PDA

View Full Version : என்ன எழுதுவது?PremM
28-06-2011, 06:29 AM
வற்றிப் போன கற்பனையில்,
கவிதைப் பிடிக்க நினைத்து,
தூண்டில் வீசும் எண்ணங்களுக்கு
சிக்காமல நழுவிப் போகிறது சொற்கள்..

சொட்டுச் சொட்டாய் வடிந்துக் கொண்டிருந்த
எண்ண ஊற்றுகளை காதல் தன்னுள் நிரப்பிவிட்டது..
இனி எஞ்சியிருக்கும் ஈரம்
இதயம் விட்டு அகலுமுன்,
பேனா நரம்புகளுள் புகுத்தி விடவேண்டும்..

சமூகச் சிந்தனைப் பற்றி எழுதினால் என்ன?
இல்லை என் பேனா இன்னும் கூர் தீட்டப் பட வேண்டும்..
காதல்?பழக்கப்பட்டப் பயணத்தில்
பரவசம் இல்லை..

தலைப்பைத் தேடி வீதியில் நடந்தேன்..
பசி கொல்கிறது என ஒரு குரல்,
குரல் வந்த திசையில்,
வயதை சுருக்கமாய்ச் சொல்லியிருந்த
முகச்சுருக்கங்கள் தாங்கிய ஒரு முகம்..
"எனக்கும்" எனச் சொல்லத் தோன்றியது..
சட்டைப் பாக்கெட்டின் அடிவாரம் வரை சென்று துழாவி,
தொண்மை வாய்ந்த சில பயணச்சீட்டுகளோடு
இரண்டே முக்கால் ரூபாயும் கைக்கு அகப்பட்டது..

நாணயம் விழுந்ததும் பாத்திரம் அழுதது,
காந்தியுடன் சேர்ந்து சிரித்திருக்கும்,
சிலக் காகித நோட்டுகள் தடம் பதித்திருந்தால்..

பூக்களோடு கதைகள் பேச,
பூங்கா வழி விழிகள் நடக்க..
காமத்தீயில் உடல்கள் உரச,
தீயின் புகை, கண்களை எறிக்க,
வீதியின் புழுதிப் புயலே,
போதும் என்றேன்..

கடற்கறை மணலில் பாதம் நனைத்து,
கவிதை ஒன்றைக் கடனாய்க் கேட்டேன்..
அள்ளிக்கொள் என்னிடம்,
ஆர்ப்பரித்தது பெருங்கடல்..
கட்டுக் கட்டாய் அறுவடை செய்திட,
முதல் வரியில் முத்தமிட்டது என் பேனா,
அதில் முதல் வார்த்தையாய் பதிந்தது "மாங்காய்" ..

எதிரில் நின்றவன்
"சார் மாங்காய்" என்றான்..
அடுத்த அரை மணி நேரத்தில்
7,8 தின்பண்டங்களின் பெயர் நிரம்பக் கிடைத்தது காகிதம்..

திகட்டாத அழகில் உருகி வரும் ஒரு பிறை..
மூச்சிறைக்க ஓடுகின்ற வெண்மேகங்கள்,
இதில் ஏதோ ஒன்று என் வாசல் வந்து தலைப்பொன்றைச் சொல்லிப் போனால் என்ன?

முயற்ச்சியை விட்டபாடில்லை..
எங்கே என் காகிதம்?
எங்கே என் காகிதம்?
ஓ ஒரு குழந்தைப் போல் அதுவும் ,
ஏமாற்றத்தில் உறங்கிப் போயிருக்கலாம்..

அதனை அள்ளி அணைத்தபடி,
எதோ ஒன்றை எழுதிய விரல்கள்,
கடிகாரத்தின் நொடிக்கொறுமுறை பிறக்கும் உற்சாகத்தோடு
போட்டி போட்டு உறங்கிப் போனது..

விடிந்துப் பார்க்கையில்,
அக்காகிதத்தில் எழுதியிருந்தேன்
"என்ன எழுதுவது?"

Nivas.T
28-06-2011, 07:01 AM
இரவெல்லாம் கண்விழித்து
கற்பனை குதிரை பூட்டி
தாரணி எங்கும் தடம்பதித்தும்
தட்டுப் படவில்லை கவிதைக் கரு

கதைபோல் இருக்கிறது கவிதை
மிக அருமை

தொடர்ந்து எழுதுங்கள் பிரேம்

பாராட்டுகள்

நாஞ்சில் த.க.ஜெய்
28-06-2011, 08:03 AM
சமூகச் சிந்தனைப் பற்றி எழுதினால் என்ன?
இல்லை என் பேனா இன்னும் கூர் தீட்டப் பட வேண்டும்..
காதல்?பழக்கப்பட்டப் பயணத்தில்
பரவசம் இல்லை.
அருமையான கவிதை வரிகள் ...தொடருங்கள் தோழர்..

அக்னி
29-06-2011, 12:48 AM
ஒரு வெள்ளைக் காகிதம்... கொஞ்சமாய் மையுடன் பேனா...
இருக்கின்றதா...

இருக்கின்றது...
ஆனால், கற்பனையையும், அது வடிக்கும் வார்த்தைகளும் எங்கே...

எங்கே... எங்கே... எங்கே...

எங்கேயும் இல்லையா என்றால்...

இல்லை
எங்கிருந்தும் இல்லை...

எழுத ஏதும் இல்லை...
"என்ன எழுதுவது?"

செல்வா
29-06-2011, 01:06 AM
என்ன எழுதுவது என்ற தேடலே இங்கே
அழகிய கவிதையாய்....

கற்பனை வறட்சி படைப்பாளர்கள் யாவரும் ஏதோ ஒருமுறை கண்டிப்பாக அனுபவித்திருப்பர்.
ஏதாவது எழுதவேண்டுமென்று தோன்றும் ஆனால் என்ன எழுதவெனத் தெரியாது...
இந்த மனநிலை ... அழகாகப் பதியப்பட்டுள்ளது.

ஆங்காங்கே இடறும் எழுத்துப்பிழைகளைக் களைந்தால் இன்னும் அழகு.

வாழ்த்துக்கள் நண்பரே...!நாணயம் விழுந்ததும் பாத்திரம் அழுதது,
காந்தியுடன் சேர்ந்து சிரித்திருக்கும்,
சிலக் காகித நோட்டுகள் தடம் பதித்திருந்தால்..


இரசித்தேன்....!

இளசு
30-06-2011, 05:45 AM
பிரேம் அவர்களுக்கு

பாராட்டுகள்.


முன்பகல் தெருவோரப் பசித்த பிச்சைத் தட்டு, பிற்பகல் பூங்கா காமுகர் வெப்பவீச்சு, மாலைநேரக் கடற்கரை அலை+ சிறுவியாபார இரைச்சல், இரவின் பிறை + தேம்பல் உறை குழந்தை உறக்கம் .... என

காணும் எதையும் அழகுதமிழில் காட்சிப்படுத்தும் இலாவகம் அருமையாய் உங்களிடம்..

சில்லறை சிரிக்கும் - பழமொழி.. இங்கே அழுகிறது ( இரண்டே முக்கால் இனி இரண்டு மட்டுமே....) மிக இரசித்தேன்.

ஜானகி
30-06-2011, 05:52 AM
ஒன்றுமில்லாமலே இவ்வளவா....அப்பப்பா...!

kulirthazhal
02-07-2011, 04:40 PM
உங்கள் கவிதையின் தேடல்கள் சராசரியானதாக இல்லை என்பதில் மகிழ்ச்சி... புதிதாய் பயணப்படும் தேடலில் பார்ப்பதெல்லாம் கவிதையாய் தோன்றலாம்.. சிறந்ததை பிடியுங்கள் அதில் உருவங்கள் மட்டும் போதாது.. உணர்வுகள் பேசவேண்டும்... நல்ல கவிதை தந்தமைக்கு நன்றி...

Ravee
03-07-2011, 12:05 AM
தொண்மை வாய்ந்த சில பயணச்சீட்டுகளோடு
இரண்டே முக்கால் ரூபாயும் கைக்கு அகப்பட்டது..


நாணயம் விழுந்ததும் பாத்திரம் அழுதது,
காந்தியுடன் சேர்ந்து சிரித்திருக்கும்,
சிலக் காகித நோட்டுகள் தடம் பதித்திருந்தால்..


அதில் முதல் வார்த்தையாய் பதிந்தது "மாங்காய்" ..

எதிரில் நின்றவன்
"சார் மாங்காய்" என்றான்..நான் ரசித்த வரிகள் யதார்த்தத்தை நகைசுவையாய் இடித்து காட்டியுள்ளது .... வாழ்த்துக்கள் நண்பரே

கௌதமன்
03-07-2011, 02:53 PM
கவிதை எழுதுவது மிக எளிது
முதலில் எழுதுவது கவிதைதானென்று
நாமே நம் எழுத்தை நம்ப வேண்டும்!
அதுதான் கொஞ்சம் சிரமம்!!:)

மன்றத்திலே வரும் கவிதைகளில்
சிறப்பான ஒரு கவிதைக்கு
பின்னூட்டம் என்ற பெயராலே
விமர்சன கவிதை பயிரிட்டால்
பாடுபொருள் பற்றி கவலையின்றி
கவிதைக்கு களம் கிடைக்கும்!!