PDA

View Full Version : அன்றொரு நாள்: ஜூலை 12



innamburan
12-07-2011, 03:30 PM
அன்றொரு நாள்: ஜூலை 12
இன்று ஒரு தேசியத்தின் ( நேஷனாலிடி) சுபஜெனனம். வருடம்:1799: இடம்: பாஞ்சாலம். நிகழ்வு: ‘பாஞ்சால சிங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் லாஹூரை ஜூலை 7,1799 அன்று கைப்பற்றி, அன்றே புகழ் வாய்ந்த பாத்ஷாஹி மசூதிக்கு வருகை தந்து, ஜூலை 12, 1799 அன்று முடி சூடினார். அவரது தனிப்பெருமைகள் பல. தன்னுடைய சாம்ராஜ்யத்தில் மரண தண்டனையை தவிர்த்தார்். அவரை கொலை செய்ய வந்தவனும் தலை தப்பினான். 40 வருடங்கள் செங்கோலோச்சிய இந்த மாமன்னர், தனது பாஞ்சால ராஜ்ய விஜய தினமன்றே (நாள்,கிழமை பஞ்சாங்கப்படி) (ஜூன் 27, 1839) இயற்கை எய்தினார். பாத்ஷாஹி மசூதிக்கும், குருத்வாரா டேஹ்ரா சாஹிப்புக்கும் அருகில் தகனம் ஆகும் போது, இரு புறாக்கள் தீயில் விழுந்து மாய்த்துக்கொண்டதாகவும், மழைத்தூறல் விழுந்ததாகவும் ஒரு வரலாறு கூறுகிறது, இது என்னமோ ஊரறிந்த விஷயம். ஒவ்வொரு பாஞ்சாலக்குடும்பமும் தந்தையை இழந்ததாக வருந்தியது. பாஞ்சாலம் விதவையாகி விட்டது என்றனர்.
ஆங்கிலேயர் எழுதிய வரலாறு கூட அவரது பெருந்தன்மை, வீரம், மக்கள் நல ஆர்வம் ஆகியவற்றை பதிவு செய்தன. இவரும் மக்களை நேசித்தார்; மக்களும் இவரை நேசித்தனர். தந்தை மட்டுமல்ல; தன்னவன் என்றனர், மக்கள், இவரை, நாட்டில் சாந்தி நிலவியது. முகலாய சக்ரவர்த்தி அக்பருக்கு பிறகு சமய வெறி, மத பித்து இல்லாத ஆளுமை அளித்தவர் என்ற பெருமை இவரை சாரும். அவருடைய அதிகாரிகளில் பட்டியலே, இந்த உண்மைக்குக் கட்டியம் கூறும். வெளி நாட்டினர் கூட (62) தகுதிக்கேற்ப. மேலும் ஒரு ஆளுமை நுட்பம். அரசு தலையீடு எதிலும் குறைவு.
பல வரலாற்று ஆசிரியர்கள் மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்களை ஷேர்ஷா ஸூரி, நெப்போலியன், பிஸ்மார்க், அப்ரஹாம் லிங்கன், சிவாஜி மஹராஜ், ஹைதர் அலி ஆகியோருடன் ஒப்பிட்டு பேசியுள்ளனர். அவருடைய அரசியல் திறன், ராஜ தந்திரம், நிர்வாஹத்திறன் எல்லாமே உன்னதமானவை. ஆஸ்ட்ரிய பயணி சார்லஸ் ஹ்யூகல் பிரபு: “உலகிலேயே வியப்புக்குரிய பொருள் யாதெனில், அது மஹாராஜா ரஞ்சித் சிங் ஸ்தாபித்த பாஞ்சால நாடு...இத்தனை மாபெரும் நாட்டை, குற்றம் ஒன்றும் செய்யாமல், இவர் ஸ்தாபனம் செய்ததை பற்றி சொல்லி மாளவில்லை. அவர் புழங்கியதோ, நாகரீகமற்றவர்களுடன் ( ஆங்கிலேயரை சொல்கிறார் என்று நினைக்கிறேன்!). எனவே, இவரது மென்மையான ஆளுமையை, அதிசயமாக நோக்குகிறேன்.”
உண்மை: ஆங்கிலேயர்களுடன் 1806, 1809, 1838 ஆகிய வருடங்களில் செய்து கொண்ட உடன்படிக்கைகளில், தனது, தன் ஆளுமையின், தன் எல்லையின், தன் மக்களின் பரிபூரண காபந்துகளை சிரத்தையாகக் காப்பாற்றிக்கொண்டார். ஆஃப்கனிஸ்தான் ஷாவுடன் உறவுகள் வலுத்தபோது, சாமர்த்தியமாக, சமந்தக மணியான (வைரங்களின் மன்னன்) கோஹினூரை, பக்குவமாகப்பேசி, தன்வசப்படுத்தினார். அது பிற்காலம் இங்கிலாந்து ராணியின் தலையில் அமர்ந்து கொண்டது வேறு கதை.
இன்னம்பூரான்
12 07 2011
உசாத்துணை:
http://www.singhsabha.com/maharaja_ranjit_singh.htm
படம்: பெண்டிங்க் துரையுடன் உடன்படிக்கை

கீதம்
15-07-2011, 01:01 AM
'பாஞ்சால சிங்கம்' மகாராஜா ரஞ்சித் சிங் பற்றி அறியாத பல அற்புத செய்திகள்! அரசாட்சி, ஆளுமைத் திறன், மக்கள் நலனில் அக்கறை, விதேசிகளுடனான உறவு என்று ஒவ்வொரு செயலிலும் தேர்ந்த நுட்பத்துடனும், சாதுர்யத்துடனும் கோலோச்சிய மாமன்னரைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.