PDA

View Full Version : எதற்காக வந்தாளோ....



kulirthazhal
29-05-2011, 05:00 AM
எதற்காகவும்
காத்துக்கிடக்கவில்லை...
நேரத்தை பற்றிய
அவசியமேதுமில்லை...
கண்கள் எங்கும்
சுழலவில்லை...
காற்றில் அசையும்
காகித துண்டையே
வெரித்துக்கொண்டிருந்த்து,
என் கண்களை கவர்ந்ததால்
காகிதத்தின்
வெற்றி களியாட்டம்
அடங்கவில்லை....

சுற்றி எல்லாமே
சுழன்றுகொண்டிருந்த்தது.,
"திருவிழாக்கூட்டம்"....

என் ரத்த ஓட்டத்தை
மிகையாய் சுழற்றும்
ஒரு காந்தம்.,
திருவிழாக்கூட்டத்திலும்
கொளுசுச்சத்தத்தை மட்டும்
பிரித்துத்தரும் சாகசம்.,
என் பேச்சுத்திறமையை
பூட்டி வைக்கும்
சிறைச்சாலை.,
மெதுமெதுவாய்
என் அசைவுகளை
கரைக்கும்
விழிக்கறையான்.,

கடந்து போகிறாள்.,
கடந்து போகிறாள்.,,
கண்கள் திரும்பவில்லை..,

உள்மன அழுகையை
மிதித்து மிதித்து
அழுத்தி வைக்கும் கண்ணீர்
அடிமனதில்
அடைத்துக்கொண்டதால்
சோம்பலாய் கிடக்கிறது
கண்கள்..,

ஒருதலைக்காதலாய்
காகிதம் இன்னமும்
ஆடிக்கொண்டிருக்கிறது
என்
ஆழம் புரியாமல்.,

அவள்
என்னைப்பார்க்கத்தான்
வந்திருப்பாளோ.,,,

-குளிர்தழல்

Nivas.T
29-05-2011, 07:17 AM
பார்க்காத கணத்தில்
பார்ப்பாளோ பாவை?
பார்த்தால் அவள்
தவிர்ப்பாளோ பார்வை?
கேட்டால் தீர்ப்பாளோ தேவை?

கவிதை அருமை
பாராட்டுகள் குளிர்தழல்

நாஞ்சில் த.க.ஜெய்
29-05-2011, 05:41 PM
விழிக்கறையான்., இதன் பொருள்தான் இன்னும் புரியவில்லை ..
சில பிழைகள் தான் தவிர அருமையான கவிதை ..வாழ்த்துகள் ...

வெரித்து = வெறித்து
கொளுசு = கொலுசு

kulirthazhal
30-05-2011, 12:35 AM
விழிக்கறையான்., இதன் பொருள்தான் இன்னும் புரியவில்லை ..
சில பிழைகள் தான் தவிர அருமையான கவிதை ..வாழ்த்துகள் ...

வெரித்து = வெறித்து
கொளுசு = கொலுசு

பொருட்களை கறையான் அரிப்பதை போல காதலின் ஆரம்ப நிலைகளில் பெண்ணின் பார்வை படும்போதெல்லாம் தன் இயல்பான இயக்கங்களை குறைத்துக்கொள்வது உண்டு.. இது பெண்களுக்கும் பொருந்தும்.. அசைவுகளை கரைக்கும் பார்வையே கறையான்....

பிழைகள் இருந்தால் வருந்துகிறேன் நாஞ்சில்...

கீதம்
31-05-2011, 07:45 AM
ஒருதலைக்காதல் இன்னும் உயிர்ப்போடு இருப்பதால்தான் இப்படி எண்ணச் சொல்கிறது போலும். வசமிழந்த சூழலை வர்ணித்த வார்த்தைகள், கவியாய் அரங்கேறிய விதம் அற்புதம்.



பிழைகள் இருந்தால் வருந்துகிறேன் நாஞ்சில்...

எழுத்துப் பிழைகளுக்கு வருந்தத் தேவையில்லை. திருத்தம் செய்தாலே போதுமானது.:)

M.Jagadeesan
31-05-2011, 11:13 AM
எழுத எழுத எழுத்துப்பிழைகள் தானாகவே நீங்கிவிடும்.கவிதை நன்று.

அக்னி
31-05-2011, 11:36 AM
அணு உலைகள் எதற்கு...
ஒரு பார்வைக்கு
இத்தனை சக்தி இருக்க...

பாவை பார்வையில் பட்டாலும்
பாவையின் பார்வை பட்டாலும்
உடலெங்கும் உயரழுத்த மின்சாரம்...

மின்கலமாவது தேவைதான்...
அவள் வராததால்
வரும் மின்தடைக்காய்...

அவள் இவன் சம்சாரம் ஆவாளோ
இவன் அவள் சஞ்சாரி ஆவானோ
இவன் காலமும்
அவள் காதலும்
தீர்மானிக்கும்...

அதுவரைக்கும் காகிதம்
கையிலேயே இருக்கட்டும்,
கவியெழுதவும்..,
கண்ணீர் துடைக்கவும்...

பாராட்டுக்கள்...

kulirthazhal
31-05-2011, 03:42 PM
என் கவிதையை புரிந்துகொண்டு வாசகர்களுக்கு தெளிவாக்கிய அருமை நண்பர்கள் கீதம், அக்னி, ஜெகதீசன், நாஞ்சில் மற்றும் நிவாஸ் அனைவருக்கும் நன்றி,,,,,

சிவா.ஜி
31-05-2011, 03:57 PM
நல்லக்கவிதை...நல்ல வார்த்தையாடல்....வாழ்த்துக்கள் குளிர்தழல்.