PDA

View Full Version : அவன்கண் விடல்



M.Jagadeesan
05-07-2011, 06:41 AM
" விசாலம்! விசாலம்!! " தன் மனைவியைக் கூப்பிட்டார் பீதாம்பரம்.
" என்னங்க?"

" இன்னிக்கி கரண்ட் பில் கட்டணும்; கடைசி நாள். கோடிவீட்டுக் கோவிந்தசாமி நமக்குப் பணம் தரணும்; அத வாங்கியாரச் சொல்லு."

' தெரியுங்க; பணம் வாங்கிட்டு வர சின்னவன் மாசியை அனுப்பியிருக்கேன்."

" சின்னவனையா அனுப்பியிருக்கே? அவனுக்கு அவ்வளவா வெவரம் பத்தாதே; பெரியவன் காசியை அனுப்பியிருக்கலாமில்ல? "

பீதாம்பரம் சொல்லி வாயை மூடுவதற்குள் மாசி வீட்டிற்குள் நுழைந்தான்.

" என்னடா மாசி! கோவிந்தசாமி பணம் கொடுத்தாரா? "

" இல்லப்பா! அவரு வீட்டுல இல்ல; வெளியில போயிருக்காராம்; அவரோட சம்சாரம் சொன்னாங்க "

" எங்க போனாராம்? எப்ப வருவார்னு கேட்டியா?"

"இல்லப்பா!"

" என்னடா இது; ஒரு மனுஷன் வெளிய போயிருக்கார்னு சொன்னா, அவரு எங்க போயிருக்காரு, எப்ப வருவார்னு விசாரிக்கமாட்டியா?
உங்க அண்ணன் காசிய கூப்பிடு "

"என்னப்பா? " என்று கேட்டுக்கொண்டே காசி வந்தான்.

" இன்னிக்கி கரண்ட் பில் கட்ட கடைசி நாள்; கோடி வீட்டு கோவிந்தசாமி பணம் தரணும். போயி வாங்கிட்டு வா!"

" சரிப்பா! " என்று சொல்லிவிட்டு காசி வெளியில் சென்றான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் காசி திரும்பி வந்தான். அப்பாவிடம்,
" அப்பா! கோவிந்தசாமி பணம் கொடுத்துவிட்டார். பணத்தை வாங்கிக்கொண்டு அப்படியே கரண்ட் பில்லையும் கட்டிவிட்டேன். இந்தாங்கப்பா மீதி பணம் " என்று சொல்லி பணத்தையும், பில்லையும் அப்பாவிடம் கொடுத்தான் காசி.

" கோவிந்தசாமி வீட்டில் இல்லையென்று உன் தம்பி மாசி சொன்னானே? "

" ஆமாம் அப்பா! நான் போனபோது கூட அவர் வீட்டில் இல்லை. வெளியில் போயிருப்பதாக அவருடைய சம்சாரம் சொன்னாங்க. அந்த அம்மாகிட்ட அவரோட செல் நம்பர் வாங்கி அவருக்கு போன் செய்தேன். பேங்கில் இருப்பதாகச் சொன்னார். தான் வீட்டிற்கு வருவதற்கு இரவு எட்டு மணி ஆகும் என்றும், உடனடியாக பேங்கிற்கு வந்து பணத்தை வாங்கிக்கொண்டு போகும்படியும் சொன்னார். எனவே பேங்கிற்குச் சென்று அவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, அப்படியே கரண்ட் பில்லையும் கட்டிவிட்டு வருகிறேன்." என்றான் காசி.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

என்பது குறள்.

ஆதி
05-07-2011, 06:54 AM
குறளின் விளக்கத்தை எளிமையாய் புரியவைக்கும் கதை ஐயா.. வாழ்த்துக்கள்..

இதனை "இதனால்" இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

இதனால் என்பதனை, கதையில் இன்னும் அழுத்தமாய் சொல்லி இருக்கலாம் என்பது என் கருத்து..

தாமரையண்ணா கண்ணில் இத்திரி பட்டால் தெளிவான* பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்..

அன்புரசிகன்
05-07-2011, 07:09 AM
இதையே ஒரு நகைச்சுவை காட்சியாக சிங்கம் படத்தில் வைத்திருப்பார்கள்.

வாழ்த்துக்கள் ஐயா..

M.Jagadeesan
05-07-2011, 07:23 AM
குறளின் விளக்கத்தை எளிமையாய் புரியவைக்கும் கதை ஐயா.. வாழ்த்துக்கள்..

இதனை "இதனால்" இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

இதனால் என்பதனை, கதையில் இன்னும் அழுத்தமாய் சொல்லி இருக்கலாம் என்பது என் கருத்து..

தாமரையண்ணா கண்ணில் இத்திரி பட்டால் தெளிவான* பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்..

இதனை= கோவிந்தசாமியிடம் பணம் வாங்கிவரும் வேலை.
இதனால்= செல்போன் கருவியினால் கோவிந்தசாமி இருக்கும் இடத்தை காசி தெரிந்து கொள்ளும் செயல்.

M.Jagadeesan
05-07-2011, 07:25 AM
ஆதனுக்கும், அன்புரசிகனுக்கும் நன்றி!

ஆதி
05-07-2011, 08:32 AM
இதனை= கோவிந்தசாமியிடம் பணம் வாங்கிவரும் வேலை.
இதனால்= செல்போன் கருவியினால் கோவிந்தசாமி இருக்கும் இடத்தை காசி தெரிந்து கொள்ளும் செயல்.

ஐயா, பரிமேலழகர் இதனால் என்பதை இக்கருவியால் என்று சொல்கிறார்..

இக்கருவி என்பதனை இங்கு செல்போன் கருவி என்று சொல்வதுதான் ஏற்புடையதாய் இல்லை.....

இக்கருவி என்பது சூழலுக்கு ஏற்ப செயல்படும் அறிவு என்பதனையே குறிக்கும் என்பது எனது கருத்து..

நாஞ்சில் த.க.ஜெய்
05-07-2011, 08:44 AM
அருமையான குறளின் உண்மை பொதிந்த கருத்தினை கதை மூலம் கூறிய விதம் அருமை ..

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

இதில் இந்த வேலைக்கு இவன் சரியானவன் என்றறிந்து அவனுடைய அறிவின் துணைகொண்டு அவன் முடிப்பான் என்றறிந்து அவனிடம் அந்த பணியினை ஒப்படைத்தல் ...என்றுதான் கூறுகிறது குறள்..

இதில் இதனால் என்று வருவது நண்பர் ஆதன் கூறுவது போல் அறிவினைத்தான் குறிக்கும் ..என்பதே என் எண்ணம் ...தொடருங்கள் ஐயா ...

M.Jagadeesan
05-07-2011, 11:07 AM
ஐயா, பரிமேலழகர் இதனால் என்பதை இக்கருவியால் என்று சொல்கிறார்..

இக்கருவி என்பதனை இங்கு செல்போன் கருவி என்று சொல்வதுதான் ஏற்புடையதாய் இல்லை.....

இக்கருவி என்பது சூழலுக்கு ஏற்ப செயல்படும் அறிவு என்பதனையே குறிக்கும் என்பது எனது கருத்து..

அறிவுடைமை என்ற அதிகாரத்தின் முதல் குறள்

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.

இந்தக் குறளில், " அறிவு " அரசர்க்கு இறுதி வராமல் காக்கும் கருவி என்று வள்ளுவர் கூறுகிறார்.

ஆனால்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

என்ற குறள் " தெரிந்து வினையாடல் " என்ற அதிகாரத்தின் கீழ் வருகிறது.

வினை ஆற்றுவதற்கு அவசியம் " கருவி " தேவை. ஆதலால்தான்
பரிமேலழகரும் "இதனால்" என்ற சொல்லுக்கு 'இக்கருவியால்" என்று பொருள் கூறுகிறார்.

அறிவின் துணை மட்டும் கொண்டு ஒரு செயலை நாம் செய்யமுடியாது. ஓர் ஆற்றைக் கடக்கவேண்டும் என்றால் படகு என்னும் கருவி தேவை.கல்வி கற்க புத்தகங்கள் போன்ற கருவிகள் தேவைப்படுகின்றன. எனவே இக்குறளில் வந்துள்ள " இதனால்" என்னும் சொல்லுக்கு " இக்கருவியால் " என்று பொருள் கொள்வதே பொருத்தமானது.

sarcharan
05-07-2011, 11:15 AM
சமர்த்து பையன்..
இதைதான் சொல்லுவார்கள் "மகனே! உன் சமர்த்து"

தாமரை
05-07-2011, 11:38 AM
இதனால் என்ற ஒரு வார்த்தை இரு கேள்விகளின் பதிலாய் அமைவதாகும்..

1. எதைக் கொண்டு - கருவி
2. என்ன காரணத்தினால்

காரணமில்லாமல் காரியம் இல்லை.

ஒருவர் ஒரு காரியத்தைச் செய்ய ஒரு காரணம் உள்ளதாயின் அக்காரியத்தை முழு மனதோடு செய்வார்கள்.

உதாரணமாக பரீட்சைக்கு படிப்பவருக்கோ அல்லது கிரிக்கெட் மேட்ச் பார்க்கணும் என்பதாலோ கரண்ட் கட் ஆனா தொல்லை என்ற ஒரு காரணம் இருந்தால் எப்பாடு பட்டாயிணும் கரண்ட் பில்லைக் கட்ட முனைவார்கள் அல்லவா?

அதே போல அக்காரியத்ததைச் செய்யத் தேவையான கருவிகள் ஆன வாகனவசதி, தொலைதொடர்பு வசதி ஆகியவை யாரிடம் உள்ளது என்பது போன்ற கருவி வசதி..

நான் ஏன் இதைச் செய்தாக வேண்டும் என்ற கேள்விக்கு பதில் இருக்குமாயின் அக்காரியத்தினை முடிக்கும் முனைப்பு இருக்கும்.

அதைச் செய்யத் தேவையான கருவிகளை கைக்கொள்ளும் எண்ணமும் பிறக்கும். எனவே காரணம் என்பது முதல் தேவை. கருவி என்பது இரண்டாம் தேவை. அறிவும் ஒரு கருவிதான்.

காரணமறிந்து, கருவியறிந்து என்பதை இதனால் என்ற ஒரு வார்த்தையில் அடக்கி விட்டார் வள்ளுவர்.

ஆதன ஏன் இந்தத் திரியில் என் பெயரை இழுத்து விட்டார்?

ஏன் இந்த வேலையை தாமரை செய்யணும் என்பதற்கு அடிப்படைக் காரணம் இருக்கு.

ஏன்னா மன்றம் தாமரைக்குச் சொல்வேந்தன் என்ற பட்டத்தைக் கொடுத்திருக்கு. அதை தக்க வைத்துக் கொள்ளணும்னா இந்த மாதிரி இடங்களில் சொல்லிற்குத் தகுந்த பொருளைத் தரவேண்டிய கடமை இருக்கு. அதைத் தக்க வைத்துக் கொள்ளவாவது கொஞ்சம் மெனக்கெடுவேன்,

கருவி :
பல கோணங்களில் பார்க்கிற அறிவு.. ஒரு அர்த்தம் கிடைத்தவுடன் திருப்தியடையாமல் விடாமல் அலசி நீள ஆழ அகலம் பார்க்கிற ஆர்வம்.

ஆக இன்ன காரணத்தினாலும், இன்ன கருவியாலும் என்ற இரண்டையும் வள்ளுவர் அடக்கிய ஒரே சொல் இதனால்.

கருவிகளுடையவன் ஆர்வமின்மையால் தோற்கக்கூடும். ஆனால் காரணமுள்ளவன் கருவிகள் இல்லாவிடினும் தேடிப் பெறக்கூடும். அதனால்

காரணம் முதலிடம்
கருவி இரண்டாமிடம்.

மூத்தவனிடம் காரணமிருக்கலாம்.. இளையவன் விளையாட்டுப் பிள்ளை.. அதனால் காரணம்/அவசியம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதையும் கொஞ்சம் சேர்த்திருந்தால் கதை மிகச்சரியாக பொருந்தியிருக்கும்.

மேலாளர்களான நாங்கள் செய்வது..

ஏன் செய்யணும் என்ற காரணத்தை மனதில் பதியும்படி எங்கள் கீழ் பணிசெய்பவர்களிடம் விளக்கி விடுவது.

இதைச் செய்தால் இன்னது கிடைக்கும் என்ற இலஞ்ச இலாவண்யம் இங்கே பக்க விளைவாகப் போகும் என வள்ளுவர் கனவில் கூட கருதி இருக்க மாட்டாரென நினைக்கிறேன்.

M.Jagadeesan
05-07-2011, 12:11 PM
நன்றி சர்சரண்.

M.Jagadeesan
05-07-2011, 12:14 PM
"இதனால்" என்ற சொல்லுக்கு விளக்க உரை தந்த தாமரை அவர்களுக்கு நன்றி!

ஆதி
06-07-2011, 06:35 AM
இந்த திருக்குறள் இக்காலத்திற்கும் எப்படி பொருந்தும் வகையில் உள்ளது என்பதை நடைமுறையில் உள்ள உதாரணங்களுடன் யாரேனும் விளக்க இயலுமா உறவுகளே ?

தாமரை
06-07-2011, 07:05 AM
இன்றைய தொழில் உலகின் தாரக மந்திரம்
வின் - வின் சீனரியோ
எனப்படும் அனைவருக்கும் வெற்றி என்ற கொள்கையாகும்.

http://3.bp.blogspot.com/_MAr0lRJ3mPk/Ssy2J5EpTKI/AAAAAAAAAbc/k5tON1Sm7Tw/s320/win-win.gif

பல வியாபார ஒப்பந்தங்கள், தொழில் நிறுவன ஒப்பந்தங்கள் ஆகியவை வெற்றிகளைப் பகிர்ந்து கொள்ளுதல் என்ற வின் வின் சீனரியோ அடிப்படையிலேயே இன்று செய்யப்படுகின்றன.

போட்டி அடிப்படையிலான தொழிலை, பங்குதாரர் அடிப்படையில் மாற்றி பல சில நிறுவனங்கள் கூடிய பெரும் கூட்டணிகள் இன்று தொழில் உலகத்தில் காணலாம்.

ஒரு நிரந்தரத் தொழிலாளியை விட கமிஷன் ஏஜ்ண்டுகளுக்கு அதிகம் பணம் தர வேண்டியதிருக்கலாம். ஆனால் நிரந்தரத் தொழிலாளியை விட கமிஷன் ஏஜெண்ட் நிறைய வியாபாரத்தைப் பெருக்குவார். ஏனென்றால் அவர் எவ்வளவு கடினமாக முயற்சிக்கிறாரோ அவ்வளவு அதிகம் அவரால் சம்பாதிக்க இயலும்.

இதையே நிரந்தரப் பணியாளரைச் செய்ய வைக்க இன்று நிறுவனங்கள் பர்ஃபாமென்ஸ் இன்செண்டிவ் என்ற பெயரிலே ஊக்கத் தொகைகளை அதிகரித்து விட்டு, அடிப்படைச் சம்பளத்தைக் குறைத்து விடுகிறார்கள்.

இது செய்தால் இது கிடைக்கும் என்ற அடிப்படையில் இதைச் செய்ய வேண்டும் என்ற அடிப்படை உந்துதலை உண்டாக்குவது அதாவது இதனால் என்பதன் முதல் அடிப்படயாகிய காரணத்தை உண்டாக்குதலே இந்த வின் வின் சீனரியோ என்பதன் அடிப்படை நாதமாகும்.

இதனால் - என்பதை அடிக்கோடிட்டு இப்போது நாம் சொல்வதை ஸ்டீவன் கோவி அவர்கள் தனது 7 ஹேபிட்ஸ் ஆஃப் சக்ஸஸ்ஃபுல் பீபுள் என்ற புத்தகத்தில் 4,5,6 பழக்கங்களில் நம்பிக்கையைப் பெறுவதைப் பற்றி விளக்கும் பொழுது விளக்கி இருப்பார்.

எதுக்கு நான் இதைச் செய்யணும் என்ற கேள்விக்கு நம்மால் திருப்தியாக விடையளிக்க முடியும் என்றால் அந்தக் காரியம் 75 சதவிகிதம் கண்டிப்பாக நடக்கும் என்பதே இந்த வெற்றியும் வெற்றியும் சித்தாந்தத்தின் அடிநாதமாக இன்று இருக்கிறது.

ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழாத மனது மிகவும் அரிதான ஒன்றாகும். அதற்கான சரியான பதில் இருப்பின் அக்காரியம் முடியாமல் இருப்பதும் அரிதான ஒன்றாகும்.

என் சுயநலத்தில் பொதுநலனும் அடங்கி உள்ளது - இது கலைஞர் எழுதிய வசனம்.

எல்லா நலனிலும் சுயநலன் அடங்கி உள்ளது - இது பொதுமக்கள் உணர்ந்த அனுபவம்.

ஆகவே ஒரு செயலை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆராயும் பொழுது, அதை அவர் செய்ய என்ன காரணம் இருக்கிறது? அதனால் அவருக்கு என்ன பயன்? அதைச் செய்ய அவருக்கு விருப்பமும் திறமையும் உபகரணங்களும் உள்ளனவா போன்ற விஷயங்களை ஆராய்ந்த பின்னர் அவரிடம் கொடுப்பதால் அந்தக் காரியத்தை அவரிடம் தரவேண்டும் என்பதான இக்குறள்..

இன்றைய உலக வாழ்க்கையில் மிக முக்கியமான இடம் பிடித்துள்ளது.

ரொம்பக் கெட்ட உதாரணமாக அரசியல்வாதிகள் - தொழிலதிபர் நட்பை எடுத்துக் கொள்ளலாம். ஒருவருக்கொருவர் எப்படி இந்த வெற்றியும் வெற்றியும் சித்தாந்தம் உதவுகிறது தெரியுமா?

ஐரேனிபுரம் பால்ராசய்யா
06-07-2011, 12:20 PM
கதை மிக அருமை. கதையில் வசனம் அதிக இடத்தை அபகரித்து விட்டது கொஞ்சம் வர்ணனையும் சேர்த்துக்கொள்ளவும்.

M.Jagadeesan
06-07-2011, 12:45 PM
கதை மிக அருமை. கதையில் வசனம் அதிக இடத்தை அபகரித்து விட்டது கொஞ்சம் வர்ணனையும் சேர்த்துக்கொள்ளவும்.


தங்களுடைய யோசனைக்கு நன்றி! இனி எழுதும் கதைகளில் வர்ணனையும் சேர்த்துக் கொள்கிறேன்.