PDA

View Full Version : மு.ந. வைவிட அ.ப மேலானது.



M.Jagadeesan
10-06-2011, 09:04 AM
முன்னொரு காலத்தில் ஓர் அரசன் ஒரு பார்ப்பானுக்கு ஒரு மாணிக்க மணியை வழங்கினான். அம்மணியை வாங்கின பார்ப்பான்,அதனை வீட்டிற்கு எடுத்துச் செல்லும்போது யாரேனும் கள்வர் கவர்ந்தால் என்ன செய்வது என்று ஆலோசித்தான். பின்னர் அம்மணியை வாயில் போட்டு விழுங்கிவிட்டான். வீட்டிற்குச் சென்றதும் கக்கி அம்மணியை எடுத்துக் கொள்ளலாம் என்பது அவன் எண்ணம்.

இதனை அறிந்த வேடன் ஒருவன், அந்தப் பார்ப்பான் வீட்டிற்குப் போகும்பொழுது, அவனைத் தொடர்ந்துபோய், செறிந்த காட்டுவழியில் அவனைத் தடுத்து மடக்கி, "உன் வயிற்றில் இருக்கும் மாணிக்கத்தைக் கக்கு" என்றான். அதனைக் கேட்ட பார்ப்பான் அஞ்சி," மாணிக்கம் உன் வயிற்றில்தானே இருக்கிறது" என்று கூறினான். இவ்விருவரும் இவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது கள்வர்கள் வந்து பார்ப்பானைப் பிடித்துக்கொண்டு, மாணிக்கத்தைக் கக்கச் சொன்னார்கள். பார்ப்பானுக்கு வேடன் பகைவனாக இருந்தாலும், அறிவுள்ளவன் ஆனதால்,பார்ப்பான் மீது அன்பும் இரக்கமும் கொண்டு அவன் உயிரைக் காக்க எண்ணிக் கள்வர்களைப் பார்த்து,"ஐயா! நாங்கள் விளையாட்டாகப் பேசிக்கொண்டோம்; மாணிக்கம் வயிற்றிலா இருக்கும்? உங்களுக்கு விருப்பமானால் என் வயிற்றை அறுத்துப் பாருங்கள்" என்றான். கள்வர்கள் வேடன் வயிற்றை அறுத்துப் பார்த்தார்கள். வயிற்றில் மாணிக்கம் இல்லை. உடனே இரக்கம் கொண்ட கள்வர்கள்,"ஆ! இவ்வேடனை அநியாயமாகக் கொன்று விட்டோமே; இந்தப் பார்ப்பானையாவது கொல்லாமல் விட்டிவிடுவோம்" என் எண்ணி அவனைப் பிழைக்க விட்டார்கள். பார்ப்பான் உயிர் பிழைத்தான். பார்ப்பானுக்கு வேடன் பகைவனாக இருந்தாலும். அறிவுள்ளவனாக இருந்ததால். அவன் மீது அன்பு கொண்டு தன்னுயிரை விட்டான்.

குரங்கின் கதை:
.......................

ஓர் அரசன் ஒரு குரங்கினை அன்புடன் வளர்த்து வந்தான். ஒருநாள் அவ்வரசன் அக்குரங்கினிடம் ஒரு கத்தியைக் கொடுத்து, " இவ்வழியாக யாரையும் உள்ளே விடாதே; எனக் கட்டளையிட்டு உறங்கச் சென்றான்.அவன் உறங்கும்போது, அவன் உடம்பின் மீது ஓர் ஈ வந்து உட்கார்ந்தது. குரங்கு அதனைப் பார்த்தது. அரசன் அந்த ஈயைக் கொல்லத்தான் தன்னிடம் கத்தியைக் கொடுத்ததாக அறிவில்லாமல் எண்ணியது. அந்த ஈயைக் கொல்லக் கத்தியால் ஒரு வெட்டுப் போட்டது. ஈ பறந்து விட்டது. அரசன் இரு துண்டானான்.அரசனிடம் குரங்கு அன்பு கொண்டிருந்தாலும், அற்வில்லாமையால், இத்தீமையைச் செய்து விட்டது.

அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம்
சிறுவன் பகையாம் செறிந்த_ அறிவுடைய
வென்றி வனசரன்தான் வேதியனைக் காத்தான்முன்
கொன்றதொரு வேந்தைக் குரங்கு.

கருத்து: முன்னொரு காலத்தில் நிறைந்த அறிவுடைய வேடன் ஒருவன், ஒரு பார்ப்பான் உயிரைக் காப்பாற்றினான். ஆனால் அறிவற்ற ஒரு குரங்கு, தன்னை வளர்த்த அரசனையே கொன்றுவிட்டது.எனவே முட்டாளின் நட்பைவிட, அறிவுள்ளவனின் பகைமை மேலானது.

நீதிவெண்பா: இயற்றியவர் யார் என்று தெரியவில்லை.

கீதம்
10-06-2011, 09:10 AM
முதல் கதையில் வேடன் தன்னையும் காத்துக்கொண்டிருந்தால் அறிவுடையவன் என்பது பொருந்தும். எனவே மனத்திற்கு ஒப்பவில்லை. அறிவற்றவனைப் போலவே உணர்கிறேன். மன்னியுங்கள் ஐயா.

இரண்டாவது கதையில் நீதி மிக அழகாகப் பொருந்துகிறது.

பாடல் சொல்லும் கருத்து வெகு நன்று. பகிர்வுக்கு நன்றி.

M.Jagadeesan
10-06-2011, 09:15 AM
கீதம் அவர்களே! இது நான் புனைந்த கதையல்ல! பாடல் சொல்லும் கருத்து. அதை நாம் எப்படி மாற்றமுடியும்?

கீதம்
10-06-2011, 09:27 AM
பாடல் சொல்லும் கருத்தே என்றாலும் என் மனதில் தோன்றியதைச் சொன்னேன். தவறாக நினையாதீர்கள்.

பார்ப்பானின் உயிர் காப்பாற்றப்பட்டாலும் வேடன் அநியாயமாக உயிரிழக்க நேரிட்டதே என்று தோன்றியது.

தாமரை
10-06-2011, 12:09 PM
பேதி மருந்தே தெரியாத திருடர்கள்.. ஹூம்!!!

Nivas.T
10-06-2011, 01:20 PM
பேதி மருந்தே தெரியாத திருடர்கள்.. ஹூம்!!!

:lachen001::lachen001: இனிமா.....:lachen001::lachen001::lachen001:

சிவா.ஜி
10-06-2011, 05:22 PM
யார் எழுதியதென்றாலும் பரவாயில்லை...இதில் எந்த நீதியுமில்லை....தர்மமுமில்லை.

ஆதி
11-06-2011, 02:00 AM
பேதி மருந்தே தெரியாத திருடர்கள்.. ஹூம்!!!

:D :D :D

தாமரை
13-06-2011, 09:13 AM
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.

M.Jagadeesan
13-06-2011, 10:25 AM
உண்மைதான் தாமரை அவர்களே!

நாஞ்சில் த.க.ஜெய்
13-06-2011, 12:39 PM
பழங் கதை கூறும் நீதி அருமை ஐயா .
குறிப்பு:
மன்றத்தில் இளகிய மனம் படைத்தவர்கள் பலர் உள்ளனர் ஆகையால் கதை கூறும் நீதியை மாற்றமுடியாது கதையை மாற்றிவிடவேண்டியதுதான் ...

M.Jagadeesan
13-06-2011, 01:00 PM
வேடன் இறந்தது எனக்கும் உடன்பாடு இல்லைதான். ஆனால் கவிதை கூறும் கருத்தை நாம் மாற்ற இயலாதே!

aren
15-06-2011, 05:37 AM
ஏதோ பழங்காலத்தில் எழுதிவைத்தார்கள் என்பதற்காக அனைத்தையும் அப்படியே இந்த காலத்திலும் எடுத்துக்கொள்ளவேண்டாம்.

இந்தக் கதையில் எனக்கு உடன்பாடில்லை.

praveen
15-06-2011, 06:11 AM
கதை என்றாலும் அதென்னங்க பார்ப்பான் என்ற குறியீடு, பார்ப்பனர் என்பதற்கு பதில் வேதியர், அந்தணர் இப்படித்தான் பழங்கதைகளில் குறிப்பிட்டு பார்த்திருக்கிறேன். கூடுமானவரை தமிழ்மன்றத்தில் ஜாதியபெயர்களை தவிர்ப்பது நல்லது.

///

அந்த வேடுவன் புத்திசாலி என்றால் தன்னுயிரை இழந்திருக்க மாட்டான், ஏனென்றால் அடுத்தவர் உடைமையை அபகரிக்க நினைப்பவன், அவரையே காப்பாற்ற உயிர்த்தியாகம் செய்வான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.


இந்தக்குரங்கு கதை சற்று ஏற்றுக்கொள்ளலாம். அறிவில்லாதவன் நட்பு ஆபத்தில் முடியும் என்பதற்கேற்ப.

M.Jagadeesan
15-06-2011, 01:16 PM
வேதியர்,அந்தணர், பார்ப்பான் ஆகிய சொற்கள் வெவ்வேறு பொருள் கொண்டவை. வள்ளுவரும்,"பார்ப்பான்" என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.