PDA

View Full Version : அன்றொரு நாள்: ஜூன் 23innamburan
22-06-2011, 07:12 PM
அன்றொரு நாள்: ஜூன் 23

“தரணியாள வேண்டுமெனில், நிலத்தை பறிக்கவேண்டும் - நிறம் கம்மி, மூக்குச்சப்பை, அது, இது என்று நொண்டிச்சாக்குச் சொல்லி. அசிங்கமாக இல்லை, இது?
- மார்லோ கூறுவதாக: ஜோசஃப் கோன்ராட்: இருண்ட இதயம்.

“அடடா! என்ன பிழைப்பு இது? ஊரை ஏமாற்றி? ஒரே சிக்கல்...”
- ஸர் வால்டர் ஸ்காட்: மார்மியன், கண்டம் 6, செய்யுள் 17

வாமனாவதாரத்தில் கூட பெருமாள் மூன்று அடிகள் நிலம் தான் கேட்டார். இந்த ஆங்கிலேயனோ, மேற்கத்திப்பக்கம் சூரத்தில் இறங்கி டேராப்போட்டு, அப்படியே தென்னாட்டுப்பக்கம் தலை வைத்துப் படுத்து, கிழக்கோரம் சூழ்ச்சிகள் பல செய்து, வடக்கு வாசலில், பாதுஷாவை கடத்தி சென்று, இந்திய உபகண்டத்தை கைபற்றினான். உங்களுக்கு பொலாசி தெரியுமோ? கொல்கத்தாவுக்கும், மூர்ஷிதாபாத் நகருக்கும் நடுவிலே உள்ள சதுப்பு நிலத்தில் ஒரு கிராமம் இது. அங்கு, இன்றைய தினம் (1757) காலை ஏழு மணிக்கு தொடங்கிய ஒரு போலி யுத்தம் தான் வரும் இரு நூறு ஆண்டுகளுக்கு [சரி: 190] பாரதமாதாவின் தலை விதியை அடிமையாக நிர்ணயித்தது. வங்காள நவாப் ஸிராஜ் உத் தொளலாவின் 15,000 புரவிகளும், 35 ஆயிரம் துருப்புகளும், நாற்பது பீரங்கிகளும் கொண்ட படையின் தளபதி மீர் ஜாஃபர், மதியத்திற்கு முன்னாலேயே, வெறும் மூவாயிரம் துருப்புக்களுடன் வந்திருந்த ராபர்ட் கிளைவிடம், ரகசியமான முன்னேற்பாடின் படி சரணடைந்தான், தன் எஜமானனுக்கு துரோகமிழைத்து. லஞ்சப்பேய் தலைவிரித்தாடையது. காசு வாங்கிக்கொண்டு, மீர் ஜாஃபரின் படையினர், ஆயுதங்களுடன் எதிரியின் பக்கம் சாய்ந்தனர். நாற்பது பீரங்கிகளும் அநாதையாயின. நவாப் தரப்பில் 500 வீரர்கள் மாண்டனர்; கிளைவ் தரப்பில் 22 இந்திய சிப்பாய்கள்! “ ராஜ துரோகமும், பித்தலாட்டமும் ராபர்ட் கிளைவுக்கு பின்பலம். இந்தியாவின் ஆளுமையை ஆங்கிலேயர் பிடித்ததே, இப்பேர்ப்பட்ட அநாகரீகச்செயல்களால். அதனால் ஏற்பட்ட கசப்பு நீங்கவேயில்லை.” என்றார், ஜவஹர்லால் நேரு.

ஆம். 23 06 1767 அன்று நடந்த இந்த போலி யுத்தம் தான், இந்திய சாம்ராஜ்யத்தை இங்கிலாந்துக்கு தத்து கொடுத்தது. போர்க்களத்திலிருந்து புறமுதுகு காட்டி ஒடிய நவாப், அவருடைய தளபதியும் துரோகியுமான, மீர் ஜாஃபரின் மகன் மீரானால் கொலையுண்டார். மீர் ஜாஃபருக்கு கிளைவின் தயவினால் முடி சூடப்பட்டது. கிழக்கிந்திய கம்பேனிக்கு வங்காளம், பீகார், ஒரிஸ்ஸாவில் கட்டற்ற வணிக உரிமை அளிக்கப்பட்டது. வரி விலக்கு வேறே! 24 பர்காணா ஜமீந்தாரியும் போனஸ். மீர் ஜாஃபரின் கஜானா சூறையாடப்பட்டது, இந்த ஆங்கிலேய நண்பர்களால். இதை கண்டு மிரண்டு போன மீர் ஜாஃபர் அடம் பிடிக்க, அவரும் தூக்கி அடிக்கப்பட்டார். அவரின் மாப்பிள்ளை மீர் காசிமுக்கு அடித்தது யோகம். மறுபடியும் ஒரு சுற்று, லஞ்சம். நவாப் ஸிராஜ் உத் தொளலாவுக்கு துரோகம் செய்தவர்கள்: மீர் ஜாஃபர், ஜகத் சேத் என்ற லேவாதேவி, காதிம்கான் என்ற ‘பிரபு’. கொல்கத்தா கொத்தவால் மாணிக் சந்த், அமீன் சந்த் என்ற வியாபாரி, நவாபின் பொக்கிஷதாரன், ராய் துர்லப், அவருடைய சித்தி க்வாசிதி பீகம். இது போததா?

கிளைவுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம்: பத்து லக்ஷம் பொற்காசுகள். வயிறு எரியுது அல்லவா. இந்த போலி யுத்தம், அதன் பின்னணி துரோகங்கள், லஞ்ச் லாவண்ய விளைவுகள் எல்லாம், ‘கணக்கு’ என்று போடப்பட்டால், ஒரு பெரிய தொகை நஷ்டம் என்று சொல்ல முடியாது. இழந்ததோ பாரத திரு நாட்டை. 1757லிருந்து 1947 வரை நமது இழப்பை இத்தனை தம்பிடி, இத்தனை காசு, இத்தனை ரூபாய் என்று கணக்கு சொல்லமுடியுமோ?

இது ஒரு வரலாற்றுத்தொடரல்ல. 23 06 1757ல் நிகழ்ந்த ஒரு அழுச்சாட்டியம். அவ்வளவு தான். பக்சாரில் நடந்த போர், தரங்கம்பாடி யுத்தம், ஹைதர் அலி, மொகலாய சாம்ராஜ்யம் அழிந்த அலங்கோலம் என்றெல்லாம், இங்கு எழுதப்படவில்லை. அதற்கு உரிய தருணம் வந்தால்...
http://www.youtube.com/watch?v=rwgF2-C83hc

இன்னம்பூரான்
23 06 2011
பின்குறிப்பு: இது கூகிள் மொழிபெயர்ப்பு அல்ல. ஏன்? மொழிபெயர்ப்பே இல்லை. என் நினைவில் இருப்பவை; சரி பார்த்தவை; பொறுப்பு எனதே. விளாசவும்.

பாரதி
23-06-2011, 09:16 AM
அன்புள்ள ஐயா,
இந்த விபரம் எனக்கு இன்றைக்குத்தான் தெரியும் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டியதாகிறது. நேரம் அமையுமெனில் இதைக்குறித்த விபரங்களை திரட்டி படிக்க வேண்டும் என்ற ஆவலும் எழுகிறது. நன்றி ஐயா.