PDA

View Full Version : முரண்பாடா?



M.Jagadeesan
27-07-2011, 12:39 AM
தமிழாசிரியர் திருக்குறள் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். " உழவு " என்ற அதிகாரத்தில் உள்ள பத்துக் குறட்பாக்களையும் நடத்தி முடித்துவிட்டு மாணவர்களிடம், " ஏதேனும் ஐயம் இருப்பின் கேளுங்கள் " என்றார். அப்பொழுது ஒரு மாணவன் எழுந்து, " ஐயா! இரண்டு குறட்பாக்களில் முரண்பாடு இருப்பது போலத் தோன்றுகிறது." என்றான்.

உடனே ஆசிரியர் ," எந்தெந்த குறட்பாக்களில் முரண்பாடு உள்ளது? " என்று கேட்டார். அதற்கு மாணவன்,

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

இந்த குறட்பாக்களில் முதல் குறட்பாவில் நன்றாக உழுதால், நிலத்திற்கு உரம் இடத் தேவையில்லை என்று சொல்கிறார்; ஆனால் இரண்டாம் குறட்பாவில் உரம் இடவேண்டும் என்று சொல்கிறார் ; ஏன் இந்த முரண்பாடு? " என்று கேட்டான்.

ஆசிரியர் சிரித்துக் கொண்டே ," நல்ல கேள்வி, காரணம் சொல்கிறேன், முதல் குறள் புன்செய் நிலத்தில் பயிர் செய்யும் முறையைக் குறிப்பது. ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகுமாறு உழுதுவிட்டு , மழை பெய்தவுடன் புன்செய்த் தானியங்கள், பயறு வகைகளை விதைத்து விட்டால் மேல் உரத்தையோ, பாய்ச்சு நீரையோ எதிர்பாராமல் வானத்தை, அதாவது மழையைப் பார்த்தே புன்செய்ப் பயிர்கள் விளைந்துவிடும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

இந்தக் குறள் நன்செய் நிலத்தில் பயிர் செய்யும் முறையைக் குறிப்பது. உழுதல்,எருவிடுதல்,களையெடுத்தல்,நீர்பாய்ச்சுதல், காவல் காத்தல் என்பது போன்ற எல்லா வேலைகளையும் பார்த்தால்தான் நன்செய் நிலத்தில் பலன் காணமுடியும். இப்போது புரிகிறதா? முரண்பாடு உன்னிடம்தான் உள்ளது; வள்ளுவரிடம் இல்லை."

" மிக்க நன்றி ஐயா! தெளிவாகப் புரிந்து கொண்டேன். இன்னும் சில குறட்பாக்களில் முரண்பாடு உள்ளதுபோல எனக்குத் தோன்றுகிறது. அவற்றைக் கேட்கலாமா ஐயா?"

" நாளைக்குப் பார்க்கலாம் " என்று ஆசிரியர் சொன்னார்.

கீதம்
28-07-2011, 12:48 AM
சிந்திக்கவைத்த கேள்வியும் சிறப்பான பதிலும். பாராட்டுகள். மற்ற முரண்தோற்றங்களையும் அறிந்து தெளிவடைய விரும்புகிறேன். தொடரட்டும் தங்கள் பெரும் முயற்சி.

M.Jagadeesan
28-07-2011, 01:14 AM
நன்றி கீதம்!

சொ.ஞானசம்பந்தன்
28-07-2011, 02:21 AM
குறள் விளக்கம் அருமை . பாராட்டுகிறேன் .

தாமரை
28-07-2011, 03:00 AM
மிக அருமையான விளக்கம். இப்படி விளக்கமாக விளக்கம் காண்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஒவ்வொரு பாடலிலும் அதன் உண்மையான பொருள் காண புலவர்கள் செறிவு மிகுந்த சொற்களை பயன்படுத்தி இருப்பார்கள்.

முதற் குறளிலே புழுதி என்றார். புழுதி என்பது ஈரப்பசை அற்ற நுண்ணிய மண்... அதை இளக வைக்க வேண்டும். அங்கே புன் செய் பாசனம்தான் என்பதை அழகாக சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.

அதே மாதிரி இரண்டாம் செய்யுளில் எருவிடுதலையும் - காப்பையும் இணைக்கிறார். எரு என்பது கழிவுகளில் இருந்து உண்டாவது., அதனால் களையும், பூச்சிகளும் அதிகம் உண்டாகும்.. அதனால் காப்பு அங்கே முக்கியமானதாகிப் போகிறது.. ஈரப்பிசை மிகுந்த வண்டல் மண் பூமியில் நீரில் உப்புச் சத்துகள் கரைந்து பூமிக்கடியில் சென்று விடுவதால் அங்கே எரு அவசியமாகிறது. ஈரப்பசை இருப்பதால் அதிக உழ வேண்டிய அவசியமில்லாமல் போகிறது.. காப்பு அவசியமாகிறது.. எருவையும் காப்பையும் இணைத்து உயர்த்தி நீரையும் உழவையும் குறைத்ததால் நன்செய் நிலம் என்பது தெளிவாகிறது..

போற போக்கில கிடைக்கும் இரு வரி மேலோட்டமாக பொருளை விட இப்படி ஆழ மூழ்கி முத்தெடுப்பது சுகம்.

நன்றி ஐயா!

M.Jagadeesan
28-07-2011, 06:24 AM
தாமரை, சொ.ஞானசம்பந்தன் ஐயா ஆகியோருக்கு நன்றி!

சான்வி
28-07-2011, 06:33 AM
அந்த மாணவனைப் போலே கருத்தொன்றி குறளைப் படித்திருந்தால், எனது தமிழன்னையும் இதுபோல விளக்கங்கள் சொல்லி இருப்பாரோ என்னவோ???

தங்களைப் போன்றோர் இருக்கும் மன்றத்தில் உறுப்பினர் ஆனதில் மிக்க மகிழ்ச்சி. :)

இன்னும் இது போல பல விஷயங்களை அறியக் காத்திருக்கேன். தொடர வேண்டும் தங்கள் சேவை என வேண்டும் நான்.

M.Jagadeesan
28-07-2011, 07:41 AM
சான்வி அவர்களுக்கு நன்றி!