PDA

View Full Version : காற்றுக்குதிரையாய் எனக்கொரு நண்பன்

Ravee
26-05-2011, 02:15 AM
காற்றுக்குதிரையாய் எனக்கொரு நண்பன்

https://lh6.googleusercontent.com/-biN6vrpyDII/Td23AvuWESI/AAAAAAAAAjk/6CJki1ayM0w/crazy-horse-6-angel-tarantella.jpg

காற்றுக்குதிரையாய் எனக்கொரு நண்பன்
அவன் விடும் மூச்சுக்காற்று எல்லாம் தமிழ் தமிழ்
பள்ளிப்பருவத்தில் அவன் பங்கு கொள்ளும் போட்டியில் எல்லாம்
முன் வரிசையில் அமர்ந்து ரசிக்கும் எங்கள் கூட்டம்

கவிதை கட்டுரை நாடகம் என
தமிழ் அவன் வழி தாலாட்டும் சதிராடும் ...
சில வேளை கோடை இடியாய் குமுறும் ...
பின்னர் குளிர்ந்த ஓடையாய் குளிர்விக்கும் ..

தமிழ் மேல் காதல் கொண்டோம் .... அவனால்
ராமனுக்கு பின் சென்ற வானரங்கள் போல
நாங்கள் நடத்திய கையெழுத்து பிரதிகள்
ஆண்டு மலர்கள் அனைத்தும் பிரசித்தம்

காலம் செல்ல செல்ல ... ஆளுக்கு ஒரு திசையில்
காணாமல் போனோம் ... நினைவுகள் மட்டும் உயிரோட்டமாய்
உள்ளிருக்க .... ஓய்வு கிடைக்கும் வேளைகளில்
மனம் அசை போடுகின்றது நினைவுகளை

விருச்சிக ராசி நண்பர்களே ............. இந்த வாரம்
நீங்கள் பால்ய நண்பரை சந்திப்பீர்கள் என்றது பட்சி ஒன்று
யாராய் இருக்கும் .....................
பால்யத்தை மீண்டும் அசை போட்டது மனது

இரண்டு நாள் கழித்து சாலை சந்திப்பில்
சந்தித்தேன் அந்த மனிதனை
தனக்குத்தானே பேசிக்கொண்டு ...
வானத்தில் வரைந்து கொண்டு இருந்தான்

கை பிடித்து நடத்தி போன பெரியவர்
என் காற்றுக்குதிரையின் தந்தை .....
அவரின் கரம் பற்றி அவனை பற்றி கேட்ட போது
அவன் பேசிய வார்த்தைகள் ... தமிழில் தவிர்க்கப் பட வேண்டியவை .

கல்லூரிக்காலத்தில் காதல் தோல்வியாம்
விழிப்பில்லா உறக்கம் கொள்ள நினைத்தவனை
குளிகைகள் ஏமாற்றின ... மருந்துகள் எதிர் மாற்றம் செய்தன
விளைவு .... சிந்தனைகள் சிதைந்து போயின

சந்தேக கண்ணோடு என்னை பார்த்தவனுக்குள் தேடுகிறேன்
நண்பா உன் நினைவில் எங்கோ ஒரு மூலையில் நான் இல்லையா ?
அவன் கைகளை பற்றிக்கொண்டேன் ...
கண நேரம் அவனை கட்டி அனைத்து தட்டிக்கொடுத்தேன்

விடை பெறும் போது அவன் கண்களில் மருட்சி இல்லை
சற்று கலங்கி இருந்தது .... கைகள் நடுங்கி கொண்டு இருந்தது
வாய் குழறியது ... பேசிய தமிழ் தெளிவில்லை
முகம் திருப்பி எதிர் திசையில் நடந்தேன் .... எது முடிவு என்று அறியாமல் .

அன்புரசிகன்
26-05-2011, 02:25 AM
இது உண்மையாக இருக்கக்கூடாது.......................

Ravee
26-05-2011, 02:42 AM
இது உண்மையாக இருக்கக்கூடாது.......................

மனதை சலனப்படுத்தும் சில சந்திப்புகள் நிகழாமல் இருந்தால் கூட நலம்தான் அன்பு .... :huh:

M.Jagadeesan
26-05-2011, 02:54 AM
காதலில் அவனுக்கு ஏற்பட்ட தோல்வியால், தமிழ் நட்டமடைந்தது.
பாராட்டுக்கள் ரவி!

Ravee
26-05-2011, 02:59 AM
காதலில் அவனுக்கு ஏற்பட்ட தோல்வியால், தமிழ் நட்டமடைந்தது.
பாராட்டுக்கள் ரவி!

தமிழை வாழ வைக்க பலர் இருக்கிறோம் .... ஆனால் அந்த தந்தையை .... அவரின் சோகம் இன்னும் வதைக்கிறது என் மனதை...

கீதம்
26-05-2011, 04:50 AM
காற்றுக்குதிரையில் சவாரி செய்த தமிழைப் புறந்தள்ளிக் கடிவாளம் பிடித்தக் காதல் குப்புறத் தள்ளியதோ குதிரையை?

என் 'குருகாணிக்கை' கதையில் இதைப்போல் ஒருவரைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பேன். என் அப்பாவோடு படித்தவர். எதனால் மனம் பிறழ்ந்தார் என்பது தெரியவில்லை. ஆனால் பள்ளிப் பையன்கள் அவரிடம் வீட்டுப்பாடக் கணக்குகளைப் போட்டு வாங்கிச் செல்வார்கள். தன்னுடன் படித்த நண்பர்களின் பெயர்களை எல்லாம் நினைவில் வைத்திருப்பதோடு அடையாளங்கண்டு கொண்டு அழைக்கவும் செய்வார்.

நண்பர்களை இந்நிலையில் பார்க்க நேரிடுவது மிகவும் கொடுமை.கவிக்குதிரை சுமக்கும் பாரம் வெகு அதிகம்.

Ravee
26-05-2011, 05:31 AM
காற்றுக்குதிரையில் சவாரி செய்த தமிழைப் புறந்தள்ளிக் கடிவாளம் பிடித்தக் காதல் குப்புறத் தள்ளியதோ குதிரையை?

நண்பர்களை இந்நிலையில் பார்க்க நேரிடுவது மிகவும் கொடுமை.கவிக்குதிரை சுமக்கும் பாரம் வெகு அதிகம்.

திறமையான நண்பர்கள் சிலர் வாழ்க்கை பாதையில் என்னை விட்டு நிரந்தரமாய் பிரிந்து போன சம்பவங்கள் உண்டு..... பட்டினத்தார் அழுத கதைதான் நினைவுக்கு வரும் .... மனதை தேற்றிக்கொள்வேன் அக்கா.

Nivas.T
26-05-2011, 07:23 AM
கொன்றுபோடும் கொடுமை
இப்படி நம் வாழ்வில் இருந்தவர்களின் நிலைமை நமக்கு தெரியாமல் இருப்பதே மேல்

உங்கள் நண்பர் விரைவில் குணமடைய வேண்டுவோம்

Ravee
26-05-2011, 07:35 AM
கொன்றுபோடும் கொடுமை
இப்படி நம் வாழ்வில் இருந்தவர்களின் நிலைமை நமக்கு தெரியாமல் இருப்பதே மேல்

உங்கள் நண்பர் விரைவில் குணமடைய வேண்டுவோம்

இருபது வருடங்கள் இப்படியே போய் இருக்கிறது ... இன்னும் நம்பிக்கையில் அவன் பெற்றோர்கள் .... சிலரின் துன்பங்களை நாம் தோளில் சுமக்க முடிவதில்லை . தனக்குத்தானே பேசிக்கொள்ளும் மன அழுத்தம் மிகவும் கொடுமையானது.

நாஞ்சில் த.க.ஜெய்
26-05-2011, 04:27 PM
மனம் பிறழ்வது மிக கொடுமையானது வளர்ந்த குழந்தையாக அவர்களின் நடவடிக்கைகள் கண்ணீரை வரவழைக்கும் அதுவும் தன்னை சார்ந்தவர் எனும் போது அவரை எங்கேனும் காணும் போது அவரை காண்பவர் நிலை மிகவும் வருத்தம் தரக்கூடியது ..அவர் பெற்றோரின் வேண்டுதல் நிச்சயம் அவருடைய மகன் நிலையை மாற்றும் ..நிச்சயம் இறைவன் துணை இருப்பான் ...அவர்களிடம் என் வார்த்தைகளை கூறுங்கள் நண்பரே ...

Ravee
26-05-2011, 04:33 PM

பிரார்த்தனைகள் அவனை குணமாக்கும் என்றால் நாம் அனைவரும் அவனுக்காக பிராத்திப்போம் நண்பரே ...

நாஞ்சில் த.க.ஜெய்
26-05-2011, 04:58 PM
நிச்சயமாக நண்பரே ...

அக்னி
26-05-2011, 05:17 PM
வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் காதல் இருக்கின்றது.
ஆனால், இணை தேடும் காதல் மட்டும் கூடிவராவிட்டால், அனைத்துமே முடிந்துபோவதுதான் வேதனை.
இதே காதல் கூடிவந்திருந்தால், அக்காதல் அவன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று இடம் மாறிக்கொண்டேயல்லவா இருந்திருக்கும்.
தமிழிற் தெளிவு கொண்டவனுக்குக் காதல் தெளிவின்மை கொடுத்தது சோகம் என்றாலும்,
அந்தத் தெளிவின்மையை அவனன்றோ தேடி, வலிந்து பெற்றுக்கொண்டான்.
யாரைச் சொல்வது குற்றம்... தெரியவில்லை...

காற்றுக்குதிரையைச் சேற்றுக்குதிரையாக்கிய அழகுக்குதிரையின்
கடிவாளம் காணாமல், அதனையும் குற்றம் சொல்வதற்கில்லை...

மனதை நெகிழ வைத்த கவிதை...
அன்புரசிகன் சொன்னதுபோல் நிஜமாக இல்லாதிருக்கட்டும்...

ஓவியா
26-05-2011, 10:26 PM
திரியில் ஏதோ எழுதனும்னு நினைக்கிறேன், ஆனல் எதுவுமே வரவில்லை... கண்ணீரை தவிர!!!

நன்றி.

பென்ஸ்
27-05-2011, 07:26 AM
அன்பு ரவி...
சில கவிதைகளுக்கு பின்னுட்டமோ அல்லது விமர்சனமோ எழுதுவது கடினம்...
நண்பனின் நிலையை நினைத்து எனது அனுதாபங்கள்... காதல் உணர்வுகளின் அழுத்ததால் எடுக்கும் சில உணர்ச்சி பூர்வமான முடிவுகள்... பின் அதன் விளைவுகள்...
இறந்து போனாலும், இப்படியாக இருந்து போனாலும் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு காலம் முழுவதும் வரும் துன்பத்தை பாருங்கள்...
இதுபோல தைரியமில்லாத சுயனலவாத காதலர்களுக்கு இது பாடமாக இருக்குமா..???

Ravee
27-05-2011, 11:17 AM
வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் காதல் இருக்கின்றது.
ஆனால், இணை தேடும் காதல் மட்டும் கூடிவராவிட்டால், அனைத்துமே முடிந்துபோவதுதான் வேதனை.
இதே காதல் கூடிவந்திருந்தால், அக்காதல் அவன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று இடம் மாறிக்கொண்டேயல்லவா இருந்திருக்கும்.
தமிழிற் தெளிவு கொண்டவனுக்குக் காதல் தெளிவின்மை கொடுத்தது சோகம் என்றாலும்,
அந்தத் தெளிவின்மையை அவனன்றோ தேடி, வலிந்து பெற்றுக்கொண்டான்.
யாரைச் சொல்வது குற்றம்... தெரியவில்லை...

காற்றுக்குதிரையைச் சேற்றுக்குதிரையாக்கிய அழகுக்குதிரையின்
கடிவாளம் காணாமல், அதனையும் குற்றம் சொல்வதற்கில்லை...

திறமை அதிகமாக இருக்கும் போது மித மிஞ்சிய தன்னம்பிக்கையும் , எதிர்பார்ப்பும் வந்துவிடும் ... எனவே வாழ்க்கையில் ஏற்ப்படும் சிறிய தோல்வியும் ஏமாற்றம் ... தற்கொலைக்கு தூண்டுகிறது . இதில் சில பேர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள் .... அந்த பெண் எந்த சூழ்நிலையில் இருந்தாள் என்று நமக்கும் தெரியாதே.

திரியில் ஏதோ எழுதனும்னு நினைக்கிறேன், ஆனல் எதுவுமே வரவில்லை... கண்ணீரை தவிர!!!

நன்றி.

உங்கள் பாசத்தை பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன் ... மற்றவர் திரிகளில் உங்கள் பதில் பார்க்கையில் ஒவ்வொருமுறையும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் என்னுள் . இந்த முறை பகிர்ந்தும் பகிர்ந்து கொள்ளமுடியாமல் ஒரு தடை .... நன்றி ஓவியா ...:)

அன்பு ரவி...
சில கவிதைகளுக்கு பின்னுட்டமோ அல்லது விமர்சனமோ எழுதுவது கடினம்... நண்பனின் நிலையை நினைத்து எனது அனுதாபங்கள்... காதல் உணர்வுகளின் அழுத்ததால் எடுக்கும் சில உணர்ச்சி பூர்வமான முடிவுகள்... பின் அதன் விளைவுகள்...
இறந்து போனாலும், இப்படியாக இருந்து போனாலும் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு காலம் முழுவதும் வரும் துன்பத்தை பாருங்கள்...
இதுபோல தைரியமில்லாத சுயனலவாத காதலர்களுக்கு இது பாடமாக இருக்குமா..???

எனக்குள் இருந்த சோகத்தை உங்களோடு பகிர்ந்து அனைவரையும் கஷ்டபடுத்திவிட்டேன் என்று நினைக்கிறேன் .... என்னோடு சேர்ந்து சோகத்தை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி ... அவனுக்காகவும் அவன் பெற்றோர்களுக்காகவும் பிரார்த்திப்போம் பென்ஸ் .