PDA

View Full Version : உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்



M.Rishan Shareef
01-06-2011, 05:19 AM
உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்

நான் மழை
ஈரலிப்பாக உனைச் சூழப் படர்கிறேன்
உன் பழங்கால ஞாபகங்களை
ஒரு கோழியின் நகங்களாய்க் கிளறுகிறேன்

எனை மறந்து
சிறுவயதுக் காகிதக் கப்பலும், வெள்ள வாசனையும்
குடை மறந்த கணங்களும், இழந்த காதலுமென
தொன்ம நினைவுகளில் மூழ்கிறாய்
ஆனாலும்
உன் முன்னால் உனைச் சூழச்
சடசடத்துப் பெய்தபடியே இருக்கிறேன்

உனைக் காண்பவர்க்கெலாம்
நீயெனைத்தான் சுவாரஸ்யமாய்க்
கவனித்தபடியிருக்கிறாயெனத் தோன்றும்
எனக்குள்ளிருக்கும் உன்
மழைக்கால நினைவுகளைத்தான்
நீ மீட்கிறாயென
எனை உணரவைக்கிறது
எனது தூய்மை மட்டும்

இன்னும் சில கணங்களில்
ஒலிச் சலனங்களை நிறுத்திக்
குட்டைகளாய்த் தேங்கி நிற்க
நான் நகர்வேன்

சேறடித்து நகரும் வாகனச்சக்கரத்தை நோக்கி
'அடச்சீ..நீயெல்லாம் ஒரு மனிதனா?'
எனக் கோபத்தில் நீ அதிர்வாய்

எனைத் தனியே ரசிக்கத் தெரியாத
நீ மட்டும் மனிதனா என்ன?

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

ஜானகி
01-06-2011, 05:58 AM
கடும் கோடையில், திடுமென வந்த மழை [ கவிதை ] தரும் சிலிர்ப்பு அனைவரையும் கவர்ந்து ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.....தொடரட்டும் சுகந்தமாக....

M.Rishan Shareef
01-06-2011, 01:59 PM
அன்பின் ஜானகி,

//கடும் கோடையில், திடுமென வந்த மழை [ கவிதை ] தரும் சிலிர்ப்பு அனைவரையும் கவர்ந்து ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.....தொடரட்டும் சுகந்தமாக.... //

உங்கள் கருத்து மகிழ்வினைத் தருகிறது. நன்றி சகோதரி :-)

Nivas.T
01-06-2011, 03:10 PM
கவிதை மிக அழகு

பாராட்டுகள் ரிஷான்

M.Rishan Shareef
02-06-2011, 12:18 PM
அன்பின் நிவாஸ்,

//கவிதை மிக அழகு

பாராட்டுகள் ரிஷான் //

உங்கள் கருத்திலும் பாராட்டிலும் மகிழ்கிறேன்.
மிகவும் நன்றி நண்பரே :-)

ஆதி
21-06-2011, 12:33 PM
ஒரே பொருளை ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாய் அல்லது ஒன்றொன்றாய் காண்கிறோம்/காண்போம்...

உதாரணமாக பூமி எனும் ஒரு சொல்மீது நமக்கு இருக்கும் கருத்துக்கள்/எண்ணங்கள் மாறுபட்டவையாகவோ/வேறுபட்டவையாகவோ இருக்கின்றன/இருக்கும்..

பூமி * = நிலமாய், உயிர்களின் உறைவிடமாய், கோளாய், பிரபஞ்ச துகளாய், வட்டமனதாய், சதுரமானதாய், சுற்றும் பொருளாய், நிலவின் தாயாய், வாழ்வின் ஆதாரமாய், கடவுள்களின் கடவுளாய், இன்னும் பல விதமாய் நம் எண்ணத்தில் இருக்கலாம்..

ஆனால் பூமி பூமியாகவே இருக்கிறது, நம் நிலையை சார்ந்து நம் எண்ணங்கள் வேறுபடுகிறது..

இக்கவிதையிலும், மழை மழையாகவே இருக்கிறது, மழையை சுகிப்பவன், மழையை இறந்த கால நினைவுகளுக்குள் பெய்ய வைத்து தன் தொன் ஞாபகங்களின் மண் வாசத்தை அனுபவிக்கிறான்..

இப்போது உயிர்ப்போடு பெய்கிற மழையை புறக்கணித்து எப்போதோ பெய்த மழையின் ஈரக்காற்றில் குளிர்கிறான். இப்போது உயிர்ப்போடிருக்கும் ஒவ்வொன்றையும் அவன் இழந்து கொண்டிருக்கிறான்..

எப்போதோ நனைந்த நனைவின் ஈரத்தில் இப்போது குளிர்பவன் மாயைகளின்/பழமைகளின் அடிமை, இப்போது நிகழ்வனவோடான தொடர்பறுந்து உயிர்ப்பற்றிருப்பவன், இப்போது நிகழ்வனவோடு உயிர்ப்போடு வாழ்பவன் விழிப்போடு இருப்பவன்..

மழை இங்கு மழையாய் மட்டும் பெய்யவில்லை வாழ்வாகவும், ஞானமாகவும் பெய்கிறது..

பாராட்டுக்கள் ரிஷான் அண்ணா..

நாஞ்சில் த.க.ஜெய்
22-06-2011, 04:50 AM
ஒரு மழைக்கால நினைவுகளின் தொகுப்புகள்...அருமை தோழர் ...

M.Rishan Shareef
16-12-2011, 10:52 AM
கருத்துக்கு நன்றி நண்பர் நாஞ்சில் த.க.ஜெய் :-)