PDA

View Full Version : சுற்றும் உலகு



M.Jagadeesan
26-06-2011, 05:59 AM
அந்தப் பள்ளியில் ஆண்டாய்வு நடந்துகொண்டிருந்தது. மாவட்டக் கல்வி அதிகாரி அவர்கள் வகுப்புகளை மேற்பார்வை செய்துகொண்டு இருந்தார். பத்தாம் வகுப்பில் தமிழாசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்.

மாவட்டக் கல்வி அதிகாரி, 10ம் வகுப்பில் நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று, "வணக்கம் ஐயா!" என்றனர்.

தமிழாசிரியரும், " வணக்கம்! வாருங்கள் ஐயா!" என்று வரவேற்றார்.

மாவட்டக் கல்வி அதிகாரி அனைவருக்கும் வணக்கம் சொன்னார்.

" என்ன பாடம் நடத்துகிறீர்கள்?" என்று தமிழாசிரியரை அதிகாரி கேட்டார்.

" திருக்குறள் ஐயா!"

" சரி, நடத்துங்கள்."

" சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
..உழந்தும் உழவே தலை."

மாணவர்களே! உழவு என்ற அதிகாரத்தில் முதல் குறள் இது. இந்தக் குறளில் ஓர் அறிவியல் உண்மை உள்ளது.16 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கலிலியோ சூரியனைப் பூமி சுற்றுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐயன் வள்ளுவர் இந்த பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது என்ற உண்மையை உலகுக்கு உரைத்துள்ளார். " சுழன்றும் " என்ற சொல்லிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது. சுற்றுகின்ற இந்த உலகமானது உழவுத் தொழிலின் பின்னே உள்ளது. மற்ற தொழில்களின் மூலமாக மக்கள் துன்பமடைவதால் உழவுத்தொழிலே சிறந்த தொழிலாகக் கருதப்படுகிறது.

தமிழாசிரியரின் இந்த உரையைக் கேட்டு மாவட்டக் கல்வி அதிகாரி முகம் சுளித்தார்.வகுப்பு முடிந்தவுடன் அதிகாரி, தமிழாசிரியரைத் தனியாக அழைத்து, " அந்தக் குறளுக்கு உங்களுடைய விளக்கம் எனக்கு சரியாகப் படவில்லை. " சுழன்றும் " என்ற சொல்லுக்கு " சுற்றுகின்ற உலகம் " என்பது பொருள் அல்ல. " உலகம் " என்றது உலகத்திலே வாழும் மக்களைக் குறித்து நின்றது. இடவாகு பெயர். தாங்கள் குறிப்பிட்டது போல " பூமி " யை அல்ல. அந்தக் குறளின் பொருள்

உழவுத் தொழில் கடினமானது என்பதால், அதை ஒதுக்கிவிட்டுப் பிற தொழில்களைச் செய்து திரிந்தாலும்,முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்;ஆதலால் எவ்வளவுதான் துன்பம் தருவதாக இருந்தாலும் உழவுத் தொழிலே சிறந்தது என்பதுதான் அக்குறளின் பொருள்." என்று கல்வி அதிகாரி கூறினார்.

" ஐயா! மிக்க நன்றி! அக்குறளுக்கு உண்மையான உரையை அறிந்துகொண்டேன். இனி பிழை நேராதவாறு பாடம் நடத்துகிறேன் என்று சொன்னார்.

" நூல்களைப் பிழையில்லாமல் கற்கவேண்டும் என்பதற்காகத்தான் " கற்க கசடற " என்றார் வள்ளுவர். இந்த அறிவுரை திருக்குறளுக்கும் பொருந்தும். எனவே வகுப்பறைக்குச் செல்லும் முன்பாக உங்களை நன்கு தயார்செய்து கொண்டு செல்லுங்கள். நாம் கூறும் தவறான கருத்துக்கள் மாணவர்கள் மனதில் பதிந்துவிடும். எனவே எச்சரிக்கையுடன் பாடம் நடத்துங்கள்."

" நன்றி ஐயா! இனி அவ்வாறே செய்கிறேன்."

" கற்க கசடற கற்பவை கற்றபின்
..நிற்க அதற்குத் தக.

கீதம்
26-06-2011, 11:14 PM
ஒரு கதைக்குள் பொருத்தமான இரு குறள் விளக்கம். கல்வி அதிகாரி தமிழாசிரியரைத் தனியே அழைத்துத் தவறு திருத்திய விதமும் அருமை. பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
26-06-2011, 11:18 PM
நன்றி கீதம்.

சொ.ஞானசம்பந்தன்
05-07-2011, 07:58 AM
ஆசிரியர்கள் பாடங்களை முன்னமே நன்கு தயார் செய்துகொள்வது மிக முக்கியம் . அப்போதுதான் சிறப்பாகப் போதிக்கலாம் ; மாணவர்களின் மதிப்பையும் பெறலாம் . நல்ல அறிவுரை தரும் கதை . பாராட்டுகிறேன் .

நாஞ்சில் த.க.ஜெய்
05-07-2011, 08:28 AM
ஒரு தமிழ் சொல்லுக்கு பல வார்த்தைகளிருந்தாலும் அதனை பயன்படுத்தும் இடத்திற்கேற்ப பொருள் மாறும் என்பதனை கல்வியதிகாரி உணர்த்திய விதம் அதற்கான உண்மையான விளக்கம் அருமை ...குறளை அறிந்த ஒருவர் அருகில் இருந்தால் உண்மைதனை அறிய முடிந்தது அந்த மாணவர்க்கு ..அவர் இல்லையெனில் அந்த ஆசிரியர் கூறுவதே உண்மையாக இருக்கும் ..வருங்கால தலைமுறையினர் பொய்யிற் புலவர் கூறிய உண்மை கருத்தினை உணர்ந்திருக்க மாட்டர்....இன்று இது போல் நிகழாதிருப்பதே நன்று...