PDA

View Full Version : நேர்முகத்தேர்வு.



M.Jagadeesan
26-05-2011, 09:02 AM
அது 3000 மாணவர்கள் படிக்கக்கூடிய மிகப்பெரிய பள்ளி. சென்ட்ரல் போர்டு பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.ஒவ்வொரு ஆண்டும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு இறுதித் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி காட்டுவார்கள். மாணவர்களுக்கு கல்வியுடன் நல்லொழுக்கத்தையும் போதித்துவந்தார்கள். திறமையான ஆசிரியர்கள் மட்டுமே அப்பள்ளியில் வேலைபார்க்கமுடியும். ஒவ்வொரு ஆண்டும் திறமையற்ற ஆசிரியர்களை நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக திறமையான ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்துவார்கள்.

அன்று நேர்முகத்தேர்வு ஒன்று நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்வதற்காக 50 பேர் வந்திருந்தனர். எல்லோருமே வயது 30 லிருந்து 40 வரை இருக்கக்கூடிய நடுத்தர வயதினர். ஒவ்வொருவர் கையிலும் ஒரு புத்தகம் இருந்தது. அதைப் படித்துக் கொண்டு இருந்தனர். நேர்முகத் தேர்வில் என்ன கேள்வி கேட்பார்களோ என்ற பயம் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்தது. சிலர் பள்ளிக்கு முன்புறம் இருந்த பிள்ளையாரை வணங்கி தோப்புக்கரணம் போட்டுக்கொண்டு இருந்தனர். சிலர் அமைச்சர்களிடமிருந்து சிபாரிசுக் கடிதம் கொண்டுவந்திருந்தனர்.

காலை 10 மணிக்கு நேர்முகத்தேர்வு ஆரம்பமானது. தலைமை ஆசிரியரும், பள்ளித் தாளாளரும் நேர்முகத் தேர்வை நடத்தினர். ஒவ்வொருவராக உள்ளே சென்றனர். நேர்முகத்தேர்வு முடிந்து வெளியே வந்தசிலர்சிரித்துக்கொண்டேவந்தனர்.சிலருடைய முகம் சோகமாக இருந்தது." கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை" என்று சிலர் பேசிக்கொன்டு வந்தனர். நேர்முகத்தேர்வு மாலை 4 மணிக்கு முடிந்தது.நேர்முகத் தேர்வின் முடிவுகள் மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என்று சொன்னார்கள். முடிவுகளைத் தெரிந்துகொள்வதற்காக எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

மாலை 5 மணி. நேர்முகத்தேர்வின் முடிவுகளை அறிவிப்புப் பலகையில் ஒட்டினார்கள். அதில் 20 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அந்த 20 பேர் தவிர மற்றவர்களெல்லாம் போய்விட்டார்கள். 20 பேர் தலைமையாசிரியர் அறைக்கு வரும்படி அழைக்கப் பட்டார்கள்.பள்ளியின் தாளாளர் எல்லோரையும் அமரும்படி சொன்னார்.

"எல்லோருக்கும் வணக்கம்! இந்தப் பள்ளியின் நோக்கமே "தரமான கல்வி & நல்லொழுக்கம்".இரண்டு கைகள் சேர்ந்து தட்டினால்தான் ஓசை வரும்.எங்களுடைய ஆசிரியர்கள் எவ்வளவுதான் திறமையாகக் கற்பித்தாலும், வீட்டிலே மாணவர்களை ஒழுங்காகப் படிக்கவைப்பது பெற்றோர்களின் கையில்தான் உள்ளது. நாங்கள் வகுப்பிலே கொடுக்கக்கூடிய ஹோம் ஒர்க்கை, வீட்டிலே மாணவர்கள் செய்வதற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு வேண்டும்.அதற்குப் பெற்றோர்கள் படித்தவர்களாகவும், கற்பிக்கும் திறன் உடையவர்களாகவும் இருக்கவேண்டும். அந்தத் திறமை உடையவர்களைக் கண்டறிவதுதான் இந்த நேர்முகத்தேர்வின் நோக்கம். இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேருக்கும் என் வாழ்த்துக்கள். நாளைய தினம் இந்த 20 பெற்றோர்களுக்கும் தங்களுடைய குழந்தைகளை Pre .K.G..வகுப்பில் சேர்த்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது." என்றார் பள்ளியின் தாளாளர்.

aren
26-05-2011, 09:20 AM
இது மாதிரி நிறைய பள்ளிகளில் நடக்கிறது. பெற்றோர்கள் படித்தவர்களாக இருக்கவேண்டும் என்று நிறைய பள்ளிகள் நினைக்கின்றன. அது தவறு என்பது என்னுடைய கருத்து.

Nivas.T
26-05-2011, 11:32 AM
இதுபோன்ற பள்ளிகளை இழத்து மூடிவிட வேண்டும்

அக்னி
26-05-2011, 11:33 AM
ஆரென் அண்ணாவின் கூற்றை நான் முழுமையாக ஆதரிக்கின்றேன்...

ஆசிரியரின் பிள்ளை ஆசிரியராகவும், வைத்தியரின் பிள்ளை வைத்தியராகவும் வரவேண்டும் என்ற ஒரு மோட்டுச் சிந்தனையின் நாகரீக வடிவம்தான் இது.

ஒரு கூலித் தொழிலாளி தனது பிள்ளையைப் படிப்பிக்க எடுக்கும் முயற்சிக்கும் அக்கறைக்கும் முன்னே,
இந்த படித்த வசதியானவர்களின் முயற்சியும் அக்கறையும் நெருங்கக் கூட முடியாது.

எந்த ஒரு பிள்ளைக்கும் படிப்பைச் சொல்லிக்கொடுப்பதே சிறந்த பாடசாலை.
ஒரு பிள்ளையின் பெற்றோரால் பிள்ளைக்குப் படிப்பைச் சொல்லிக்கொடுக்க முடியுமா எனச் சோதிக்கும் பாடசாலைகள்,
என்னைப்பொறுத்தவரையில் தரமற்ற மிகக்கேவலமான பாடசாலைகளே...

sarcharan
26-05-2011, 12:09 PM
இந்த கொள்கைகளை இன்று பல பள்ளிகள் பின்பற்றத்தொடங்கிவிட்டார்கள். எனக்கென்னமோ இது நல்லது என்று தோன்றுகின்றது..

பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள், எப்படி படிக்கின்றார்கள் என்ற தகவல்கள் பெற்றோர் கைவசம் இருக்க வேண்டும்.

இதனால் டியூஷன், எக்ஸ்ட்ரா கோச்சிங் நின்றுவிடும்.
மாணாக்கர் சொந்தமாய் சிந்திக்க தொடங்கிவிடுவார்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
26-05-2011, 02:50 PM
ஆரான் அண்ணாவின் வார்த்தைகளை போல் நடிகர் சத்யராஜ் வெளிவந்த குங்கும பொட்டு கௌண்டர் எனும் திரைப்படத்தில் இந்த அணுகுமுறை மிகத்தெளிவாக தவறு என கூறியிருப்பார் ...இதற்கு காரணம் வேறு பள்ளிகளே இல்லை என்பாற்போல் அந்த பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என நினைக்கும் போலித்தன சுய கௌரவ பெற்றோர்களும் தான் இவர்களும் மறைமுகமாக அவர்களின் கொள்ளைகளுக்கும் துணைபோகிறார்கள் ..

கீதம்
26-05-2011, 11:55 PM
கதை என்றபோதும் யதார்த்தத்தைதான் சொல்லியிருக்கிறீர்கள் என்னும்போது சற்றே சங்கடத்துடன் ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.

இப்படி நன்கு படித்தப் பெற்றோரின் பிள்ளைகளைத் தேர்வு செய்வதன் மூலம் பள்ளி நிர்வாகம் கற்பிப்பதில் அதிகம் சிரமம் மேற்கொள்ளத் தேவையின்றிப் போகிறது. ஆனால் இறுதித்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி என பெருமைப் பட்டுக்கொள்ளவும் முடிகிறது.

எரிவாயு அடுப்பை எரிய வைப்பதில் சமைப்பதில் என்ன சிரமம்? ஈரவிறகின் புகையில் இன்னலுடன் ஊதி ஊதிப் பற்றவைத்து அதிலே சமைத்தால் அதுதானே சாதனை?

சமீபமாய் தாங்கள் எழுதிவரும் வேறுபட்ட பாணி இது. கதையின் போக்கில் கண்ணாமூச்சி காட்டும் எழுத்து வடிவம். மிகுந்த பாராட்டுகள் ஐயா.

அக்னி
28-05-2011, 12:58 AM
சமீபமாய் தாங்கள் எழுதிவரும் வேறுபட்ட பாணி இது. கதையின் போக்கில் கண்ணாமூச்சி காட்டும் எழுத்து வடிவம். மிகுந்த பாராட்டுகள் ஐயா.
ஆமாம்... நானும் குறிப்பிட நினைத்திருந்தேன்...

வாசகர்கள் எதிர்பார்க்காத திருப்பத்தில் முடியும் இந்தவகைக் கதைகள்,
வாசகர்களிற்கு மிகவும் பிடித்தமானவை எனலாம்.

M.Jagadeesan
28-05-2011, 01:14 AM
பின்னூட்டமிட்ட ஆரென்,நிவாஸ்,அக்னி,சர்சரண்,கீதம் ஆகியோருக்கு நன்றி!கீதம் குறிப்பிட்டது போல இது மாறுபட்ட பாணிதான். ஆனால் வார இதழ்களில் இதுபோன்ற கதைகள் நிறைய வருகின்றன. நானும் முயற்சி செய்து பார்த்தேன்; அவ்வளவுதான்.

Ravee
28-05-2011, 09:15 AM
கற்பூரத்தை பற்ற வைக்க என்ன சிரமம் இருக்கிறது ... என்ன செய்வது படித்த பெற்றோர்கள்தான் இந்த மாதிரி முட்டாள்தனத்தையும் செய்கிறார்கள் . வெளியாகி இருக்கும் தேர்வு முடிவுகளை பாருங்கள். எத்தனை மாநகர பந்தா பள்ளிகள் முதல் மதிப்பெண்ணை பெற்று இருக்கின்றன என்று தெரியும்.

பாரதி
06-06-2011, 03:29 PM
நான் முன்பு பணி செய்த இடத்தில் இருந்த பள்ளியில், அதிக மதிப்பெண்கள் பெறாத, ஒன்பதாவது படிக்கும் மாணாக்கர்களை வேறு பள்ளிகளில் சேர்க்கச்சொல்லி பள்ளி நிர்வாகம் பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்கியதையும், அதை எதிர்த்து தொழிலாளர் ஒன்றியம் போராடியதும் நினைவுக்கு வருகிறது.
பள்ளி என்பதன் பொருளே மாறி விடும் போலும்!
முடிவில் கதையின் திருப்பத்தை அமைத்திருக்கும் உங்களுக்கு பாராட்டு ஐயா.

சிவா.ஜி
07-06-2011, 01:40 PM
ஆசிரியர்களின் வேலையை பெற்றோர்களே செய்ய வேண்டுமென எதிர்பார்க்கும் பள்ளி, தரமானதாய் எப்படி இருக்கும்? ஆனாலும் பெற்றோர் திருந்தாதவரை...இப்படிப்பட்டப் பள்ளிகள் தொடர்ந்துகொண்டுதானிருக்கும்.

வாழ்த்துக்கள் ஜெகதீசன்.

(முடிவை முன்பே யூகித்துவிட முடிந்தது. காரணம் இதப்போன்ற பள்ளிகளைப் பற்றி நிறைய ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்டதால்தான்)