PDA

View Full Version : தமிழ் வாழ்கமதி
28-07-2011, 04:51 PM
இரண்டு மூன்று வாரமாகவே உடலுக்கு என்னவோ ஆச்சு. அல்சர்.. அசிடிட்டி.. தொண்டையில் இன்ஃபெக்*ஷன் என பலப்பல கோளாறு. திருச்சிக்கு சென்ற போது ஆரம்பித்தது மாத்தி மாத்தி பிரச்சனை. இதனால எதைப்பார்த்தாலும் எரிச்சல். கன்னாபின்னாவென்று கோபம். கொஞ்ச நாளாய் தலைச்சுற்றல் வேறு. நிதானத்தில் தான் இருக்கிறேனா என்று தெரியவில்லை. இப்போ தான் ரெண்டு நாளா சில மாத்திரைகள் சாப்பிட்டபின் கொஞ்ச தெளிவு போலிருந்தது.

நேற்று வீட்டிற்கு வரும் போதே அப்பா காத்திருந்தார். 'அவர் வீட்டில மாம்பழம் இருக்காம். போய் எடுத்திட்டு வரணும். வெயிட்டா இருக்கும்டா..'. முறைத்தேன். சரியா அந்த நேரம் பார்த்து நல்லா மழை பெய்ய ஆரம்பிச்சுடுச்சு. 'காலையில போலாம்பா..' அப்பா ஒன்னும் சொல்லல.

நடுராத்திரி முழிப்பு வந்துடுச்சு. தூக்கம் வரலை. கொஞ்ச நாளா இப்படித் தான். கஷ்டப்பட்டு தூங்கி காலைல எந்திரிக்கும் போது மணி ஏழு. யாரும் எழுப்பிவிடல. அம்மா தான் ஆரம்பிச்சாங்க. 'என்னப்பா போய்ட்டு வந்துடறியா. அவர் வேற மிலிட்டிரிகாரரு. எப்போ வர்றே.. எப்போ வர்றேன்னு போன் பண்றார்..' இவங்களுக்கு புள்ளையா பொறந்து ரொம்பவும் கொடுமைப்படுத்தறேனோன்னு தோன்றியது. 'சரி போறேன். ஆபிஸுக்கு லேட்டா போனா போச்சு' என்றவாறே கிளம்பினேன். மழை லேசாக தூற ஆரம்பித்ததால் ஷார்ட்ஸும் டிஷர்ட் மேல ஜெர்கினும் போட்டுக்கிட்டு கிளம்பினோம். வழியில் பெட்ரோல் போட அப்பா பணம் தந்தார். வீல்ல ஏர் செக் பண்ண அவர்கிட்ட சில்லறை இல்லாததால ஷார்ட்ஸிலிருந்த சில்லறையை எடுத்து கொடுத்தேன்.

மறுபடியும் ஷார்ட்சுக்குள் வைக்கப்போனவனுக்கு என்ன தோன்றியதோ ஜெர்கினின் உள்பாக்கெட்டில் வைத்து கிளம்பினேன். ரோட்டில் அவ்வளவா ஆளில்லை. நல்ல வேகத்தில் விரட்டிக்கொண்டு போனப்போ ஜெர்கின் லேசாக இருந்த மாதிரி இருந்தது. திடுக்கிட்டு வண்டியை ஓரம்கட்டி பார்த்தால் உண்மையிலேயே பர்ஸ் மிஸ்ஸிங். முகத்தில் ஏகபதட்டம் இருந்ததை என்னாலே உணர முடிந்தது. வண்டியை திருப்பி வந்த வழியெல்லாம் பாத்துக்கிட்டே வந்தோம். அப்பா 'ஒன்னும் ஆயிருக்காது. பாக்கலாம் வா' என்றார். கிடைக்கல. 'ஏன் தான் இப்படியெல்லாம் நடக்குது.

ஒன்னுமாத்தி ஒன்னா நெலமையே சரியில்லை.. ' மனசுக்குள் பொலம்பிக்கிட்டே வீட்டுக்கு கிளம்பினேன். அப்பா மறுபடி அந்த வழியே நடந்து வர்றேன்னு சொல்லி இறங்கிட்டார். கிட்டத்தட்ட வீட்டிலிருந்து இரண்டு மூன்று தூரத்தில். வீட்டுக்கு வந்து சேர்ந்தால் அப்பா அம்மாவிற்கு போன் பண்ணி சொல்லி இருக்க என்னை எதிர்கொள்ளப் போகும் பதட்டம் அம்மா முகத்தில். பர்ஸ் தொலைஞ்சு போனதை விட நான் என்ன பண்ணப்போறேங்கற கவலை அது.

'நேரமே சரியில்லை.. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..' கத்திக்கிட்டே வீட்டுக்குள் நுழைஞ்சேன். 'ஒன்னுமில்லேடா.. நல்லா தேடிப்பாத்தீங்களா...'

'அதெல்லாம் பாத்தாச்சு. கிடைக்கல. எவனாவது இந்நேரத்துக்கு எடுத்திருப்பான்.' 'கவலைப்படாத கண்டிப்பா கிடைச்சுடும். அடுத்து என்னப்பண்ணனும்னு பாரு.' அவர் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. கண்டிப்பா பர்ஸுக்காக அல்ல. என் நிலைமையை பார்த்து.

வேகவேகமாய் மோடமை ஆன் செய்தால் கனெக்ட் ஆகவில்லை. கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால் போன் லைன் செத்துக் கிடந்தது. டயல் டோனே கேக்கல. கோவம்.. ஆங்காரம் ஆத்திரம் பதட்டம்.. இப்படி மனுஷனுக்குள் அத்தனை கெட்ட குணங்களும் எட்டிப்பார்த்தது. என்னனு

பேச.. யார்கிட்ட பேச..

'தலையெழுத்து... ஏன் தான் இப்படி நடக்குதோ...'

'தம்பிக்கு போன போடும்மா...' பேங்க் அக்கவுண்ட்டில் பணம் நிறைய இருந்தது. அவனுக்கு அம்மா மிஸ்டு கால் குடுத்தார். உடனே கால் பண்ணினான் அமெரிக்காவில் இருந்து. அவன் மூலம் அக்கவுண்ட்டுக்குள் லாகின் செய்ய சொல்லி முதலில் பணத்தை அம்மா அக்கவுண்டுக்கும் அவன் அக்கவுண்டுக்கும் மாத்தினேன். ஐசிஐசிஐ மற்றும் மேன்ஹாட்டன் கஸ்டமர் கேருக்கு போன் செஞ்சு அவங்க கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி ப்ளாக் செஞ்சாச்சு. அப்போ தான் நான் செஞ்ச நிறைய தப்பெல்லாம் தெரிஞ்சுது.

என்னோட எல்லா ஒரிஜினலும் அதுக்குள்ள தான் இருந்துச்சு. பேன் கார்ட், டிரைவிங் லைசன்ஸ் டூவீலர் மற்றும் ஃபோர் வீலர் (ஒரிஜினல் மற்றும் டூப்ளிகேட்..ஹூம் அவ்ளோ வெவரம் நான்.. இன்னும் தெரியல ஏன் ரெண்டையும் வச்சிருந்தேன்னு. இந்த லட்சணத்துக்கு காரும் கிடையாது. ஒரு நாள் தூர் வாரணும்னு நெனச்சேன். அதுக்குள்ள போயிடுச்சு), ரெண்டு பேங்க் டெபிட் கார்ட், மேன்ஹாட்டன் க்ரெடிட் கார்ட், மெடிக்கல் கார்ட்.. இப்படி எல்லாமே..!

கொடுமை என்னான்னா எஸ்பிஐ கஸ்டமர் கேர்னு எத்தனை நம்பரை ட்ரை பண்ணினாலும் ஒன்னு ரிங்கே போகாது.. இல்லேன்னா ரிங் போய் கட்டாயிடும். சில நூறுகளை மட்டும் அதில் விட்டுவிட்டு மத்ததையெல்லாம் என் தம்பி மூலம் வெவ்வேறு அக்கவுண்ட்களுக்கு மாத்தினேன்.

எஸ்பிஐ டெபிட் கார்ட் பத்தி மட்டும் பெரிசா கவலையில்லை. ஏன்னா நான் ஏடிமெக்கு போனாலே 'சரியான கார்ட்டை சொருகவும்'னு ரெண்டு வாரமா கூச்சல் போட்டுச்சு. அந்தளவுக்கு டேமேஜ்.

ஒருவழியா எல்லாம் முடிச்சாச்சுனு நெனச்சு என் பாஸ்போர்ட் வாலட்டை திறந்து பாத்தா அமெக்ஸ் கார்ட்டை காணல. யூரோ கார்டான அது ஐரோப்பாவில் பயன்படுத்தறதுக்காக கம்பெனி குடுத்திருந்தது. அதப்போய் ஏன் என் பர்ஸில் வச்சிக்கிட்டு தினமும் சுத்திட்டு இருந்தேனு தயவு செஞ்சு கேட்டுடாதீங்க.. எல்லாமே கூடி வந்தா அப்படி தான்... பக்குனு இருந்துச்சு. கார்ட் நம்பர் தெரியாது. அது மட்டுமில்லை. மத்த கார்டுக்கும் நம்பர் தெரியாது. அக்கவுண்ட் லாகின் நம்பர் மட்டும் தான் தெரியும். எங்கேயும் நோட் பண்ணியும் வைக்கலங்கற பெரிய உண்மை அப்போ தான் உறைச்சுது. 'அவ்ளோ என்ன எளக்காரம்னு என்ன நானே நொந்துக்கறத தவிர வேற வழியில்லை.' அவசர அவசரமா கிளம்பி ஆபிஸுக்கு வண்டியை விட்டேன். பரபரன்னு அக்கவுண்ட் செக்ஷனுக்கு போனா அவங்களும் நம்பரை நோட் பண்ணலையாம்.

அமெக்ஸ் கஸ்டமர் கேருக்கு போன் பண்ணி நம்பர் இல்லேன்னு சொல்லி என்னைப்பத்திய விவரத்தையெல்லாம் குடுத்து ப்ளாக் செஞ்சப்பறம் தான் நிம்மதி பெருமூச்சு. அது கம்பெனி கார்டுங்கறதுனால லிமிட்டெல்லாம் கெடயாது. தேச்சுக்கிட்டே போயிட்டு இருக்கலாம். அடுத்ததா பேன் கார்ட் மற்றும் லைசென்ஸ். கொஞ்சம் நிதானத்துக்கு வந்தேன். மெடிக்கல் கார்ட் டூப்ளிகேட்டு மெயில் அனுப்பிட்டு திரும்பினா ப்ளாண்ட் விசிட்டுக்கு போகணும்னு வந்தாங்க. 'அடடா இத மறந்து போனோமேனு' அவங்க கூட அஸெம்ப்ளி ப்ளாண்டுக்கு கிளம்பி போனேன்.

அதுக்குள்ள பெங்களூரிலிருந்த பாலாஜிக்கு போன் பண்ணி ட்ரைவிங் லைசென்ஸ் எடுக்க என்ன பண்ணனும்னு கேக்க சொன்னேன். அவனும் கேட்டுட்டு சொன்னான்.

பயங்கர திறமைசாலியான நான் டிரைவிங் லைசென்ஸ் நம்பர் கூட நோட் பண்ணிருக்கல. 'எதுக்கும் போய் ஒரு எஃப்.ஐ.ஆர் குடுடா' அவன் சொல்ல ப்ளாண்டிலேந்து ஆபிஸுக்கு திரும்பி சாப்பிடும் போது தான் காலையிலேந்து எதுவுமே சாப்பிடலேன்னு உறைச்சுது. சாப்டுட்டு
டைரக்டரிடம் போய் சொல்லிட்டு 'எஃப்.ஐ.ஆர்' போடலாம்னு வீட்டுக்கு வந்தேன். அட்லீஸ்ட் லைசென்ஸ் நம்பராவது தெரியணுமே. அதுக்குள்ள அம்மாவும் அப்பாவும் வீட்டிலிருந்த எல்லா குப்பையையும் அலசிட்டாங்க.. பேன் கார்ட் ஜெராக்ஸ் மட்டும் தான் இருந்திச்சு.

'ஏன்ப்பா லைசென்ஸ் ஒரு ஜெராக்ஸ் கூடவா எடுத்து வச்சிருக்கக்கூடாது...?'

"வச்சிருந்தேம்மா. பெங்களூரில அங்க குப்பையெல்லாம் ஒழிச்சப்ப அதுவும் போயிடுச்சு போல. ' ஆனா தேவையே இல்லாத நெறைய குப்பையை கொண்டு வந்திருந்தேன். வேற வழியில்ல. புதுசா ட்ரைவிங் லைசென்ஸ் எடுக்க வேண்டியது தான்.

அப்பா 'இனி வண்டிய எடுக்காத லைசென்ஸ் இல்லாம. நான் நாளைக்கு போய் விசாரிக்கறேன். நீ படுத்து ரெஸ்ட் எடு'

அதுக்குள் அப்பா தெரிஞ்ச போலீஸ்காரருக்கு போன் பண்ணி கேட்க அவர் எஃப்.ஐ.ஆர்லாம் போட மாட்டாங்க. வேணும்னா சும்மா ஒரு கம்ப்லெயிண்ட் மட்டும் குடுங்க. இல்லாட்டி விட்டுருங்க என்று சொல்ல போலீஸ் ஸ்டேஷன் போவதை விட்டாச்சு. ஆபிஸுக்கு போன் பண்ணி
வரலேன்னு சொல்லி உட்கார்ந்திருக்கும் போது நெட் கனெக்ஷன் வந்துடுச்சு. அதுல லாகின் பண்ணி மிச்ச சொச்ச வேலையை பாத்துக்கிட்டே மன்றதுக்கு வந்தேன். என்னமோ அமரன் எழுதியிருக்காரேன்னு 'திருமணம் தடைபடுவது' திரியை திறந்து மூடிட்டேன். பேன் கார்ட் அப்ளை பண்ணனும் ஆன்லைன்ல பாஃர்ம் திறக்கும் போது தாமரையிடமிருந்து போன். 'நீ என்னடா அந்த திரியில பண்ணிட்டு இருக்க..' 'எந்த திரி. நான் மன்றத்துலேயே இல்லியே' 'திருமணம் திரியிலேயா.. அப்போல பாத்தேன்..' இப்படியே பேச்சு நீடிக்க எழுந்து போனேன். நடந்த விஷயத்தையெல்லாம் அவரிடம் கொட்டிட்டு போனை கட் செய்யும் போது தம்பியிடமிருந்து போன். என்னாச்சு என்று. அம்மா அவனிடம் பேசிக்கிட்டு இருக்கையில் ஹரீஷுக்கு கால் பண்ணினேன். என் கூட வேலை பார்ப்பவன். பழைய கம்பெனியிலேயும் ஒன்றாய் வேலை பார்த்தோம்.

வாக்கிங் வர்றோம். அப்படியே உங்க ஆபிஸ் கீய தர்றேனு சொன்னான்.

அவனும் அவன் மனைவியும் குழந்தையும் வந்தாங்க. ஹாலில் அவன் குழந்தைகூட விளையாடிட்டு இருக்கும் போது பெட்ரூமில் இருந்த மொபைல் கூப்பிட்டது கேட்கல. கடைசியா கேட்டு ஓடிப் போய் எடுத்தப்ப மூணு மிஸ்டு கால் இருந்துச்சு. ஆபிஸ்ல இருக்கும் மல்லப்பன்
பேசினார். 'பர்ஸ் காணோம்னு சொன்னீங்கல்ல. ஒருத்தர் கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷன்ல குடுத்திருக்கார். இந்தாங்க அவர் நம்பர்...' நெஞ்சு திக்கென்றது. எதிர்பாராத ந்யூஸ். உண்மையா..? வேகவேகமாக கிளம்பினேன். ஹரீஷும் வந்தான்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வது இது தான் முதல் தடவை. வாசலில் சொன்னதும் உள்ளே கை காமிச்சாங்க. ரைட்டர்கிட்ட போனா 'சப் இன்ஸ்பெக்டர போய் பாருங்க'. அங்க போனதும் 'நீங்க தானா அது? எங்க வேலை பாக்கறீங்க..?' சொன்னதும் ' என்ன இந்த மாதிரியெல்லாம் மிஸ் பண்றீங்க.' சொல்லிக்கிட்டே பர்ஸை எடுத்தார். என் விசிட்டிங் கார்டை குடுத்தேன். பர்ஸிலிருந்த என் போட்டோவை பாத்தார். 'சரி பணம் வச்சிருந்தீங்களா...' 'ஆமாம்.. ஒரு ஐந்நூறுவா பக்கம் இருக்கும்' 'குடுத்தவன் பணம் எதுவுமில்ல. சில்லறை தான் கொஞ்சம் இருந்துச்சுனு சொன்னான். அப்படியே எடுத்திருந்தா பர்ஸ கொண்டு வந்து குடுத்திருக்க மாட்டானா.. எங்கியாச்சும் தூக்கி போட்டு போயிருப்பான்..' 'பணமெல்லாம் பெரிசில்ல தான். அதுல இருக்கற ஐடெண்ட்டி கார்ட்ஸ் தான். பணம் எங்கியாச்சும் கீழ கூட விழுந்திருக்கலாம்.'

'சரி.. இந்தாங்க.' பர்ஸை திறந்து பாத்தேன். எல்லா கார்ட்டும் இருந்துச்சு. ரைட்டரிடம் தாங்க்ஸ் சொல்லிட்டு கான்ஸ்டபிளை பார்த்தேன். 'காபி டீ..ஏதாச்சும்..' 'ஒன்னும் வேணாம் சார். பர்ஸ் கிடச்சிருச்சில்ல. போயிட்டு வாங்க.' நான் எதிர்பார்த்திருந்த போலீஸ்காரங்க சத்தியமா இவங்க இல்ல.

வண்டியை ஓட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்தா அம்மா முகத்தில நிம்மதிப் பெருமூச்சு. ஹரிஷ் கிளம்பினான். தம்பிக்கு போன் பண்ணி சொல்லிவிட்டு அப்பாவிடம் பர்ஸ் தந்தால் ஒவ்வொன்றாய் எடுத்தார். 'இதெல்லாம் என்னடா குப்பை..?' கார்ட் தேச்சு வச்சிருந்த பல குப்பைங்க.

அப்பா ஒவ்வொன்றாக பிரிக்க ஆரம்பிக்க மல்லப்பன் தந்திருந்த நம்பருக்கு கால் பண்ணினேன்.

'யார் சார் வேணும்..?' 'இந்த நம்பர்லேர்ந்து..' ' இராஜேஷ்குமாருங்களா...' 'ஆமாங்க நீங்க தானே பர்ஸ...' பேச்சு வரல. 'ஆமா சார். சாயங்காலம் நடந்து வந்திட்டு இருந்தப்போ ரோட்டோரமா குப்பை பக்கத்துல இருந்துச்சு. என்னடான்னு எடுத்துப்பாத்தேன். நெறைய கார்ட்டா இருந்துச்சு. என் அக்கா ஹஸ்பெண்ட் கூட இது மாதிரி தொலச்சு இன்னும் கிடைக்கல. அதான் உங்க நம்பருக்கு கூப்பிட்டேன். நீங்க எடுக்கல. அதான் போலீஸ் ஸ்டேஷன்ல போய் குடுத்தேன்.' 'வாங்கிட்டேன் சார்.. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்.' உண்மையிலேயே என் குரல் தழுதழுத்திருந்தது.

'பரவாயில்ல சார். நான் மிடில் க்ளாஸ் சார். என்ன கஷ்டம்னு தெரியும். பணம் ஏதாச்சும் வச்சிருந்தீங்களா..?' 'ஆமா.. சில நூறு.. அதெல்லாம் பெரிசில்ல..' 'அடடா.. பணத்த எடுத்திட்டு குப்பைல போட்டுட்டான் போல.' 'இருக்கலாம்.' 'ஒரு தஞ்சாவூர் அட்ரஸ் இருந்துச்சு. அங்க
அனுப்பலாம்னு பாத்தேன். லெட்டர்லாம் கூட எழுதினேன். அப்புறமா உங்களுக்கு கிடைக்குதோ என்னவோன்னு. பர்ஸ மட்டும் போலீஸ்ல குடுத்துட்டு வந்துட்டேன்.' ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்....' 'அதெல்லாம் என்ன சார்... பெரிசா ஒன்னுமில்ல.. ஓக்கே சார். வாங்கிட்டீங்கல்ல..
சந்தோஷம்.' 'உங்க பேரு...' ' தமிழ் மணி சார்...'

போன் துண்டிக்கப்பட்டது. அப்போ தான் பாத்தேன். இதுவரைக்கும் பிரச்சனை பண்ணின பல உடல் உபாதைகள் வேறு பிரச்சனை வந்ததால் விலகி இருந்தது இன்னிக்கு.

வாழ்க தமிழ்

சிவா.ஜி
28-07-2011, 04:59 PM
நம்பிக்கையா இருக்கு மதி. இன்னும் தமிழுடன்...நல்ல மனிதமும் வாழ்ந்துகிட்டிருக்கு.
உங்க உடல் உபாதையை போக்கின இந்த உடன் உபாதை தீர்ந்ததில் மகிழ்ச்சி. நானும் உங்களைப்ப்போலத்தான் எல்லாக் கார்டுகளையும் கங்காரு மாதிரி பர்ஸில் சுமந்துகிட்டுத் திரியறேன்....இனி கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும். ஏன்னா....இங்க “தமிழ்” இல்லை.

மதி
28-07-2011, 05:05 PM
உண்மை தான்ண்ணே.. அது தான் ரொம்ப நாளா வேடிக்கை மட்டும் பாத்திட்டு இருந்த என்னை எழுத வச்சது. இன்னிக்கு நாள் முழுக்க என்னைச் சுற்றி நல்ல மனிதர்களா தான் இருந்தாங்க..

செல்வா
28-07-2011, 05:21 PM
எப்பவுமே நம்மளச் சுத்தி நல்லமனிதர்கள் இருந்துகிட்டே இருக்காங்க மதி. அதனாலதான் நாம இந்தளவிற்காவது சுதந்திரமா, சுகமா, மகிழ்ச்சியா வாழ்ந்துட்டிருக்கோம். ஆனால் கையோடு இருக்கும் விரல் மாதிரி ஏதாவது காயம் பட்டால் தான் அவங்களை நாம கவனிக்க ஆரம்பிக்கிறோம். உங்களமாதிரியேதான் நானும் ஒரு ஓட்டைப் பர்சில் எல்லாத்தையும் அடச்சிட்டு அலையிறேன். கவனமாதான் இருக்கணும் போல.

தாமரை
28-07-2011, 05:24 PM
நாமே ஒரு ஓட்டை பர்ஸ்தானே செல்வா!!!

நமக்குள்ளும் ஆண்டவன் என்னென்னவோ அடைச்சி வச்சிருக்காரில்லையா?

எப்பவாச்சும் நம்ம மதி மாதிரி காணாம போறதும் உண்டில்லையா?

யாரோ ஒருத்தர் திரும்ப அழைச்சிகிட்டு வர்ரதில்லையா?

இதெல்லாம் சகஜமப்பா

கீதம்
29-07-2011, 09:34 AM
முன்னெச்சரிக்கையாக இருக்க இது ஒரு படிப்பினை. எந்தெந்த விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டுமென்று உங்களோடு நாங்களும் புரிந்துகொண்டோம்.

நல்ல மனிதர்கள் நிறைய பேர் இன்னும் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள் என்ற உணர்வே மனத்திற்கு இதமாய் உள்ளது.

இப்படி ஒரு பெரிய பதிவை எழுதவும் அந்த நிகழ்வு உதவியதில் மகிழ்ச்சியே. உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள், மதி.

Mano.G.
30-07-2011, 01:20 AM
இவ்வளவு நாளா தம்பி மதி நல்ல கலாய்ப்பாருன்னு தான் நினைச்சேன்
இன்னைக்கு (சனிக்கிழமை காலை மலேசிய நேரம் 9.10க்கு) தமிழ் வாழ்க படித்தவுடன்
தான் இன்னொரு கதையமைப்பாளர் மன்றத்தில
இருக்கார்ன்னு.

வாழ்த்துக்கள்

மனோ.ஜி

Ravee
30-07-2011, 06:24 AM
ஐயோ ... ஒரு படம் பார்த்த திரில் ... சத்தியமா அந்த கடைசி வரிகளை படித்த போது நான் தொலைத்த பத்தாயிரமும் அதை சமாளிக்க நான் வாங்கிய முதல் கடனும் நினைவுக்கு வந்தது.... :frown:

மதி இதுக்குதான் சொல்லுறது பொறுப்பா ஒரு ஆளை பக்கத்தில வச்சு கிட்டா அவங்க பார்த்துபாங்க இல்லையா ? பணம் தொலயுற இடமும் நமக்கு தெரிந்த இடமா இருக்கும் .... அம்மா சொல்லுற பொண்ணுக்கு ஓகே சொல்லுங்க மதி ... :lachen001:

Nivas.T
30-07-2011, 07:21 AM
நீங்க எதிர்ப் பார்த்த போலீஸ் காரர்களை நான் பலமுறை சந்தித்து, அனுபவித்துல்லேன். நீங்க ரொம்ப நல்லவர் போல அதான் உங்களை சுற்றி அனைவரும் நல்லவர்களாக இருந்துள்ளனர்.

இருந்தாலும் நான் பல நேரங்களில் "தமிழ் மணியாய்" இருந்துல்லேன், இன்னும் இருக்கிறேன், இறுதிவரை இருக்க முயர்ச்சிப்பேன் என்ற நம்பிக்கையில்

வாழ்க தமிழ்

அமரன்
30-07-2011, 01:27 PM
மதி இதுக்குதான் சொல்லுறது பொறுப்பா ஒரு ஆளை பக்கத்தில வச்சு கிட்டா அவங்க பார்த்துபாங்க இல்லையா ? பணம் தொலயுற இடமும் நமக்கு தெரிந்த இடமா இருக்கும் .... அம்மா சொல்லுற பொண்ணுக்கு ஓகே சொல்லுங்க மதி ... :lachen001:

இப்ப நீங்க என்ன சொல்றீங்கண்ணே.. கல்யாணத்துக்குப் பிறகு மதியிடம் பர்சே இருக்காது என்றா..:lachen001: ஏன் இப்பிடி பயம் காட்டுறீங்க.

மதி
30-07-2011, 03:19 PM
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.. சில நேரங்களில் என்ன நடந்துவிடப்போகின்றது என அசட்டையாய் இருந்து விடுவோம். என்னைப் போல் யாரும் இருந்திடவேண்டாம் என்பதற்காகவே பதிந்தேன்.

நாஞ்சில் த.க.ஜெய்
31-07-2011, 08:47 AM
நமது கவன குறைவு எந்த அளவிற்கு பாதிப்பினை உருவாக்குகிறது என்பதை தெளிவாக காட்டுகிறது இந்த பதிவு ...அந்த தமிழரின் சேவை உணம்யில் பாராட்டுக்குரியது ....வாழ்த்துகள் அந்த தமிழர் தமிழ்மணிக்கு ...

சுகந்தப்ரீதன்
19-09-2012, 06:09 PM
நல்லதொரு படிப்பினை... பகிர்வுக்கு நன்றி.!!:icon_b:

ஆமாம்.. பணமெல்லாம் பெருசில்லன்னு சொல்ற மதியண்ணன்.. அடிச்சி புடிச்சி அம்மாவுக்கும் தம்பிக்கும் பணத்தை மாத்திவிட்டதன் மர்மமென்ன..?!:fragend005:

மதி
19-09-2012, 06:17 PM
எல்லாம் நல்ல காரியத்துக்கு பயன்படட்டும்னு தான். கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்த இஷ்டப்பட்டு தானே குடுக்கணும். :)

அது சரி.. தூங்கிட்டு இருந்த இந்த திரிய எங்கிருந்து தேடி புடிச்சு தூக்கிட்டு வர்ற. :icon_rollout:

A Thainis
19-09-2012, 08:54 PM
உண்மை இன்றும் உயிர் வாழ்கிறது என்பதற்கு தமிழ் மணி போன்றோரின் நல்ல எண்ணங்களே, வாழ்க மதி, நல்ல கதை நல்ல கருத்து.

மதி
20-09-2012, 01:52 AM
நன்றி தைனிஸ். இது கதையல்ல. உண்மை சம்பவம்

arun
21-10-2012, 01:01 PM
உங்களது பதிவை பார்க்கும்போது எங்கள் ஆபீசில் ஒருத்தர் பட்ட பாட்டை நினைக்க தோன்றுகிறது தினமும் புலம்புவார் !

இரண்டு வாரங்கள் கழித்து பர்சோடு கொரியரில் வந்து சேர்ந்தது ஒரே வித்தியாசம் திருடியவனே பணத்தை மட்டும் எடுத்து விட்டு கார்டுகளை கொரியர் செய்து இருந்தான்

என்ன ஒரு மனிதாபிமானம் !