PDA

View Full Version : அன்றொரு நாள்: ஜூலை 15innamburan
15-07-2011, 02:04 PM
அன்றொரு நாள்: ஜூலை 15

தனியே எனக்கோர் இடம் வேண்டும் – தலை
சாயும் வரை நான் அழ வேண்டும்.
வானகம் போய்வர வழி வேண்டும் – எங்கள்
மன்னனை நான் பார்த்து வரவேண்டும்
தாயே எனக்கொரு வரம் வேண்டும்- என்
தலைவனை மீண்டும் தர வேண்டும்.
தமிழே எனக்கொரு மொழி வேண்டும் – அவன்
தன்மையைச் சொல்லிநான் தொழவேண்டும்.
இருப்பேன் பலநாள் என்றானே – எம்மை
ஏய்த்தது போல் இன்று சென்றானே – அவன்
சிரிக்கும் அழகைப் பார்ப்பதற்கே – அந்தத்
தேவன் அருகினில் அழைத்தானோ?
பறக்கும் பறவைக் கூட்டங்களே – எங்கள்
பாரத வீரனைக் காண்பீரோ – இங்கு
துடிக்குங் கோடி உள்ளங்களை – அந்தத்
தூயவனிடம் கொண்டு சேர்ப்பீரோ!

- கண்ணதாசன்

இன்று பெரும்தலைவர் காமராஜ் அவர்களின் அவதார தினம்: 1903: அவதாரம் தான். நண்பர்களில் அநேகருக்கு அவரை பற்றி என்னை விட அதிகம் தெரியும் என்பதால், எனக்கு தெரிந்த சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். அத்துடன் சரி. ஒரு வருத்தம். தமிழ் நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளில் பெரும்பான்மையானவை புகழுரை தொகுப்புக்களாகவும், ‘அரைத்த மா’ மரபில் ஊறியவையாக இருப்பதால், ஆக்கப்பூர்வமான மூலங்கள் கிடைப்பதில்லை. மற்றொரு பிரச்னை இணையதளம். பெரும்தலைவரை பற்றி பொறுப்புடனும், ஆய்வின் அடிப்படையில் எழுந்ததுமான கட்டுரைகள் கணிசமாகத் தென்படவில்லை. அரட்டைக்களங்களில் பல, அவரை பற்றி அரையும் குறையுமாக எழுதியுள்ளன. ஏன்? பாரதரத்ன குமாரசாமி காமராஜ் (15 07 1903 - அவர்களை பற்றி ஆய்வு தொடங்கும் போது தான், அநேக மடலாடற்குழுக்கள் அரட்டையுடன் நின்று விடுவதைக் கண்டு வருந்தினேன். இது நிற்க.

பாரதரத்ன குமாரசாமி காமராஜ் அவர்கள் விருதுநகரில் (விருதுப்பட்டி என்ற பெயர் பிறகு வந்தது. பழைய நாடோடி பாடல்களில் விருதுநகர் என்று தான் பெயர்: நமது தளத்தில் மின்னாக்கம் செய்யப்பட்ட நூல்.) ஒரு சில்லரை வணிகக்குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதில் தந்தையை இழந்தார். அம்மை சிவகாமி நகைகளை விற்று தன் ‘ராசா’வை படிக்க வைத்தார். அவருக்கு படிப்பு ஏறவில்லை, நாம் செய்த பாக்யம். சிறு வயதிலேயே, டாக்டர்.வரதராஜுலு நாயுடு, ஜார்ஜ் ஜோஸஃப் ( தமிழ் நாடு அவரை முற்றிலும் மறந்து விட்டது.) ஆகியோரால் ஈர்க்கப்பட்டு 16 வயதில் காங்கிரஸ்ஸில் இணைந்து தொண்டு பல செய்தார். திருமணம் செய்து கொள்ள திட்டவட்டமாக மறுத்து விட்டார். ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் உப்பு சத்யாக்கிரஹத்தில் கலந்து கொண்டார். நாளாவட்டத்தில் தேசியத்தலைவர் எஸ். சத்யமூர்த்தி அவர்களின் அத்யந்த சீடரானர், இந்த படிக்காத மேதை. சிவாஜி மஹராஜை போல, ஹைதர் அலி போல, படிக்காத மேதைகள் செவ்வனே அரசு நிர்வாகம் செய்ய முடியும் என்று செய்து காண்பித்தார். அவருடைய சாதனைகளை சொல்லி மாளாது. அது ஒரு பொன்மாரி காலம்.

எப்படி என்று கேளுங்கள்:

{1.இரு ஐ.சீ. எஸ். அதிகாரிகள் என்னிடம் சொன்னது:

ஐயா கிராம மின்சார இணைப்பு கொடுப்பதில் ஆர்வம் மிகுந்தவர். ஒரு ஜில்லா கலக்டரிடமிருந்து சிபாரிசு வர தாமதம், நான்கு கிராமங்களை தேர்வு செய்யவேண்டும். முதல்வர் ஐயாவே அவற்றின் பட்டியலை முன்மொழிந்தார். விந்தை யாதெனில், தேவை அடிப்படை, அவசரம், மக்களின் நிலைமை, காங்கிரஸ் கட்சியின் நோக்கு என்று எப்படி பார்த்தாலும், இதை விட சிறந்த பட்டியல் தர யாராலும் இயலாது. என்னுடைய தாழ்மையான ஆடிட் கணிப்பு இதை உறுதி செய்தது.

ராஜாஜி ஹால்: மூதறிஞர் ராஜாஜியின் உடல் மரியாதைக்கு வைக்கப்பட்டிருந்தது. கூட்டத்துடன் கூட்டமாக ஐயா. திரு. மு.க. முதல்வராக இருந்தார். ஐயா தனக்கு என்று ஒன்றும் கேட்கமாட்டார். பிரபலமாக இருந்த போலீஸ் கமிஷனர் ஷெனாய் அவர்கள், தான் ஒரு நாற்காலி கொண்டு வருவதாக சொன்னார். பதில்: அவர் பெரியவர். நான் உட்காரலாமா? நான் அருகில். அந்தக்காலம் பாதுகாப்பு வளையங்கள் கிடையா. ஷெனாய்: ஸெளந்தரராஜன்! நீ ஐயாவை விட்டு நகராதே.
நான் அக்காலம் திருமலைப்பிள்ளை ரோடில் வசித்து வந்தேன். என் சிறிய மகன் இவர் வீட்டு போலீஸ்காரர் துப்பாக்கியை கண்டு அவரிடம் சொந்தம் கொண்டாடுவான். சில சமயம், ஐயா அவர்கள் ஜன்னலோரம் நிற்பார்கள். இரண்டு வார்த்தை பேசுவார்கள். ஒரே ஒரு நாள் உள்ளே அழைத்து, எனக்கு பணி ஒன்று இட்டார். அவருக்கு திருப்தி அளிக்கும் வகையில் செய்து கொடுத்தது என் பாக்கியம்.}
அடிக்கடி சிறை வாசம் செய்த தலைவர், சிறைலிருக்கும் போதே நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையும் ராஜிநாமா செய்து கட்சிப்பணியில் ஈடுபட்டார்.1946 -ஆம் ஆண்டு மே மாதம் 16ம் நாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார், பிறகு நான்கு முறைகள்.1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ம் நாள் சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார். தான் கொண்டுவந்த காமராஜர் திட்டத்தை (கே பிளான்) செயல் படுத்த 1963ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பிற்காலம், காங்கிரஸ் கட்சியின் ‘கிங் மேக்கர்’ என்று கருதப்பட்டார். 1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி பிறந்த நன்னாளில் காமராஜர் இந்த உலகை விட்டுப் பிரிந்தார்.இன்னம்பூரான்

15 07 2011

உசாத்துணை:

P.Kandasamy: The Political Career of K.Kamaraj

http://books.google.com/books?id=bOjT3qffnMkC&printsec=frontcover&source=gbs_book_similarbooks#v=onepage&q&f=false

(சில நூல்கள் உள்ளன. இது முழுதும் மின்னாக்கம் செய்யப்பட்டு இருப்பதால், விரும்பியவர்கள் படிக்கலாம்).

http://www.tamildesam.org/special-pages/indian-leaders/kamarajar/the-leader-kamarajar/

பி.கு. முன்னாலேயே போட்டதோ? ஞாபகமில்லை.