல்களை அடுக்கி சுள்ளிகளை தீ பற்ற வைத்து சுடு தண்ணீர் வைத்து கொடுப்பார். நான் வேலைக்கு கிளம்புவதற்கு முன்பே அறைக்கு வந்து நாள் முழுவதும் குமரேசனுடன் தான் இருப்பார். அவனை குளிப்பாட்டி சோறூட்டி அவனுடன் விளையாடி அருமையாக பார்த்துக் கொண்டார்.

ஒரு நாள் காலையில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது இரண்டு போலீஸ்காரகள் ஓட்டலுக்கு வந்தார்கள். அவர்கள் முதலாளியிடம் சென்று கையிலிருந்த படத்தைக் காட்டி " இந்த பையனை இங்கே எங்காவது பாத்தீங்களா?" என்று விசாரித்தார்கள். அவர்களிடம் இருந்த படத்தில் குமரேசன் சிரித்துக் கொண்டிருந்தான்.

தொடரும்..

மதுரை மைந்தன்
23-08-2011, 10:27 AM
தம்பி அவன் தங்க கம்பி-8

அந்த போலீஸ்காரர்கள் முதலாளியிடம் " நாங்க மதுரையிலிருந்து இந்த பையனை தேடி வந்துக்கிட்டிருந்தோம். வத்தலகுண்டு ஊர்ல ஒரு டீ கடைக்காரர் இந்த பையனையும் இன்னோரு வளர்ந்த பையனையும் லாரி டிரைவர் ஒருத்தர் கூட வந்து டீ சாப்பிட்டதா சொன்னார். நீங்க இந்த பையனை இங்கே எங்காச்சும் பாத்தீங்களா?" என்றார்கள்.

முதலாளி சிரித்துக் கொண்டே " அது எப்படி வத்தலகுண்டு வழியா வற லாரியெல்லாம் கொடைக்கனலுக்கு வரும்னு நினைச்சீங்க?. வத்தலகுண்டு வழியா நிலக்கோட்டை, திண்டுக்கல், திருச்சினு அந்த பக்கம் போவாங்க. இல்லாட்டி வத்தலகுண்டு வழியா பெரியகுளம்,தேனி, கம்பம் வழியா கேரளாவுக்கு கூட லாரிகள் போகின்றன.. நான் இந்த பையனை பாக்கலை. இது சீசன் டைம். இங்கே வந்து தங்கறவங்க வசதியானவங்களா தான் இருப்பாங்க. நிறைய பேர் சுற்றுலா பயணிகளா வந்து ஓரு நாள் இரண்டு நாள் தங்கிட்டு திருமிடுவாங்க. இந்த பையனோட பெற்றோர் விலாசம் இருந்தா கொடுங்க. நான் பார்த்தேனா அவனை அவங்க கிட்ட ஒப்படைக்கிறேன்". என்றார். நான் நிம்மதி அடைந்தேன்.

போலீஸ்காரர்கள் குமரேசனின் பெற்றோர் விலாசத்தை ஒரு காகிதத்தில் எழுதி முதலாளியிடம் கொடுத்து விட்டு கிளம்பினார்கள். அவர்கள் சென்றதும் முதலாளி என்னை அழைத்து " தம்பி டிரைவர் முனுசாமி எங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாரு. இப்ப இவங்க கிட்ட பையன் இங்கே தான் இருக்கிறான்னு சொன்னா நீ மாட்டிப்பே. உன்னை ஜெயில்ல போட எனக்கு இஷடமில்லை. அதனாலே இந்தா இந்த காகிதத்தில இருக்கிற விலாசத்துக்கு போய் பையனை அவனோட பெற்றோர்கள் கிட்ட ஒப்படைச்சுடு. உனக்கு பஸ் சார்ஜ் நான் தறேன்" என்றார்.

அவர் கூறியதைக் கேட்டதும் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கால்களைப் ப்ற்றிக் கொண்டு " சாமி என்னை இங்கிருந்து அனுப்பிடாதீங்க. எனக்கு ரெண்டு மூணு மாசம் டைம் கொடுங்க. அதுக்குள்ளே நான் எப்படியாவது குமரேசனை குணப் படுத்தி அப்புறமா அவனை பெற்றோர்களிடம் ஒப்படைக்கிறேன்" என்றேன். அதைக்கேட்டு பலமாக சிரித்த அவர் " முதல்ல உன்னை தான் குணப்படுத்தணும். ரெண்டு மூணு மாசத்தில அந்த மூளை வளர்ச்சி இல்லாத பையனை எப்படி குணப் படுத்தப் போற. நீ என்ன பெரிய டாக்டரா இல்லை ஏதாவது மந்திரம் மாயாம் தெரிஞ்சவனா?" என்றார்.

அவருக்கு எப்படி பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. என்னுள் ஒரு சக்தி இயங்கி என்னை இவ்வாறு செய்ய வைத்தது என்று நினைக்கிறேன். குமரேசனின் காக்கும் கடவுள் தான் அந்த சக்தி என்று நினைக்கிறேன். பின்னாளில் நான் செய்தவை அறிவியல் பூர்வமானவை என்று கேட்டு ஆச்சரியப்பட்டேன். ஆனால் அன்று அவருக்கு பதிலளிக்க முடியாமல் நின்றேன். அவர் என்னையே உற்று பார்த்து விட்டு " உன் மேலே உனக்கே இவ்வளவு நம்பிக்கையா? சரி கொஞ்ச நாள் அவகாசம் தறேன். அது வரை உன்னை காட்டி கொடுக்க மாட்டேன்" என்றார்.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு என் வேலையை தொடர்ந்தேன். இரவு கடை மூடிய பிறகு நாங்கள் தங்கியிருந்த அறைக்கு திரும்பினேன். அங்கே குருவம்மா குமரேசனை தன் மடியில் வைத்து கொஞ்சிக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் குமரேசனிடம் " தம்பி இங்கே யாரு வந்திருக்காக சொல்லு" என்றார். எனக்கு இன்ப அதிர்ச்சியை தரும் வண்ணம் அது வரை பேச்சு வராமல் இருந்த குமரேசன் தன் மழலை குரலில் " அண்ணா" என்றான்.

தொடரும்...

கீதம்
23-08-2011, 10:12 PM
கடை முதலாளி செய்தது நல்ல சமயோசிதமான செயல்தான். இல்லையென்றால் மனநிலை தவறிய சிறுவனைக் கடத்தியக் குற்றத்திற்காக மாணிக்கத்துக்கு பெரும் தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் குமரேசனை அவன் பெற்றோருடன் சேர்க்கவிடாமல் மாணிக்கத்தைத் தடுத்தது எது? வாழ்க்கையில் பிடிப்பு உண்டாக்கிய அவன் பாசமா? அல்லது குமரேசனிடம் தென்பட்ட மாறுதல்களால் தன்னால் அவனைக் குணப்படுத்திவிட முடியும் என்னும் தீவிர நம்பிக்கையா? ஒருவேளை குணமானபின் மாணிக்கத்தை அவன் மறக்க நேர்ந்தால்?

பல சிந்தனைகளையும் கிளப்பியபடி பயணிக்கிறது கதை. தொடருங்கள். தொடர்கிறேன்.

மதுரை மைந்தன்
27-08-2011, 12:47 AM
கடை முதலாளி செய்தது நல்ல சமயோசிதமான செயல்தான். இல்லையென்றால் மனநிலை தவறிய சிறுவனைக் கடத்தியக் குற்றத்திற்காக மாணிக்கத்துக்கு பெரும் தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் குமரேசனை அவன் பெற்றோருடன் சேர்க்கவிடாமல் மாணிக்கத்தைத் தடுத்தது எது? வாழ்க்கையில் பிடிப்பு உண்டாக்கிய அவன் பாசமா? அல்லது குமரேசனிடம் தென்பட்ட மாறுதல்களால் தன்னால் அவனைக் குணப்படுத்திவிட முடியும் என்னும் தீவிர நம்பிக்கையா? ஒருவேளை குணமானபின் மாணிக்கத்தை அவன் மறக்க நேர்ந்தால்?

பல சிந்தனைகளையும் கிளப்பியபடி பயணிக்கிறது கதை. தொடருங்கள். தொடர்கிறேன்.


கதையைப் பற்றிய உங்களின் உயரிய சிந்தனைகளுக்கு மிக்க நன்றி சகோதரி

மதுரை மைந்தன்
27-08-2011, 12:51 AM
தம்பி அவன் தங்க கம்பி-9


" குமரேசனுக்கு எப்படி பேச்சு வந்தது? அவன் குணமானது அறிவியல் பூர்வமானது என்றீர்களே அதை விளக்கமாக கூறுங்களேன்" என்று ஆவலாக மாணிக்கத்திடம் கதிரேசனும் தெய்வனாயகியும் கேட்டார்கள்.

" குமரேசன் குண்மடைவதில் நாங்கள் எங்களையும் அறியாமல் எடுத்த முயற்சிகளை ஒரு மருத்துவ விஞ்ஞானி அறிவியல் பூர்வமானது என்றார். அவரைப் பற்றி விரிவாக பிறகு கூறுகிறேன். முதலில் அவர் சொன்ன சில அடிப்படை உண்மைகளை கூறுகிறேன்" என்று சொல்ல ஆரம்பித்தார் மாணிக்கம்..

" குமரேசன் போன்ற சிறு வயதில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பற்றி ஆராய்ந்து வந்தார் அவர். இந்த குழந்தைகள் பிறக்கும் போது மற்ற குழந்தைகளைப் போல் நல்ல மூளையுடன் தான் பிறக்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு ஏற்படும் தலை காயன்ங்களினாலோ அல்லது மூளைக் காய்ச்சலினாலோ அவர்களின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. வளரும் பருவத்தில் உரிய கால கட்டங்களில் அவர்களுக்கு மற்ற குழந்தைகளைப் போல பேச்சு வராமலும், தன்னிலை இழந்து சுய கட்டுப்பாடு இல்லாமலும் ஆகி விடுகிறார்கள். அவர்களின் இந்த நிலையை பார்த்து சமூகம் அவர்களை கிறுக்கு பைத்தியம் என்ற பட்டங்களை கொடுத்து விடுகிறது. பெரும்பான்மையான நடுத்தர வர்க்க வீடுகளில் இவர்களை பராமரிக்க முடியாமலும் குணப்படுத்த வசதி இல்லாத்தாலும் இவர்களை கை விட்டு விடுகிறார்கள்" என்று சொன்ன மாணிக்கத்தை இடை மறித்தார் கதிரேசன்.

" நீங்கள் கூறியதில் உள்ள சில உண்மைகளை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் குமரேசனை நாங்கள் கை விட்டு விடவில்லை. மதுரையில் இருந்த எல்லா மருத்துவர்களிடம் அவனை காண்பித்து வைத்தியம் பண்ண கேட்டோம். மதுரை பெரியாஸ்பத்திரி, கிருத்துவ மிஷன் ஆஸ்பத்திரி என்று ஒவ்வொரு மருத்துவமனையின் படிகளை ஏறி இறங்கினோம். அனைத்து மருத்துவர்களும் கூறிய பதில் பையனுக்கு Delayed Development of brain. அவன் காலப்போக்கில் குணமடைவான். அவனை நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான். வீட்டில் எனது தாயாருக்கு வீட்டு வேலைகளை செய்யவே நேரம் போதாமல் இருந்தது. எனது தந்தை மில்லில் வேலை பார்த்து வந்தார். அவர் மில்லிலிருந்து வீடு திரும்பியதும் உடல் களைப்பில் பெரும்பாலும் உறங்கி விடுவார். நான் பள்ளியிலிருந்து திரும்பியதும் ஹோம் வொர்க் செய்யவும் வீதியில் சென்று எனது நண்பர்களுடன் விளையாடவும் நேரம் சரியாக இருந்தது. இவற்றால் குமரேசன் தனித்து விடப்பட்டான். இரவு படுக்கும் முன் எனது தாயார் அவனுக்கு புரிகிறதோ இல்லையோ கதைகள் சொல்லி தூங்க வைப்பார். நாங்கள் அவன் நாளைடைவில் குணமடைந்து விடுவான் என்று நம்பினோம். எல்லா கோயில்களுக்கும் சென்று பிரார்த்தனைகள் செய்தோம். அவன் குணமடைய வேண்டும் என்று எனது தாயார் விரதங்கள் கடைப் பிடித்தார். ஆனால் சில விஷமக்கார உறவினர்கள் தாயம்மா போன்றவர்கள் எங்களை பரிகசித்து கிறுக்கு பிள்ளையை குற்றாலத்திலோ அல்லது குணசீலத்திலோ உள்ள பைத்தியக்காரா ஆஸ்பத்திரியில் தான் சேர்க்க வேன்டியிருக்கும் என்றார்கள். சேது படத்தில் குணசீலத்தில் எப்படி அவர்களை சங்கிலியில் பிணைத்து வைத்துருக்கிறார்கள் என்பதை பார்த்து ரத்தக் கண்ணீர் வடித்தேன் நான். அவன் புட்டு திருவிழாவின் போது காணாமல் போனது எங்களுக்கு அதிர்ச்சியை தந்தது." என்று சொல்லி நிறுத்தினார் கதிரேசன்.

" இந்த மாதிரி குழந்தைகளை பெற்றோர்கள் கை விட்டு விடுகிறார்கள் என்று சொன்னது பொதுவில் தான். குமரேசன் மீது உங்களுக்கு இருக்கும் அனபையும் பாசத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. குமரேசன் குணமடைய சிவ பெருமான் செய்த திருவிளையாடல் தான் அவன் புட்டு திருவிழாவின் போது காணாமல் போனது" என்று சொல்லி சிரித்தார் மாணிக்கம்.

" குமரேசனுக்கு பேச்சு எப்படி வந்தது, அவன் குணமடைந்தது எப்படி" என்று தொடருங்கள் என்றார் கதிரேசன் மாணிக்கத்திடம்.

தொடரும்..

கீதம்
27-08-2011, 02:46 AM
ஆர்வத்தைத் தூண்டும் பகுதி. குமரேசனுக்குப் பேச்சு வந்தது எப்படி? கேள்வியில் ஆரம்பித்துக் கேள்வியிலேயே முடித்துவிட்டாலும், அறியும் ஆவலைத் தொடர்ந்து தக்கவைத்திருக்கிறது இப்பதிவு. பாராட்டுகள். தொடருங்கள்.

மதுரை மைந்தன்
31-08-2011, 11:20 AM
தம்பி அவன் தங்க கம்பி-10

" குமரேசனுக்கு பேச்சு வந்ததற்கு குருவம்மாவின் முயற்சிகளே காரணம். நாங்கள் கொடைக்கானலுக்கு வந்து ஷண்முக விலாஸ் ஓட்டலில் தங்க ஆரம்பித்து மூன்று மாதங்களில் அவனை பேச வைத்தார். அதிகாலையில் எழுந்து தனது வேலைகளை முடித்து விட்டு நான் வேலைக்கு சென்ற பிறகு நாள் முழுவதும் குமரேசனுடன் குருவம்மா இருந்து அவனை பார்த்துக் கொன்டார். அப்போது அவர் அவனது வாயில் கூழாங் கற்களை உருட்ட வைத்து, தொண்டையை நீவி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அ ஆ இ ஈ என்று எழுத்துக்களில் ஆரம்பித்து ஒவ்வோரு வார்த்தையாக அவனுக்கு கற்றுத் தந்தார்." என்று சொன்ன மாணிக்கத்தை இடைமறித்தார் தெய்வனாயகி.

" திக்கு வாய் காரங்களுக்கு தானே கூழாங்கல்லை வாயில போட்டு சரி பண்ணுவாங்க. பேச்சு வராதவங்களுக்குமா? குருவம்மா ரொம்ப புத்திசாலி தான்" என்றார்.

" ஆமாம் குருவம்மா இப்போ எங்கே? அவங்களை பார்த்து நன்றி சொல்லணும்" என்றார் கதிரேசன்.

" குருவம்மா காலமாகி கொஞ்ச வருஷம் ஆயிடுச்சு" என்று வருத்ததுடன் கூறினான் மாணிக்கம். குமரேசனின் கன்னத்தில் கண்ணீர் வழிந்ததை பார்த்தார் கதிரேசன்.

" ஹூம் அவங்களை பார்க்க எங்களுக்கு கொடுத்து வைக்கலை. அவங்க எங்கே பிறந்தாங்க, எப்படி கொடைக்கானலுக்கு வந்தாங்கனு உங்களுக்கு தெரியுமா?" என்று மாணிக்கத்திடம் கேட்டார் கதிரேசன்.

இரவு நேரங்களில் குளிருக்கு அடக்கமா கம்பளியை போத்திக்கிட்டு படுத்தாலும் உறக்கம் உடனே வந்துடாது. படுத்து உறங்கப் போகும் முன் நான் ஏதாவது எனக்கு தெரிஞ்ச சமயத்தில சினிமாக்கதைகளை கூட குமரேசனுக்கு சொல்வேன். அவனுக்கு புரிஞ்சதோ இல்லையோ கதையை கேட்டுக் கொண்டே உறங்கி விடுவான். ஒரு நால் அவன் உறங்கியும் எனக்கு உறக்கம் வரவில்லை. குருவம்மாவும் உறங்கவில்லை என்று அறிந்தேன். மெல்ல அவர்களிடம் பேச்சு கொடுத்தேன். அப்போது நீங்கள் கேட்ட கேள்விகளை கேட்டேன். அவர் சொன்னார்

" நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரை தான் தம்பி." அவர் அப்படி சொன்னதும் நான் ஆர்வமாக " ஓனீங்களும் மதுரைதானா, மதுரையில எங்கே" என்று கேட்டேன். " சொல்றேன். முதல்ல என் கதையை கேளு தம்பி. எங்காப்பா பேரு காயாம்பூ. மதுரை மில்ல வேலை பார்த்தார். எங்க வீட்டுக்கு பக்கத்து தோப்பில ஒரு பயிற்சி பள்ளி வச்சிருந்தார். அவர் கம்பெடுத்து சிலம்பாட்டம் ஆடினார்னா எல்லொரும் அவருக்கு சலாம் போடுவாங்க. என்னை ஒரு நல்ல மனுஷனுக்கு தான் கட்டி கொடுத்தார். அப்புறமா மகராசன் போய் சேர்ந்துட்டாரு. நான் சின்னவளா இருக்கச்சையே என் தாயார் காலமாகி விட்டார். எனக்கு தாய்க்கு தாயா தந்தையா இருந்தார் அவர்" இப்படி சொல்லிவிட்டு குருவம்மா தன் மூக்கை சிந்தினார். அவர் அழுதிருக்க கூடும் என்று ஊகித்தேன்.

" எங்களுக்கு தங்க விக்கிரம் மாதிரி ஒரு பையன் பிறந்தான். குழந்தையிலேயே அவன் கொஞ்சம் உக்கிரமா இருந்ததால அவனுக்கு உக்கிரபாண்டினு பெயர் வைச்சோம். எங்க வீட்டுக்காரர் ஒரு சீக்காளி. பையன் கொஞ்சம் பெரியவனாக ஆகி ஸ்கூல் போயிட்டிருக்கச்ச அவர் திடீர்னு ஒரு நாள் மண்டையை போட்டுட்டார். நான் பூ பொட்டு இழந்து விதவையானேன். அது வரைக்கும் ஒழுங்கா இருந்த என் மகன் கெட்ட சகவாசத்தில் பள்ளிக்கூடத்துக்கு போகாம திருடறது, களவான்ரதுனு தப்பு தண்டா எல்லாம் பண்னா ஆரம்பித்தான். பள்ளிக்கூடம் போறதையும் நிறுத்திட்டான். எங்க அய்யாவுக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் அவனுக்கு பட்டறைல வேலைக்கு சேர்த்து விட்டார். அவனுக்கு ஒரு கால் கட்டு போட்டா அவன் சரியாயிடுவான்னு ஒரு நல்ல பொண்ணா பார்த்து அவனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சேன். கல்யாணத்துக்கப்புறம் அவன் இன்னும் மோசமா ஆயிட்டான். குடிச்சிட்டு வந்து அந்த பொண்ணை போட்டு அடிப்பான். அவ காதில கழுத்தில நகைகளையெல்லாம் அடகு வச்சு குடிச்சான். என்னையும் துன்புறுத்தினான். என்னோட காதில இருந்த பாம்படத்தை கழட்டி வித்துட்டான். நான் மார்கெட்டுக்கு போய் கூடைல காய்கறிகலை வாங்கி வந்து ரோட்டோரமா அவைகளை கூறு கட்டி வித்து வந்த காசில் கஞ்சி காய்ச்சி சாப்பிட்டோம். ஒரு நாள் அவன் எங்கிட்ட காசு கேட்டு என்னை அடிக்க வந்தான். நான் அவனை ஏண்டா இப்படி மிருகமா இருகேனு கேட்டு சண்டை போட்டேன். அதுக்கு அவன் ஏய் கிழவி என்னை எதிர்த்து பேசறயா இந்த வீட்டில இனிமே உனக்கு இடமில்லைனு வெளியே தள்ளி கதவை சாத்திட்டான். நான் அழுது ஒப்பாரி வச்சு கூச்சலிட்டேன். அக்கம் பக்கத்து காரங்க எல்லொரும் வேடிக்கை பார்த்தாங்க. எனக்கு அவமானமா இருந்தது. சரி கொஞ்ச நாளைக்கு அவனை பிரிஞ்சிருந்தா சரியாயிடுவான்னு நினைச்சு அங்கிருந்து மெதுவாக நடந்து பக்கத்து பஸ் ஸ்டாண்டில போயி பஸ் ஏறினேன். முந்தானையில் முடிந்து வச்சிருந்த காசில் டிக்கெட் வாங்கி பெரிய பஸ் ஸ்டாண்ட் வந்தேன். அங்கே வந்ததும் வேற எங்கே போகறதுனு தெரியலை. இப்படி ஒரு பிள்லையை பெத்ததுக்கு ஏதாவது குளம் குட்டைல விழுந்துடலாம்னு யோசிச்சு அங்கேயே உக்காந்து அழுதேன். அப்பதான் இந்த ஓட்டல் முதலாளி அங்க வந்தார். எங்கிட்ட வந்து " தாயீ ஏம்மா அழுவறீங்க. ஏதாவது கஷ்டமா? எங்கே போகணும்னு சொல்லுங்க நான் கூட்டி போறேன்னு சொன்னார். நான் அவர்கிட்ட " சாமி எனக்கு நாதியத்து போச்சு. எங்கே போறதுனு தெரியலைனு சொல்லி அழுதேன். அவர் உடனே நான் கொடைக்கனல்ல ஒரு ஓட்டல் வச்சு நடத்தறேன். இப்போ அங்கே தான் பொயிட்டிருக்கேன். என் கூட வாங்க. நீங்க தங்கறதுக்கு ஒரு அறை தறேன். உங்களால் முடிஞ்ச வேலையை செய்யுங்க. அங்கேயே சாப்பிடலாம்" என்றார். கடவுளே அவர் உருவில் வந்த மாதிரி அவரை கும்பிட்டு அவரோட இங்கே வந்தேன்" என்று சொல்லி நிறுத்தினார் குருவம்மா.

" உங்க கதையை கேட்டா மனசுக்கு கஷ்டமா இருக்கு. மதுரைல நீங்க எங்கே வசிசீங்க. உங்க பையன், மருமகள் பேர் என்ன" என்று கேட்டேன்.

அதற்கு அவர் " நாங்க வசிச்சது ஆரப்பாளையம். என் பையன் பேரு உக்கிர பாண்டி, மருமகள் தாயம்மா" என்றார். குமரேசனை கடத்திய தாயம்மாவா குருவம்மாவின் மருமகள் என்று நினைத்து அதிர்ந்தேன்.

தொடரும்..

கலைவேந்தன்
31-08-2011, 02:13 PM
மிக அருமையாகப்போகிறது மதுரை அண்ணா..

அனைத்து பாகங்களும் வாசித்துவிட்டேன். கதை அமைப்பும் சொல்லிச்செல்லும் விதமும் பாராட்டுதல்களுக்குரியவை.

தொடருங்கள்..!

மதுரை மைந்தன்
05-09-2011, 10:00 AM
மிக அருமையாகப்போகிறது மதுரை அண்ணா..

அனைத்து பாகங்களும் வாசித்துவிட்டேன். கதை அமைப்பும் சொல்லிச்செல்லும் விதமும் பாராட்டுதல்களுக்குரியவை.

தொடருங்கள்..!


உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி கலை வேந்தரே!

மதுரை மைந்தன்
05-09-2011, 10:01 AM
தம்பி அவன் தங்க கம்பி-11

" ஓ நீங்க குருவம்மாவோட மாமியா. நானும் ஆரப்பாளையத்தில உங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டில தான் பிறந்தேன்" என்றான் மாணிக்கம்.

அதைக்கேட்ட குருவம்மா " முத்தையாவோட மகனா நீ. என் மகன் என்னை வீட்டை விட்டு துரத்தும் போது நீ ரொம்ப சின்ன பையன். இப்போ வளர்ந்து அடையாளமே தெரியலை. ஆமாம் நீ ஏன் விட்டை விட்டு வெளியே வந்தே. பரிட்சைல தோத்துட்டோம்னா. அப்படியெல்லாம் செய்யக் கூடாது தம்பி. அது சரி இந்த தம்பியை எப்படி தெரியும் உனக்கு?" என்றார்.

குருவம்மாவும் அவளது கண்வரும் குமரேசனை புட்டு திருவிழாவின் போது கடத்தி ஒரு பிள்ளை பிடிக்கும் கும்பலிடம் விற்க இருந்த போது தான் குமரேசனை தூக்கி கொண்டு மதுரையைவிட்டு வெளியேறியதையும் லார் ட்ரைவர் முனுசாமி தங்களை இங்கு கொண்டு வந்தைதையும் விளக்கினான் மாணிக்கம்.

" அட படுபாவிகளா, இந்த பால் மணம் மாறாத பையனை எப்படி அவனோட பெற்றோர்களிடமிருந்து பிரிக்க மனம் வந்தது? இந்த பையனோட அப்பா அம்மாவை எனக்கு நல்லா தெரியும். நீ இவனை உடனே கொண்டுபோய் அவங்க கிட்ட ஒப்படைச்சுடு. பாவம் அவங்க மனம் என்னா பாடு படும்?" என்றார் அவர்.

" சரிம்மா அப்படியே செய்யறேன்" என்று சொல்லி உறக்கத்தில் ஆழ்ந்தான் மாணிக்கம்.

" நீங்க ஏன் அப்போ குமரேசனை எங்களிடம் ஒப்படைக்கலை?" என்று கேட்டார் கதிரேசன்.

" ஒப்படைக்க முயற்சி செஞ்சேன். ஆனால் விதி விளையாடிடுச்சு. குமரேசன் கிட்ட ஏற்பட்ட சில முன்னேற்றங்கள் எனக்கு நம்பிக்கை அளிச்சது. அவனை பூரணமா குணப்படுத்தி ஒப்படைக்கணும்னு விரும்பினேன். அப்பதான் அவனை கூட்டி வந்ததுக்கு அர்த்தம் இருக்கும்னு நினைச்சேன். அவன் முன்போல் தனக்கு தானே சிரித்துக் கொள்வதை நிறுத்தியிருந்தான். முன்போல் இருந்த இடத்திலேயே இயற்கை கழிவுகளை செய்யாமல் எங்களிடம் கைகைகள் மூலம் டாய்லெட்டுக்கு அழைத்து செல்ல சொன்னான். ஒரு சில வார்த்தைகளும் பேசத் தொடங்கினான். இதற்கெல்லாம் காரணம் நாங்கள் அவனுடன் தொடர்ந்து உரையாடி அவனுடன் விளையாடியதுதான். சீசன் இல்லாத நாட்களில் ஓட்டலுக்கு வர் உபவர்கள் குறந்திருக்கும்போது நான் அவனை வெளியே அழைத்து சென்று பல இயற்கை காட்சிகளை காண்பித்தேன். பக்காதிலிருந்த மலைச்சரிவின் புல் தரையில் அமர்ந்து அவனுடன் எனக்கு தெரிந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டேன். அவனுக்கு புரிந்ததோ இல்லையோ அவன் தலை ஆட்டுவான்.

ஒரு நாள் லாரி டிரைவர் முனுசாமி முன்போல் மதுரையிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு கொடைக்கானலுக்கு வந்திருந்தார். ஓட்டலுக்கு வந்த அவர் என்னை தனியாக அழைத்து போய் " மாணிக்கம் தம்பி நான் உனக்கு ஒரு கெட்ட செய்தி சொல்லப்போறேன். மதுரையில குமரேசனோட அப்பா அம்மா இருவரும் ஒருவர் பின் ஒருவராக காலமாகி விட்டார்கள். குமரேசனோட அண்ணனை வளர்க்க கிராமத்திலிருந்து அவனோட மாமா வந்திருக்கார். அவர் ரொம்ப நல்லவர் தான் ஆனா அவரோட சம்சாரத்துக்கு கதிரேசனைக் கண்டா பிடிக்கலை. அந்த தம்பி பாவம். அதனால நீ இப்போ குமரேசனை அவங்க கிட்ட கூட்டி போகாதே. கொஞ்சம் பொறு. காலம் வரும் போது அவனை நாம அவங்க கிட்ட ஒப்படைச்சுடலாம். இத்தனை நாள் அவனை பாத்துக்கிட்ட. அவன்கிட்ட நல்ல முன்னேற்றம் இருக்கு.னான் சொன்னதை ஞாபகம் வைச்சுக்கோ." என்றார்.

நான் தயங்கியவாறு அவரிடம் " எங்க வீட்டில அப்பா அம்மா எப்படி இருக்காங்க?" என்று கேட்டேன். அதுக்கு அவர் " அவங்க ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க. நீ எதுக்கும் ஒரு தடவை அவங்களை பார்த்து விஷய்ங்களை சொல்லு. அவங்க உனக்கு ஆத்ரவா இருப்பாங்க." என்றார். நான் ஒன்றும் சொல்ல தோன்றாமல் தலையை ஆட்டினேன்.

அத்ற்கு பிறகு குமரேசனை எப்படி பூரண குணமாக்குவது, அவனை வளர்த்து ஆளாக்குவது என்று கவலையில் மூழ்கினேன். அந்த சமயத்தில் தான் குமரேசனின் வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்த கொடைக்கானலுக்கு வந்தார் மதுரையை சேர்ந்த பிரபல மில் அதிபர் ராமனாதன் செட்டியார்.

தொடரும்...

கீதம்
06-09-2011, 06:36 AM
தொடர் திருப்பங்கள் கதைக்கு வலு சேர்த்து ரசிக்கவைக்கின்றன. எதிரில் நின்று கதை கேட்பதுபோல் வசனங்கள் இயல்பாக உள்ளன. தொடருங்கள். தொடர்கிறேன்.

மதுரை மைந்தன்
08-09-2011, 10:54 AM
தொடர் திருப்பங்கள் கதைக்கு வலு சேர்த்து ரசிக்கவைக்கின்றன. எதிரில் நின்று கதை கேட்பதுபோல் வசனங்கள் இயல்பாக உள்ளன. தொடருங்கள். தொடர்கிறேன்.

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சகோதரி!

மதுரை மைந்தன்
08-09-2011, 10:56 AM
தம்பி அவன் தங்க கம்பி-12

மதுரை மில் அதிபர் ராமனாதன் செட்டியார் கொடைக்கானலுக்கு சீசன் தவறாமல் வருவது வழக்கம். அவருக்கென்று சொந்தமாக பங்களா ஒன்று எங்கள் ஓட்டலுக்கு அருகாமையில் இருக்கிறது. அவரும் அவரது மனைவியும் வாக்கிங் சென்று விட்டு திரும்பும்போது ஓட்டலில் வந்து அமர்ந்து சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு சாப்பிடவும் செய்வார்கள். அவர்களுக்கு எங்கள் ஓட்டல் சாப்படு பிடித்துபோய் விட்டது.அப்படி ஒரு தடவை வந்த போது அவர்களுடன் கூட அவர்களுடைய மகனையும் கூட்டி வந்தார்கள். செட்டியார் ஓட்டல் முதலாளியிடம் " இவன் என் பையன் சேகர். அமெரிக்காவில் மருத்துவ துறையில் ஆராய்ச்சி பண்ணுகிறான்" என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.

பிறகு பக்கத்து டேபிளை சுத்தம் பண்ணிக்கிட்ட்ருந்த என்னிடம் வந்து " தம்பி உன் கூட ஒரு சின்ன பையன் இருக்கானே அவனை கூட்டி வா" என்றார். நான் தயங்கியதை பார்த்து அவர் " பயப்படாதே. இது என் பையன் சேகர். அமெரிக்காவில் பெரிய டாகடர். உன் கூட இருக்கிற பையனை குணப்படுத்துவான்" என்றார். அவர் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய நான் குமரேசனை அழைத்து வர ஓடினேன்.

குமரேசனை அவர்கள் முன்னால் நிறுத்தினேன். சேகர் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சின்ன டார்ச் லைட்டை எடுத்து குமரேசனின் கண்களில் ஒளியை பாய்ச்சினார். கண்ணில் வெளிச்சம் பட்டவுடன் குமரேசனின் இமைகள் இயல்பாக மூடி திறந்தன. குமரேசனுக்கு மிக அருகில் சென்று கண்ணின் உட்புறத்தை பார்த்தார். பின் திடீரென்று வலது பக்கம் சாய்ந்தார். அப்போது அவர் பார்வை குமரேசனின் கண்களை விட்டு அகலவில்லை. அடுத்தாற்போல் இடது பக்கம் சாய்ந்தார். பிறகு என்னிடம் " I am a neurosurgeon. This boy's natural instincts are o.k. This shows that his brain is healthy " என்றார். நான் தயங்கியவாறு " எனக்கு ஆங்கிலம் வராது. நான் படிக்கலை நீங்க தமிழ்ல சொன்னா புரிஞ்சுக்குவேன் என்றேன். அவர் சிரித்துக் கொண்டே "அப்படியா, சரி. இந்த பையனுக்கு இயற்கையான செயல்பாடுகள் உள்ளன. இது அவன் மூளையின் ஆரோக்கியத்தை காட்டுகிறது. ஆனால் அவனுடைய உடல் வளர்ச்சிக்கு ஏற்ற அளவு மூளை வளரவில்லை என்பது பார்த்தால் புரிகிறது. பிறவியிலிருந்தே இவன் இப்படித்தானா?" என்று கேட்டார்.

நான் அவரிடம் குமரேசனை எப்படி சந்தித்தேன் எப்படி நாங்கள் கொடைக்கானலுக்கு வந்தோம் என்று சொன்னேன். பிறகு குருவம்மாவின் முயற்சியால் அவனுக்கு பேச்சு வந்ததும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சில மாற்றங்கள் ஏற்பட்டதையும் கூறினேன். அவர் உடனே என் கைகளைப் பிடித்து குலுக்கி " நீ பெரிய சாதனை பண்ணியிருக்கிறாய். அமெரிக்காவில் இந்த மாதிரி மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளை குணப்படுத்த பெரிய உருவத்தில் மனித பொம்மைகளை உருவாக்கி இருக்கிறோம். இந்த பொம்மைகள் பேசும், பாடும் சிரிக்கும். இவைகளுடன் இந்த குழந்தைகள் இருந்தால் அவர்களின் மூளை வளர்ச்சி அடைகிறது என்று கண்டு பிடித்துள்ளோம். நீ இந்த பையனுக்கு அந்த பொம்மைகள் மாதிரி எப்பவும் கூட இருந்து அவனிடம் தொடர்ந்து பேசி விளையாடியதால் தான் அவனிடம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் உன்னால் தொடர்ந்து இப்படி செய்ய முடியுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அப்படி நீ செய்யாவிட்டால் இந்த பையனின் மூளை வளர்ச்சி அவனுடைய உடல் வளர்ச்சியுடன் ஒத்து போகாமல் இருப்பான். அவனை இந்த சமூகம் அப்பவும் கிறுக்கு பைத்தியம் என்று தான் சொல்லும். அதனால் நீ இந்த பையனை என்னொடு அனுப்பு. நான் இவனை அமெரிக்கா கூட்டி போய் நன்றாக குணப்படுத்துகிறேன்" என்றார். குமரேசனை என்னால் சரியாக பார்த்துக் கொள்ள முடியாவிட்டால் அவனுடைய மூளை வளர்ச்சி ஸ்தம்பித்து விடும் என்று கேட்டு பயந்தேன்.

சற்று நேர மவுனத்திற்கு பிறகு தொடர்ந்த மாணிக்கம் கதிரேசனிடம் " சமீபத்தில வந்த தெவத்திருமகள் படம் பார்த்துருக்கீங்களா. அதில் வரும் விக்ரம் காரெக்டர் போல குமரேசன் ஆகிவிடுவானோ என்று பயந்த நான் அவருடைய ஆலோசனையை ஏற்றுக் கொண்டேன்". குமரேசன் அவருடன் அமெரிக்காவிற்கு பயணமானான்.

தொடரும்...

கீதம்
08-09-2011, 10:13 PM
மருத்துவரின் நேரடி கண்காணிப்பும் பரிசோதனைகளும் குமரேசனுக்குத் தேவைப்படும் நேரத்தில் முறையாக வந்து சேர்ந்திருக்கிறது. அதற்கும் மாணிக்கத்தின் முயற்சியே காரணம். மாணிக்கம், குருவம்மா, ஓட்டல் முதலாளி, மற்றும் மதுரை மில் அதிபர், மருத்துவர் அனைவருமே மிகுந்த மனிதாபிமானத்துடன் நடந்துகொள்கின்றனர். ஒரு மனவளர்ச்சியற்ற குழந்தையைச் சுற்றி இப்படிப்பட்டவர்கள் இருப்பதாலேயே அவனுடைய வளர்ச்சி பெரிதும் முன்னேற்றம் காணத் தலைப்படுகிறது. கதையைத் தொய்வில்லாமல் சரளமாகக் கொண்டுசெல்வதற்கு என் பாராட்டுகள்.

கடைசியாய் சிறு நெருடல்: கதை நடப்பது சில வருடங்களுக்கு முன். அப்போது தெய்வத் திருமகள் திரைப்படம் பற்றி உதாரணம் சொல்வது பொருந்தவில்லையே...

மதுரை மைந்தன்
17-09-2011, 11:35 AM
மருத்துவரின் நேரடி கண்காணிப்பும் பரிசோதனைகளும் குமரேசனுக்குத் தேவைப்படும் நேரத்தில் முறையாக வந்து சேர்ந்திருக்கிறது. அதற்கும் மாணிக்கத்தின் முயற்சியே காரணம். மாணிக்கம், குருவம்மா, ஓட்டல் முதலாளி, மற்றும் மதுரை மில் அதிபர், மருத்துவர் அனைவருமே மிகுந்த மனிதாபிமானத்துடன் நடந்துகொள்கின்றனர். ஒரு மனவளர்ச்சியற்ற குழந்தையைச் சுற்றி இப்படிப்பட்டவர்கள் இருப்பதாலேயே அவனுடைய வளர்ச்சி பெரிதும் முன்னேற்றம் காணத் தலைப்படுகிறது. கதையைத் தொய்வில்லாமல் சரளமாகக் கொண்டுசெல்வதற்கு என் பாராட்டுகள்.

கடைசியாய் சிறு நெருடல்: கதை நடப்பது சில வருடங்களுக்கு முன். அப்போது தெய்வத் திருமகள் திரைப்படம் பற்றி உதாரணம் சொல்வது பொருந்தவில்லையே...

குமரேசன் காணமல் போனது மாணிக்கம் அவனை கொடைக்கானலுக்கு கொண்டு சென்றது நடந்தது சுமார் 20 வருடங்களுக்கு முன்பு. கதிரேசனிடம் மாணிக்கம் நடந்தவைகளை கூறுவது இன்று. உங்களுடைய நெருடலுக்கு விடை கிடைத்துருக்குமென நம்புகிறேன். நன்றி சகோதரி

மதுரை மைந்தன்
17-09-2011, 11:38 AM
தம்பி அவன் தங்க கம்பி-13

அமெரிக்காவுக்கு குமரேசனை கூட்டி செல்லும் முன் ராமனாதன் செட்டியார் என்னிடம் " இந்த பையனோட பெற்றோர்கள் விலாசம் இருந்தால் அவர்களிடம் சென்று அனுமதி பெற்று கூட்டி செல்ல்லாம்" என்றார். அவரிடம் குமரேசனின் பெற்றோர்கள் காலமாகி விட்டதையும் குமரேசன்னின் அண்ணா கதிரேசன் அவரின் மாமாவின் தயவில் வாழ்ந்து வருவதையும் கூறினேன். அதற்கு அவர் " ஓ அப்படியா! அப்போ இந்த பையனை நாங்க எங்க பையனா வளர்க்கிறோம்" என்று கூட்டி சென்றார்கள்.

அவர்களுடன் செல்ல மாட்டேன் என்று முதலில் அடம் பிடித்தான் குமரேசன். குருவம்மாவைக் கட்டிக் கொண்டு முகத்தை திருப்பி கொண்டான். அதை பார்த்து எனக்கு கண்களில் நீர் வழிந்தது. குருவம்மாவும் அழுதார். ராமனாதன் செட்டியார் தன் கார் டிரைவரை அனுப்பி ஒரு பெரிய கரடி பொம்மையை வாங்கி வரச் செய்தார்.கரடி பொம்மையை கையில் வாங்கியதும் அதையே தன் அகல கண்களை விரித்து பார்த்துக் கொண்டிருந்த குமரேசனை அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள். செல்லும் முன் செட்டியார் அவர்கள் என்னிடம் தனது முகவரியை கொடுத்து உனக்கு எந்த உதவி வேண்டுமென்றாலும் என்னை வந்து பார் என்று கூறினார்.அவர்களின் கார் சென்ற பாதையே நான் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். குமரேசன் குணமாகி அவனுக்கு நல் வாழ்க்காஇ கிடைக்க இறைவனிடம் வேண்டினேன். ஆனால் என்னுள் ஒரு வெறுமை சூழ்ந்து கொண்டது. அதற்கு பின் நானும் குருவம்மாவும் இயந்தரங்களாக இயங்கி வந்தோம்.

அப்ப்டி இருக்கையில் ஒரு நாள் குருவம்மா நோய் வாய் பட்டார். ஓட்டால் முதலாளி அவரை ஒரு நர்சிங் ஹோமில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஒரு நாள் தூக்கத்திலேயே காலமானார். நான் தான் அவரது உடலுக்கு கொள்ளி வைத்தேன். குமரேசனும் சென்று கௌருவம்மாவும் காலமான பிறகு எனக்கு அங்கிருக்க பிடிக்கவில்லை. முதலாளியிடம் என் நிலமையை சொல்லி விடை பெற்றேன். அவர் என்னிடம் எனது சம்பளத் தொகையாக ஒரு கண்ஜ்சமான தொகையை கொடுத்து " உனக்கு மீண்டும் இங்கு வந்து வேலை செய்ய விருப்பம் என்றால் தாராளமாக் வரலாம்" என்றார். நான் அவரின் பாத்ங்களில் விழுந்து வண்ங்கினேன்.

அங்கிருந்து மதுரை வந்து என் வீட்டிற்கு சென்றேன். அப்பா என்ன சொல்வாரோ என்று தயங்கி உள்ளே நுழைந்த என்னை பார்த்ததும் அவர் கண்களில் நீர் வந்தது. என் கைகளை பற்றிக் கொண்டு " எங்கேயா இத்தனை நாள் போயிருந்தே? பரிட்சைல பெயிலானா எல்லா பெற்றோர்களும் கோவிக்கதான் செய்வாங்க. அதுக்காக சொல்லாம கொள்ளாம போறதா? எப்படியோ முழுசா வந்து சேர்ந்தையே. சந்தோசம் தான்" என்று சொன்னார். எனது தாயாரும் " வாய்யா, இத்தனை நாள் எங்கிருந்தே? ஒழுங்கா வேளைக்கு சாப்பிட்டயா" என்றெல்லாம் கேட்டு அன்பு மழை பொழிந்தார்.

சில நாட்கள் கழித்து நான் செட்டியாரை அவர் தந்த விலாசத்தில் போய் பார்த்தேன். " வா தம்பி என்ன விசயம்?" என்று கேட்டார் அவர். " அய்யா நான் கொடைக்கானல் வேலையை விட்டுட்டேன். இப்போ இங்கே ஆரப்பளயத்தில் என்னொட பெற்றோர்களோட இருக்கிறேன். எனக்கு நீங்க ஏதாச்சும் வேலை போட்டு கொடுத்தீங்கனா உதவியா இருக்கும்" என்றேன். அவரிடம் வேலை செய்தால் குமரேசனைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும் என்ற ஆவலில் கேட்டேன். அவரும் சம்மதித்தார்.

தொடரும்....

கீதம்
18-09-2011, 09:27 AM
குமரேசன் காணமல் போனது மாணிக்கம் அவனை கொடைக்கானலுக்கு கொண்டு சென்றது நடந்தது சுமார் 20 வருடங்களுக்கு முன்பு. கதிரேசனிடம் மாணிக்கம் நடந்தவைகளை கூறுவது இன்று. உங்களுடைய நெருடலுக்கு விடை கிடைத்துருக்குமென நம்புகிறேன். நன்றி சகோதரி

நான் புரிந்துகொண்டதில்தான் தவறு என்று நினைக்கிறேன். அந்தப் படத்தை உதாரணமாகச் சொன்னால் அன்றைய மனநிலை அவர்களுக்கு எளிதில் புரியும் என்பதற்காக சொல்லியிருக்கிறீகள் என்பதைப் புரிந்துகொண்டேன். விளக்கத்துக்கு நன்றி.

குமரேசனுக்கு முறையான மருத்துவ உதவி கிடைத்ததும், மாணிக்கம் மறுபடியும் பெற்றோரோடு இணைந்ததும் மிகவும் மகிழ்வைத்தருகின்றன. அன்போடு கவனித்துக்கொண்ட குருவம்மாவின் மறைவும், குமரேசனின் பிரிவும் மாணிக்கத்துக்குள் உண்டாக்கியிருக்கும் மனமாற்றத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறது. மாணிக்கத்தைப் போலவே குமரேசனைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் அடுத்தப் பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

சிவா.ஜி
18-09-2011, 02:18 PM
கதை அருமையாய் நகர்கிறது...அடுத்து என்ன என ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது. தொடருங்கள் நண்பரே.

மதுரை மைந்தன்
24-09-2011, 10:59 AM
நான் புரிந்துகொண்டதில்தான் தவறு என்று நினைக்கிறேன். அந்தப் படத்தை உதாரணமாகச் சொன்னால் அன்றைய மனநிலை அவர்களுக்கு எளிதில் புரியும் என்பதற்காக சொல்லியிருக்கிறீகள் என்பதைப் புரிந்துகொண்டேன். விளக்கத்துக்கு நன்றி.

குமரேசனுக்கு முறையான மருத்துவ உதவி கிடைத்ததும், மாணிக்கம் மறுபடியும் பெற்றோரோடு இணைந்ததும் மிகவும் மகிழ்வைத்தருகின்றன. அன்போடு கவனித்துக்கொண்ட குருவம்மாவின் மறைவும், குமரேசனின் பிரிவும் மாணிக்கத்துக்குள் உண்டாக்கியிருக்கும் மனமாற்றத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறது. மாணிக்கத்தைப் போலவே குமரேசனைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் அடுத்தப் பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

உங்களுடைய பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி சகோதரி!

மதுரை மைந்தன்
24-09-2011, 11:01 AM
கதை அருமையாய் நகர்கிறது...அடுத்து என்ன என ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது. தொடருங்கள் நண்பரே.


உங்களுடைய பாராட்டுக்கள் என்னை ஊக்கப்படுத்துகின்றன. நன்றி நண்பரே!

மதுரை மைந்தன்
24-09-2011, 11:02 AM
தம்பி அவன் தங்க கம்பி-14

அமெரிக்காவுக்கு குமரேசனை கூட்டி செல்லும் முன் ராமனாதன் செட்டியார் என்னிடம் " இந்த பையனோட பெற்றோர்கள் விலாசம் இருந்தால் அவர்களிடம் சென்று அனுமதி பெற்று கூட்டி செல்ல்லாம்" என்றார். அவரிடம் குமரேசனின் பெற்றோர்கள் காலமாகி விட்டதையும் குமரேசன்னின் அண்ணா கதிரேசன் அவரின் மாமாவின் தயவில் வாழ்ந்து வருவதையும் கூறினேன். அதற்கு அவர் " ஓ அப்படியா! அப்போ இந்த பையனை நாங்க எங்க பையனா வளர்க்கிறோம்" என்று கூட்டி சென்றார்கள்.

குமரேசன் அமெரிக்கா சென்று சில வருடங்களுக்கு சேகர் இந்தியா திரும்பவில்லை. குமரேசன் நன்றாக குணமடைந்து வருவதாகவும் அவனை ஒத்த சிறுவர்களின் பள்ளியில் சேர்ந்து பயின்று வருவதாகவும் செட்டியார் என்னிடம் கூறினார். எனக்கும் பெற்றோர்களின் வற்புறுத்தலின் படி திருமணம் நடந்தது. தற்சம்யம் எனக்கு இரண்டு பசங்க இருக்காங்க. ஒரு பையன் ஒரு பொண்ணு" என்று சொல்லி நிறுத்தினான் மாணிக்கம். " ஓ அப்படியா எனக்கும் அதே மாதிரி தான் என்று தன் மகனையும் மகளையும் பார்த்தார் கதிரேசன்.

மாணிக்கம் தொடர்ந்தான் " பையனுக்கு என்னோட அப்பா பெயரான முத்தையா என்று வைத்தாலும் அவனை நான் குமரு என்று தான் கூப்பிடுவேன். மகளுக்கும் குருவாம்பாள் என்று பெயரிட்டிருக்கிறேன். சில வருடங்கள் கழித்து ஒரு நாள் சேகர் தனது குடுமப்த்துடன் குமரேசனையும் கூட்டிக் கொண்டு மதுரைக்கு வரப் போவதாக செட்டியார் என்னிடம் கூற எனக்கு ஆனந்தத்தில் மனம் துள்ளி குதித்தது. மதுரை விமான நிலையத்திற்கு நானும் சென்றிருந்தேன். விமானத்தை விட்டு கீழிறங்கிய சேகருக்கு பின்னால் அரும்பு மீசையுடன் கண்களில் கூலிங் க்ளாஸ் அணிந்து வந்த குமரேசனை என்னால் ஒரு நிமிடம் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. சேகர் தனது பெற்றோர்களை அவர்களின் பாதங்களில் விழுந்து வண்ங்கினார். குமரேசனையும் அவ்வாறே செய்ய சொன்னார். கால்களில் வீழ்ந்த குமரேசனை எடுத்து அணைத்துக் கொண்டார் செட்டியார். நான் சேகரிடம் குசலம் விசாரித்து விட்டி குமரேசனிடம் " என்ன குமரு சௌக்கியமா?" என்று கேட்டேன். குமரேசன் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு சேகரிடம் " அண்னா யார் இவர்?" என்று கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. நான் கொடைக்கானல், ஷண்முகவிலாஸ் ஓட்டல், குருவம்மாள் என்று நடந்தவைகளை அவனிடம் கூற " சாரி உங்களை நான் இதுக்கு முன்னாலே பார்த்ததே இல்லை என்றதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. மூன்றாம் பிறை படத்தில் கடைசி காட்சியில் குணமடந்த ஸ்ரீதேவி கமல காஸனை தெரியாதபோன போது கமலுக்கு என்ன மன நிலை இருந்ததோ அதே மாதிரி நான் உணர்ந்தேன். சேகர் என்னிடம் கண்ஜாடை செய்து என்னை சற்று அமைதி படுத்தினார்.

வீடு வந்து சேர்ந்த பிறகு தனிமையில் என்னை சந்தித்த சேகர் குமரேசன் குணமடைந்து வருகிறான் என்றும் அவன் வீட்டிலிருந்தே பள்ளி பாடங்களை ஒரு ட்யூட்டர் மூலமாக கற்கிறான் என்றும் அவனுடைய மூளை வளர்ச்சி இன்னும் பூர்த்தியாகவில்லை என்றும் கூறினார். குமரேசனின் மூளையின் ஒரு பகுதியில் சிறிது ரத்தம் உறந்திருப்பதை கண்டுபிடித்ததாகவும் அந்த உறைந்த ரத்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் சரி பண்ண முடியும் என்றும் கூறினார். எப்போது அந்த அறுவை சிகிச்சை பண்னப் போகிறீர்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் குமரேசனின் உடல் வளர்ச்சி தேற வேண்டும் அப்போது தான் அறுவை சிகிச்சையை அவனால் தாங்கி கொள்ள முடியும் என்றார்.

மாணிக்கத்தை இடை மறித்த கதிரேசன் " குமரேசன் இந்தியா வந்திருந்த போது ஏன் எங்களிடம் கூடிக் கொண்டு வரவில்லை?" என்று கேட்டார். அதற்கு மாணிக்கம் " குமரேசன் பூரண குணமடையாத நிலையில் அவனை உங்களிடம் ஒப்படைக்க மனம் வரவில்லை. மேலும் அந்த சமயத்தில் உங்களுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்துக் கொண்டிருந்தார்களென்று கேள்விப் பட்டோம். அந்த சமயத்தில் குமரேசன் அங்கு வந்தால் மூளை வளர்ச்சி குன்றிய அவனை வைத்து உங்களுக்கு பெண் கொடுக்க பெற்றோர்கள் தயங்குவார்கள் என்று செட்டியார் தடுத்து விட்டார்" என்றான் மாணிக்கம்.

தொடரும்

கீதம்
28-09-2011, 07:40 AM
நாம் மிகுந்த பாசம் வைத்திருக்கும் ஒருவர் எந்த சூழலிலாவது நம்மை மறந்துபோனால் உண்டாகும் தவிப்பு சொல்லிமாளாது. பாவம் மாணிக்கம்.

அடுத்ததாய் நடந்தவற்றை அறியும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

வெங்கி
28-09-2011, 09:07 AM
இரண்டாம் பாகம் துவக்கத்தில் சோகமாக ஆரம்பித்து, முடிவில் திடீர் திருப்பமாக முடித்தது... நல்ல கதையோட்டம் ...பாராட்டுக்கள்

மதுரை மைந்தன்
28-09-2011, 10:26 AM
தம்பி அவன் தங்க கம்பி- இறுதி பாகம்

மாணிக்கம் தொடர்ந்தார் " வருடங்கள் உருண்டோடின. குமரேசனுக்கு மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரகமாக நடை பெற்று மற்ற இளைஞ்ர்களைப் போல கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்று தன்னுடன் வேலை பார்த்த தமிழ் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு உடனேயே இந்தியாவுக்கு வந்தான்".

கதிரேசன் இடை மறித்து " இந்த முறை உங்களை அடையாளம் கண்டு கொண்டானா? எங்களை வந்து பார்க்கும் எண்ணம் தோன்றியது எப்படி?" என்று கேட்டார்.

" அமெரிக்காவில் குமரேசன் பூரண குணம் அடைந்த பிறகு ஒரு நாள் சேகர் அவனிடம் அவனுடைய பிறப்பு வளர்ப்பு விவரங்களோடு என்னைப் பற்றியும், குருவம்மா, செட்டியார் இவர்களைப் பற்றி கூறவும் குமரேசனுக்கு எங்களை பார்க்கும் ஆவல் அதிகரித்திரிக்கிறது. மதுரை வந்தவுடன் முதலில் என்னை கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டார். அமெரிக்காவில் உள்ல ஒரு ஐடி கம்பெனி இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் ஒரு கிளையை துவக்கி குமரேசனை அதன் மானேஜராக நியமித்திருந்தார்கள். அந்த கம்பெனியின் அலுவலகம் மற்றும் தொழிற்சாலை இவற்றிற்காக நிலம் வாங்க வேண்டி இங்கு அவனியாபுரம் அருகில் உள்ல கிராமத்திற்கு என்னையும் அழைத்து சென்றார் குமரேசன். அங்கு அந்த நிலத்தை கண்காணிப்பவர் வீட்டிற்கு சென்றோம். அது உங்களுடைய மாமா வீடு. அங்கே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்ப் படத்தில் நீங்களும் குமரேசனும் சின்ன வயசில் இருந்த புகைப்ப்டத்தை பார்த்தோம். குமரேசன் குணமாகி வளர்ந்து பெரிய மானேஜராக வந்ததைப் பார்த்து உங்க மாமா ஆனந்த கண்ணீர் விட்டார். அவரிடமிருந்து தான் உங்களுடைய ஆரப்பாளையம் வீட்டு விலாசத்தை அறிந்தோம். மீதி நனந்தவை உங்களுக்கு தெரியுமே" என்று சொல்லி முடித்தார்.

கதிரேசன் " என் தம்பியை காப்பாற்றி அவன் குணமடந்து நல் வாழ்க்கை வாழ காரணமாக இருந்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை" என்றார். தெவனாகி சிரித்துக் கொண்டே " மதுரையில் இன்று ஒரு பெரிய திருவிழா. அதில் நாம் எல்லோரும் கலந்துகொள்வோமா?".

" என்ன திருவிழா அண்ணி?" என்று கேட்ட குமரேசனிடம் " புட்டுத் திருவிழா" என்று அவர் பதிலளிக்க அனைவரும் சிரித்தனர்.

முடிவுற்றது


முடிவுரை:

இந்த கதை எனது உறவினரின் பையன் பற்றிய உண்மைக் கதை. மூளை வளர்ச்சி குன்றிய அவன் காணாமல் போனது அவ்ர்களது குடும்பத்திற்கு பெரிய அதிர்ச்சி. காவல் நிலையத்தில் பதிந்து வைத்தும் செய்தி தாள்களில் விளம்பரம் கொடுத்தும் பையன் இன்று வரை கிடைக்கவில்லை. எங்கு சென்றாலும் குறிப்பாக கோவில் வாசல்களில் பிச்சை எடுப்பவர்களின் தாடிகளுக்குள் தனது காணாமல் போன பையபன் ஒளிந்திருக்கிறானா என்று தேடி சோகக் கடலில் மூழ்கும் அவர்கள நினைத்து ரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். அவர்கள் அந்த பையனை கைவிட்டு விடவில்லை. பெரிய குடும்பத்தில் பெண்களின் திருமணங்கள் பிள்ளைகளின் படிப்பு என்று அன்றாடக் கவலைகளில் அடித்துச் செல்லப்பட்டவர்களுக்கு இந்த பையனுக்கு வேண்டியிருந்த விசேட கவனிப்புக்களை செய்ய முடியாமல் போனது கொடுமை. அந்த பையனுக்கு என்னால் எதுவும் செய்ய முடியாத கையாலாக தனத்தை எண்ணி வெட்கி தலை குனிகிறேன்.

அந்த பையன் குணமாகி இன்று அவர்கள் முன் வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தேன். இந்த கதை உதித்தது. கதையில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் எனது சொந்த கற்பனையே. இன்று உலகில் எனத மூலையிலாவது அவன் நலமாக இருப்பான் என்று நம்புகிறேன்.

இந்த கதையை பாராட்டி பின்னுட்டங்கள் இட்ட மன்றத்து நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

அன்புரசிகன்
29-09-2011, 06:36 AM
கதை நெடுகிலும் திருப்பங்களை காட்டி அழகாக கதையை நகர்த்தியுள்ளீர்கள். சுவாரசியம் குன்றாது தொடர்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

உங்கள் கற்பனை நிசத்திலும் நடக்கும் என்று நினைத்தால் மனம் பூரிக்கிறது. ஆனால் நடக்குமா என்பது தான் சந்தேகம். முடிவுரை பார்த்து மிக வேதனையாக உள்ளது... சில வேதனைகள் எதிரிக்கும் வரக்கூடாது என்று நினைப்பதுண்டு. அதில் இதுவும் ஒன்று என நினைக்கிறேன். கற்பனை நிசக்க பிரார்த்தனைகள்.

கீதம்
29-09-2011, 10:03 AM
தொடர்கதைகளைத் தொடங்கிய அதே வேகத்தோடு சுவாரசியம் குறையாமல் முடிக்கும் தாங்கள் இந்தக் கதையையும் அதேபோல் கொண்டுசென்று முடித்ததற்கு பாராட்டுக்கள். ஆனாலும் இன்னும் தொடரும் என்று எதிர்பார்த்திருந்தபோது சட்டென்று முடிந்துவிட்டாற்போலொரு உணர்வு.

கதைக்கருவின் பின்னால் இருக்கும் சோகம் வாட்டுகிறது. காணாமற்போனவர்களைப் பற்றிய சிந்தனையின் தாக்கம் பெரிது. அதிலும் சிறுவயதில் மனநிலை சரியில்லாத நிலையில் காணாமற்போன குழந்தைகள் பற்றி நினைக்கவே வேதனையாக உள்ளது. உங்கள் உறவினர் மகன், உங்கள் எண்ணப்படி எங்காவது நல்லமுறையில் வாழ்ந்துகொண்டிருப்பார் என்றே நம்புவோம்.