PDA

View Full Version : அம்மாதான் வேணும் ...



Ravee
26-05-2011, 04:19 PM
அம்மாதான் வேணும் ...


http://www.buy-oil-painting.com/images/mother-and-child-painting-355-L.jpg

அன்று வழக்கத்துக்கு முன்பாகவே டாக்டர் கீதத்தின் அலை பேசி பாடியது .....

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா ..... குறை ஒன்றும் இல்லை கண்ணா ...

அலை பேசியை எடுத்த கீதம் திரையில் கண்ட எண்ணை பார்த்து குழம்பினார் .... சிறிது குழப்பத்துக்கு பிறகு பொத்தானை அழுத்தி " ஹலோ " என்றார் ....

மறு முனையில் .... சீராக மூச்சு சத்தம் ..... சிறிது தயக்கத்துடன் டாக்டர் கீதம் இருக்காங்களா ?

நீங்க ? ................

நான் சதாசிவம் .... அவங்க படிச்ச பள்ளிகூடத்தின் தலைமை ஆசிரியர் ...

நான் கீதம் தான் பேசுறேன் ....... அய்யா நல்லா இருக்கீங்களா ?

நான் நல்லா இருக்கேன் .............. உங்க உதவி கொஞ்சம் தேவைபடுது ..... தயக்கத்துடன் வந்த பதில்
.
சொல்லுங்க அய்யா .... என்ன செய்யணும் .... தயங்காம கேளுங்க ...
நான் விசாரிச்சதில இந்த ஊரில இப்போ நீ தான் ..... மன்னிக்கணும் .... நீங்கதான் பெரிய உளவியல் மருத்துவர்ன்னு சொல்லுறாங்க .... என் பையனுக்கு கொஞ்சம் சித்த பிரம்மை போல இருக்கு ... அதான் சந்திக்கணும் ...

அய்யா ... என்ன இது எங்களை நீங்க என்று மரியாதையாய் எல்லாம் அழைக்கணும் என்று இல்லை ... நாங்க எல்லாம் இன்னும் உங்க மாணவிகள்தான். காலையில் பத்து மணி அளவில் மருத்துவமனையில் இருப்பேன் . நேரில் வாங்க .....

ரொம்ப சந்தோசம் .... என் பையன் வாழ்க்கைக்கு உன் மூலமா ஒரு வழி தெரிஞ்சா சந்தோசப்படுவேன்

நன்றி சொல்லி அலை பேசி அமைதியானது .

கீதத்திற்கு பழைய நினைவுகள் மனதில் ஓடியது .... சதாசிவம் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மட்டும் அல்ல ... அந்த பள்ளியின் மண், செங்கல், கட்டிடம், உயிர், எல்லாமே அவர்தான் . இறுதி ஆண்டு மாணவர்களை அவர் செதுக்கும் விதம் அளப்பரியது. அவருடைய பையனுக்கு இந்த நிலைமையா .... குழப்பத்தில் கீதம் கொஞ்சம் தடுமாறி போனார்.

சரியாக பத்து மணி , நர்ஸ் அருகே வந்து .... மேடம் உங்களை பார்க்கணும் என்று சதாசிவம் என்ற பெரியவர் வந்து இருக்கார் ...

ம்ம் அவரை வரசொல்லுமா ... ஒரு அரைமணி நேரம் வேற யாருக்கும் அனுமதி இல்லை ... போன் இணைப்பு ஏதும் தரவேண்டாம் .... சரியா

சரி சொல்லி போனாள் நர்ஸ் ....

நமஸ்காரம் ............. அறை முழுதும் ஜவ்வாது விபூதி வாசம் பரவியது .... ஒரு மாத தாடியுடன் சதாசிவம் சிவ பழமாய் இருந்தார் .

கீதம் வேகமாக போய் அவர் காலை தொட்டு வணங்க ...

நல்லா இரு மா ... கண்ணை மூடி பிராத்தித்தார் .....

அய்யா ..... உங்க பையன் வரலையா ?

இல்லமா ... அவன் இந்தமாதிரி வருவதை விரும்புறது இல்லை ....

ரொம்ப செல்லமோ ... அடம்பிடிபானா ... என்ன பிரச்சனை அவனுக்கு ......

அப்படி எல்லாம் இல்லைமா .... ரொம்ப சாந்த சொருபி .... நல்ல அறிவு .... எதையும் கேக்குற ஷணத்தில உள்வாங்கிப்பான் .... இப்ப கூட ப்ளஸ் டூ தேர்வில் 1172 மதிப்பெண் வாங்கி இருக்கான் ....

கீதம் கொஞ்சம் ஆர்வம் ஆனார் .... அப்படிபட்ட பையனுக்கு இப்ப என்ன ?

உங்க எல்லோருக்கும் தெரியும் நான் திருமணம் முடிச்சது ரொம்ப காலம் தாழ்த்தின்னு... இவன் பிறந்ததும் மூன்று வருடம் கழித்து தான் .... அதனாலே என் மனைவி அவன் மேல ரொம்ப உயிரா இருந்தா .... போன மாதம் அவ இறந்து போயுட்டா ... அதில இருந்து இவன் எப்பவும் இப்படிதான் சிரிச்சுகிட்டே இருக்கான் .... இப்ப மெடிக்கல் , எஞ்சினியரிங் எல்லா படிப்புக்கும் நேரடியா திறந்த வாய்ப்பு இருக்கு ...

ஆனால் பைன் ஆர்ட்ஸ் படிக்கணும் என்று சொல்லுறான் .... இவன் திறமை எல்லாம் இவனுக்கு தெரிஞ்சிதான் இருக்கா இல்லையா ஒண்ணும் புரியலை ... எத்தனயோ புள்ளைகளுக்கு படிப்பு சொல்லி கொடுத்து அவங்க வாழ்க்கையில் விளக்கு வச்சேன் இப்ப என் வீடு இருள் கவ்வி போகுமோன்னு பயமா இருக்குடா கொழந்தை .... அவர் குரல் தளுதளுத்தது .

கீதம் சதாசிவத்தின் கைகளை இருக்க பிடித்து கொண்டார் ....

அய்யா அப்படி எல்லாம் விட்டுடுவோமா ... நம்பிக்கையோட இருங்க .... நான் என்ன செய்யணும் அதை மட்டும் சொல்லுங்க .

அவனை ஒரு தனிப்பட்ட இடத்தில வச்சு அவனுக்கு ஒரு கவுன்சலிங் கொடுத்து அவன் மனசில இருக்குறதை தெளிய வச்சு என் பையனை மீட்டு கொடுக்கணும் .

அதனாலே என்ன அய்யா ....நானே நாளை உங்க வீட்டுக்கு தற்செயலா வர மாதிரி வரேன் ...அங்கே அவனிடம் பேச வேண்டியது எல்லாம் பேசலாம்

உங்க முகவரி மட்டும் தாருங்க என்றார் கீதம் .

நீ செய்யுற இந்த உதவியை நான் காலத்துக்கும் மறக்கமாட்டேன் மா ... சதாசிவம் தழுதழுத்தார்.

திரும்ப திரும்ப பெரிய வார்த்தைகள் பேசாதீங்க அய்யா ...

வாழ்க்கையிலே படிக்க வேண்டியதின் அவசியத்தை சொல்லித்தந்ததே நீங்கள்தானே .... இது என் கடமை …கண்டிப்பா வரேன் ...

விடை பெற்றுப்போனார் சதாசிவம் .

மறுநாள் மாலை கீதம் சதாசிவத்தின் வீட்டிற்கு போனார் . சதாசிவம் டாக்டர் கீதத்தை உள்ளே அழைத்து போனார் . வீடு மிகவும் தூய்மையாய் இருந்தது . சுவர் எங்கும் அழகிய கை வேலைபாடுகளும், தஞ்சை ஓவியங்களும் அலங்கரித்து கொண்டு இருந்தது . அப்போது கொஞ்சம் பெண் சாயலாய் ஒரு பையன் வந்து வணக்கம் சொல்லி சிரித்தான். இவன்தான் சதாசிவத்தின் பையனாக இருக்க வேண்டும் என்று கீதம் நினைத்தார். சதாசிவம் கீதத்திற்கு தன் பையன் விவேக் என்ற விவேகானந்தனை அறிமுகப்படுத்தினார். பின்னர் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லி மாடிக்கு சென்றார்.

கீதம் விவேக்கை அருகே அழைத்தார் .

தம்பி இங்க வாங்க .... என்ன மார்க் வாங்கி இருக்கீங்க ... அடுத்து என்ன செய்யப்போறீங்க ?

விவேக் சிரித்துக்கொண்டே 1172 என்றான். மேல பைன் ஆர்ட்ஸ் படிக்கலாம்ன்னு இருக்கேன் மேடம் என்றான்.

உனக்கு மெரிட்ட்லேயே மெடிகல் , எஞ்சினியரிங் சீட் கிடைக்குமே பிறகு எதுக்கு மதிப்பு இல்லாத பைன் ஆர்ட்ஸ் .... என்றார் .

அவரை ஆழமாக பார்த்த விவேக் சொன்னான் ... எனக்கு அது பிடிக்குமே ...

பிடித்தால் மட்டும் போதுமா .... அதனாலே நாளைக்கு சம்பாதிக்க வேண்டாமா ...

ஏன் தேவையான அளவு அப்பா சம்பாதிச்சு வச்சு இருக்காரே ... கண்டிப்பா எனக்கு தேவையான அளவு கண்டிப்பா பைன் ஆர்ட்ஸ் படிச்சாலும் சம்பாதிக்க முடியும் ... என்ன ...நீங்கள் சம்பாதிக்கிறதை விட சில ஆயிரங்கள் குறைவா இருக்கும் ... ஆனால் ஆத்ம திருப்தி இருக்கும் .

கீதம் இப்போது ரொம்ப உற்ச்சாகம் ஆனார் பையன் தெளிவான பாதையில் போகிறான் என்றே பட்டது ... மேலும் பேச்சு கொடுத்தார்.

ஆமாம் இங்க வீட்டில இருக்குற படங்கள் எல்லாம் நீ வரைஞ்சதா ...

இல்லை மேடம் அம்மா வரைந்தது .... இந்த கைவேலை எல்லாமே அம்மா செய்தததுதான் ...

கொஞ்சம் அமைதியாய் இருந்த விவேக் மீண்டும் தொடர்ந்தான் ...

அம்மா இல்லாமல் வீடு ரொம்ப மாறி போச்சு மேடம் ...

ஏன் ... என்றார் கீதம் .

அம்மா எப்பவும் எனக்கு என்ன வேணும் , அப்பாவுக்கு என்ன வேணும்ன்னு தெரிஞ்சி செய்வாங்க ... இப்பவெல்லாம் அப்பாவுக்கு என்ன இஷ்டமோ அதைதான் நான் செய்ய வேண்டி இருக்கு ... அப்பா பள்ளியில நடந்துக்குற மாதிரியே வீட்டிலேயும் இருக்கார் . அதனாலே எனக்கு அம்மாவோட நினைப்பு அதிகமா இருக்கு ... அவங்களோட இழப்பு எனக்கு பெரிய கஷ்டமா இருக்கு ... அதனாலேதான் அவங்களுக்கு பிடிச்சதெல்லாம் நானும் செய்யணும்ன்னு ஆசை படுகிறேன். அவங்க நினைப்போட இருக்குறதுதான் எனக்கு சந்தோசமா இருக்கு .... அதனாலே எனக்கு விருப்பம் இல்லாத பாடங்களை படிக்க ஆசை படலை. உங்களையும் அப்பா இதற்காகத்தான் வரச்சொல்லி இருப்பார்ன்னு தெரியும் . தயவு செய்து அவருக்கு என் நிலைமையை புரிய வையுங்கள் மேடம் ..... பிளிஸ் ...... ஒரே மூச்சில் சொல்லி முடித்தான்.

இவ்வளவு தெளிவா பேசுறியே ... நீயே இதை ஏன் அப்பாவிடம் நீயே சொல்லக் கூடாது ... என்றார் கீதம்.

விவேக் தரையை பார்த்துக்கொண்டே சொன்னான் ... இல்லை முடியாது ... அப்பாவை எதிர்த்து பேச அம்மா எனக்கு கத்து தரலை ... ஒரு நாள் கூட அம்மா அப்பாவுடன் வாக்குவாதம் செய்ததில்லை. எல்லா கடுஞ்சொல்லுக்கும் ........புன்னகையும, சிரிப்பும்தான் அவரின் பதிலாக இருக்கும். அப்பா அதற்கு மேல் ஏதும் சொல்ல மாட்டார். இப்போ நான் ஏதும் எதிர்த்து பேசினா ...." பாரு உன்ன அம்மா எப்படி வளர்த்து வச்சு இருக்கான்னு" ஒரு சொல் சொல்லக்கூடாது ... என் மனசு முழுசும் அம்மா தான் நிறைஞ்சு இருக்கா .... அம்மாதான் இந்த வீட்டுக்கு அவசியம் வேணும் ... பணம் இல்லை ... நீண்ட பெருமூச்சு விட்டான் விவேக்.

கீதத்திற்கு தெளிவாக புரிந்து விட்டது. ஆலோசனை கொடுக்கவேண்டியது பிள்ளைக்கு அல்ல ... தந்தைக்கு என்று. சதாசிவத்திடம் தெளிவாக பேசினார். அவனின் தேவைகளை புரிய வைத்தார் . அரை மனதுடன் சதாசிவம் விவேக்கின் ஆசைகளுக்கு ஒத்துக்கொண்டார்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் .... கீதத்தின் அறைக்குள் சதாசிவம் ஒரு வெள்ளைகார பெண்மணியுடன் வந்தார் .

ஐ யாம் மிஸஸ் விவேக்...... டாக்டர் ... உங்களை சந்திச்சதில ரொம்ப சந்தோசம் என்று வணக்கம் சொன்னாள் அந்த பெண். அவளின் சிவந்த நெற்றியில்இருந்த குங்குமமும் , கழுத்தில் கிடந்த தாலிக்கயிறும், அவள் நேர்த்தியாக கட்டி இருந்த அந்த காட்டன் சேலையும் கீதத்தை வாய் அடைத்து போக வைத்தது .

அமெரிக்காவிலேயே எல்லோரும் இருந்தோம் .. இப்ப சென்னையில் ஒரு இந்திய கலாச்சார பயிற்சி மையம் ஒன்று தொடங்குகிறோம் . அவர் இப்போ அமெரிக்காவில் இருக்குற ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் ஒரு ஆய்வு அறிக்கையை செலுத்த போய் இருக்கிறார். அதனாலே அழைப்பிதழை நானே கொடுத்து போக வந்தேன். அவரோட இந்த கலை ஆர்வத்தில் மயங்கி தான் திருமணம் செய்தேன். இப்போ முழுதும் இந்த கலாச்சாரத்துக்கும் ... கலைக்கும் என்னை டெடிகேட் பண்ணிட்டேன். எங்களோட வாழ்க்கை இப்போ ரொம்ப சந்தோசமா முழுமையா இருக்கு ... அவசியம் நீங்க வரணும் என்றாள் ஆங்கிலம் கலந்த தமிழில் .

சதாசிவம் கீதத்தை பார்த்து சந்தோசமாய் சொன்னார் ... விவேக்கு அவன் அம்மாவை போல ஒரு பொண்ணு கிடைச்சுட்டா .... நீயும் எங்க சந்தோசத்தில பங்கு கொள்ளனும் .... அவசியம் வந்துருமா ….. என்று விடை பெற்றார்.

கீதம் புன்னகையுடன் அந்த அழைப்பிதழை பிரித்தார்.

நாஞ்சில் த.க.ஜெய்
26-05-2011, 05:07 PM
தாயின் மீதான பாசம் , குழந்தைகளின் ஆர்வம் அவர்களுடைய தெளிவான குறிக்கோள் அவர்களை நல்வழிபடுத்தும் ,மேலும் பெற்றோர்கள் ஊக்குவிக்கும் உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்பது போல் உங்கள் கதை ..அருமை ....தொடருங்கள் நண்பரே

கீதம்
26-05-2011, 11:42 PM
அற்புதமான கரு, ரவி. பாசமும் பரிவும் கொண்ட தன் தாயை முன்னுதாரணமாய்க் கொண்டு வாழும் மகன், அவள் பிரிவால் மனம் கலங்கிப் போகாமல் மாற்றுவழி தேடுவது மிக அருமை. மதிப்பெண்களின் அடிப்படையில் பெறப்படும் படிப்புகள் அவன் வாழ்க்கையை நல்லமுறையில் நிர்மாணிக்கலாம், ஆனால் மகிழ்வான முறையில் வழிநடத்துமா என்பது சந்தேகமே. தந்தை மீது கொண்ட மதிப்பால் அவரிடம் தன் விருப்பத்தின் காரணத்தை நேரடியாய் சொல்லத் தயங்கியும் மகனின் மன உளைச்சல் கண்டு அவனைக் கட்டாயப்படுத்தாமல் உளவியல் மருத்துவரிடம் ஆலோசனைக்கு வந்த தந்தையைப் பாராட்டியே ஆகவேண்டும். ஒருவேளை அவர் வற்புறுத்தியிருந்தால் அவன் எதிர்காலமே சோபையிழந்துபோயிருக்கும். இத்தனையும் சொல்லிவிட்டு மருத்துவர் பற்றிச் சொல்லாமல் விடமுடியுமா?:) அருமையான மருத்துவர். சிகிச்சை மகனுக்கல்ல, தந்தைக்குதான் என்னும்போதே அவரது நிபுணத்துவம் விளங்கிவிடுகிறது.

ஒவ்வொரு கதாபாத்திரமும் கச்சிதமாய் செதுக்கப்பட்டுள்ளது. மனமார்ந்த பாராட்டுகள், ரவி.

அன்புரசிகன்
27-05-2011, 02:45 AM
இந்தக்காலத்தில் பலருக்கு இந்த வைத்தியம் தேவைப்படுகிறது. அதை அழகான கதைமூலம் லாவகமாக எடுத்துக்கூறியிருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள் ரவீ...

Nivas.T
27-05-2011, 07:51 AM
நல்ல கதை, எளிமையான நடை, கனமான கருத்து, சுபமான முடிவு.

நிகழ்வுகளில் நன்மை என்பது தீமை என்பதும் நம்மைப் பொருத்துத்தான். முடிவுகளும் செயல்களும் தெளிவாக இருந்தால், இலக்கு நிச்சயம் அடையப்பெறும்

பாராட்டுகள்

நன்றி

Ravee
27-05-2011, 09:17 AM
தாயின் மீதான பாசம் , குழந்தைகளின் ஆர்வம் அவர்களுடைய தெளிவான குறிக்கோள் அவர்களை நல்வழிபடுத்தும் ,மேலும் பெற்றோர்கள் ஊக்குவிக்கும் உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்பது போல் உங்கள் கதை ..அருமை ....தொடருங்கள் நண்பரே

குடும்பத்தில் பிள்ளைகள் பொதுவாக தாயையோ இல்லை தந்தையையோ சார்ந்து வளர்கிறார்கள் ... இதில் நீ பெரிதா நான் பெரிதா என்ற போராட்டம் ஏற்ப்பட்டால் சொல்லவே வேண்டாம் ... அந்த புன்னகையுடன் கடும் சொற்களை எதிர் கொள்ளும் தாய் என் கனவு பாத்திரம். ஒரு குடும்பத்தில் மூன்று தலை முறைக்கு ஒருவராவது இவரை போல இருக்க வேண்டும் எனபது என் ஆசை.



இந்தக்காலத்தில் பலருக்கு இந்த வைத்தியம் தேவைப்படுகிறது. அதை அழகான கதைமூலம் லாவகமாக எடுத்துக்கூறியிருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள் ரவீ...

கீதம் போல நல்ல டாக்டர்கள் இருக்கும் வரை நாம் நம்பி போகலாம் அன்பு ....ஹா ஹா ஹா


நல்ல கதை, எளிமையான நடை, கனமான கருத்து, சுபமான முடிவு.

நிகழ்வுகளில் நன்மை என்பது தீமை என்பதும் நம்மைப் பொருத்துத்தான். முடிவுகளும் செயல்களும் தெளிவாக இருந்தால், இலக்கு நிச்சயம் அடையப்பெறும்

பாராட்டுகள்

நன்றி

தன் விருப்பம் இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு பொறுப்பும் ஒரு நாள் மன வருத்தத்தையும் குற்ற உணர்ச்சியையும் மட்டுமே ஏற்படுத்தும் ... எனவே புரிதல் ஒருவருக்கு ஒருவர் அனுசரிக்கப்பட்டால் அந்த அனுபவமே தனி இன்பம்தான் அந்த உறவு என்றும் இனிக்கும் உறவு ... இதை மையப்படுத்தியே கதை கொண்டு சென்றேன் நன்றி நிவாஸ்

Ravee
27-05-2011, 09:24 AM
இத்தனையும் சொல்லிவிட்டு மருத்துவர் பற்றிச் சொல்லாமல் விடமுடியுமா?:) அருமையான மருத்துவர். சிகிச்சை மகனுக்கல்ல, தந்தைக்குதான் என்னும்போதே அவரது நிபுணத்துவம் விளங்கிவிடுகிறது.

ஒவ்வொரு கதாபாத்திரமும் கச்சிதமாய் செதுக்கப்பட்டுள்ளது. மனமார்ந்த பாராட்டுகள், ரவி.

இந்த டாக்டரின் கதாபாத்திரம் உங்களை மானத்தில் வைத்துகொண்டு நான் எழுதியது அக்கா ... ஒரு மருத்துவருக்கு எப்போது பிரச்சனைகளை உள்வாங்கவும் அதை அலசி பார்க்கவும் பின்னர் அதற்கு தீர்வு சொல்லவும் தெரிய வேண்டும் . ஒரு நல்ல கதாசிரியரும் அப்படியே ... அந்த வகையில் நீங்களும் ஒரு நல்ல மருத்துவர்தான் .... :p

இதை நான் மட்டும் சொன்னதாக கருதவேண்டாம் ... அன்புடன் தம்பிகள் அனைவரும் சொன்னதாக எடுத்துக்கொள்ளுங்கள் .... :icon_b:

aren
27-05-2011, 10:13 AM
நல்ல கதை அழகான நடை அருமையாக கதை வந்திருக்கிறது. இன்னும் நிறைய எழுதுங்கள் ரவி.

Ravee
27-05-2011, 10:47 AM
நல்ல கதை அழகான நடை அருமையாக கதை வந்திருக்கிறது. இன்னும் நிறைய எழுதுங்கள் ரவி.

நன்றி ஆரேன் அண்ணா ... உங்களை போல ஒரு பெரிய தொடர்கதை கொடுக்க வேண்டும் என்று ஆசை ... கண்டிப்பாக மன்ற பெரியவர்கள் ஆசி இருந்தால் நடக்கும் .

சிவா.ஜி
27-05-2011, 05:40 PM
இன்றையக் காலக்கடத்துக்குத் தேவையானக் கதை....ஆனால்...இது கதையில் மட்டுமே நிகழும் நிகழ்வாகிவிடக்கூடாதே என்ற ஆதங்கமும் வருகிறது.

இப்போதையப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பணம் சம்பாதிக்கும் மெஷினாகத்தான் வளர்க்கப்பிரியப்படுகிறார்களேத் தவிர...நல்ல, அறிவார்ந்த, தன் வாழ்க்கையைத் திருப்திகரமாய் வாழுபவராய் வளர்க்கத்தவறிவிடுகிறார்கள்.

பணத்தையும் தாண்டிய ஒரு நல்ல வாழ்க்கை இருக்கிறது என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கும் நல்ல கதைக்கு வாழ்த்துக்கள் ரவீ.

அக்னி
28-05-2011, 12:45 AM
டாக்டர் கீதம் என்றதுமே வாத்தியாரின் படமோ எனத்தான் நினைக்கத் தோன்றியது.

வாசிக்க வாசிக்க... மனம் அப்படியே உங்கள் கதையோட்டத்துக்குள் ஒன்றிப்போய்விட்டது.

தொய்வில்லாத அபாரமான எழுத்து நடை.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள்...
முதல் மூவருக்கும் உரியவாறு நாம் கனம் செய்யின், தெய்வ வரம் முழுமையாய் எமக்குக் கிட்டும்.

எத்தனை மாணவர்களைச் செதுக்கிய சதாசிவம் அவர்களுக்குத்,
தன் மகனின் வழி சரியா என்ற குழப்பம் வந்தேயிருக்கக் கூடாதல்லவா...
அது வராவிட்டால் இந்தக் கதையேது...

சதாசிவம் ஆசிரியரின் மனைவியின் இறப்பால் விவேக்குக்கு வந்த வினையோ என்பதையே வினைத்திறனாக்கிய
கதாசிரியரின் திறனை மெச்சுகின்றேன்.

பந்தயக் குதிரைகளாகப் பிள்ளைகளை வளர்க்காமல்,
வாழ்க்கைப் பந்தயத்தில் அவர்கள் வழித்தடத்தில் ஓட ஊக்கம் கொடுத்தால்,
இலகுவாக ஜெயித்துவிடுவார்கள்,
எனச் சொல்லும் முடிவு சிறப்பு...

பாராட்டுக்கள்...

Ravee
28-05-2011, 06:48 AM
இன்றையக் காலக்கடத்துக்குத் தேவையானக் கதை....ஆனால்...இது கதையில் மட்டுமே நிகழும் நிகழ்வாகிவிடக்கூடாதே என்ற ஆதங்கமும் வருகிறது.

பணத்தையும் தாண்டிய ஒரு நல்ல வாழ்க்கை இருக்கிறது என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கும் நல்ல கதைக்கு வாழ்த்துக்கள் ரவீ.

சில நல்ல எண்ணங்களை விதைத்து வைத்தால் என்றாவது ஒரு நாள் பலன் தரும் என்ற நம்பிக்கைதான் அண்ணா ...





எத்தனை மாணவர்களைச் செதுக்கிய சதாசிவம் அவர்களுக்குத்,
தன் மகனின் வழி சரியா என்ற குழப்பம் வந்தேயிருக்கக் கூடாதல்லவா...
அது வராவிட்டால் இந்தக் கதையேது...

சதாசிவம் ஆசிரியரின் மனைவியின் இறப்பால் விவேக்குக்கு வந்த வினையோ என்பதையே வினைத்திறனாக்கிய
கதாசிரியரின் திறனை மெச்சுகின்றேன்.

பந்தயக் குதிரைகளாகப் பிள்ளைகளை வளர்க்காமல்,
வாழ்க்கைப் பந்தயத்தில் அவர்கள் வழித்தடத்தில் ஓட ஊக்கம் கொடுத்தால், இலகுவாக ஜெயித்துவிடுவார்கள்,
எனச் சொல்லும் முடிவு சிறப்பு...

பாராட்டுக்கள்...

இந்த குழப்பம் என் சின்ன வயதில் இருந்தே எனக்குள் உண்டு அக்னி ஆனால் என் படிப்பு சூழ்நிலையில் என் பெற்றோர்களால் சரியான முடிவை எடுக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர் ... அந்த சூழ்நிலையில் நானும் அந்த நிலைமைக்கு தலை ஆட்டினேன் ... குடும்ப சூழ்நிலை கருதி தலை ஆட்டியது தவறா சரியா என்று எனக்குள் இன்னமும் குழப்பம் உண்டு ... அனால் அதற்கு பின் கிடைத்த பல சந்தர்ப்பங்களையும் தவற விட்டேன்.... அதற்கு நான் மட்டுமே பொறுப்பு. காலம் தாழ்த்தி தவறை திருத்த முடியாதே ....