PDA

View Full Version : அன்றொரு நாள்: ஜூலை 23:Iinnamburan
22-07-2011, 08:13 PM
அன்றொரு நாள்: ஜூலை 23:I
கும்பகோணம் முடுக்குத்தெருவில் நீங்கள் போகச்சே, எதித்தாப்லே காந்திஜி சைக்கிள்லே வரார்! (அவருக்கு சைக்கிள் விடத்தெரியும்.) இல்லே, ஹைவேலே விர்ர்னு கார்லெ போகச்சே, காஞ்சி பெரியவா வீதி ஒரமா நடந்து வரா. என்ன பண்ணுவேள்? ஓடிடுவேளா? இல்லை, நெடுசாங்கிடையாக விழுந்து சேவிப்பேளா? இல்லை. மலைச்சுப்போய், அகலிகை மாதிரி கல்லாய் சமைந்து நிற்பீர்களா? நான் ஸ்தம்பிச்சுப்போய்ட்டேன். பூனாவை சுத்திப்பாக்கலாம்னு என் தம்பி ரஜனீஷ் ஆஸ்ரமத்திலிருந்து எல்லாம் காண்பித்துக்கொண்டு வந்தவன், ஒரு சிதிலமான கட்டிடத்துக்கு இழுத்துக்கொண்டு போனான். தொங்கறமாதிரி இரண்டு உப்பரிகை, மாடிலெ, நடுவுலெ ஒரு ரேழி: காரிடோர். அது தான் ‘கேசரி’ இதழாலயம் என்றார்கள். அப்படி ஒரு எளிமையா? அந்தக்காலத்தில் எல்லாம் மலிவு தான். அப்போது கூட இத்தனை சிக்கனமா? என்ற வியப்பு நீங்குமுன் உறைத்தது, அந்த இடத்தின் புனிதம்.
ஆம். இது ‘லோகமான்ய’ பாலகங்காதர திலகர் என்ற அவதாரபுருஷனின் பாத தூலி பட்ட இடம். இன்று (ஜூலை 23,1856) அவருடைய ஜென்மதினம்; பாரதமாதாவின் திருவிழா தினம்; ஆண்மகனாயினும், அவர் என்னன்னையே. தாயுமானவர். உங்கள் டைரியில் பதிவு செய்து கொள்ளுங்கள், இந்திய சுதந்திர தாகத்தை முதலில் உணர்ந்த மாமுனி இவர் தான் என்று. இந்திய அரசியல் சாஸனத்தில் பட்டியலிடப்பட்ட/ படாதும் பட்டதுமாகச் சொல்லப்பட்ட அடிப்படை உரிமைகளின் மூலாதாரம், “ ஸ்வராஜ்யம் என் பிறப்புரிமை.” என்று இந்த புருஷோத்தமன் செய்த பிரகடனமே.
ரத்னகிரி ஜில்லாவின் சிகல்காவ் என்ற கிராமத்தில், சித்பாவன் பிராமணகுலத்தில் (இதை குறிப்பிடுவதற்கு வரலாற்றுக்காரணம் உண்டு.) ஒரு புகழ் வாய்ந்த சம்ஸ்கிருத புலவருக்கு ஜூலை 23,1856 அன்று பிறந்த திலகர், ஆசிரியரராக, இதழாளராக,கல்வியாளராக, இத்துறைகள் வாயிலாக, ஸ்வராஜ்ய மக்கள் இயக்கத்தலைவராக, சனாதனியாக, இந்திய நேஷனல் காங்கிரஸ்ஸில் சேர்ந்து அதில் தீவிரவாத கோஷ்டியினராக ( வன்முறை ஒன்றும் அறவே இல்லை; வெள்ளைக்காரனுக்கு தாளம் போடக்கூடாது. அவ்வளவு தான். 1907 சூரத் காங்கிரஸ் பற்றி, மஹா கவி பாரதியார் அங்கு போய் வந்து எழுதினதில், ஒரு வரி நினைவில்.‘செருப்புகள் பறந்தன!’) பகவத் கீதைக்கு ஸ்வாதந்திரிய விமர்சனம் படைத்தவராகவே, இவரது மின்னொளி வீசியது. வாக்கியம் இலக்கணப்படி இல்லை. தெரியும். அதனால் என்ன கெட்டுப்போச்சு? என் தம்பி காத்திருந்தான், என் மயக்கம் தெளிய.
அவனிடம் சொன்னேன், ‘கேளுடா! பூனாவாலா! நாம் நிற்பது புன்ணிய பூமி. ‘லால் -பால் -பால்’ (லாலா லஜ்பத்ராய்- பால கங்காதர திலகர் - பிபின் சந்திர பால் என்று கேட்டு இருக்காயா? (இவாளை பற்றி எழுத வேணும் ஒரு நாள்; மூவரும் பூஜிக்க வேண்டிய தெய்வத்திருமகன்கள்.) அங்கிருந்து பழைய கலெக்டர் ஆஃபீஸ் போனோம். தொடர்ந்தேன். இங்கு ராஜ்ய பரிபாலனம் செய்த கலெக்டரை (ட்பிள்யூ.ஸி. ராண்ட்) கடுமையாக இவர் விமர்சனம் செய்ததால், அவன் கொலையுண்ட வழக்கில், திலகர் பெருமானை இணைத்து, ஆங்கிலேய அரசு, இவருக்கு 18 மாத கடுங்காவல் விதித்தது. அது முடிந்து வந்தாரே, உலகு அறிந்த தியாகி திலகர், ஸ்வதேசி இயக்கத்தை முடுக்கி விட. 1908ல் ரயிலின் மேல் குண்டு வீசிய வங்காளி போஸ் தூக்கிலிடப்பட, கேசரி இதழில் அவரையும், சகபாடி சாக்கியையும் புகழ்ந்து எழுதிய திலகர், உடனே ஸ்வராஜ்யம் வேண்டும் என்று கோஷமிட்டார். வழக்கு; வக்கீல் ஜின்னா; ஆறு வருடம் ஜெயில், நாடு கடத்தப்பட்டு, மாண்டலே (பர்மா) ஜெயிலில். ஐயா! இதெல்லாம் நூறு வருடங்கள் முன்னால்! ஜெயிலில் அவர் எழுதிய ‘கீதா ரகஸ்யம்’ (என் பிரதி கைவசமில்லை.) ஆங்கிலேய அரசை ஒரு ஆட்டு ஆட்டுவித்தது, ஆன்மீகப்பாதையில். மேலே சொல்லு என்றான், வீடு வந்த பின். என் சித்தப்பாவும் சேர்ந்து கொண்டார்.’மும்பை கோர்ட்டு 46ம் அறை வாசகத்தை போய் படி.’ என்றேன்.

“ஜூரி யாது தீர்ப்புக் கூறினும், நான் குற்றவாளி அல்ல. மனித குலத்தையும், தேசாபிமானங்களையும், உம்மையெல்லாம் விட உன்னதமான ஒரு ஆளுமை மேய்க்கிறது. நான் தன்னிச்சையாக சுதந்திரமனிதனாக வாழ்வதை விட, சிறையில் வாடுவது தான் என்னுடைய இலக்குக்கு உகந்த பணி என்பது என்னை ஆளும் இறையாண்மையின் கட்டளை போலும்.”

காலம் விளையாடும் அல்லவா. ஜூன் 1914ல் விடுதலை ஆனபோது, திலகர் மனம் மாறியிருந்தார். உடல் குன்றியிருந்தார். முதல் உலகயுத்தத்தின் போது ஆங்கில அரசை ஆதரித்தார். மிண்டோ-மார்லி சீர்திருத்தங்களை வரவேற்றார். மிதவாதத்தை நாடினார். அண்ணல் காந்தியின் தனிச்சிறப்பை முதலில் உணர்ந்த தலைவர், திலகர். அவரை அஹிம்சை கொள்கையை விடச்சொன்னார். அவர் கேட்கவில்லை எனினும், காந்திஜிக்கும், மஹாகவி பாரதிக்கும், வ.உ.சி. அவர்களுக்கும், திரு.வி.க. அவர்களுக்கும், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும், தந்தையும், தாயும்,குருநாதரும் ஆனவர், லோகமான்ய திலகரே. பிற்காலம், அன்னி பெஸண்டுடன் சேர்ந்து ஹோம் ரூல் இயக்கத்திற்கு, நாடெங்கும் பயணித்து ஆதரவு தேடினார். கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன், நமது மத்திய-மாநில உறவுமுறையையும், தேவநாகரி எழுத்து ஹிந்தியை தேசிய மொழியாகவும், வழி மொழிந்தார்.
மும்பையின் பிரசித்தமான விநாயக சதுர்த்தி விழாவுக்கு வித்திட்டவர், திலகர். வேதங்கள் உதயமானது ஆர்க்டிக் பிராந்தியத்தில் என்கிறது, இவரது ஆய்வு. பாரதமாதா, தன் தவப்புதல்வனை இழந்த தினம், ஆகஸ்ட் 1,, 1920.
சொல்லவேண்டியது நிறைய இருக்கிறது. தொடர வேண்டுமா அல்லது ஆகஸ்ட் 1. அன்று தான் எழுதமுடியுமா, யான் அறியேன். தர்மமிகு சென்னை வாசிகளுக்கு ஒரு வேண்டு கோள்:

“ லோக மான்ய பாலகங்காதர திலகர், ஆங்கிலேயரை எதிர்த்து சிம்மகர்ஜனை செய்த வீரபூமி சென்னை மெரினா கடற்கரையில் இருக்கிறது. அதற்கு பெயர் திலகர் திடல். அங்கு வீராவேசமாக உரை ஆற்றாத தலைவர்கள் கிடையாது. ஆனால், திடலை காணவில்லை. தமிழனை தவிர வேறு யார் இருந்தாலும், கண்ணும், கருத்துமாக, திலகர் திடலை பராமரித்திருப்பார்கள். ஆனால், ஒரு கல்வெட்டு வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் நாட்டு அரசு உதறிவிட்டது. ஒருவர் கோர்ட்டுக்குப் போய் ஆணை கொணர்ந்து கட்டாயப்படுத்தின பின், ஒரு கல்வெட்டு வைத்தது, அரசு. (அஃறிணையாகத்தான் பேசப்படும்.) அங்கு போய் நில்லுங்கள், மலைச்சுப்போய், கல்லாய் சமைந்து. வீரவணக்கம் செலுத்துங்கள். அதற்காக, ஒரு நாள் முன்னால் வருகுது, இந்த இடுகை.”.

'வீர மிக்க மராட்டியர் ஆதர
மேவிப் பாரத தேவிதிருநுதல்
ஆரவைத்த திலக மெனத்திகழ்
ஐய னல்லிசைப் பாலகங் காதரன்
சேர லர்க்கு நினைக்கவுந் தீயென
நின்ற வெங்கள் திலக முனிவர்கோன்
சிர டிக்கம லத்தினை வாழ்த்துவேன்
சிந்தை தூய்மை பெறுகெனக் சிந்தித்தே.'

- மஹா கவி பாரதியார்
http://stampsofindia.com/lists/stamps/1947-56/0039.jpg

இன்னம்பூரான்
23 07 2011

நாஞ்சில் த.க.ஜெய்
23-07-2011, 11:17 AM
மறந்து விட்ட தியாகளின் கடந்த கால நிகழ்வுகளில் இன்று லோகமான்ய பால கங்காதர திலகர் ....தெரிந்து கொள்ள முடிந்தது அறியாத தகவல்கள் பல ..தொடர்ந்து தாருங்கள் நான் அறியாத உங்கள் நினைவுகளின் தொகுப்பினை ...