PDA

View Full Version : அன்றொரு நாள்: ஜூலை 6



innamburan
06-07-2011, 07:05 AM
அன்றொரு நாள்: ஜூலை 6

கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். எனக்கென்னெமோ கற்றோர்களும் சான்றோர்களும் சென்ற இடங்கள் சிறப்பு பெறுகின்றன; சுத்தி அடைகின்றன; புனித தலங்கள் ஆகி விடுகின்றன என்று தோன்றுகிறது. மேலும், அவர்கள் நினைத்த மாத்திரம் ஆஜர் ஆகிவிடுகின்றனர், ப்ராக்ஸி கொடுத்தாவது! பாருங்களேன்! நான் எழுத நினைத்தது தாதாபாய் நெளரோஜி அவர்களை பற்றி. அவரோ சிஷ்யபிள்ளை ராமகிருஷ்ண கோபால பண்டர்கார் மூலமாக தரிசனம் தருகிறார்!

6 ஜூலை 1837: ஒரு எளிய சரஸ்வத் பிராமின் குடும்பத்தில் ராமகிருஷ்ண கோபால பண்டர்கார் சுப ஜெனனம். மராட்டிய பூமியில் சரஸ்வத் பிராமணர்களும், சித்பாவன் பிராமணர்களும், பல துறைகளில் தலைமை வகித்து, சமுதாயத்தின் பூஷணங்களாக விளங்கினர். கணக்கு சாத்திரத்தில் தொடங்கி, சம்ஸ்க்ருத மொழி விற்பன்னராகி, பள்ளி உபாத்யாயராக வாழ்க்கையை தொடங்கி, பேராசிரியாகி, துணை வேந்தராகி, அரசு ஆலோசகராக மேன்மையுடன் பணியாற்றி, 1911ல் ‘ஸர்’ விருது, இவர் மீது அணிகலனாகி தன்னை கெளரவித்துக்கொண்டதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். 1885ல் கொட்டிஞ்சன் பல்கலைக்கழகம் இவருக்கு உவந்தளித்த முனைவர் பட்டமும், ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்காவிலிருந்து விருதுகள் இவரிடம் வந்து குவிந்ததை பார்த்தால், ‘கற்றோர்களும் சான்றோர்களும் சென்ற இடங்கள் சிறப்பு பெறுகின்றன; சுத்தி அடைகின்றன; புனித தலங்கள் ஆகி விடுகின்றன.’ என்ற என் கூற்றை ஒத்துக்கொள்வீர்கள்.

இவரது தனிச்சிறப்புக்கள்: => கல்வி, ஆராய்ச்சி, சிந்தனை எல்லாவற்றிலும் முழுமை, பொருத்தம், பரந்த ஞானம், திறந்த ஆய்வு. மேற்கத்திய தத்துவ அணுகுமுறைக்கும், கிழக்கு பிராந்திய தத்துவ அணுகுமுறைக்கும் பாலம் இணைத்த பெருமைக்கு உரியவர், இவரே நூறு, நூற்றைம்பது வருடங்களுக்கு முன். 1876ல் அவர் லண்டனுக்கு ஒரு ஆய்வு கட்டுரை அனுப்ப, அப்போதிலிருந்தே, பட்டங்களும் விருதுகளும் வந்து குவிய தொடங்கின. அவருடைய வேதாந்த நூல்களும், இலக்கண நூல்களும், சமயம் சார்ந்த நூல்களும் உலகமுழுதும் போற்றப்படுகின்றன.

பிரார்த்தனா சமாஜ் என்று கேள்விப்பட்டுருப்பீர்கள். அதன் ஸ்தாபகர், இவர் தான். சமுதாய சீர்திருத்தத்தில் இவரது ஆர்வமும், ஈடுபாடும் இணையற்றது எனலாம். 1853ல் மாணவராக இருந்த போதே, சாதி வேற்றுமையை எதிர்க்கும் பரம்ஹம்ஸ சபை என்ற ரகசிய மன்றத்தில் சேர்ந்தார். 1867ல் கேஷுப் சந்திர சென் அவர்கள் பம்பாய் வந்ததன் பலனாக, பிரார்த்தனா சமாஜத்தை தொடங்கினார் இவர். கிருத்துவ பிரச்சாரத்தை ஆதரிக்காத பண்டர்க்கார் அவர்கள், ஹிந்து தத்துவங்கள் மேற்கத்திய தத்துவ விசாரணையால் பெரிதும் மதிக்கப்படுவதை குறிப்பிட்டு, அதை உதாசீனம் செய்வது பெரு நஷ்டம் என்று உரைத்தார்.1912ம் வருடம், நசுக்கப்பட்ட மக்கள் சபையில், தீண்டாமை ஒழிக்கப்படவேண்டும்; கழிவிரக்கத்தால் அல்ல: நாம் பிழைத்து இருக்க, அது ஒழியவேண்டும் என்றார். சம்ஸ்கிருத மொழி வல்லுனரான இவர், சம்பிரதாயம் வேறு, முட நம்பிக்கைகள் வேறு, சமய ஆதாரங்கள் வேறு என்று ஆணித்தரமாக சொன்னார். சாத்திரக்கூறுகள் மூலமாகவே பெண்மையின் மேன்மையை எடுத்துரைத்தார்.

பண்டார்க்கர் அவர்கள் ஆங்கிலேய ஆட்சியை ஆதரித்தவர். அவருடைய கவலை: நாம் பழைய ஒற்றுமையில்லாத வாழ்க்கைக்கு திரும்பி விடுவோம். நமக்கு போலி கெளரவம் ஜாஸ்தி. கூடி இயங்கும் தன்மை குறைவு. புரிகிறதோ, 2011ல்?

மூன்று மென்மையான விஷயங்கள்:
அவரது சதாபிஷேக பரிசில்: பண்டார்க்கார் கிழக்குக்கலாச்சார ஆய்வு களம், நண்பர்களிடமிருந்து. தனது 88 வயது வரை உழைத்த இந்த சான்றோன் ரிஷி பஞ்சமி அன்று (24 ஆகஸ்ட் 1925) தேக வியோகமானார்.
‘Festshrift’ என்பார்கள். புலவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், மற்ற புலவர்களின் அருமையான கட்டுரைகளை (பல ஆய்வுகள்) சமர்ப்பணம் செய்வார்கள். இவருக்கு சமர்ப்பணம் செய்ய்ப்பட்ட 400 பக்க நூல் இணையத்தில் உள்ளது. இணைப்பு கொடுத்திருக்கிறேன். ஒரிசா பாலுவிடம் சொல்லுங்கள். திரு. ராதா குமுத் முக்கர்ஜியின் இறுதி கட்டுரை கடல் வணிகம் பற்றி.
இவரின் இலக்கண நூல்கள், முதல் பதிப்பிலிருந்து, பல பதிப்புகள் என்னிடம் இருந்தன. இவ்வருடம், அவற்றை கொடுத்து விட்டேன். கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.

இன்னம்பூரான்
06 07 2011
உசாத்துணைகள்:

http://www.vandemataram.com/biographies/patriots/bhandarkar.htm
http://timesofindia.indiatimes.com/articleshow/72430.cms?prtpage=1