PDA

View Full Version : அன்றொரு நாள்: ஜூன் 25 & 26:IIinnamburan
25-06-2011, 06:57 PM
அன்றொரு நாள்: ஜூன் 25 & 26:II

இன்று (ஜூன் 26, 1975) சேற்றில் முளைத்தெழுந்தத் தாமரையாக ‘ப்ரஷ்டாச்சார் மிடாவ் ஆந்தோலன்’ (லஞ்ச ஒழிப்பு புரட்சி), பாரத ரத்ன (பிற்காலம்) ‘லோக்நாயக்’ ஜெயப்பிரகாஷ் நாரயணன் அவர்களால் உருவாக்கப்பட்டது. 1930களிலேயே, அண்ணல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திலே வளர்ந்த தேசபிமானி அவர். என்னமோ நான் ‘புரட்சி வருகுது! புரட்சி வருகுது! சுற்றி நில்லாதே பகையே’ என்று குரல் கொடுக்கும்போதெல்லாம், ‘அதெல்லாம் வராது, இந்திய மண்ணில்’ என்று சூளுரைக்கும் நண்பர்களே! இதை கேளுங்கள். என்னை அபிமான புத்ரனாக தத்து எடுத்துக்கொண்ட ராஷ்ட்ர கவி ராம்தாரி சிங் ‘தின்கர்’ அவர்களின் ‘அரியணையிலிருந்து இறங்கு; மக்கள் படை வருகுது’ (‘Singhasan Khaali Karo Ke Janata Aaati Hai ) என்ற புரட்சியாற்றுப்படை பாடல் முழங்க, லக்ஷோபலக்ஷம் மக்கள் ராம்லீலா மைதானத்தில் குவிந்தனர், லோக்நாயக் அவர்களின் அன்புக்கட்டைளைக்குப் பணிந்து. அவர் கைது செய்யப்பட்டு, சண்டிகரில் சிறை வைக்கப்பட்டார். பீகார் வெள்ள நிவாரணப்பணிக்குக்கூட அவரை அனுமதிக்கவில்லை. அக்டோபர் 1975ல் அவருடைய உடல் நிலை கவலைக்குள்ளானது. நவம்பரில் விடுவிக்கப்பட்ட அவர், ஆயுசுபரியந்தம், சிறுநீரகக்கோளாற்றினால் அவதிப்பட்டார். பூவுடன் சேர்ந்த நாரும் மணப்பது போல், எனக்கு ஒரு ஆறுதல்: அவருக்கும், எனக்கும் ஒரே டாக்டர்: டாக்டர் எம்.கே.மணி. நெறி தவறாத மருத்துவர். ஒரு சொல், இது நிற்கும் முன். தின்கர் ஸாகேபும்,லோகநாயக் அவர்களும் வேண்டிய சம்பூர்ண புரட்சி வரும் என்பதில் ஐயமில்லை. தற்காலம், அன்னா ஹசாரே, யோகி ராம்குமார் நடத்தும், சர்ச்சைக்குள்ளான இயக்கங்களை பற்றி நான் பேசவில்லை. எனினும், இன்றைய மத்திய அரசின் போக்கைக் கண்டால் பொக்கைவாயை திறந்து சிரித்திடுவார், காந்தி மஹான்.

அவசர நிலையினால் அடைக்கப்பட்ட மற்றொருவர், திரு.குல்தீப் நாயர் என்ற பிரபல இதழாளர். பிற்காலம், அவர் இந்தியாவின் ஹை கமிஷனராக இருந்தபோது, லண்டனில், அவருடன் அளவளாவ ஒரு தருணம் கிடைத்தது. 1990ல். அவசரநிலையை பற்றி, அவர் ஒரு சிறிதளவு பேசக்கேட்டேன். இதே நாள், 2000ம் வருடம் அவர் நினைவு கூர்ந்ததையும், இணைத்து, இங்கே, சுருக்கமாக, எனது நடையில், பொறுப்பில்:

‘பாபு ஜகஜீவன் ராம் என்னுடன் தனித்து, தயக்கத்துடன், அச்சத்துடன் பேசினார். கமலாபதி திரிபாடியை தற்காலிக பிரதமராக நியமிக்கலாம். உங்கள் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இதழ் அதை ஆதரிக்க வேண்டும் என்றார்... அது நடக்கவில்லை... எல்லா அதிகாரங்களையும் சஞ்சய் காந்தி எடுத்துக்கொண்டார். சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், அவருக்கு ‘கூஜா’ தூக்கினர்...ஜனாதிபதிக்கு பிரதமர் எழுத வேண்டிய ‘அபகீர்த்தி’ மடலை வரைந்த சித்தார்த் சங்கர் ரே, அது நடந்த பிறகு தூக்கியடிக்கப்பட்டார். ‘முரட்டு’ பன்ஸிலால் ராணுவ அமைச்சர், ‘எவெர்க்ரீன்’ ப்ரணாப் முக்கர்ஜீக்கு நிதிவரவு/வங்கி துறை, ‘சென்ஸார் புகழ்’ வீ.சி.சுக்லாவுக்கு செய்தித்துறை, வணிகம், கமல்நாத். அதிகாரிகளில்: கிஷன் சந்த்-டில்லி கவர்னர், கோபி அரோரா: பிரதமர் அலுவலகம், என்.கே.சிங்க்- வணிகம்; ஜக்மோஹன், டி.பி.நய்யார், ஆர்.கே.தாவன், பீ.எஸ். பீந்தர், நவீன் சாவ்லா! அடேயப்பா! நவரத்னங்களைப்போல! அடைமொழிகள் எனது. அவரதல்ல. பிற்காலம் ஷா கமிஷன் சொன்னது: “எது எப்படி போனாலும், நாம் மட்டும் தலை தூக்கி வாழவேண்டும் என்ற அசட்டுத் துணிச்சல்; தார்மீக எண்ணங்கள் மங்கிப்போயின. அது பற்றி, இவர்களில் சிலரால் எண்ணிப்பார்க்கக்கூட முடியவில்லை.’ அச்சுறுத்தல், அடக்குமுறை, மானாவாரியாக சிறையில் தள்ளல், வீடுகளில் போலீஸ் தேடுதல், ஊடக ஒடுக்கம்,அதை கையடக்கிய உத்தி, மாநிலங்களை அடக்கியது என்றெல்லாம், சஞ்சய் காந்தி ராஜ்ஜியமாக இயங்கியது, இந்தியா. தடாலடியாக நடந்த சில விஷயங்களை பட்டியலிட்ட திரு குல்தீப் நய்யார், இந்த மீஸா [MISA (Maintenance of Internal Security Act)] இற்செறித்தலை கடுமையாக விமசரித்துள்ளார். தமிழ் நாட்டு அரசியலில், நமக்கு தெரிந்த சமாச்சாரம் தானே, அது. இவர் கூறியதை முழுதும் காண:
http://www.indianexpress.com/ie/daily/20000713/e1.html

இனி, குஜராத் பக்கம் திரும்புவோம். 1968ல் அங்கு இனக்கலவரம் நடந்தபோது ராணுவம் தான் ஊர்க்காவல். பிரதமர் இந்திராகாந்தி பார்வையிட வந்தார். ‘என் கண்ணில் ஒரு தலை தென்படக்கூடாது’ என்றார். அப்படியே நடந்தது. அப்போது என்னுடன் சக உத்தியோகஸ்தராக இருந்த திரு. சந்திரமெளலி, எமெர்ஜென்ஸி காலத்தில் உள்துறை காரியதரிசி. காந்தி வழியை பின்பற்றிய திரு. பாபுபாய் படேல் முதல்வர். சந்திரமெளலியின் நினைவலைகள்: அன்று பம்பாயிலிருந்து திரும்பிய நான், அவசர நிலை என்பதால், நேரடியாக முதல்வரை காணச்சென்றேன். அவர் கண்ணியமான மனிதர். அரசியல் விளையாட்டுக்கள் ஆடாதவர். அவருக்கு இந்த எமர்ஜென்ஸி பிடிக்கவில்லை. எனினும் மத்திய அரசின் ஆணைகளை புறக்கணிக்க இயலாது. ‘அவை சட்டப்படி சரியாக இருந்தால், நீங்கள், அரசு அதிகாரி என்ற முறையில், அவற்றை கடை பிடிக்கலாம். நாங்கள் உம்மை கஷ்டப்படுத்த மாட்டோம்.’ என்றார். திருவாளர்கள் மொரார்ஜி தேசாய், ஜெயப்பிரகாஷ் நாரயண், அதுல் பிகாரி வாஜ்பேயி, எல்.கே. அத்வானி ஆகியோரை சிறையில் வைத்தாகிவிட்டது. விட்டுப்போனது திரு.பாபு பாய் படேல் மட்டும் தான். அவரோ மாநில முதல்வர். தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டவில்லை, அவர். அடித்துப்பிடித்துக்கொண்டு, போவோரையும் வருவோரையும் கைது செய்ய மறுத்தார். இதழ்களை கன்னா பின்னாவென்று கட்டுப்படுத்த மறுத்தார். பொதுக்கூட்டங்களை அனுமதித்தார். தமிழ்நாட்டில் கவர்னர் கே.கே.ஷாவின் ‘கூடாநட்பின்’ (என் சொல்.) பயனாக, திரு. மு.கருணாநிதியின் அரசு டிஸ்மிஸ். குஜராத் கவர்னர், திரு. என்.என். விஸ்வநாதன் காங்கிரஸ்காரர் ஆனாலும், நியாயம் பார்ப்பவர். ஆகவே, கட்சி தாவலை வைத்துக்கொண்டு, திரு. பாபு பாய் படேல் ராஜிநாமா செய்ய வைக்கப்பட்டார். ஜனாதிபதி ஆட்சி. திரு. பாபு பாய் படேல், நான் உகாய் நிதி ஆலோசகராக இருந்த போது எனக்கு அமைச்சர். அவருக்கு நெருங்கியவர் என்று சுற்றுப்படை ஆசாமிகளால் சொல்லப்பட்ட ஒருவருக்கு பெரிய ஒப்பந்தம் ஒன்றை அளிக்ககூடாது, நியாயப்படி என்று நான் வாதாடினேன். நிதானமாக என் வாதத்தைக் கேட்ட அவர், ‘நீ வாய்மையிலிருந்து விலகக்கூடாது. நான் உன் பக்கம் அதாவது நியாயத்தின் பக்கம்’ என்றார். அவரை பற்றி திரு. சந்திரமெளலி சொல்கிறார், ‘ஒரு தவறிழைக்கும் எம்.எல்.ஏ. கைது செய்யச்சொல்லி, மத்திய அரசு ஆணை. திரு. பாபு பாய் படேல்: ‘அவன் எனக்கு அரசியல் எதிரி. எனக்கு எதிராகத்தான் வோட்டளிப்பான். அதை பிடுங்க எனக்கு இஷ்டமில்லை. ஓரிரு நாட்கள் பொறு. அவன் வோட்டளித்தப்பின் கைது செய்யலாம்.’

ஒரு விந்தை. எங்கு எங்கெல்லாம் எமெர்ஜென்ஸி கடுமையாக இல்லையோ, அங்கு காங்கிரஸ்ஸுக்கு வெற்றி, 1977ல்! [இவர் கூறியதை முழுதும் காண:
http://www.rediff.com/news/2005/jun/24spec3.htm]

நான் இருந்த ஒரிஸ்ஸாவில் எமெர்ஜென்சி தாக்கம் கடுமை. எல்லாரும் இந்திரா காந்தி ஆட்கள். எங்கெளுக்கெல்லாம், தணிக்கைத்துறையில் கூட, கெடு விதிக்கப்பட்டிருந்தன.

ஒரு ப்ளஸ் பாயிண்ட்: அரசு பணியாளர்கள் ஒழுங்காக அலுவலகம் வந்தனர். மறுபடியும் கதை நீண்டுவிட்டது. தொடர பல விஷயங்கள் உள்ளன. அதற்கான காலம் வந்தால் பார்க்கலாம்.

இன்னம்பூரான்
26 06 2011

இளசு
26-06-2011, 08:49 PM
மதிப்புக்குரிய இன்னம்பூரான் அவர்களுக்கு

பாரதி சொல்லி உங்களைப்பற்றி இன்று அறிந்தேன்.

உங்களுக்கு என் மரியாதையும் வந்தனமும்.

உங்கள் நெடிய வாழ்வின் அனுபவப் பகிர்வை இம்மன்றத்தில் அளிக்கும் பணிக்கு என் ஊக்கமும் வரவேற்பும்.


எதிரான வாக்களித்தபின் நடவடிக்கை என்ற திரு பாபுபாய் படேல் அவர்களைப்பற்றி அறிய வைத்த இப்பதிவுக்குப் பாராட்டு.

நாஞ்சில் த.க.ஜெய்
27-06-2011, 02:10 PM
வித்யாசமான நடையில் அன்றொரு நாள் ...இது ஒரே பதிவாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் ஐயா....

innamburan
27-06-2011, 06:07 PM
இளசு அவர்களின் வாழ்த்துக்கு நன்றி. உங்கள் விருப்பங்களையும் சொல்லுங்கள். எழுத முயற்ச்சிக்கிறேன். திரு.பாரதிக்கு நன்றி. ஏன் என்னால் சில தரவுகளை படிக்கத்தடை?

நாஞ்சில் த.க.ஜெய் அவர்கள் சொல்வது புரிகிறது. நான் எப்போதுமே ஒரு உத்வேகத்தில் எழுதுவதாலும், மற்றவர்கள் படிக்க சுருக்கமாக இருக்கவும், இரு பாகம் ஆக்கினேன். ஆக மொத்தம், இரு நாளும் இரவில் உறக்கம் பிடிக்கவில்லை..