PDA

View Full Version : அன்றொரு நாள்: ஜூன் 25 & 26



innamburan
24-06-2011, 07:39 PM
அன்றொரு நாள்: ஜூன் 25 & 26

இன்று (ஜூன் 25, 1975) காலை ஆதவனுக்கு அலுப்பு தட்டியதோ என்னவோ! வைகறையில் ஒரு கலக்கம். களப்பிரர் காலம் இப்படித்தான் இருள் மண்டி, முள்புதராக, கூர்க்கல்லாக, புலிப்பாய்ச்சலாக, முதலை கண்ணீராக, மக்களை ஆட்டிப்படைத்ததோ? முதல் நாள் உச்ச நீதி மன்றம் அளித்தத் தீர்ப்பினால், மத்திய அரசுக்கு, அஸ்தியில் ஜன்னி. ரகஸ்யமாக, ஈட்டிகள் தீட்டப்பட்டன. தோட்டாக்கள் நிரப்பப்பட்டன. வலைகள் நாலாதிசையும் வீசப்பட்டன. முஸ்தீப்புகள், ஜூன் 12, 1975 அன்று நீதிபதி.ஸின்ஹா அலஹாபாத்தில் தீர்ப்பு அளித்தவுடன் தொடங்கினவோ? என்ன கடபுடா சத்தம்! குண்டுச்சட்டியிலே எல்லாரும் சவாரி வராகளே! யாரை பார்த்தாலும் ஒரு சவக்களை! அரசியல் சுனாமி வரப்போவுதோ! அன்று நான் புவனேஸ்வரத்தில் இருந்தேன். பின்னர் பேசப்போகும் நண்பர் சந்திரமெளலி காந்தி நகரில் இருந்தார். நாங்கள் இருவருமே ஒரு மினி எமர்ஜென்ஸியை (அவசர நிலை) அஹமதாபாதில் ஒருசேர பார்த்திருக்கிறோம். ஏன்? அரசியல் சாஸனத்திற்கு உட்பட்ட எமர்ஜென்ஸி காலகட்டங்களில் இது மூன்றாவது. மூன்றையும் என் தலைமுறை பார்த்தது. மற்ற இரண்டிலும் எழாதக் கேள்வி, ‘இது அரசியல் சாஸனத்திற்கு உட்பட்டதா?’

இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள சக்திகளாலோ, உள்நாட்டு சூழல்களாலோ, பாதிக்கப்பட்ட நிதி அவலங்களாலோ, நாட்டின் பாதுகாப்புக்கும், ஆளுமைக்கும் ஆபத்து வந்தால், ஜனாதிபதி எமெர்ஜென்ஸி பிரகடனம் செய்யலாம் => இந்திய அரசியல் சாஸனம்: 18வது பகுதி.

அடிப்படை உரிமைகள் மறுக்கப்படலாம். மாநிலங்கள் வாலில்லா வானரங்களாகலாம். மாநிலங்களில் கடைந்தேறிய அவசரநிலைகளை இங்கு அலசப்போவதில்லை. மதிப்புக்குரிய அப்துல் கலாம் அவர்கள் காலத்திலே கூட மாநில அவச(ல)ரங்கள் நிகழ்ந்தன. நாடு தழுவிய எமெர்ஜென்ஸி தருணங்கள் மூன்று. முதலாவதில், சூறாவளியின் மையத்தில் தொண்டு (ராணுவ அமைச்சரகம்; போர் கையேடு, முப்படை ஆயுதம்&தளவாடம், பட்ஜெட், விஞ்ஞான ஆலோசகருக்கு உதவி, ரகஸ்யங்கள் இத்யாதி) செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இது நிற்க.


எமெர்ஜென்ஸி தருணங்கள் மூன்று:
26 10 1962 - 10 01 1968: இந்தோ-சீன போர்;
03 12 1971 - 1977: இந்தோ-பாகிஸ்தான் போர். இந்த எமெர்ஜென்ஸி அடுத்து வந்த கூளியுடன் சங்கமம் ஆயிற்று.
25/26 06 1975 - 21 03 1977: இங்கு பேசப்படும் உள்நாட்டு அரசியல் சூழல் அவசர நிலை.

முதல் நாள் உச்ச நீதி மன்றம் அளித்த நிபந்தனை-தீர்ப்பு: ‘இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினர் எனினும் மன்றப்பணி ஒன்றும் செய்ய இயலாது, வோட்டளிப்பது உள்பட.’ அதை வழங்கிய நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணையர், ‘ ஒரு நிகழ்வு மற்றொன்றின் பின் வருவதால் மட்டுமே, அவை தொடர்பு உடையவை அல்ல...பிரதமரின் மனுவுக்கு முக்கியத்தும் கொடுத்து, இடை விடாமல் வழக்கை விசாரித்து, மறு நாளே தீர்ப்பு அளித்து, யாவருக்கும் அது உடனடியாகக் கிடைக்க வழி செய்தேன். அதனுடைய சூத்திரம்: ‘நீ எவ்வளவு உயர்ந்த பதவியிலிருந்தாலும், சட்டம் ஒரு படி மேலே.’ பிரதமருக்காக வாதாடிய நானி பால்கிவாலா, இந்தத்தீர்ப்பு இந்திராகாந்தியை ஆத்திரப்படுத்தியது என்று பிற்காலம் கூறினார். அதனால் தான் தன்னை குறை கூறுபவர்களையும், எதிர்ப்புகளையும் அடக்க, அவசரநிலையை 25/26 நள்ளிரவில் பிரகடனம் செய்து, அரசியல் சாஸனம் போற்றிய அடிப்படை உரிமைகளை ரத்து செய்து, நீதியை ஒடுக்கி (தணிக்கைத்துறைக்கு ஆவணங்கள் கொடுக்கத்தேவையில்லை என்ற ஆணை, ஒரு தனிச்செய்தி.), ஏகப்பட்ட ஜனங்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு கண்காணாத இடங்களுக்கு அனுப்பபட்டனர். இந்த அவசரநிலை இந்தியாவின் வரலாற்றில் இருண்ட காலம். ஏன்? 1991-2000 நமது நிதி அவலம் அடைந்த பத்தாண்டு காலம்.

அவர் இதை எழுதியது 2000ம் ஆண்டு. இன்று பாமர மக்களை ஆட்டுவிக்கும் 9% பணவீக்கம், பரமபத சோபான வட்டி விகிதம், நுகர்வோர் படும் பாடு, தரகராட்டம், லஞ்ச லாவண்யம், ஊழல், கறுப்புப்பணம், அரசின் பற்றா நிதி நிலைமை, பின் வைத்த காலை அரசு இன்னும் பின்னுக்கு இழுத்தபடி... இது எல்லாம் 2000ல் அவருக்கு தெரிந்து இருக்க நியாயமில்லை. எதற்கும் உரக்க பேசக்கூடாது; நிதி நிலை அவலத்தினால், நாட்டின் பாதுகாப்புக்கும், ஆளுமைக்கும் ஆபத்து என்று, எமெர்ஜென்ஸி பிரகடனம் செய்து விட போகிறார்கள்!

இந்த 1975 அவசர நிலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, அரசு தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதம்: ‘ ஒரு நிரபராதியை போலீஸ் தீய எண்ணத்துடன் சுட்டுக்கொன்றாலும், கனம் கோர்ட்டாரால் ஒன்றும் செய்ய இயலாது. இந்த வாதம் வென்றது: நான்கு நீதிபதிகள் அத்தரப்பு. மறுத்தவர் ஒருவர்: நீதிபதி ஹெர்.ஆர்.கன்னா. உச்ச நீதி மன்றத்தின் இருண்ட மணித்துளி இது என்கிறார், முன்னாள் நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணையர். அவர் மேலும் சொல்வது, ‘நான் நீதியவையில் அமராத காலத்தில், பிரதமரை வீ.கே.கிருஷ்ணமேனன் நினைவு விழாவில் கலந்து கொள்ள அழைத்தேன். மறுத்து விட்டாலும் திருமதி. ஜென்னி லீயின் சொற்பொழிவுக்கு வந்தார். (திருமதி. ஜென்னி லீ சரியான புரட்சியாயினி; பிறகு பார்க்கலாம்.) நான் அவசர நிலை ஆட்சியை பழித்தேன். அவர் அதை கண்டு கொள்ளவில்லை எனினும், அவர் முகம் கலக்கமாயிற்று என்று சிலர் கூறினர்.

அவர் மேலும் சொல்வதை கேட்டு திருமதி. இந்திரா காந்தியின் தனித்துவத்தை நோக்கவும். நல்லதையும் சொல்லவேண்டுமல்லவா? அவருக்கு தப்புத்தாளம் போட்டு, பூம் பூம் மாடு ஆடியவர், உள் நாட்டு அமைச்சர் ஓம் மேஹ்தா. அவரை நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணையரிடம் அனுப்பி, அவர் புகாரின் படி, கேரளாவில்,அநியாயாமாக கைது செய்யபட்டிருந்தவர்களின் பட்டியலை வாங்கி, அவர்களை விடுவித்தார்.

இதையும் கேளுங்கள். இன்று கடை மூடும் நேரம் வந்து விட்டது. அதர்மமான கட்டுப்பாடுகளை உதறிய உயர் நீதி மன்ற நீதிபதிகள், அங்குமிங்கும் தூக்கி யடிக்கப்பட்டனர். பழிக்குப் பழி! இதற்கு ஆசியளித்தது, உச்ச நீதிமன்றத்தின் தலைவர் என்று குறிப்பால் உணர்த்துகிறார், முன்னாள் நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணையர்.

கட்டுரை நீண்டு விட்டது. இத்தனைக்கும் இது ஒரு துளி. கட்டுரைக்கு மிகவும் உதவியது:http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/20000627/ina27053.html
(தொடரும்)
இன்னம்பூரான்
25 06 2011