PDA

View Full Version : கொல்லாமை



M.Jagadeesan
29-07-2011, 11:14 PM
தமிழாசிரியர் பாடம் நடத்தி முடித்துவிட்டு மாணவர்களைப் பார்த்து ,
"ஏதேனும் ஐயம் இருப்பின் கேளுங்கள் " என்றார்.

ஒரு மாணவன் எழுந்து , " ஐயா! வள்ளுவர் ஒரு இடத்தில் தன்னுடைய உயிர் போவதாக இருந்தாலும், பிற உயிர்களைக் கொல்லக்கூடாது என்று குறிப்பிடுகிறார். பிறிதோரிடத்தில் கொடியவர்களைக் கொல்லவேண்டும் என்று கூறுகிறார். ஏன் இந்த முரண்பாடு?"

" அப்படியா! குறட்பாக்களைக் கூறு பார்க்கலாம்"

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

கொலையின் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.

இவ்விரண்டு குறட்பாக்களும் கருத்தால் முரண்படவில்லையா ஐயா?"


" நன்று. திருக்குறள் போன்ற நீதி இலக்கியங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும். பலமுறை படிக்கவேண்டும். சிறுகதை, நாவல் படிப்பது போலப் படிக்கக் கூடாது. நுனிப்புல் மேய்பவர்களுக்கு வேண்டுமானால் திருக்குறளில் பல முரண்கள் இருப்பது போன்ற ஒரு தோற்றம் தென்படலாம். ஆனால் திருக்குறளை எழுத்தெண்ணிக் கற்றவர்களுக்கு எவ்வித முரண்பாடும் தென்படாது.

சரி, நான் கேட்பதற்குப் பதில் சொல்! தேர்வு எழுதி முடித்தபின் விடைத் தாளை என்ன செய்கிறாய்?"

" மேற்பார்வையாளரிடம் கொடுப்பேன் ஐயா !"

" அதற்கு முன்பாக என்ன செய்கிறாய்?"

" விடைத்தாளைப் பலமுறைத் திருப்பிப் பார்ப்பேன் ஐயா!"

" இரண்டரை மணிநேரம் எழுதிய ஒரு தேர்வு விடைத்தாளையே நீ பலமுறை திருப்பிப் பார்க்கும்போது , வாழ்நாள் முழுவதும் முயன்று ஒரு நூல் யாத்த வள்ளுவர் அதனை எத்தனை முறை திரும்பப் படித்திருப்பார்? உனக்குத் தோன்றும் முரண்கள் அவருடைய கண்களில் படாமலா இருந்திருக்கும்? இலக்கியங்கள் எழுதும்போது " சிங்க நோக்கு " என்ற யுத்தியை ஆசிரியர்கள் நினைவிற் கொள்வர் ."

" ஐயா! ' சிங்கநோக்கு ' என்றால் என்ன?"

" வேட்டையாடும் போது சிங்கம் முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டே செல்லும். எந்தத் திசையிலிருந்தும் தனக்கு ஊறு வந்துவிடக்கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக இருக்கும். இலக்கியங்கள் எழுதும்போது நூல்வல்லார், தான் முன்பே எழுதியவற்றையும், இனி எழுதப்போகின்ற கருத்தையும் நினைவிற் கொண்டே எழுதுவார்கள். தான் முன்பே எழுதிய கருத்திற்கு முரண்பட்டு எழுதினால் நகைப்பிற்கு இடமாகிவிடும் அல்லவா? இதைத்தான் " சிங்க நோக்கு ' என்பர். இவ்வாறு சிங்கநோக்குக் கொண்டு வள்ளுவர் எழுதிய நூல்தான் திருக்குறள். எனவே அதில் முரண்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.

திருக்குறளில் இல்லறத்தானுக்குக் கூறப்படுகின்ற கருத்துக்கள், துறவிக்குப் பொருந்தாது; துறவிக்குக் கூறப்படுகின்ற கருத்துக்கள் இல்லறத்தானுக்குப் பொருந்தாது;இவ்விருவருக்கும் பொருந்துகின்ற சில கருத்துக்கள் நாடாளும் மன்னனுக்குப் பொருந்தாது.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

இந்தக் குறட்பா அறத்துப்பாலில், துறவற இயலில் , கொல்லாமை என்ற அதிகாரத்தின் கீழ் வருகிறது. எனவே இது துறவிக்கு சொல்லப்பட்ட நீதி; இல்லறத்தானுக்குப் பொருந்தாது. புலால் மறுத்தலும் துறவிக்கு சொல்லப்பட்ட நீதிதான்; இல்லறத்தானுக்கு அல்ல. தன்னைக் கொல்ல வரும் ஒரு பாம்பை இல்லறத்தான் கொல்லலாம், ஆனால் ஒரு துறவி கொல்லக் கூடாது. கொசுக்களைக் கொல்லுகின்ற திரவங்களை ஒரு இல்லறத்தான் பயன்படுத்தலாம்; ஆனால் ஒரு துறவி பயன்படுத்தக் கூடாது.'

' ஐயா! அப்படியானால் துறவிகள் " ஆல் அவுட் " பயன்படுத்தக் கூடாது என்று சொல்கிறீர்களா?"

" நிச்சயமாக! துறவிகளைப் பொறுத்தவரையில் , "ஆள் அவுட்" ஆனாலும் " ஆல் அவுட் " பயன்படுத்தக் கூடாது. துறவிகள் எந்த ஓர் உயிரையும் கொல்லவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது. இது அவர்களுக்கு விதிக்கப்பட்ட இலக்கணம்; அதைக் கண்டிப்பாக அவர்கள் பின்பற்றியே நடக்கவேண்டும் . முற்காலத்தில் சமணத் துறவிகள் விளக்கு வைப்பதற்கு முன்பாகவே உணவை உண்டு முடிப்பார்கள். ஏனெனில் விளக்கின் ஒளியில் சிறு பூச்சிகள் விழுந்து மடிந்து விடக்கூடாது என்ற கழிவிரக்கம்தான் காரணம். அத் துறவிகள் நடந்து செல்லும்போது கூட சிறு விசிறியால் விசிறிக் கொண்டே செல்வார்கள். தங்கள் காலடி பட்டு எறும்பு போன்ற சிறிய உயிரினங்கள் மடிந்து விடக்கூடாது என்பதுதான் காரணம். எனவே கொல்லாமையும், புலால் உண்ணாமையும் துறவிகள் கண்டிப்பாகப் பின்பற்றவேண்டிய அறநெறிகள். இல்லறத்தான் இவற்றைப் பின்பற்றக்கூடாது என்பதல்ல. அது அவரவர்களுடைய விருப்பம்.

இரண்டாவது குறள் நாடாளும் வேந்தனுக்காகச் சொல்லப்பட்டது. அரசியலில் செங்கோன்மை என்ற அதிகாரத்தின் கீழ் இக்குறள் வருகிறது.
வயலில் களைகள் இருக்குமானால் அது நெல் பயிரின் வளர்ச்சியை பாதிக்கும். எனவே அக்களைகளை அகற்றவேண்டியது உழவனுடைய கடமை. சமுதாயம் என்னும் வயலில் சில கொடியவர்கள் களைகளைப் போல இருந்து சமுதாயத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பார்கள்; அவர்களை அகற்றவேண்டியது அரசனுடைய கடமையாகும். எனவே அவர்களைக் கொலை செய்து ஒறுத்தல் அரச நீதியாகும்."

" ஐயா! கொடியவர்கள் எனப்படுபவர் யார்?"

" கொலைக்குற்றம் புரிவோர், பெண்களைக் கற்பழிப்போர், வெடிகுண்டுகள் வெடிக்கச்செய்து அப்பாவி மக்களின் உயிருக்கு உலைவைக்கும் தீவிரவாதிகள், மக்களின் வரிப்பணத்தைக் கோடிக் கணக்கில் சுருட்டுகின்ற அரசியல்வாதிகள் போன்றோரைக் கொடியவர்கள் என்று குறிப்பிடலாம்."

" ஐயா! இறுதியாக ஓர் ஐயம் "

" கேள் "

" முதல் குறளில் வந்துள்ள ' வினை ' என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?"

" வினை என்றால் ' செயல் ' என்று பொருள். "

" தினை விதைத்தவன் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான் "

என்ற பழமொழியின் பொருள் என்ன?"

' நன்மை செய்தால் நல்லது நடக்கும்
பாவம் செய்தால் தீமை நடக்கும்'

என்பதுதான் இப்பழமொழியின் பொருள். தன் உண்மைப் பொருளை இழந்த பல சொற்களில் ' வினை ' என்ற சொல்லும் ஒன்று.

வள்ளுவர் ' வினை ' என்ற சொல்லை ' செயல் ' என்ற பொருளிலேயே கையாளுகிறார். ஆனால் காலப் போக்கில் ' வினை ' என்ற சொல்லுக்குப் ' பாவம் ' என்று மக்கள் பொருள் கொண்டனர். இது தவறு.

" மிகவும் நன்றி ஐயா!"

" நன்றி , மீண்டும் நாளை பார்க்கலாம்."

சொ.ஞானசம்பந்தன்
30-07-2011, 02:13 AM
குறளில் முரண்பாடாகத் தோன்றும் கருத்துகளைத் தெளிவுபடுத்துகின்ற உங்கள் பதிவு பாராட்டுக்கு உரியதே . தமிழை ஆழ்ந்து கற்க வாய்ப்பு இல்லாதோர் இதனால் மிக்க பயனடைவர் . தொடர்க .

M.Jagadeesan
30-07-2011, 03:11 AM
பாராட்டுக்கு நன்றி ஐயா!

Nivas.T
30-07-2011, 07:10 AM
மிக்க பயனுள்ள தகவலுக்கு நன்றி ஐயா