PDA

View Full Version : எதிர்பாரா வாழ்த்துsimariba
23-05-2011, 03:17 AM
அன்று என் பிறந்த நாள். காலை கண்விழித்தவுடன் கணவரின் வாழ்த்து. வழக்கம் போல் சமையலை ஆரம்பித்து அதில் என்னை மறந்தேன். என் பெரிய மகன் விழித்தெழுந்தான். அறையை விட்டு வெளியே வந்தவுடன், வாழ்த்து சொல்வான் என எதிர் பார்த்தேன். சொல்லவில்லை. சரி மறந்திருப்பானோ என விட்டு விட்டேன். சற்று நேரத்தில் இன்று உங்க அம்மாவுக்கு பிறந்த நாள் தெரியுமா? என்ற அவன் தந்தையின் கேள்விக்கு மேல் கீழாகத் தலையசைத்தான். அப்போதும் கூட வாழ்த்து சொல்லவில்லை. நான் சும்மா இல்லாமல் இனி அவன் பிறந்த நாளுக்கும் இப்படியே செய்வோம் என்று சொன்னேன். பாவம் அவன் முகம் வாடிவிட்டது. அதற்கு கூட அவன் பதில் பேசவில்லை. அப்புறமும் விடாமல் "ஏண்டா தம்பி அம்மா மேல கோபமா? என்றேன்". "இல்லம்மா உனக்கு ஆட்டோமேட்டிக்கா வாழ்த்து வரும்" என்றபடி பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றான். அவன் நடந்து கொள்வது முதல் முறையாக புதிராக இருந்தது. என்னவோ சரி என விட்டு விட்டு வேலை மும்முரத்தில் பிறந்த நாளை மறந்தும் போனேன். பின் சின்ன மகனை பள்ளியில் விட்டு கோவிலுக்கு சென்று வந்து மற்ற வேலைகளை பார்த்தேன். சின்ன பிள்ளை பள்ளி விடும் நேரமானது. அழைத்து வருவதற்காக கிளம்பி சென்று மின் தூக்கிக்காக காத்திருந்த போது என் பாக்கெட்டிலிருந்து வித்தியாசமான இசை கேட்கவே திடுக்கிட்டேன். அட கைத்தொலைபேசி ரிங்க் டோன் மாறி விட்டதா? இல்லையே சற்று முன் கூட ஒரு கால் வந்ததே அதற்கு வாய்ப்பே இல்லையே எனக்குழம்பியபடி, வெளியில் எடுத்து பார்த்தால், ஹேப்பி பர்த்டே என மின்னிய படியே இசை பாடியது. சரியாக நான் பிறந்த நேரத்தில் வாழ்த்து வரும்படி செட் செய்திருக்கிறான். சின்னவனாக இருக்க வாய்ப்பில்லை. எம்டி மெசேஜ் அனுப்பவும், கேம் விளையாடவும் மட்டுமே அவனுக்கு தெரியும். அவங்க அப்பாவுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை. பெரியவன் தான். இரு நாட்களுக்கு முன் நீ பிறந்த நேரம் பகலா, இரவா? எத்தனை மணிக்கு பிறந்தே என்றெல்லாம் துளைத்தது இதற்கு தானோ என்றெண்ணிய போதே என் கண்களில் நீர் வழிந்தது. இந்த பிள்ளையை எவ்வளவு வருத்தப்படுத்துகிறோம் என்று தோன்றியது. அன்று அவன் பள்ளி விட்டு வந்தவுடன் மிகச் சாதாரணமாக "என்ன வாழ்த்து வந்ததா?" என்றான். "ரொம்ப தாங்க்ஸ் டா", என்ற போது. "உனக்கு சர்ப்ரைஸா இருக்கனும்னு தான் சொல்லலை" என்றான்.

அன்புரசிகன்
23-05-2011, 03:59 AM
வித்தியாசமான வாழ்த்து. நீங்கள் இதை வாழ்வில் மறக்காத ஒரு தினமாக மாற்றியிருக்கிறார் உங்கள் புத்திரன்.

உற்றவர்களிடம் மற்றும் நெருங்கியவர்களிடம் சம்பிரதாய பூர்வ வாழ்த்துக்களை எதிர்பார்ப்பது தவறு என்றே சொல்வேன். பாசமா வாழ்த்தா என்று பார்த்தால் எதுவென்று புரியும். அன்று நீங்கள் எதிர்பார்த்தது நிகழாதவிடத்து ஏதாவது அந்த மகனின் மனம் கோணும் படி நடந்திருந்தால் பின்னர் நீங்கள் தானே வருந்தியிருப்பீர்கள்.

இது பிள்ளைகளிடம் என்றல்ல. கணவன் மனைவி தாய் தந்தை நெருங்கிய உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் என்று விரியும்...

இது எனது நிலை... இன்று (23.05) எனது பெற்றாரின் திருமண நாள். எனக்கு வாழ்த்து சொல்ல ஏதோ தடுத்தது. இன்று மாலை கோவிலுக்கு போவோம் என்று சொல்லிவிட்டு அலுவலகம் வந்துவிட்டேன்.

simariba
23-05-2011, 08:30 AM
உண்மை தான்! எதிர்பார்ப்பு இல்லை என்றால் ஏமாற்றமும் இல்லை.
நன்றி அன்புரசிகன்!

sarcharan
23-05-2011, 08:41 AM
நான் சும்மா இல்லாமல் இனி அவன் பிறந்த நாளுக்கும் இப்படியே செய்வோம் என்று சொன்னேன். பாவம் அவன் முகம் வாடிவிட்டது. அதற்கு கூட அவன் பதில் பேசவில்லை.

அதுக்குள்ளே பையன கரைச்சு கொட்டீட்டீங்களே

கீதம்
23-05-2011, 10:10 AM
அம்மாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்தப் பிள்ளைக்கு நீங்கள் துன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டீர்களோ? சமர்த்துப் பிள்ளைகளிடம் நாம் எச்சரிக்கையாகத்தான் இருக்கவேண்டும்.

அப்புறம் பிள்ளையை சமாதானப்படுத்தினீர்களா இல்லையா?

நாஞ்சில் த.க.ஜெய்
23-05-2011, 02:27 PM
எதிர்பார்ப்புடன் வாழும் வாழ்க்கை என்றும் இனிப்பதில்லை அது ஏமாற்றத்தின் திறப்பு வாயில் .. ஒருமுறை நினைத்து நடந்து விட்டால் அந்த சந்தோஷ நிகழ்வினை காட்டிலும் எதிபாராத நேரங்களில் நிகழும் நிகழ்வின் சந்தோசம் மிகுதியான சொல்லொண்ணா இனிமையின் கதவினை திறக்கும் அனுபவித்து பாருங்கள் .....

பாரதி
23-05-2011, 05:28 PM
நெகிழ்ச்சியாக இருந்தது.

எதிர்பார்த்த போது வராதது, எதிர்பாரா நேரத்தில் வந்த நிகழ்வு உண்மையிலேயே மனதில் நிற்கும் என்பதில் ஐயமில்லை.

இப்போதெல்லாம் குழந்தைகள் எங்கேயோ சென்று விட்டார்கள்...!!

அனுராகவன்
23-05-2011, 05:58 PM
வாழ்த்து பல வழிகள்....இது புதுசு கண்ணா......

Ravee
23-05-2011, 07:00 PM
நல்ல பகிர்வு ... மனதுக்கு சந்தோசமாக இருந்தது. என் பெண் ஒவ்வொரு சின்ன விசயத்துக்கும் ஒரு காகிதத்தில் ஏதாவது ஒரு வாழ்த்து செய்தியை எழுதி அவள் அம்மா , ஆசிரியை அவளின் பாட்டிக்கு என்று தருவாள் .... நான் அலுவலில் இருந்து திரும்பும் போது பொதுவாக தூங்கி விடுவாள் ... சில நேரத்தில் என் மேசையின் மீது ஒரு வாழ்த்துஅட்டை இருக்கும்
அப்பா உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று .... இரவு நெடுநேரம் தூக்கம் வராமல் சந்தோசப்பட்டுக்கொண்டே இருப்பேன் .... உங்கள் பகிர்வு என்னையும் பகிர்ந்து கொள்ளச்செய்தது .... நன்றி சகோதரி .

ஜானகி
24-05-2011, 04:03 AM
இன்று காலை, தொலைக் காட்சியில் ஒரு அருளுரையாளர் பேசுகையில், ' கணவன், மனைவி, தாய், தந்தை, மகன், மகள், நண்பன்....இவர்களுக்கிடையேயான பாசம் என்பது எதனால் தெரியுமா...அவர்கள் நம்மை மகிழ்விப்பதால் தான்..' என்றார்! உண்மைதானே...யாராயிருந்தாலும், அவர்கள் நம்மை மகிழ்விக்கவேண்டும் என எண்ணுவது இயல்புதானே !