PDA

View Full Version : அன்றொரு நாள்: ஜூன் 21innamburan
20-06-2011, 06:44 PM
அன்றொரு நாள்: ஜூன் 21

அனுதினமும் ஏதாவது நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஏன் ஒவ்வொரு வினாடியும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. நாட்காட்டியை வைத்துக்கொண்டு, அன்றைய தினம், இன்றைய தினம் என்றெல்லாம் எழுதினால் யார் தான் படிப்பார்கள்? இன்று புவனம் போற்றிய தத்துவ ஞானி ழான் பால் சார்த்தெரே (Jean Paul Sartre) அவர்களின் பிறந்த தினம் (1905). என் மனதுக்கு பிடித்தவர். அவருடைய தத்துவம் என்னை ஆட்கொண்டது. அதற்காக, எல்லோரும் அவரை போற்றவேண்டும் என்று எதிர்பார்க்கலாமோ?

தவிர, இன்றைய தினம் நிக்கலோ மாக்கியவல்லி (Niccolò Machiavelli) என்ற இத்தாலிய அரசியல் குருவின் மறைந்த தினம் (1527). அரசாளுவது ஒரு கலை, வாழ்வியல், கர்ம மார்க்கம். பாரதவர்ஷத்தின் வரலாற்றில் சீதா தேவியின் தந்தை ஜனக மஹாராஜாவுக்கு, மஹரிஷி என்றும் பெயர். பிற்கால மன்னர் பர்த்துருஹரியும் அப்படித்தான்: நீதி/ வைராக்யம்/ காமம் மூன்றிற்கும், திருவள்ளுவர் மாதிரி நெறி வகுத்த முனிபுங்கவர். விதுர நீதி, சுக்கிரநீதி, தமிழ் நீதி நூல்கள், அர்த்த சாஸ்திரம் ஆகியவை நம்மிடம் (ஏட்டளவில்!) இருக்கும் வரை, நிக்கலோ மாக்கியவல்லியை பற்றி என்ன பேச்சு? என்ற எதிரொலி வருகிறது; என் காதில் விழவில்லை. ஏனெனில், மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் அறிவுரைத்தபடி, கிணற்றுத்தவளையாக இல்லாதபடி, உலக வழக்குகளும், வரலாறும், சிந்தனைகளும் அறிந்து கொள்வது நல்லது தானே.

அரசாளுபவர்கள் தன் ஆளுமையை தவறவிடக்கூடாது. மன்னனின் செங்கோல் வளையலாகாது. மக்கள் நலம் நாடுவதே, அவனது இலக்கு. அண்டை, அயல் மன்னர்களை தன் வசம் இழுக்கவும் வேண்டும். கண் காணிக்கவும் வேண்டும். பட்டியல் நீளமானது. அதை விதுர நீதி, சுக்கிரநீதி, தமிழ் நீதி நூல்கள், அர்த்த சாஸ்திரம் ஆகியவற்றிலும் காணலாம். நிக்கலோ மாக்கியவல்லியின் ‘அரசகுமாரன்’ என்ற நூலிலும் காணலாம். அவரை பற்றி எழுத நிறைய விஷயங்கள் இருந்தாலும், சிலவற்றை மட்டும் கோடி காட்டிவிட்டு, இந்த நூலின் சுருக்கத்தின் சாராம்சத்தை மட்டும், இங்கு தருகிறேன்.

அவர் தத்துவம் பேசியதில்லை. அனுபவமும், வரலாற்று சான்றுகளுமே அவருடைய ராஜதந்திரத்தின் தூண்கள். எனவே, முன்னும் பின்னுமாகவும், முரண் தோற்றமுள்ள கருதுகோள்களையும் எடுத்துரைத்திருக்கிறார். தத்துவம் பேசுபவர்கள், அவற்றை கையாளுகிறார்கள் என்பதும் உண்மை. இத்தாலியின் ஃப்ளாரன்ஸ் குறுநிலத்தின் சார்பாக, பல நாடுகளில் ராஜதந்திரியாக பணி செய்துள்ளார். அவர் எழுதிய முதல் நூல் ‘அரசகுமாரன்’(1514); அதை பதிப்பிக்க 18 வருடங்கள் ஆயின. பல தொல்லைகள்; வேலை போயிற்று; ஆட்சி மாறியது. அந்த நூலில் தனித்துவமே, அக்காலம் ஆளுமையையும், வாழ்நெறியும் இணைத்து உதட்டளவில் பேசப்பட்டதை, கேள்விக்குறியாக்கிய விசாரணை. எது என்னவாயினும் அரசன் ஆளுமையை தக்கவைத்துக்கொள்ளவேண்டும்; நன்னெறி மட்டும் போதாது; ஆளுமையை பயன்படுத்தும் கலையை மன்னன் கற்றுக்கொள்ளவேண்டும்; இல்லையெனின், தனிமனிதர்கள் தன்னிச்சையாக செயல்படுவார்கள்; அத்தருணம், தேசத்தின் பாதுகாப்பும், காபந்தும் அடிபடும் என்கிறார்.

சட்டமும் நல்லதாக இருக்கவேண்டும்; ஆயுதங்களும் கூர்மையாக இருக்கவேண்டும் என்பது, இவரது கூற்று. அவருடைய வாக்கும், போக்கும்: ‘ வலிமை மிக்க ஆயுதங்கள் இல்லையெனின், நல்ல சட்டங்கள் இருக்க வாய்ப்பில்லை. எனவே, நான் சட்டத்தை பற்றி பேசவில்லை. தளவாட வலிமையை பற்றி பேசுகிறேன்...பெரும்பாலும், மனித இனம் நன்றி/ பற்று/ வாய்மை ஆகியவற்றை மதிப்பதில்லை. ஆதாயம் தேடுவார்கள். அபாயம் வந்தால் காத தூரம் ஓடுவர்... எனவே, கனிவை விட கட்டுப்பாடு வேண்டும்...’. (மஹாகவி பாரதியாரின் ‘நடிப்பு சுதேசிகள்’ ஒரு தடவை படித்து விடுங்கள்). தயவு தாக்ஷிண்யம் இல்லாமல், இவர் கொடுங்கோல் ஆட்சியை ஆதரிக்கவில்லை. போலி ‘நல்லாட்சியை’ உதறி விடுகிறார். அதனால் தான் கட்டு காபந்து என்ற கடமையாற்ற, அரசகுமாரனுக்கு சிறந்த பயிற்சி தரவேண்டும் என்கிறார்; அதற்கு தான் இந்த நூல். திட்டவட்டமாக அதிகாரபலத்தை சிபாரிசு செய்யும் இவர், அரசகுமாரன், கால தேச வர்த்தமானத்தை அறிந்து விவேகமாக செயல் படவேண்டும் என்கிறார். அத்துடன் நிற்காமல், காட்டாறு போல் பெருகி வந்து, ஒரு சமயம் வெள்ளத்தில் அடித்து போவதும், சில சமயம் பாசனத்திற்கு பயன் என்பது போல் அதிர்ஷ்ட தேவதை, எதிர்பாராத சோதனைகளை தருவாள்; அதை தாக்குப்பிடிக்கும் வித்தை தெரியாத அரசகுமாரன் அழிந்து போவான் என்று பொருள்பட கூறுகிறார்.

இவரது அறிவுரைகள் என்றுமே சர்ச்சைக்குள்ளானவை. அதர்மத்தின் உறைவிடம் என்பார், லியோ ஸ்ட்ராஸ். அன்று. நடைமுறைக்கு உகந்த கட்டுப்பாடு என்பார் பெனெடெட்டோ க்ரோஸ் என்ற தத்துவ ஞானி. இது அரசியல் அறிவியல் என்பார், எர்னெஸ்ட் காஸியர். ஆனால், என்றோ ரூஸோ என்ற தத்துவ ஞானி சொன்னார், ‘இது அரசு இலக்கணம் அன்று; ஆளும் தரப்பினதின் கடூர போக்கை, மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது, இங்கே.’ என்று.

இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். படிப்பதும் நான் தானே? தமிழாக்கம் என் பொறுப்பு; உசாத்துணை:http://plato.stanford.edu/entries/machiavelli/ அது ஒரு கருவூலம்.

ஒரு சிந்தனை: இன்று இந்திய அரசியல் நடப்பில், நிக்கலோ மாக்கியவல்லியின் அறிவுரை எங்கெல்லாம் பொருந்தும். எங்கெல்லாம் சிந்தியுங்கள். அவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்

21 06 2011

Ravee
20-06-2011, 09:43 PM
பல புதிய தகவல்கள் .... புதிய சிந்தனை வடிவங்கள் .... இதற்கென்றே நேரம் ஒதுக்கி படிக்கவேண்டியுள்ளது .... தொடருங்கள் தொடர்ந்து வருகிறோம் இன்னம்பூரான் அவர்களே .... :)