PDA

View Full Version : நகர நட்புஆதி
25-07-2011, 04:38 AM
பல வருடங்களாய்
பரிட்சயமானவர்
எனினும்
அவருடன்
ஒரு வார்த்தையும் பேசியதில்லை
இதுநாள் வரை..

அவருடைய பூர்வீகம் பின்புலம்
எதுவும் அறியாததால்
இதுவரை துல்லியமாக பதில் சொல்ல இயன்றதில்லை
அவரை பற்றிய விசாரிப்புக்களுக்கு என்னால்..

என் தொடர்பான விசாரிப்புக்களுக்கு பதிலளிக்கையில்
இதே போன்ற தடுமாற்றங்கள்
அவருக்கும் இருக்க கூடும்..

என்றாலும்
எதேச்சையாய் எங்கேனும்
எதிரெதிர் திசையில் கடக்க நேரிடுகையில்
ஒரு புன்னகையை பரிமாறிக் கொள்வோம்
என்றைக்கேனும் எதற்கேனும் உதவட்டுமென..

ஜானகி
25-07-2011, 04:46 AM
சிரிப்பதே கௌரவக் குறைவு என்று எண்ணப்படும் சமுதாயத்தின் நடுவில்...புன்னகை பரிமாறப்படுகிறதே...அதுவே பெரிய விஷயம் ! அஸ்திவாரம் போட்டாயிற்று...தேவைப்படும்போது மேல்கட்டிடம் கட்டலாம்...

ஆதி
25-07-2011, 07:28 AM
சிரிப்பதே கௌரவக் குறைவு என்று எண்ணப்படும் சமுதாயத்தின் நடுவில்...புன்னகை பரிமாறப்படுகிறதே...அதுவே பெரிய விஷயம் ! அஸ்திவாரம் போட்டாயிற்று...தேவைப்படும்போது மேல்கட்டிடம் கட்டலாம்...

உண்மைதானம்மா, இதுவும் இந்த புன்னகையில் பின்புலத்திலும் கூட ஒளிந்திருப்பது நம் சுயநலம்தான்...

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றிகள் அம்மா....

அக்னி
25-07-2011, 09:36 AM
நட்பா இது?

ஒரு வீதம் இப்போதுதான் நிறைவு.
இன்னொருவீதம் நிறையாமல்,
ஸ்தம்பித்துவிட்ட
நகரா நட்பு...

இந்த நட்பு நகரத் தேவை,
ஒரு நகரத் தேவை...

அதுவரை,
இன்னும் வருடங்களானாலும்,
நகரா, நட்பாக...

கீதம்
26-07-2011, 08:59 AM
நகர நட்பு பற்றிய ஆதனின் பார்வையும், அடித்தளமிட்டுவிட்ட நிம்மதி பெருகும் ஜானகி அம்மாவின் பின்னூட்டமும், நகர நட்பை நகரா நட்பென யதார்த்தம் சொல்லும் அக்னியின் அலசலும் அருமை. இதோ என் பங்குக்கு....


எதிர்வீட்டுப் பெண்மணியை
எதிர்வீட்டில் பார்த்தால் மட்டுமே
பரிச்சயமாகும் எனக்கு.
எல்லைகள் மீறாத புன்னகையோடு
நொடிநேரப் பரிமாற்றத்தில் பார்வைகள்!

எதிர்பாரா இடங்களில் என்னை
அடையாளங்கண்டுகொள்ளும் அப்புன்னகையை
அடையாளங்காண்பதில் அத்தனை சிரமமெனக்கு!

அறிந்தமுகமா? இதுவே அறிமுகமா?
விலாசந்தவறி வந்தப் புன்னகையா?
ஏற்பதா? விலக்குவதா?
கண்டுங்காணாமல் பார்வை தழைப்பதா?

யோசனையிலேயே கடந்துவிடும் காததூரம்!

அதன்பின் எதிர்வீட்டில் நிகழும்
அடுத்தடுத்த சந்திப்புகள்
புன்னகைகளைச் சிறைப்படுத்துவதோடு
சில காயங்களின் வடுக்களையும்
கண்களால் காட்டிக் காயமுண்டாக்கும்.

ஆதி
26-07-2011, 09:23 AM
என் பார்வைக்கு, எதிர்ப்பார்வை அழகு அக்கா...

கடைசி பற்றி எங்க அம்மா அடிக்கடி பேசும் வார்த்தைகளை நினைவுக்கு கொண்டவந்தன... :)

நன்றிகளும், பாராட்டுக்களும் அக்கா

Nivas.T
26-07-2011, 11:50 AM
வார்த்தைகள் இல்லை என்றாலும்
அந்தப் புன்னகைப் பரிமாற்றம்
உகந்தது என்பேன் நான்

ஒருமுறை இந்தப் புன்னகை எனக்கு
மறக்க இயலாத உதவியை
எதிர்பாராத சந்தர்ப்பத்தில்
கையறுநிலையில் கைப்பற்றி காப்பாற்றியது

இன்றும் என் நினைவில் பசுமையாக
என்றும் மறப்பதில்லை நான்
அந்தப் புன்னகையையும்
உதவியையும்

உணர்வின் கவிதை அழகு ஆதன்

அக்னி
26-07-2011, 12:32 PM
அறிந்தமுகமா? இதுவே அறிமுகமா?
விலாசந்தவறி வந்தப் புன்னகையா?
ஏற்பதா? விலக்குவதா?
கண்டுங்காணாமல் பார்வை தழைப்பதா?


புறநாட்டு நட்பு நடப்பின் மனச்சலன வரிகள்... :icon_b:

சிரித்தால் பல்லிளிப்பாகிடுமோ
வந்தனம் வழிசலாகிடுமோ
என்ற எண்ணவாதம் முடிவுகாணுமுன்
தாண்டிப்போய்விட்ட கணங்கள்
எனக்கு(ம்)ப் பல...

ஆனால்,
விதிவிலக்கு மகளிர் மட்டும்...
மகளிரைக் கண்டால்,
இளித்துவைப்பதும் வழிந்துபோவதும்,
இன்றுவரை வாதப் பொருளானதில்லை
எனக்கு... :D

அக்னி
26-07-2011, 12:39 PM
ஒருமுறை இந்தப் புன்னகை எனக்கு
மறக்க இயலாத உதவியை
எதிர்பாராத சந்தர்ப்பத்தில்
கையறுநிலையில் கைப்பற்றி காப்பாற்றியது


இப்படிச் சொன்னால் எப்படித் தெரிந்து கொள்வது...

மொழிகள் தாண்டியும் நட்புப் பூக்கும்
புன்னைகைகள்..,
இதுதான் தொடக்கமா இத்துடன் முடிவா
எனத் தெரியாமலே..,
தெரிய முனையாமலே...

கௌதமன்
26-07-2011, 05:52 PM
எதிராளி முதலில் சிரிக்கட்டும்
என்ற எதிர்பார்ப்பிலேயே இருவரது சிரிப்பும்
அடக்கி வைக்கப்படுகிறது பலசமயங்களில்.
சங்கோஜம் ஏதுமில்லாமல்
எதையும் எதிர்பார்க்காமலேயே
சிரிப்பவர்கள் குழந்தைகள்.
என்ன செய்ய? வளர்ந்தபிறகும்
சிலசமயம் குழந்தைகளிடம்
நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

தாமரை
26-07-2011, 06:02 PM
நகர நட்புதானே
நகராமல் என்ன செய்ய?