PDA

View Full Version : அன்றொரு நாள்: ஜூன் 17innamburan
20-06-2011, 09:26 AM
அன்றொரு நாள்: ஜூன் 17

‘மனு! நான் செத்தேன்.’

இந்த ஹீனக்குரல் கேட்டு, தன் புரவியை திருப்பினாள், மனு. நானாவை தூக்கி தன் குதிரையில் அமர்த்திக்கொண்டு, அவனுடைய தம்பி ராவுடன், ஊருக்கு திரும்பினாள். அதற்கு முன்னரே நானாவின் சவாரியில்லாத துரகம் தலை நகருக்கு திரும்பிவிட, அவனின் வளர்ப்பு தந்தை மனம் கலங்கினார். கூட இருந்து ஆறுதல் சொன்னது, மனுவின் தந்தை. வீட்டுக்கு வந்த பிறகு,அவர் மனுவிடம் கேட்கிறார்:

‘மனு! என்னே துரதிர்ஷ்டம்! நானாவுக்கு பலத்த அடி.

‘அப்பா! பெரிதாக ஒன்றுமில்லையே. பலத்த காயம் பட்ட பின்னும், அபிமன்யூ போரிடவில்லையா?’

‘அந்த காலம் வேறு, மனு.’

‘என்ன வித்தியாசம், அப்பா? அதே ககனம். அதே பூமி. அதே சூரிய சந்திரரும்.’

‘காலம் மாறி விட்டது, பெண்ணே! இது அந்த பாரத வர்ஷம் இல்லை. அன்னியர் ஆட்சி. நாம் வலிமை இழந்தவர்கள், மனு.’

‘என்னது இது? சீதா தேவி, ஜீஜீபாய், தாராபாய் என்று வீராங்கனைகளை பற்றி பேசி, பெண்ணினத்து பெருமையை நினைத்து உச்சி குளிர்ந்த என் தந்தையை, இப்படி மனம் கலங்க வைத்தாயே, பிரபு! (மனுவின் தனி மொழி).

இது ஒரு புறம் இருக்க:

நானாவும், ராவும் ஒரு யானையின் மேல் சவாரி செய்கின்றனர். தந்தைகள் இருவரும் மனுவும் அவர்களுடன் சவாரி செய்ய வேண்டும் என விரும்புகின்றனர். நினைத்தது எல்லாம் நடந்து விடுகிறதா? இல்லை. நானா ஆணையிட, யானைப்பாகன் அவளை ஏற்றிக்கொள்ளாமல் கிளம்பிவிடுகிறான். மனு ஏமாந்து போனாள்.

வீட்டில்:

‘காலத்தை அனுசரித்து நடக்கவேண்டும், மனு! நாம் என்ன அரசகுலமா? குறு நிலமன்னர்களா? நமக்கு விதிக்கப்படாததின் மீது ஆசை வைக்கலாகாது, என் கண்ணின் மணியே.’

‘அப்பா! கவலையற்க. எனக்கு விதிக்கப்பட்டது ஒரு கஜ சேனை; ரத கஜ துரக பதாதி.’

‘ததாஸ்து.’ (கண்ணை ரகசியமாக துடைத்துக்கொள்கிறார்).

மனுவை பற்றி என். எஸ். ராமபிரசாத் கூறியது, என் கண்களின் முன்னே, ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னே, கட்டியம் கூறியது, நான் மனுவின் மண்னை கண்களில் ஒத்திக்கொண்ட போது. அவர் கூறியது:

‘(மனு) இந்திய பெண்ணினத்துக்கு மட்டும் இறவா புகழ் கொணரவில்லை. தரணியின் பெண்குலத்துக்கு மங்கா புகழ் அளித்தாள் அவள். இளவயது; தளிர் மேனி. ஆனால் அவள் சிம்மம் அல்லவோ! மகிஷாசுரமர்த்தினி அல்லவோ! காளி மாதா அல்லவோ!. வயதுக்கு மீறிய தீர்க்கதரிசனம்! முதிர்ந்த கனி போன்ற தீர்மானங்கள்.’ சரி. நீங்கள் அந்த ஊருக்கு சென்று வந்த பின் அல்லவோ அவர் எழுதினார் என்றெல்லாம் கேட்கப்படாது. இன்று மனுவின் நினைவு தினம். பிறந்த தினம் பற்றி சரியான தகவல்கள் இல்லை. நானாவின் சகபாடி என்பதால், அவளது வீர மரணம், போர்களத்தில், முப்பது வயதிற்க்குள். ஏனிந்த பேச்சு? அமரதெய்வம் மனுவுக்கு காலவறையில்லை. என்றும் நிரந்தரமாக மின்னும் தாரகை, அவள்.

அவளது பகைவனே, ‘புரட்சி செய்தவர்களில், துணிவு மிகுந்தவளும், சிறந்த தளபதியும் அவள் தான்’ என்றார்.

நானாவின் தந்தை: மராத்தா பேஷ்வா பாஜி ராவ். மனுவின் தந்தை: அவரது சகோதரரின் அமைச்சர் மொரோபந்த் தம்பே. மனுவின் பகைவர்: பிரிட்டீஷ் ஜெனெரல் சர் ஹ்யூ ரோஸ். மனு: ராணி லக்ஷ்மி பாய்: ஜான்ஸி ராணி. அவள் வீர மரணம் எய்தது: ஜான்சியில், ஜூன் 17 1858.

இம்மாதிரியான விஷயங்கள் என் மனதை பாதிப்பதை, நான் மறுக்கவில்லை. தட்டச்சில் கூட கண்ணீரின் கறை படலாம், இந்த வீராங்கனையை பற்றிய நாட்டுப்பாடல்களை கேட்டால், கல்லும் உருகும். இவளை பற்றி பொறுப்புடன் ஆய்வு செய்தவர், அலென் கோப்ஸே என்ற ஆங்கிலேயர்.

மேலும் படியுங்கள்:

‘வீர சமாதியா? நமது ராணிக்கா? ஐயா! அது எல்லாம் தேவையேயில்லை. என்றென்றும் எங்கள் நினைவுகளில் அழிக்க முடியாத ரத்தக்கறையாக உறைகிறாளே. அது தான் அவளுடைய வீர சமாதி...’ என பொருள்பட பாடினார், என்னுடைய அபிமான கவிஞர், ஸுபத்ரா குமாரி செளஹான். सिंहासन हिल उठे राजवंशों ने भृकुटी तानी थी என்று எளிய ஹிந்தி நடையில் தொடங்கி:

तेरा स्मारक तू ही होगी, तू खुद अमिट निशानी थी
बुंदेले हरबोलों के मुँह हमने सुनी कहानी थी
खूब लड़ी मर्दानी वह तो झांसी वाली रानी थी

என்று உணர்ச்சி ததும்ப முடித்தார். முழுப்பாடலையிம் இணைத்துள்ளேன்.

http://www.youtube.com/watch?v=6CX8W7tSSEY => Her Rare photograph.

இன்னம்பூரான்

17 06 2011


Picture of "Jhansi Ki Rani" clicked by Hoffman ...By meenakshi| 1 video

பாரதி
20-06-2011, 11:00 AM
இன்று ஒரு தகவல் போல அன்றொருநாளும் அனைவர் மனதிலும் இடம் பெறும் ஐயா. புதிய முறையில் படிப்பது போன்ற ஒரு உணர்வு!
மிக்க நன்றி ஐயா. தொடருங்கள்.

sarcharan
30-06-2011, 10:53 AM
நல்ல தகவல் சார்.

ராஜாராம்
30-06-2011, 12:58 PM
சரித்திர காவியத்தை அழகாக மனதில் பதியவைத்துவிட்டீர்கள்.
மிக அருமையான படைப்பு.
வாழ்த்துக்கள்.