PDA

View Full Version : அம்மாவும் விலக்கப்பட்ட கனியும்

சொ.ஞானசம்பந்தன்
26-07-2011, 07:28 AM
( க்லோதீனுடைய வீடு என்னும் பிரஞ்சுப் புதினத்தில் ஒரு பகுதியை நான் மொழி பெயர்த்தேன் . ஆசிரியர் பெண் எழுத்தாளர் கொலேத் 19 ஆம் நூற்றாண்டு )

அம்மாவின் வலிமை நலிவு அடையும் காலமும் வந்தது . அது பற்றி அம்மாவுக்கு ஒரே திகைப்பு ; அவரால் நம்ப முடியவில்லை .

நான் பாரிசிலிருந்து பார்க்க வரும்போதெல்லாம் , பிற் பகலில் , அவரது சிறிய இல்லத்தில் , நாங்கள் இருவரும் தனித்திருக்கையில் , தாம் செய்துவிட்ட ஏதாவது ஒரு தப்பை என்னிடம் ஒப்புக்கொள்வார் .

ஒரு தடவை , கவுனைத் தூக்கித் தொடையைக் காட்டி , " பார் மகளே , இதை " என்றார் . சதை கொஞ்சம் பிளந்து வயலெட் நிறப் புண் காணப்பட்டது .

" என்னம்மா செஞ்சே மறுபடியும் ? "

அப்பாவித்தனமும் குழப்பமும் கல்ந்த கண்களை அகல விரித்து , சொன்னார் : " நீ நம்பமாட்டே . மாடிப் படியிலே விழுந்துட்டேன் . "

" என்னாது ? விழுந்தியா ? "

" ஆமாம் போ ; எறங்கி வந்தேனா , விழுந்துட்டேன் "

" ரொம்ப வேகமா எறங்கினியா ?"

" ரொம்ப வேகமின்னா ? எதை ரொம்ப வேகமிங்கிறே ? வேகமா எறங்கினேன் . மகா ராணி மாதிரி ஆடி அசைஞ்சு எறங்க எனக்கு ஏது நேரம் ? இதையும் பார் . "

காய்த்துப் போன கையுடன் ஒப்பிடுகையில் இன்னமும் வற்றிவிடாத அழகிய மணிக்கட்டில் சூடு பட்டு நீர்க் கொப்புளம் ஒன்று தள தள என்றிருந்தது .

" இது என்னாம்மா ? "

"கெட்டில் சுட்டுட்டது "

' அந்தப் பழங்காலச் செப்புக் கெட்டிலா ? அஞ்சு லிட்டர் புடிக்குமே அது ? "

" அதேதான் . யாரை நம்புவது ? நாப்பது ஆண்டாய் என்னை அதுக்குத்
தெரியுமே ! என்ன ஆச்சோ அதுக்கு , தெரியலை . பெரும் பெரும் குமிழியாய்த் தண்ணீ கொதிச்சது. அடுப்பிலேர்ந்து எறக்கினேன் . சுரீர்னு மணிக்கட்டில் நெருப்பு சுட்டது போல இருந்தது .
ஏதோ இந்தக் கொப்புளத்தோடு போச்சே ! இருந்தாலும் தொந்தரவு தான் . அதனாலதான் அலமாரியை அப்பிடியே விட்டுட்டேன் "

அம்மாவின் முகம் குபீரெனச் சிவந்தது . பேச்சை நிறுத்திக்கொண்டார் .

"அலமாரியா ? " அதட்டும் குரலில் கேட்டேன் .

கழுத்தில் விழவிருக்கும் கயிற்றுச் சுருக்கில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க விரும்புவது போல் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டினார் . " ஒண்ணுமில்லே . ஒரு அலமாரியும் இல்லே . "

"அம்மா , அப்புறம் எனக்குக் கோபம் வந்துடும் ".

" நாந்தான் சொன்னேனே , அலமாரியை அப்படியே விட்டுட்டேன் இன்னு ; நீயும் என்னை விட்டுடு . இருந்த இடத்திலேர்ந்து அலமாரி நகரலை அல்லவா ? அப்புறம் என்ன ? விட்டுத் தள்ளு ."

தேவதாரு மரத்தாலான அலமாரி ; உயரத்துக்கு ஏற்ற அகலம் . கதவைத் துளைத்துப் பின் பக்கத்தால் வெளியேறிய ஜெர்மன் துப்பாக்கி ரவை ஒன்று ஏற்படுத்திய வட்டத் துளை தவிர வேறு எந்தச் சேதமும் இல்லாத அல்மாரி .

" அதை வேறே எடத்திலே வைக்கணுமின்னு நெனைச்சியா ? "

திரங்கிப்போன முகத்திலிருந்து ஒளி வீசிய கண்களால் நோக்கினார்.

" நானா ? அங்க இருக்கிறதே நல்லா இருக்கு ; அப்பிடியே இருக்கட்டும் "

டாக்டராகிய என் தமையனும் நானும் அம்மாவை நம்ப இயலாது என முடிவு செய்தோம் . அண்ணன் தொழில் செய்த ஊரில் அம்மா வசித்ததால் அவன் நாள்தோறும் அம்மாவைப் பார்க்க முடிந்தது .

வெளிக் காட்டாத துயரத்துடன் அவரை அவன் கவனித்துக் கொண்டான் .

அம்மா தம் எல்லா வலிகளையும் எதிர்த்து எங்களை மலைக்க வைக்கும் அளவுக்குப் போராடினார் . சில சமயம் அவற்றை மறந்தே விடுவார் ; வேறு சமயம் அவற்றை முறியடித்துத் தற்காலிக ஆனால் பிரமாத வெற்றி பெறுவார் ; இழந்துவிட்ட ஆற்றலைத் திரும்பப் பெற்றுச் சில நாள் வரை அதைத் தங்க வைத்துக்கொள்வார் .

ஒரு நாள் காலை ஐந்து மணி . என் அறையின் எதிரில் இருந்த அடுப்பங்கரை மேடைமீது நீர் நிறைந்த வாளி வைக்கப்பட்ட ஒலி கேட்டு விழித்துக்கொண்டேன் .

" என்னம்மா செய்றே , வாளியை வச்சுக்கிட்டு ? வேலைக்காரிதான் வந்துவிடுவாளே ?

எழுந்து ஓடினேன் . அதற்குள் அடுப்பு பற்ற வைத்தாயிற்று ; பால் சூடாகிக்கொண்டிருந்தது . பக்கத்தில் என் காலை உணவுக்காக வெந்நீரில் சாக்லேட் கட்டி உருகிக்கொண்டிருந்தது . அம்மா நாற்காலியில் அமர்ந்தபடி காப்பிக் கொட்டையைக் கை மெஷினில் அரைத்துக்கொண்டிருந்தார் .

காலை நேரத்தில் வலிகள் கொஞ்சம் இரக்கம் காட்டும் ; அம்மாவின் கன்னங்கள் மீண்டும் செந்நிறம் பெறும் ; காலை இளம் பரிதியின் உதவியால் ஆரோக்கியத்தை மீட்டுக்கொண்ட அம்மா மகிழ்ச்சி நிறைந்தவராகக் காணப்படுவார்

தேவாலயத்தில் முதல்பூசை மணி ஒலித்துக்கொண்டிருக்க அம்மாவுக்குக் களிப்பு : நாங்கள் தூங்கியபோதே விலக்கப்பட்ட பல கனிகளை நுகர்ந்துவிட்ட ஆனந்தம் .

விலக்கப்பட்ட கனிகள் எவை ?

கிணற்றிலிருந்து தூக்குகிற நீர் நிரம்பிக் கனத்த வாளி , மரக்கட்டைமீது வைத்து அரிவாளால் குச்சிகளாகப் பிளக்கிற விறகு , மண்வெட்டி , முக்கியமாக ஏணி . அதில் அவர் ஏறிப் படரும் திராட்சைக் கொடிகளைக் கொழுகொம்புடன் இணைப்பார் ; செடிகளின் மலர்களைக் கொய்வார்.

வாழ்க்கையில் முன்பு ஒத்துழைத்து உடலுக்கு வலிமை தந்த எல்லா வேலைகளும் பணியாள் இல்லாமலே இன்பமாக வாழ்வதற்கு அவருக்கு உதவிய கிராமப் புற இயற்கையும் இப்போது எதிரணியில் நின்றன . ஆனால் போராடுவதில் இன்பம் காண்பவர் அம்மா என்பது அவற்றுக்குத் தெரியாது இறுதி மூச்சு வரை அந்த இன்பத்தை அவர் அடைவார் .

எழுபத்தொரு வயதில் ஒவ்வொரு காலைப் பொழுதும் அவரை வெற்றி வீராங்கனையாய்த்தான் கண்டது . நெருப்பு சுட்டும் அரிவாள் பட்டும் உருகிய பனியாலோ கவிழ்ந்த நீராலோ நனைந்தும் ஊருக்குமுன் எழுந்து சுதந்திரமாய்ச் செயல்படும் நல்ல தருணத்தை அவர் வாழ்ந்துவிடுவார் .

பூனைகள் கண் விழித்து எழுந்த காட்சி , பறவைக் கூடுகளில் நிகழ்ந்த ஆரவாரம் , பால்காரரும் ரொட்டிக்காரரும் பாலோடும் ரொட்டியோடும் சேர்த்து வழங்கிய ஊர்ச்செய்திகள் என்று அதி காலைத் தகவல்கள் பலவற்றை எங்களுக்கு அறிவிப்பார் .

ஒரே யொரு தடவைதான் , ஒரு நாள் காலை , சில்லிட்ட அடுப்பங்கரையும் சுவரில் மாட்டியிருந்த எனாமல் பிடி குவளையும் அம்மாவின் காலம் நெருங்கிவிட்டதை எனக்கு உணர்த்தின .;

இருந்தாலும் சிற்சில நாள்களில் மீண்டும் அடுப்பு எரிந்தது ; புது ரொட்டி மற்றும் உருக்கிய சாக்லெட்டின் மணங் கமழ்ந்தது . அந்த நாள்கள் எதிர்பாராத அதிர்ச்சியைத் தந்தன. அம்மாவும் அலமாரியும் ஒரு நாள் சேர்ந்து விழுந்தார்கள் .யாருக்கும் தெரியாமல் அலமாரியை வேறிடத்தில் நகர்த்தி வைக்க அம்மா முயன்றிருக்கிறார் . .

எந்த வேலையும் செய்யக்கூடாது என்று கண்டித்த அண்ணன் ஒரு முதிய வேலைக்காரியை வீட்டோடு அமர்த்தினான் ,

ஆனால் அம்மாவின் திடம் வாய்ந்த மனத்தின் முன்னால் . கிட்டத்தட்ட சாவுக்குப் பாதி அளவு ஆட்பட்டுவிட்ட உடம்பைத் தன் விருப்பத்துக்கு ஏற்ப ஆட்டிப் படைக்கக்கூடிய அந்த இள உள்ளத்தின் முன்னால் , வேலைக்காரக் கிழவியால் என்ன செய்யமுடியும் ?

ஒரு நாள் பொழுது விடியும் முன் நோயாளி யொருவரைக் கவனித்துவிட்டு வந்த அண்ணன் அம்மாவைக் கையுங் குற்றமுமாய்க் கண்டுபிடித்தான் : இரவு உடையில் இருந்த அம்மா , தோட்ட வேலைக்கான கனத்த காலணியை அணிந்து , அவரது நரைத்த சிறு சடை பிடரிக்கு மேல் , தேள் கொடுக்குப் போல வளைந்திருக்க , குனிந்த முதுகும் முக்காலிமீது ஒரு காலுமாய் , இளமைத் தோற்றத்துடன் விறகு பிளந்துகொண்டிருந்தார் , சில்லென்ற பனித் துளிகளையும் தாம் வழங்கியிருந்த எல்லா வாக்குறுதிகளையும் சட்டை பண்ணாமல் .

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கீதம்
26-07-2011, 08:33 AM
மன வலிமை! வேறென்ன சொல்வது? உடல்நிலை நன்றாக இருக்கும்போது ஓடியாடி வேலை பார்த்துவந்த அந்தத் தாயாரால் வயதான காலத்தில் மரணம் நெருங்கும் தருவாயிலும் ஒரு நொடியும் ஓரிடத்தில் முடங்கிக் கிடக்க இயலவில்லை. சொல்லப்போனால் அந்த உத்வேகமே அவர் வாழ்நாளின் எண்ணிக்கையைக் கூட்டவும் கூடும்.

என் பெற்றோரையும் எண்ணிப்பார்க்கிறேன். சொல்லச் சொல்லக் கேட்காமல் ஏன் இப்படி உடலை வருத்திக்கொள்கிறார்கள் என்று அவர்கள் மேல் கோபப்படுவதை விடுத்து அவர்களது உணர்வைப் புரிந்துகொண்டு ஆதரவாய் இருக்கவேண்டும் என்று நினைத்தாலும், அவர்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது மனம் ஊமையாய் அழத்தான் செய்கிறது.

உளவியலை அழகாய் வெளிப்படுத்தும் நிகழ்வு. எழுத்தாளருக்கு மனம் நிறைந்த பாராட்டு. மொழிபெயர்த்து நாங்கள் சுவைக்க வழங்கியதற்கு நன்றி.

sarcharan
26-07-2011, 09:01 AM
எனது ஆச்சி (அம்மாவின் அம்மா) இன்றும் அப்படித்தான்.. எண்பதுகளை கடந்த பின்னும் உடலில் ஒரு வலிமை. நான் எனது வீட்டுக்கு செல்லும்போது நான் குளிப்பதற்க்காய் இன்றும் ஆச்சி வெந்நீர் போட்டு வைத்திருப்பார்...
எங்கள் அம்மாவிற்கும் கூட ஒரு வாளி வெந்நீர் போட்டு வைப்பார்.

சென்ற மாதம் திருச்சி சென்ற பொது எனக்காய் அவர்கள் தனது கைகளால் பின்னிய ஒரு சுவீட்டர் தந்தார்கள். அதை கண்டவுடன் பனித்துவிட்டன என் கண்கள்.
எனக்கு தெரிந்த வரை இரண்டு ரகசியங்கள் தான் அவரது உடல், மனவலிமைக்கு காரணம்.

இன்றும் எங்கள் ஆச்சி அதிகாலையில் துயில் எழுந்து கடமைகளை சரிவர செய்து வருகின்றார்.

ஒன்று கடவுள் மீதுள்ள நம்பிக்கை, மட்ட்றொன்று பிள்ளைகள் மீதுள்ள அன்பு..

சொ.ஞானசம்பந்தன்
28-07-2011, 02:13 AM

பாராட்டுக்கும் விமர்சனத்துக்கும் மிகுந்த நன்றி . வயதான பின்பும் சிலரால் ஓய்ந்திருக்க முடியாது . மருத்துவர் கட்டளையைக் கூட மீறுவார்கள் .

சொ.ஞானசம்பந்தன்
28-07-2011, 02:17 AM
எனது ஆச்சி (அம்மாவின் அம்மா) இன்றும் அப்படித்தான்.. எண்பதுகளை கடந்த பின்னும் உடலில் ஒரு வலிமை. நான் எனது வீட்டுக்கு செல்லும்போது நான் குளிப்பதற்க்காய் இன்றும் ஆச்சி வெந்நீர் போட்டு வைத்திருப்பார்...
எங்கள் அம்மாவிற்கும் கூட ஒரு வாளி வெந்நீர் போட்டு வைப்பார்.

சென்ற மாதம் திருச்சி சென்ற பொது எனக்காய் அவர்கள் தனது கைகளால் பின்னிய ஒரு சுவீட்டர் தந்தார்கள். அதை கண்டவுடன் பனித்துவிட்டன என் கண்கள்.
எனக்கு தெரிந்த வரை இரண்டு ரகசியங்கள் தான் அவரது உடல், மனவலிமைக்கு காரணம்.

இன்றும் எங்கள் ஆச்சி அதிகாலையில் துயில் எழுந்து கடமைகளை சரிவர செய்து வருகின்றார்.

ஒன்று கடவுள் மீதுள்ள நம்பிக்கை, மட்ட்றொன்று பிள்ளைகள் மீதுள்ள அன்பு..

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .உங்கள் ஆச்சி பற்றித் தகவல் தந்தமைக்கும் நன்றி . நீங்கள் கொடுத்து வைத்தவர் எனலாம் , அவ்வளவு முதிய ஆச்சி வாழ்வதற்கும் உங்களுக்குச் சேவை செய்வதற்கும் .

aren
28-07-2011, 04:49 AM
என் பாட்டியை மறுபடியும் அப்படியே கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள். என் தந்தையின் தாய் 80 வயது வரையிலும் அவர்களே அனைத்து வேலைகளையும் செய்தார்கள். வீட்டு சாக்கடையாகட்டும், கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதாகட்டும், கடைக்குச் சென்று மளிகை மற்றும் காய்கறி வாங்குவதாகட்டும், அவர்களே முன்னின்று அனைத்தையும் செய்தார்கள். 80வது வயதில் மாரடைப்பால் மரணம் அதுவும் ஒரு பத்து நிமிடத்திற்குள்.

கடைசி வரையில் தன் வேலையை தானாகவே செய்த அவர்களை நினைக்க வைத்துவிட்டது உங்கள் கதை.

இன்னும் நிறைய எழுதுங்கள். பிரஞ்சு சிறுகதைகளை எங்களுக்கு புரியும்படி கொடுக்கும் உங்களுக்கு என் நன்றிகள்.

சொ.ஞானசம்பந்தன்
30-07-2011, 02:04 AM

உங்கள் பாட்டியார் பாராட்டுக்கு உரியவர்கள் . உங்களுடைய மலரும் நினைவுக்கு என் மொழிபெயர்ப்பு காரணமாய் இருந்ததே என மகிழ்கிறேன் . பாராட்டுக்கு அகமார்ந்த நன்றி .