PDA

View Full Version : அன்றொரு நாள்: ஜூலை 19innamburan
19-07-2011, 07:50 PM
அன்றொரு நாள்: ஜூலை 19
இன்று, தமிழுக்கும், இசைக்கும், சமுதாயத்திற்கும், கல்வித்துறைக்கும், மொழிகளுக்கும், இடைவிடாமல் தன் வாழ்நாட்கள் முழுதும் தொண்டு செய்த பெரிய கோயில் வாத்தியார் அமரரான தினம்: 1947. முற்றிலும் பற்றற்ற வாழ்நெறியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். அவராற்றிய தொண்டுகளில் எதை முன்வைப்பது என்ற ஐயம் தெளிய நேரம் மிக ஆனது. அவராற்றிய தொண்டுகள் யாவற்றையுமே முன்வைத்ததாக கருதுங்கள் என, தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அவருடைய இயற்பெயர்: மயில்வாஹனன். மார்ச் 17, 1892 அன்று காரைத்தீவில் ( ஈழத்தின் கிழக்குக் கோடி) பிறந்தவர்.லண்டன் பல்கலைக் கழக பி.எஸ்.ஸி பட்டதாரி. ஏற்கனவே,மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக, 1931 முதல், மூன்றாண்டுகளும், பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார். தமிழினத்தைத் தட்டியெழுப்பும் பணியை, கல்வி நிறுவனங்கள் பலவற்றை நிறுவி, அவை மூலம் செயலாற்றினார்."செந்தமிழ்" என்னும் பத்திரிகைக்கும் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.
இந்திய சேரிப்புறங்களில் பரிவுடன், கனிவுடன், பழகி தொண்டுகள் பலவற்றை செய்த, இந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியரை, பாமர மக்கள் "பெரியகோயில் வாத்தியார்" என்று உறவு கொண்டாடியது, பொருத்தமே. சிந்தனையாலும், நடத்தையாலும், ஒரு சராசரி அறிஞராக இயங்காத மாமனிதரிவர். சாதி, மத, மொழி, இன ஏற்றத்தாழ்வுகளுக்கும், ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதுடன், நலிவுற்ற மக்களிடையே சென்று, அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து ஆறுதல் கூறி, ஏழை பங்காளனாகத் திகழ்ந்தார், இந்த துறவி. ஆம்.

ஆம். மட்டக்களப்பு உப்போடையில் இவர் நிறுவிய சிவானந்த வித்தியாலயம், ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் நேர்ச்சீடர்களில் ஒருவரான சுவாமி சிவானந்தா அவர்களின் ஞாபகார்த்தமாக. 1922 இல் சென்னை ஶ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்து, காவி பூண்டு அம்மடத்துத் தலைவர் சுவாமி சிவானந்தரிடம் பிரம்மாச்சாரி அபிஷேகம் பெற்று "பிரபோத சைதன்யர்" என்னும் தீட்சா நாமமும் பெற்றார். அங்கு "இராமகிருஷ்ண விஜயம்" என்ன்ற தமிழ்ச்சஞ்சிகைக்கும் "வேதாந்த கேசரி" என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராக இருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். ஆசிரம வாழ்க்கை முடிந்து சுவாமி விபுலாநந்தர் என்னும் குருப்பட்டம் பெற்றார், நமது "பெரியகோயில் வாத்தியார்" ஆன மயில்வாஹனன்.

திருமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் ஆங்கிலக்கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம், தலைநகர் கொழும்பில் விவேகானந்த வித்தியாலயம், கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, முதலிய இடங்களில் இராமகிருஷ்ண ஆசிரமங்களை நிறுவிய அருட்டிரு விபுலாநந்த அடிகளார் ஆன்மீகவாத சன்மார்க்க நெறியாளராக வாழ்ந்தார்.

அடிகளாரின் இலக்கியப்பணி பெரிது. அவர்களின் மதங்க சூளாமணி, நாடக இலக்கண அமைதி கூறும் ஒரு நூலாகும். அதை இணைய தளத்தில் படிக்கலாம். அவருடைய 127 இலக்கிய ஆக்கங்கள் தொகுப்பு நூலாக, மூன்று பகுதிகளில் உள்ளன. 1937 ஆம் ஆண்டு ஸ்வாமி விவேகாநந்தர் நிறுவிய மாயாவதி ஆசிரமத்தில் தங்கி, அங்கு சிலகாலம் "பிரபுத்த பாரதா" என்ற ஆங்கிலச் சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்து பல கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். என் பாக்கியம், என் தந்தை அவற்றை வரவழைத்ததால், சிறு வயதில், அவற்றை, புரிந்தும், புரியாமலும், படித்திருக்கிறேன். பஞ்ச கிருத்திய நுட்பத்தைக் கூறும் நடராஜ வடிவத்தைப் பற்றியும் ஒரு நூலை ஆக்கித்தந்துள்ளார். கர்மயோகம், ஞான யோகம், விவேகானந்த ஞானதீபம் முதலியன அவரது மொழிபெயர்ப்பு நூல்களாகும்.

அடிகளாரின் இலக்கிய ஆக்கங்களில் தமிழுக்குப் புதிதாகவும் மகுடமாகவும் அமைவது யாழ் நூலாகும். பழந்தமிழரின் இசை நுட்பங்களை ஆராய்ச்சி முறையாக விவரிக்கும் ஒரு முதல் நூல். பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய வில் யாழ், பேரி யாழ், மகர யாழ் செங்கோட்டி யாழ் சகோட யாழ், என்பன பற்றி யாழ் நூல் கூறுகின்றது. அடிகளாரின் பதினான்காண்டு ஆராய்ச்சியின் பயனாக யாழ் நூல் தமிழுக்குக் கிடைத்தது. யாழ் நூல் ஆராய்ச்சிக்காக தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று 15 ஆண்டுகள் ஆராய்ந்து கரந்தை தமிழ்ச்சங்க ஆதரவில் திருக்கொள்ளம்புதூர்த் திருக்கோயிலில் 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்கள் "யாழ் நூல் அரங்கேற்றம் வெகு விமரிசையாக நடந்தேறியது.

அதற்கு அடுத்த மாதமே 1947 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் நாள், அவர் விண்ணுலகம் அடைந்தார். சிவானந்த வித்தியாலய முன்றலிலுள்ள மரத்தின் கீழ் சுவாமிகளின் பூத உடல் அடக்கம் செய்யப்பட்டு அவரின் கல்லறை மேல் அவரால் பாடப்பட்ட

"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"

என்ற கவிதா வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.


இன்னம்பூரான்
19 07 2011
உசாத்துணை:
சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா மலர் - PDF வடிவில்
(தந்துதவியவர்: கனக சிறீதரன்)
யாழ் நூல் அரங்கேறிய 60 ஆண்டு நினைவில் பி.பி.சி தமிழோசையின் பெட்டக நிகழ்ச்சி

அக்னி
19-07-2011, 08:21 PM
மேன்மைமிகு விபுலாநந்த அடிகளார் நிறுவிய கல்வியிடங்களைத் தரிசிக்கும் பாக்கியம் சிறுவயதில் எனக்குக் கிட்டியிருந்தது.
அவரது கல்லறையையும் தரிசித்த நினைவு.

பகிர்ந்தமைக்கு நன்றி நண்ப...

அந்த நூற்றாண்டு மின்னூலை மன்றத்திற் பகிர்ந்துகொண்டால், இன்னும் நன்றியுடையவனாவேன்.

innamburan
19-07-2011, 08:23 PM
உமது கொடுப்பினை, அது. அடிகளாரின் ஆசி உமக்கு என்றும் உண்டு.

அக்னி
19-07-2011, 08:34 PM
1992 ம் ஆண்டு, எமது பாடசாலையில் நிகழ்ந்த விபுலானந்த அடிகளின் நூற்றாண்டு விழா நிகழ்வுகளில்,
கட்டுரைப்போட்டியிற் பங்கு கொண்டு இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டேன்.

சான்றிதழை எடுத்துப் பார்க்கையில் மனதில் உவகை.

innamburan
19-07-2011, 08:38 PM
மிக்க மகிழ்ச்சி. உங்கள் தமிழ் படைப்புகளை பற்றி சொல்லுங்கள். நான் எழுதுவதை பற்றியும் எல்லாரும் தாராளமாக, தன் விருப்பப்படி, விமரிசிக்கலாம்.

அக்னி
19-07-2011, 08:49 PM
தாமரை அண்ணா சொன்னதொன்று..,


மற்ற இடங்களுக்கும், நம் மன்றத்திற்கும் உள்ள வேறுபாடு என்னன்னா

மற்ற இடங்கள் அரசவை மாதிரி - அங்க கவிதை சொன்னியா? பாராட்டு பரிசு வாங்கினியா என்று போய்க் கொண்டே இருக்கலாம்.

நம்ம மன்றம் தமிழ்ச்சங்கம் போல. இங்கே அரசர் கிடையாது. மன்றத்தில் போடப்படும் கவிதைகள் அலசோ அலசு என அலசப்படும். அலசப்படுவதின் நோக்கம் கவிதையை எடை போடுவது கிடையாது. கவிஞனை மேம்படுத்தவே ஆகும்.

சொற்குற்றம் பொருட்குற்றம் ஆகியவை கவிஞனின் குற்றமில்லை. அவை நம் சமூகத்தில் உண்டாகிவிட்ட குறைபாடுகள் ஆகும். நாம் என்ன சமூகத்தில் இருந்து கற்றுக் கொண்டோமோ அதைத் தானே சொல்கிறோம்.

ஒரு சிலருக்கு அவற்றைப் பற்றிய மாறுபாடுகள் உள்ள பொழுது அவை இங்கே விவரிக்கப் பட்டு விவாதிக்கப்பட்டு அறிவு விசாலமாகிப் போகின்றது, அதனால் பொதுவாகவே எல்லோர் அறிவும் உயர்கிறது. ஏன் எதற்கு எப்படி என பல பதில்கள் அங்கங்கே கிடைப்பதனால் நாம் பட்டை தீட்டிக் கொள்கிறோம்.

இதுதான் மன்ற நிதர்சனம்...
உங்கள் படைப்புக்கள் மன்றத்திற் பரவலாகப் பரவலாக,
இந்த தமிழ்ப் பந்தாடலைக் கண்டுகொள்வீர்கள்...

எனது புலம்பல்கள் மன்றப் படைப்புக்களிடையே ஆங்காங்கே இருக்கும்... :p